என் மலர்
ஆட்டோ டிப்ஸ்
எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையமான சன்பியூவல் தனது முதல் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜரை கல்கா சிம்லா நெடுஞ்சாலையில் அமைக்க இருக்கிறது.
எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிறுவனம் சன்பியூவல் தனது முதல் 120 கிலோவாட் DC சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜரை கல்கா சிம்லா நெடுஞ்சாலையில் அமைக்க திட்டமிட்டு உள்ளது. சமீபத்தில் சன்பியூவல் அறிமுகம் செய்த “எக்ஸ்பிலஸ் மைல்ஸ்” திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலைகளில் சார்ஜிங் மையங்களை அமைக்க சன்பியூவல் திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் சன்பியூவல் நிறுவனம் முதற்கட்டமாக 70 120 கிலோவாட் CCS DC சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜர்கள் இந்தியா முழுக்க 35 நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட இருக்கின்றன. இவை அனைத்தும் இந்த நிதியாண்டிற்குள் செய்து முடிக்க சன்பியூவல் திட்டமிட்டு உள்ளது.
120 கிலோவாட் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜர்கள் நெடுஞ்சாலைகளில் அமைக்கப்படும். இவை ஆடம்பர எலெக்ட்ரிக் கார் பயன்படுத்துவோருக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கின்றன. எக்ஸ்பிரஸ் மைல்ஸ் திட்டத்தின் கீழ் முதல் அதிவேக எலெக்ட்ரிக் வாகன சார்ஜர் கல்கா சிம்லா நெடுஞ்சாலையில் அமைந்து இருக்கும் தி ஃபுட் ஸ்டிரீட் சோலன் அருகில் இன்ஸ்டால் செய்யப்பட உள்ளது.
மொத்தம் 741 பண்டைய தமிழ் எழுத்துக்களால் உருவான அசத்தலான உருவப்படம். தமிழரை பாராட்டி ஆனந்த் மஹிந்திரா வெளியிட்ட ட்விட் வைரலாகி வருகிறது.
தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த நபர் வரைந்த ஓவியம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கனேஷ் என்ற நபர் மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திராவின் உருவ படத்தை மிக வித்தியாசமாக வரைந்து அசத்தி இருக்கிறார்.
ஓவியத்தில் கணேஷ் பண்டைய தமிழ் எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார். இதனை உற்று பார்க்கும் போது உருவப்படத்தில் தமிழ் எழுத்துக்கள் மட்டுமே தெரியும். ஓவியத்தில் ஆனந்த் மஹிந்திரா உருவப்படத்தை வரைய கணேஷ் மொத்தம் 741 பண்டை கால தமிழ் எழுத்துக்களை பயன்படுத்தி இருக்கிறார்.

கணேஷ் இந்த உருவப்படத்தை வரைந்த போது எடுத்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டு அதில் ஆனந்த் மஹிந்திரா மற்றும் மஹிந்திரா குழும நிறுவனங்களையும் டேக் செய்து இருக்கிறார். இதை கவனித்த ஆனந்த் மஹிந்திரா கணேஷ் ட்விட்-ஐ ரி-ஷேர் செய்தார். மேலும் இந்த வரைபடத்தின் பிரேம் செய்யப்பட்ட நகலை தனக்கு வழங்குமாறு ஆனந்த் மஹிந்திரா கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வரைபடத்தை தனது அறையில் வைத்து அலங்கரிக்க விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதுகுறித்து ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் பதிவில், “ஆஹா, என் உருப்படம் 741 பழமையான தமிழ் எழுத்துக்களால் வடிவானது, நான் வியக்கிறேன். தமிழ் மொழி பிரம்மாண்டத்தின் பொருட்டு, உருவாக்கியவரின் பாராட்டாக, உருவ படத்தை என் வீட்டில் வைக்க விருப்பபடுகிறேன்..” என குறிப்பிட்டு இருக்கிறார்.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் ஸ்கூட்டர்களை டெலிவரி பெறும் வீடியோக்களை ஓலா எலெக்டரிக் வெளியிட்டு இருக்கிறது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான் விற்பனையை சமீபத்தில் துவங்கியது. இந்த நிலையில், வாடிக்கையாளர்கள் முழு தொகையை செலுத்தி 24 மணி நேரத்தில் டெலிவரி செய்யப்பட்டு வருவதாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
ஸ்கூட்டர்கள் அதிவேகமாக டெலிவரி செய்யப்பட்டு வருவதற்கு ஓலா எலெக்ட்ரிக் நிறுவன குழுவினருக்கு ஓலா எலெக்ட்ரிக் சி.இ.ஒ. பாவிஷ் அகர்வால் பாராட்டு தெரிவித்து உள்ளார். வாடிக்கையாளர்கள் புதிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விரைந்து டெலிவரி எடுத்துக் கொள்ளும் வீடியோவை ஓலா எலெக்டரிக் நிறுவனம் தனது ட்விட்டர் அக்கவுண்டில் வெளியிட்டு இருக்கிறது.
