என் மலர்
சினிமா செய்திகள்
தமிழ், தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகை சுருதிஹாசன், மீண்டும் காதலிக்க விரும்புகிறேன் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சு சினிமா பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார். சமீபத்தில் அவர் சுருதிஹாசனை பேட்டி எடுத்து இருந்தார். அந்த பேட்டியில் தனது காதல் வாழ்க்கை பற்றி சுருதிஹாசன் கூறியதாவது:-
நான் இதுவரை ஒரே ஒருவரை தான் காதலித்துள்ளேன். நான் எதையும் எளிதாக எடுத்துக்கொள்வேன். அப்பாவியும் கூட. அதே நேரத்தில் மிகவும் உணர்வுபூர்வமானவள். எனவே தான் என்னை யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் காதலில் இருந்தது நல்ல அனுபவம். மீண்டும் காதலிக்க விரும்புகிறேன். சிறந்த நேசத்துக்காகவும் காதலுக்காகவும் காத்திருக்கிறேன்.

எனக்கு காதலராக வருபவர் நல்ல மனிதராக இருக்க வேண்டும். நகைச்சுவைத்திறன் இருக்கவேண்டும். சுத்தமாக இருக்கவேண்டும். அவ்வளவுதான்’ என்று கூறியிருக்கிறார்.
சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மப்டி படத்தைப் பற்றி வெளியான புகாருக்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மறுப்பு தெரிவித்துள்ளார்.
டி.ராஜேந்தரின் மகன் சிம்பு. கதாநாயகன், டைரக்டர், பாடலாசிரியர், பாடகர் என்று பன்முகம் கொண்டவர். இவர் பல சர்ச்சைகளிலும் சிக்கி இருக்கிறார். கெட்டவன், மன்மதன், ஏஏஏ என்று பல படங்களில் சிம்பு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவருக்கு ரெட் கார்ட் கொடுக்க கூட தயாரிப்பாளர் சங்கம் சார்பாக முடிவுகள் எடுக்கப்பட்டது.
இந்நிலையில், சிம்பு நடிக்கும் ‘மப்டி’ என்னும் கன்னட படத்தின் ரீமேக் தற்போது கைவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. சிம்பு சரியாக படத்தின் ஷூட்டிங்கிற்கு வரவில்லை என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சங்கத்தில் புகார் அளித்துள்ளார் என்றும் கூறப்பட்டது.

ஆனால், ஞானவேல் ராஜா தரப்பில் இந்த செய்திகள் வதந்தி என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே மப்டி படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவு பெற்ற நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் நடக்க இருப்பதாக ஞானவேல் ராஜா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு, நடிகர் வடிவேலு குடும்ப நண்பரை இழந்து விட்டேன் என்று வேதனையுடன் கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் 100க்கும் அதிமான படங்களில் நடித்தவர் நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி. வடிவேலுடன் பின்லேடன் முகவரி கேட்கும் காமெடி பிரபலம். `பேய் மாமா’ படப்பிடிப்புக்காக குமுளி போயிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். தயாரிப்பு நிர்வாகியாக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்த கிருஷ்ண மூர்த்தி 50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு புரொடக்ஷன் மேனேஜராக பணியாற்றினார்.
‘குழந்தை இயேசு’ படத்தில் நடிகராக அறிமுகமானவர், நாயகன், நான் கடவுள், தவசி, எல்லாம் அவன் செயல் படங்களின் மூலம் அனைவராலும் கவனிக்கப்பட்டார். மறைந்த கிருஷ்ணமூர்த்தி, சினிமாவில் சண்டைப் பயிற்சியாளராக இருந்தவரின் மகள் மகேஸ்வரியைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவருக்கு பிரசாந்த், கவுதம் என்று இரண்டு மகன்கள் உள்ளனர்.
கிருஷ்ணமூர்த்தி பற்றி நடிகர் வடிவேலு கூறியிருப்பதாவது:- ரொம்ப ரொம்ப நல்ல மனிதர். கிருஷ்ண மூர்த்தியோட மனைவி, ரெண்டு பசங்க எல்லோரும் என் வீட்டுக்கு அடிக்கடி வந்து பேசிவிட்டு போவாங்க. அந்த அளவுக்கு குடும்ப நண்பர் அவர். இப்போது அவரோட குடும்பத்துக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னே தெரியவில்லை.

