என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமான சாய் பல்லவி, தனது நடிப்பை பலரும் பாராட்டுவதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.
    சாய் பல்லவி நடிப்பில் மே மாதம் என்.ஜி.கே படம் வெளியானது. தற்போது 2 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சினிமா வாழ்க்கை குறித்து சாய் பல்லவி அளித்த பேட்டி வருமாறு:- ‘‘கேமரா முன்னால் என்னையும் உலகையும் மறந்து விடுவேன். நான் நடிக்கும் கதாபாத்திரம் மட்டுமே ஞாபகத்தில் இருக்கும். நான் சகஜமாகவும் யதார்த்தமாகவும் நடிப்பதாக பலர் பாராட்டுவதற்கு இதுதான் காரணம். 

    நடிகையாக எனக்கு முதிர்ச்சி வந்து இருக்கிறது. ஒரு கதையை கொடுத்து குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நீ நடிக்க போகிறாய் என்று சொன்னால் அந்த கதை முழுவதையும் படிப்பேன். அப்போதே கதாபாத்திரமாக மாறி விடுவேன். பின்னர் அதோடு ஒன்றி போய் நடிப்பேன். எனது நடிப்பை யார் பாராட்டினாலும் அதற்கு காரணம் நான் தான் என்று மொத்த பலனையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஒரு படம் எப்படி தயாராக நூற்றுக்கணக்கானோரின் கஷ்டமும் உழைப்பும் இருக்கிறது. 

    சாய் பல்லவி

    திரையில் மட்டும் என்னைப் போன்ற நடிகைகளையும், நடிகர்களையும் பார்க்கிறார்கள். எங்களுக்கு பின்னால் உழைப்பவர்களுக்கு ஒரு அடையாளம் கிடைக்க வேண்டும். ஆனால் கிடைப்பது இல்லை. எல்லா பெருமையும் எங்களுக்குத்தான் வந்து சேர்கிறது. எனக்கு கிடைக்கும் பெயருக்கு பின்னால் எத்தனை பேர் உழைப்பு இருக்கிறது என்பதை நான் மறக்காமல் அவர்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்வேன்.’’ 

    இவ்வாறு சாய் பல்லவி கூறினார்.
    பிரதமருக்கு கடிதம் எழுதிய 49 பிரபலங்கள் மீது தேசதுரோக வழக்கு பதியப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் என கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் கும்பல் வன்முறையை தடுத்து நிறுத்த பிரதமர் நரேந்திரமோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து, திரைப்பட இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி, சமூகவியலாளர், சமூக சேவகர், திரைப்பட தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட 49 முக்கிய பிரபலங்கள் பிரதமருக்கு கடிதம் எழுதினர்.

    இந்த கடிதத்துக்கு எதிராக பீகார் மாநிலம், முசாபர்பூரைச் சேர்ந்த வக்கீல் சுதிர் குமார் ஓஜா, முசாபர்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததையடுத்து இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோகம், பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவித்தல், மத உணர்வுகளை புண்படுத்துதல், அமைதியை குலைக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல பிரபலங்கள் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி தங்கள் கருத்துக்களை ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பதிவு செய்தனர். 

    கமல்ஹாசனின் டுவிட்டர் பதிவு

    இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், “பிரதமர் ஒரு இணக்கமான இந்தியாவை நாடுகிறார். பாராளுமன்றத்தில் அவர் வெளியிட்ட அறிக்கைகள் அதை உறுதிப்படுத்துகின்றன. அரசு மற்றும் அதன் சட்டம் அதை கடிதத்திலும், உணர்வுகளிலும் பின்பற்ற வேண்டாமா? எனது சகாக்களில் 49 பேர் பிரதமரின் விருப்பத்திற்கு முரணாக தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளனர். 

