என் மலர்tooltip icon
    TNLGanesh

    About author
    அச்சு ஊடக துறையில் 12 வதுஆண்டு பயணம். மலை பயணமும்,மழையில் பயணமும் பிடித்தமான ஒன்று. படைப்பியலில் அதிக ஆர்வம் . இயற்கையின் அழகை தனிமையில் ரசிக்க பிடிக்கும். நகர்வுகளை கண்டறிய பிடிக்கும். நான் தமிழின் மூத்த மகன் என்பதில் பெருமை.
      • 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.
      • நிலத்தடி நீர்மட்டம் 400 அடிக்கு கீழ் சென்றுவிட்டது.

      திசையன்விளை:

      இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் அரசுராஜா தலைமையில் இந்து முன்னணி நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று திசையன்விளை தாசில்தார் முருகனை சந்தித்து மனு கொடுத்தனர். அதில் கூறி இருப்பதாவது:-

      தாமிரபரணி ஆற்றில் இருந்து மழை காலங்களில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை வறண்ட பகுதிகளாக திசையன்விளை, சாத்தான்குளம் தாலுகா பகுதிகளில் கொண்டு செல்லும் வகையில் 2002-ம் ஆண்டு தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்டம் தொடங்கப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. கடந்த சில ஆண்டுகளாக இந்த பகுதியில் கால மழை சரியாக பெய்யாததால் கடும் வறட்சி நிலவுகிறது. நிலத்தடி நீர்மட்டம் 400 அடிக்கு கீழ் சென்றுவிட்டது. விவசாயிகள் பயிர்களை காப்பாற்ற முடியவில்லை. எனவே போர்கால அடிப்படையில் வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இத்தாலுகாக்களை வறட்சி பகுதியாக அறிவித்து தேவையான உதவிகளை அரசு வழங்க வேண்டும்.

      இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

      • போலீசார் அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர்.
      • விசாரணையில் அவர் பழவூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது.

      நெல்லை:

      வள்ளியூர் கேசவநேரி சந்திப்பு பகுதியில் நேற்று இரவு வள்ளியூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

      அப்போது அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிளை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது 50 கிராம் கஞ்சா சிக்கியது. இதையடுத்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து கஞ்சாவை கடத்தி சென்ற நபரை பிடித்து விசாரித்தனர். அவர் பழவூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது26) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • அய்யாபுரம் பகுதியில்ஆரம்ப சுகாதார நிலையத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
      • மருத்துவ பணிகளை நகராட்சி தலைவர் விஜயா சவுந்தரபாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

      புளியங்குடி:

      புளியங்குடி நகராட்சி 33-வது வார்டு அய்யாபுரம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனையடுத்து புளியங்குடி நகராட்சி தலைவரும், மாவட்ட தி.மு.க. மகளிர் தொண்டர் அணி அமைப்பாளருமான விஜயா சவுந்தரபாண்டியன் தலைமை தாங்கி மருத்துவ பணிகளை தொடங்கி வைத்தார்.

      விழாவில் நகர்மன்ற துணை தலைவரும், தி.மு.க.நகர செயலாளருமான அந்தோணிசாமி, சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் பொதுமருத்துவர்கள் சூர்யா, ரேவதி, மாவட்ட மலேரியா அலுவலர் தண்டாயுதபாணி, சுகாதாரத்துறை அலுவலர்கள் ராமலிங்கம், பாலாஜி, சர்போஜி, கமிஷனர் சுகந்தி, என்ஜினீயர் முகைதீன் அப்துல் காதர், சுகாதார அலுவலர் கணேசன், 33-வது வார்டு செயலாளர் வெள்ளபாண்டி, ஊர் நாட்டாண்மை எட்வர்ட் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் அய்யாபுரம் இந்திரா தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் டேனியல் இன்பராஜ் நன்றி கூறினார்.

      • பொதுக்குழு கூட்டம் தென்காசி ஸ்ரீசாரதாம்பா கிராண்ட் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
      • கலெக்டர் ரவிச்சந்திரன் அரிசி ஆலை எந்திரங்கள் கண்காட்சியினை தொடங்கி வைக்கிறார்.