“ஸ்கூட்டர் வாங்கிய 24 மணி நேரத்திற்குள் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. ஓலா எலெக்ட்ரிக் குழுவின் சிறப்பான பணி இது. பல்வேறு எலெக்ட்ரிக் வாகன பிராண்டுகள் தங்களின் வாகனங்களை டெலிவரி செய்ய காத்திருப்பு காலத்தை அறிவித்து உள்ளன. இதோடு வாகனத்தை பதிவு செய்யவும் அதிக நேரம் ஆகிறது. எதிர்காலம் இங்கே இருக்கிறது, இதன் அங்கமாக இருங்கள்!,” என பாவிஷ் அகர்வால் தனது ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறார்.
மாருதி சுசுகி நிறுவனம் புதிய தலைமுறை விட்டாரா பிரெஸ்ஸா மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த காருக்கான விளம்பர படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்று இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் புதிய தலைமுறை விட்டாரா பிரெஸ்ஸா மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ப்ரோடோடைப் வெர்ஷனில் பல முறை இந்த காரின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இந்த மாடல் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில், நீண்ட காலம் சோதனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், முதல் முறையாக எவ்வித மறைப்பும் இன்றி சோதனை செய்யப்படும் மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா மாடல் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இவை புதிய விட்டாரா பிரெஸ்ஸா மாடலின் விளம்பர படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டவை என கூறப்படுகிறது. அதன்படி இந்த காரின் முன்புறம் மெல்லிய கிளாஸ் பிளாக் நிற கிரில், ரிடிசைன் செய்யப்பட்ட ஹெட்லைட் கிளஸ்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

Photo Courtesy: RushLane
இத்துடன் J வடிவ எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் முன்புற பம்ப்பர்கள் பிளாக் இன்சர்ட் மற்றும் ஃபாக் லேம்ப்களை கொண்டுள்ளன. பக்கவாட்டில் பிரம்மாண்ட வீல் ஆர்ச்கள், நீண்ட சில்வர் நிற ரூஃப் ரெயில்கள் உள்ளன. இத்துடன் புதிய அலாய் வீல்கள் மற்றும் ஸ்வில் ரக டூயல் டோன் டிசைன் வழங்கப்பட்டு உள்ளன.
புதிய தலைமுறை மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 103 ஹெச்.பி. பவர், 138 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் உலகின் விலை உயர்ந்த காரை விற்பனை செய்து சாதனை படைத்து உள்ளது. மெர்சிடிஸ் 1955 300 SLR Uhlenhaut கூப் மாடல் இந்த சாதனையை பெற்று தந்து இருக்கிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் உலகின் விலை உயர்ந்த காரை விற்பனை செய்து இருக்கிறது. தனியார் ஏலத்தில் ஜெர்மன் நாட்டு கார் உற்பத்தியாளரான மெர்சிடிஸ் பென்ஸ் தான் உருவாக்கி வைத்து இருந்த இரண்டு 1955 300 SLR Uhlenhaut கூப் மாடல்களில் ஒன்றை விற்பனைக்கு பட்டியலிட்டது. இந்த ஏலத்தில் மெர்சிடிஸ் 1955 300 SLR Uhlenhaut மாடல் 135 மில்லியன் யூரோக்கள் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1,100 கோடிக்கு விற்பனையாகி இருக்கிறது.
