என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஜோதிகா சொன்னது சரியானது, அவர் பேசியதில் எந்த தவறும் இல்லை என இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    நடிகை ஜோதிகா கோவில்களுக்கு செலவிடும் அதே தொகையை மருத்துவமனைகளுக்கும், பள்ளிகளுக்கும் கொடுங்கள் என்று பேசியது எதிர்ப்பை கிளப்பியது. ஜோதிகாவை நடிகர் எஸ்.வி.சேகர், நடிகை காயத்ரி ரகுராம் ஆகியோர் கண்டித்தனர். இந்த நிலையில் ஜோதிகா பேச்சுக்கு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஆதரவு தெரிவித்து உள்ளார். 

    அவர் கூறியதாவது: ஜோதிகாவை ஏன் இவ்வளவு கடுமையாக விமர்சிக்கிறார்கள்? என்று எனக்கு புரியவில்லை. நான் அவருடையை பேச்சை முழுமையாக கேட்டேன். அதில் யாரையும் புண்படுத்தும் வகையில் தவறாக பேசவில்லை, அவர் சொன்னது சரியானது. இந்த கொரோனா துயரங்களுக்கு பிறகும் பாடங்களை கற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். சிலர் மத அரசியல் செய்வது மோசமானது. 

    லட்சுமி ராமகிருஷ்ணன்

    ஜோதிகா தனது பேச்சில் எந்த மதத்தையும் பற்றி குறிப்பிடவில்லை. நிஜமான சமூக அக்கறை மட்டுமே அவரது பேச்சில் பிரதிபலித்தது. அவரது பேச்சில் எந்த இடத்திலும் தவறு தெரியவில்லை. சிலரை அவரது பேச்சு வருத்தப்படுத்தி இருந்தால் அதை நாகரீகமாக சொல்லி இருக்கலாம். அவர்கள் கருத்துகளுக்கு ஜோதிகாவும் மதிப்பு அளித்து இருப்பார்.

    இவ்வாறு லட்சுமி ராமகிருஷ்ணன் கூறினார்.
    தன்னுடைய படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பலாத்காரம் செய்ததாக பிரபல இயக்குனர் மீது நடிகை பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
    பிரபல மலையாள சினிமா இயக்குனர் கமல். இவர் தமிழில் பிரசாந்த், ஷாலினி நடித்துள்ள பிரியாத வரம் வேண்டும் படத்தை டைரக்டு செய்துள்ளார். மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம், பிருத்விராஜ், திலீப் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்கள் நடித்த 45-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளார்.

    2 வருடங்களுக்கு முன்பு இவரது இயக்கத்தில் மஞ்சு வாரியர், முரளி கோபி ஆகியோர் நடித்த ஆமி படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பிரணய மீனுகளுடே கடல் படத்தை இயக்கினார். இந்த நிலையில் கதாநாயகி வாய்ப்பு தருவதாக கமல் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம் நடிகை ஒருவர் குற்றம் சாட்டி உள்ளார்.

    இயக்குனர் கமல்

    அவர் அளித்துள்ள புகாரில், “கமல், ஆமி படத்தை இயக்கியபோது தனக்கு அடுத்த படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி அவரது வீட்டுக்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். ஆமி படப்பிடிப்பின் போதும் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். எனக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டார். அவர் ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்” என்று கூறியுள்ளார்.

    அவருக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பி உள்ளார். இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள கமல், ‘என்மீதான புகார் ஆதாரமற்றது. எனது பெயரை கெடுக்கும் செயல். எனக்கு வக்கீல் நோட்டீசு வந்தது. இது பொய்யான புகார்’ என்றார்.
    பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் அமீர் கான், கோதுமை பாக்கெட்டுக்குள் ரூ.15 ஆயிரம் வைத்து ஏழை மக்களுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.
    கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டோருக்கு சல்மான்கான், ஷாருக்கான், அக்‌ஷய்குமார், கங்கனா ரணாவத், வித்யாபாலன் உளிட்ட பல இந்தி நடிகர்-நடிகைகள் உதவி வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் அமீர்கான் நூதனமான முறையில் உதவி வழங்கி இருக்கிறார். ஏழைகளுக்கு தலா ஒரு கிலோ கோதுமை பாக்கெட்டுகள் வழங்கப்படும் என்று அறிவித்தார். 

