என் மலர்
கார்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்களுக்கு இந்திய சந்தையில் அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்குகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தற்போது விற்பனை செய்து வரும் பெரும்பாலான மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவைகளை அறிவித்து இருக்கிறது. அதன்படி டியாகோ, டிகோர், நெக்சான், அல்ட்ரோஸ், ஹேரியர் மற்றும் சபாரி போன்ற மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
ஜனவரி மாத சலுகைகளின் கீழ் அதிகபட்சம் ரூ. 85 ஆயிரம் மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படுகின்றன. இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகள் ஜனவரி 31, 2022 வரை மட்டுமே கிடைக்கும்.

டாடா டியாகோ மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 30 ஆயிரம், 2022 மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 25 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. டிகோர் மாடலுக்கு ரூ. 35 ஆயிரம் வரையிலான பலன்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. டிகோர் 2022 மாடலுக்கு ரூ. 20 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.
டாடா அல்ட்ரோஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல் தற்போது ரூ. 17,500 வரையிலான சிறப்பு சலுகைகளுடன் கிடைக்கிறது. டாடா நெக்சான் மாடலுக்கு ரூ. 15 ஆயிரமும், ஹேரியர் மாடலுக்கு அதிகபட்சமாக ரூ. 85 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.
டாடா சபாரி மாடல் ரூ. 60 ஆயிரம் வரையிலான பலன்களுடன் விற்பனை செய்யப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் அறிமுகம் செய்த பன்ச் மாடலுக்கு எவ்வித சலுகையும் அறிவிக்கப்படவில்லை.
டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்தி இருக்கிறது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது இன்னோவா மற்றும் பார்ச்சூனர் மாடல்களின் விலையை இம்மாதம் உயர்த்துவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன்படி இன்னோவா க்ரிஸ்டா மற்றும் பார்ச்சூனர் மாடல்களின் புதிய விலை அறிவிக்கப்பட்டது.
இன்னோவா க்ரிஸ்டா மாடலின் விலை ரூ. 12 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 33 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இத்துடன் இரண்டு புதிய பேஸ் வேரியண்ட் மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பார்ச்சூனர் மாடலின் விலை ரூ. 1.10 லட்சம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

தற்போது பார்ச்சூனர் மாடலின் விலை முன்பு இருந்ததை விட ரூ. 66 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சமாக ரூ. 1.10 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் டொயோட்டா தற்போது விற்பனை செய்யும் அர்பன் குரூயிசர், கிளான்ஸா மற்றும் வெல்ஃபயர் போன்ற மாடல்களின் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ மற்றும் டிகோர் சி.என்.ஜி. மாடல்களின் வெளியீட்டு விவரங்களை அறிவித்து இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் டியாகோ மற்றும் டிகோர் சி.என்.ஜி. மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போது இரு மாடல்களும் இந்தியாவில் ஜனவரி 19 ஆம் தேதி அறிமுகமாகும் என டாடா மோட்டார்ஸ் அறிவித்து இருக்கிறது.
அறிமுக தேதி மட்டுமின்றி டியாகோ மற்றும் டிகோர் சி.என்.ஜி. மாடல்களுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ஒவ்வொரு பகுதி மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப ரூ. 5 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 10 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. தோற்றத்தில் புதிய சி.என்.ஜி. மாடல்களும் முந்தைய பெட்ரோல் வேரியண்ட் போன்றே காட்சியளிக்கும்.

புதிய டாடா டியாகோ சி.என்.ஜி. மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் சி.என்.ஜி. கிட் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜின் செயல்திறன் பெட்ரோல் யூனிட்டை விட குறைவாகவே இருக்கும் என தெரிகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம்.
வோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்கள் விலையை மாற்றியமைத்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
வோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் தனது போலோ, வெண்டோ மற்றும் டைகுன் மாடல்களின் விலையை உயர்த்தி இருக்கிறது. மூன்று கார்களில் டைகுன் மாடல் விலை மட்டும் ரூ. 29 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் வோக்ஸ்வேகன் போலோ மாடல்- டிரெண்ட்லைன், கம்ஃபர்ட்லைன், ஹைலைன் பிளஸ் மற்றும் ஜி.டி. என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றில் ஜி.டி. லைன் விலை ரூ. 26 ஆயிரமும், மற்ற வேரியண்ட்கள் ரூ. 13 ஆயிரத்தில் துவங்கி ரூ. 19,900 வரையிலும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

