search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ரஜினிகாந்த்
    X
    ரஜினிகாந்த்

    கதாநாயகனாக அறிமுகப்படுத்திய தயாரிப்பாளருக்கு வீடு வழங்கிய ரஜினி

    தன்னை திரையுலகில் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் கலைஞானத்துக்கு நடிகர் ரஜினி வீடு வழங்கினார்.
    ரஜினிகாந்த் அபூர்வராகங்கள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். வில்லன் வேடங்களில் நடித்துவந்த அவர் முதன்முதலாக கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் பைரவி. 1978-ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை தயாரிப்பாளரும் எழுத்தாளருமான கலைஞானம் தயாரித்திருந்தார். கதாசிரியராகவும் கலைஞானம் பணியாற்றினார். 70 ஆண்டுகால திரை வாழ்க்கையில், கதாசிரியர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமையை வெளிப்படுத்திய கலைஞானத்திற்கு தற்போது 90 வயதாகிறது. 

    19 வயதில் சினிமா உலகில் நுழைந்தவர். இவரது பைரவி படத்தின் வெற்றி விழாவில் ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் சூட்டப்பட்டது. கலைஞானம் சொந்த வீடு இல்லாமல் தவித்து வந்தார். கலைஞானத்திற்கு கடந்த ஆகஸ்டு மாதம் இயக்குனர் பாரதிராஜா பாராட்டு விழா நடத்தினார். இந்த பாராட்டு விழாவில் ரஜினிகாந்தும் பங்கேற்றார். விழாவில் பேசிய நடிகர் சிவகுமார், கூறிய பிறகுதான் கலைஞானம் சொந்த வீடு இல்லாமல் இருப்பது அனைவருக்கும் தெரிய வந்தது.

    இதையடுத்து பேசிய ரஜினிகாந்த், கலைஞானம் வாடகை வீட்டில் இருப்பது தனக்கு இப்போது தான் தெரியும் என்றும், தானே அவருக்கு சொந்த வீடு வாங்கி தருவேன் என்றும் உறுதி அளித்தார். இதன்படி, விருகம்பாக்கத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில், 3 படுக்கையறை வசதி, 2 கார் பார்க்கிங் கொண்ட ஒரு வீட்டை கடந்த வாரம் ரஜினிகாந்த் பதிவு செய்து கொடுத்தார். சரஸ்வதி பூஜை தினமான நேற்று காலை, 10 மணிக்கு, ரஜினி கலைஞானத்துக்கு வழங்கிய வீட்டுக்கு சென்றார். கலை ஞானம் மற்றும் அவரது குடும்பத்தார், சால்வை அணிவித்து, ரஜினிக்கு, பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    பூஜை அறையில் குத்து விளக்கு ஏற்றிய ரஜினி, பாபா படத்தை பரிசளித்தார். வீடு முழுவதும் சுற்றிப்பார்த்த அவர், வீடு தெய்வீகமாக இருக்கிறது என, வாழ்த்தினார். கொடுத்த வாக்கை ரஜினி நிறைவேற்றி விட்டதாக கலைஞானம் உருக்கத்துடன் தனது நன்றி தெரிவித்தார். ரஜினிகாந்த் கலை ஞானத்திற்கு வீடு வாங்கி தந்த செய்தி சமூக வலை தளத்தில் வைரலாக பரவி வருகிறது. ரஜினிகாந்த் சொன்னபடி செய்து காட்டியுள்ளார் என்று ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

    ரஜினிகாந்த், கலைஞானம்

    ரஜினி வீடு வாங்கி கொடுத்ததற்கு நன்றி தெரிவித்து கலைஞானம் கூறியதாவது:- “நான் ரஜினிக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தேன் என்பதற்காக எனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதன்படி செய்துவிட்டார். கடைசி காலத்தில் வீடு வாங்கி கொடுத்ததை கூட சிலர் கிண்டல் செய்தனர். நான் அதை பொருட்படுத்தவில்லை.

    ரஜினியை கதாநாயகனாக அறிமுகப்படுத்தும் போது அவர் இவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாராக மாறுவார் என்று நான் நினைத்து பார்க்கவில்லை. ரஜினியை நாயகனாக மாற்றும் துணிச்சல் யாருக்கும் வரவில்லை. நான் செய்தேன். பின்னர் தான் மற்றவர்கள் செய்தனர். ரஜினி சொன்னதை செய்வார் என்று ரசிகர்கள் சொன்னார்கள். அதுவே நடந்திருக்கிறது.

    ரஜினி அரசியல்வாதி ஆவதற்கு நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது. எம்.ஜி.ஆருக்கு வந்த அதே நிர்பந்தம். 20 வருடங்களுக்கு முன்பே வந்திருந்தால் இன்று முதல்வர் ஆகியிருப்பார். அவர் மக்களை ஏமாற்ற கூடாது. ஏமாற்ற மாட்டார் என்று நம்புகிறேன்.”

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×