    அதனை பலரும் குறைவாக மதிப்பிட்டு வாங்க செல்லவில்லை. ஆனால் அதற்கும் வழியில்லாத பரம ஏழைகள் கோதுமை பாக்கெட்டுகளை வாங்கிச் சென்றனர். வீட்டுக்கு சென்று குழந்தைகளுக்கு சப்பாத்தி போடுவதற்காக பொட்டலத்தை திறந்தவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. கோதுமை பாக்கெட்டுக்கு உள்ளே ரூ.15 ஆயிரம் இருந்ததை பார்த்து சந்தோஷப்பட்டனர். 

    அமீர் கான்

    ஒரு கிலோ கோதுமை பாக்கெட் என்றால் உண்மையான ஏழைகள் மட்டுமே வாங்க வருவார்கள் என்று முடிவு செய்து நூதன முறையில் உதவி செய்து இருப்பதாக பலரும் அவரை பாராட்டினர். கோதுமை பாக்கெட்டுக்குள் பணம் இருந்த விஷயம் அந்த பாக்கெட்டை வினியோகம் செய்த அவரது உதவியாளர்களுக்கு கூட தெரியாதாம்.
    விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் மாளவிகா மோகனன் ரசிகர் மீது கோபப்பட்டிருக்கிறார்.
    விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவர் மாளவிகா மோகனன். மாஸ்டர் படம் குறித்து விஜய் ரசிகர் ஒருவர் கார்ட்டூனை ஒன்றை டுவிட்டரில் பதிவு செய்திருந்தார்.

     அந்த பதிவில் 'மாஸ்டர்' குழுவினர் ஊரடங்கில் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அதில் மாளவிகா மோகனன் மட்டும் சமைப்பது போன்றும் மற்றவர்கள் பொழுதுபோக்கு அம்சத்தில் ஈடுபட்டிருந்தது போன்றும் வடிவமைத்திருந்தார்.

    இந்த கார்ட்டூனுக்கு மாளவிகா மோகனன் தனது டுவிட்டர் பதிவில் கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு "ஒரு கற்பனையான பாத்திரம் வீட்டில் இருந்தால் கூட, பெண்ணின் வேலை என்பது சமையல் மட்டும்தானா? இதுதான் பாலின சமன்பாடா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்த டுவிட்டுக்கு விஜய் ரசிகர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்ததால் மாளவிகா அந்த டுவிட்டை நீக்கிவிட்டார்.
     விஜய் ரசிகர் வெளியிட்டுள்ள கார்ட்டூன்.
    இதையடுத்து மீண்டும் விஜய் ரசிகர் கிட்டத்தட்ட அதேபோன்ற பதிவு ஒன்றை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். ஆனால் அதில் மாளவிகா மோகனன் சமையல் செய்வதற்கு பதில் புத்தகம் படிப்பது போல் உள்ளது. இந்த படத்தை பார்த்த மாளவிகா மோகனன், ‘நான் இதைத்தான் எதிர்பார்த்தேன். இதனை நான் மிகவும் விரும்புகிறேன் என்று பதிவு செய்துள்ளார்.
    தமிழில் சகுனி, மாஸ் படங்களில் நடித்த நடிகை பிரணீதா, 75 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கி வருகிறார்.
    கொரோனா ஊரடங்கு காரணமாக ஏழை மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். தினசரி வேலைக்குச் சென்று சம்பாதித்து தங்களது குடும்பங்களைக் காப்பாற்றுபவர்கள் நிலை மோசமாகவே உள்ளது.