கிருஷ்ண மூர்த்தி, புரொடக்ஷன் மேனேஜராக இருந்தார். நான்தான் முதன்முதலாக ‘தவசி’ படத்துல அவரை நடிக்க வைத்தேன். பின்னர் ஏகப்பட்ட படத்துல என்கூட நடிச்சிருக்கார். நாங்கள் 2 பேரும் நடிக்க போற காட்சியை பற்றி ஷூட்டிங்குக்கு முந்தைய நாள் என் ஆபீஸ்ல டிஸ்கஷன் செய்வோம். அப்போ எவ்வளவு காமெடியான கான்செப்ட் சொன்னாலும், லேசுல ரசிக்க மாட்டார்.
இன்னும் அதில் சுவாரசியம் சேர்க்கணும்னு நினைப்பார். அப்புறம் குபீர்னு தரையில உருண்டு உருண்டு சிரிப்பார். இனிமேல் நான் நடிக்க இருக்கும் படத்துல எல்லாம் அவருக்கும் ஒரு கேரக்டர் உருவாக்கி வெச்சிருக்கேன். அது அவருக்கும் நல்லாவே தெரியும். இப்போது திடீர் என்று இப்படி ஆகிவிட்டது’. இவ்வாறு வடிவேலு கூறியிருக்கிறார்.
சிரஞ்சீவி நடிப்பில் வெளியான சைரா நரசிம்மா ரெட்டி படத்தை பார்த்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், படக்குழுவினரை பாராட்டி இருக்கிறார்.
ராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யவலாடா நரசிம்மா ரெட்டி வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு வெளியான படம் ’சைரா நரசிம்மா ரெட்டி’. இப்படத்தில் சைரா நரசிம்மா ரெட்டியாக தெலுங்கு திரையுலகின் உச்ச நட்சத்திரமான சிரஞ்சீவி நடித்திருந்தார்.
அவருடன் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் தமிழிசை சௌந்தராஜனை, நடிகர் சிரஞ்சீவி ‘சைரா நரசிம்மா ரெட்டி’ திரைப்படத்தை பார்க்க அழைப்பு விடுத்தார். சிரஞ்சீவியின் அழைப்பை ஏற்றுக் கொண்ட தமிழிசைக்கு, இன்று பிரத்யேகமாக படத்தை காண்பித்திருக்கிறார்கள். படத்தை பார்த்த தமிழிசை சௌந்தரராஜன், நடிகர் சிரஞ்சீவியை பாராட்டியுள்ளார்.
கும்கி, சுந்தர பாண்டியன், கொம்பன், றெக்க படங்களில் நடித்த லட்சுமி மேனனுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
‘கும்கி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மலையாள நடிகை லட்சுமி மேனன். இந்த படம் இவருக்கு மிக பெரிய வெற்றியை தந்தது. அடுத்ததாக சசிகுமாருககு ஜோடியாக ‘சுந்தரபாண்டியன்’ படத்தில் நடித்தார். இந்த படமும் ஹிட் படமாக அமைந்தது. இந்த இரு படங்களின் மூலம் தமிழக ரசிகர்களிடம் மனதில் இடம்பிடித்தார்.
அதன் பின் கார்த்திக்கு ஜோடியாக ‘கொம்பன்’ படத்தில் நடித்தார். கடைசியாக ‘றெக்க’ படத்தில் விஜய் சேதுபதிககு ஜோடியாக நடித்தார். அதை அடுத்து அவருக்கு எந்தப் படமும் அமையவில்லை. மேலும் அவரது உடல் எடையும் அதிகரித்து விட்டது. அதனால் அவர் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்திவந்தார்.

இந்நிலையில் அவருக்கு 22 வயதாகும் நிலையில், திருமணம் செய்து கொண்டு கணவர் குடும்பத்துடன் செட்டில் ஆக முடிவெடுத்துள்ளாராம். ஆகையால் அவரது குடும்பத்தினர் லட்சுமி மேனனுக்கு மாப்பிள்ளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்த ராய் லட்சுமி, பெண்களுக்கு வாய்ப்பு கிடைப்பது இல்லை என்று கூறியிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 40க்கும் மேற்பட்ட படங்களில் ராய் லட்சுமி நடித்துள்ளார். தற்போது தமிழில் 'சிண்ட்ரெல்லா' படத்திலும் கன்னடத்தில் 'ஜான்ஸி' படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழ் சினிமாவில் இன்னும் நிறைய பெண் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று ராய் லட்சுமி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:- ’ஆண்களுக்கு பெண்களுடன் பணிபுரிவது சவுகரியமாக இல்லை என நினைக்கிறேன். உதாரணத்துக்கு, ஒரு பெண் ஒளிப்பதிவாளர் பணிபுரிவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் இயக்குநர் ஒரு ஆணாக இருந்தால் அவர் அந்த படப்பிடிப்பு தளத்தில் பேசும் விஷயங்களில் பல கட்டுப்பாடுகள் இருக்கும். பெண்களுக்கு வாய்ப்பு வழங்காமல் இருக்க இன்னும் சில காரணங்கள் உள்ளன. அது பெரிய காரணம் அல்ல. ஆனால் துறையில் உள்ளவர்கள் எப்போதும் அவர்களுக்கு சவுகரியமான ஒரு சூழலிலேயே இருக்க விரும்புவார்கள்.