வெண்டோ மாடலின் கம்ஃபர்ட்லைன் மற்றும் ஹைலைன் 1.0 டி.எஸ்.ஐ. மேனுவல் வேரியண்ட்களின் விலைகள் மாற்றப்படவில்லை. மற்ற வேரியண்ட்களின் விலை ரூ. 29 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டைகுன் மிட்-சைஸ் எஸ்.யு.வி. கம்ஃபர்ட்லைன் மற்றும் ஜி.டி. பிளஸ் வேரியண்ட்களின் விலை ரூ. 45,700 அதிகரிக்கப்பட்டுள்ளது. மற்ற வேரியண்ட்களின் விலை ரூ. 15,700 இல் துவங்கி ரூ. 44,700 வரை உயர்த்தப்பட்டு உள்ளது.
மாருதி சுசுகி நிறுவனம் 2021 டிசம்பர் மாத வாகன விற்பனை விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் கடந்த டிசம்பர் 2021 மாதத்தில் 1,53,149 யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. உள்நாட்டில் 1,26,031 யூனிட்களும் வெளிநாடுகளுக்கு 22,280 யூனிட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
டிசம்பர் 2021, மாதத்தில் மாருதி சுசுகியின் உள்நாட்டு விற்பனை 13 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது. பயணிகள் வாகனங்களான மினி மற்றும் காம்பேக்ட் பிரிவில்- ஆல்டோ, எஸ் பிரெஸ்ஸோ, வேகன் ஆர், செலரியோ, ஸ்விப்ட், டிசையர், இக்னிஸ் மற்றும் பலேனோ போன்ற மாடல்கள் 69,345 யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன.

சியாஸ் மிட்-சைஸ் செடான் மாடல் 1,204 யூனிட்களும், யுடிலிட்டி மற்றும் வேன் பிரிவில்- ஜிப்சி, எர்டிகா, எக்ஸ்.எல்.6, விட்டாரா பிரெஸ்ஸா, எஸ் கிராஸ் மற்றும் ஈகோ போன்ற மாடல்கள் 36,147 யூனிட்களும் விற்பனையாகி இருக்கின்றன.
பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் ஐ4 மற்றும் ஐ.எக்ஸ். எலெக்ட்ரிக் கார் மாடல்கள் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆலிவர் சிப்சி ஐ4 மற்றும் ஐ.எக்ஸ். கார்கள் விற்றுத்தீர்ந்ததாக அறிவித்துள்ளார். 'ஐ.எக்ஸ். போன்றே ஐ4 மாடலும் மாத கணக்கில் விற்றுத்தீர்ந்தது. இதனால் பணி திறனை ஐந்து மடங்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்,' என அவர் மேலும் தெரிவித்தார்.
ஐ4 மற்றும் ஐ.எக்ஸ். எலெக்ட்ரிக் கார்கள் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் ஐந்தாம் தலைமுறை எலெக்ட்ரிக் கார் தொழில்நுட்பத்தை பரைசாற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இதுவரை பி.எம்.டபிள்யூ. நிறுவனம் சுமார் பத்து லட்சத்திற்கும் அதிக பிளக்-இன் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது. 2025 ஆண்டிற்குள் மற்றொரு பத்து லட்சம் யூனிட்களை விற்பனை செய்ய பி.எம்.டபிள்யூ. இலக்கு நிர்ணயித்துள்ளது.

பி.எம்.டபிள்யூ. ஐ.எக்ஸ். டிரைவ் 50 மாடலை முழு சார்ஜ் செய்தால் 521 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. ஐ4 இ-டிரைவ் 40 மாடலை முழு சார்ஜ் செய்தால் 484 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது.
2022 ஆடி கியூ7 மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஜெர்மன் நாட்டு ஆடம்பர் கார் உற்பத்தியாளரான ஆடி, கியூ7 பேஸ்லிப்ட் மாடலை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடலில் பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் புதிய 6 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது அதிக அப்டேட்களுடன் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் கியூ7 பேஸ்லிப்ட் மாடல் ஆகும்.
2022 ஆடி கியூ7 மாடலில் 2995சிசி, வி6 டுவின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 335 பி.ஹெச்.பி. திறன், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என தெரிகிறது. இது முந்தைய மாடலை விட 90 பி.ஹெச்.பி. அதிகம் ஆகும்.

இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 5.6 நொடிகளில் எட்டிவிடும். இதன் 3 லிட்டர் வி6 பெட்ரோல் என்ஜினுடன் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.
டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஹிலக்ஸ் பிக்கப் டிரக் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
டொயோட்டா நிறுவனத்தின் ஹிலக்ஸ் மாடல் விளம்பர படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் படப்படிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஹிலக்ஸ் மாடல் விற்பனையகம் வரத்துவங்கி இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
விற்பனையகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் ஹிலக்ஸ் மாடல் வெள்ளை நிறம் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் ஃபாக் லேம்ப்கள் இல்லாமல், வீல் ஆர்ச்களை சுற்றி பிளாஸ்டிக் கிளாடிங் காணப்படுகிறது. அந்த வகையில் விற்பனையகம் வந்துள்ள ஹிலக்ஸ் மாடல் பேஸ் வேரியண்ட் ஆக இருக்கும் என தெரிகிறது.

