என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியாகி இருக்கும் புதிய படத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.
    தமிழில் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக வந்தவர் அக்‌ஷய்குமார். இவர் நடித்துள்ள ‘சூர்யவன்ஷி' இந்தி படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தை எதிர்த்து பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    ஹோஷியார்பூரில் சூர்யவன்ஷி படம் ஓடிக்கொண்டிருந்த தியேட்டர் முன்னால் ஏராளமான விவசாயிகள் திரண்டு அக்‌ஷய்குமார் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்று கண்டன கோஷம் எழுப்பினர். சூர்யவன்ஷி படத்தின் போஸ்டர்களை கிழித்தெறிந்தனர். தியேட்டர் அலுவலகத்திற்கு சென்று படத்தை திரையிடக்கூடாது என்றும் வற்புறுத்தினார்கள். 

    அக்‌ஷய் குமார்

    சூர்யவன்ஷி படம் திரையிடப்படுவதை எதிர்த்து பஞ்சாப்பில் உள்ள உதம் சிங் பூங்காவில் இருந்து திரையரங்கம் வரை கண்டன ஊர்வலத்தையும் விவசாயிகள் நடத்தினார்கள். வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை நடிகர் அக்‌ஷய் குமார் திரைப்படங்களை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் ஹோஷியார்பூரில் சூர்யவன்ஷி திரைப்படம் திரையிட்ட 5 தியேட்டர்கள் முன்னால் திரண்டும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
    இந்தியன், முதல்வன் படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை மனிஷா கொய்ராலா, இந்த பயணம் கடினமானது என்று சமூக வலைத் தளத்தில் பதிவு செய்து இருக்கிறார்.
    தமிழில் இந்தியன், முதல்வன் போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் மனிஷா கொய்ராலா. இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். கடந்த 2012ஆம் ஆண்டு கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனிஷா கொய்ராலா, சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த நோயிலிருந்து குணமடைந்தார்.  

    இந்நிலையில் தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, தான் புற்றுநோய்க்கான சிகிச்சையில் இருந்தபோது எடுக்கப்பட்ட சில படங்களை நடிகை மனிஷா கொய்ராலா பகிர்ந்துகொண்டுள்ளார்.

    மனிஷா கொய்ராலா

    மேலும் அவர் தனது சமூக வலைத் தள பக்கத்தில், 'இந்த தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தில், புற்றுநோயின் கடினமான பயணத்தை கடந்து செல்லும் அனைவருக்கும் நான் வாழ்த்துகூற விரும்புகிறேன். இந்த பயணம் கடினமானது என்று எனக்குத் தெரியும், ஆனால் நீங்கள் அதை விட கடினமானவர். அதற்கு துணிந்தவர்களுக்கு எனது மரியாதையை செலுத்தவும், அதை வென்றவர்களுடன் கொண்டாடவும் விரும்புகிறேன். இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை நாம் பரப்ப வேண்டும் மற்றும் நம்பிக்கை நிறைந்த அனைத்து கதைகளையும் மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டும். நாம் நமக்கும் உலகிற்கும் கருணை காட்டுவோம். அனைவரின் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்வுக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.
    பொய் வழக்குப் போடப்பட்டு போலீஸ் சித்ரவதையால் ராசாக்கண்ணு உயிரிழந்த நிலையில், வறுமையில் உள்ள அவரது மனைவியான பார்வதிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் சொந்த செலவில் வீடு கட்டித் தருவதாக அறிவித்துள்ளார்.
    த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

    இப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இப்படத்தில் காட்டப்பட்ட ராசாக்கண்ணு மீது பொய் வழக்குப் போடப்பட்டு போலீஸ் சித்ரவதையில் உயிரிழந்தார். இந்த வழக்கில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டது. ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தற்போது தான் மிகவும் வறுமையில் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

    ராகவா லாரன்ஸ்

    இந்நிலையில் ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு தனது சொந்த செலவில் வீடு கட்டித் தருவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

    ''செய்யாத குற்றத்துக்காக சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு ராசாக்கண்ணு கொல்லப்பட்டார். அவரது மனைவி பார்வதி அம்மாவின் இன்றைய வாழ்க்கை நிலையை தனியார் யூடியூப் சேனலில் பார்த்தபோது என்னை பெரிதும் பாதித்தது. அவர்களின் மூலம் மேலும் விவரங்களைக் கேட்டறிந்ததும் கூடுதலாகத் துயருற்றேன். பார்வதி அம்மாவுக்கு எனது செலவில் வீடு கட்டிக் கொடுப்பதாக உறுதியளித்திருக்கிறேன். ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாவின் வறுமை நிலையினை என் கவனத்துக்குக் கொண்டுவந்த யூடியூப் குழுவினருக்கு என் நன்றிகள்.

