என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    • மோட்டோ நிறுவனத்தின் புதிய ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அறிமுகம்.
    • புதிய மோட்டோ ஃபோல்டபில் போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.

    மோட்டோரோலா நிறுவனத்தின் முற்றிலும் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் ஒருவழியாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. ஜூலை மாத துவக்கத்தில் மோட்டோ ரேசர் 40 மற்றும் ரேசர் 40 அல்ட்ரா ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகின்றன. புதிய ஸ்மார்ட்போன்கள் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன.

    புதிய ஸ்மார்ட்போன்களுக்கான டீசர் அமேசான் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியாகி உள்ளது. மோட்டோ ரேசர் 40 மற்றும் மோட்டோ ரேசர் 40 அல்ட்ரா ஸ்மார்ட்போன்கள் ஜூலை 4-ம் தேதி இந்யாவில் அறிமுகமாகின்றன. அறிமுக நிகழ்வு ஜூலை 4, மாலை 6 மணிக்கு துவங்குகிறது. இரு ஸ்மார்ட்போன்களுக்கான டீசர்களை மோட்டோரோலா வெளியிட்டு உள்ளது.

     

     மோட்டோ ரேசர் 40 மற்றும் ரேசர் 40 அல்ட்ரா ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே சீனா மற்றும் வட அமெரிக்கா பகுதிகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. அம்சங்களை பொருத்தவரை மோட்டோ ரேசர் 40 அல்ட்ரா மாடலில் 3.6 இன்ச் pOLED டிஸ்ப்ளே, 144 Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, 6.9 இன்ச் FHD+ pOLED டிஸ்ப்ளே, 165Hz ரிப்ரெஷ் ரேட் உள்ளது.

    மோட்டோ ரேசர் 40 மாடலில் சற்றே சிறிய 1.47 இன்ச் வெளிப்புற டிஸ்ப்ளே, AMOLED டிஸ்ப்ளே, 60Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு, உள்புறத்தில் 6.9 இன்ச் FHD+ pOLED டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட் உள்ளது. இத்துடன் மோட்டோ ரேசர் 40 அல்ட்ரா மாடலில் குவாலகாம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸரும், ரேசர் 40 மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இரு மாடல்களிலும் 8 ஜிபி மற்றும் 12 ஜிபி ரேம், மோட்டோ ரேசர் 40 அல்ட்ரா மாடல் 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. ரேசர் 40 மாடலில் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.

    • இன்ஸ்டாகிராமில் பயனர்கள் அதிகம் எதிர்பார்த்த அம்சம் வழங்கப்பட்டு வருகிறது.
    • ஏற்கனவே இதேபோன்ற அம்சம் டிக்டாக் சேவையிலும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    முன்னணி சமூக வலைதள சேவைகளில் ஒன்றான இன்ஸ்டாகிராம், தனது பயனர்களுக்கு மிகவும் பயனுள்ள அம்சத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. பல ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், இன்ஸ்டாகிராம் தனது பனர்களுக்கு ரீல்ஸ்-ஐ டவுன்லோடு மற்றும் ஷேர் செய்யும் வசதியை வழங்கி வருகிறது.

    இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி புதிய அம்சம் பற்றிய தகவலை தனது பிராட்காஸ்ட் சேனலில் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக அமெரிக்காவில் உள்ள பயனர்கள் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்-ஐ நேரடியாக தங்களது சாதனத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். இதற்கு ஷேர் ஐகான் மற்றும் டவுன்லோடு ஆப்ஷனை க்ளிக் தெய்தாலே போதுமானது.

     

    புதிய அம்சம் பயனர் உருவாக்கும் தரவுகளின் மீது அதிக கண்ட்ரோல் வழங்குவதோடு, இன்ஸ்டாகிராம் தளத்தில் உருவாக்கும் தரவுகளை கொண்டாட வழி செய்கிறது. நிறுவனங்கள் சார்பில் வீடியோக்களை நேரடியாக டவுன்லோடு செய்ய அனுமதிக்கப்படுவதால், இதே போன்ற வசதி மற்ற தளங்களிலும் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    தற்போதைக்கு ரீல்ஸ்-ஐ டவுன்லோடு செய்யும் வசதி பொது அக்கவுன்ட்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் பொது அக்கவுண்ட்களில் டவுன்லோடு செய்யக் கோரும் வசதியை செயலிழக்க செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது. டவுன்லோடு செய்யப்படும் ரீல்ஸ்-இல் வாட்டர்மார்க் இடம்பெற்று இருக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    முன்னதாக டிக்டாக் செயலியும் இதேபோன்ற வசதியை பயனர்களுக்கு வழங்கி வருகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் பயனர் வீடியோக்களில் டிக்டாக் லோகோவுடன் மற்றவர்களுக்கு பகிரப்படும். இது டிக்டாக்கிற்கு விளம்பரமாக அமைகிறது.