    எங்கள் உச்சநீதிமன்றம் ஜனநாயக முறைப்படி நீதியை நிலைநாட்டவும், பீகாரில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யவும் ஒரு குடிமகனாக நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
    நடிகை யாஷிகாவின் கார் விபத்தை ஏற்படுத்தியதாக செய்திகள் பரவிய நிலையில், அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
    சினிமாவில் அரைகுறை உடையில் கவர்ச்சியாக நடித்து பரபரப்பாக பேசப்பட்டவர் யாஷிகா ஆனந்த். இதனால் ஆபாச பட நடிகைகளுடன் ஒப்பிட்டு சமூக வலைத்தளத்தில் விமர்சிக்கப்பட்டார். இதற்கு அவர் கண்டனமும் தெரிவித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமும் பிரபலமாகி இருக்கிறார். தற்போது இவன்தான் உத்தமன், ராஜ பீமா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

    சில தினங்களுக்கு முன்பு சென்னை நுங்கம்பாக்கத்தில் யாஷிகாவின் சொகுசு கார் மோதி தொழிலாளி ஒருவர் படுகாயம் அடைந்ததாகவும் ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது. விபத்து நடந்த போது காரில் யாஷிகாவின் நண்பர்கள் இருந்தனர் என்றும் யாஷிகா இருந்தாரா? என்பது உறுதியாக தெரியவில்லை என்றும் கூறப்பட்டது. 

    யாஷிகா

    இந்த நிலையில் விபத்து குறித்து யாஷிகா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:- ‘‘விபத்து நடந்த காரில் நான் இருந்ததாக வெளியாகும் செய்திகள் பொய்யானவை. அந்த காரில் நான் செல்லவில்லை. எனது நண்பர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளானது என்று கேள்விப்பட்டதும் நான் வேறு ஒரு காரில் விபத்து நடந்த இடத்துக்கு சென்றேன். இதனால் நானும் விபத்துக்குள்ளான காரில் இருந்ததாக பொய்யான தகவலை அவதூறாக பரப்பி உள்ளனர்.’’

    இவ்வாறு யாஷிகா ஆனந்த் கூறினார்.
    டுவிட்டரில் ரசிகர்களுடனான உரையாடலின் போது அஜித், விஜய் மற்றும் தனுஷ் குறித்து ஷாருக்கான் கருத்து தெரிவித்துள்ளார்.
    திரையுலகப் பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களுடன் கலந்துரையாடுவது வழக்கமான நிகழ்வாகி வருகிறது. அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நேற்று தனது ரசிகர்களுடன் டுவிட்டரில் கலந்துரையாடினார். டுவிட்டரில் #AskSRK எனும் ஹேஷ்டேக் மூலம் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஷாருக்கான் பதிலளித்தார். 

    ஷாருக்கானின் டுவிட்டர் பதிவு

    இந்த உரையாடலின் போது, ரசிகர்கள் சிலர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், தனுஷ் ஆகியோர் குறித்து ஷாருக்கானிடம் கேள்வி எழுப்பினர். அப்போது அஜித் பற்றிப் பேசிய அவர், ‘என் நண்பர்’ எனப் பதிலளித்தார். விஜய் பற்றிக் கூறுமாறு ரசிகர் எழுப்பிய கேள்விக்கு ‘அற்புதமானவர்’ எனப் பதிலளித்தார் ஷாருக்கான். தனுஷ் பற்றி கேட்டதற்கு, “எனக்கு அவரைப் பிடிக்கும்” எனப் பதிலளித்தார்.
    மிக மிக அவசரம் படத்தில் நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீபிரியங்கா, நடிப்பதற்காக எந்த ஹோம் ஒர்க்கும் பண்ணவில்லை என்று கூறியிருக்கிறார்.
    சுரேஷ் காமாட்சி தயாரிப்பு இயக்கத்தில் வெளியாக இருக்கும் படம் மிக மிக அவசரம். பெண் போலீசார் எதிர்கொள்ளும் சிக்கல்களை மையமாக கொண்ட இந்த படம் வெளியாகும் முன்பே விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது. வரும் 11ந்தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தில் கங்காரு, வந்தா மல, கோடை மழை படங்களின் மூலம் நடிக்க தெரிந்த நடிகை என பெயர் எடுத்த ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், நாயகனாக அரீஷ்குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளனர். சீமான், வழக்கு எண் முத்துராமன், ஈ.ராமதாஸ், லிங்கா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். 

