என் மலர்
செய்திகள்
- கீழ்ப்பாக்கத்தில் அ.தி.மு.க. சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.
- சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது என இபிஎஸ் பேசினார்.
சென்னை:
சென்னை கீழ்ப்பாக்கத்தில் அ.தி.மு.க. சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
கிறிஸ்தவ மக்களை பெருமைப்படுத்தும் விதமாக அ.தி.மு.க. சார்பில் கடந்த 20 ஆண்டாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது.
ஓட்டுக்காக மட்டுமே சிறுபான்மை நலனைப் பற்றி பேசும் தி.மு.க.வின் கபட நாடகத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அ.தி.மு.க.வை பொறுத்தவரை மதத்திற்கும், ஜாதிக்கும் அப்பாற்பட்ட கட்சி. அனைத்து மதத்தினரையும் ஒன்றாக பாவிக்கும் கட்சி.
தீய சக்திகளிடம் நாம் ஏமாந்துவிட்டால் தமிழகம் இருளில் சிக்கிவிடும்.
ஏசு பிரான் தீய சக்திகளை அழிக்க உலகத்துக்கு ஒலியாக வந்தார். தீயசக்திகளாக இருப்பவர்களை ஒலியின் வேஷம் தரித்தவர்கள் என்றும் அவர்களிடம் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்தினார்.
கூட்டணி என்பது தேர்தல் சமயத்தில், கட்சிகளுக்கு இடையே ஏற்படுத்திக் கொள்கின்ற ஒப்பந்தம் மட்டுமே. அது சூழ்நிலைக்கு ஏற்ப அமைக்கப்படுகிறது. கொள்கை என்பது எங்களது கட்சியின் உயிர் மூச்சு போன்றது.
அ.தி.மு.க. தனது கொள்கையில் உறுதியாக உள்ளது. தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்ற அடிப்படையில்தான் கூட்டணி வைத்து உள்ளோம்.
ஜெயலலிதா. தி.மு.க. எனும் தீய சக்தியை எதிர்த்து ஜெயலலிதா போராடினார்.
தீயசக்திகளிடம் ஏமாந்து போய்விட்டால் விடியல் என்பதே இருக்காது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அ.தி.மு.க. பாடுபடும் இயக்கம் என தெரிவித்தார்.
- பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியா நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.
- பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா-ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
மஸ்கட்:
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக நேற்று ஓமன் நாட்டுக்குச் சென்றார். அவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதற்கிடையே, பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா-ஓமன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
இந்நிலையில், பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருதான 'ஆர்டர் ஆப் ஓமன்' என்ற விருது வழங்கப்பட்டது.
இருதரப்பு உறவை வலுப்படுத்த பிரதமர் மோடி அளித்த பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் இவ்விருதை பிரதமர் மோடிக்கு வழங்கினார்.
ஓமன் அளித்த இந்த விருதுடன் சேர்த்து 29 வெளிநாடுகளின் உயரிய விருதுகளை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.
ஏற்கனவே ராணி இரண்டாம் எலிசபெத், நெதர்லாந்து ராணி மேக்சிமா, ஜப்பானின் பேரரசர் அகிஹிட்டோ, நெல்சன் மண்டேலா மற்றும் ஜோர்டான் மன்னர் அப்துல்லா ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்தப் பட்டியலில் பிரதமர் மோடியும் இடம் பெற்றுள்ளார்.
சமீபத்தில், அவருக்கு எத்தியோப்பியா, குவைத் ஆகிய நாடுகளின் உயரிய விருதுகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- இது எனது 100வது படம். சிவகார்த்திகேயனின் 25வது படம் என ஜிவி பிரகாஷ் தெரிவித்தார்.
- பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் பாடியுள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடித்துள்ள படம், 'பராசக்தி'. இது சிவகார்த்திகேயனின் 25வது படம்.
ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரித்துள்ள இப்படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாயகியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் ரிலீஸாக உள்ளது.
இதனிடையே இப்படத்தின் அடி அலையே, ரத்னமாலா பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடலான, நமக்கான காலம் பாடல் வெளியாகி உள்ளது. இப்பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதன் ஒருபகுதியாக, இன்று மாலை 5 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பராசக்தி படத்தின் #WorldOfParasakthi என்ற நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்றது. இதில் பராசக்தி படக்குழுவினர் கலந்து கொண்டு தங்களது அனுபவத்தை பகிர்ந்தனர்.