இந்த கூப் ப்ரோடோடைப் மாடலின் பெயர், இதனை உருவாக்கியவரும், மூத்த பொறியாளருமான Rudolf Uhlenhaut-ஐ கவுரவிக்கும் வகையில் சூட்டப்பட்டு இருக்கிறது. முன்னதாக உலகின் விலை உயர்ந்த கார்ந்த என்ற பெருமையை 1962 பெராரி 250 GTO மாடல் பெற்று இருந்தது. இந்த கார் 48.4 மில்லியன் டாலர்களுக்கு 2018 வாக்கில் விற்பனை செய்யப்பட்டு இருந்தது.

“ஸ்போர்ட்ஸ் கார் உற்பத்தி மற்றும் மிக முக்கிய வரலாற்று அம்சங்களால் உருவாகி இருக்கும் எங்கள் பிராண்டின் மைல்கல் 300 SLR Uhlenhaut கூப் மாடல் ஆகும். இரண்டு தனித்தும் மிக்க கார்களில் ஒன்றை விற்பனை செய்வதற்கான முடிவு, நியாயமான காரணங்களுக்காகவே எடுக்கப்பட்டு உள்ளது. இது ஒரு நல்ல விஷயத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. இதில் கிடைக்கும் வருவாய் சர்வதேச உதவித்தொகை திட்டத்திற்காக பயன்படுத்தப்பட இருக்கிறது,” என மெர்சிடிஸ் பென்ஸ் சி.இ.ஓ. ஓலா கலெனியஸ் தெரிவித்து இருக்கிறார்.
இந்த கார் மாடலுக்கான ஏலம் மே 5 ஆம் தேதி நடைபெற்றது. ஏலம் ஆர்.எம். சவுத்பி உடனான கூட்டணி மூலம் நடத்தப்பட்டது. இதில் மெர்சிடிஸ் பென்ஸ் வாடிக்கையாளர்கள் மற்றும் ஆசைக்காக கார் வாங்கி வைக்கும் கார் ப்ரியர்கள் கலந்து கொண்டனர். ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட கார் இதுவரை பொது வெளியில் இடம்பெற்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மெர்சிடிஸ் 300 SLR Uhlenhaut மாடலில் 3 லிட்டர், 8 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருந்தது. இது 298 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும். மேலும் இந்த கார் மணிக்கு அதிகபட்சமாக 290 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் திறன் கொண்டுள்ளது. இந்த சீரிசில் மொத்தமே இரு யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், மற்றொரு மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது.
லேண்ட் ரோவர் நிறுவனத்தின் புதிய ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் நான்கு வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் முற்றிலும் புதிய ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடலை சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் 2023 லேண்ட் ரோவர் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் விலை ரூ. 1 கோடியே 64 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. தற்போது இந்த மாடலுக்கான முன்பதிவு துவங்கப்பட்டு உள்ளது. வினியோகம் நவம்பர் மாத வாக்கில் துவங்குகிறது.
புதிய தலைமுறை லேண்ட் ரோவர் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் SE, HSE, Autobiography மற்றும் Fist Edition போன்ற வேரியண்ட்களில் கிடைக்கிறது. மேற்கத்திய சந்தைகளில் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் பல்வேறு பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஆனால் இந்திய சந்தையில் இந்த மாடல் ஒற்றை டீசல் என்ஜின் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது.
நிறங்களை பொருத்தவரை ஏராளமான புது ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. 2023 ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் இந்திய மாடலில் டிஜிட்டல் எல்.இ.டி. ஹெட்லைட்கள், ஹீடெட் ரியர் வியு மிரர்கள், இலுமினேட் செய்யப்பட்ட சீட்பெல்ட் பக்கில்கள், மெரிடியன் 3D சவுண்ட் சிஸ்டம், செண்ட்ரல் இன்பர்மேஷன் ஸ்கிரீன் ப்ரோ, டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, ஹெட்-அப் டிஸ்ப்ளே, டிரைவர் அசிஸ்ட் பேக் மற்றும் சரவுண்ட் வியு கேமரா செட்டப் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் 2023 லேண்ட் ரோவர் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் 3 லிட்டர், 6 சிலிண்டர்கள் கொண்ட, டர்போ சார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 345 பி.ஹெச்.பி. பவர், 700 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 5.9 நொடிகளில் எட்டிவிடும்.