    • வாட்ஸ்அப் செயலியில் தேவையற்ற அழைப்புகளை தடுக்கும் வசதி வழங்கப்படுகிறது.
    • புதிய அம்சங்கள் ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ் வெர்ஷன்களில் வழங்கப்படுகிறது.

    வாட்ஸ்அப் செயலியில் இரண்டு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் முதல் அம்சம் செயலியில் தேவையற்ற அழைப்புகளை தவிர்க்க செய்கிறது. மற்றொரு அம்சம் பிரைவசி செக்கப் என்று அழைக்கப்படுகிறது. இரண்டு புதிய அம்சங்களும் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் வெர்ஷன்களில் வழங்கப்படுகிறது.

    கடந்த சில மாதங்களாக வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் தங்களுக்கு அறிமுகமில்லா எண்களில் இருந்து அழைப்புகள் வருவதாக குற்றம்சாட்டி வந்தனர். இதைத் தொடர்ந்து வாட்ஸ்ஆப் செயலியில் புதிதாக சைலன்ஸ் அன்னோன் கால்ஸ் (silence unknown calls) அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

     

    இந்த அம்சம் வாட்ஸ்அப் பயனர்களின் கான்டாக்ட் லிஸ்ட்-இல் இருப்பவர்கள் மட்டுமே அழைப்புகளை மேற்கொள்ள செய்யும். இதன் மூலம் பயனர் கான்டாக்ட் லிஸ்ட்-இல் இல்லாதவர்கள் மேற்கொள்ளும் அழைப்புகள் பயனர்களை தொந்தரவு செய்யாது. எனினும், நோட்டிஃபிகேஷன் பகுதியில் அழைப்பு வந்ததற்கான தகவல் மற்றும் கால்ஸ் டேபில் அழைப்பு விவரம் இடம்பெற்று இருக்கும்.

    அந்த வகையில் புதிய அம்சம் அழைப்புகளை முழுமையாக தடுக்காது. மாறாக, அழைப்பு வந்த தகவலை வழங்கி, யாரோ அழைப்பை மேற்கொள்ள முயற்சித்தார்கள் என்று தெரிவிக்கும். புதிய அம்சம் வாட்ஸ்அப் செட்டிங்ஸ் பகுதியில் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

     

    வாட்ஸ்அப் பிரைவசி செக்கப்:

    பெயருக்கு ஏற்றார்போல் புதிய வாட்ஸ்அப் பிரைவசி செக்கப் அம்சம் கொண்டு செயலியில் கிடைக்கும் பிரைவசி செட்டிங்களை இயக்க வழி செய்கிறது. வாட்ஸ்அப் செட்டிங்கில் உள்ள பிரைவசி செக்கப் ஆப்ஷனில், ஸ்டார்ட் செக்கப் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும், பிரைவசி செட்டிங் நிறைந்த மெனு திரையில் காணப்படும்.

    இதில் யார் உங்களை தொடர்பு கொள்ள முடியும், தனிப்பட்ட விவரங்களை கட்டுப்படுத்துவது, சாட் பிரைவசி என ஏராளமான அம்சங்கள் இடம்பெற்று இருக்கும். பல்வேறு வகையான பிரைவசி செட்டிங்களை ஒரே பெயரின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்ட அம்சமாக புதிய பிரைவசி செக்கப் உள்ளது. 

    • பயனர் விவரங்களை அனுமதியின்றி சேகரித்ததாக ரியல்மி மீது குற்றச்சாட்டு எழுந்தது.
    • அம்சம் நீக்கப்பட்டதோடு அதற்கான விவர குறிப்பும் மாற்றப்பட்டு உள்ளது.

    ரியல்மி 11 ப்ரோ 5ஜி மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்களில் பயனர் அனுமதி இன்றி செயல்படுத்தப்பட்டு இருந்த என்ஹான்ஸ்டு இன்டெலிஜன்ட் சர்வீசஸ் (Enhanced Intelligent Services) அம்சம் புதிய அப்டேட் மூலம் நீக்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் குறித்து டுவிட்டரில் பயனர் ஒருவர் கேள்வி எழுப்பியதால், சர்ச்சை ஏற்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக ரியல்மி தனியார் செய்தி நிறுவனங்களுக்கு தன்தரப்பு விளக்கங்களை கொடுத்தது. இந்த நிலையில் தான் ரியல்மி 11 ப்ரோ 5ஜி மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு (RMX3771_13.1.0.524(EX01) மற்றும் RMX3741_13.1.0.524(EX01)) அப்டேட் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த அப்டேட் ஸ்மார்ட்போனில் தானாக செயல்படுத்தப்பட்ட என்ஹான்ஸ்டு இன்டெலிஜன்ட் சர்வீசஸ் அம்சத்தை நீக்குகிறது.