இதில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் "இயக்குநர் சுதா கொங்கரா தான் எனக்கு முதல் தேசிய விருது வாங்கிக் கொடுத்தவர். அதனால் அவரது படம் என்றால் எனக்கு தனி மகிழ்ச்சி வந்துவிடுகிறது. ஏற்கனவே பல பீரியாடிக் படங்கள் செய்து விட்டேன். இது எனது 100வது படம். சிவகார்த்திகேயனின் 25வது படம். இந்த படத்தில் எனக்காக இசையமைப்பாளர்களும் பாடல்கள் பாடிக் கொடுத்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா மற்றும் ஷான் ரோல்டனுக்கு நன்றிகள். அதேபோல் இந்த படத்தில் ஒரு பாடல் பாடியுள்ள படத்தின் நாயகன் சிவகார்த்திகேயனுக்கும் நன்றி. அந்த பாடலும் விரைவில் வெளியாகும்" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து பேசிய சிவகார்த்திகேயன், "பராசக்தி' படம் அனைவரையும் கவரும் படமாக உருவாகியுள்ளது. வள்ளுவர் கோட்டத்தில் இப்படத்தின் விழா நடப்பது சிறப்பான அனுபவமாக உள்ளது" என்று தெரிவித்தார்.
- இயேசுவின் வாழ்க்கையில் முக்கியமாக இருந்தது அவரது எளிமைதான்.
- இயேசுவின் மற்றொருக் கொள்கையான பகிர்வின் அடிப்படையில்தான் எல்லோருக்கும் எல்லாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்திவருகிறார்.
மதுரையில் திமுக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது
"கிறிஸ்தவக் கொள்கைகளுக்கும், திராவிட இயக்க கொள்கைகளுக்கும் மிகப்பெரிய வேறுபாடு கிடையாது. இரண்டுமே எல்லா நேரத்திலும் அன்பை, மனிதநேயத்தை, சமத்துவத்தைதான் மற்றவர்களிடம் காட்டவேண்டும் என்பதைத்தான் வலியுறுத்துகிறது.
உலகத்தில் உள்ள எல்லா நாடுகளிலும், எல்லா மக்களாலும் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது என்றால், அது இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாள்தான். அதைவிட முக்கியம் அவரது பிறந்தநாளை மட்டும் கொண்டாடினால் போதாது, அவரது கருத்துகளையும் பின்பற்றவேண்டும். ஏனெனில் இயேசுவின் வாழ்க்கையில் முக்கியமாக இருந்தது அவரது எளிமைதான்.
மக்களுக்கான தலைவர்கள் எப்போதும் அரண்மனையில்தான் இருப்பார்கள் என்ற கருத்தை தனது பிறப்பால் உடைத்தவர்தான் இயேசு. சாதாரண பின்புலத்தில் இருந்து வந்தால்கூட உழைத்தால் உயரலாம் என்பது நமது திராவிட இயக்கம். இயேசு கிறிஸ்துவை போல. அதற்கு எடுத்துக்காட்டு நமது பேரறிஞர் அண்ணா, பெரியார், கருணாநிதி. இவர்கள் எல்லாம் மக்களோடு மக்களாக வளர்ந்தவர்கள்.
அதுபோல இரக்கம் என்பது எல்லோரிடத்திலும் இருக்கவேண்டும் என கிறிஸ்தவம் கூறுகிறது. அதைத்தான் நமது திராவிடமும் வலியுறுத்தி வருகிறது. ஆனால் மத்தியில் இருப்பவர்களுக்கு இரக்க உணர்வைவிட வெறுப்புணர்வுதான் அதிகம் இருக்கிறது. குறிப்பாக தமிழ்நாடு மீதும், தமிழ்நாட்டு மக்கள்மீதும். மதம், மொழி, சாதியின்பேரில் வெறுப்புணர்வை பரப்புகின்றனர். தமிழ்நாட்டில் அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி எப்போதும் நிறைவேறாது. ஏனெனில் தமிழ்நாடு எப்போதும் ஒரு தனித்துவமான மாநிலம்.
இயேசுவின் மற்றொருக் கொள்கையான பகிர்வின் அடிப்படையில்தான் எல்லோருக்கும் எல்லாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்திவருகிறார். ஆனால் பகிர்வு என்றாலே மத்திய அரசுக்கு பிடிக்காது. திமுக கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மை மக்களுக்கும் எப்போதும் ஒரு பாதுகாப்பு அரணாகத்தான் இருந்துள்ளது" என தெரிவித்தார்.
- நீதிமன்றங்களின் மீது நம் அனைவருக்கும் முழு நம்பிக்கை இருக்கிறது.
- இது போன்ற முடிவுகள், எப்போதும், எதற்காகவும் வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றாததை கண்டித்து மதுரையில் முருக பக்தர் பூர்ண சந்திரன் தீக்குளித்து உயிரிழந்ததாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலை தீபத்தூணில் தீபம் ஏற்றுவதைத் தடை செய்த திமுக அரசைக் கண்டித்து, மதுரை மாநகர் நரிமேடு பகுதியை சேர்ந்த தீவிர முருக பக்தர், சகோதரர் திரு. பூர்ண சந்திரன், தீக்குளித்து உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.
வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்றங்களின் மீது நம் அனைவருக்கும் முழு நம்பிக்கை இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், இது போன்ற வருந்தத்தக்க முடிவை, சகோதரர் திரு. பூர்ண சந்திரன் அவர்கள் எடுத்திருப்பது மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது. ஒவ்வொருவரும், அவர்களது குடும்பத்தினருக்கு முக்கியம். இது போன்ற முடிவுகள், எப்போதும், எதற்காகவும் வேண்டாம் என்று அனைவரிடமும் பணிவாகக் கேட்டுக் கொள்கிறேன்.
சகோதரர் திரு. பூர்ண சந்திரன் அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து தருமாறு, மதுரை பாஜக சகோதரர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
சகோதரர் திரு. பூர்ண சந்திரன் அவர்கள் ஆன்மா, முருகன் திருப்பாதங்களை அடைய வேண்டிக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- திருப்பரங்குன்றம் விவகாரத்தை மையமாக வைத்து தான் கந்தன் மலை என்ற படத்தை உருவாக்கியுள்ளனர்.
- கந்தன் மலை படத்தில் பாஜக உறுப்பினர் எச்.ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அண்மையில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவை அகற்ற வேண்டும் என்று இந்துத்துவ அமைப்புகள் போராட்டம் நடத்தின. அப்போது திருப்பரங்குன்றம் என்பது கந்தர் மலை, அது சிக்கந்தர் மலை அல்ல என்று எச். ராஜா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
தற்போது சிக்கந்தர் தர்கா அருகே உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவேண்டும் என்று இந்துத்துவ அமைப்பினர் அண்மையில் பிரச்சனை கிளப்பினர்.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் விவகாரத்தை மையமாக வைத்து தான் கந்தன் மலை என்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். இதில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் எச் ராஜா முறுக்கு மீசையுடன் கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் இருந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், கந்தன்மலை திரைப்படம் நாளை (டிசம்பர் 19) தாமரை யூடியூப் சேனலில் வெளியாகவுள்ளதாக எச் ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
- இந்தச் சட்டம் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கக்கூடும்
- பொது இடங்களில் பேசப்படும் உரைகள் மட்டுமின்றி, புத்தகங்கள், சமூக ஊடகங்கள் (வாட்ஸ்அப், வீடியோக்கள்) மற்றும் மின்னணு ஊடகங்கள் மூலம் பகிரப்படும் வெறுப்புச் செய்திகளுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும்
மதம், சாதி ரீதியாக வெறுப்பைப் பரப்பி இருதரப்பினர் இடையான இணக்கத்தை குலைக்கும் வகையில் பேசுவது, எழுதுவது ஆகியவற்றை குற்றமாக்கி கர்நாடக அரசு சட்டம் இயற்றியுள்ளது. ஏப்ரல் மாதம் அஷ்ரஃப் என்ற முஸ்லிம் நபர் அடித்துக் கொல்லப்பட்டதில் தொடங்கி, கடலோர கர்நாடகாவில் தொடரும் வகுப்புவாதக் கொலைகளைத் தொடர்ந்து இந்த சட்டத்தை கர்நாடக அரசு இயற்றியது.
கர்நாடக சட்டமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும்நிலையில், வெறுப்புப் பேச்சு மற்றும் வெறுப்புக் குற்றங்கள் தடுப்பு மசோதா 2025 கடந்த டிச.10ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. மதம், இனம், சாதி அல்லது சமூகம், பாலினம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி, என எவை வைத்தும் ஒருவரை இழிவாகப் பேசினால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவர்.
இது இந்துக்களை குறிவைத்து இயக்கப்பட்டது என்றும், இந்தச் சட்டம் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கக்கூடும் என்றும், அரசியல் பழிவாங்கலுக்குப் பயன்படுத்தப்படலாம் என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தநிலையில், இன்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
கர்நாடக சட்டப்பேரவையில் இந்த மசோதாவை விளக்கிப் பேசிய மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா, "சமீப காலங்களில், சமூகத்தைப் புண்படுத்தும் கருத்துகளை பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்தப் போக்கு கணிசமாக அதிகரித்துள்ளது. இவற்றால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது நமக்குத் தெரியாது" என்று கொலைகள், தாக்குதல்கள் மற்றும் அதிகரித்து வரும் சமூக பதற்றங்களைக் குறிப்பிட்டு அவர் கூறினார்.
பொது இடங்களில் பேசப்படும் உரைகள் மட்டுமின்றி, புத்தகங்கள், சமூக ஊடகங்கள் (வாட்ஸ்அப், வீடியோக்கள்) மற்றும் மின்னணு ஊடகங்கள் மூலம் பகிரப்படும் வெறுப்புச் செய்திகளுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும். வெறுப்புப் பேச்சில் ஈடுபடும் அமைப்புகள் அல்லது குழுக்களின் மீது நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது.
