என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    • ஸ்கோடா நிறுவனத்தின் ஸ்லேவியா மாடல் கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அரங்கேறியது.
    • ஸ்லேவியா கார் ஸ்கோடா நிறுவனத்தின் முற்றிலும் புதிய செடான் ரக மாடல் ஆகும்.

    வாகன நிறுத்தம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஸ்கோடா ஸ்லேவியா மாடல் திடீரென தீப்பிடித்து எரிந்தது. கடந்த ஜூன் மாத வாக்கில் இந்த சம்பவம் அரங்கேறியது. ஸ்கோடா கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின.

    வீடியோ வைரல் ஆனதைத் தொடர்ந்து ஸ்கோடா நிறுவனம் கார் உரிமையாளரை தொடர்பு கொண்டு சம்பவம் பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளது. சம்பத்தன்று காரின் உரிமையாளர் தனது ஸ்லேவியா மாடலை இரவு 10 மணிக்கு வாகன நிறுத்தத்தில் நஇறுத்தி இருக்கிறார். விடியற்காலை 3 மணி அளவில் கார் தானாக தீப்பிடித்து எரிந்து இருக்கிறது. இது குறித்து வெளியான வீடியோவில் கார் வாகன நிறுத்தத்தின் தரைதளத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது.

    கார் தீப்பிடித்து எரிந்த நிலையில், அதனை நிறுத்த பல முறை முயற்சித்தும் தீ கட்டுக்கள் வரவில்லை. மேலும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்த போதிலும் காரில் பற்றிய தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. கார் வாங்கியதில் இருந்து வெறும் 4 ஆயிரம் கிலோமீட்டர்களே ஓடிய நிலையில், ஸ்லேவியா கார் தீப்பிடித்து எரிந்துள்ளது. இது பற்றிய வீடியோக்கள் வைரலானதைத் தொடர்ந்து ஸ்கோடா நிறுவனம் தரப்பில் உரிமையாளரிடம் அவற்றை நீக்க வலியுறுத்தப்பட்டது.

    பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து காரின் உரிமையாளர் கார் தீப்பிடித்து எரியும் காட்சிகள் அடங்கிய வீடியோவை சமூக வலைதளங்களில் இருந்து எடுத்தார். அதன் ஸ்கோடா ஆட்டோ இந்தியா சார்பில் குழு ஒன்று எரிந்த காரில் சோதனை நடத்தியது. எனினும், ஸ்கோடா தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் பின் காரின் உரிமையாளர் கார் காப்பீடு செய்யப்பட்ட நிறுத்தை தொடர்பு கொண்டிருக்கிறார்.

    நான்கு மாத போராட்டத்திற்கு பின் காரின் உரிமையாளருக்கு காப்பீடு திட்டத்தின் கீழ் புதிய கார் வழங்கப்பட்டு இருக்கிறது. முந்தைய விசாரணையில் கார் உற்பத்தியின் போது தவறுகள் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. எனினும், ஸ்கோடா இந்தியா சார்பில் தவறுக்கு பொறுப்பேற்கப்படவில்லை என்றும் தொடர்ந்து வாக்குவாதம் செய்யப்பட்டதாகவும் காரின் உரிமையாளர் தெரிவித்து இருக்கிறார்.

    • டார்க் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கிராடோஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் வினியோகம் பற்றிய புது தகவல் வெளியாகி உள்ளது.
    • புதிய டார்க் கிராடோஸ் மாடல் இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

    பூனேவை சேர்ந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியாளரான, டார்க் மோட்டார்ஸ் தனது கிராடோஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் வினியோகம் தீபாவளி முதல் துவங்கும் என தெரிவித்து இருக்கிறது. முதற்கட்டமாக மும்பையில் டார்க் கிராடோஸ் வினியோகம் செய்யப்பட இருக்கிறது.

    இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்- டார்க் கிராடோஸ்-ஐ இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. இந்த மோட்டார்சைக்கிள் ஸ்டாண்டர்டு மற்றும் ஆர் என இரண்டு வேரிண்ட்களில் கிடைக்கிறது. இவை முறையே 7.5 கிவோவாட் மற்றும் 9 கிலோவாட் செயல்திறன் வெளிப்படுத்துகின்றன.

    டார்க் கிராடோஸ் ஆர் வேரியண்ட் மணிக்கு அதிகபட்சம் 105 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. ஸ்டாண்டர்டு மாடல் மணிக்கு அதிகபட்சம் 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இரு வேரியண்ட்களின் பேட்டரி ரேன்ஜ் ஒரே மாதிரியே வழங்கப்பட்டு இருக்கிறது.

