என் மலர்
ஆட்டோ டிப்ஸ்
- பிஒய்டி நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் இந்திய முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.
- புதிய பிஒய்டி எலெக்ட்ரிக் கார் மணிக்கு 0 முதல் 100 கிமீ வேகத்தை 7.3 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது.
பிஒய்டி நிறுவனத்தின் அட்டோ 3 எலெக்ட்ரிக் கார் விவரங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. புதிய பிஒய்டி அட்டோ 3 இந்தியாவில் அடுத்த ஆண்டு வெளியிடப்பட இருக்கிறது. புதிய பிஒய்டி அட்டோ 3 காரின் முதல் 500 யூனிட்களுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த யூனிட்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் வினியோகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.
2021 வாக்கில் காட்சிப்படுத்தப்பட்ட பிஒய்டி அட்டோ 3 இந்திய சந்தையில் பிஒய்டி நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் வாகனம் ஆகும். இந்தியாவில் பிஒய்டி அட்டோ 3 மாடல் 60.48 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் ஆப்ஷனில் கிடைக்கிறது. இந்த கார் நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் முன்புற வீல் டிரைவ் பவர்டிரெயின் ஆப்ஷனில் கிடைக்கிறது.

இந்த காரில் பெரிய க்ரோம் கிரில், எல்இடி ஹெட்லேம்ப்கள், டிஆர்எல்கள், ஸ்போர்ட் பம்ப்பர், 18 இன்ச் வீல்கள், பூட் லிட் மீது பிஒய்டி லோகோ இடம்பெற்று இருக்கிறது. ரூ. 30 லட்சம் பட்ஜெட்டில் பெரிய வீல்பேஸ் கொண்ட எலெக்ட்ரிக் கார் மாடல் என்ற பெருமையை அட்டோ 3 பெற்றுள்ளது.
பிஒய்டி அட்டோ 3 மாடலில் கீலெஸ் எண்ட்ரி, போர்டபில் கீ கார்டு, மல்டி-கலர் ஆம்பியண்ட் லைட்டிங், வித்தியாசமான வடிவங்களில் டேஷ்போர்டு, ஏசி வெண்ட்கள், டோர் ஹேண்டில் மற்றும் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் 12.8 இன்ச் டிஸ்ப்ளே, நேவிகேஷன் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் அடுத்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சேவைகளுக்கான அப்டேட் வழங்கப்படுகிறது.
அம்சங்களை பொருத்தவரை பானரோமிக் சன்ரூப், கிளைமேட் கண்ட்ரோல், பவர்டு முன்புற இருக்கைகள், ஒன்-டச் எலெக்ட்ரிக் ஒபனிங்/க்ளோசிங் டெயில்கேட், ADAS சூட், பாதுகாப்பிற்கு ஏழு ஏர்பேக், ஏபிஎஸ், இஎஸ்பி, ஹில்-ஹோல்டு அசிஸ்ட், 360 டிகிரி கேமரா, ADAS சிஸ்டத்திற்காக ஆறு ரேடார்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் ADAS சூட் - அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், ஆட்டோமேடிக் எமர்ஜென்சி பிரேக்கிங், பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன், லேன் டிபாச்சர் வார்னிங், லேன் கீப் அசிஸ்ட் போன்ற அம்சங்களை வழங்குகிறது.
இந்திய சந்தையில் புதிய பிஒய்டி அட்டோ 3 மாடலில் 60.48 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படுகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 521 கிலோமீட்டர் வரை செல்லும் என சான்று பெற்று இருக்கிறது. இத்துடன் 7 கிலோவாட் ஹோம் சார்ஜர், 3 கிலோவாட் போர்டபில் சார்ஜர் வழங்கப்படுகிறது. இதன் 7 கிலோவாட் ஹோம் சார்ஜர் காரை 0 முதல் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 9.5 முதல் 10 மணி நேரம் ஆகும். 80 கிலோவாட் டிசி சிசிஎஸ் 2 பாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தும் போது 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 50 நிமிடங்கள் ஆகும்.
- ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் தனது எக்ஸ்டிரீம் 160R மோட்டார்சைக்கிளை அப்டேட் செய்ய இருக்கிறது.
- சமீபத்தில் தான் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஸ்டெல்த் எடிஷன் 2.0 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்து இருந்தது.
ஹீரோ எக்ஸ்டிரீம் 160R புது மாடல் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்தியாவில் ஸ்டெல்த் எடிஷன் 2.0 மாடல் அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து எக்ஸ்டிரீம் 160R புது மாடல் சோதனை நடைபெற்று வருகிறது. ஸ்பை படங்களில் புது மாடல் பற்றிய அதிக விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், இந்த மாடலில் அதிக மாற்றங்கள் இருக்காது என்றே கூறப்படுகிறது.
புதிய 2023 ஹீரோ எக்ஸ்டிரீம் 160R மாடலில் புது இண்டிகேட்டர், ஹாரன் ஸ்விட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் புதிய ஸ்டெல்த் 2.0 எடிஷனில் வழங்கப்பட்ட ப்ளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் சில அம்சங்கள் 2023 எக்ஸ்டிரீம் 160R மாடலிலும் வழங்கப்படலாம்.

ஹீரோ எக்ஸ்டிரீம் 160R மாடலில் 163சிசி ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 15.2 பிஎஸ் பவர், 14 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 2023 மாடலின் என்ஜினில் மாற்றங்கள் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஹீரோ எக்ஸ்டிரீம் 160R மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 18 ஆயிரத்து 616, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் புதிய எக்ஸ்டிரீம் 160R விலை சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.
Photo Courtesy: Rushlane
- போக்குவரத்து விதிமீறல் மற்றும் போலீஸ் நடவடிக்கை காரணமாக உலகெங்கிலும் பல முறை விசித்திர சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.
- அந்த வகையில் இருசக்கர வாகனத்தில் வந்தவரை போலீஸ் நிறுத்திய சம்பவம் விசித்திர செயல்கள் பட்டியலில் இடம்பிடித்து இருக்கிறது.
சாலை பயணங்களின் போது விசித்திர சம்பவங்கள் அரங்கேறுவது சாதாரண நிகழ்வாக மாறி விட்டன. அந்த வகையில், ஐதராபாத் நகரில் அரங்கேறிய சம்பவம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து இருக்கிறது. ஐதராபாத் சாலையில் தவறான வழியில் நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஐதராபாத்-இல் உள்ள அமீர்பெட் பகுதியில் நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை விதிமீறி இயக்கி இருக்கிறார். இவ்வாறு சென்று கொண்டிருந்ததை போலீஸ் அதிகாரி ஒருவர் பார்த்தார். உடனே தவறான வழியில் வந்த நபரை இருசக்கர வாகனத்துடன் தடுத்து நிறுத்தினார். இந்த சம்பவத்தில் போலீஸ் அதிகாரி மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த எஸ் அசோக் என்ற நபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த எஸ் அசோக் திடீரென எரிபொருள் கொண்டு வந்து தனது மோட்டார்சைக்கிள் மீது ஊற்றி அதற்கு தீ வைத்து எரித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. ஐதராபாத் நகரில் போக்குவரத்து போலீசார் சட்டவிரோத பார்க்கிங் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் இதுவரை சுமார் 472 பேரிடம் இருந்து ரூ. 3 லட்சத்து 65 ஆயிரம் வரை அபராதம் வசூலித்துள்ளனர்.
"போக்குவரத்து போலீசால் தடுத்து நிறுத்தப்பட்ட எஸ் அசோக் தவறான வழியில் இருசக்கர வாகனத்தை ஓட்டி பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினார். இவரை போலீசார் பில்லர் நம்பர் 1053 அருகில் தடுத்து நிறுத்தினர்," என காவல் துறை இணை ஆய்வாளர் ஏவி ரங்கநாத் தெரிவித்து இருக்கிறார்.