தண்டனை
இந்த மசோதா சட்டமாக மாறும்பட்சத்தில் குற்றத்தில் ஈடுபட்டால் முதல்முறை 1 முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதிக்கப்படும். தொடர்ந்து மீண்டும் குற்றத்தில் ஈடுபட்டால், 2 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.
- முதலில் பேட்டிங் செய்த ஜார்க்கண்ட் அணி 262 ரன்கள் குவித்தது.
- அதிரடியாக விளையாடிய கேப்டன் இசான் கிசான் 49 பந்துகளில் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்
உள்நாட்டில் நடைபெறும் சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த 2006ம் ஆண்டு முதல் ஆடப்பட்டு வருகின்றன. இதில் 38 அணிகள் ஆடி வருகின்றன. கடைசியாக 2024ல் நடந்த போட்டியில் மும்பை அணி அபார வெற்றி கண்டு சாம்பியன் பட்டத்தை பெற்றது. இந்தப் போட்டிகளில் அதிகபட்சமாக தமிழ்நாடு 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இந்தாண்டு இதுவரை நடந்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட ஜார்க்கண்ட் மற்றும் அரியானா அணிகள் இறுதிப்போட்டியில் தகுதி பெற்றன.
சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான இறுதிப் போட்டி புனே நகரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற அரியானா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய ஜார்க்கண்ட் அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. அதிரடியாக விளையாடிய கேப்டன் இசான் கிசான் 49 பந்துகளில் 101 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய குமார் குஷாக்ரா 38 பந்துகளில் 81 ரன்கள் குவித்து அவுட்டானார்.
20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு ஜார்க்கண்ட் அணி 262 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 263 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய அரியானா அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜார்க்கண்ட் அணி தனது முதல் சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்றது.
- மாநிலங்கள் மீது கடுமையான நிதிச்சுமைகளை சுமத்துவதுடன் கூட்டாட்சி தத்துவத்தை அழிக்கும் வண்ணம் உள்ளது
- 2023-24 ஆண்டில் மட்டும் 40.87 கோடி மனிதநாட்கள் உருவாக்கப்பட்டு, தொழிலாளர்களுக்கு 13,400 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதி சட்டத்தை இரத்து செய்து அதற்கு பதிலாக விபிஜி ராம்ஜி என்ற புதிய சட்டமுன்வடிவை கொண்டுவருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், 2005 (MGNREGA)-ஐ இரத்து செய்து, அதற்குப் பதிலாக Viksit Bharat Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB-G RAM G), 2025 சட்டமுன்வடிவினை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியதற்கு தமிழ்நாடு அரசின் ஆழ்ந்த கவலையையும், கடுமையான எதிர்ப்பையும் தெரிவிப்பதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உருவாக்கச் (MGNREGA) சட்டமானது இந்தியாவின் கிராமப்புற வாழ்வாதார பாதுகாப்பில் ஒரு மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், இது வேலைவாய்ப்பை வழங்கும் உத்தரவாதத்தை கோடிக்கணக்கான கிராமப்புற குடும்பங்களுக்கு வழங்குவதாக குறிப்பிட்டுள்ள அவர், தமிழ்நாட்டில், இந்தத் திட்டம் 2006 முதல் செயல்படுத்தப்பட்டு, ஆண்டிற்கு சராசரியாக 30 கோடி மனித-வேலைநாட்கள் வேலைவாய்ப்பை உருவாக்கி, சுமார் 12,000 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
2021-22 முதல் 2024-25ஆம் ஆண்டுவரை, சராசரியாக 30 கோடி மனித-வேலைநாட்கள் வேலையை வழங்கியுள்ளதாகவும், 2023-24 ஆண்டில் மட்டும் 40.87 கோடி மனிதநாட்கள் உருவாக்கப்பட்டு, தொழிலாளர்களுக்கு 13,400 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். பாசனத்திற்கு ஜீவ நதிகள் இல்லாத பகுதிகளிலும், விவசாயப் பகுதிகளில் மழை குறைவாக பெய்யும் காலங்களிலும், பட்டியல் இன மக்கள் உட்பட பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு இத்தகைய வேலை முறையே வருமானத்திற்கு முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது என்று தனது கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சட்டமுன்வடிவில் உத்தரவாத வேலைவாய்ப்பை ஆண்டுக்கு 125 நாட்களாக அதிகரித்திருப்பது ஒரு வரவேற்கத்தக்க அம்சமாக இருந்தாலும், அதன் மற்ற விதிகள் இந்தத் திட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளை பலவீனப்படுத்துவதாக உள்ளதுடன் மாநிலங்கள் மீது கடுமையான நிதிச்சுமைகளை சுமத்துவதுடன் கூட்டாட்சி தத்துவத்தை அழிக்கும் வண்ணம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இச்சட்டமுன்வடிவு மாநிலங்களின் நிதியையும், நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஏழை கிராமப்புறத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கும் என்றும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேவை அடிப்படையிலான ஒதுக்கீட்டிலிருந்து விநியோக அடிப்படையிலான ஒதுக்கீட்டிற்கு மாறுதல்:
