என் மலர்
ஆட்டோ டிப்ஸ்
எலெக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடிப்பது பற்றி ஓலா எலெக்ட்ரிக் தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.
எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ஓலா எலெக்ட்ரிக் மட்டும் தான். மற்ற நிறுவனங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அடிக்கடி வெடித்து சிதறும் நிலையில், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது ஸ்கூட்டரை அறிமுகம் செய்வதற்கு முன்பே அதிக பிரிபலம் அடைந்து விட்டது.
சமீப காலங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களில் தீ பிடிக்கும் நிகழ்வுகள் அதிகளவில் அரங்கேறி வருகின்றன. எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுக்கும் வகையில், இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த நிலையில், எலெக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடிப்பது பற்றி ஓலா எலெக்ட்ரிக் தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.

அதன்படி, “புதிய ஆட்டோமொபைல் பிரிவில் எலெக்ட்ரிக் வாகன தீ விபத்துக்கள் மிக எளிதில் பலரின் கவனத்தை ஈர்த்து விடுகிறது,” என்று பாவிஷ் அகர்வால் தெரிவித்து இருக்கிறார். எலெக்ட்ரிக் வாகன தீ விபத்துக்களை அடுத்து தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் பேசி இருந்தார் என தகவல் வெளியாகி உள்ளது.
“எதிர்காலத்திலும் இதே போன்று நடக்கும், ஒரு வேளை நடக்கலாம். ஆனால் வாகனத்தின் அனைத்து பிரச்சினையையும் கவனித்து சரி செய்வது தான் எங்கள் குறிக்கோள். ஏதேனும் பிரச்சினை இருந்தால், அதனை உடனே சரி செய்து விடுவோம். சிறு பிரச்சினைகள் காரணமாக எதிர்காலத்திலும் இ ஸ்கூட்டர்களில் தீ விபத்து ஏற்படும். சாலைகளில் வலம் வரும் 50 ஆயிரம் ஓலா இ ஸ்கூட்டர்களில் ஒன்று தான் வெடித்து இருக்கிறது,” என ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்தார்.
எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தை வாகன விற்பனையில் புது மைல்கல் எட்டியதாக புது தகவலை வெளியிட்டு உள்ளது.
எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஒரு லட்சம் கார்களை விற்பனை செய்து இருப்பதாக அறிவித்து இருக்கிறது. எம்.ஜி. ஹெக்டார் எஸ்.யு.வி. மாடல் மூலம் எம்.ஜி. மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் களமிறங்கியது. இந்தியாவில் களமிறங்கி மூன்று ஆண்டுகளில் இந்த மைல்கல்லை எம்.ஜி. மோட்டார்ஸ் எட்டி இருக்கிறது.
தற்போது எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனம் - எம்.ஜி. ஹெக்டார், எம்.ஜி. ஹெக்டார் பிளஸ், எம்.ஜி. ஆஸ்டர், எம்.ஜி. ZS EV மற்றும் எம்.ஜி. குளோஸ்டர் போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. எனினும், இந்தியாவில் எம்.ஜி. மோட்டார் இந்தியா ஒரே ஒரு உற்பத்தி ஆலையை வைத்திருக்கிறது. இந்த உற்பத்தி ஆலை குஜராத் மாநிலத்தின் ஹலோல் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் 80 ஆயிரம் யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
இந்த உற்பத்தி ஆலையில் சுமார் 2 ஆயிரத்து 500 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 37 சதவீதம் பெண் ஊழியர்கள் ஆவர். மேலும் 2023 டிசம்பர் மாதத்திற்குள் இந்த எண்ணிக்கையை 50 சதவீதமாக அதிகரிக்க எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்து இருக்கிறது. சமீபத்தில் எம்.ஜி. மோட்டார் நிறுவனம் மேம்பட்ட எம்.ஜி. ZS EV மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
