என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் மிகவும் பிரபலமான நடிகையான இலியானா, என்னுடன் நடித்த ஹீரோவை தீவிரமாக காதலித்து வந்ததாக கூறியிருக்கிறார்.
    நடிகை இலியானா, பிரபல நடிகர் ஒருவரை காதலித்ததாகவும், அந்த காதல் கைக்கூடவில்லை என்றும் கூறி அதிர்ச்சி அளித்திருக்கிறார். இது பற்றி இலியானா கூறியதாவது: ’என்னுடன் நடித்த ஹீரோவை தீவிரமாக காதலித்து வந்தேன். பல மாதங்களாக நல்ல நட்புடன் நாங்கள் இருந்தோம். பல முறை ஒன்றாக டேட்டிங் சென்றோம். 

    ஆனால் அந்த காதல் கைகூடவில்லை. இப்போது வெளிநாட்டுக்காரரை காதலிக்கிறீர்களா என கேட்கிறார்கள். என்னுடைய சொந்த வாழ்க்கை பற்றி எனது பெற்றோருக்கு தெரியும். அவர்களுக்கு மட்டும் எல்லாம் தெரிந்தால் போதும் என்று நினைக்கிறேன். நான் திமிர் பிடித்தவள் என்கிறார்கள். அது பற்றி யார் எது சொன்னாலும் கவலையில்லை. 

    இலியானா

    முதல் படத்துக்கு மட்டுமே டெஸ்ட் ஷூட்டில் பங்கேற்றேன். எல்லா படங்களுக்கும் டெஸ்ட் ஷூட்டில் நான் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை. மற்றவர்களின் உத்தரவுகளுக்கு ஏற்ப என்னால் ஆட முடியாது. என் மனம் என்ன சொல்கிறதோ அதன்படி மட்டுமே நான் வாழ்வேன்' என்றார்.
    சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் மாநாடு படத்திற்காக சிம்பு தீவிர பாக்ஸிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
    சிம்பு நடிப்பில் கடந்த வருடம் செக்க சிவந்த வானம், காற்றின் மொழி படங்களும், அதைத்தொடர்ந்து வந்தா ராஜாவாதான் வருவேன் படமும் திரைக்கு வந்தன.

    இப்படங்களை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவித்து பட வேலைகளை தொடங்கினர். ஆனால் அந்த படம் திடீரென்று கைவிடப்பட்டது. 

    குறிப்பிட்ட தேதியில் சிம்பு நடிக்க வராமல் தாமதம் செய்ததால் படத்தை நிறுத்தியதாக கூறப்பட்டது. பின்னர் படப்பிடிப்புக்கு உரிய நேரத்தில் வரவேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் படத்தை முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட உறுதிமொழி ஒப்பந்தத்தில் சிம்பு கையெழுத்திட்டால் படப்பிடிப்பை தொடங்க தயார் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறினார்.



    அவரது கோரிக்கையை ஏற்று சிம்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதால், மாநாடு படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் மாநாடு படத்திற்காக சிம்பு பாக்ஸிங் பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது. 
    நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் ‘வலிமை’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.
    'நேர்கொண்ட பார்வை' படத்தை தொடர்ந்து மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார் அஜித். ’வலிமை’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பட பூஜை மட்டுமே முடிந்துள்ளது. அதனை தொடர்ந்து படப்பிடிப்புக்கான இடங்கள் தேர்வு, நடிகர்கள் தேர்வு என மும்முரமாக பணிகள் தொடங்கப்பட்டன. 

    அஜித்துடன் நடிக்கவுள்ள நடிகர்கள் தேர்வு முடிவடைந்துவிட்டாலும், எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. 'வலிமை' படப்பிடிப்பு எந்த தேதியில் தொடக்கம் என்று பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தாலும், படக்குழு எதையுமே உறுதிப்படுத்தவில்லை. 

    தற்போது முதன்முறையாக 'வலிமை' படம் குறித்த சில தகவல்களை வெளியிட்டுள்ளார் போனி கபூர். சென்னையில் ஒரு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு போனி கபூர் பேசும் போது, "’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 13-ந் தேதி முதல் தொடங்கவுள்ளது. அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும். அஜித் இதில் காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார்" என்று தெரிவித்துள்ளார். 