இந்த சட்டமுன்வடிவில், ஒன்றிய அரசால் பரிந்துரைக்கப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் மாநிலவாரியான திட்ட ஒதுக்கீடுகளை நிர்ணயிக்க ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் உள்ளது. இது செலவினங்களுக்கு வரம்பு விதித்து, கூடுதல் செலவுகளை மாநிலங்களே ஏற்க வேண்டும் என்றும் கோருவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் தேவை அடிப்படையிலான தன்மையிலிருந்து மாறுபடுகிறது. காலநிலை மற்றும் புவியியல் காரணங்களால் தேவை அதிகமாக உள்ள தமிழ்நாட்டில், இத்தகைய நிர்ணயம் (உள்ளூர் தேவைகளைக் கருத்தில் கொள்ளாமல், மக்கள் தொகையின் அடிப்படையில் கணக்கிடுவர்) வேலை நாட்களையும் கூலியையும் குறைத்து, கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு பெருத்த இன்னல்களை ஏற்படுத்தும்.
மாநிலங்கள் மீது அதிகரிக்கும் நிதிச்சுமை:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ், திறனற்ற தொழிலாளர்களுக்கான ஊதியச் செலவுகள் மற்றும் நிருவாகச் செலவுகள் முழுவதையும் ஒன்றிய அரசு ஏற்கிறது, மேலும் மூலப்பொருட்களுக்கான செலவில் 75:25 என்ற விகிதத்தில் பகிர்ந்துகொள்கிறது. ஆனால் இந்த புதிய சட்ட முன்வடிவில் ஊதியம், மூலப்பொருட்கள் மற்றும் நிருவாகம் ஆகியவற்றுக்கான புதிய 60:40 நிதிப்பங்கீட்டு முறை, ஏற்கெனவே நிதி நெருக்கடியைச் சந்தித்து வரும் பல மாநிலங்கள் மீது பெரும் கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.
அதிகப்படியான மையப்படுத்தல்;
இந்த சட்ட முன்வடிவின்படி வேலை உறுதியளிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பகுதிகளை அறிவிக்கவும், திட்டங்களை தேசிய அமைப்புகளுடன் ஒருங்கிணைக்கவும் ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் விதிகள், கிராம ஊராட்சிகளின் பரவலாக்கப்பட்ட திட்டமிடலைக் குறைத்து, அடிமட்ட ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் வகையில் உள்ளன.
மகாத்மா காந்தியின் பெயரை நீக்குதல்:
MGNREGA திட்டத்தின் பெயரை மாற்றுவது, மகாத்மா காந்தியின் கிராம சுயராஜ்ஜியம் மற்றும் அதிகாரப்பரவல் பற்றிய தொலைநோக்குப் பார்வையை சிதைக்கும் வண்ணம் உள்ளது.
எனவே, மேற்குறிப்பிட்ட மாற்றங்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரசு வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் அடிப்படையான தன்மையை மாற்றி, அதை ஒன்றிய அரசால் கட்டுப்படுத்தப்படும் வகையிலும், வரவுசெலவுத் திட்ட வரம்புக்குட்பட்ட ஒரு திட்டமாக மாற்றும் வகையில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். சமீபத்திய ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியும் இந்த சட்டமுன்வடிவானது மாநிலங்களின் வளர்ச்சி செயல்பாடுகளுக்கான வாய்ப்பைக் குறைப்பதுடன் ஜனநாயகத்தை மேம்படுத்த தடையாக அமைந்துவிடும் என்றும் பல்வேறு ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளதையும் முதலமைச்சர் தனது கடிதத்தில் கட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே, முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டமுன்வடிவானது கோடிக்கணக்கான கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்படையச் செய்து, தமிழ்நாடு போன்ற சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளையும் சீர்குலைக்கும் வகையில் உள்ளது என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, 2025 விபி-ஜி ராம் ஜி சட்டமுன்வடிவினை செயல்படுத்த வேண்டாம் என்று ஒன்றிய அரசை தாம் வலியுறுத்துவதாகவும் அதற்குப் பதிலாக, மாநிலங்களுடன் விரிவான கலந்தாலோசனைகளுக்குப் பிறகு, திருத்தங்கள் மூலம் வேலை நாட்களை 125 நாட்களாக அதிகரிப்பது மற்றும் விவசாயப் பருவகால இன்னல்களைத் தவிர்ப்பது போன்ற பிற நேர்மறையான அம்சங்களை சேர்த்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தைத் தக்கவைத்து வலுப்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தின் வாயிலாக பிரதமருக்கு வலியுறுத்தியுள்ளதுடன் நாட்டின் கிராமப்புற ஏழைகளுக்கு ஒரு வலுவான, தேவை அடிப்படையிலான வாழ்வாதாரமாகத் திகழும் கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் தொடர்வதை உறுதிசெய்திடும் பணியில் தமிழ்நாடு ஆக்கப்பூர்வமாகப் பங்கேற்கத் தயாராக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
- இந்த இயக்குநர்கள் தமிழ் சினிமாவின் வெவ்வேறு பாணிகளை பிரதிபலித்தவர்கள்
- குடும்பம், காதல் , நகைச்சுவை என பல்வேறு தளங்களில் பங்களிப்பு செய்தனர்.
