என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க உள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக முன்னணி பாலிவுட் நடிகை நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
    'பாகுபலி' திரைப்படங்கள் மூலம் தேசிய அளவு கவனம் பெற்றவர் பிரபாஸ். இப்படத்தை தொடர்ந்து 'சாஹோ'வில் நடித்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான 'சாஹோ' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. 

    தற்போது பிரபாஸ், 'சாஹோ' படத்தை தயாரித்த யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ராதே ஷ்யாம் படத்தில் நடித்து வருகிறார். இதன் இயக்குநர் கே கே ராதா கிருஷ்ணா. 

    பிரபாஸ், தீபிகா படுகோனே

    இதைத் தொடர்ந்து வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் பிரபாஸ் நடிக்க உள்ளார். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி தேசிய விருது வென்ற 'மகாநடி' என்ற படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இப்படத்தை இயக்க உள்ளார். 

    இந்நிலையில், இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தீபிகா படுகோனே இப்படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலும் அதிகரித்துள்ளது. தெலுங்கில் தீபிகா படுகோனே நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ‘குயின்’ படத்தின் ரீமேக்கான பாரிஸ் பாரிஸ் படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
    கங்கனா ரணாவத் நடிப்பில் இந்தியில் வெளியான ‘குயின்’ படம் தென்னிந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் ரீமேக் ஆகிறது. காஜல் அகர்வாலை நாயகியாகக் கொண்டு தமிழில் ‘பாரிஸ் பாரிஸ்’ எனவும், தமன்னாவை நாயகியாகக் கொண்டு தெலுங்கில் ‘தட் இஸ் மகாலெட்சுமி’ எனவும் மஞ்சிமா மோகனை நாயகியாகக் கொண்டு மலையாளத்தில் ‘ஜம் ஜம்’ எனவும் பருல் யாதவ்வை கதாநாயகியாகக் கொண்டு கன்னடத்தில் ‘பட்டர்பிளை’ எனவும் உருவாகியுள்ளது. 

    நான்கு மொழிகளிலும் மனுகுமரன் தயாரித்துள்ளார். தமிழ் மற்றும் கன்னட பதிப்பை நடிகரும் இயக்குனருமான ரமேஷ் அரவிந்த் இயக்கி உள்ளார். படப்பிடிப்பு முடிந்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் இப்படங்கள் ரிலீசாகாமல் முடங்கி உள்ளது.

    காஜல் அகர்வால்

    இந்நிலையில், இந்த நான்கு மொழிப்படங்களையும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். இதன் ஓடிடி  வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனம் பெருந்தொகை கொடுத்து வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    மாஸ்டர் படத்தை 10 முறை பார்த்துவிட்டதாக அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
    நடிகர் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாகவும்,  விஜய் கல்லூரி பேராசிரியராகவும் நடித்துள்ளார்கள். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமண் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிப்போயுள்ளது.

    மாஸ்டர் பட போஸ்டர்

    இந்நிலையில் மாஸ்டர் படம் பற்றிய முதல் விமர்சனத்தை அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கொடுத்துள்ளார். மாஸ்டர் படம் நன்றாக வந்துள்ளது. போஸ்ட் புரடெக்ஷன் பணிகளின் போது மாஸ்டர் படத்தை பத்து முறையாவது பார்த்திருப்பேன், ஒவ்வொரு முறை பார்த்த போதும், முதல் முறை பார்த்தது போன்ற உணர்வையே படம் கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இப்படம் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களுக்கும் மிகவும் பிடிக்கும் என அவர் கூறியுள்ளார்.
    கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோரின் சிகிச்சைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.
    இந்தி திரையுலகில் பிரபல நடிகரான அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த 11ந்தேதி உறுதி செய்யப்பட்டது.  இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனை தொடர்ந்து நடிகர் அமிதாப்பச்சனின் மனைவி ஜெயா பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. இந்த பரிசோதனையின் முடிவில் அபிஷேக் பச்சனின் மனைவி நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும், மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. எனினும் ஜெயா பச்சனுக்கு பாதிப்பு இல்லை என மகாராஷ்டிர சுகாதாரத்துறை மந்திரி உறுதிபடுத்தினார்

    இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகை ஐஸ்வர்யா ராய், அவருடைய மகள் ஆரத்யா ஆகிய இருவரின் உடல்நிலையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    அமிதாப்பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகிய இருவரும் இன்னும் ஓரிரு நாள்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் ஐஸ்வர்யா ராய்க்கு இருமல் இருந்து வந்த நிலையில் தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
    சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித் குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித் குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. காவல்துறையினர் மோப்பநாய் உதவியுடன் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்துள்ளது.

    காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகாரை அடுத்து போலீசார் ஆய்வு செய்தனர். விழுப்புரத்தை சேர்ந்த நபர் மிரட்டல் விடுத்ததாக தகவல் கிடைத்ததை அடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நடிகை லட்சுமி மேனன் பரதநாட்டியம் ஆடும் போது தவறி விழுந்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
     ‘கும்கி’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். இப்படத்தை தொடர்ந்து பாண்டியநாடு, சுந்தர பாண்டியன், கொம்பன், மிருதன், வேதாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

     கடைசியாக விஜய் சேதுபதியுடன் ‘றெக்க’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அதற்குப் பின் அவர் நடிப்பில் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. 

    லட்சுமி மேனன்

     இந்நிலையில் லட்சுமி மேனன் பரதநாட்டியம் ஆடும் போது கீழே தவறி விழும் வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. தரையில் தண்ணீர் இருப்பதை கவனிக்காததால் தவறி விழுந்ததாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    தன்னுடைய பிறந்த நாளில் புதிய படத்தின் அறிவிப்பை நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி வெளியிட இருக்கிறார்.
    இசையமைப்பாளராகவும் நடிகராகவும் குறுகிய காலத்தில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டு புகழ் பெற்றவர் விஜய் ஆண்டனி.

     2016ஆம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற 'பிச்சைக்காரன்' படம்,  ஆந்திராவில் பல புதிய சாதனைகளை செய்ததால் தெலுங்குப் படத்தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களாலும் பெரிதும் விரும்பப்படுபவராகிவிட்டார் விஜய் ஆண்டனி.

    விஜய் ஆண்டனி

    இவர் பிறந்த  நாளானா ஜூலை 24ஆம் தேதி, புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகிறது. விஜய் ஆன்டனி பிக்சர்ஸ் பி லிட் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் இப்படம் உலகெங்கும் 2021ஆம் ஆண்டு திரையிடத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

    'தமிழரசன்', 'அக்னி சிறகுகள்', 'காக்கி' ஆகிய படங்களில் தற்போது நடித்து வரும் விஜய் ஆன்டனி, ஆனந்த் கிருஷ்ணன், விஜய் மில்டன் மற்றும் பாலாஜி கே.குமார் ஆகியோரின் பெயரிடப்படாத படங்களிலும் நடித்து வருகிறார். 
    பிரபல நடிகையாக இருக்கும் சுருதி ஹாசன், அது எனக்கு முக்கியம் இல்லை என்று கூறியுள்ளார்.
    சுருதிஹாசன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

     “கொரோனா ஊரடங்கு நேரத்தை வீட்டு வேலை, சமையல், இசை என்று வீணாக்காமல் கழிக்கிறேன். கதை, கவிதையும் எழுதுகிறேன். எனக்கு கனவு பாத்திரம் எதுவும் இல்லை. ஆனாலும் ஒரு இசைக்கலைஞர் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது.

    நல்ல கதையம்சம் உள்ள படத்தில் வலுவான கதாபாத்திரமாக இருக்கும்பட்சத்தில் வில்லியாக நடிக்கவும் தயாராக இருக்கிறேன். இப்போது மீண்டும் அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்ததுள்ளது. எனது கையில் மூன்று படங்கள் உள்ளன. அதில் கவனம் செலுத்துகிறேன்.

    சுருதி ஹாசன்

     இசைபணிகளுக்காக அடிக்கடி லண்டனுக்கும் செல்ல வேண்டி இருக்கிறது. சினிமா, இசை இரண்டிலும் உற்சாகத்தோடு ஈடுபடுகிறேன். சம்பளம் பற்றி யோசிப்பது இல்லை. அது முக்கியமான விஷயமும் இல்லை. சினிமா தொழிலாளர்கள் வேலை இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அவர்கள் அனைவரும் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டும் என்பதுதான் இப்போது முக்கியம்.” 

    இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.
    முன்னணி நடிகையான நயன்தாரா ஊரடங்கு நேரத்திலும் வீட்டிலிருந்தபடியே நடித்திருக்கிறார்.
    கொரோனா ஊரடங்கினால் நயன்தாரா வீட்டில் இருக்கிறார். அவர் படங்களில் நடித்து 3 மாதங்களுக்கு மேல் ஆகிறது. ஊரடங்குக்கு முன்பே ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்து முடித்து விட்டார். இந்த படம் திரைக்கு வர தயாராக உள்ளது. ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்திலும் நடிக்கிறார். நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய மேலும் 2 படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

    ஊரடங்கில் அடிக்கடி தனது புகைபடங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வந்தார். கொரோனாவுடன் இணைத்து வெளியான வதந்திக்கும் காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பதிலடி கொடுத்தார்.