      தென்காசி:

      அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க மாநில சம்மேளன பொதுக்குழு கூட்டம் தென்காசியில் உள்ள ஸ்ரீசாரதாம்பா கிராண்ட் திருமண மண்டபத்தில் வருகிற 11-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் மாநில சம்மேளன தலைவர் மற்றும் செயலாளர் முன்னிலையில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு அரிசி ஆலை எந்திரங்கள் கண்காட்சியினை தொடங்கி வைக்கிறார். அதனை தொடர்ந்து பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

      இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட, தாலுகா சங்க தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்கின்றனர். இத்தகவலை நெல்லை, தென்காசி மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல், அரிசி வியாபாரிகள் சங்க தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

      • அச்சன்புதூர் செவகாட்டு பகுதியில் செய்யது முகமதுவின் தேங்காய் நார் தொழிற்சாலை உள்ளது.
      • நேற்று இரவு திடீரென தேங்காய் நார் தொழிற்சாலை தீப்பிடித்து எரிந்தது.

      கடையநல்லூர்:

      தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே அச்சன்புதூர் செவகாட்டு பகுதியில் அச்சன்புதூரை சேர்ந்த செய்யது முகமது என்பவருக்கு சொந்தமான தேங்காய் நார் தொழிற் சாலை உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர்.

      இப்பகுதியில் உள்ள விவசாயிகளிடம் இருந்து தேங்காய் வாங்கி அதன் கூந்தல் நார்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. நேற்று இரவு 10 மணி அளவில் திடீரென தேங்காய் நார் தொழிற்சாலை தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து உடனே சம்பவ இடத்திற்கு கடையநல்லூர், செங்கோட்டை, சுரண்டை ஆகிய பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் விவசாயிகள் அருகில் உள்ள தோட்டங்களில் இருந்து டேங்கர் லாரிகளில் தண்ணீரை கொண்டு வந்து தீயை அணைக்க உதவினர். தேங்காய் நார் தொழிற்சாலைகளில் உள்ள எந்திரங்கள், தேங்காய் நார் தும்பைகள் அனைத்தும் சேதமடைந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.75 லட்சம் ஆகும் என கூறப்படுகிறது. 

      • கும்பாபிஷேகம் நடத்துவதற்காக தமிழக அரசு ரூ. 83 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது.
      • கோவிலில் 37 விக்கிரகங்கள் பாலாலயம் செய்யப்பட்டது.

      தென்காசி:

      பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூரில் உள்ள பிரசித்தி பெற்ற சிவகாமி அம்பாள் சமேத திருவாலீஸ்வரர் கோவிலில் இந்து அறநிலையத்துறை சார்பில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

      முதல் கட்ட பணிகள்

      இந்த கோவிலை பராமரித்து கும்பாபிஷேகம் நடத்துவதற்காக தமிழக அரசு ரூ. 83 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி முதற்கட்ட பணிகளாக கோவிலில் பூஜைகள் நடைபெற்றன. பின்னர் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகள் கலாகர்ஷணம், முதற்கால யாகசாலை பூஜை, ஹோமம், தீபாராதனை நடைபெற்றது.

      தொடர்ந்து சிவகாமி அம்பாள் சமேத திருவாலீஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சலனம் செய்து பாலாலயம் நடைபெற்றது. இந்த கோவிலில் 37 விக்கிரகங்கள் பாலாலயம் செய்யப்பட்டது.

      நிகழ்ச்சியில் அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, துணை ஆணையர் வெங்கடேஷ், செயல் அலுவலர் முருகன், ஆய்வாளர் சேதுராமன், அர்ச்சகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இக்கோவிலுக்கு கடைசியாக 2003-ம் ஆண்டு கும்பாபி ஷேகம் நடை பெற்றுள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தை காண பக்தர்கள் ஆவலுடன் உள்ளனர்.

      • இந்தியா முழுவதும் ரெயில்வே தண்டவாள பகுதிகளில் ரெயில்வே போலீசார் சோதனைகள், ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
      • உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

      தென்காசி:

      ஒடிசாவில் நடைபெற்ற ரெயில் விபத்தை அடுத்து இந்தியா முழுவதும் ரெயில்வே தண்டவாள பகுதிகளில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறுகிறதா என கூறி ரெயில்வே போலீசார் ஒவ்வொரு ரெயில்வே தண்டவாள பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள், ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தென்காசி மாவட்டத்தில் தென்காசி ரெயில்வே நிலையம் அருகில் உள்ள தண்டவாள பகுதிகளில் திருச்சி ரெயில்வே காவல் கண்காணிப்பாளர் உத்தர வின்படி, மதுரை ரெயில்வே உட்கோட்ட பொறுப்பு நெல்லை இருப்புப்பாதை காவல் துணை கண்காணிப்பாளர் அறிவுரையின் படியும், நெல்லை வட்டம் ரெயில்வே இன்ஸ்பெக்டர் அறிவுறுத்தலின் பேரிலும் நேற்று தென்காசி ரெயில்வே காவல் நிலைய எல்லைகள், தண்டவாள பகுதிகள் மற்றும் மேம்பாலம் அருகில் நாசவேலைகள் ஏதும் நடைபெறாத வகையில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் தண்டவாள ரோந்து பணிகள் மேற்கொண்டும், சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் பணியிலும் ஈடுபட்டனர்.

