என் மலர்
ஆட்டோமொபைல்ஸ் - Archive
கே.டி.எம். நிறுவனத்தின் 2021 ஆர்சி சீரிஸ் மாடல்களின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
கே.டி.எம். இந்தியா நிறுவனம் 2021 ஆர்சி சீரிஸ் மாடல்கள் விரைவில் அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. 2021 ஆர்சி சீரிசில் ஆர்சி125, ஆர்சி200 மற்றும் ஆர்சி390 மாடல்கள் இடம்பெற்று இருக்கின்றன. ஏற்கனவே இவை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டன. எனினும், இந்திய மாடல்களின் அம்சங்களில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2021 ஆர்சி 125 மாடலின் சர்வதேச வேரியண்டில் வழங்கப்பட்டு இருக்கும் அனைத்து அம்சங்களும் இருக்காது. மாறாக இதில் விலையை குறைக்கும் நோக்கில் சில அம்சங்கள் மாற்றப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. ஆர்சி 200 மாடலில் ஹாலோஜென் ஹெட்லைட், எல்.சி.டி. ஸ்கிரீன் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

2021 ஆர்சி390 மாடல் அம்சங்கள் மட்டும் சர்வதேச வேரியண்டில் வழங்கப்பட்டு இருக்கும் பெரும்பாலான அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. இதன் இந்திய வேரியண்டில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன்புற போர்க்குகள் நீக்கப்பட்டு இருக்கலாம்.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் மாடல் ஆடம்பர வசதிகளுடன், அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கும்.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடலுக்கான டீசரை வெளியிட்டது. இதனை ரோல்ஸ் ராய்ஸ் மோட்டார் கார்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி டோஸ்டென் முல்லர் அட்வோஸ் லின்க்டு-இன் தளத்தில் பதிவிட்டார்.
115 ஆண்டு பழைமை மிக்க நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் தனது ஸ்பெக்டர் மாடல் கொண்டு எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் களமிறங்குகிறது.

'துணிவு மிக்க புதிய எதிர்காலத்தில் பெரும் நம்பிக்கையுடன் கால் பதிக்கிறோம். எலெக்ட்ரிக் டிரைவ் மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களை விட எங்களுக்கு கச்சிதமாக பொருந்தும். இது மிகவும் அமைதியாக, சீராக, இழுவிசையை உடனடியாக வெளிப்படுத்தி அதிக ஆற்றலை உருவாக்கும்,' என ரோல்ஸ் ராய்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்தார்.
இந்த காலத்து வாடிக்கையாளர்கள் எலெக்ட்ரிக் வாகனத்தில் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களையும் ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் கொண்டிருக்கும், என அவர் மேலும் தெரிவித்தார்.
எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புதிய ஆஸ்டர் மாடல் கார் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.
எம்ஜி ஆஸ்டர் மாடல் இந்தியாவில் அடுத்த மாதம் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த காரில் வழங்கப்பட இருக்கும் பெரும்பாலான அம்சங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன. அந்த வகையில் எம்ஜி ஆஸ்டர் இருவித பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
புதிய எம்ஜி ஆஸ்டர் மாடல்- ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட் எஸ்.டி.டி., ஸ்மார்ட், ஷார்ப் எஸ்.டி.டி., ஷார்ப், சேவி மற்றும் சேவி ரெட் என எட்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. இதில் முதல் ஆறு வேரியண்ட்களில் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின், மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

எம்ஜி ஆஸ்டர் லெவல் 2 ஆட்டோனோமஸ் தொழில்நுட்பம் கொண்ட எம்ஜி நிறுவனத்தின் முதல் மாடல் ஆகும். இதில் உள்ள ஏ.டி.ஏ.எஸ். சிஸ்டம் ஆட்டோமேடிக் எமர்ஜன்சி பிரேக்கிங், லேண் கீப் அசிஸ்ட், ரியர் டிரைவ் அசிஸ்ட், ரியர் கிராஸ் டிராபிக் அலெர்ட் என பல்வேறு அம்சங்களை வழங்குகிறது.
ஜாகுவார் நிறுவனத்தின் ஐ பேஸ் பிளாக் எலெக்ட்ரிக் கார் முன்பதிவு இந்தியாவில் துவங்கி இருக்கிறது.
பிரிட்டன் நாட்டு கார் உற்பத்தியாளரான ஜாகுவார் தனது ஐ பேஸ் பிளாக் எஸ்.யு.வி.-யின் புதிய வேரியண்டை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போது ஐ பேஸ் பிளாக் மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் ஜாகுவார் ஐ பேஸ் மாடல் இந்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய ஐ பேஸ் பிளாக் மாடலில் கிளாஸ் பிளாக் நிற மிரர் கேப்கள், பிளாக் கிரில், பிளாக் சைடு விண்டோ பிரேம், 19 இன்ச் பிளாக் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. உள்புறம் 12.3 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