2025 ஆண்டு தமிழ் திரையுலகத்துக்கு பெரும் இழப்புகளைத் தந்தது. பல திறமையான கலைஞர்கள் நம்மை விட்டுப் பிரிந்தனர், அவர்களில் இயக்குநர்களின் பட்டியல் குறிப்பிடத்தக்கது.
வி. சேகர், நாராயணமூர்த்தி, வேலு பிரபாகரன், விக்ரம் சுகுமாரன், எஸ்.எஸ். ஸ்டான்லி ஆகியோர் அந்த சோகப் பட்டியலில் இடம்பெறுகின்றனர்.
இவர்கள் தமிழ் சினிமாவின் வெவ்வேறு பாணிகளை பிரதிபலித்தவர்கள் - குடும்பம், காதல் நகைச்சுவை, சமூக விமர்சனம், யதார்த்த கதைகள் என பல்வேறு தளங்களில் பங்களிப்பு செய்தனர்.
இக்கட்டுரையில் அவர்களின் திரைப்பயணம், சாதனைகள் குறித்து பார்ப்போம்.

1. வி.சேகர்:
நடுத்தர குடும்பங்களின் கதை சொல்லியான வி. சேகர் 1952ஆம் ஆண்டு பிறந்தார். தமிழ் சினிமாவின் 90கள் மற்றும் 2000களின் குடும்ப நாடகங்களின் மாஸ்டராக திகழ்ந்தார்.
அவர் நடுத்தர குடும்பங்களின் போராட்டங்கள், உணர்ச்சிகள் மற்றும் சமூக அக்கறையை தனது படங்களில் சித்தரித்தார். அவரது திரைப்பயணம் 1980களின் பிற்பகுதியில் தொடங்கியது, ஆனால் 1990களில் பிரபலமானார்.
இவர் இயக்கிய காலம் மாறிப்போச்சு, விரலுக்கேத்த வீக்கம், வரவு எட்டனா செலவு பத்தனா உள்ளிட்ட பல படங்கள் இன்றும் மக்களிடையே ரசிக்கப்படுகின்றன.
அவரது படங்கள் சமூக உணர்வுள்ள குடும்ப பொழுதுபோக்குகளாக இருந்தன, நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையை யதார்த்தமாகக் காட்டின. அவர் இயக்கிய படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக 90களின் குடும்ப திரைப்படங்களின் போக்கை மாற்றின.
துரதிர்ஷ்டவசமாக, 2025 நவம்பர் 14ஆம் தேதி, 73 வயதில் சென்னையின் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இழப்புக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

2. நாராயணமூர்த்தி
இயக்குநர் நாராயணமூர்த்தி 1966ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். தமிழ் சினிமாவின் ரொமாண்டிக் காமெடி படங்களுக்கு பெயர் பெற்றவர்.
அவரது திரைப்பயணம் 2001இல் 'மனதை திருடி விட்டாய்' என்ற படத்துடன் தொடங்கியது, இது பிரபு தேவா, வடிவேலு நடிப்பில் வெளியாகி பெரும் ஹிட் அடித்தது.
இதனை தொடர்ந்து தொடர்ந்து சன் டி.வி.யில் வெளிவந்த நந்தினி, ராசாத்தி, ஜிமிக்கி கம்மல், அன்பே வா, மருமகளே வா போன்ற சின்னத்திரை தொடர்களையும் அவர் இயக்கி உள்ளார்.
2025 செப்டம்பர் 23ஆம் தேதி, 59 வயதில் இதய நோய் காரணமாக சென்னை ஓமந்தூரர் மருத்துவமனையில் காலமானார்.

3. வேலு பிரபாகரன்
புரட்சிகர சினிமாவின் இயக்குநரான வேலு பிரபாகரன் 1957ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், சினிமாட்டோகிராஃபராக பல்துறை திறமை கொண்டவர்.
