என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
- பீட்டா டெஸ்டர்கள் மற்றும் டெவலப்பர்கள் மட்டுமின்றி இந்த அப்டேட் பொது மக்களுக்கும் வெளியிடப்பட்டு வருகிறது.
- ஐஒஎஸ் 16.4.1 மற்றும் ஐபேட் ஒஎஸ் 16.4.1 வெர்ஷன்களுக்கு இந்த ஆர்எஸ்ஆர் அப்டேட் வழங்கப்பட்டு வருகிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது வரலாற்றிலேயே முதல் முறை காரியம் ஒன்றை செய்திருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் முதல் முறையாக ரேபிட் செக்யுரிட்டி ரெஸ்பான்ஸ் (ஆர்எஸ்ஆர்) அப்டேட்டை வெளியிட்டுள்ளது. பீட்டா டெஸ்டர்கள் மற்றும் டெவலப்பர்கள் மட்டுமின்றி இந்த அப்டேட் பொது மக்களுக்கும் வெளியிடப்பட்டு வருகிறது.
ஐஒஎஸ் 16.4.1 மற்றும் ஐபேட் ஒஎஸ் 16.4.1 வெர்ஷன்களுக்கு இந்த ஆர்எஸ்ஆர் அப்டேட் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அடுத்த 48 மணி நேரத்திற்குள் இந்த அப்டேட் வெளியிடப்பட்டுவிடும். ஆர்எஸ்ஆர் அப்டேட்டை வெற்றிகரமாக இன்ஸ்டால் செய்த பின் உங்களது ஐபோன் அல்லது ஐபேட்-இன் அபௌட் பகுதியில் ஐஒஎஸ் 16.4.1 (a) அல்லது ஐபேட் ஒஎஸ் 16.4.1 (a) என்று காண்பிக்கப்படும்.

ஆர்எஸ்ஆர் அப்டேட்கள் தானாகவே உங்களின் சாதனங்களில் இன்ஸ்டால் செய்யப்பட்டு விடும். இதுபோன்ற அப்டேட்கள் அனைத்திற்கும் சாதனம் ரிஸ்டார்ட் ஆகாது. ஆனாலும் சில சாதனங்கள் ரிஸ்டார்ட் ஆகலாம். அப்டேட் இன்ஸ்டால் செய்யப்பட்டதும், ரிஸ்டார்ட் செய்யக் கோரும் ஆப்ஷன் திரையில் தோன்றும். ஆர்எஸ்ஆர் அப்டேட்கள் தானாக இன்ஸ்டால் ஆவதை தடுப்பதற்கான வசதி செட்டிங்ஸ்-இல் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆனால், இவ்வாறு செய்வது பரிந்துரைக்கப்படாத ஒன்றாகும். ஆர்எஸ்ஆர் அப்டேட்கள் மூலம் மிகமுக்கிய செக்யுரிட்டி மேம்படுத்தல்கள் வழங்கப்படும். இதுபோன்ற அப்டேட் பாதுகாப்பு எச்சரிக்கைகள் அல்லது செக்யுரிட்டி சார்ந்த பிரச்சினைகளை விரைந்து சரிசெய்யும் நோக்கில் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் சாதனத்தின் பாதுகாப்பு கருதி இந்த அம்சம் செயல்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதே சிறந்தது.
இன்றைய ஆர்எஸ்ஆர் அப்டேட் சில நிமிடங்களில் டவுன்லோட் மற்றும் இன்ஸ்டால் ஆகிவிடும். இந்த அப்டேட் இன்ஸ்டால் செய்தபின் சாதனம் ரிஸ்டார்ட் ஆகும். சமீபத்திய ஐஒஎஸ் மற்றும் ஐபேட் ஒஎஸ் கொண்ட சாதனங்களில் மட்டுமே ஆர்எஸ்ஆர் அப்டேட் வழங்கப்படும்.
Photo Courtesy: 9To5Mac
- புதிய அம்சம் ஸ்கிரீனை பிரித்து, பல்வேறு உரையாடல்களை ஒரே சமயத்தில் பயன்படுத்த வழி செய்கிறது.
- உரையாடல்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவற்றின் அளவு குறைந்து கொண்டே வரும்.
