என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கொரோனாவில் இருந்து வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று திவ்யா சத்யராஜ் கூறியுள்ளார்.
    பிரபல நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், கொரோனா பீதி காரணமாக பள்ளிகள் இயங்காததால், வறுமையில் வாடும் குடும்பங்களில் வசித்து வரும் குழந்தைகளுக்கு சத்தான சாப்பாடு கிடைக்காமல் அவர்கள் ரத்தசோகை மற்றும் இரும்பு  சத்து குறைபாடுகளால் பாதிக்கப்படுவார்கள் என்பதை தெரிவிக்கும் விதமாக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது...  " கடந்த சில மாதங்களுக்கு முன்பு நான் அரசு பள்ளி குழந்தைகளில் வைட்டமின் குறைபாடு குறித்து ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டேன். அப்போது... கார்ப்பரேஷன் பள்ளிகளில் 38% சிறுவர்கள் மற்றும் 40% இளம் பருவ பெண் குழந்தைகளுக்கு, இரும்புச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகை இருப்பது தெரியவந்தது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் தமிழக அரசிடம் பேசினேன். அப்போது இரும்புச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகையை அவர்களின் மதிய உணவு திட்டத்தின் மூலம் நிவர்த்தி செய்யும் பணியில் அரசாங்கம் இறங்கியது.

    இந்நிலையில் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டதால், கார்ப்பரேஷன் பள்ளி குழந்தைகளுக்கு இரும்புச்சத்து நிறைந்த உணவு மற்றும் மதிய உணவு திட்டத்தால் வழங்கப்படும் இரும்புச் சத்துக்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இரும்புச்சத்து நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு அடிப்படையான ரத்த சிவப்பு அணுக்களுக்கு அத்தியாவசியமான ஒன்று.

    நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் அந்த குழந்தைகளை கொரோனாவில் இருந்து பாதுகாக்க முடியாது. அவர்களுக்கு கொரோனா வரும் வாய்ப்புகள் அதிகம்.
    வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளும் கொரோனாவில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும்.

     ஆரோக்கியமான வாழ்க்கை வசதியான குழந்தைகளுக்கு மட்டும்தான் என்பது நியாயம் கிடையாது.   எனவே குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தில் வளரும் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து கொண்ட உணவுகளையும் இரும்புச்சத்து மருந்துகளையும் இலவசமாக வழங்குமாறு அரசிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
    சூர்யா தயாரிப்பில் உருவாகி இருக்கும் பொன்மகள் வந்தாள் திரைப்படம் ஓடிடி-யில் வெளியாக உள்ள நிலையில், சந்தானத்தின் படமும் அதேபோல் ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
    தமிழ் திரையுலகில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருவது சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படத்தின் ரிலீஸ் தான். புதுமுயற்சியாக இப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளனர். இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், தயாரிப்பாளர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பொன்மகள் வந்தாள் படத்தை வெளியிடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

    சர்வர் சுந்தரம் பட போஸ்டர்

    இந்நிலையில், ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்து 3 ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் சர்வர் சுந்தரம் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக வைபவி நடித்துள்ளார். இதுதவிர மேலும் சில படங்களையும் ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 
    வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் முன்னோட்டம்.
    விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் கூட்டணியில் உருவாகும் படம் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’. இப்படத்தை லாபம் பட இயக்குனர் ஜனநாதனின் உதவி இயக்குநர் வெங்கட கிருஷ்ணா இயக்குகிறார். சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் விஜய் சேதுபதியுடன் நடிக்கும் முதல் படம் இதுவாகும். 