    ஊர் விட்டு ஊர் வந்து வேலை பார்த்தவர்களும் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நடிகர்கள், நடிகைகள் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறார்கள்.
    ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் சேவையில் பிரணீதா
    தமிழில் சகுனி, மாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த கன்னட நடிகையான பிரணீதா சுபாஷ், ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் சேவையில் ஈடுபட்டுள்ளார். அவரது நேரடி மேற்பார்வையில் உணவுகளை சமைப்பது, பேக் செய்வது ஆகியவற்றைப் பார்த்து அவரும் அந்தப் பணியில் ஈடுபட்டுள்ளார். ஒரு நாளைக்கு 75 ஆயிரம் பேருக்கு உணவு வழங்குகிறார். பிரணீதாவின் இந்த சேவைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
    மாஸ்டர் படத்தில் ரசிகர்களுக்கு அது விருந்தாக அமையும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகியிருக்கும் படம் மாஸ்டர். இதில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்க அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படம் இந்த மாதம் 9ம் தேதி வெளியாக வேண்டியது. கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படம் வெளியாகாமல் இருக்கிறது.

    நடிகர் விஜய்


    இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய கணக்கு ஒன்றை ஆரம்பித்துள்ளார். அதில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது படம் பற்றி சில அப்டேட்களை கொடுத்தார்.

    மாஸ்டர் ஒரு ஆக்க்ஷன் என்டர்டெயின்மென்ட் படம். விஜய், விஜய் சேதுபதி இருவரின் ஆக்க்ஷனும் மிக அதிகமாக இருக்கும். இந்த ஆக்க்ஷன் காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.

    படத்தின் டிரைலர் பற்றியோ, வெளியீட்டுத் தேதி பற்றியோ சொல்ல இது சரியான நேரமில்லை. அதனால் தான் நாங்கள் எந்தவிதமான அப்டேட்டையும் கொடுக்காமல் இருக்கிறோம். அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கமாக உள்ளது. விரைவில் படம் பற்றிய அப்டேட்களைத் தருவோம்,” எனத் தெரிவித்துள்ளார்.
    தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் அதிக சம்பளம் வாங்குவதை நடிகர் கருணாகரன் கிண்டல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    நடிகர் விஜய் அரசுக்கு 1.30 கோடியும், ரசிகர் மன்றங்களுக்கு 50 லட்சமும் நிதி உதவி செய்துள்ளார். அது மட்டும் இல்லாமல் கஷ்டப்படும் விஜய் ரசிகர்கள் குடும்பத்திற்கு தலா 5,000 அவர்களது வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்.

    தென்னிந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் நிதி உதவி செய்த ஒரே நடிகர் என்ற பெயரையும் பெற்று இருக்கிறார். இதனால் அனைத்து மாநில முதலமைச்சர்களும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாண்டிச்சேரி மாநிலத்திற்கு 5 லட்சம் அனுப்பிய விஜய்யை அதன் முதலமைச்சர் பாராட்டி வீடியோ வெளியிட்டிருந்தார்.

     மேலும் அனைத்து நடிகர்களும் இதுபோன்று உதவ முன்வர வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். அதற்கு நடிகர் கருணாகரன், விஜய்யை போல் எங்களுக்கும் சம்பளம் கொடுங்கள் நாங்களும் செய்கிறோம் என்பதைப்போல கிண்டலாக தனது பதிவை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.  இதனால் கருணாகரனை விஜய் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

    ஆனால் கருணாகரன் டிவிட்டர் கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த பதிவை கருணாகரன் தான் செய்தாரா இல்லை அவரது பெயரில் போட்டோ ஷாப் ஒர்க் செய்யப்பட்டதா என்பது தெரியவில்லை.
    பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவர், தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷின் நடிப்பை பாராட்டி இருக்கிறார்.
    ஜேம்ஸ் காஸ்மோ ஹாலிவுட்டின் பிரபலமான நடிகர். இவர் பிரேவ் ஹார்ட், டிராய், தி கிரானிகல்ஸ் ஆப் நார்நியா மற்றும் சமீபத்தில் உலக புகழ் பெற்ற கேம் ஆப் த்ரோன்ஸ் என்கிற பிரம்மாண்ட தொடரிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இங்கிலாந்தின் ஸ்காட்லாந்தை சேர்ந்த ஜேம்ஸ் காஸ்மோ தற்போது ஊரடங்கு காலத்தை வீட்டிலேயே உடற்பயிற்சி மற்றும் சில பொழுதுபோக்குகள் மூலம் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