    கிராடோஸ் மாடல் இகோ மோடில் 120 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் என்றும் சிட்டி மற்றும் ஸ்போர்ட்ஸ் மோடில் முறையே 100 கிலோமீட்டர் மற்றும் 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது. ஆர் வேரியண்ட்டில் உள்ள பேட்டரியை 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய ஒரு மணி நேரமே ஆகும்.

    இந்திய சந்தையில் டார்க் கிராடோஸ் ஸ்டாண்டர்டு மாடல் விலை ரூ. 1 லட்சத்து 22 ஆயிரம் என்றும் ஆர் வேரியண்ட் விலை ரூ. 1 லட்சத்து 37 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் இந்த மாடல் ரெவோல்ட் ஆர்வி400 மாடலுக்கு போட்டியாக அமைகிறது.

    • போக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய டைகுன் மாடல் கார் முன்பதிவு விவரங்கள் வெளியாகி உள்ளது.
    • இத்துடன் கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்து இதுவரை எத்தனை யூனிட்கள் வினியோகம் செய்யப்பட்டன என்ற விவரமும் வெளியாகி உள்ளது.

    போக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் தனது டைகுன் மிட்-சைஸ் எஸ்யுவி மாடலை வாங்க இதுவரை சுமார் 45 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கி இதுவரை 28 ஆயிரம் யூனிட்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    கடந்த மாதம் தான் போக்ஸ்வேகன் நிறுவனம் டைகுன் ஆனிவர்சரி எடிஷன் காரை இந்தியாவில் அறிமுகம் செய்து இருந்தது. இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு ஒரு ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் புதிய ஆனிவர்சரி எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டது. டைகுன் ஆனிவர்சரி எடிஷன் விலை ரூ. 15 லட்சத்து 69 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    போக்ஸ்வேகன் டைகுன் ஆனிவர்சரி எடிஷன் மாடல் வைல்டு செர்ரி ரெட், கர்குமா எல்லோ மற்றும் ரைசிங் புளூ என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. முன்னதாக போக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா குஷக் மாடல்களுக்கான குளோபல் NCAP புள்ளி விவரங்கள் வெளியாகின. இதில் இரு மாடல்களும் ஐந்து நடசத்திர குறியீடுகளை பெற்று அசத்தின.

    இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு ரூ. 1 லட்சத்து 05 ஆயிரம் வரையிலான தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் போக்ஸ்வேகன் டைகுன் மிட்-சைஸ் எஸ்யுவி மாடல் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் எம்ஜி ஆஸ்டர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய செடான் மாடல் கார் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
    • புதிய ஹூண்டய் செடான் மாடல் சொனாடா மாடலின் மேல் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது.

    ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய பிளாக்‌ஷிப் செடான்- கிராண்டியர் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இதே கார் தென் கொரியாவை தவிர மற்ற நாடுகளில் அசெரா என அழைக்கப்பட இருக்கிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய தலைமுறை செடான் மாடல் முந்தைய தலைமுறை கார்களை விட அதிகளவு மாற்றங்களை பெற்று இருக்கிறது. இந்த காரின் வெளிப்பும் மற்றும் இண்டீரியர் விவரங்கள் மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அந்த வகையில் புதிய கிராண்டியர் மாடலின் முன்புறம் 2021 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்டேரியா எம்பிவி போன்றே காட்சியளிக்கிறது. இதில் ஃபுல் விட்த் எல்இடி டிஆர்எல் லைட் பார், ஃபுல் லென்த் கிரில்-இடையில் ஹெட்லைட் கிளஸ்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. பக்கவாட்டில் அழகான தோற்றம், ஃபிளஷ் டோர் ஹேண்டில்கள், மிக சிறிய கட் மற்றும் கிரீஸ்கள் காணப்படுகின்றன.

    வெளிப்புறத்தை போன்றே இண்டீரியரிலும் கிராண்டியர் மாடல் டூயல் ஸ்கிரீன் செட்டப், செண்டர் கன்சோலில் கிளைமேட் செட்டிங்களை மாற்ற டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 3 ஸ்போக் ஸ்டீரிங் வீல் உள்ளது. இது ஒரிஜினல் மாடலில் உள்ளதை போன்றே உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் தொழில்நுட்ப விவரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. முந்தைய மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களை கொண்டிருந்தது.