அவரது திரைப்பயணம் 1980களில் தொடங்கியது, சமூக விமர்சனம் மற்றும் புரட்சிகர கருத்துகளை படங்களில் கொண்டு வந்தார்.
'நாளைய மனிதன்' (1985), 'புரட்சிக்காரன்', 'அசுரன்', 'ராஜலி' ஆகிய அவரது படங்கள் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் அமைந்தன.
அவர் நடிகராகவும் பல படங்களில் தோன்றினார்.2025 ஜூலை 18ஆம் தேதி, 68 வயதில் நீண்ட நோய் காரணமாக சென்னையில் காலமானார். இதனால் தமிழ் சினிமாவின் புரட்சிகர குரல் அமைதியானது.

4. விக்ரம் சுகுமாரன்
யதார்த்த கதைகளின் இளம் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் 1978ஆம் ஆண்டு பிறந்தார். பாலு மகேந்திராவின் உதவியாளராக திரை வாழ்க்கையை தொடங்கியவர்.
அவரது திரைப்பயணம் 2013இல் 'மதயானை கூட்டம்' என்ற படத்துடன் தொடங்கியது, இது டிராமா திரில்லர் வகை. மற்றொரு படம் 'ராவண கோட்டம்' (2023), யதார்த்த கதைகள் மற்றும் சமூக இழைகளை கொண்டது.
அவரது படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டவை, இளம் தலைமுறை இயக்குநர்களுக்கு உத்வேகம் அளித்தது.
2025 ஜூன் 2ஆம் தேதி, 47 வயதில் மதுரையிலிருந்து சென்னைக்கு பேருந்தில் பயணிக்கும்போது திடீர் இதய நிறுத்தம் காரணமாக காலமானார். இளம் வயதில் அவரது இழப்பு தமிழ் சினிமாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

5. எஸ்.எஸ்.ஸ்டான்லி
இளைஞர் கதைகளின் இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்.எஸ். ஸ்டான்லி 1967 டிசம்பர் 14ஆம் தேதி மூணாறில் பிறந்தார்,. இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், நடிகர் பன்முக வித்தகராக திகழ்ந்தார்.
அவரது திரைப்பயணம் 2000களில் தொடங்கியது, இளைஞர்களின் கதைகளை மையமாகக் கொண்ட படங்கள் இயக்கினார். 2002-ம் ஆண்டு ஸ்ரீகாந்த், சிநேகா நடிப்பில் வெளியான 'ஏப்ரல் மாதத்தில்' படத்தை இயக்கியர் எஸ்.எஸ். ஸ்டான்லி. இவர் அடுத்து தனுஷை வைத்து 'புதுக்கோட்டையிலிருந்து சரவணன்' படத்தையும், 'மெர்குரி', 'கிழக்கு கடற்கரை சாலை' உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார்.
இதனிடையே, 'பெரியார்' படத்தில் அறிஞர் அண்ணா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின், ராவணன், ஆண்டவன் கட்டளை, சர்கார், பொம்மை நாயகி, மகாராஜா உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.
2025 ஏப்ரல் 15ஆம் தேதி, 57 வயதில் சிறுநீரக பிரச்சினை காரணமாக சென்னையில் காலமானார். தனுஷ் அவருக்கு மருத்துவ உதவி செய்தார். கொலிவுட் அஞ்சலி செலுத்தியது.

முடிவுரை:
2025 ஆண்டு தமிழ் சினிமாவுக்கு சோகமானது, இந்த இயக்குநர்களின் இழப்பு பெரும் வெற்றிடத்தை உருவாக்கியது.
வி. சேகரின் குடும்ப நாடகங்கள், நாராயணமூர்த்தியின் காதல் நகைச்சுவை, வேலு பிரபாகரனின் புரட்சி, விக்ரம் சுகுமாரனின் யதார்த்தம், ஸ்டான்லியின் இளைஞர் கதைகள் என அவர்களின் பங்களிப்பு வேறுபட்டவை. ஆனால் காலத்தால் அழியாதவை. அவர்களின் படைப்புகள் புதிய தலைமுறைக்கு உத்வேகமாக இருக்கும்....
- "இன்னும் எவ்வளவு நாள் ஆம் ஆத்மியையே குறைக்கூறி கொண்டு இருப்பீர்கள்?
- டெல்லி ஒரு gas chamber-ஆக மாறி உள்ளது
டெல்லியில் தொடர்ந்து காற்று மாசுபாடு அதிகரித்து வரும்நிலையில் மத்திய அரசும், மாநில அரசும் தேவையான நடவடிக்கைகளை எடுத்தால் நிலைமை சீரடையும் என அம்மாநில முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி ஒரு gas chamber-ஆக மாறியிருக்கும்போது பிரதமர் மௌளம் காத்து வருவதாக குற்றம் சாட்டினார். மத்தியில் மற்றும் மாநிலத்தில் ஆளும் பாஜக இந்த விவகாரத்தில் போதுமான அக்கறை காட்டவில்லை எனவும் குற்றம் சாட்டினார். மேலும் மாசுபாடு குறித்த பொது விவாதத்திற்கு தானும், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானும் தயாராக இருப்பதாகவும், பாஜக தனது அமைச்சர்களை அனுப்பவேண்டும் எனவும் சவால் விடுத்தார்.