ஒரு பெண் அங்கு நுழைந்துவிட்டால் அவரை கட்டுப்படுத்த முடியாது என ஆண் நினைக்க ஆரம்பித்துவிடுவார். பிறகு அந்த வேலை செய்யும் இடம் யதார்த்தமாக இருக்காது. ஆண்களின் சிந்தனையும் பெண்களின் சிந்தனையும் என்றும் ஒத்துப்போகாது. பல ஆண்களுக்கு பெண்கள் சரியென்று ஒப்புக்கொள்ள முடியாது. அது ஆண்களுக்குள் இயல்பாக இருக்கும் ஈகோ. இருந்தாலும் சில இயக்குநர்களுக்கு அவர்களின் மீதும், அவர்கள் கலையின் மீது அதிக நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் பெண்களுடன் பணிபுரிந்து அவர்களின் படத்துக்கு புதிய சுவையைச் சேர்க்க முடியும்’ என்று கூறியுள்ளார்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் பிகில் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் நிலையில், வித்தியாசமான புரமோஷனில் படக்குழுவினர் இறங்கி இருக்கிறார்கள்.
அட்லீ இயக்கத்தில் 3வது முறையாக விஜய் நடிக்கும் படம் பிகில். அப்பா, மகன் என இரண்டு தோற்றங்களில் விஜய் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் கதிர், விவேக், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், யோகி பாபு, இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தீபாவளி விடுமுறையை முன்னிட்டு வெளியாக இருக்கும் இப்படத்தின் டிரைலர் 12ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், படக்குழு வித்தியாசமான புரமோஷனில் களமிறங்கி இருக்கிறது. இப்படம் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாகி இருப்பதால், கால்பந்தாட்டம் போட்டி நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
இந்த போட்டி, அக்டோபர் 19-20ம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 வரை நடைபெற இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
நடிகை ரம்யா பாண்டியன் புள்ளிங்கோ கெட்-அப்பில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஜோக்கர் படத்தில் நாயகியாக நடித்தவர் ரம்யா பாண்டியன். அந்த படத்தை அடுத்து ஆண் தேவதை என்ற படத்தில் நடித்தார். அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பாகி வருகிறார். இந்த நிலையில் புள்ளிங்கோ கெட்-அப்பில், கிராப் வைத்து கொண்டு போட்டோ எடுத்து, அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார்.

புள்ளிங்கோ கெட்-அப்பிற்காக அவர் முடியை கிராப் ஸ்டைலில் வெட்டி விட்டார் என எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்க, ’அதெல்லாம் இல்லை; புள்ளிங்கோ கெட்-அப்பில் புகைப்படம் எடுப்பதற்காக, விக் வைத்துக் கொண்டேன்’ என்று சொல்லி இருக்கிறார். ரம்யா பாண்டியனின் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
படப்பிடிப்புக்கு வராததால் நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் ஞானவேல் ராஜா புகார் அளித்துள்ளார்.
டி.ராஜேந்தரின் மகன் சிம்பு. கதாநாயகன், டைரக்டர், பாடலாசிரியர், பாடகர் என்று பண்முகம் கொண்டவர். இவர் பல சர்ச்சைகளிலும் சிக்கி இருக்கிறார். கெட்டவன், மன்மதன், ஏஏஏ என்று பல படங்களில் சிம்பு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவருக்கு ரெட் கார்ட் கொடுக்க கூட தயாரிப்பாளர் சங்கம் சார்பாக முடிவுகள் எடுக்கப்பட்டது.
சிம்பு நடிக்கும் மப்டி எனும் கன்னட படத்தின் ரீமேக் தற்போது கைவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த இரண்டு வருடத்தில் சிம்புவிற்கு மூன்றாவது படம் நிறுத்தப்படுகிறது. கான், மாநாடு படங்களை தொடர்ந்து இந்த படமும் டிராப் ஆகியுள்ளது. கன்னட படமான மப்டி படத்தினை ரீமேக் செய்யும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அதில் சிம்பு சரியாக படத்தின் ஷூட்டிங்கிற்கு வரவில்லை.