- ஹோண்டா நிறுவனத்தின் புதிய விற்பனையகம் கேரளா மாநிலத்தில் திறக்கப்பட்டு உள்ளது.
- இந்த விற்பனையகம் தண்ணீரில் மிதக்கும் வகையில் மிகவும் வித்தியாசமாக அமைக்கப்பட்டு இருக்கிறது.
ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களின் வாகனங்களை விளம்பரப்படுத்த பல்வேறு வித்தியாசமான வழிமுறைகளை கையாள்வது வாடிக்கையான விஷயம் தான். இதை ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
மிகவும் புதிதாகவும், வித்தியாசமாகவும் அமையும் வகையில் ஹோண்டா நிறுவனத்தின் மிதக்கும் விற்பனையகம் கேரளாவில் திறக்கப்பட்டு உள்ளது. இந்த மிதக்கும் விற்பனையகம் தண்ணீரில் ஏழு நாட்கள் பயணம் செய்து 15-க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு செல்கிறது.

"உள்ளூர் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் புதுமையான அனுபவத்தை உருவாக்கும் நோக்கில் அவர்களுக்கு ஏற்ற கதையை தெரிவிக்க விரும்பினோம். மிதக்கும் விற்பனையகம் மூலம், வாடிக்கையாளர்களுடன் எங்களின் தொடர்பு மேலும் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களுடன் இணைப்பில் இருப்பதில் ஹோண்டா சிறந்து விளங்கும் நிலையில், இந்த முயற்சி அதனை மேலும் வலுப்படுத்தும்," என ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிர்வாக இயக்குனர், தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி அடுஷி ஒகடா தெரிவித்து இருக்கிறார்.
முன்னதாக ஆகஸ்ட் மாத வாக்கில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஹோண்டா ஆக்டிவா 6ஜி மாடலின் பிரீமியம் எடிஷனை அறிமுகம் செய்து இருந்தது. இந்த ஸ்கூட்டர் தங்க நிற வீல்கள், பேட்ஜ்கள் மற்றும் கோல்டு பினிஷ் செய்யப்பட்டு இருந்தது. இதன் விலை ரூ. 74 ஆயிரத்து 400, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- டொயோட்டா நிறுவனத்தின் ஹிலக்ஸ் பிக்கப் டிர்க் மாடல் இந்திய சந்தையில் இருந்தே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- ஒரு இந்திய மாநிலத்தில் மட்டும் டொயோட்டா ஹிலக்ஸ் விற்பனை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
டொயோட்டா நிறுவனம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தனது ஹிலக்ஸ் பிக்கப் டிரக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. இந்தியாவில் விற்பனைக்கு வந்ததில் இருந்தே ஹிலக்ஸ் மாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எனினும், டொயோட்டா நிறுவனம் கேரளா மாநிலத்தில் மட்டும் இதுவரை ஹிவக்ஸ் மாடலின் ஒரு யூனிட்டை கூட விற்பனை செய்ய முடியவில்லை.
மாடிபை செய்யப்பட்ட வாகனங்கள் அதிகம் புழக்கத்தில் உள்ள மாநிலங்களில் ஒன்றாக கேரளா விளங்குகிறது. எனினும், இந்த மாநிலத்தில் விதிமுறைகள் மிகவும் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. குறிப்பாக கேரளா மாநில மோட்டார் வாகன துறை விதிகளை கடுமையாக பின்பற்றுகிறது. பல்வேறு விதிமுறைகளில் சில தேவையற்றதாகவும் பார்க்கப்படுகிறது. எனினும், கேரளா மோட்டார் வாகன துறை விதிகளில் எவ்வித சமரசமும் செய்வதில்லை.