"இன்னும் எவ்வளவு நாள் ஆம் ஆத்மியையே குறைக்கூறி கொண்டு இருப்பீர்கள்?" என்று கேட்ட அவர், ஆம் ஆத்மி அரசின் கீழ் பஞ்சாபில் பராலி எரிப்பு 90 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் ஆம் ஆத்மி ஆட்சியின் போது டெல்லி இவ்வளவு கடுமையான மாசுபாட்டைக் கண்டதில்லை என்றும், தனது அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்ததாகவும் தெரிவித்தார். ஆனால் பாஜகவின் கவனம் AQI புள்ளிவிவரங்களை நிர்வகிப்பதில்தான் இருக்கிறது எனவும் தெரிவித்தார்.
மேலும் தனது எக்ஸ் பக்கத்தில் காற்று மாசு தொடர்பாக பதிவிட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால்,
'ஓமனில் பிரதமர், ஜெர்மனியில் எதிர்க்கட்சித் தலைவர், மாசில் தேசத்தின் தலைநகர்' எனவும் குறிப்பிட்டுள்ளார்.
- டெல்லி கார் குண்டு சம்பவத்தில் தாக்குதல் நடத்திய நபர் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.
- சக்திவாய்ந்த வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
2025-ஆம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவம், இந்தியாவின் அண்மைக்கால வரலாற்றில் ஒரு மிக முக்கியமான மற்றும் அதிர்ச்சியளிக்கும் பயங்கரவாதத் தாக்குதலாகும்.
கடந்த நவம்பர் 10ம் தேதி அன்று மாலை சரியாக 6.52 மணிக்கு பழைய டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் வாசல் எண் 1க்கு அருகில் உள்ள போக்குவரத்து சிக்னலில், வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரைப் பயன்படுத்தி நடந்த தற்கொலைத் தாக்குதல் நாட்டையே அதிரச் செய்தது.

இந்த கோரச் சம்பவத்தில் தாக்குதல் நடத்திய நபர் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள லோக் நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பந்தப்பட்ட கார், அரியானா மாநிலப் பதிவு எண் கொண்ட வெள்ளை நிற ஹூண்டாய் i20 ஆகும். இதில் அம்மோனியம் நைட்ரேட் உள்ளிட்ட சக்திவாய்ந்த வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

குண்டுவெடிப்பின் தாக்கத்தால் அருகில் இருந்த 6 கார்கள், 2 ஈ-ரிக்ஷாக்கள் மற்றும் ஒரு ஆட்டோ ரிக்ஷா என சுமார் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீப்பற்றி எரிந்து நாசமாயின.
இந்த சம்பவம் தொடர்பாக, தேசிய புலனாய்வு முகமை மற்றும் டெல்லி போலீசார் நடத்திய விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்தன.
அதன்படி, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த மருத்துவர் உமர் உன்-நபி (Dr. Umar-un-Nabi). இவர் அரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள அல்-ஃபலா (Al-Falah) பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார்.
சம்பவத்தன்று பிற்பகல் 3:19 மணிக்கே செங்கோட்டைப் பகுதிக்கு வந்த உமர், சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக வாகன நிறுத்துமிடத்தில் காத்திருந்துள்ளார். திங்கட்கிழமை என்பதால் செங்கோட்டை மூடப்பட்டிருந்தது அவருக்குத் தெரியவில்லை என சந்தேகிக்கப்படுகிறது.

இது ஒரு "White-collar terror" (கல்வி கற்றவர்களால் நடத்தப்படும் பயங்கரவாதம்) என பாதுகாப்பு அமைப்புகள் வகைப்படுத்தியுள்ளன. இந்தத் தாக்குதலில் உமருடன் தொடர்புடைய மேலும் சில மருத்துவர்கள் மற்றும் படித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ஃபரிதாபாத்தில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 2,900 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த கும்பலுக்கும் இந்த குண்டுவெடிப்புக்கும் நேரடி தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மத்திய அரசு இச்சம்பவத்தை அதிகாரப்பூர்வமாக ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என அறிவித்தது. உமர் உன்-நபிக்கு உதவியதாக இன்று கைது செய்யப்பட்ட நபருடன் சேர்த்து இதுவரை 9 பேர் கைதாகியுள்ளனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள் மற்றும் மெட்ரோ நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.