ஸ்கோடா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட குஷக் மாண்ட் கர்லோ ஸ்பெஷல் எடிஷன் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது குஷக் மாண்ட் கர்லோ எடிஷன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்கோடா குஷக் மாண்ட் கர்லோ எடிஷன் விலை ரூ. 15.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய ஸ்கோடா குஷக் மாண்ட் கர்லோ எடிஷன் மாடல் டொர்னாடோ ரெட் நிறம் கொண்டிருக்கிறது. ஸ்பெஷல் வேரியண்ட் மற்றும் ஸ்டாண்டர்டு மாடல்கள் இடையே வித்தியாசத்தை ஏற்படுத்த மாண்ட் கர்லோ எடிஷனில் மாண்ட் கர்லோ பிளாக்டு-அவுட் எலிமண்ட்கள், கிளாஸ் பிளாக் ரூஃப், ORVM-கள், ரூப் ரெயில்கள், முன்புற கிரில், புதிய அலாய் வீல்கள், முன்புற ஃபெண்டரில் மாண்ட் கர்லோ பேட்ஜிங் வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் ஃபுல் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், ஆட்டோமேடிக் வைப்பர்கள், ஹெட்லேம்ப்கள், வெண்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள், ஆறு ஸ்பீக்கர்கள் கொண்ட ஸ்பீக்கர் சிஸ்டம், சப் வூஃபர், ஆட்டோ டிம்மிங் ரியர் வியூ மிரர், டையர் பிரெஷர் மாணிட்டரிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய ஸ்கோடா குஷக் மாண்ட் கர்லோ எடிஷனில் 115 பி.ஹெச்.பி. திறன் வழங்கும் 1.0 லிட்டர் யூனிட், 150 ஹெச்.பி. திறன் வழங்கும் 1.5 லிட்டர் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. இத்துடன் 1.0 லிட்டர் என்ஜினுடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் மற்றும் 1.5 லிட்டர் என்ஜினுடன் 7 ஸ்பீடு டி.எஸ்.ஜி. யூனிட் வழங்கப்பட்டு உள்ளது.
போக்ஸ்வேகன் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் கூட்டணி அமைப்பதாக அறிவித்துள்ளன. எதற்கான கூட்டணி என்ற விவரங்களை பார்ப்போம்.
போக்ஸ்வேகன் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் இணைந்து ஆக்மெண்டெட் ரியாலிட்டி கிளாஸ்களை உருவாக்க திட்டமிட்டுள்ளன. இதை கொண்டு ஓட்டுனர்கள் ஹாலோகிராபிக் டிஸ்ப்ளேக்களில் போக்குவரத்து நெரிசல் பற்றிய விவரங்கள், பரிந்துரைகள், வானிலை நிலவரங்கள் என ஏராளமான தகவல்களை பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.
பயணங்களின் போது கார்களில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஹாலோ லென்ஸ் 2 ஹெட்செட்-ஐ இயங்க வைக்க போக்ஸ்வேகரன் நிறுவனம் மைக்ரோசாப்ட் உடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. எதிர்கால போக்குவரத்துக்களில் ஆக்மெண்டெட் ரியாலிட்டி மிக முக்கிய பங்கு வகிக்கும் என போக்ஸ்வேகன் தெரிவித்து உள்ளது.

2015 ஆம் ஆண்டிலேயே போக்ஸ்வேகன் நிறுவனம் தனது ரேஸ் டிரெயினர் கொல்ப் ஆர் மாடலில் ஹாலோ லென்ஸ்-ஐ பயன்படுத்த விருப்பம் தெரிவித்து இருந்ததாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. வாகனத்தில் ஹெட்செட்டை பொருத்தும் போது சென்சார்கள் டிராக்கிங் திறனை இழந்து, ஹாலோகிராம்கள் மறைந்து விட்டன.
இதை அடுத்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை போக்ஸ்வேகன் அணுகியது. பின் 2018 ஆண்டு முதல் இரு நிறுவனங்கள் இணைந்து இதற்கான தீர்வை காணும் முயற்சியில் ஈடுபட துவங்கி உள்ளன.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய நெக்சான் EV மேக்ஸ் மாடலின் இந்திய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நீண்ட ரேன்ஜ் வழங்கும் நெக்சான் EV மாடல் நெக்சான் EV மேக்ஸ் என அழைக்கப்படும் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. மேலும் புதிய டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடல் மே 11 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதையும் டாடா மோட்டார்ஸ் அறிவித்து இருக்கிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய டாடா நெக்சான் EV மேக்ஸ் மாடல் விலை ரூ. 20 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.
புதிய நெக்சான் EV மேக்ஸ் மாடலில் 40 கிலோவாட் ஹவர் திறன் கொண்ட பேட்டரி யூனிட் வழங்கப்படலாம். இத்துடன் புதிய காரில் ஃபுளோர் பிளானை டாடா மோட்டார்ஸ் மாற்றலாம் என கூறப்படுகிறது. இதன் காரணமாக நெக்சான் EV மேக்ஸ் பூட் ஸ்பேஸ் குறைய வாய்ப்புகள் உண்டு என தகவல் வெளியாகி உள்ளது. இத்துடன் அதிக திறன் மற்றும் டார்க் வெளிப்படுத்தும் மோட்டார் வழங்கப்படும் என தெரிகிறது.