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு டேப்லெட் வெர்ஷனில் சைட்-பை-சைட் பெயரில் புதிய அம்சம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த அம்சம் ஏற்கனவே உள்ள சாட்களை திரையின் ஒருபகுதியில் வைத்துக் கொண்டு மேலும் அதிக சாட்களுக்கு பதில் அனுப்பவும், சாட் செய்யவும் உதவுகிறது. இதன் மூலம் ஆண்ட்ராய்டு டேப்லெட் ஸ்கிரீனில் பல்வேறு சாட்களை ஒரே சமயத்தில் பயன்படுத்தலாம்.
புதிய அம்சம் ஸ்கிரீனை பிரித்து, பல்வேறு உரையாடல்களை ஒரே சமயத்தில் பயன்படுத்த வழி செய்கிறது. ஒரே சமயம் பலருக்கு குறுந்தகவல் அனுப்பும் வழக்கம் கொண்டிருப்போருக்கு இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும். எனினும், இவ்வாறு செய்யும் போது உரையாடல்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவற்றின் அளவு குறைந்து கொண்டே வரும்.

இந்த அம்சம் வேண்டாம் என்பவர்கள் அதனை டிசேபில் (செயலிழக்க) செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. இவ்வாறு செய்ய வாட்ஸ்அப் செட்டிங்ஸ் -- சாட்ஸ் ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும். புதிய அம்சத்திற்கான அப்டேட் தேர்வு செய்யப்பட்ட பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் அனைத்து பீட்டா பயனர்களுக்கும் இந்த அம்சம் வழங்கப்படும் என்று தெரிகிறது. இதுதவிர வாட்ஸ்அப்-இல் மல்டி-டிவைஸ் லாக்-இன் அம்சமும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதை கொண்டு பயனர்கள் பல்வேறு சாதனங்களில் ஒரே வாட்ஸ்அப் அக்கவுண்ட்-ஐ பயன்படுத்த முடியும். இந்த அம்சம் உலகளவில் பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
Photo Courtesy: WABetaInfo
- பாக்கெட்டில் இருந்து ஸ்மார்ட்போனை எடுத்து தரையில் வைத்தார்.
- ஸ்மார்ட்போன் சார்ஜரில் இணைக்கப்படாத நிலையிலும், தீப்பிடித்து எரிந்துள்ளது.
ஸ்மார்ட்போன்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கின்றன. அந்த வரிசையில் அரியானா மாநிலத்தில் சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போன் வெடித்துச் சிதறிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
கடந்த பிப்ரவரி மாத வாக்கில் ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போனினை நவீன் தஹியா என்ற நபர் வாங்கியிருக்கிறார். இந்த நிலையில், ஏப்ரல் 11 ஆம் தேதி பணியாற்றிக் கொண்டிருந்த சமயத்தில் தனது ஸ்மார்ட்போனில் இருந்து புகை வெளியேறியதை நவீன் கவனித்தார். சட்டை பாக்கெட்டில் வைக்கப்பட்டு இருந்த நிலையில், நவீன் தனது உடலில் திடீரென வெப்பத்தை உணர்ந்து இருக்கிறார்.

பின் சுதாரித்துக் கொண்ட நவீன், தனது பாக்கெட்டில் இருந்து ஸ்மார்ட்போனை எடுத்து தரையில் வைத்திருக்கிறார். ஸ்மார்ட்போன் தீப்பிடித்து எரிவதை பார்த்து நவீன் அதிர்ச்சி அடைந்தார். ஸ்மார்ட்போன் சார்ஜரில் இணைக்கப்படாத நிலையிலும், தீப்பிடித்து எரிந்துள்ளது. தீப்பிடித்து எரிந்த ஸ்மார்ட்போன் முழுமையாக சேதமடைந்துவிட்டது.
அதிர்ஷ்டவசமாக நவீனுக்கோ அல்லது அருகில் இருந்தவர்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து நவீன் ரெட்மி வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டிருக்கிறார். எனினும், நிறுவனம் தரப்பில் நவீனுக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. ஸ்மார்ட்போன் எதனால் தீப்பிடித்து எரிந்தது என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
- பயனர்கள் தங்களின் கடவுச்சொல்லை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை நெட்ஃப்ளிக்ஸ் நிறுத்துகிறது.
