என் மலர்
உள்ளூர் செய்திகள்

தென்காசி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து நீடிக்கும் குடிநீர் தட்டுப்பாடு-சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை
- ஒவ்வொரு வார்டுகளில் சிறிய குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
- நேற்று மதியம் குழந்தைகள் சிகிச்சை பெற்று வரும் எமர்ஜென்சி வார்டிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள் என பலரும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அங்குள்ள வார்டுகளில் ஒவ்வொன்றிலும் சிறிய குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது கோடை காலம் என்பதால் மருத்துவமனைக்கு வந்து செல்லும் நோயாளிகள் மட்டுமின்றி அவர்களுடன் வரும் உறவினர்களுக்கும் குடிநீர் தேவை ஏற்படுவதால் சிறிய குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் மூலம் வழங்கப்பட்டு வரும் தண்ணீர் போதுமான அளவில் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து சிறிய சுத்திகரிப்பு எந்திரத்தில் இருந்து தண்ணீரை பிடிப்பதால் அவை அடிக்கடி பழுது ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. நேற்று மதியம் குழந்தைகள் சிகிச்சை பெற்று வரும் எமர்ஜென்சி வார்டிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
மேலும் கழிவறைகளுக்கு செல்லும் தண்ணீரும் வராததால் சிறுவர்களை சிகிச்சைக்காக சேர்த்து இருந்த பெற்றோர்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர். எனவே போர்க்கால அடிப்படையில் தென்காசி அரசு மருத்துவமனையில் அனைத்து பகுதிகளிலும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வண்ணம் அதிகம் தண்ணீர் வழங்கும் சுத்திகரிப்பு எந்திரங்களை நிறுவ அரசு நிர்வாகம் முன் வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