ஐ பேஸ் மாடலில் 90 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இது முழு சார்ஜ் செய்தால் 470 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இந்த மோட்டார் 394 பி.ஹெச்.பி. திறன், 696 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.8 நொடிகளில் எட்டிவிடும்.
டொயோட்டா நிறுவன கார்களின் விலையில் விரைவில் மாற்றம் செய்யப்பட இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது வாகனங்கள் விலையை அக்டோபர் முதல் உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் தொடர்ந்து அதிகரித்து வரும் உற்பத்தி செலவீனங்களை ஓரளவு ஈடு செய்ய முடியும்.
இம்முறை எத்தனை சதவீதம் விலை உயர்த்தப்படும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. விலை ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்ட்களுக்கு ஏற்ப வேறுபடும். அடுத்த மாதம் முதல் வாகனங்களுக்கான புதிய விலை பட்டியல் அதிகாரப்பூர்வ விற்பனை மையங்களில் கிடைக்கும். இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

கடந்த மாதம் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா மாடலின் விலை இரண்டு சதவீதம் உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து யாரிஸ் செடான் மாடல் விற்பனை நிறுத்தப்படுவதாக டொயோட்டா அறிவித்தது.
டிரையம்ப் நிறுவனத்தின் புதிய டைகர் 660 மோட்டார்சைக்கிள் சர்வதேச வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது.
டிரையம்ப் டைகர் 660 மோட்டார்சைக்கிள் அக்டோபர் 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த விவரத்தை டிரையம்ப் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு உள்ளது. புதிய டிரையம்ப் டைகர் 660 மாடல் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் டைகர் 850 ஸ்போர்ட் மாடலுக்கு மாற்றாக அமைகிறது.
இந்த மோட்டார்சைக்கிளின் இந்திய வெளியீடு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. புதிய டிரையம்ப் டைகர் 660 ப்ரோடோடைப் வடிவில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது.

அதன்படி புதிய டைகர் 660 மாடலில் உயரமான விண்ட்-ஸ்கிரீன், கூர்மையான ட்வின்-பாட் ஹெட்லைட், மஸ்குலர் பியூவல் டேன்க், ஸ்டெப்-அப் சீட் மற்றும் அண்டர்பெல்லி எக்சாஸ்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. டைகர் ஸ்போர்ட் 660 மாடலில் புல் எல்.இ.டி. லைட்டிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் உள்ளது.
டிரையம்ப் டைகர் 660 மாடலில் 660சிசி, இன்லைன் 3 சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 80 பி.ஹெச்.பி. திறன், 64 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல் ஆறு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அல்ட்ரோஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல் உற்பத்தியில் ஒரு லட்சம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் அல்ட்ரோஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்ட 20 மாதங்களில் இந்த மைல்கல் எட்டப்பட்டு உள்ளது.
அல்ட்ரோஸ் மாடலின் ஒரு லட்சமாவது யூனிட் சிவப்பு நிறம் கொண்டிருக்கிறது. இது பூனே உற்பத்தி ஆலையில் இருந்து வெளியிடப்பட்டது. டாடா அல்ட்ரோஸ் மாடல் குளோபல் என்கேப் பாதுகாப்பு சோதனையில் ஐந்து நட்சத்திர குறியீடுகளை பெற்று அசத்தி இருக்கிறது.

இந்தியாவில் டாடா அல்ட்ரோஸ் மாடல் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் 1.2 லிட்டர் ரெவோடிரான் பெட்ரோல் என்ஜின், 1.2 லிட்டர் ஐ டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
போர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய குர்கா பி.எஸ்.6 மாடல் முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.
போர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் 2021 குர்கா மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஆப் ரோடு அட்வென்ச்சர் எஸ்.யு.வி. மாடல் துவக்க விலை ரூ. 13.59 லட்சம் ஆகும். இந்த மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் ஆகும்.
இந்திய சந்தையில் புதிய 2021 போர்ஸ் குர்கா மாடல் மஹிந்திரா தார் மாடலுக்கு போட்டியாக அமைகிறது. இரண்டாம் தலைமுறை மாடலான குர்கா பி.எஸ்.6 பல்வேறு மாற்றங்களை கொண்டிருக்கிறது. இந்த மாடலில் பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் 2.6 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

புதிய 2.6 லிட்டர் டீசல் என்ஜின் 89 பி.ஹெச்.பி. திறன், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. குர்கா பி.எஸ்.6 மாடலின் சஸ்பென்ஷன் டபுள் விஷ்போன் மற்றும் காயில் ஸ்ப்ரிங்களை கொண்டு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.
டொயோட்டா நிறுவனத்தின் எதிர்கால திட்டத்தின் அங்கமாக புதிய கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் யாரிஸ் செடான் மாடல் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டது. யாரிஸ் மாடலுக்கு மாற்றாக மாருதி சுசுகி சியாஸ் மாடலை தழுவி உருவாகும் புதிய கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த கார் பெல்டா எனும் பெயரில் விற்பனைக்கு வருகிறது.
யாரிஸ் மாடலை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து டொயோட்டா அதிகாரப்பூர்வ சர்வீஸ் மற்றும் உதிரிபாகங்கள் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளுக்கு கிடைக்கும்.