    பெண் போலீஸ் வேடத்தில் நடித்த அனுபவம் பற்றி ஸ்ரீபிரியங்கா கூறும்போது, ‘போலீஸ் கதாபாத்திரம் என்பதால் மட்டும் அல்ல, அதன்மூலம் பெண்களுக்கு ஒரு செய்தி சொல்ல கூடிய கதாபாத்திரம் என்பதாலும் பெண்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளை வெளிப்படுத்தக்கூடிய கதாபாத்திரம் என்பதாலும் இந்த படத்தில் நடிக்க சந்தோஷமாக ஒப்புக்கொண்டேன். 

    பொதுவாக ஒரு நாயகிக்கு சினிமாவில் அறிமுகமாகி பல வருடங்கள் கழித்து கிடைக்கும் இது போன்ற கதாபாத்திரம் எனக்கு இவ்வளவு சீக்கிரமே கிடைத்தது சந்தோஷமாக இருக்கிறது. நான் இதுவரை இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று எதையும் மனதில் ஏற்றி வைத்துக் கொள்ளவில்லை. 

    ஸ்ரீபிரியங்கா

    இந்த படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக எந்த ஹோம் ஒர்க்கும் பண்ணவில்லை. பள்ளிக்கூடம் படிக்கிற காலத்திலேயே நான் ஹோம் ஒர்க் எல்லாம் பண்ணவே மாட்டேன். சுரேஷ் காமாட்சி இந்த படத்தின் ஸ்கிரிப்டை கொடுத்ததும் அதை முழுவதுமாக படித்து அந்த சாமந்தி கேரக்டராக நான் இருந்தால், எப்படி உணர்ந்து இருப்பேனோ அதையே ஒவ்வொரு காட்சியிலும் இயல்பாக பிரதிபலித்து இருக்கிறேன். 

    என்னை பார்ப்பவர்கள் நேரில் பார்க்கும்போது ஒரு மாதிரியும் திரையில் பார்க்கும்போது வேறு மாதிரியும் இருப்பதாக சொல்வார்கள். அதுவே எனக்கு ஒரு பிளஸ் பாயிண்ட் தான். அதனால் எந்த படத்தில் நடித்தாலும் அந்த கதாபாத்திரமாகவே எளிதில் மாறிவிட முடிகிறது.
    அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ் மற்றும் ஆனந்தி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது.
    இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளிவரும் இரண்டாவது தயாரிப்பான 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தின் இறுதிக்கட்ட பணிகளை முடித்து வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது. 

    தினேஷ், ஆனந்தி நடிப்பில் பா. இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்கியிருக்கும் இந்தப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் டென்மா இசையமைத்திருக்கிறார். கிஷோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விரைவில் பாடல்கள் வெளியீடு நடைபெற இருக்கிறது.

    குண்டு படத்தில் தினேஷ் - ஆனந்தி

    நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்த முதல் படமான பரியேறும் பெருமாள் படத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது, இரண்டாவது தயாரிப்பான குண்டு திரைப்படமும் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாக இருக்கிறது. ஜனரஞ்சகமான கதையமைப்பில், மக்கள் ரசிக்கும் விதத்தில் உருவாகியிருக்கும் குண்டு திரைப்படத்தில் வட தமிழகத்தின் வாழ்வியலோடு உலக அரசியலோடு இணைத்து படம் பார்ப்பவர்களுக்கு புது அனுபவத்தை தரும் வகையில் படம் அமைந்திருப்பதாக இயக்குனர் அதியன் ஆதிரை கூறுகிறார்.
    சர்வதேச திரைப்பட விழாவில் ஹவுஸ் ஓனர் படம் திரையிடப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது என்று லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
    50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் அடுத்த மாதம் (நவம்பர்) 20-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை நடைபெறுகிறது. விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் இந்தியாவில் பல்வேறு மொழிகளில் வெளியான 26 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளது. இதில் தமிழில் வெளியான ஒத்தசெருப்பு, ஹவுஸ்ஓனர் ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளது. 

    இத்திரைப்பட விழாவிற்கு படம் தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றி இயக்குநர் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் கூறும்போது, ‘இது முற்றிலும் நான் எதிர்பாராத ஒன்று. மிகுந்த ஆச்சர்யத்தையும் சந்தோஷத்தையும் ஒருங்கே அளித்திருக்கிறது. எனது திரைப்படத்தின் மீதான காதலையும் அதன் மீதான என் ஆர்வத்தையும் இந்த அங்கீகாரம் பெரும் ஊக்கத்தை தந்து மேலும் மேலும் பயணிக்கும் தெம்பை தந்துள்ளது.

    லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்

    இந்நேரத்தில் IFFI அமைப்பினருக்கு எனது மிகப்பெரும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் இந்த விழாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 25 திரைப்படங்களுக்கும், 15 குறும்படங்களுக்கும் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழில் தன் தனித்திறமையால் மிகப்பெரும் சாதனைப் படைப்பாக உருவாகியிருக்கும் பார்த்திபன் சாரின் “ஒத்த செருப்பு சைஸ் 7” படத்திற்கு இந்தியன் பனோரமாவில் அங்கீகாரம் கிடைத்திருப்பதில் மிகுந்த பெருமைகொள்கிறேன்’ என்றார்.

    “ஹவுஸ் ஓனர்” திரைப்படம் சென்னை வெள்ளத்தின் பின்னணியில் முதிய தம்பதிகளின் காதல் நினைவுகளூடாக அன்பை சொல்லும்  படமாக, லக்‌ஷ்மி ராமகிருஷ்ணண் இயக்கத்தில் உருவாகியிருந்தது. அவரது கணவர் ராமகிருஷ்ணன் இப்படத்தினை தயாரித்திருந்தார். கிஷோர், ஶ்ரீரஞ்சனி, பசங்க புகழ் கிஷோர், மற்றும் லவ்லின் சந்திரசேகர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தார்கள். 
    தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்த நடிகை இலியானா, சமீபத்தில் அளித்த பேட்டியில், இப்போது பக்குவம் வந்துவிட்டது என்று கூறியிருக்கிறார்.
    நடிகை இலியானா இந்தி, தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார். அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- ’வயதை பொறுத்தே முடிவுகள் எடுக்கும் அனுபவம் வரும். சினிமா துறைக்கு வந்த புதிதில் கிடைத்த கதைகளில் எல்லாம் நடித்தேன். தெலுங்கில் அறிமுகமாகி தமிழ், இந்தி என்று எல்லா மொழி படங்களிலும் வந்தேன். 

    இலியானா

    ஆனால் இப்போது முதிர்ச்சி அடைந்த நிலையில் இருக்கிறேன். எந்த மாதிரி கதைகளில் நடித்தால் ரசிகர்கள் மனதில் நிலைத்து இருக்க முடியும் என்று கதைகள் தேர்வில் பக்குவம் வந்து இருக்கிறது. ரசிகர்கள் மனதில் வைத்துக்கொள்கிற மாதிரி கதைகளில் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
    கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘கைதி’ படத்தின் விழாவில், சவால்களை விரும்பி எதிர் கொண்டேன் என்று அவர் கூறியுள்ளார்.
    கார்த்தி நடிப்பில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ், விவேகானந்தா பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் “கைதி”. மாநகரம் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்த படத்திற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம்.சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கார்த்தியுடன் நரேன், ரமணா, மரியம் ஜார்ஜ் இணைந்து நடித்துள்ளனர். 

    தீபாவளிக்கு வெளியாக இருக்கும் கைதி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் கார்த்தி பேசியதாவது:- ’உதவி இயக்குநராக இருக்கும்போது சில படங்கள் செய்யனும்னு நினைக்கிற மாதிரி படங்கள் நமக்கு எப்போதாவது தான் வந்து சேரும். அந்த மாதிரி தான் மெட்ராஸ், தீரன் இப்ப “கைதி”. ஒரு களத்தில போய் அந்தக் கேரக்டரை தெரிஞ்சிக்கிட்டு பண்ற படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

    இந்த படத்தில் நிறைய சவால்கள் இருப்பது தெரிஞ்சது அதை ஆசைப்பட்டு செஞ்சிருக்கேன். லோகேஷ் ரசிகருக்கு படம் எப்படி கொடுக்கனும்னு தெரிந்த டைரக்டர். இதில எந்த அளவு புதுசா பண்ண முடியுமோ பண்ணுங்கன்னு சொன்னேன். அத மொத்த டீமும் பண்ணியிருக்காங்க. 