    அந்த வகையில் இந்த மாடல் பல்வேறு பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். இதில் பிளக்-இன் ஹைப்ரிட் வேரியண்ட் இடம்பெற்று இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த காரின் சர்வகதேச வெளியீடு அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெறும் என தெரிகிறது. இந்த கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    • டொயோட்டா நிறுவனம் முற்றிலும் புதிய இன்னோவா கார் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புதிய இன்னோவா மாடல் இந்திய சந்தையில் தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    ஜப்பான் நாட்டை சேர்ந்த கார் உற்பத்தியாளர் டொயோட்டா, தனது புதிய சி-எம்பிவி மாடல் இன்னோவா ஹைகிராஸ் பெயர் மாருதி சுசுகி நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றிய விவரங்கள் டொயோட்டா பதிவு செய்து இருக்கும் ஒழுங்குமுறை விண்ணப்பத்தில் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

    டொயோட்டா மற்றும் சுசுகி நிறுவனங்கள் இடையே கையெழுத்தாகி இருக்கும் ஒப்பந்தத்தின் படி புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் மாருதி சுசுகி பிராண்டிங்கில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கலாம். மேலும் இந்த மாடல் தற்போது விற்பனை செய்யப்படும் இன்னோவா மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தற்போது டொயோட்டா நிறுவனம் ரிபேட்ஜ் செய்யப்பட்ட மாருதி சுசுகி பலேனோ (கிளான்சா), பிரெஸ்ஸா (அர்பன் குரூயிசர்) மாடல்களை விற்பனை செய்யப்படுகிறது.

    இது மட்டுமின்றி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலும் மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மாடலின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட வேரியண்ட் ஆகும். மேலும் இந்த காரை டொயோட்டா நிறுவனம் கர்நாடக மாநிலத்தில் உள்ள தனது ஆலையில் உற்பத்தி செய்து வருகிறது. புதிய டொயோட்டா சி-எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    • அல்ட்ராவைலட் நிறுவனத்தின் F77 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • முன்னதாக இந்த மோட்டார்சைக்கிளின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்பதிவு விவரம் வெளியாகி உள்ளது.

    பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன ஸ்டார்ட்அப் நிறுவனம் அல்ட்ராவைலட், தனது F77 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அடுத்த மாதம் இந்திய சந்தையில் வெளியிட இருக்கிறது. இந்த நிலையில், அல்ட்ராவைலட் F77 மோட்டார்சைக்கிள் முழு சார்ஜ் செய்தால் 307 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக அல்ட்ராவைலட் F77 மாடல் இந்தியாவில் நவம்பர் 24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அல்ட்ராவைலட் தெரிவித்து இருந்தது.

    மேலும் புதிய அல்ட்ராவைல்ட F77 மாடலுக்கான முன்பதிவு அக்டோபர் 23 ஆம் தேதி துவங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அல்ட்ராவைலட் F77 மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 10 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 2019 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட அல்ட்ராவைலட் F77 பல்வேறு காரணங்களுக்காக விற்பனைக்கு வராமல் இருந்தது. இந்த நிலையில், இதன் விற்பனை அடுத்த மாதம் துவங்க இருக்கிறது.

    முந்தைய திட்டப்படி அல்ட்ராவைலட் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் இரண்டாம் தலைமுறை மாடலை 2024 வாக்கில் அறிமுகம் செய்ய இருந்தது. எனினும், இதன் முதல் தலைமுறை மாடலே அடுத்த மாதம் தான் விற்பனைக்கு வர இருக்கிறது. 2019 அறிமுகம் செய்யப்பட்ட மாடலை விட தற்போது விற்பனைக்கு வரும் மாடலில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.

    2019 மாடலுடன் ஒப்பிடும் போது, F77 மாடலில் தற்போது புதிய பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. இதில் கூடுதல் செல்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் முழு சார்ஜ் செய்தால் 200 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக இந்த மாடல் 130 முதல் 150 கிலோமீட்டர் வரை செல்லும் என அல்ட்ராவைலட் தெரிவித்து இருந்தது.

    • மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் EQE எலெக்ட்ரிக் கார் மாடல் யூரோ NCAP டெஸ்டிங்கில் பெற்ற புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளது.
    • இந்த எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் 590 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் EQE மாடல் யூரோ NCAP டெஸ்டிங்கில் ஐந்து நட்சத்திர புள்ளிகளை பெற்று அசத்தி இருக்கிறது. பெரியவர்கள் பயணிக்கும் போது எவ்வளவு பாதுகாப்பு வழங்குகிறது என்ற சோதனையில் 38-க்கு 36.4 புள்ளிகளை புதிய பென்ஸ் EQE பெற்று இருக்கிறது. இதே போன்று சிறியவர்களுக்கு பாதுகாப்புக்கான சோதனையில் 49-க்கு 45 புள்ளிகளை பெற்றுள்ளது.

    யூரோ NCAP டெஸ்டிங்கில் பென்ஸ் EQE 350+ வேரியண்ட் கலந்து கொண்ட நிலையில், இந்த புள்ளிகள் வலது புறம் மற்றும் இடது புற ஸ்டீரிங் கொண்ட மாடல்களுக்கானது தான். முதல் முறையாக யூரோ NCAP டெஸ்டிங்கில் மெர்சிடிஸ் பென்ஸ் ஆக்டிவ் எமர்ஜென்சி ஸ்டாப் அசிஸ்ட் சோதனை நடத்தப்பட்டது. இந்த அம்சம் வழங்கியதற்காக EQE மாடல் யூரோ NCAP பாராட்டை பெற்றது.

    சாலையில் கடந்து செல்லும் பயனர்களுக்கு இந்த கார் எவ்வளவு பாதுகாப்பானது என்ற சோதனையில் EQE மாடல் 45.1 மற்றும் 13.1 புள்ளிகளை பெற்று இருக்கிறது. இவை பாதசாரிகள் மற்றும் சைக்கிளில் செல்வோருக்கு இந்த கார் எவ்வளவு பாதுகாப்பாக விளங்குகிறது என்பதை வெளிப்படுத்துகிறது.

    புதிய மெர்சிடிஸ் பென்ஸ் EQE 350 4மேடிக் வெர்ஷன் முழு சார்ஜ் செய்தால் 558 கிலோமீட்டர் வரை செல்கிறது. இந்த காரின் செயல்திறன் 765 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. EQE 500 4மேடிக் மாடல் முழு சார்ஜ் செய்தால் 547 கிலோமீட்டர் வரை செல்லும். இதன் டூயல் மோட்டார் செட்டப் 402 ஹெச்பி பவர், 858 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

    AMG மாடலின் பேஸ் வேரியண்ட் EQE 43 4மேடிக் மாடல் டூயல் மோட்டார் செட்டப் 469 ஹெச்பி பவர், 858 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. EQE 43 4மேடிக் எஸ்யுவி முழு சார்ஜ் செய்தால் 488 கிலோமீட்டர் வரை செல்லும். இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.3 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 210 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறது.

    Photo Courtesy: Euro NCAP

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது ஊழியர்களுக்கு கார் மற்றும் பைக் பரிசளித்து வியாபாரி அசத்தி இருக்கிறார்.
    • மோட்டார்சைக்கிள், ஸ்கூட்டர் மற்றும் கார் என ரூ. 1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான பரிசுகளை ஊழியர்களுக்கு கொடுத்தார்.

    தீபாவளி பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்பட இருக்கிறது. பண்டிகை காலத்தை ஒட்டி ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவிப்பது வியாபாரம் செய்வோரின் பழக்கம். அந்த வகையில் சென்னையை சேர்ந்த சல்லானி ஜூவல்லரி மார்ட் கடை உரிமையாளர் ஊழியர்களுக்கு பரிசளிக்கும் வழக்கத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்று இருக்கிறார்.

    நகை கடை உரிமையாளரான ஜெயந்தி லால் சயந்தி தனது ஊழியரகளுக்கு ரூ. 1 கோடியே 20 லட்சம் மதிப்பில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை கொடுத்துள்ளார். இதில் எட்டு நான்கு சக்கர வாகனங்கள், மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் என மொத்தம் 18 இருசக்கர வாகனங்கள் அடங்கும். பரிசு வாகனங்களாக மாருதி சுசுகி ஸ்விப்ட், ஹோண்டா ஆக்டிவா 110 மற்றும் ஹோண்டா ஷைன் போன்ற மாடல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    "அவர்களின் பணியை பாராட்டி, வாழ்க்கையில் சிறப்பு சேர்க்கும் வகையில் இதுபோன்ற பரிசு கொடுத்திருக்கிறோம். வியாபாரத்தின் அனைத்து காலக்கட்டத்திலும் அவர்கள் நாங்கள் லாபம் ஈட்ட உழைத்துள்ளனர். இவர்கள் ஊழியர்கள் மட்டுமில்லாது எங்களின் குடும்பத்தினர் ஆவர். இதன் காரணமாகவே எனது குடும்பத்தாருக்கு செய்வதை போன்றே, எதிர்பாராத பரிசுகளை வழங்க முடிவு செய்தேன்."