இதுதவிர ஹிலக்ஸ் மாடலில் கருப்பு நிற அலாய் வீல்கள், சைடு ஸ்டெப், ஓ.ஆர்.வி.எம்.கள், இண்டிகேட்டர்கள், குரோம் அம்சங்கள் உள்ளன. தற்போது வெளியாகி இருக்கும் படங்களில் காரின் உள்புறம் காணப்படவில்லை. புதிய ஹிலக்ஸ் மாடலில் 2.4 லிட்டர் டீசல் அல்லது 2.8 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம்.
இதே என்ஜின்கள் இன்னோவா க்ரிஸ்டா மற்றும் பார்ச்சூனர் மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு என்ஜின்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்தியாவில் அறிமுகமானதும் டொயோட்டா ஹிலக்ஸ் மாடல் இசுசு வி கிராஸ் மாடலுக்கு போட்டியாக அமையும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இரு கார் மாடல்கள் புதிய நிறத்தில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹேரியர் மற்றும் சபாரி மாடல்களை வெல்வெட் கிரீன் நிறத்தில் உருவாக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கார்களில் பிளாக் ரைனோ பேட்ஜ்கள் பொருத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
புதிய வெல்வெட் கிரீன் நிற வேரியண்ட் லிமிடெட் எடிஷனாக விற்பனை செய்யப்படும் என தெரிகிறது. இந்த காரின் உள்புறமும் டூயல் டோன் ஷேட் வழங்கப்படும் என தெரிகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் மற்றும் சபாரி மாடல்களில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த என்ஜின் 168 பி.ஹெச்.பி. திறன், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
மஹிந்திரா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது வாகனங்கள் உற்பத்தியை இருமடங்கு அதிகப்படுத்த திட்டமிட்டு இருக்கிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மாசில்லா போக்குவரத்து பற்றிய விழிப்புணர்வு காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. தொடர் வரவேற்பு காரணமாக மஹிந்திரா எலெக்ட்ரிக் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன முதலீட்டில் பத்து சதவீத தொகையை தனது லாஸ்ட்-மைல் மொபிலிட்டி பிரிவில் ஒதுக்கீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன் மூலம் மஹிந்திரா எலெக்ட்ரிக் உற்பத்தி திறனை இருமடங்கு அதிகரித்து மூன்று மற்றும் நான்கு சக்கரங்கள் கொண்ட குவாட்ரிசைக்கிள் பிரிவில் மொத்தம் ஆறு புதிய வாகனங்களை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.

அடுத்த நிதியாண்டில் 14-இல் இருந்து 15 ஆயிரம் எலெக்ட்ரிக் வாகனங்களில் இருந்து 2023 நிதியாண்டில் இந்த எண்ணிக்கையை இருமடங்கு அதிகரிக்க மஹிந்திரா எலெக்ட்ரிக் திட்டமிட்டுள்ளது. எனினும், தற்போதுள்ள செமிகண்டக்டர் குறைபாடு எதிர்காலத்தில் மேலும் மோசமடையாமல் இருக்க வேண்டும்.
இந்த நிதியாண்டு மஹிந்திரா எலெக்ட்ரிக் நிறுவனம் லாஸ்ட் மைல் மொபிலிட்டி பிரிவில் 7 ஆயிரம் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
வோக்ஸ்வேகன் நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்த இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
வோக்ஸ்வேகன் நிறுவனம் தனது கார் மாடல்கள் விலை ஜனவரி 1, 2022 முதல் உயர்த்தப்படுவதாக அறிவித்து உள்ளது. விலை உயர்வு காரணமாக கார்களின் விலை தற்போதைய விலையில் இருந்து இரண்டு முதல் ஐந்து சதவீதம் வரை அதிகமாகிறது. விலை உயர்வு மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும்.
விலை உயர்வில் வோக்ஸ்வேகன் டைகுன் மாடல் மட்டும் இடம்பெறாது. சமீபத்தில் தான் டைகுன் மிட்-சைஸ் எஸ்.யு.வி. மாடலின் விலை உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக இந்த மாடலின் விலை அடுத்த மாதம் உயர்த்தப்படாது என தெரிகிறது. இந்த ஆண்டு வோக்ஸ்வேகன் நிறுவனம் டி ராக், டைகுன் மற்றும் டிகுவான் பேஸ்லிப்ட் போன்ற மாடல்களை அறிமுகம் செய்தது.

விரைவில் வோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய செடான் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடல் விர்டுஸ் என அழைக்கப்பட இருக்கிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ பேஸ்லிப்ட் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனம் வென்யூ பேஸ்லிப்ட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. வென்யூ பேஸ்லிப்ட் மாடல் வெளிநாடுகளில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட படங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகின.
தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் வென்யூ என்-லைன் மாடலை ஹூண்டாய் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டு அறிமுகமாகிறது. ஸ்பை படங்களில் புதிய காரின் பின்புறம் முற்றிலுமாக மாற்றப்பட்டு இருக்கிறது. இதன் டெயில்கேட், புதிய பம்ப்பர் மற்றும் புது டெயில்-லைட் வழங்கப்படுகிறது.

இத்துடன் குரோம்-பிளேட் செய்யப்பட்ட டுவின் எக்சாஸ்ட் பைப்கள், அலாய் வீல்கள் வழங்கப்படுகிறது. காரின் முன்புறத்தில் மேம்பட்ட கிரில், புதிய பம்ப்பர், ஹெட்லைட்கள் வழங்கப்படும் என தெரிகிறது. ஹூண்டாய் வென்யூ மாடல் மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்சான், மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300, கியா சொனெட், நிசான் மேக்னைட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.