- கடவுச்சொல்லை மற்றவர்களுடன் பகிர்வதை கண்டறிந்து தடுக்கும் தொழில்நுட்ப முறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
நெட்ஃப்ளிக்ஸ் சேவையில் பயனர்கள் தங்களின் கடவுச்சொல்லை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நடவடிக்கைக்கு முற்றிப்புள்ளி வைக்கப் போவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த நிலையில், இந்த நடவடிக்கையை சில நாடுகளில் நெட்ஃப்ளிக்ஸ் ஏற்கனவே துவங்கி விட்டது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ள புதிய நடவடிக்கை காரணமாக சுமார் பத்து லட்சம் பயனர்களை நெட்ஃப்ளிக்ஸ் இழந்துள்ளது. 2023 முதல் காலண்டில் நெட்ஃப்ளிக்ஸ் சுமார் பத்து லட்சம் பயனர்களை இழந்துள்ளது என்று ஆய்வு நிறுவனமான கந்தர் தெரவித்து இருக்கிறது. பயனர்கள் தங்களின் கடவுச்சொல்லை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை நெட்ஃப்ளிக்ஸ் நிறுத்துவதால், பயனர் எண்ணிக்கை குறைந்திருக்கும் என்று கூறப்படுகிறது.
பயனர்கள் தங்களின் கடவுச்சொல்லை மற்றவர்களுடன் பகிர்வதை கண்டறிந்து தடுக்கும் தொழில்நுட்ப முறைகளை கடந்த பிப்ரவரி மாத வாக்கில் ஸ்பானிஷ் பயனர்களிடையே நெட்ஃப்ளிக்ஸ் செயல்படுத்தியது. மேலும் 5.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 500 கட்டணம் கொண்ட திட்டத்தை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
- பயனர்கள் அதிக சாதனங்களில் தங்களது வாட்ஸ்அப் அக்கவுண்ட்-ஐ பயன்படுத்தலாம்.
- லின்க் செய்யப்பட்ட போன் ஒவ்வொன்றும் தனித்தனியே வாட்ஸ்அப் உடன் இணைந்திருக்கும்.
வாட்ஸ்அப் செயலியில் கடந்த ஆண்டு கம்பானியன் மோட் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. இதை கொண்டு பயனர்கள் தங்களின் அக்கவுண்டை இரண்டாவதாக மற்றொரு சாதனத்தில் பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டது. முன்னதாக இம்மாத துவக்கத்தில் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் மேலும் அதிக போன்களில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டு இருந்தது.
தற்போது இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பயனர்கள் அதிக சாதனங்களில் தங்களது வாட்ஸ்அப் அக்கவுண்ட்-ஐ பயன்படுத்தலாம். அதாவது ஒரே மொபைல் நம்பர் கொண்ட வாட்ஸ்அப் அக்கவுண்ட்-ஐ அதிகபட்சம் நான்கு சாதனங்களில் பயன்படுத்த முடியும்.

லின்க் செய்யப்பட்ட போன் ஒவ்வொன்றும் தனித்தனியே வாட்ஸ்அப் உடன் இணைந்திருக்கும். இதன் காரணமாக மெசேஞ்ச், மீடியா, அழைப்புகள் என அனைத்துமே எண்ட்-டு-எண்ட் என்க்ர்பிட் செய்யப்படுகிறது. எனினும், உங்களின் பிரைமரி சாதனம் 14 நாட்களுக்கும் அதிகமாக பயன்படுத்தப்படவில்லை எனில், மற்ற சாதனங்களில் இருந்து வாட்ஸ்அப் தானாக லாக் அவுட் செய்யப்பட்டு விடும்.
விரைவில் புதிய வசதி:
தற்போது வாட்ஸ்அப் கியூஆர் கோட் மூலம் பிரைமரி சாதனத்தில் இருந்து மற்றொரு சாதனத்தில் வாட்ஸ்அப்-ஐ இணைக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
வரும் வாரங்களில், வாட்ஸ்அப் வெப் தளத்தில் உங்களின் மொபைல் நம்பரை பதிவிட்டு அதன் பின் மொபைல் நம்பருக்கு வரும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் கொண்டு எளிமையாக லின்க் செய்துவிட முடியும். எதிர்காலத்தில் இந்த அம்சத்தில் பயன்படுத்தக்கூடிய சாதனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வாட்ஸ்அப் திட்டமிட்டு வருகிறது.