    கார்த்தி

    முழுக்க முழுக்க நைட்ல ஷூட் பண்ணிருக்கோம். இதில நிறைய ஆக்‌ஷன் பண்ணிருக்கேன். இந்த படத்தில நரேன் கூட நடிச்சது சந்தோஷமான விஷயம். எப்போதும் வாழக்கையில எதை வேணாலும் பகிர்ந்து கொள்ளக்கூடிய நண்பர் அவர். இந்த படத்தில எல்லோரும் அவ்வளவு நேர்த்தியாக உழைச்சிருக்காங்க. 

    ஒவ்வொரு கேரக்டரும் இந்த படத்தில வித்தியாசமா இருக்கும். இந்த படத்தில் நான் ஒரு பகுதி தான். இது ஒரு மல்டி ஹீரோ படமா இருக்கும். எல்லோருக்குமான பகுதி சரியாக அமைந்து இருக்கிறது. எனக்கு லாரி ஓட்டுவது ரொம்ப பிடிக்கும் அதுவும் இந்த படத்தில எனக்கு பழைய லாரிய கொடுத்துட்டாங்க. லாரி ஓட்டறது எவ்வளவு கஷ்டம்னு அப்போதுதான் தெரிஞ்சது. இந்தப்படம் முழுக்கவே ஆக்‌ஷனா அமைஞ்சிருக்கு. இந்த படத்தில் நிறைய விசயங்கள் புதுசா கத்துக்க முடிஞ்சது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும். எல்லோருக்குமே பெரிய பேர் வாங்கித் தரும். ரசிகர்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்’ என்றார்.
    பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு வெளியான சாண்டி மற்றும் தர்ஷனை நேரில் சந்தித்து நடிகர் சிம்பு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
    நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த வாரம் முடிவடைந்தது. 16 பேர் கலந்துக் கொண்ட இந்த நிகழ்ச்சியில் முகேன் ராவ் முதல் பரிசை தட்டிச் சென்றார். இரண்டாவதாக சாண்டி பெற்றார். இந்த போட்டியில் கலந்துக் கொண்டவர்கள் அவரவர் வீட்டுக்கு சென்றுள்ளனர்.



    இந்நிலையில், நடன இயக்குனர் சாண்டி மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான தர்ஷனை நடிகர் சிம்பு நேரில் சந்தித்து வாழ்த்து கூறியிருக்கிறார். மேலும் அவர்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கி இருக்கிறார் சிம்பு. இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
    காப்பான் படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் தீவிரமாக வேலை பார்த்து வருகிறார்.
    காப்பான் படத்திற்குப் பிறகு சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும், மோகன் பாபு, ஜாக்கி ஷெராப், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

    விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து பின்னணி வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தற்போது இப்படத்திற்கான பின்னணி இசை சேர்ப்பு வேலைகளில் ஜி.வி.பிரகாஷ் ஈடுபட்டுள்ளார். விரைவில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜிவி பிரகாஷ்

    ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.
    தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை இலியானாவின் புகைப்படத்திற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    தமிழில் கேடி, நண்பன் படங்களில் நடித்த இலியானா இந்தி படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். இலியானாவும், ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஆண்ட்ரூவும் காதலித்து வந்தனர். இருவரும் ஜோடியாகவும் சுற்றி வந்தார்கள். இருவரும் நெருக்கமாக படம் எடுத்து சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டு வந்தனர். இருவரும் ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாகவும் வதந்தி பரவியது. 

    இந்த நிலையில் இருவரும் பிரிந்து விட்டதாகவும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வது இல்லை என்றும், சந்தித்து கொள்வதும் இல்லை என்றும் செய்திகள் வெளியானது. இலியானா மற்றும் ஆண்ட்ரூவின் இன்ஸ்டாகிராம் பக்கங்களைப் பார்த்தால், அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பின்தொடரவில்லை, மேலும் புகைப்படங்களையும் நீக்கியுள்ளனர்.

    இலியானா

    ஆங்கில ஊடகங்களிலும் இருவரும் பிரிந்து விட்டனர் என்று செய்திகள் வெளியானது. இதன்பிறகு நடிகை இலியானா தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில், பீச்சில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைத்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    ×