இந்தியாவில் பிக்கப் டிரக் வாகனங்களை தனியார் வாகனங்களாக பதிவு செய்யும் வழக்கம் நடைமுறையில் இல்லை. மேலும் இத்தகைய வாகனங்களில் ஒரு டன் எடையை சுமக்கும் திறன் இருப்பின், அவற்றை நிச்சயம் தனியார் வாகனமாக பதிவு செய்ய முடியாது. இதன் காரணமாகவே ஏராளமான மஹிந்திரா பொலிரோ கேம்ப்பர் பிக்கப் எஸ்யுவிக்கள் தனியார் வாகனமாக பதிவு செய்யப்படுவதில்லை.
டொயோட்டா ஹிலக்ஸ் மாடலுக்கு நேரடி போட்டியாக இசுசு நிறுவனத்தின் வி கிராஸ் பிக்கப் எஸ்யுவி விளங்குகிறது. இந்த மாடலை இந்தியாவில் தனியார் வாகனமாக பதிவு செய்ய முடியும். இதையொட்டி கேரளா மோட்டார் வாகன துறை இசுசு நிறுவனத்திற்கு சாதகமாக செயல்படுவதாக கூறிவிட முடியாது. ஏனெனில், இசுசு நிறுவனம் மோட்டார் வாகன துறை விதிகளுக்கு ஏற்ற வகையில் தனது வி கிராஸ் மாடலின் திறனை 215 கிலோவாக நிர்ணயம் செய்துள்ளது.
இதன் காரணமாக இசுசு வி கிராஸ் மாடலை இந்தியாவில் தனியார் வாகனமாக பதிவு செய்து பயன்படுத்த முடியும். இதற்கு எவ்வித தடையும் விதிக்க முடியாது. இந்திய சந்தையில் டொயோட்டா ஹிலக்ஸ் பிக்கப் டிரக் விலை ரூ. 33 லட்சத்து 99 ஆயிரம் என துவங்கி அதிகபட்சமாக டாப் எண்ட் மாடல் விலை ரூ. 36 லட்சத்து 80 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அக்டோபர் மாதத்திற்கான சலுகை விவரங்களை வெளியிட்டு உள்ளது.
- இந்த சலுகைகள் ஒவ்வொரு பகுதி, கார் மாடல், வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும் என ரெனால்ட் தெரிவித்து இருக்கிறது.
ரெனால்ட் நிறுவன கார் மாடல்களை வாங்குவோருக்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சிறப்பு சலுகைகள் பண்டிகை காலத்தை ஒட்டி அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், ரெனால்ட் கார் மாடல்களுக்கு அதிகபட்சமாக ரூ. 50 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகள் எக்சேன்ஜ், தள்ளுபடி மற்றும் கார்ப்பரேட் பலன்கள் வடிவில் வழங்கப்படுகின்றன.
விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள், தங்களுக்கு அருகாமையில் உள்ள ரெனால்ட் விற்பனை மையம் சென்று தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகை விவரங்களை அறிந்து கொள்ளலாம். இந்த சலுகைகள் 2022, அக்டோபர் 31 ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளன. மேலும் சலுகை பலன்கள் கார் மாடல், வேரியண்ட் மற்றும் ஒவ்வொரு பகுதிக்கு ஏற்ப வேறுபடும்.

அக்டோபர் மாதத்தில் ரெனால்ட் டிரைபர் மாடலை வாங்குவோருக்கு அதிகபட்சமாக ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இதில் RXT, RXZ வேரியண்ட்களுக்கு ரூ. 15 ஆயிரம் தள்ளுபடி, RXL மற்றும் லிமிடெட் எடிஷன் வேரியண்ட்களுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான எக்சேன்ஜ் பலன்கள், ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் பலன்கள் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.