பெரிய பேட்டரி வழங்கப்பட இருப்பதால் டாடா நெக்சான் EV மேக்ஸ், தற்போதைய நெக்சான் EV மாடலுடன் ஒப்பிடும் போது அதிக ரேன்ஜ் வழங்கும் என நிச்சயம் எதிர்பார்க்க முடியும். தற்போதைய நெக்சான் EV மாடல் முழு சார்ஜ் செய்தால் 312 கிலோமீட்டர் வரை செல்லும் என ARAI சான்று பெற்று இருக்கிறது. அந்த வகையில் புதிய நெக்சான் EV மேக்ஸ் மாடல் முழு சார்ஜ் செய்தால் குறைந்தபட்சம் 400 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் என எதிர்பார்க்கலாம்.
அந்த வகையில் நிஜ பயன்பாடுகளின் போது இந்த கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 320 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என கூறப்படுகிறது. தற்போதைய நெக்சான் EV மாடலை முழு சார்ஜ் செய்தால் 200 முதல் அதிகபட்சமாக 220 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கி வருகிறது.
கவாசகி நிறுவனத்தின் 2022 நின்ஜா 300 மோட்டார்சைக்கிள் இந்திய வினியோகம் துவங்கி நடைபெற்று வருகிறது. இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
கவாசகி இந்தியா நிறுவனம் 2022 நின்ஜா 300 மாடலுக்கான வினியோகத்தை இந்தியாவில் துவங்கி இருக்கிறது. இந்தியாவில் கவாசகி நிறுவனத்தின் புதிய எண்ட்ரி லெவல் மாடல் ஏப்ரல் 27 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. புதிய 2022 கவாசகி நின்ஜா 300 மாடல் விலை ரூ. 3 லட்சத்து 37 ஆயிரம், (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வெளியீட்டை தொடர்ந்து இந்த மாடல் விற்பனையகம் வந்தடைந்த நிலையிலேயே, தற்போது வினியோகம் துவங்கி இருக்கிறது.
புதிய 2022 கவாசகி நின்ஜா 300 மாடலில் புதிய கிராபிக்ஸ் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. 2022 கவாசகி நின்ஜா 300 மாடல்- லைம் கிரீன், கேண்டி லைம் கிரீன் மற்றும் எபோனி என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இவற்றில் கேண்டி லைம் கிரீன் மற்றும் எபோனி பெயிண்ட் கொண்ட மாடல்களில் புது கிராபிக்ஸ் வழஙஅகப்பட்டு இருக்கிறது. இதன் லைம் கிரீன் வேரியண்ட் தோற்றத்தில் 2021 மாடலை போன்றே காட்சியளிக்கிறது.
மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை 2022 கவாசகி நின்ஜா 300 மாடலில் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் 296சிசி, பேரலல் டுவின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 38.4 பி.ஹெச்.பி. பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
போக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது டைகுன் மாடல் விலையை அதிரடியாக மாற்றியமைத்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஜெர்மன் நாட்டு கார் உற்பத்தியாளரான போக்ஸ்வேகன் இந்தியாவில் தனது டைகுன் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல் விலையை ரூ. 60 ஆயிரம் வரை உயர்த்தி இருக்கிறது. அதன்படி புதிய போக்ஸ்வேகன் டைகுன் மாடல் விலை தற்போது ரூ. 11 லட்சத்து 39 ஆயிரம் முதல் துவங்குகிறது.
டைகுன் பேஸ் மாடலான கம்பர்ட்லைன் விலையில் 3.64 சதவீதம் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இது காரின் பழைய விலையில் இருந்து ரூ. 40 ஆயிரம் வரை அதிகம் ஆகும். டைகுன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் வெர்ஷன்களின் விலை ரூ. 40 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன் ஹைலைன் MT மாடல் விலை தற்போது ரூ. 40 ஆயிரம் அதிகரித்து ரூ. 13 லட்சத்து 39 ஆயிரத்தில் இருந்து துவங்குகிறது. ஆட்டோமேடிக் மாடல் விலை ரூ. 14 லட்சத்து 79 ஆயிரம் ஆகும்.