    "இவ்வாறு பரிசு அளித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஒவ்வொருத்தரும் இது போன்று அவர்களின் ஊழியருக்கு மதிப்பு கொடுத்து, அவர்களுக்கு பரிசளித்து மேலும் ஊக்கப்படுத்த வேண்டும்," என ஜெயந்தி லால் தெரிவித்து இருக்கிறார்.

    • ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் தனது பாஸ்ட் சார்ஜிங் நெட்வொர்க் விரிவாக்கம் பற்றி புது தகவல் தெரிவித்துள்ளது.
    • எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பாஸ்ட் சார்ஜிங் நெட்வொர்க் விளங்குகிறது.

    இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை கடந்த சில மாதங்களாக கணிசமாக அதிகரித்து வருகிறது. எனினும், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இன்னமும் குறைவாகவே உள்ளது. இதன் காரணமாக எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களும் சார்ஜிங் நெட்வொர்க்-ஐ முடிந்த வரை அதிகப்படுத்தும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

    அந்த வரிசையில் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்தியாவில் இன்ஸ்டால் செய்து இருக்கும் சார்ஜிங் நெட்வொர்க் எண்ணிக்கையில் புது மைல்கல் எட்டியுள்ளது. பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஏத்தர் எனர்ஜி 580-வது ஏத்தர் க்ரிட் பாஸ்ட் சார்ஜிங் மையத்தை வெற்றிகரமாக இன்ஸ்டால் செய்து இருப்பதாக அறிவித்து இருக்கிறது.

    நாடு முழுக்க 56 நகரங்களில் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் பாஸ்ட் சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் கிட்டத்தட்ட 60 சதவீத பாஸ்ட் சார்ஜிங் நெட்வொர்க்குகள் இரண்டு மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் உள்ளன. இந்த நிதியாண்டின் இறுதிக்குள் மேலும் 820 பாஸ்ட் சார்ஜிங் நெட்வொர்க்குகளை அமைக்க ஏத்தர் எனர்ஜி திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த சார்ஜிங் நெட்வொர்க் எண்ணிக்கை 1400 ஆக அதிகரிக்கும்.

    ஏத்தர் நிறுவன சார்ஜிங் மையங்களில் அனைத்து எலெக்ட்ரிக் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சார்ஜ் செய்து கொள்ளலாம். சார்ஜ் செய்வதற்கான கட்டணம் டிசம்பர் 2022 வரை இலவசம் ஆகும். சமீபத்தில் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விடா வி1 மாடலை ஹீரோ மோட்டோகார்ப் அறிமுகம் செய்தது. இந்த மாடலுக்கு ஏத்தர் சார்ஜிங் மையங்களில் சார்ஜ் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    • சிம்பில் எனர்ஜி நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வினியோகம் பற்றி புது தகவல் வெளியாகி உள்ளது.
    • மேலும் இந்த ஸ்கூட்டர் வினியோகத்திற்கு ஏற்பட்ட தாமதத்திற்கான காரணத்தையும் சிம்பில் எனர்ஜி தெரிவித்து இருக்கிறது.

    சிம்பில் எனர்ஜி நிறுவனம் தனது சிம்பில் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வினியோகம் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் துவங்கும் என தெரிவித்து இருக்கிறது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் பாதுகாப்பு விதிமுறைகள் காரணமாக வினியோகம் தாமதமானது என சிம்பில் எனர்ஜி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    அந்த வகையில் சிம்பில் ஒன் மாடலில் உள்ள பேட்டரிகள் புது பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருக்கும் என சிம்பில் எனர்ஜி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் சிம்பில் ஒன் ஸ்கூட்டரை முன்பதிவு செய்தவர்களிடம் சிம்பில் எனர்ஜி நிறுவனம் வருத்தம் தெரிவித்து இருக்கிறது. மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காகவே ஸ்கூட்டர் வினியோகம் தாமதமாகி வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.