தற்போது புதிய அம்சம் உலகளவில் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வரும் வாரங்களில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்பட்டு விடும் என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.
- வி ரூ. 549 சலுகை பயனர்களுக்கு 1 ஜிபி டேட்டா, 180 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.
- வி ரூ. 368 மற்றும் ரூ. 369 விலை சலுகைகளில் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில், பிரீபெயிட் சலுகை பலன்களில் அதிகளவு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. இதுதவிர புதிய பிரீபெயிட் சலுகைகளையும் அறிவித்து வருகிறது. இந்த வரிசையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் வி ரூ. 549 சலுகை மொத்தத்தில் 180 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கிறது.
அதிக பலன்களுக்கு மாற்றாக நீண்ட நாட்கள் வேலிடிட்டி வழங்கும் வகையில், இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் தான் வி நிறுவனம் ரூ. 368 மற்றும் ரூ. 369 விலையில் சலுகைகளை அறிவித்தது. இதைத் தொடர்ந்து தற்போது நீண்ட கால வேலிடிட்டி வழங்கும் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

வி ரூ. 549 சலுகை பயனர்களுக்கு 1 ஜிபி டேட்டா, 180 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. 1 ஜிபி தவிர்த்து கூடுதல் டேட்டா வேண்டுமெனில் பயனர்கள் மற்ற டேட்டா வவுச்சர்களை வாங்கிக் கொள்ள வேண்டும். இந்த சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் பலன்கள் வழங்கப்படவில்லை என்பதால், அழைப்புகளுக்கான கட்டணம் நொடிக்கு 2.5 பைசா என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இவைதவிர இந்த சலுகையில் எஸ்எம்எஸ் பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை. வி சிம் கார்டை இரண்டாவது இணைப்பாக பயன்படுத்துவோருக்கு இந்த சலுகை பயனுள்ளதாக இருக்கும். முந்தைய ரூ. 368 மற்றும் ரூ. 369 விலை சலுகைகளில் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இவை தவிர ஒடிடி பலன்களும் வழங்கப்படுகிறது.
- ஆப்பிள் ஸ்டோர் பணியாளர்களில் சிலர் சர்வதேச பல்கலைக்கழகங்களில் படித்துள்ளனர்.
- பணியாளர்களின் வேலை நேரம் வியாபார நேரங்களை பொருத்து வேறுப்படும்.
ஆப்பிள் நிறுவனம் தனது முதல் நேரடி விற்பனை மையங்களை மும்பை மற்றும் டெல்லி பகுதிகளில் கடந்த வாரம் திறந்தது. இரு ஸ்டோர்களிலும் கூட்டாக சேர்த்து மொத்தத்தில் 170 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அதிகபட்சம் 15 மொழிகளில் பேசக்கூடியவர்கள் ஆவர். இந்திய ஆப்பிள் ஸ்டோர்களில் பணியாற்றுவோர் பெரும்பாலும் எம்பிஏ, பி டெக், பிஎஸ்சி போன்ற பட்டப்படிப்பு முடித்தவர்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இவர்களில் சிலருக்கு மாதம் ரூ. 1 லட்சம் வரையிலான சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. மற்ற மின்சாதன ஸ்டோர்களில் பணியாற்றி வரும் நிர்வாக அதிகாரிகள் வாங்கும் சம்பளத்தை விட இது மூன்று முதல் நான்கு மடங்கு வரை அதிகம் ஆகும். ஆப்பிள் ஸ்டோர் பணியாளர்களில் சிலர் சர்வதேச பல்கலைக்கழகங்களில் படித்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

சில பணியாளர்கள் வெளிநாடுகளில் இயங்கி வரும் ஆப்பிள் ஸ்டோர்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டுள்ளனர். இந்திய ஸ்டோர்களில் பணியாற்ற மேலும் சிலருக்கு வாய்ப்புகள் உள்ளதாக ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. பணியாளர்களின் வேலை நேரம் வியாபார நேரங்களை பொருத்து வேறுப்படும்.
மும்பை மற்றும் டெல்லியில் துவங்கப்பட்டு இருக்கும் ஆப்பிள் ஸ்டோர்களை ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் திறந்து வைத்தார். ஸ்டோர்களை திறந்து வைத்ததோடு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு மத்திய மந்திரிகளை டிம் குக் சந்தித்து பேசினார்.