      • காளியம்மன் உள்பட பரிவார தெய்வங்களுக்கு 18 வகையான அபிஷேகம் நடைபெற்றது.
      • அம்மனுக்கு பட்டு ஆடைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடை பெற்றது.

      சிவகிரி:

      சிவகிரி அருகே தட்டாங்குளம் காளியம்மன் கோவிலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன் வருசாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று காலை கோவில் முன்பு யாக சாலைகள் அமைக்க ப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க வருசாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் காளியம்மன் உள்பட பரிவார தெய்வங்கள் தலைமலை வீரப்பன், பேச்சியம்மன், கன்னி விநாயகர், கருப்பசாமி, மாரியம்மன், பார்வதி, சின்ன மாரியம்மன், சின்ன காளியம்மன் ஆகிய வற்றிற்கு விபூதி, குங்குமம், சந்தனம், பன்னீர், எலுமிச்சை, இளநீர் உள்பட 18 வகையான நறுமண பொ ருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

      சந்தன காப்பு அலங்காரத்தில் பட்டு ஆடைகள், மலர் மாலை கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காட்டி சிறப்பு பூஜைகள் நடை பெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்ன தானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பவுர்ணமி பூஜை வழி பாட்டு குழுவினர் செய்திருந்தனர்.

      • நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் காலை 8-12 மணி, மாலை 4-8 மணி வரையிலும் செயல்படும்.
      • 4 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டசத்து பெட்டகம் வழங்கப்பட்டது.

      சங்கரன்கோவில்:

      தென்காசி மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 5 மையங்கள் உட்பட 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

      அதன்படி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட காவேரிநகர் நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் நடந்த காணொலி நிகழ்ச்சி யில் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. , தனுஷ்குமார் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர்.

      சங்கரன்கோவில் காவேரிநகர், தென்காசி மங்கம்மாள் சாலை, மேல கடையநல்லூர், இந்திரா நகர், முத்துகிருஷ்ணாபுரம், குமாந்தபுரம் மற்றும் புளியங்குடி, அய்யாபுரம் ஆகியவற்றில் ரூ. 1.25 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமை க்கப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மைய ங்களில் ஒரு மருத்துவர், ஒரு செவிலி யர், ஒரு சுகாதார ஆய்வாளர் மற்றும் துணைப் பணியாளர் ஆகியோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

      நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் செயல்படும். மேலும் இந்த மையங்களில் அத்தியாவசிய மருத்துவ சேவைகள், பரிசோதனைகள் மற்றும் தடுப்பூசி பணிகளும் வழங்கப்படும். எனவே இந்த மருத்துவ சேவையை பயன்படுத்தி மக்கள் நலம் பெறலாம் என்று கலெக்டர் ரவிச்சந்திரன் தெரிவித்தார். மேலும் 4 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டசத்து பெட்டகம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டது.

      நிகழ்ச்சியில் சங்கரன் கோவில் நகராட்சி ஆணை யர் சபாநாயகம், நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, துணை இயக்குனர் (சுகா தாரப் பணிகள்) முரளி சங்கர், மாவட்ட துணைச்செ யலாளர் புனிதா, ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகராட்சி கவுன்சிலர் வேல்ராஜ், நகர செயலாளர் பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி, நகர்மன்ற உறுப்பினர்கள் கவுசல்யா, நிர்வாகிகள் பிரகாஷ், பாரதிராஜா, ஜெயக்குமார், வீரா, வீரமணி, சிவா, மாணவரணி கார்த்திக், ஜாண், சிவாஜி மற்றும் வட்டார மருத்து வர்கள், சுகாதார பணியா ளர்கள், செவிலியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

      • பழமையான ஆலமரத்தை அகற்ற இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் வந்தனர்.
      • போலீசார் அங்கு கூடியிருந்த கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

      தென்காசி:

      நெல்லை- தென்காசி நான்கு வழி சாலை பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் பாவூர்சத்திரம் அருகே உள்ள நவநீதகிருஷ்ணபுரத்தில் சாலையோரம் உள்ள மிகப் பழமையான மூனால் முப்புடாதி அம்மன் கோவிலை நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக கோவிலில் இருந்த சிலைகளை வேறு இடத்திற்கு மாற்றவும், கோவிலை ஒட்டி நின்ற மிக பழமையான ஆலமரத்தை அகற்றுவதற்காகவும் தென்காசியில் இருந்து இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் வந்தனர்.