    அஜித்

    இதன் மூலம் 'வலிமை' படத்தின் வெளியீட்டில் மாற்றம் ஏற்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது. 'நேர்கொண்ட பார்வை' பட வெளியீட்டின் போது அளித்த பேட்டிகளில், அஜித் - எச்.வினோத் கூட்டணியின் அடுத்த படம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என தெரிவித்து வந்தார் போனி கபூர். ஆனால், படப்பிடிப்பு தொடங்க தாமதமாகிவிட்டதால், தற்போது 'வலிமை' வெளியீட்டை தீபாவளிக்கு மாற்றியுள்ளார்.
    ஆர்யா, சாயிஷா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘டெடி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
    ஆர்யா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘டெடி’. இப்படத்தை டிக் டிக் டிக், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் போன்ற படங்களை இயக்கிய சக்தி சவுந்தரராஜன் இயக்கியுள்ளார். இதில் ஆர்யாவிற்கு ஜோடியாக அவரது மனைவி சாயிஷா நடித்துள்ளார்.

    மேலும் இப்படத்தில், சதீஷ், கருணாகரன், சாக்‌ஷி அகர்வால், பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இமான் இசையமைத்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

    டெடி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

    தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
    சினிமா பிளாட்பார்ம் என்ற பட நிறுவனம் சார்பாக வி.டி.ரித்திஷ்குமார் தயாரித்திருக்கும் ‘நான் அவளை சந்தித்த போது’ படத்தின் முன்னோட்டம்.
    சினிமா பிளாட்பார்ம் என்ற பட நிறுவனம் சார்பாக வி.டி.ரித்திஷ்குமார் தயாரித்திருக்கும் படம் ‘நான் அவளை சந்தித்த போது’. இந்தப் படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் பார்த்திபன் இயக்கிய ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் நாயகனாக நடித்தவர். நாயகியாக சாந்தினி நடிக்கிறார். மலையாள முன்னணி நடிகர் இன்னசன்ட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் ஜி.எம்.குமார், பருத்திவீரன் சுஜாதா, கோவிந்த மூர்த்தி, சாம்ஸ், டி.பி.கஜேந்திரன், சாந்தி வில்லியம்ஸ், ராதா, சுப்புராஜ், காதல் சரவணன், நாடோடிகள் ரங்கா ஆகியோர் நடித்துள்ளனர்.

    ‘மாசாணி மற்றும் பரத் நடித்த ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ போன்ற படங்களை இயக்கிய எல்.ஜி.ரவிசந்தர் இந்தப் படத்தை இயக்குகிறார். 

    ஒளிப்பதிவு - ஆர்.எஸ்.செல்வா, இசை - ஹித்தேஷ் முருகவேல், பாடல்கள் - அறிவுமதி, நா.முத்துக்குமார், எல்.ஜி.ரவிச்சந்தர், நல்.செ.ஆனந்த், கலை - ஜெய்காந்த் / எடிட்டிங் - ராஜாமுகம்மது, நடனம் - சிவசங்கர், பாலகுமாரன் - ரேவதி, தினேஷ், ஸ்டன்ட் - ஹரி தினேஷ் / தயாரிப்பு மேற்பார்வை - ஜி.சம்பத், தயாரிப்பு - V.T.ரித்திஷ்குமார், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - எல்.ஜி.ரவிசந்தர். 

    படம் இம்மாதம் 27 ம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம், பாபநாசம், மாயவரம் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது என்றார் இயக்குனர் எல்.ஜி.ரவிசந்தர். 
    தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, இந்தியில் பேச மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
    நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்கிறார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் மும்பையில் நடந்த ஒரு பேஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

    அதன்பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் இந்தியில் கேள்விகள் கேட்டார்கள். ஆனால் சமந்தா அதற்கு ஆங்கிலத்தில் மட்டுமே பதில் கூறினார். 