    28 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கொடூரமான துயர நிகழ்வை, இன்றைக்குத் தமிழகம் முழுக்க பேசுபொருளாக்கிய 'ஜெய் பீம்' படக்குழுவினருக்கும், 'ஜெய்பீம்' படத்தை உயரிய கலைப்படைப்பாக மாற்றிய சூர்யாவுக்கும், ஜோதிகாவுக்கும், இயக்குநர் த.செ.ஞானவேலுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளும் நன்றியும்''.

    இவ்வாறு ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
    தனிகை, குவின்ஸி, வேல்முருகன் நடிப்பில் நியூட்டன் ஜி, தயாரித்து இயக்கும் "கருப்பு கண்ணாடி" படத்தின் முன்னோட்டம்.
    அணி கிரியேஷன்ஸ் சார்பில் அறிமுக இயக்குனர் நியூட்டன் ஜி, தயாரித்து இயக்கும் படம் "கருப்பு கண்ணாடி". இப்படத்தில் தொகுப்பாளர் தனிகை கதாநாயகனாகவும், புதுமுக நடிகை குவின்ஸி கதாநாயகியாகவும் நடித்துள்ளார். மேலும் சரண் ராஜ், நடிகர் கஜரஜ், பாடகர் வேல்முருகன், நடிகை சுபாஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    தனிகை
    தனிகை 

    கருப்பு கண்ணாடி திரைப்படம் சைக்கோ த்ரில்லர் வகையை சார்ந்தது. சம்சாத் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு, சித்தார்த்தா பிரதீப் இசை அமைக்கிறார். எழுமின், உருமி ஆகிய திரைப்படங்களின் படத்தொகுப்பாளராக பணியாற்றிய கார்த்திக் ராம் இப்படத்திற்கு படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். மெட்ரோ மகேஷ் இப்படத்திற்கான சண்டை காட்சிகள் வடிவமைப்பாளர் ஆக பணியாற்றி உள்ளார்.
    ஜெய் பீம் படத்தில் நடித்ததற்காக பள்ளியிலிருந்து சிறுமி ஜோசிகா மாயா விலக்கப்பட்டதாக வந்த செய்திக்கு அவரது தந்தை விளக்கம் அளித்துள்ளார்.
    சூர்யா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ஜெய் பீம். ஞானவேல் இயக்கிய இப்படத்தில் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், சிறுமி ஜோசிகா மாயா உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள். இருளர் பழங்குடியினர் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டது. 

    தனது வேலை நடிப்பது மட்டும்தான் என்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் இருளர் பழங்குடியினர் வாழ்வு மேம்பாட்டிற்காக ஒரு கோடி கொடுத்து நிஜத்திலும் தான் ஹீரோ என்று காட்டியிருக்கிறார். 
    இந்நிலையில் படத்தில் இருளர் சிறுமியாக நடித்த ஜோசிகா மாயாவிற்கு சினிமாவில் நடித்தத்தால் ஒரு சிக்கல் வந்திருக்கிறது என்று செய்தி பரவியது. அவர் படிக்கும் பள்ளியிலிருந்து அவரை டி.சி.கொடுத்து விலக்கி விட்டார்கள் என்ற தகவல் பரவி வருகிறது. 

    ஜோஷிகா
    தந்தையுடன் ஜோசிகா

    இது குறித்து ஜோசிகாவின் தந்தை சக்தியிடம் பேசினோம், இந்த செய்தியில் கொஞ்சமும் உண்மை இல்லை. அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. ஜெய் பீம் படத்தை தொடர்ந்து வெப் சீஸில் அதிதி பாலன் மகளாக நடித்து முடித்திருக்கிறார். ஒரு படத்திற்குக் கேட்டிருக்கிறார்கள். படிப்பும் நடிப்பும் தொடர்ந்து கொண்டிருக்கும் என்றார் சக்தி.
    தனக்கு திருமணம் நடக்காமல் போனதற்கு பிரபல இந்தி நடிகர் தான் காரணம் என்று நடிகை தபு தெரிவித்து உள்ளார்.
    தமிழில் காதல் தேசம், தாயின் மணிக்கொடி, இருவர், சினேகிதியே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள தபு இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தபுவுக்கு 51 வயது ஆகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. தபுவும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. பின்னர் அந்த காதல் முறிந்து விட்டதாக கூறப்பட்டது.