"செப்டம்பர் 27, 2021 முதல் யாரிஸ் மாடல் இந்திய விற்பனையை நிறுத்துகிறோம். வாடிக்கையாளர்கள் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட வாகனங்களை அறிமுகம் செய்யும் டொயோட்டா நிறுவன திட்டத்தின் அங்கமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்," என டொயோட்டா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் தனது எக்ஸ்டிரீம் 160ஆர் மோட்டார்சைக்கிள் விலையை திடீரென உயர்த்தி இருக்கிறது. ஹீரோ எக்ஸ்டிரீம் 160ஆர் அனைத்து வேரியண்ட்களின் விலையும் இம்முறை ரூ. 2,370 உயர்த்தப்பட்டு இருக்கிறது. விலையை தவிர இதன் அம்சங்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

எக்ஸ்டிரீம் 160ஆர் புதிய விலை விவரம்
ஹீரோ எக்ஸ்டிரீம் 160ஆர் முன்புற டிஸ்க் - ரூ. 1,11,610
ஹீரோ எக்ஸ்டிரீம் 160ஆர் டூயல் டிஸ்க் - ரூ. 1,14,660
ஹீரோ எக்ஸ்டிரீம் 160ஆர் 100 மில்லியன் எடிஷன் - ரூ. 1,16,460
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஹீரோ எக்ஸ்டிரீம் 160ஆர் மாடலில் 160சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 15 பி.ஹெச்.பி. திறன், 14 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய தலைமுறை ஆல்டோ மாடல் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய தலைமுறை ஆல்டோ மாடல் ஜனவரி 2022 வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒன்பதாவது தலைமுறை ஆல்டோ மாடலில் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
புதிய ஆல்டோ மாடல் மேம்பட்ட ஹார்டெக்ட் பிளாட்பார்மில் உருவாகி வருகிறது. இதே பிளாட்பார்மில் பல்வேறு மாடல்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன. 3 சிலிண்டர் என்ஜின் புதிதாக உருவாக்கப்பட்டு இருந்தாலும், மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொண்ட என்ஜின் அதிக மைலேஜ் வழங்கும்.

பல்வேறு மாற்றங்களுடன் உருவாகி இருக்கும் ஆல்டோ மாடல் முதற்கட்டமாக ஜப்பானில் அறிமுகம் செய்யப்படும் என்றும் இதன் விலை கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவில் வெளியாக இருக்கும் மூன்றாம் தலைமுறை ஆல்டோ மாடல் ஹார்டெக்ட் கே பிளாட்பார்மில் உருவாகி இருக்கும் என்றும் இதில் முற்றிலும் புதிய 800 சிசி, 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்குவதற்கான முதற்கட்ட பணிகளை யமஹா துவங்கி இருக்கிறது.
ஜப்பான் நாட்டு இருசக்கர வாகன உற்பத்தியாளரான யமஹா இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களை வெளியிடுவதற்கான பணிகளை துவங்கி இருக்கிறது. தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான உள்கட்டமைப்பு, பேட்டரி உற்பத்தி, விலை போன்ற விஷயங்களை ஆய்வு செய்து வருகிறது.
எலெக்ட்ரிக் வாகனங்களின் வெற்றி பயனர்கள் இவற்றை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் போது மட்டுமே கிடைக்கும் என யமஹா தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை ஏற்றுக் கொள்ள போதுமான சார்ஜிங் கட்டமைப்பு, சீரான பேட்டரி உற்பத்தி போன்ற வசதிகள் இருக்க வேண்டும்.

மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் எலெக்ட்ரிக் வாகன விற்பனையை ஊக்கப்படுத்த மேற்கொள்ளும் நடவடிக்கைகளை யமஹா மோட்டார் இந்தியா வரவேற்பதாக அந்நிறுவன தலைவர் மோடோபுமி ஷித்தாரா தெரிவித்தார். இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் மற்றும் பெட்ரோல் வாகனங்களுக்கான இடைவெளியை ஹைப்ரிட் தொழில்நுட்பம் மூலம் பூர்த்தி செய்ய திட்டமிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.