    ஜேம்ஸ் காஸ்மோ, தனுஷ்


    இவர் ஜகமே தந்திரம் படத்தில் தனுசுடன் நடித்துள்ளார். இதை பற்றி ஜேம்ஸ் காஸ்மோ கூறுகையில், தான் இந்த படத்தில் ஒரு லண்டன் கேங்ஸ்டராக நடித்திருப்பதாகவும். மேலும் படப்பிடிப்பின் போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜிடம் எனக்கு படத்தில் மற்ற இந்திய படங்களை போல ஆடல் காட்சியெல்லாம் இருக்கிறதா என்று கேட்டுள்ளார் ஆனால் கார்த்தியோ இந்த படத்தில் அது இல்லை என்று மறுத்துவிட்டாராம்.

    ஆனாலும் படப்பிடிப்பின் போது ஒரு சண்டை காட்சி முடிந்ததும் தானும் தனுஷும் ஆடியதாக குறிப்பிட்டு கூறியிருந்தார். அப்படியே தனுஷ் பற்றி கூறிய நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்றும் அவருடன் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது என்றும் கூறினார். மேலும் தனுஷ் தினந்தோறும் படப்பிடிப்புக்கு வரும் போது விளையாட்டு தனமான முக பாவனைகளுடன் படப்பிடிப்புக்கு வருவார் இது அவர் பல படங்களில் நடித்த அனுபவமாகக் கூட இருக்கலாம் என கூறியிருந்தார்.
    தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த மீனா, அஜித்துடன் வில்லன் படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
    அஜித்துடன் ஆனந்த பூங்காற்றே, வில்லன் ஆகிய படங்களில் மீனா நடித்தார். இதில் வில்லன் படத்தில் அவர்  2 வது கதாநாயகியாக நடித்தார். இந்த படம் சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இதை பார்த்ததும் மீனாவுக்கு வில்லன் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் நடந்த விஷயங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அஜித்துடன் வில்லன் படத்தில் மீனா


    அந்த படத்தில் இடம்பெற்ற அடிச்சா நெத்தி அடியா அடிப்பேன் பாடலுக்கு நடனமாடிவிட்டு, மறுநாள் படுக்கையில் இருந்து எழக்கூட முடியாமல் போய்விட்டதாக மீனா தெரிவித்துள்ளார்.

     மேலும் "ஒரே மனம் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. இந்த பாடல் படப்பிடிப்பின் போது திடீரென பனிமழை பொழிய தொடங்கிவிட்டது. எதிர்பாராமல் இது நிகழ்ந்தது. நான் அந்த குளிரை தாங்கும்படியான ஆடை அணியவில்லை. காலில் ஷூ கூட அணியவில்லை. பனியில் உறைந்து போய்விடுவேனோ என பயந்துவிட்டேன். இந்த பாடலுக்கு நாங்கள் ரிகர்சல் எதுவும் செய்யவில்லை. அப்படியே நடித்து படமாக்கினோம்", என வில்லன் படம் குறித்த தனது அனுபவத்தை மீனா பகிர்ந்துள்ளார்.
    இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சுஜா, மிகவும் எளிமையாக திருமணம் செய்து கொண்டார்.
    தமிழில் பல வெற்றி படங்களை இயக்கியவர் செல்வராகவன். இவர் சமீபத்தில் சூர்யாவை வைத்து என்.ஜி.கே என்ற படத்தை இயக்கினார்.

    இப்படம் உட்பட அவருடன் பல படங்களில்  உதவி இயக்குனராக சுஜா என்பவர் பணியாற்றிய வந்தார்.