    அதேபோல் இயக்குனர்கள் மோகன் ராஜா, மகிழ்திருமேனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். நடிகைகள் கனிகா, ரித்விகா ஆகியோர் முக்கிய வேடங்களில் வருகின்றனர்.
    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ், சமந்தாவுடன் இணைந்து நடிக்காதது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
    தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ், அனுஷ்கா,  தமன்னா, நயன்தாரா, திரிஷா என பல முன்னணி ஹீரோயின்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். ஆனால் அவர் இதுவரை சமந்தாவுடன் ஒரு படத்தில் கூட நடித்ததில்லை. இதுகுறித்து பிரபாஸிடம் சமீபத்திய பேட்டியில் கேட்கப்பட்டது. இதற்கு அவர் அளித்த விளக்கம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

    அவர் கூறியதாவது: எனக்கும் சமந்தாவிற்கும் இடையே உயரம் பிரச்சனையாக உள்ளது. அதுதான் நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றாததற்கு முக்கிய கரணம் என கூறியுள்ளார். கடந்தாண்டு பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ திரைப்படத்தில் சமந்தா நடிப்பதாக இருந்தது. பின்னர் அவருக்கு பதில் இந்தி நடிகை ஷ்ரத்தா கபூரை ஒப்பந்தம் செய்தனர். 
    படங்களை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட ஆதரவு தெரிவித்து 30 தயாரிப்பாளர்கள் கூட்டறிக்கை வெளியிட்டு உள்ளனர்.
    திரைப்பட தயாரிப்பாளர்களை பாதிக்கும் வகையில் எந்த ஒரு சங்கமும் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க வேண்டாம் என்று பட அதிபர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள். 30 திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டறிக்கை விடுத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: திரைப்பட தயாரிப்பு துறையில் ஆர்வத்துடனும், நம்பிக்கையுடனும் இன்று நிறைய தயாரிப்பாளர்கள் திரைப்படம் எடுத்து வருகிறார்கள். இன்றைய சூழ்நிலையில் தொழில்நுட்பம் வளர்ந்து இணையதளம் மூலம் புதிய படங்கள் நேரடியாக வெளிவரும் முறை உலகெங்கும் உள்ளது.

    இந்தநிலையில் தற்போது பிரபல இணையதள நிறுவனங்கள் சிறு மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களை நல்ல தோள் கொடுத்து தாங்கி, நேரடியாக வெளியிட முன்வந்திருப்பதை அனைவரும் வரவேற்க வேண்டும். ஏனென்றால் அதன் மூலம் தயாரிப்பாளர்கள் அவர்களின் முதலீட்டை எப்படியாவது எடுத்துவிட முடியும். இவ்வாறு படங்கள் நேரடியாக வெளியிடுவதன் மூலம் திரையரங்கில் வெளியாக காத்திருக்கும் படங்களின் எண்ணிக்கை குறையும். 

    தயாரிப்பாளர்கள்

    முதலீடு செய்யும் ஒரு தயாரிப்பாளருக்கு அந்த படத்தை எல்லா விதங்களிலும் சட்டப்படி வியாபாரம் செய்ய அனைத்து உரிமையும் உள்ளது. திரைப்படத்துறை வளமாக இயங்க தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகிய அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். தனிப்பட்ட எந்த சங்கமும் தன்னிச்சையாக எந்த ஒரு தயாரிப்பாளரையும் பாதிக்கும் வகையில் முடிவுகளை எடுத்து அறிவிக்க வேண்டாம் என்று இந்த நேரத்தில் கேட்டு கொள்கிறோம்.

    கொரோனா பிரச்சினை முடிந்ததும் அனைத்து சங்கத்தை சேர்ந்தவர்களும் கலந்து ஆலோசித்து, விவாதித்து வரைமுறைகளை வகுத்து தமிழ் சினிமா வளமாக செயல் பட சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    வரனே அவஷ்யமுண்டு என்ற மலையாள படத்தில் பிரபாகரன் பெயரை அவமதித்ததாக சர்ச்சை எழுந்ததையடுத்து தமிழ் மக்களிடம் துல்கர் சல்மான் மன்னிப்பு கேட்டுள்ளார்.
    அனுப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து தயாரித்துள்ள ‘வரனே அவஷ்யமுண்டு’ என்ற மலையாள படம் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்தது. இதில் துல்கர் சல்மானுடன், ஷோபனா, சுரேஷ் கோபி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோரும் நடித்து இருந்தனர். இந்த படம் தற்போது இணையதளத்திலும் வந்துள்ளது.

    இந்த படத்தில் இடம்பெறும் நகைச்சுவை காட்சி ஒன்றில், சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்து அழைப்பர். இது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் துல்கர் சல்மான் உள்ளிட்ட படக்குழுவினரை இணையத்தில் தீட்டித் தீர்த்தனர். 

    இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான துல்கர் டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது: வரனே அவஷ்யமுண்டு படத்தில் வரும் பிரபாகரன் காமெடி காட்சி தமிழ் மக்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாகச் சிலர் என் கவனத்துக்கு கொண்டு வந்தனர். உண்மையில் அது எந்தவித உள்நோக்கத்துடனும் வைக்கப்பட்டது அல்ல. பழைய மலையாள  திரைப்படமான பட்டண பிரவேசம் படத்தில் வரும் நகைச்சுவை காட்சி அது, மேலும் அது கேரளாவில் பயன்படுத்தப்படும் பொதுவான மீம் . 

    பிரபாகரன் என்பது கேரளாவில் ஒரு பொதுவான பெயர். எனவே, படத்தின் தொடக்கத்தில் குறிப்பிட்டது போல் அது யார் மனதையும் துன்புறுத்துவதற்காக அல்ல. இதனை எதிர்க்கும் பலரும் படத்தைப் பார்க்காமலேயே வெறுப்பைப் பரப்ப முயல்கின்றனர். என்னையோ, என்னுடைய இயக்குனர் அனூப்பையோ வெறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியும். இதை எங்கள் அளவில் வைத்துக் கொள்ளலாம். எங்கள் தந்தைகளையோ அல்லது மூத்த நடிகர்களையோ இதில் இழுக்க வேண்டாம்.

    இதனால் காயப்பட்டதாக உணரும் அன்பான அனைத்துத் தமிழ் மக்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய வார்த்தைகள் மூலமாகவோ படங்கள் மூலமாக யாரையும் காயப்படுத்த நினைத்ததில்லை. இது உண்மையில் ஒரு தவறான புரிதல். உங்களில் சிலர் எங்களை மட்டுமல்லாமல் எங்களது குடும்பத்தையும் சேர்த்து வன்மத்துடன் திட்டி, மிரட்டி, அவமானப்படுத்தி வருகிறீர்கள். இது நடந்திருக்க வேண்டாம் என்று விரும்புகிறேன். இவ்வாறு துல்கர் சல்மான் கூறியுள்ளார்.
    பேட்ட படத்தில் நடித்த நடிகர் ஒருவர் கொரோனா ஊரடங்கு காரணமாக எளிய முறையில் திருமணம் செய்துள்ளார்.
    நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அடுத்த மாதம் (மே) 3-ந்தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி திருமணங்கள், இறுதி சடங்குகள் நடத்துவதற்கு சில விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்தாலும் ஊரடங்கு உத்தரவில் தளர்வு அளிக்கப்படவில்லை. மத்திய அரசின் கெடுபிடி காரணமாக மாநில அரசு ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட சலுகைகளை ரத்து செய்தது.

    இந்நிலையில் எர்ணாகுளம் பனம்பள்ளி பகுதியை சேர்ந்த பிரபல மலையாள நடிகர் மணிகண்டனுக்கும், அஞ்சலி என்பவருக்கும் திருமணம் கடந்த 20-ந்தேதி நடந்தது. திருமண நிகழ்ச்சியில் ஊரடங்கு விதிமுறைப்படி 20 பேர் மட்டும் கலந்துகொண்டனர். திருமண விருந்து செலவுக்கு வைத்திருந்த பணத்தை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு சிராஜ் எம்.எல்.ஏ.விடம் நடிகர் மணிகண்டன் வழங்கினார். 

    மனைவியுடன் மணிகண்டன்

    கொரோனா பாதிப்பு ஊரடங்கு முடிவடைந்ததும் நடிகர்-நடிகைகளை அழைத்து விருந்து நிகழ்ச்சி நடத்தப்படும் என்று அவர் கூறினார். நடிகர் மணிகண்டன் ரஜினியின் பேட்ட, விஜய்சேதுபதியின் மாமனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    பொன்மகள் வந்தால் படத்தை தொடர்ந்து மேலும் சில படங்கள் ஓடிடி ரிலீசுக்கு தயாராவதால் தயாரிப்பாளர்-தியேட்டர் அதிபர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
    ஜோதிகா நடித்துள்ள புதிய படம் பொன்மகள் வந்தாள். இதில் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப்போத்தன் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தை சூர்யா தயாரித்துள்ளார். பொன்மகள் வந்தாள் படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்யாமல் நேரடியாக இணையத்தில் வெளியிட இருக்கிறார்கள். இதனை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் எதிர்த்துள்ளது. 

    அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம் , இனி சூர்யா தயாரிக்கும் படங்களையும், சூரரை போற்று உள்ளிட்ட அவர்கள் தொடர்புடைய படங்களையும் தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய மாட்டோம்” என்று கூறியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடும் பிரபல தயாரிப்பாளர் டி.சிவா கூறியதாவது: சிறு மற்றும் நடுத்தர பட்ஜெட்டில் தயாரான படங்களை வெளியிட இணையதளங்கள் (ஓடிடி) வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்து இருப்பது வரவேற்கத்தக்கது. 

    டி.சிவா

    ரூ.3 கோடி ரூ.4 கோடியில் எடுக்கப்பட்ட சிறு படங்களை அந்த தளத்தில் வெளியிடுவது தயாரிப்பாளர்களுக்கு பயனுள்ளதாகவும் அமைந்துள்ளது. இதற்காக சூர்யா படத்துக்கு தடை போடுவது வியாபார உரிமையை பறிக்கும் செயலாக அமையும். பிரச்சினையை தியேட்டர் அதிபர்கள் சுமுகமாக பேசி தீர்க்கலாம். மேலும் 3 தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை இணையதளத்தில் வெளியிட உள்ளனர். 5 படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    டோலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ் வாரிசு நடிகை ஒருவரை திருமணம் செய்ய உள்ளதாக செய்திகள் பரவி வந்த நிலையில், அந்த நடிகை அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
    பாகுபலி படத்தில் நடித்து பிரபலமான தெலுங்கு நடிகர் பிரபாசுக்கும் அனுஷ்காவுக்கும் காதல் என்றும், இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்றும் ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இதனை இருவருமே மறுத்து நட்பாகத்தான் பழகுகிறோம் என்று தெளிவுபடுத்தினர். தற்போது கொரோனா ஊரடங்கில் பிரபாஸ் திருமணம் பற்றி இன்னொரு தகவல் பரவி உள்ளது. 

    அதாவது நடிகை நிஹாரிகாவை பிரபாஸ் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது. நிஹாரிகா, நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகள் ஆவார். தமிழில் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக்குடன் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தில் நடித்துள்ளார். தற்போது மற்றுமொரு தமிழ் படத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

    நிஹரிகா

    இந்த செய்தி குறித்து நிஹாரிகா கூறும்போது, “பிரபாசை திருமணம் செய்து கொள்வதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. முற்றிலும் ஆதாரமற்ற வதந்தி. இதுபோன்ற வதந்தியை பரப்புவது யார்? என்று தெரியவில்லை. இந்த வதந்திகளை மக்கள் நம்புவதும் எனக்கு வியப்பாக உள்ளது” என்றார். நிஹாரிகா ஏற்கனவே நாகசவுரியா, சாய் தரம் தேஜ், விஜய் தேவரகொண்டா ஆகியோருடனும் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
    மக்கள் வெளியே பார்க்கும்போது அமைதியாக இருப்பதுபோல் தெரியலாம், ஆனால் லட்சக்கணக்கானோர் அழுதுகொண்டு இருக்கிறார்கள் என ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.
    கொரோனா ஊரடங்கில் பிரபலங்களிடம் நடிகை குல் பனாக் வீடியோவில் பேட்டிகள் எடுத்து வெளியிட்டு வருகிறார். இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது: நான் அறிவுரைகள் சொல்வது இல்லை. அவற்றை கேட்பேன். தற்போதைய சூழ்நிலையில் எல்லோருக்கும் இரக்க குணம் தேவை. பின்தங்கிய மக்களுக்கு உதவ வேண்டும். வெளியே பார்க்கும்போது அமைதியாக இருப்பதுபோல் தெரியலாம். ஆனால் லட்சக்கணக்கானோர் அழுதுகொண்டு இருக்கிறார்கள். 