- கேலக்ஸி S20 FE மாடலை ரூ. 29 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும்.
- பழைய ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்யும் போது கூடுதலாக ரூ. 25 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
பிரீமியம் அல்லது மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன் வாங்குவது பற்றிய திட்டம், அதற்கான பட்ஜெட் விஷயத்தில் பெரும் கேள்விக்குறியை ஏற்படுத்தும். அந்த வகையில், பிரீமியம் மாடல்களின் மீது அதிக சலுகைகள் அல்லது தள்ளுபடி அறிவிக்கப்படும் போது அதுபற்றிய தகவல் வேகமாக பரவுவது இயல்பான காரியம் தான். அந்த வரிசையில், அமேசான் வலைதளத்தில் சாம்சங் கேலக்ஸி S20 FE மாடலுக்கு அசத்தல் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி ரூ. 74 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி S20 FE மாடலை அமேசான் வலைதளத்தில் தற்போது ரூ. 4 ஆயிரத்து 999 விலையிலேயே வாங்கிட முடியும். அமேசான் தளத்தில் சாம்சங் கேலக்ஸி S20 FE மாடலின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி விலை ரூ. 74 ஆயிரத்து 999 என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எனினும், இந்த வேரியண்டிற்கு குறுகிய கால சலுகையாக 60 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இதன் காரணமாக கேலக்ஸி S20 FE விலையில் ரூ. 45 ஆயிரம் வரை சேமிக்க முடியும். இதற்காக பழைய ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்யவோ அல்லது குறிப்பிட்ட வங்கி கிரெடிட் கார்டையோ பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. குறுகிய கால தள்ளுபடி சேர்த்து கேலக்ஸி S20 FE மாடலை ரூ. 29 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும்.
விலை குறைப்பு தவிர பழைய ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்யும் போது கூடுதலாக ரூ. 25 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. எனினும், இந்த சலுகையை பெற ஸ்மார்ட்போன் சீராக இயங்கும் நிலையில் இருப்பது அவசியம் ஆகும். அனைத்து ஸ்மார்ட்போனிற்கும் ஒரே மாதிரியான மதிப்பு வழங்கப்படாது. ஒவ்வொரு ஸ்மார்ட்போனின் மறுமதிப்பீடு பொருத்து அதற்கான விலை வேறுப்படும்.
எக்சேஞ்ச் சலுகையில் முழு தள்ளுபடியை பெறும் பட்சத்தில் சாம்சங் கேலக்ஸி S20 FE மாடலை ரூ. 4 ஆயிரத்து 999 விலையிலே வாங்கிட முடியும். இதன் மூலம் அதிகபட்சம் ரூ. 70 ஆயிரம் சேமிக்கலாம்.
அம்சங்களை பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி S20 FE 6.5 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 12MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 8MP டெலிபோட்டோ கேமரா, 32MP செல்ஃபி கேமரா மற்றும் 4500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
- மும்பை பிகேசி ஸ்டோரை விட ஆப்பிள் சகெட் ஸ்டோர் அளவில் பாதியாக இருக்கிறது.
- ஆப்பிள் சகெட் விற்பனை மையத்தில் 70-க்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர்.
டெல்லியில் அமைக்கப்பட்ட முதல் ஆப்பிள் விற்பனை மையத்தினை அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் திறந்து வைத்து, வாடிக்கையாளர்களை வரவேற்றார். டெல்லியின் செலக்ட் சிட்டிவாக் மாலில் இந்த விற்பனையகம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆப்பிள் ஸ்டோர் டெல்லியின் பல்வேறு கேட்களை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.
சகெட் ஸ்டோர் என்று அழைக்கப்படும் டெல்லி ஆப்பிள் ஸ்டோர் மும்பையில் சமீபத்தில் திறக்கப்பட்ட பிகேசி ஸ்டோரை விட அளவில் சற்றே சிறியதாக இருக்கிறது. மும்பை பிகேசி ஸ்டோரை விட ஆப்பிள் சகெட் ஸ்டோர் அளவில் பாதியாகவே இருக்கிறது. இதற்கான வாடகையாக ஸ்டோரின் மொத்த விற்பனையில் ஒரு பகுதி அல்லது மாதம் ரூ. 40 லட்சம் என்று எந்த தொகை அதிகமாக இருக்கிறதோ அதனை ஆப்பிள் நிறுவனம் செலுத்தும் என்று கூறப்படுகிறது.