    நயன்தாரா

    தொடர்ந்து படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் முடங்கிய நிலையில் தற்போது விளம்பர படமொன்றில் நடித்து இருக்கிறார். வீட்டிலேயே இதன் படப்பிடிப்பை முடித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து மேலும் சில விளம்பர படங்களில் நடிக்க வைப்பதற்காக முன்னணி நிறுவனங்கள் அவரை அணுக தயாராகி வருகின்றன. 
    முன்னணி இயக்குனரான பாரதிராஜாவுக்கு விருது வழங்க வேண்டும் என்று தேசிய விருது பெற்ற நடிகர்கள் இயக்குனர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    டைரக்டர் பாரதிராஜா நேற்று 78-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு தாதா சாகிப் பால்கே விருதை வழங்க வேண்டும் என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகருக்கு கமல்ஹாசன், மணிரத்னம், வைரமுத்து, பார்த்திபன், தனுஷ், சேரன், பாலா, பாண்டிராஜ், வசந்தபாலன், சமுத்திரகனி, எஸ்.தாணு, வெற்றிமாறன், ஜனநாதன், அகத்தியன் உள்பட 25 தேசிய விருது பெற்ற நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

     அதில் கூறியிருப்பதாவது:- “இயக்குனர் பாரதிராஜா, தென்னிந்தியத் திரையுலகில் புதிய அலையைத் தொடங்கி வைத்தவர். 43 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து திரைப்படங்களை இயக்கி வருபவர். இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் 42 திரைப்படங்களை இயக்கியுள்ளார். சிவாஜி கணேசன், ராஜேஷ்கன்னா, கமல் ஹாசன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ஸ்ரீதேவி, உள்ளிட்ட பல புகழ்பெற்ற நடிகர்களை இயக்கியவர்.

    தமிழ் சினிமாவை முதன் முதலாக கிராமங்களுக்கு எடுத்துச் சென்றவர். 50-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தி உள்ளார். ஒட்டுமொத்த தமிழ் சினிமாத் துறையின் நலனுக்காக ஊக்கத்துடன் உழைத்து வருகிறார். பாரதிராஜாவுக்கு இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான “தாதாசாகிப் பால்கே” விருதை இந்த ஆண்டு வழங்குவதற்குப் பரிசீலிக்க வேண்டுகிறோம்.

    பாரதிராஜா

     இது அவருடைய மகத்தான பங்களிப்புக்கு உரிய நேரத்தில் வழங்கப்பட்ட முறையான அங்கீகாரமாகவும் இருக்கும்” இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

     பிறந்த நாளையொட்டி பாரதிராஜாவுக்கு நடிகர் சரத்குமார், இளையராஜா, வைரமுத்து, சீமான், சேரன், வெற்றி மாறன், நாஞ்சில் பி.சி. அன்பழகன் உள்பட பலர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர். 
    பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை போன்ற தோற்றமுடைய நபர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
    ஸ்ரீநகர்:

    மறைந்த பாலிவுட் நடிகர் ரிஷி கபூரின் மகன் ரன்பீர் கபூர். இவரும் பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகராக இருந்து வருகிறார். 

    இதற்கிடையில், ரன்பீர் கபூரின் முகம் மற்றும் உடல் தோற்றமுடையவராக ஜூனைத் ஷா என்பவர் கருத்தப்பட்டார். கிட்டத்தட்ட அச்சு அசலாக ரன்பீர் கபூர் போன்றே இருந்த ஜூனைத் ஷா காஷ்மீரை சேர்ந்தவர். 

    இவர் மும்பையில் மாடலிங் துறையில் வேலை செய்துள்ளார். மாடலிங்கின் போது சில இடங்களில் ரன்பீர் கபூரின் டூப்பாகவும் நடித்துள்ளார்.  

    இந்நிலையில், காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள இலஹி பேஹ் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த ஜூனைத் ஷாவுக்கு கடந்த வியாழக்கிழமை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. 

    இதையடுத்து அவரை குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் ஜூனைத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    ரன்பீர் கபூரை போன்ற தோற்றமுடைய நபரான ஜூனைத் மாரடைப்பால் உயிரிழந்ததற்கு சமூகவலைதளம் மூலமாக பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராதியாவுக்கும் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    மும்பை:

    பிரபல பாலிவுட் நடிகர்ளான அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 12 ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் இருவரும் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    இதையடுத்து பச்சன் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அபிஷேக் பச்சனின் மனைவியும் பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராதியாவுக்கும் கொரோனா இருப்பது கடந்த 13 ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. 

    வைரஸ் அறிகுறிகள் சிறிய அளவில் இருந்ததால் இருவரும் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். இதனால் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் இருவரும் கடந்த சில நாட்களாக வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டிருந்தனர்.

    இந்நிலையில், தனிமைப்படுத்திக்கொண்ட ஐஸ்வர்யாவுக்கும் அவரது மகளுக்கும் நள்ளிரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    கொரோனாவின் தாக்கம் அதிகமானதால் இந்த மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    மகளுடன் ஐஸ்வர்யா ராய்

    இதையடுத்து ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் என இருவரும் மும்பையில் உள்ள நனாவதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களது உடல்நிலை சீராக உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    அமித்தாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஏற்கனவே கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராயும் அவரது மகள் ஆராதியாவுக்கு கொரோனா தீவிரமடைந்ததையடுத்து இவர்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×