போக்ஸ்வேகன் டைகுன் டாப்லைன் மற்ரும் டைகுன் GT மாடல்கள் விலை ரூ. 40 ஆயிரம் உயர்த்தப்பட்டு உள்ளது. இவற்றின் விலை முறையே ரூ. 14 லட்சத்து 99 ஆயிரம் மற்றும் ரூ. 15 லட்சத்து 39 ஆயிரம் என துவங்குகிறது. டைகுன் ஆட்டோமேடிக் மாடல் விலை ரூ. 50 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு தற்போது ரூ. 16 லட்சத்து 89 ஆயிரம் என துவங்குகிறது. டைகுன் GT AT மாடல் விலை ரூ. 18 லட்சத்து 59 ஆயிரம் என துவங்குகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஹோண்டா கார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்களுக்கு அதிரடி தள்ளுபடி மற்றும் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் மே மாதத்திற்கான சலுகை மற்றும் தள்ளுபடி விவரங்களை வெளியிட்டு உள்ளது. இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதன் மூலம் கார் விற்பனையை அதிகப்படுத்த ஹோண்டா கார்ஸ் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. அந்த வகையில் மே மாதத்திற்கான சலுகையில் கார் மாடல்களுக்கு அதிகபட்சமாக ரூ. 33 ஆயிரத்து 158 வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.
சலுகை மற்றும் தள்ளுபடிகள் கார் மாடல்களின் வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும். மேலும் இந்த சலுகைகள் மே 31, 2022 அல்லது ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே வழங்கப்படும்.
ஹோண்டா அமேஸ் மாடலுக்கு குறைந்த பட்சமாக ரூ. 9 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இதில் ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ் மற்றும் ரூ. 4 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி அடங்கும். இந்த காருக்கு எக்சேன்ஜ் சலுகை எதுவும் வழங்கப்படவில்லை.
ஹோண்டா சிட்டி நான்காவகது தலைமுறை மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 20 ஆயிரம் வரை பலன்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ், ரூ. 7 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. கார்ப்பரேட் தள்ளுபடியாக ரூ. 8 ஆயிரம் வழங்கப்படுகிறது.

ஹோண்டா WR V மாடலுக்கு ரூ. 26 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இதில் ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை, ரூ. 4 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ், ரூ. 7 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது.
ஹோண்டா சிட்டி ஐந்தாம் தலைமுறை மாடலுக்கு ரூ. 30 ஆயிரத்து 396 வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதில் ரூ. 5 ஆயிரம் ரொக்க தள்ளுபடி, ரூ. 5 ஆயிரத்து 396 மதிப்பிலான இலவச அக்சஸரீக்கள், ரூ. 5 ஆயிரம் எக்சேன்ஜ் சலுகை ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ், ரூ. 7 ஆயிரம் எக்சேன்ஸ் போனஸ், ரூ. 8 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
ஹோண்டா ஜாஸ் மாடலுக்கு அதிகபட்சமாக ரூ. 33 ஆயிரத்து 158 வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இதில் ரூ. 10 ஆயிரம் உடனடி தள்ளுபடி,ஸ ரூ. 12 ஆயிரத்து 158 மத்ப்லிபலான இலவச அக்சஸரீக்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 5 ஆயிரம் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் ரூ. 7 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ் மற்றும் ரூ. 4 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது டாடா பன்ச் மாடல் விலையை மீண்டும் உயர்த்தி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டாடா பன்ச் மாடல் விலையை மீண்டும் உயர்த்தி இருக்கிறது. அதன்படி டாடா பன்ச் மைக்ரோ எஸ்.யு.வி. மாடல் விலை தற்போது ரூ. 5 லட்சத்து 82 ஆயிரம் (எக்ஸ்-ஷோரூம்) என துவங்குகிறது. தற்போதைய அறிவிப்பின் படி டாடா பன்ச் பேஸ் மாடல் விலை ரூ. 15 ஆயிரம் உயர்த்தப்பட்டு உள்ளது.
இந்த முறை டாடா பன்ச் மாடலின் அனைத்து வேரியண்ட்களின் விலை உயர்த்தப்படவில்லை. விலை உயர்வின் படி டாடா பன்ச் மேனுவல் மாடல் விலை ரூ. 5 லட்சத்து 82 ஆயிரத்து 900 என துவங்கு அதிகபட்சம் ரூ. 8 லட்சத்து 88 ஆயிரத்து 900 என மாறி இருக்கிறது. டாடா பன்ச் ஆட்டோமேடிக் மாடல் விலை ரூ. 7 லட்சத்து 24 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 9 லட்சத்து 48 ஆயிரத்து 900 என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளன.

