என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவாலீஸ்வரர் கோவில்"

    • கி.பி.10-ம் நூற்றாண்டில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இக்கோவில், பின்னர் பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.
    • இந்த ஆலயத்தில் மகா சிவராத்திரி, திருவாதிரை போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசம் என்ற ஊரில் அமைந்துள்ளது, திருவாலீஸ்வரர் கோவில். இக்கோவில் மூலவர் திருவாலீஸ்வரர் என்றும், அம்பாள் சவுந்திரநாயகி தாயார் என்றும் அழைக்கப்படுகிறார்கள். பிரம்மதேசத்தில் அமைந்துள்ள இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டு வந்தால் ஒருவரின் தலையெழுத்து மாறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    தல வரலாறு

    கி.பி.10-ம் நூற்றாண்டில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இக்கோவில், பின்னர் பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் சுவர்களில் சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள் காலத்து கல்வெட்டுகள் பல உள்ளன. மூலவர் சன்னிதியின் வடக்கு சுவரில் முதலாம் ராஜராஜ சோழன் ஆட்சியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று உள்ளது. அதே சுவரில் மற்றொரு மன்னரின் கல்வெட்டு ஒன்றில், ராஜராஜ சோழன் - சதுர்வேதி மங்கலம் கிராம மக்களிடையே ஏற்பட்ட ஒப்பந்தம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

     

    கல்வெட்டு

    இங்குள்ள பழங்கால நினைவுச் சின்னங்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதி, மத்திய அரசின் கீழ் இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. திருவாலீஸ்வரர் கோவில் சோழ கட்டிடக் கலை பாணியில் இருந்தாலும், கோவிலின் வெவ்வேறு இடங்கள் சோழர், பாண்டியர் காலத்து பாணியையும் எடுத்துக்காட்டுகிறது.

    கோவில் அமைப்பு

    கோவில் கருவறையில் மூலவரான சிவபெருமான், திருவாலீஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். கோவில் விமானத்தில் சிவபெருமான், அர்த்தநாரீஸ்வரர் வடிவில் காட்சி தருகிறார். மேலும் பூத கணங்கள், ரிஷப வாகனம், கஜ சம்ஹார மூர்த்தி, தட்சிணாமூர்த்தி போன்ற சிற்பங்கள் உள்ளன. இதன் கலைநயம், பனமலை மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள பல்லவர் கால கோவில்களை ஒத்திருக்கிறது.

    இந்த ஆலயத்தில் உள்ள விநாயகப் பெருமான் தனித்துவமான நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

    பிரகாரத்தில் சூரிய பகவான், அதிகார நந்தி, சப்த கன்னியர்கள், சுப்பிரமணியர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். பொதுவாக, பெரும்பாலான கோவில்களில் அம்பாள், சுவாமியின் இடதுபுறமாக வீற்றிருந்து அருள்பாலிப்பார். ஆனால், இங்குள்ள தாயாரான சவுந்திரநாயகி அம்பாள் சுவாமியின் வலதுபுறத்தில் தனிச் சன்னிதியில் வீற்றிருப்பது தனிச் சிறப்பாகும். இந்த அன்னையை வழிபட்டு வந்தால் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    பிரார்த்தனை

    காசிக்கு சென்று பாவங்களைப் போக்க நினைப்பவர்கள், அங்கு போக முடியாத பட்சத்தில் காசிக்கு அடுத்த தலமாக கருதப்படும் இந்த பிரம்மதேசம் திருவாலீஸ்வரர் கோவிலுக்கு வந்து வழிபடலாம். இங்குள்ள இறைவனை வழிபட்டால் காசிக்கு சென்று வந்த புண்ணியம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இந்த ஆலயத்தில் மகா சிவராத்திரி, திருவாதிரை போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மாதந்தோறும் வரும் பவுர்ணமி மற்றும் இரண்டு பிரதோஷ தினங்களும் சிறப்பிக்கப்படுகின்றன.

    கோவில், காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்களின் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். காலை 8 மணி முதல் 9 மணி வரையும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையும் பூஜை நடைபெறும்.

    அமைவிடம்

    திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்து கவுதமபுரி சாலை வழியாக சென்றால் பிரம்மதேசம் திருவாலீஸ்வரர் திருக்கோவிலை அடையலாம். திருநெல்வேலியில் இருந்து 42 கிலோமீட்டர் தொலைவிலும், அம்பாசமுத்திரத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது.

    • வாலி, இந்திரன், எமன் ஆகிய மூவரும், தங்களின் முன்வினைப் பயனால் பறவை மற்றும் விலங்குகளாக பிறக்க நேர்ந்தது.
    • இறைவனின் கருவறைக்கு வெளியே வலதுபுறம் அன்னையின் சன்னிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில், பாலாற்றின் தென்கரை பகுதியில் அமைந்துள்ளது, குரங்கணில் முட்டம் என்ற ஊர். பொதுவாக ஊர்களின் பெயர்கள், அந்த தலத்தை வழிபட்டவர்கள் பெயரைக் கொண்டு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையிலே குரங்கு, அணில், காகம் என மூன்று உயிரினங்கள் வழிபட்டு பேறு பெற்றதால், 'குரங்கணில் முட்டம்' என இந்த தலம் வழங்கப்படுகிறது.