இதனால் படத்தின் செலவு பெரிய அளவில் அதிகமாகி உள்ளது. படத்தின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டது. அதேபோல் படத்தின் மற்ற நடிகர்களின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டது. அவர்களுக்கும் தேவையில்லாமல் இழப்பீடு கொடுக்கும் நிலை நேர்ந்துள்ளது. முதல் 10 நாட்கள் ஷூட்டிங்கே நடக்கவில்லை என்று அவர் தனது புகாரில் கூறி உள்ளார்.
இதன் மீதான விசாரணை விரைவில் நடக்கும் என்கிறார்கள். இதனால் மீண்டும் ஏஏஏ, வாலு படம் போல சிம்பு இன்னொரு பிரச்சனைக்கு உள்ளாகி உள்ளார். தற்போது சிம்பு எந்த படத்திலும் நடிக்கவில்லை. அவர் தனியாக ஹீரோவாக நடித்து படம் எதுவும் நீண்ட நாட்களாக வெளியாகவில்லை. தற்போது ஞானவேல் ராஜாவும் சிம்பு மீது புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிஸ்னி இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், அர்ச்சனா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் இரும்பு மனிதன் படத்தின் முன்னோட்டம்.
ஷங்கர் மூவீஸ் இன்டர்நேஷனல் ஜோசப் பேபி தயாரிக்கும் இரண்டாவது படம் ‘இரும்பு மனிதன்’. இதில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் படத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அர்ச்சனா நடிக்க மதுசூதனன், கஞ்சா கருப்பு, நிஷாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பாடல்களை மோகன்ராஜ், நிரஞ்சன் பாரதி, டிஸ்னி எழுத கே.எஸ்.மனோக் இசை அமைக்கிறார்.
கே.கோகுல் ஒளிப்பதிவு செய்ய, எஸ்.பி.அகமது படத்தொகுப்பு செய்ய, கலை கே.மதன் கவனிக்க, ஆக்ஷன் பிரகாஷ் ஸ்டன்ட் செய்ய, கதையை ஜோசப்பேபி எழுத, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் டிஸ்னி. இயக்குனர் டிஸ்னி கூறுகையில், இந்த படத்தின் திரைக்கதை பல்வேறு காலகட்டங்களில் நடக்கிறது. இதை ஒரு உணர்வுபூர்வமான காதல், காமெடி, சென்டிமென்ட், ஆக்ஷன் கலந்து எடுப்பதாகவும், படப்பிடிப்புகள் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடத்த இருப்பதாகவும் சொல்கிறார்.
சம்பள பாக்கி காரணமாக தர்பார் படத்தின் படப்பிடிப்பை நயன்தாரா புறக்கணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ‘தர்பார்’. பேட்ட படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினி நடிப்பதாலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக அதிரடியான கதாபாத் திரத்தில் நடிப்ப தாலும் படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தர்பார் படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். தர்பார் படத்தின் படப்பிடிப்பு நிறைவு அடைந்துவிட்டது.
அடுத்து டப்பிங் உள்ளிட்ட வேலைகளை தொடங்க இருக்கிறார்கள். இந்த நிலையில் நயன்தாரா, தனக்கு பேசப்பட்ட சம்பளம் முழுமையாக தரப்படாததால் கடைசி நாள் படப்பிடிப்பை புறக்கணித்ததாக கூறப்பட்டது. தர்பார் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. பொதுவாக படத்தில் நடிக்கும் நடிக, நடிகைகளுக்கு படத்தில் ஒப்பந்தமாகும் போது குறிப்பிட்ட தொகையையும், மீத தொகையை டப்பிங் சமயத்திலும் வழங்குவார்கள்.

ஆனால், நயன்தாராவிற்கு வேறு ஒருவர் டப்பிங் செய்வதால் கடைசி நாள் படப்பிடிப்பின் போது முழு சம்பளத்தையும் நயன்தாரா பெற்று கொள்வது வழக்கம். தர்பார் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின்போது நயன்தாரா தனக்கு மீதம் இருக்கும் சம்பளத்தை கொடுத்தால் மட்டுமே கலந்துகொள்வேன் என்று கூறிவிட்டதாகவும் பின்னர் முருகதாஸ் மீதி சம்பளத்துக்கு தானே பொறுப்பேற்றுக் கொள்வதாக கூறிய பின்னரே கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் தனுஷ் லண்டனில் டி40 படக்குழுவினருடன் ஆயுதபூஜை கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான அசுரன் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். கேங்ஸ்டர் திரில்லர் பாணியில் உருவாகும் இந்த படம் முழுக்க லண்டனை களமாக கொண்டு உருவாகி வருகிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார்.

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் நடிகர் தனுஷ் ஆயுத பூஜையை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.