அம்சங்களை பொருத்தவரை புதிய டாடா பன்ச் மாடலில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்., பாக் லைட்கள், ரூப் ரெயில்கள், 16 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், எல்.இ.டி. டெயில் லைட்கள் உள்ளன.
டாடா பன்ச் மாடலில் 1.2 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 84 பி.ஹெச்.பி. திறன், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏ.எம்.டி. யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.
டொயோட்டா நிறுவனம் தனது தேர்வு செய்யப்பட்ட கார் மாடல்கள் விலையை மாற்றுவதாக அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் தனது கிளான்சா ஹேச்பேக் மற்றும் அர்பன் குரூயிசர் சப்-காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல்கள் விலையை நாளை (மே 1) முதல் உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. உற்பத்தி செலவீனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து கார்களின் விலை உயர்த்தப்படுவதாக டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரு மாடல்களின் விலை உயர்த்தப்படுவது உறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில், இவற்றின் விலை எத்தனை சதவீதம் உயர்த்தப்பட இருக்கிறது என்பது பற்றி டொயோட்டா நிறுவனம் இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இம்முறை இரு கார்களின் விலை அதன் மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப அதிகபட்சம் 2 சதவீதம் வரை உயர்த்தப்படும் என தெரிகிறது.
கடந்த இரு மாதங்களில் டொயோட்டா நிறுவன கார்களின் விலை உயர்த்தப்படுவது இது இரண்டாவது முறை ஆகும். முன்னதாக இந்த நிதியாண்டு துவக்கத்தில் டொயோட்டா நிறுவனம் தனது கார் மாடல்கள் விலையை 4 சதவீதம் வரை உயர்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
"டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் டொயோட்டா அர்பன் குரூயிசர் மற்றும் டொயோட்டா கிளான்சா மாடல்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளது. விலை உயர்வு மே 1, 2022 முதல் அமலுக்கு வருகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் உற்பத்தி செலவீனங்களை ஈடு செய்யும் நோக்கிலேயே விலை உயர்வு அறிவிக்கப்படுகிறது." என டொயோட்டா நிறுவனம் வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளது.
டெஸ்லா நிறுவனத்தில் சுமார் 4 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பங்குகளை எலான் மஸ்க் விற்பனை செய்து இருக்கிறார். இது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
டெஸ்லா இன்க் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், 4 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான டெஸ்லா நிறுவன பங்குகளை விற்பனை செய்து இருக்கிறார். டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கான நிதி திரட்டலின் அங்கமாக இந்த நடவடிக்கையை அவர் செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

"இன்று இதற்கு பின் டெஸ்லா நிறுவன பங்குகளை விற்பனை செய்யும் எண்ணம் இல்லை" என எலான் மஸ்க் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பதிவில் தெரிவித்து இருக்கிறார். கடந்த செவ்வாய் கிழமை மற்றும் புதன் கிழமை அன்று சுமார் 44 லட்சம் பங்குகளை எலான் மஸ்க் விற்பனை செய்தார். இது டெஸ்லா இன்க் நிறுவனத்தில் தனது பங்குகளில் 2.6 சதவீதம் ஆகும்.
முன்னதாக எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்களை ரொக்கமாக கொடுத்து வாங்கிக் கொள்வதாக அறிவித்தார். எலான் மஸ்க்-இன் சொத்து மதிப்பு 268 பில்லியன் டாலர்கள் என போர்ப்ஸ் தெரிவித்து உள்ளது.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்வது பற்றி அசத்தல் அப்டேட் கொடுத்துள்ளது.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் விரைவில் இரண்டு புது எலெக்ட்ரிக் ஸகூட்டர் வேரியண்ட்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இரண்டு புது வேரியண்ட்களில் ஒரு மாடலில் பெரிய பேட்டரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. பெரிய பேட்டரி கொண்ட மாடல் நிச்சயம் அதிக ரேன்ஜ் வழங்கும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.
புதிதாக இரண்டு வேரியண்ட்களை அறிமுகம் செய்வது பற்றி ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தருன் மேத்தா தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தார். மேலும் இரண்டு புது வேரியண்ட்களும் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் தற்போதைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிளாட்பார்மிலேயே உருவாக்கப்பட்டு இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்திய சந்தையில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் ஏத்தர் 450X மற்றும் ஏத்தர் 450 பிளஸ் என இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இரு மாடல்களில் ஏத்தர் 450X பிரீமியம் வேரியண்ட் ஆகும். இவற்றை தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட இருக்கும் இரண்டு புது வேரியண்ட்கள் அம்சங்கள் மற்றும் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.