    இந்நிலையில் தனக்கு திருமணம் நடக்காமல் போனதற்கு இந்தி நடிகர் அஜய் தேவ்கன் காரணம் என்று தபு தெரிவித்து உள்ளார். அவர் கூறும்போது, ‘‘எனக்கு ஆரம்பத்தில் இருந்தே அஜய் தேவ்கனை தெரியும். எனது சகோதரனுக்கு அவர் நெருங்கிய நண்பர். நாங்கள் மும்பை ஜுஹூ பகுதியில் வசித்தோம். அப்போது எனது ஒவ்வொரு செயலையும் அஜய் தேவ்கன் கவனித்துக்கொண்டே இருப்பார். 

    தபு, அஜய் தேவ்கன்
    தபு, அஜய் தேவ்கன்

    நான் எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து வருவார். வேறு பையனுடன் நான் பேசுவது அவருக்கு பிடிக்காது. அந்த பையனுடன் சண்டை போடுவார். அதனால்தான் நான் திருமணம் செய்து கொள்ளாமல் அப்படியே இருந்துவிட்டேன்” என்றார்.

    விஜய் பத், கோல் மேன் அகெய்ன், திரிஷ்யம், போன்ற படங்களில் தபுவும் அஜய் தேவ்கனும் ஜோடியாக நடித்துள்ளனர். அஜய் தேவ்கனை நடிகை கஜோல் காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
    பத்மவிருதுகள் வழங்கும் விழாவில் பிரதமர் நரேந்திரமோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ஜெய்சங்கர் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
    பெருமைக்குரிய செயல்களை செய்தவர்கள், சிறந்த சேவை செய்தவர்கள், சாதனை நிகழ்த்தியவர்கள் போன்றவர்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் பத்மவிபூ‌ஷன், பத்மபூ‌ஷன், பத்மஸ்ரீ போன்ற விருதுகளை வழங்கி வருகிறது. இதன்படி 2020-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டன. மொத்தம் 119 பேர் விருதுக்குரியவர்களாக தேர்வு செய்யப்பட்டு இருந்தனர்.

    இதில் 7 பேருக்கு பத்ம விபூ‌ஷன் விருதும், 10 பேருக்கு பத்மபூ‌ஷன் விருதும், 102 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் 29 பேர் பெண்கள், ஒருவர் திருநங்கை ஆவர். இறந்துவிட்ட 16 பேருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    பத்மவிருதுகள் வழங்கும் விழா இன்று ஜனாதிபதி மாளிகையில் நடந்தது. பிரதமர் நரேந்திரமோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ஜெய்சங்கர் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் முன்னிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார்.

    இந்த நிகழ்வில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இதுதவிர மேலும் 101 பேருக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பத்மஸ்ரீ விருதுகளை வழங்கினார்.
    பிரபல மலையாள நடிகர் மம்முட்டி ஹீரோவாக நடிக்கும் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ திரைப்படம் தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ளது.
    மலையாளத்தில் வெளியான அங்கமாலி டைரீஸ், ஈ மா யூ, ஜல்லிக்கட்டு என சிறந்த படங்களை தந்து ரசிகர்கள் மட்டுமல்லாது விமர்சகர்களையும் கவர்ந்தவர் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. இந்திய அளவில் கொண்டாடப்படும் இயக்குனரான மணிரத்னத்தின் பேவரைட் இயக்குனரும் லிஜோ ஜோஸ் தான். அவர் இயக்கிய அனைத்து படங்களும் தனக்கு மிகவும் பிடிக்கும் என மணிரத்னம் ஒரு நிகழ்வில் கூறியிருந்தார்.

    லிஜோ ஜோஸ் பெல்லிசேரி, மணிரத்னம்
    லிஜோ ஜோஸ் பெல்லிசேரி, மணிரத்னம்

    இந்நிலையில் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் தயாராகும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் மம்முட்டி ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படத்திற்கு ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ என பெயரிட்டுள்ளனர். பழனியை மையப்படுத்தி இந்தப் படம் தயாராக உள்ளது. இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.
    விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தை கோலிசோடா பட இயக்குனர் விஜய் மில்டன் இயக்குகிறார்.
    திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் கைவசம் அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், பிச்சைக்காரன் 2, கொலை போன்ற படங்கள் உள்ளன. 