    சமந்தா

    அதன்பிறகு தனக்கு இந்தி நன்றாக தெரியும் என்று கூறிய அவர், “நான் தென் இந்தியாவை சேர்ந்தவள். அதனால் மொழி சரளமாக இருக்காது என்பதால் இந்தியில் பேச மாட்டேன்” என்று கூறினார்.
    தனுஷுடன் நடித்த பிரபல நடிகை தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் இணைந்து நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
    விஜய்சேதுபதி இந்த ஆண்டு முதல்முறையாக மார்க்கோனி மத்தாய் என்ற படம் மூலமாக மலையாளத்தில் அடியெடுத்து வைத்தார். அதேபோல் மலையாள நடிகை மஞ்சுவாரியர் அசுரன் படம் மூலமாக தமிழ் திரையுலகில் நுழைந்தார். இப்போது இவர்கள் இருவரும் இணைந்து தமிழ், மலையாளம் மொழிகளிலும் உருவாகும் படத்தில் நடிக்கிறார்கள். 

    விஜய் சேதுபதி - மஞ்சு வாரியர்

    இந்த படத்தில் இன்னொரு கதாநாயகனாக விஜய்சேதுபதியுடன் இணைந்து நடிக்க இருக்கிறார் பிஜூமேனன். ஆர்.ஜே.ஷான் என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே மஞ்சு வாரியர் நடித்த சாய்ராபானு என்ற படத்தின் கதாசிரியர்களில் ஒருவராக பணியாற்றியவர். இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் மஞ்சு வாரியர் தன்னை இணைத்து கொண்டுள்ளார்.
    வி.இசட்.துரை இயக்கத்தில் சுந்தர்.சி. சாக்‌ஷி சவுத்ரி, விமலா ராமன், சாய் தன்ஷிகா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘இருட்டு’ படத்தின் விமர்சனம்.
    பனி சூழ்ந்த மலைப்பகுதியில் இருக்கும் ஊரில் மர்மமான முறையில் 6 பேர் இறக்கிறார்கள். இந்த கேசை விசாரிக்கும் போலீசுக்கு ஒரு தகவல் கிடைக்கிறது. இந்நிலையில், அவர் தற்கொலை செய்துக் கொள்கிறார். இதனால், இந்த கேசை விசாரிக்க சுந்தர்.சி தேர்வு செய்யப்படுகிறார்.

    தனது குடும்பத்துடன் அந்த ஊருக்கு வருகிறார் சுந்தர்.சி. அங்கு வந்த பிறகு அவர்கள் தங்கும் வீட்டில் அமானுஷ்ய சக்தி இருப்பதாக அவரது மனைவி அறிகிறார். சில நாட்களில் சுந்தர்.சி.க்கும் அமானுஷ்ய சக்தி இருப்பது தெரிய வருகிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் சுந்தர்.சி. அந்த வழக்கை எப்படி விசாரித்தார்? அந்த 6 பேர் இறப்பில் இருக்கும் மர்மம் என்ன? விசாரணை செய்த போலீஸ் தற்கொலை செய்ய காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    இருட்டு விமர்சனம்

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாயகனாக நடித்திருக்கிறார் சுந்தர்.சி. ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். போலீஸ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார். சாக்‌ஷி சவுத்ரிக்கு அதிகம் வாய்ப்பில்லை. கவர்ச்சிப் பதுமையாக வந்து செல்கிறார். சாய் தன்ஷிகா பார்வையால் மிரட்டியிருக்கிறார். விமலா ராமன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். விடிவி கணேஷ் காமெடியில் கலகலப்பு கூட்டுகிறார். யோகி பாபு ஒரு காட்சியில் மட்டும் வந்து கவனம் பெற்றிருக்கிறார். 

    இருட்டு விமர்சனம்

    தமிழ் சினிமாவில் முகவரி, தொட்டிஜெயா, 6 கேண்டில்ஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய வி.இசட்.துரை, இம்முறை ஹாரர் கதையை மையமாக வைத்து படத்தை உருவாக்கி இருக்கிறார். வழக்கமான பேய் படங்களை தாண்டி வித்தியாசமாக உருவாக்கி பார்ப்பவர்களை பயமுறுத்தி சிறப்பாக இயக்கியுள்ளார். மீன், கறையான், பாம்பு, நாய் என ஓரறிவு முதல் ஐந்தறிவு உள்ள உயிரினங்கள் வரை திரைக்கதைக்குள் புகுத்தியிருப்பது சிறப்பு. 

    கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையில் ஒரே பாடல் அவ்வளவு சீக்கிரம் முடிந்து நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. பின்னணியில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். இவருடன் இணைந்து கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவும் அதிக பங்களிப்பை கொடுத்திருக்கிறது. 