சகெட் விற்பனை மையத்தில் 70-க்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். இந்த பணியாளர்கள் ஆப்பிள் சாதனங்கள் குறித்த செயல்முறை விளக்கம் பெற்று, முழு தகவல்களை அறிந்துள்ளனர். நாட்டின் 18 மாநிலங்களை சேர்த்து, இவர்கள் அனைவரும் அதிகபட்சம் 15 மொழிகளில் பேசும் திறன் கொண்டுள்ளனர்.
முன்னதாக ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் இந்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். சந்திப்பின் போது இந்தியாவில் முதலீடுகளை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக டிம் குக் தெரிவித்தார்.
2016 வாக்கில் இந்தியாவுக்கு வந்திருந்த டிம் குக் ஏழு ஆண்டுகளுக்கு பின் தற்போது மீண்டும் இந்தியா வந்துள்ளார். இந்த முறை ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை மையங்களை திறந்து வைக்க டிம் குக் இந்தியா வந்திருக்கிறார். சில நாட்களுக்கு முன் நாட்டின் முதல் ஆப்பிள் விற்பனை மையத்தினை மும்பையில் டிம் குக் திறந்து வைத்தார்.
- ஒபன்ஏஐ நிறுவனத்தில் அதிக முதலீடு செய்ய இருப்பதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்தது.
- தரவுகளை பயன்படுத்தியற்காக மைக்ரோசாப்ட் மீது வழக்கு தொடர எலான் மஸ்க் முடிவு.
டுவிட்டர் பயனர்களின் தரவுகளை கொண்டு தனது செயற்கை நுண்ணறிவு மென்பொருளுக்கு பயிற்சி அளித்ததாக எலான் மஸ்க் மைக்ரோசாப்ட் மீது குற்றம்சாட்டியுள்ளார். மேலும் சட்டவிரோதமாக டுவிட்டர் தரவுகளை பயன்படுத்தியற்காக மைக்ரோசாப்ட் மீது வழக்கு தொடரப் போவதாகவும் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
"அவர்கள் டுவிட்டர் தரவுகளை சட்டவிரோதமாக பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவுக்கு பயிற்சி அளித்துள்ளனர். வழக்கு தொடர்வதற்கான நேரம்," என்று எலான் மஸ்க் டுவிட் செய்துள்ளார்.

வொர்ட் மற்றும் எக்சல் போன்ற சேவைகளில் சாட்ஜிபிடி சார்ந்த ஏஐ ஒருங்கிணைக்கப்பட இருப்பதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த ஜனவரி மாத வாக்கில் அறிவித்தது. இதோடு சாட்ஜிபிடி சேவையை உருவாக்கிய ஒபன்ஏஐ நிறுவனத்தில் அதிக முதலீடு செய்ய இருப்பதாகவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்தது.
கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் பயன்பாட்டுக்கு வந்த சாட்ஜிபிடி சேவை உலகளவில் பேசுபொருளாக மாறியது. பலர் சாட்ஜிபிடி சேவையை புகழ்ந்தும், பலர் இதற்கு எதிராகவும் கருத்து தெரிவித்தனர். சாட்ஜிபிடி சேவை பயனர் சந்தேகங்களுக்கு எழுத்துப் பூர்வமாக பதில் அளிக்கிறது.
- இவ்வாறு செய்த போது ஸ்மார்ட்போனில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு இருக்கிறது.
- வெடித்த ஸ்மார்ட்போன் பேட்டரியில் ஏதேனும் பிழை இருந்ததா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
ஸ்மார்ட்போன் வெடித்துச் சிதறும் சம்பவங்கள் மிகவும் அபாயகரமானவை ஆகும். ஸ்மார்ட்போன்கள் வெடிப்பது, தீப்பிடித்து எரிவது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. இந்த வரிசையில், உத்திர பிரதேச மாநிலத்தின் படௌன் மாவட்டத்தில் ஏற்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதில் ஸ்மார்ட்போன் சார்ஜ் ஆகிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட மின் கசிவு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். இது குறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் படௌன் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்த போது உயிரிழந்தார் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ஸ்மார்ட்போனை சார்ஜ் ஏற்றிக் கொண்டிருக்கும் போதே, சிறுவன் அழைப்பில் பேசியிருக்கிறார். இவ்வாறு செய்த போது ஸ்மார்ட்போனில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு இருக்கிறது. மின்சாரம் சிறுவன் மீது பாய்ந்ததை அடுத்து திடீரென நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார். உடனே சிறுவனின் பெற்றோர் அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் வெடித்துச் சிதறிய ஸ்மார்ட்போன் எந்த பிராண்டு மற்றும் மாடல் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. மாறாக அது பெரிய பிராண்டு ஒன்றின் ஸ்மார்ட்போன் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் சிறுவன் இந்த ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் என இரண்டிற்கும் சேர்த்து ரூ. 20 ஆயிரம் கொடுத்து வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. இதில் ஸ்மார்ட்போன் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஒன்று ஆகும்.