ரெனால்ட் க்விட் மாடலை வாங்குவோருக்கு ரூ. 35 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இதில் ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி அனைத்து வேரியண்ட்களுக்கும் வழங்கப்படுகிறது. இத்துடன் 1.0 லிட்டர் மற்றும் 0.8 லிட்டர் வேரியண்ட்களுக்கு முறையே ரூ. 15 ஆயிரம் மற்றும் ரூ. 10 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. மேலும் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு ரூ. 10 ஆயிரம் வரை கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
புதிய ரெனால்ட் கைகர் மாடலை வாங்குவோருக்கு க்விட் மற்றும் டிரைபர் மாடல்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன. மேலும் கைகர் காம்பேக்ட் எஸ்யுவி மாடலுக்கு தள்ளுபடி அறிவிக்கப்படவில்லை. எக்சேன்ஜ் சலுகையின் கீழ் ரூ. 10 ஆயிரம் வரையிலான பலன்களை பெற முடியும்.
- கியா நிறுவனத்தின் கேரன்ஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- எம்பிவி பிரிவில் அறிமுகம் செய்யப்பட்ட கேரன்ஸ் விலை மிகவும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
கியா இந்தியா நிறுவனம் தனது கேரன்ஸ் எம்பிவி மாடலை இந்திய சந்தையில் ரிகால் செய்ய முடிவு செய்துள்ளது. கேரன்ஸ் எம்பிவி மாடலில் உள்ள காற்றுப்பை மென்பொருளில் (Air Bag Control module) பிழை கண்டறியப்பட்டதே ரிகால் செய்வதற்கான காரணம் என கியா தெரிவித்து இருக்கிறது. இந்த பிழை காரின் எத்தனை யூனிட்களில் ஏற்பட்டு இருக்கிறது என்ற விவரங்களை கியா வெளியிடவில்லை.
எனினும், கேரன்ஸ் காரில் ஏற்பட்டு இருக்கும் பிழை மென்பொருள் அப்டேட் மூலம் சரி செய்யப்பட்டு விடும். இதற்காக வாடிக்கையாளரிடம் இருந்து எவ்வித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. பாதிக்கப்பட்ட யூனிட்களை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களை கியா தொடர்பு கொண்டு காரில் ஏற்பட்ட பிரச்சினை குறித்து தகவல் தெரிவிக்கப்படும்.
இது மட்டுமின்றி கேரன்ஸ் பயன்படுத்துவோர் தங்களின் டீலர்களை தொடர்பு கொண்டும் காரில் பிரச்சினை ஏற்பட்டு இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அதனை சரி செய்யும் முயற்சிகளை மேற்கொள்ளலாம். மேலும் கியா இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளம் அல்லது கியா செயலி மூலமாகவும் தங்களின் வாகனம் பாதிக்கப்பட்டு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளலாம்.
- டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
- எதிர்கால எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல்களில் டாடா நிறுவனம் 4-வீல் டிரைவ் வசதியை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போதைய மாடல்கள் தவிர, முற்றிலும் புதிய மாடல்களை அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.
இது பற்றிய பிடிஐ வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது எதிர்கால எலெக்ட்ரிக் வாகன மாடல்களில் 4-வீல் டிரைவ் வசதியை வழங்க இருப்பதாக தெரியவந்துள்ளது.

"எங்களின் குறிக்கோள் எலெக்ட்ரிக் வாகனங்களில் அதனை வழங்க முயற்சிப்பதில் இருக்கும். எங்களது எதிர்கால எஸ்யுவி மாடல்களின் எலெக்ட்ரிக் வெர்ஷனில் இந்த வசதியை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட இருக்கிறோம்," என டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகனங்கள் பிரிவு நிர்வாக இயக்குனர், சைலேஷ் சந்திரா தெரிவித்து இருக்கிறார்.
எனினும், எந்தெந்த மாடல்களில் 4-வீல் டிரைவ் வசதி வழங்கப்படும் என்பது பற்றி டாடா மோட்டார்ஸ் இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை. நெக்சானை விட பெரிய எஸ்யுவி-க்களில் மட்டுமே 4-வீல் டிரைவ் வசதி வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். அந்த வகையில் டாடா கர்வ் எலெக்ட்ரிக் வாகன கான்செப்டில் இந்த வசதி வழங்கப்படலாம். இது மிட்-சைஸ் எஸ்யுவி ஆகும்.