    அம்சத்தை நீக்கியதோடு, இதற்கான விவர குறிப்பிலும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. புதிய விவர குறிப்பில் ரியல்மி நிறுவனம்- ஆப் பயன்பாட்டு விவரங்கள், கலென்டர் நிகழ்வுகள், படிக்கப்படாத குறுந்தகவல் மற்றும் தவறிய அழைப்புகள் சார்ந்த தகவல்களை சேகரிப்பதாக கூறும் தகவலை நீக்கி இருக்கிறது.

    பயனர் விவரங்களை அனுமதியின்றி சேகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ரியல்மி நிறுவனம் இவ்வாறு செய்யவில்லை என்றும், பயனர் தகவல்கள் முழுமையாக பாதுகாக்கப்பட்டு வருவதாக விளக்கம் அளித்து இருந்தது.

    • ரியல்மி நிறுவனம் பயனர் விவரங்களை சேகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    • குற்றச்சாட்டு குறித்து அரசாங்கம் விசாரனை மேற்கொள்ளும் என்று மத்திய மந்திரி கருத்து.

    பயனர் விவரங்களை சேகரிப்பதாக ரியல்மி நிறுவனம் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. டுவிட்டர் பயனர் ஒருவர் ரியல்மி சாதனங்கள் பயனர் விவரங்களை சேகரிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி கருத்து தெரிவித்து இருக்கிறார். அதில், சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து அரசாங்கம் விசாரனை மேற்கொள்ளும் என்று தெரிவித்து உள்ளார்.

    குற்றச்சாட்டுகளுடன் ஸ்மார்ட்போன் ஸ்கிரீன்ஷாட்டையும் அவர் தனது பதிவில் இணைத்து இருக்கிறார். அதன்படி ரியல்மி யுஐ 4.0 -இல் உள்ள என்ஹான்ஸ்டு இன்டெலிஜன்ட் சர்வீசஸ் (Enhanced Intelligent Services) அம்சம் மூலம் பயனர் விவரங்களை மேம்படுத்துவதாக கூறி அவர்களின் விவரங்களை சேகரித்து வருவதாக டுவிட்டர் பயனர் குற்றம்சாட்டியுள்ளார்.

     

    ரியல்மி யுஐ 4.0 வெர்ஷனில் உள்ள என்ஹான்ஸ்டு இன்டெலிஜன்ட் சர்வீசஸ் விவர குறிப்பில், 'இந்த அம்சம் சாதனத்தின் விவரங்கள், செயலி பயன்பாட்டு தகவல், லொகேஷன் விவரங்கள், காலென்டர் நிகழ்வுகள், எஸ்எம்எஸ் மற்றும் அழைப்புகள்' தொடர்பான விவரங்கள் பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக சேகரிக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இந்த அம்சம் ஸ்மார்ட்போன்களில் தானாக செயல்படுத்தப்படுகிறதா அல்லது பயனர் அனைத்து அனுமதிகளையும் வழங்க வேண்டுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இது தொடர்பாக ரியல்மி பதில் அளித்துள்ளது. அதில் இந்த அம்சம் மூலம் சேகரிக்கப்படும் தகவல்கள் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் பெறப்படுவதாகவும், பயனர் விவரங்கள் அதிகளவு பாதுகாப்பாக வைக்கப்படுவதாக ரியல்மி தெரிவித்து இருக்கிறது.

    • ரியல்மி பட்ஸ் ஏர் 5 ப்ரோ மாடலில் 11mm டைனமிக் டிரைவர் உள்ளது.
    • சர்வதேச சந்தையில் புதிய இயர்பட்ஸ் குறைந்த விலையில் கிடைக்கும் என்று தெரிகிறது.

    ரியல்மி நிறுவனம் அடுத்த மாதம் ரியல்மி 11 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. ரியல்மி 11 ப்ரோ சீரிஸ் வெளியீட்டின் போதே ரியல்மி பட்ஸ் ஏர் 5 ப்ரோ மாடலும் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ரியல்மி பட்ஸ் ஏர் 5 ப்ரோ மாடலின் வெளியீட்டு தேதி குறிப்பிடப்படவில்லை.