    இதுதவிர, கோலிசோடா பட இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகும் ‘மழை பிடிக்காத மனிதன்’ என்கிற படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.

    சரத்குமார்
    சரத்குமார்

    இந்நிலையில், இப்படத்தில் நடிகர் சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதில் அவர் விஜய் ஆண்டனிக்கு நண்பராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் விஜய் ஆண்டனியும், சரத்குமாரும் முதன்முறையாக இணைந்துள்ளனர். 

    ஏற்கனவே இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பை டையு, டாமனில் வருகிற டிசம்பர் மாதம் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.
    இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் தற்போது ‘வெந்து தணிந்தது காடு’ படம் தயாராகி வருகிறது, இப்படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார்.
    இயக்குனர் கவுதம் மேனன் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், இவர் ‘அன்பு செல்வன்’ என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளதாகவும், இந்த படத்தை வினோத் குமார் இயக்கி உள்ளார் என்றும் சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. மேலும் கவுதம் மேனன் துப்பாக்கியுடன் இருக்கும் போஸ்டரும் வெளியிட்டனர். 

    இதைப் பார்த்து ஷாக் ஆன கவுதம் மேனன் ‘அன்பு செல்வன்’ படத்தில் தான் நடிக்கவில்லை என்று மறுத்தார். இதையடுத்து ‘அன்பு செல்வன்’ படக்குழுவினர் கவுதம் மேனன் நடித்த காட்சிகளை வீடியோ தொகுப்பாக வெளியிட்டு படத்தில் அவர் நடித்து இருப்பது உண்மை என்றனர். படத்தின் பெயர் அன்பு செல்வன் என்று மாற்றப்பட்டதே குழப்பத்துக்கு காரணம் என்றும் தெளிவுப்படுத்தினர். 

    கவுதம் மேனன்

    இதையடுத்து அன்பு செல்வன் படக்குழுவினர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் கவுதம் மேனன் புகார் மனு அளித்துள்ளார். அதில், “ஜெய் கணேஷ் இயக்கத்தில் ‘வினா’ என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு, 2018-ம் ஆண்டு சில நாட்கள் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டேன். அதற்குப் பிறகு படத்தின் பணிகள் நடக்கவில்லை. 

    தற்போது வினோத் குமார் இயக்கத்தில் படத்தை மீண்டும் தொடங்கலாம் என்றனர். நான் ஜெய்கணேஷ் இயக்கத்தில் மட்டுமே நடிப்பேன் என்றேன். எனவே ‘அன்புசெல்வன்' படத்தின் விளம்பரங்களை நிறுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.
    நடிகை அனுஷ்கா நடிக்க உள்ள புதிய படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் தயாராக உள்ளது.
    தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் அனுஷ்கா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த நிசப்தம் படம் தோல்வியடைந்தது. இதனால் இரண்டு வருடங்களுக்கு மேலாக அவர் படங்களில் நடிக்கவில்லை. இதனிடையே நடிகை அனுஷ்கா, திருமணத்துக்கு தயாராகி வருவதாகவும் கிசுகிசுக்கள் பரவி வந்தன.

    இந்த நிலையில், அனுஷ்கா நடிக்க உள்ள 48-வது படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் தயாராக உள்ள இந்த படத்தை பி.மகேஷ்பாபு எழுதி இயக்குகிறார். யூவி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. 

    அனுஷ்கா, இயக்குனர் பி.மகேஷ்பாபு
    அனுஷ்கா, இயக்குனர் பி.மகேஷ்பாபு

    இதில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சத்தில் தயாராக உள்ளதாகவும் இதில் அனுஷ்கா மாடர்ன் பெண்ணாக வித்தியாசமான தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
    கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘மாறன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    நடிகர் தனுஷின் 43-வது படம் ‘மாறன்’. கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். 

    மேலும் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார், மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு விவேகானந் சந்தோஷம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    ஜி.வி.பிரகாஷின் டுவிட்டர் பதிவு
    ஜி.வி.பிரகாஷின் டுவிட்டர் பதிவு

    இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி மாறன் படத்தின் பாடல் பணிகள் இறுதிகட்டத்தில் உள்ளதாகவும், இப்படத்தில் ஒரு தீம் பாடல் உள்பட 4 பாடல்கள் உள்ளதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். விரைவில் மாறன் படத்தின் பாடல்கள் வெளியிடப்படும் என ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
    ×