- மாருதி சுசுகி நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடிகளை அறிவித்து இருக்கிறது.
- கார் மாடல்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் பண்டிகை காலக்கட்டத்தை குறிவைத்து அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.
மாருதி சுசுகி நிறுவனம் ஆல்டோ K10 ஹேச்பேக் காருக்கு ரூ. 25 ஆயிரம் வரையிலான பலன்களை வழங்குகிறது. ஆல்டோ மட்டுமின்றி பல்வேறு இதர மாடல்களுக்கும் சிறப்பு சலுகைகளை மாருதி சுசுகி அறிவித்து இருக்கிறது. பண்டிகை காலக்கட்டத்தை குறிவைத்தே இந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
சலுகைகளை பொருத்தவரை மாருதி சுசுகி ஆல்டோ 800 மாடலுக்கு ரூ. 29 ஆயிரம் மதிப்புள்ள பலன்களும், வேகன் ஆர் மாடலுக்கு ரூ. 40 ஆயிரம் வரையிலான பலன்களும் வழங்கப்படுகின்றன. மாருதி சுசுகி செலரியோ மற்றும் எஸ் பிரெஸ்ஸோ மாடல்களுக்கு ரூ. 59 ஆயிரம் மதிப்புள்ள பலன்கள் வழங்கப்படுகின்றன.

ஆல்டோ 800 மாடல் விற்பனை படிப்படியாக நிறுத்தப்பட்ட பின் மாருதி சுசுகி நிறுவனத்தின் குறைந்த விலை ஹேச்பேக் மாடலாக புதிய ஆல்டோ K10 மாறும். தற்போது புதிய மாருசி சுசுகி ஆல்டோ K10 ஹேச்பேக் மாடல்- சாலிட் வைட், சில்கி சில்வர், கிரானைட் கிரே, சிஸ்லிங் ரெட், ஸ்பீடி புளூ மற்றும் எர்த் கோல்டு என ஆறு விதமான நிறங்களில் கிடைக்கிறது. மேலும் புதிய 1000 சிசி ஹேச்பேக் மாடல் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
2022 மாருதி சுசுகி ஆல்டோ K10 மாடலில் 1.0 லிட்டர், நேச்சுரல் ஆஸ்பிரேட் செய்யப்பட்ட 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 66 ஹெச்பி பவர், 89 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு AMT யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.
- டொயோட்டா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடல் விற்பனை நடைபெற்று வருகிறது.
- இந்திய சந்தையில் புதிய அர்பன் குரூயிசர் ஹைரைடர் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 18 லட்சத்து 99 ஆயிரம் ஆகும்.
டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலை சமீபத்தில் அறிமுகம் செய்தது. மேலும் இந்த காரின் விலை விவரங்கள் சில தினங்களுக்கு முன்பு தான் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் புதிய அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடல் விலை ரூ. 10 லட்சத்து 48 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 18 லட்சத்து 99 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
விலை விவரங்கள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து புதிய அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலை வாங்கியவர்களுக்கு காரை வினியோகம் செய்யும் பணிகளை டொயோட்டா துவங்கி உள்ளது. இந்திய சந்தையில் புதிய டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடல் E, S, G மற்றும் V என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. மேலும் இந்த கார் மைல்டு மற்றும் ஸ்டிராங் ஹைப்ரிட் என இரண்டு வித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

இதன் மைல்டு ஹைப்ரிட் வெர்ஷனில் உள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 102 ஹெச்பி பவர், 136.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு உள்ளன. ஸ்டிரீங் ஹைப்ரிட் வெர்ஷனில் உள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் சேர்ந்து 114 ஹெச்பி பவர், 144 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன.