    அரவிந்த் குமார், சுஜா


    சுஜாவிற்கும் அரவிந்த் குமார் என்பவருக்கும்  திருமணம் இன்று  (27-04-2020, திங்கள் கிழமை) காலை சென்னை சூளைமேட்டில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. கொரோனா பாதுகாப்பு கருதி மணமகன் மற்றும் மணமகளின் பெற்றோர் மட்டுமே கலந்து கொண்டு மிக எளிய முறையில் நடைபெற்றது.
    தமிழில் பிரபல நடிகையாக இருக்கும் காயத்ரி சமூகமாக நாம் தோற்று விட்டோம் என்று கூறியுள்ளார்.
    சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவர் சைமன் உயிரிழந்தார். அவரது உடலைப் புதைக்கச் சென்ற ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை அண்ணா நகரைச் சேர்ந்த சிலர் கடுமையாகத் தாக்கினர். பின்னர் மருத்துவரின் உடல் போலீஸ் உதவியுடன் புதைக்கப்பட்டது. தாக்குதல் நடத்திய 21 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், மருத்துவர்கள், மருத்துவ சங்கத்தினர் எனப் பலரும் வேதனையையும் கண்டனத்தையும் தெரிவித்தனர்.

    இந்தச் சம்பவம் தொடர்பாக நடிகை காயத்ரி தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது: "நம் உயிரை காக்கும் மக்களுக்கு இதுதான் நாம் கொடுக்கும் மரியாதை என்றால் ஒரு சமூகமாக நாம் தோற்றுவிட்டோம். நமக்காக டாக்டர் சைமன், டாக்டர் பிரதீப் போன்றோர் செய்த தியாகங்களை நினைவுகூர்வோம். அவர்கள் பாகுபாடு பார்க்கவில்லை. நாமும் பார்க்கக்கூடாது. இது போன்ற ஒரு கடினமான சூழலில் மருத்துவர்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்க முடிவுசெய்தால் என்னவாகும் என்று நினைத்துப் பாருங்கள்" இவ்வாறு காயத்ரி தெரிவித்தார்.
    கொரோனாவில் இருந்து வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று திவ்யா சத்யராஜ் கூறியுள்ளார்.
    பிரபல நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், கொரோனா பீதி காரணமாக பள்ளிகள் இயங்காததால், வறுமையில் வாடும் குடும்பங்களில் வசித்து வரும் குழந்தைகளுக்கு சத்தான சாப்பாடு கிடைக்காமல் அவர்கள் ரத்தசோகை மற்றும் இரும்பு  சத்து குறைபாடுகளால் பாதிக்கப்படுவார்கள் என்பதை தெரிவிக்கும் விதமாக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது...  " கடந்த சில மாதங்களுக்கு முன்பு நான் அரசு பள்ளி குழந்தைகளில் வைட்டமின் குறைபாடு குறித்து ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டேன். அப்போது... கார்ப்பரேஷன் பள்ளிகளில் 38% சிறுவர்கள் மற்றும் 40% இளம் பருவ பெண் குழந்தைகளுக்கு, இரும்புச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகை இருப்பது தெரியவந்தது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் தமிழக அரசிடம் பேசினேன். அப்போது இரும்புச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகையை அவர்களின் மதிய உணவு திட்டத்தின் மூலம் நிவர்த்தி செய்யும் பணியில் அரசாங்கம் இறங்கியது.

    இந்நிலையில் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டதால், கார்ப்பரேஷன் பள்ளி குழந்தைகளுக்கு இரும்புச்சத்து நிறைந்த உணவு மற்றும் மதிய உணவு திட்டத்தால் வழங்கப்படும் இரும்புச் சத்துக்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இரும்புச்சத்து நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு அடிப்படையான ரத்த சிவப்பு அணுக்களுக்கு அத்தியாவசியமான ஒன்று.

    நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் அந்த குழந்தைகளை கொரோனாவில் இருந்து பாதுகாக்க முடியாது. அவர்களுக்கு கொரோனா வரும் வாய்ப்புகள் அதிகம்.
    வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளும் கொரோனாவில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும்.

     ஆரோக்கியமான வாழ்க்கை வசதியான குழந்தைகளுக்கு மட்டும்தான் என்பது நியாயம் கிடையாது.   எனவே குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தில் வளரும் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து கொண்ட உணவுகளையும் இரும்புச்சத்து மருந்துகளையும் இலவசமாக வழங்குமாறு அரசிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
    ×