    இந்திய சந்தையில் சிம்பில் ஒன் ஸ்கூட்டரின் விலை ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் என துவங்குகிறது. இது சிம்பில் ஒன் ஸ்டாண்டர்டு வேரியண்ட் ஆகும். இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 45 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    சிம்பில் எனர்ஜி ஸ்கூட்டரின் டாப் எண்ட் மாடல் முழு சார்ஜ் செய்தால் 300 கிலோமீட்டர் வரை செல்லும் என சிம்பில் எனர்ஜி தெரிவித்து இருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் முன்பதிவு அந்நிறுவன வலைதளத்தில் நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 1947 ஆகும்.

    • ஒலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.
    • டெலிவரி செய்யப்பட்ட ஆறு நாட்களில் ஒலா S1 ப்ரோ சஸ்பென்ஷன் உடைந்து விழுந்திருக்கிறது.

    ஒலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. சந்தையில் பெரும் எதிர்பார்ப்புடன் அறிமுகம் செய்யப்பட்ட ஒலா S1 சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்றது. எனினும், மென்பொருள் மற்றும் மெக்கானிக்கல் என ஏராளமான பிரச்சினைகளில் ஒலா எலெக்ட்ரிக் சிக்கித் தவித்து வருகிறது.

    அறிமுகம் செய்யப்பட்டது முதல் ஏராளமான பிரச்சினைகள் ஏற்பட்டு வரும் நிலையில், முன்புற சஸ்பென்ஷன் உடைந்து விழுவதும் பிரச்சினையாக இருந்து வருகிறது. இந்த வரிசையில் மற்றொரு ஒலா S1 ப்ரோ சஸ்பென்ஷன் உடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த சம்பவம் பற்றிய முழு விவரங்களை ஸ்கூட்டரை பயன்படுத்தி வந்த சஞ்சீவ் ஜெயின் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்து இருக்கிறார். ஒலா S1 ப்ரோ ஸ்கூட்டரை டெலிவரி பெற்று ஆறாவது நாளில் அதன் முன்புற சஸ்பென்ஷன் உடைந்து விட்டதாக சஞ்சீவ் ஜெயின் தெரிவித்து இருக்கிறார். குற்றச்சாட்டுடன் உடைந்த ஸ்கூட்டரின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

    முற்றிலும் புதிதாக காட்சியளிக்கும் ஸ்கூட்டர் பள்ளத்தில் இறங்கியதும் உடைந்து விட்டதாக சஞ்சீவ் தெரிவித்துள்ளார். முன்னதாக பலர் தங்களின் ஸ்கூட்டர் உடைந்ததாக குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் பல யூனிட்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவங்களும் அரங்கேறி உள்ளன.

    • சீனாவை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர் துபாயில் தனது முதல் பறக்கும் கார் சோதனையை நடத்தியது.
    • முதற்கட்ட சோதனையில் பறக்கும் கார் ஆளில்லாமல் 90 நிமிடங்கள் வெற்றிகரமாக இயக்கப்பட்டது.

    சீனாவை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர் பெங் இன்க் (Xpeng Inc) ஐக்கிய அரபு அமீரகத்தில் தனது முதல் பறக்கும் காரை வெளியிட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து மேலும் பல்வேறு நாடுகளில் பறக்கும் காரை வெளியிட பெங் இன்க் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. பெங் இன்க் உருவாக்கிய X2 பறக்கும் கார் செங்குத்தாக டேக்-ஆப் மற்றும் லேண்டிங் செய்யும் திறன் கொண்டிருக்கிறது.

    இதில் உள்ள எட்டு ப்ரோபெல்லர்கள் வாகனத்தின் மூலையில் பொருத்தப்பட்டு இருக்கிறது. சோதனை முயற்சியாக துபாயில் இந்த பறக்கும் கார் 90 நிமிடங்கள் ஆளின்றி இயக்கப்பட்டது. அடுத்த தலைமுறை பறக்கும் கார்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாடல் இது என பெங் இன்க் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    "சர்வதேச சந்தையில் களமிறங்குவதற்கான பணிகளை படிப்படியாக மேற்கொண்டு வருகிறோம். உலகில் புதுமைகளை புகுத்துவதில் மிகவும் முன்னோடியாக துபாய் விளங்குகிறது. இதன் காரணமாகவே பறக்கும் கார் சோதனையை இங்கு மேற்கொள்ள முடிவு செய்தோம்," என பெங் இன்க் நிறுவனத்தின் பொது மேலாளர் மிங்குவான் கியூ தெரிவித்துள்ளார்.

    ×