    ஏ.ஆர்.ரகுமான்

    அவர்களுக்கு உணவு, மருத்துவ உதவிகள் அளிக்க வேண்டும். அரசு சொல்வதை அனைவரும் கேட்க வேண்டும். மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். இந்த துயரத்தில் இருந்து மீள இறைவனை வேண்டுவோம். இதில் இருந்து நகரங்களை எப்படி வைத்துக்கொள்வது என்று நாமும் கற்றுக்கொள்ள வேண்டும். சென்னையில் ஆகாயத்தை இத்தனை தெளிவாக நான் பார்த்தது இல்லை. ஞாபகத்தில் வைத்துக்கொள்ள புகைப்படம் எடுத்துள்ளேன். இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் கூறினார்.
    நடிகை ஜோதிகாவின் பேச்சை நியாயப்படுத்துவது வெட்கக்கேடானது என காயத்ரி ரகுராம் டுவிட்டரில் கடுமையாக சாடியுள்ளார்.
    நடிகை ஜோதிகா விருது வழங்கும் விழா நிகழ்ச்சியொன்றில் பேசும்போது கோவில்களுக்கு செலவிடும் அதே தொகையை மருத்துவமனைகளுக்கும் பள்ளிகளுக்கும் கொடுங்கள் என்று பேசியது சர்ச்சையானது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பும், இன்னொரு தரப்பினர் ஆதரவும் தெரிவித்தனர். சமூக வலைத்தளத்திலும் விவாதமாக மாறியது.

    இதுகுறித்து நடிகை காயத்ரி ரகுராம் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- நடிகர்களுக்கு கோவில் கட்டுபவர்களுக்கு அவ்வளவுதான் அறிவு. இப்படிப்பட்டவர்கள் எப்போதுமே சனாதன தர்மத்தை புரிந்து கொள்ள மாட்டார்கள். காரணம் அவர்களின் மூளை அவ்வளவுதான். தி.மு.க, தி.க., நாம் தமிழர், விடுதலைசிறுத்தைகள் கட்சிகளின் ஏவலர்கள் ஆதாரமற்ற கருத்துகளுடன் வருகின்றனர். 

    காயத்ரி ரகுராம்

    ஜோதிகா பேச்சை நியாயப்படுத்துவது வெட்கக்கேடானது. தனது பேச்சுக்காக ஜோதிகா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். ஜோதிகா பேச்சில் சமத்துவம் இல்லை. பிரபலமாக இருக்கும் அவர் உண்மையற்ற தகவல்களை பரப்ப கூடாது. ஜோதிகா மீது எனக்கு வெறுப்பு இல்லை. மேடையில் பேசும்போது கவனமாக பேச வேண்டும். இந்து பற்றி பேசும்போது மற்ற மதங்களையும் உள்ளடக்கி பேசி இருக்கலாம்.”

    இவ்வாறு கூறியுள்ளார்.
    வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கிய சீனு ராமசாமி, கொரோனாவால் சிறுபட்ஜெட் பட அதிபர்களுக்கு லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார்.
    கொரோனா ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல் தியேட்டர்களும் மூடப்பட்டதால் சினிமா துறை கடும் இழப்பை சந்தித்துள்ளது. ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும், திரையரங்குகள் திறக்க ஓரிரு மாதங்கள் ஆகும் என்றே சொல்லப்படுகிறது. இதனால் சிறு பட்ஜெட் படங்களை ஓடிடி தளங்களில் நேரடியாக ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். அந்தவகையில் சூர்யாவின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தாலும், ஆதரவு குரல்களும் எழுந்து வருகின்றன.

    இந்நிலையில், இதுகுறித்து இயக்குனர் சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:  "OTT, இது விஞ்ஞான மாற்றம், இதை இப்போது விரைவுபடுத்தியிருக்கிறது கரோனா. சிறுபட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு லாபம், நிறைய புதிய கலைஞர்கள், புதிய கதைகள் எனச் சினிமாவின் தரமும் உயரும், தியேட்டர் கிடைக்காமல் அவதிப்பட்டோரின் படங்களை உலகம் பார்க்கப் போகிறது என நினைக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

    ×