      தொடர்ந்து அவர்கள் போலீசார் பாதுகாப்புடன் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். கோவிலில் உள்ள பீடங்களை வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லும் போது அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது பெண், ஆண் சாமியாடிகள் திடீரென சாமி ஆடி குறி சொல்ல தொடங்கினர்.

      அப்பொழுது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை அங்கிருந்து தூக்கி சென்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் போலீசார் அங்கு கூடியிருந்த கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோவில் பீடங்களை மாற்றியதோடு பழமையான ஆலமரத்தையும் ஜே.சி.பி. எந்திரத்தை கொண்டு அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

      கோவிலில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட சிலைகளை ஊர் பொதுமக்களின் அனுமதி பெறாமல் இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் தென்காசிக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் நவநீதகிருஷ்ண புரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

      அவர்களிடம் போலீசார் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் எடுத்து செல்லப்பட்ட விக்கிரகங்களை கொண்டு வராததால் ஊர் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்று காலையில் எடுத்துச் செல்லப்பட்ட விக்கிரகங்களை இரவு இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஊர் பொதுமக்களிடம் ஒப்படைத்தனர். அதன் பின்னர் ஊருக்கு பொதுவான கட்டிடத்தில் அம்மன் விக்கிரகங்களை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து பொதுமக்கள் வழிபட தொடங்கினர்.

      நான்கு வழிச்சாலை பணிகள் தேவையான ஒன்றுதான் இருப்பினும் பழமையான கோவில் மற்றும் ஆலமரங்களை நவநீதகிருஷ்ணபுரத்தில் அகற்றாமல் சாலையில் படர்ந்த ஆலமரத்தின் கிளைகளை மற்றும் அகற்றிவிட்டு நான்கு வழி சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் இந்து அறநிலையத்துறை மற்றும் சாலை அமைத்து வரும் அதிகாரிகள் மீதும் குற்றம் சாட்டி உள்ளனர்.

      • பாப்பான்குளம் கிராமத்தில் புதிய பல்நோக்கு கட்டிடம் கட்ட ரூ. 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
      • கட்டிடம் கட்டும் இடத்தை மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

      கடையம்:

      கடையம் யூனியன் பாப்பான்குளம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ. 20 லட்சம் மதிப்பில் புதிய பல்நோக்கு கட்டிடம் கட்ட மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கி உள்ளார். இதையடுத்து பாப்பான்குளம் கிராமத்தில் பல்நோக்கு கட்டிடம் கட்டும் இடத்தை மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

      அப்போது, அமைப்பு செயலாளர் ராதா, மாவட்ட செயலாளர் கணபதி மற்றும் கட்சி நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் பலர் உடன் சென்றனர்.

      • ஒவ்வொரு வார்டுகளில் சிறிய குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
      • நேற்று மதியம் குழந்தைகள் சிகிச்சை பெற்று வரும் எமர்ஜென்சி வார்டிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

      தென்காசி:

      தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள் என பலரும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அங்குள்ள வார்டுகளில் ஒவ்வொன்றிலும் சிறிய குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

      தற்போது கோடை காலம் என்பதால் மருத்துவமனைக்கு வந்து செல்லும் நோயாளிகள் மட்டுமின்றி அவர்களுடன் வரும் உறவினர்களுக்கும் குடிநீர் தேவை ஏற்படுவதால் சிறிய குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் மூலம் வழங்கப்பட்டு வரும் தண்ணீர் போதுமான அளவில் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

      தொடர்ந்து சிறிய சுத்திகரிப்பு எந்திரத்தில் இருந்து தண்ணீரை பிடிப்பதால் அவை அடிக்கடி பழுது ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. நேற்று மதியம் குழந்தைகள் சிகிச்சை பெற்று வரும் எமர்ஜென்சி வார்டிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

      மேலும் கழிவறைகளுக்கு செல்லும் தண்ணீரும் வராததால் சிறுவர்களை சிகிச்சைக்காக சேர்த்து இருந்த பெற்றோர்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர். எனவே போர்க்கால அடிப்படையில் தென்காசி அரசு மருத்துவமனையில் அனைத்து பகுதிகளிலும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வண்ணம் அதிகம் தண்ணீர் வழங்கும் சுத்திகரிப்பு எந்திரங்களை நிறுவ அரசு நிர்வாகம் முன் வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

      ×