    வாலி, இந்திரன், எமன் ஆகிய மூவரும், தங்களின் முன்வினைப் பயனால் பறவை மற்றும் விலங்குகளாக பிறக்க நேர்ந்தது. அதன்படி வாலி குரங்காகவும், இந்திரன் அணிலாகவும், எமன் காகமாகவும் உருவம் பெற்று வருந்தி வாழ்ந்து வந்தனர். தங்களுடைய வினைப் பயன் நீங்க கயிலை நாதனை வேண்டி நின்றனர். காஞ்சிபுரத்திற்கு தெற்கே உள்ள சிவாலயம் சென்று வழிபட்டால், அவர்களுடைய வினைப்பயன் நீங்கி பழைய நிலைக்கு திரும்பலாம் என இறைவன் வழிகாட்டினார்.

    அதன்படியே இம்மூவரும் வழிபட்டு தங்கள் இயல்பு நிலையை அடைந்தார்கள் என்பது தலபுராணம். இப்படி குரங்கு, அணில், காகம் வழிபட்டு பேறு பெற்ற தலமாக திகழ்வது, குரங்கணில்முட்டம் வாலீஸ்வரர் எனும் சிவாலயமாகும். தொண்டை நாட்டில் பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஆறாவது தலமாக குரங்கணில்முட்டம் திகழ்கின்றது. கிருஷ்ணதேவராயர், சம்புவராயர் எனப் பல்வேறு மன்னர்களாலும் போற்றப்பட்ட தலமாகவும் இது விளங்குகின்றது.

    திருமாகறலில் இருந்து கச்சியம்பதி நோக்கிச் செல்லும் வழியில், இத்திருக்கோவிலின் பெருமை அறிந்து வருகை தந்த திருஞானசம்பந்தர், இவ்வாலயம் பற்றி பதிகம் பாடினார்.

    இத்தல இறைவனான வாலீஸ்வரர், மேற்கு நோக்கியபடி எளிய வடிவில் கம்பீரத்துடன் காட்சி தருகின்றார். இவரே 'கொய்யாமலர்நாதர்' என்றும், மலைமீது சுயம்புவாக தோன்றியதால் 'கொய்யாமலைநாதர்' என்றும் அழைக்கப்படுகின்றார். கருவறையில் வழக்கமாக காணப்படும் துவாரபாலகர்களுக்குப் பதிலாக, வலம்புரி விநாயகரும், முருகப்பெருமானும் அமைந்துள்ளனர். இத்தல இறைவனை வழிபட்டால், முன்வினைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

    இறைவனின் கருவறைக்கு வெளியே வலதுபுறம் அன்னையின் சன்னிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அன்னையின் திருப்பெயர், 'இறையார் வளையம்மை' என்பதாகும். அன்னை சிறிய வடிவில் எழிலான கோலத்தில் தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். அன்னையின் பெயரை 'இறையார் வளையாளை ஓர் பாகத்து அடக்கி..' என்ற பாடல் வரிகளால் திருஞானசம்பந்நர் இதனை உறுதி செய்கிறார். இவ்வாலயத்தின் தல மரமாக இலந்தை மரமும், தீர்த்தமாக பிறைச்சந்திர வடிவில் காகம் தன் அலகால் கீரிய 'காக்கை மடு'வும் விளங்குகின்றன.

    அமைவிடம்

    காஞ்சிபுரம் செய்யாறு செல்லும் நெடுஞ்சாலையில், காஞ்சிபுரத்தில் இருந்து தெற்கே சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் தூசி என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து கிழக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் குரங்கணில் முட்டம் ஊர் இருக்கிறது.

    • கும்பாபிஷேகம் நடத்துவதற்காக தமிழக அரசு ரூ. 83 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது.
    • கோவிலில் 37 விக்கிரகங்கள் பாலாலயம் செய்யப்பட்டது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூரில் உள்ள பிரசித்தி பெற்ற சிவகாமி அம்பாள் சமேத திருவாலீஸ்வரர் கோவிலில் இந்து அறநிலையத்துறை சார்பில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    முதல் கட்ட பணிகள்

    இந்த கோவிலை பராமரித்து கும்பாபிஷேகம் நடத்துவதற்காக தமிழக அரசு ரூ. 83 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி முதற்கட்ட பணிகளாக கோவிலில் பூஜைகள் நடைபெற்றன. பின்னர் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகள் கலாகர்ஷணம், முதற்கால யாகசாலை பூஜை, ஹோமம், தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து சிவகாமி அம்பாள் சமேத திருவாலீஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சலனம் செய்து பாலாலயம் நடைபெற்றது. இந்த கோவிலில் 37 விக்கிரகங்கள் பாலாலயம் செய்யப்பட்டது.

    நிகழ்ச்சியில் அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, துணை ஆணையர் வெங்கடேஷ், செயல் அலுவலர் முருகன், ஆய்வாளர் சேதுராமன், அர்ச்சகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இக்கோவிலுக்கு கடைசியாக 2003-ம் ஆண்டு கும்பாபி ஷேகம் நடை பெற்றுள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தை காண பக்தர்கள் ஆவலுடன் உள்ளனர்.

    ×