மேலும் மணிக்கு அதிகபட்சமாக 234 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதன் பெட்ரோல் வேரியண்டில் 2996சிசி, 6 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் பெரிய பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய போர்ஷ் 718 கேமேன் GT4 RS மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.4 நொடிகளில் எட்டிவிடும்.
போர்ஷ் நிறுவனம் இந்தியாவில் தனது புது கேமேன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மாடல் கேமேன் GT4 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய போர்ஷ் 718 கேமேன் GT4 RS மாடலின் விலை ரூ. 2 கோடியே 54 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய 718 கேமேன் GT4 RS மாடலில் 911 GT3 சார்ந்த என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய போர்ஷ் 911 GT3 மாடலுடன் ஒப்பிடும் போது,புதிய கேமேன் 718 GT4 RS மாடலில் உள்ள ஃபிளாட் சிக்ஸ் என்ஜின் 496 ஹெச்.பி. பவர், 450 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

போர்ஷ் GT4 வெர்ஷனுடன் ஒப்பிடும் போது புதிய கேமேன் GT4 RS மாடலில் கூடுதலாக 79 ஹெச்.பி. பவர் மற்றும் 20 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை கிடைக்கிறது. இந்த என்ஜினுடன் போர்ஷ் நிறுவனத்தின் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய போர்ஷ் 718 கேமேன் GT4 RS மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.4 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இந்த கார் மணிக்கு 315 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் திறன் கொண்டுள்ளது. புதிய GT4 RS மாடல் ஸ்டாண்டர்டு GT4 மாடலை விட அரை நொடி வேகமானது ஆகும். எடையை பொருத்தவரை இந்த மாடல் ஃபுல் டேன்க் கொள்ளளவில் 1415 கிலோகிராம் எடையை கொண்டுள்ளது. இது GT4 மாடலை விட 35 கிலோ குறைவு ஆகும்.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடந்த ஏப்ரல் மாத விற்பனையில் அசத்திய டாப் 5 ஹேச்பேக் மாடல்கள் பற்றிய விவரங்களை பார்ப்போம்.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிக விற்பனையை ஈட்டிக் கொடுக்கும் பிரிவுகளில் ஒன்றாக ஹேச்பேக் பிரிவு இருக்கிறது. அடிக்கடி விலை உயர்வு, செமிகண்டக்டர் தட்டுப்பாடு, எஸ்.யு.வி. மாடல்களுக்கான தட்டுப்பாடு போன்ற காரணங்களால் ஹேச்பேக் மாடல்களின் விற்பனையில் சமீப காலங்களில் பாதிப்பு ஏற்பட துவங்கி இருக்கிறது. அந்த வகையில் ஏப்ரல் 2022 மாதத்தில் அதிகம் விற்பனையான டாப் 5 ஹேச்பேக் மாடல்கள் எவை என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
மாருதி சுசுகி வேகன் ஆர் - கடந்த மாதம் ஹேச்பேக் பிரிவில் அதிகம் விற்பனையான மாடல்களில் ஒன்றாக மாருதி சுசுகி வேகன் ஆர் இடம்பெற்று இருக்கிறது. ஏப்ரல் 2021 மாதத்தில் 18 ஆயிரத்து 656 யூனிட்களை விற்பனை செய்திருந்த மாருதி சுசுகி கடந்த ஏப்ரல் மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனம் 17 ஆயிரத்து 766 யூனிட்களையே விற்பனை செய்துள்ளது.

மாருதி சுசுகி பலேனோ - மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரீமியம் ஹேச்பேக் மாடல் இது ஆகும். ஏப்ரல் 2022 மாதத்தில் மட்டும் மாருதி சுசுகி நிறுவனம் 10 ஆயிரத்து 938 பலேனோ யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. முன்னதாக 2021 ஏப்ரல் மாதத்தில் 16 ஆயிரத்து 384 யூனிட்களை மாருதி சுசுகி விற்பனை செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மாருதி சுசுகி ஆல்டோ - ஒட்டுமொத்த விற்பனையில் ஆல்டோ மாடல் 40 சதவீதம் சரிவை சந்தித்த போதிலும், அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஹேச்பேக் மாடல்கள் பிரிவில் மாருதி சுசுகி ஆல்டோ மூன்றாவது இடம்பிடித்து உள்ளது. கடந்த மாதம் மட்டும் மாருதி சுசுகி நிறுவனம் 10 ஆயிரத்து 443 ஆல்டோ யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது.
ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் - இந்த பட்டியலில் இடம் பிடித்து இருக்கும் ஒற்றே மாருதி சுசுகி நிறுவனம் அல்லாத மாடல் இது ஆகும். கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் ஹூண்டாய் நிறுவனம் 11 ஆயிரத்து 540 கிராண்ட் i10 நியோஸ் மாடல்களை விற்பனை செய்துள்ளது.
மாருதி சுசுகி ஸ்விப்ட் - ஏப்ரல் 2022 மாதத்தில் ஸ்விப்ட் மாடல் விற்பனை 50 சதவீகம் சரிவடைந்துள்ளது. எனினும், ந்த மாடல் அதிக யூனிட்கள் விற்பனையில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதம் மட்டும் மாருதி சுசுகி நிறுவனம் 8 ஆயிரத்து 898 ஸ்விப்ட் யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது. ஏப்ரல் 2021 மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனம் 18 ஆயிரத்து 316 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது.
ஹூண்டாய் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய அதிரடி திட்டங்களை தீட்டி வருகிறது. இதன் அங்கமாக புதிய EV ஆலையை திறக்க முடிவு செய்துள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் சர்வதேச எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் டெஸ்லாவுக்கு அச்சுறுத்தலான பிராண்டாக பார்க்கப்படுகிறது. ஐயோனிக் 5 மாடல் ஆண்டின் சிறந்த கார் என்ற பெருமையை பெற்றதோடு, ஹூண்டாய் பிராண்டின் EV6 மற்றும் ஜெனிசிஸ் GV60 போன்ற மாடல்கள் மூலம் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் குறிப்பிடத்தக்க பங்குகளை பிடிக்க திட்டமிட்டுள்ளது.
இதோடு ஹூண்டாய் நிறுவனத்தின் கியா பிராண்டு இந்திய சந்தையில் தனது EV6 மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது. இந்த வரிசையில், ஹூண்டாய் நிருவனம் அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலையை திறக்க முடிவு செய்துள்ளது.

எலெக்ட்ரிக் வாகன சந்தையில் கவனம் செலுத்த ஹூண்டாய் நிறுவனம் 7.4 பில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக ஹூண்டாய் நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இதைத் தொடர்ந்து புதிய ஆலையை துவங்க இருப்பதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகி வந்தன.
தற்போது இதனை உறுதிப்படுத்தும் வகையில், ஹூண்டாய் செய்தி தொடர்பாளர், “அமெரிக்காவில் புதிய எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலையை துவங்க இருக்கிறோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இதுதவிர இப்போதைக்கு தெரிவிக்க வேறு எந்த தகவல்களும் இல்லை,” என தெரிவித்தார்.
மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2022 ஸ்கார்பியோ மாடலின் புது ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்பியோ மாடல் உற்பத்தி பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய ஸ்கார்பியோ மாடல் மிக விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிலையில், வெளியீட்டைஓட்டி புது மாடலுக்கான டீசர்களை மஹிந்திரா அவ்வப்போது வெளியிட்டு எதிர்பார்ப்புகளை மேலும் எகிற செய்து வருகிறது.
அதன்படி உற்பத்தி ஆலையில் வைத்து எடுக்கப்பட்ட 2022 மஹிந்திரா ஸ்கார்பியோ மாடலின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. புது புகைப்படங்களின் படி 2022 மஹிந்திரா ஸ்கார்பியோ மாடலின் முன்புறம் செங்குத்தான கிரில், புது எலிமண்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் புதிய மஹிந்திரா லோகோ காணப்படுகிறது. இத்துடன் சி வடிவ எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், பாக் லேம்ப்கள் காணப்படுகின்றன.
காரின் பின்புறம் ரி-டிசைன் செய்யப்பட்ட டெயில்கேட், பின்புறம் கீழ் பகுதியில் கிடைமட்டமான ப்ரோபைல் கொண்டிருக்கிறது. இத்துடன் இருபுறங்களிலும் பம்ப்பர் மற்றும் க்ர்ம் ஸ்ட்ரிப் ப்ரிட்ஜிங் உள்ளது. இந்த மாடலில் 2.2 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.