புதிய ஹைரைடர் மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்கள், 17 இன்ச் அலாய் வீல்கள், பானரோமிக் சன்ரூப், டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, 9 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, வெண்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள், லெதர் இருக்கை மேற்கவர்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இந்திய சந்தையில் புதிய டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடல் ஹூண்டாய் கிரெட்டா, ஸ்கோடா குஷக், போக்ஸ்வேகன் டைகுன், கியா செல்டோஸ் மற்றும் மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
- டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முற்றிலும் புதிய ஹேரியர் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- இந்த கார் அடுத்த ஆண்டு வாக்கில் விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2019 ஜனவரி மாத வாக்கில் ஹேரியர் எஸ்யுவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. அறிமுகம் செய்ததில் இருந்து அவ்வப்போது புது அம்சங்கள் மூலம் ஹேரியர் மாடல் அப்டேட் செய்யப்பட்டு வந்தது. இது தவிர இந்த காரின் நிற ஆப்ஷன்கள் அவ்வப்போது மாற்றப்பட்டு வந்தன. அந்த வரிசையில் ஹேரியர் ஜெட் எடிஷன் மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், டாடா ஹேரியர் புது வேரியண்ட் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. டாடா ஹேரியர் பேஸ்லிப்ட் மாடல் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. எனினும், கார் எப்படி காட்சியளிக்கும் என ஓரளவுக்கு தெரியவந்துள்ளது. அந்த வகையில் பேஸ்லிப்ட் மாடலின் முன்புற கிரில் மாற்றப்பட்டு இருக்கிறது.

இத்துடன் எல்இடி டிஆர்எல்கள் மேம்படுத்தப்பட்டு, புதிய அலாய் வீல் டிசைன் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த காரின் பம்ப்பர் ரிடிசைன் செய்யப்பட்ட கேசிங் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இதன் கேபினில் மேம்மபட்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, ரிவைஸ்டு இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
புதிய டாடா ஹேரியர் பேஸ்லிப்ட் மாடலிலும் 2.0 லிட்டர் க்ரியோடெக் டீசல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த என்ஜினுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம்.
Photo Courtesy: Zigwheels
- ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- புதிய விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய புது விவரங்களை ஹீரோ மோட்டோகார்ப் வெளியிட்டு உள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை அக்டோபர் 7 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீட்டை உணர்த்தும் டீசர்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், தற்போது வெளியாகி இருக்கும் டீசரில் விடா எலெகெட்ரிக் ஸ்கூட்டர் போர்டபில் பேட்டரிகளை கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.
அந்த வகையில், இந்த ஸ்கூட்டரின் பேட்டரியை எங்கு வேண்டுமானாலும் சார்ஜ் செய்து கொள்ள முடியும். மேலும் இந்த ஸ்கூட்டர் மாடல் சந்தையில் கடும் போட்டியை ஏற்படுத்தும் விலையில் அறிமுகமாகும் என தெரிகிறது. இந்திய சந்தையில் பிரீமியம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் பிரிவில் ஏத்தர், டிவிஎஸ், ரெவோல்ட் மற்றும் பஜாஜ் என குறைந்த நிறுவனங்களே வாகனங்களை விற்பனை செய்து வருகின்றன.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தாய்வானை சேர்ந்த கோகோரோ நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. கோகோரோ நிறுவனம் பேட்டரி மாற்றும் வசதியை தாய்வானில் வழங்கி வருகிறது. அந்த வகையில், தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு கோகோரோ பேட்டரி மாற்றும் வசதியை பெற ஹீரோ மோட்டோகார்ப் திட்டமிட்டு இருக்கிறது. பேட்டரியை கழற்றும் வசதி இருப்பதால், பயனர்கள் இவற்றை வீடுகளிலும் சார்ஜ் செய்து கொள்ளலாம்.
இதுதவிர ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துடன் இணைந்து பாஸ்ட் சார்ஜிங் மற்றும் பேட்டரி மாற்றும் மையங்களை கட்டமைக்க திட்டமிட்டுள்ளது. விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நகர பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்படுகிறது. மேலும் இதன் விலை ரூ. 1 லட்சம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.