    மொத்தத்தில் ‘இருட்டு’ சிறப்பு.
    தமிழ், மலையாளம் பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நித்யா மேனன், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறியிருக்கிறார்.
    தமிழ், மலையாளம் பட உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நித்யா மேனன். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது, முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான தி அயன்லேடி படத்தில் நடித்து வருகிறார். இதற்காக ஜெயலலிதா போன்று இருப்பதற்கான பல விசேஷ பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

    சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், தான் எதிர்பாராமல் சினிமாவில் அறிமுகமானதாகவும், ஒன்றிரண்டு படங்களில் நடித்து விட்டு போய் விடலாம் என்று நினைத்ததாகவும் ஆனால் அதன் மீது விருப்பம் அதிகமாகி திரை பயணத்தை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

    நித்யா மேனன்

    மேலும், "சினிமா துறையில் மட்டும் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவாக உள்ளது என்பது சரியல்ல. எல்லா துறைகளிலுமே பாதுகாப்பின்மை இருக்கிறது. என் வாழ்க்கையில் பாதுகாப்பு இல்லை என்ற உணர்வு ஏற்பட்டதில்லை. சிலர் என்னிடம் ஆபாசமாக பேசி தவறாக நடக்க முயற்சி செய்தனர். 

    நான் விட்டு கொடுக்காமல், பெண்களிடம் கவுரவமாக நடக்க கற்றுக்கொள் என்று கடுமையாக கூறினேன். என்ன தவறு நடந்தாலும் அதை எதிர்ப்பதில் நமது பங்கும் இருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் தலையிடுவார்கள். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் முளையிலேயே கிள்ளி எறிந்து விட வேண்டும். நமது முடிவை கொஞ்சமும் தயங்காமல் தைரியமாக முகத்தில் அறைந்த மாதிரி சொல்ல வேண்டும். தைரியமாக இருந்தாலே பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.' என நித்யா மேனன் கூறியுள்ளார்.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் காதலன் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா சாமி தரிசனம் செய்துள்ளார்.
    தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இருவரும் இணைந்து இருப்பது போன்ற படங்களை தங்களது டுவிட்டர் பக்கத்தில் அடிக்கடி வெளிட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் நடிகை நயன்தாரா, தனது காதலன் விக்னேஷ்சிவனுடன் நேற்று மாலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு வந்தார். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் கால பைரவர் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, பகவதி அம்மன் சன்னதி, தர்ம சாஸ்தா சன்னதி, சூரிய பகவான் சன்னதி ஆகியவற்றில் பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர்.

    நயன்தாரா

    இதற்கிடையே நயன்தாரா வந்திருப்பதை அறிந்ததும் ஏராளமான ரசிகர்கள் கோவில் முன்பு திரண்டனர். அவர்கள் நயன்தாராவை பார்க்க முண்டியடித்து கொண்டு ஆர்வம் காட்டினர். இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது.

    இதைதொடர்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பின்னர், போலீசார் நயன்தாராவையும், விக்னேஷ் சிவனையும் பலத்த பாதுகாப்புடன் அங்கிருந்து காரில் அனுப்பி வைத்தனர்.
    சிவா இயக்கத்தில் உருவாக இருக்கும் தலைவர் 168 படத்தில் 24 வருடத்திற்குப் பிறகு ரஜினியுடன் பிரபல நடிகை இணைந்து நடிக்கிறார்.
    ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகிபாபு, சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இப்படத்தை அடுத்து சிவா இயக்கும் படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார். இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார். சூரி காமெடி வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் பிரகாஷ், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர்.



    இந்நிலையில், தற்போது நடிகை மீனா இப்படத்தில் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இதற்கு முன் மீனா ரஜினியுடன் எஜமான், வீரா, முத்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது 24 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரஜினியுடன் இணைந்திருக்கிறார்.
    தர்பார் படத்தை அடுத்து சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தலைவர் 168 படத்தில் முதல்முறையாக பிரபல நடிகை இணைந்து நடிக்கிறார்.
    ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகிபாபு, சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    இப்படத்தை அடுத்து சிவா இயக்கும் படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார். இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர். பின்னர் காமெடி நடிகர் சூரி இணைந்திருப்பதாக கூறினார்கள்.



    தற்போது பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ் முதல்முறையாக இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
    ×