கியா நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கும் எலெக்ட்ரிக் கார் பல்வேறு நிறங்களில் உருவாகி இருப்பதை உறுதிப்படுத்தும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
கியா இந்தியா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடலுக்கான முன்பதிவுகளை மே மாதம் 26 ஆம் தேதி துவங்கி இருப்பசாத தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், புதிய கியா EV6 மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், கியா EV6 மாடல் கியா ஆலையில் வைத்தே எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள கியா உற்பத்தி ஆலையில் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. புகைப்படங்களின் படி 2022 கியா EV6 மாடல்- ரெட், வைட் மற்றும் சில்வர் என பல விதமான நிறங்களில் உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நிறங்கள் மட்டுமின்றி கியா நிறுவனம் இந்த காரை மேலும் சில நிறங்களில் விற்பனை செய்யலாம்.

Photo Courtesy: Rushlane
இந்திய சந்தையில் கியா EV6 மாடல் சி.பி.யு. (முழுமையாக உருவாக்கப்பட்ட மாடல்) வடிவில் இந்தியா கொண்டுவரப்பட இருக்கிறது. அந்த வகையில் இந்த மாடலின் விலை ரூ. 50 லட்சத்திற்கும் அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. முதற்கட்டமாக 100 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்றும் கியா இந்தியா ஏற்கனவே அறிவித்து விட்டது.
சர்வதேச சந்தைகளில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் கியா EV6 மாடல் 58kWh மற்றும் 77.4kWh என இருவித பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த கார் ரியர்-வீல்-டிரைவ் மற்றும் ஆல்-வீல் டிரைவ் வசதிகளுடன் கிடைக்கிறது. இதன் வெவ்வேறு வெர்ஷன்கள் அதற்கு ஏற்ற செயல்திறன் மற்றும் ரேன்ஜ்களை வழங்குகிறது.
ஓலா நிறுவனத்தின் S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஏற்பட்ட மென்பொருள் கோளாறு காரணமாக 65 வயதான முதியவர் படுகாயம் அடைந்துள்ளார்.
ஜோத்பூர் பகுதியை சேர்ந்த 65 வயது முதியவர் ஓலா S1 ப்ரோ மாடலில் ஏற்பட்ட மென்பொருள் குறைபாடு காரணமாக படுகாயம் அடைந்துள்ளது. இதுபற்றிய தகவல்களை பாதிக்கப்பட்ட முதியவரின் மகள் பல்லவ் மகேஸ்வரி தனது லின்க்டுஇன் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.
அதன்படி ஓலா S1 ப்ரோ ஸ்கூட்டரை ரிவர்ஸ் மோடில் இயக்க முயற்சித்த போது திடீரென ஸ்கூட்டர் அதிவேகமாக ரிவர்ஸ் மோடில் இயங்கி இருக்கிறது. இதில் நிலை தடுமாறிய முதியவர் ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்தார். கீழே விழுந்ததில் முதியவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பத்து தையல்கள் போடப்பட்டுள்ளன. மேலும் அவரது இடபுற தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் இரண்டு பிளேட்கள் வைக்கப்பட்டு இருப்பதாக பாதிக்கப்பட்டவரின் மகன் தெரிவித்து இருக்கிறார்.
ஓலா நிறுவனத்தின் S1 சீரிஸ் ஸ்கூட்டர்கள் ரிவர்ஸ் மோடில் இருக்கும் போது திடீரென அதிவேகமாக செல்கிறது என கடந்த சில மாதங்களாக ஆங்காங்கே குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. முன்னதாக இதேபோன்ற பிரச்சினை காரணமாக மேலும் சிலர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளனர். எனினும், இதுவரை ஓலா நிறுவனம் தனது ஸ்கூட்டர்களில் S1 சீரிஸ் ரிவர்ஸ் மோட் பிரச்சினையை சரி செய்யவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
ரிவர்ஸ் மோட் மட்டுமின்றி ஓலா S1 சீரிஸ் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. ஸ்கூட்டர்கள் தீப்பிடிக்கும் சம்பவங்கள் பற்றி விசாரணையை மேற்கொள்வதாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அறிவித்து இருந்தது. எனினும், இதுபற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.