வெடித்துச் சிதறிய ஸ்மார்ட்போனின் பேட்டரியில் ஏதேனும் பிழை ஏற்பட்டு இருந்ததா அல்லது வேறு ஏதேனும் ஹார்டுவேர் கோளாறு ஏற்பட்டு இருந்ததா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. எனினும், மின்கசிவு காரணமாகவே சிறுவன் உயிரிழந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் ஸ்மார்ட்போன் பழைய மாடல் என்பதில், அதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த சம்பவம் அரங்கேறி இருக்கலாம் என தெரிகிறது.
பாதுகாப்பாக இருப்பது எப்படி?
ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்த நிலையில், பயன்படுத்துவதை உடனே நிறுத்த வேண்டும். சார்ஜ் செய்யும் போது பயன்படுத்தினால், ஸ்மார்ட்போன்கள் அதிகளவில் சூடாகலாம். இதன் காரணமாக அவை வெடித்துச் சிதறும் அபாயம் உண்டு.
பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களில், சாதனம் அதிக சூடாவதை எச்சரிக்கை செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற சமயங்களில் ஐபோன்கள் வெப்பத்தை குறைத்து, சாதாரன நிலைக்கு மாற சற்று நேரம் எடுத்துக் கொள்கின்றன.
- ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
- முன்னதாக மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ்-ஐ டிம் குக் சந்தித்தார்.
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாவது ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்படுவதை ஒட்டி ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். பிரதமர் மோடியின் 'தொழில்நுட்பத்தில் சாதகமான தாக்கம்' என்ற நோக்கத்தை ஒட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து முதலீடு செய்ய இருப்பதாக அவர் தெரிவித்தார்.
"சிறப்பான வரவேற்பு அளித்ததற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு மிக்க நன்றி. இந்தியாவின் எதிர்காலத்தில் தொழில்நுட்பம் ஏற்படுத்தக்கூடிய சாதகமான தாக்கம் என்ற உங்களின் கனவை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம். கல்வியில் துவங்கி, டெவலப்பர்கள் முதல் உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழல் வரை , நாங்கள் நாடு முழுக்க வளர்ச்சி பெறவும், முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளோம்," என்று டிம் குக் தனது டுவிட்டரில் பகிர்ந்து இருக்கிறார்.
"உங்களை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. பல்வேறு துறை சார்ந்த கருத்துக்களை பகிர்ந்தது மற்றும் இந்தியாவில் அரங்கேறி வரும் தொழில்நுட்பம் சார்ந்த பரிமாற்றங்கள் குறித்து பேசியதும் மகிழ்ச்சியாக உள்ளது," என்று டிம் குக் டுவிட்டர் பதிவுக்கு பதில் அளித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் குறிப்பிட்டு இருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் முன் ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்னவ்-ஐ சந்தித்தார்.
சமீபத்தில் தான் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் விற்பனையகம் மும்பையில் திறக்கப்பட்டது. மும்பை விற்பனை மையத்தை திறந்து வைத்த டிம் குக் சில நிமிடங்கள் வரை வாயிலில் நின்றபடி வாடிக்கையாளர்களை கடைக்குள் வரவேற்றார்.
இதே போன்று டெல்லி விற்பனை மையத்திற்கும் டிம் குக் வாடிக்கையாளர்களை வரவேற்பார் என கூறப்படுகிறது. டெல்லியின் செலக்ட் சிட்டி மாலில் ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாவது விற்பனை மையம் நாளை திறக்கப்பட இருக்கிறது.