    எனினும், ரியல்மி பட்ஸ் ஏர் 5 ப்ரோ மாடல் பிஐஎஸ் சான்று பெற்று இருக்கிறது. இந்த நிலையில், ரியல்மி பட்ஸ் ஏர் 5 ப்ரோ மாடலுக்கான சர்வதேச வெளியீட்டை உணர்த்தும் டீசர் வெளியிடப்பட்டு உள்ளது. சர்வதேச சந்தையில் புதிய இயர்பட்ஸ் குறைந்த விலையில் கிடைக்கும் என்று தெரிகிறது. டீசரில் ஜூன் 10-ம் தேதி அறிமுகமாகும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எனினும், இதற்கு வாய்ப்பில்லை என்பதால், ஜூலை 10-இல் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கலாம்.

    டீசர் தவிர புதிய இயர்பட்ஸ் பற்றி வேறு எந்த தகவலும் இல்லை. ரியல்மி பட்ஸ் ஏர் 5 ப்ரோ மாடலில் 11mm டைனமிக் டிரைவர், 6mm இரண்டாவது டிரைவர்கள் உள்ளன. இந்த இயர்பட்ஸ் 50db வரையிலான ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டிருக்கிறது. அழைப்புகளின் போது சிறப்பான ஆடியோவுக்காக புதிய இயர்பட்ஸ் மூன்று பில்ட்-இன் மைக்ரோபோன்களை கொண்டுள்ளது.

    இந்த இயர்பட்ஸ் ஸ்பேஷியல் சவுண்ட் எஃபெக்ட்ஸ் மற்றும் LDAC கோடெக் கொண்டிருக்கிறது. இவை ஆடியோ தரத்தை மேம்படுத்துகிறது. இதன் இயர்பட்களில் 60 எம்ஏஹெச் செல் பேட்டரியும், கேசில் 460 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது. இந்த இயர்பட்ஸ் முழு சார்ஜ் செய்தால் 40 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது.

    • நிகழ்ச்சியில் ஒன்பிளஸ் 11 கான்செப்ட் போன் ஒன்பிளஸ் ரசிகர்களுக்கு காண்பிக்கப்பட்டது.
    • பாப்-அப் எக்ஸ்பீரியன்ஸ் அவுட்லெட் போன்று இந்த பேருந்துகள் செயல்பட இருக்கின்றன.

    ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் 11 கான்செப்ட் போனினை இந்தியா கொண்டுவந்துள்ளது. 2023 சர்தேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்ட நிலையில், தற்போது ஒன்பிளஸ் 11 கான்செப்ட் மாடல் இந்தியாவில் ஒன்பிளஸ் ரசிகர்களுக்கு காண்பிக்கப்பட்டது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய அதிநவீன கூலிங் தொழில்நுட்பத்தை காட்சிப்படுத்தும் நோக்கில் ஒன்பிளஸ் 11 கான்செப்ட் போன் உருவாக்கப்பட்டுஇருக்கிறது.

    புதிய கூலிங் தொழில்நுட்பத்தை ஒன்பிளஸ் நிறுவனம் ஆக்டிவ் க்ரியோஃபிளக்ஸ் தொழில்நுட்பம் (Active CryoFlux technology) என்று அழைக்கிறது. இதன் திறன்கள் குறித்து ஒன்பிளஸ் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை. ஆனால் ஸ்மார்ட்போனினை கையில் வைத்திருக்கும் போது, பின்புற பேனலில் சிறிய பைப்லைனில் நீல நிற திரவம் ஓடுவதை பார்க்க முடியும்.

    டெல்லியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் ஒன்பிளஸ் 11 கான்செப்ட் போன் ஒன்பிளஸ் ரசிகர்களுக்கு காண்பிக்கப்பட்டது. ஒன்பிளஸ் ரோட் ட்ரிப் நிகழ்ச்சியின் அங்கமாக இது நடத்தப்பட்டது. இதன் மூலம் ஒன்பிளஸ் பிராண்டு மற்றும் ரசிகர்கள் இடையே உறவை மேம்படுத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் 32 அடி நீளமுள்ள இரண்டு பேருந்துகள், நாட்டின் 25 நகரங்களை சற்றி பயணம் செய்ய இருக்கிறது.

    பாப்-அப் எக்ஸ்பீரியன்ஸ் அவுட்லெட் போன்று இந்த பேருந்துகள் செயல்பட இருக்கின்றன. ஒன்பிளஸ் 11 சீரிஸ், ஒன்பிளஸ் பேட், ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2, ஒன்பிளஸ் நார்டு CE 3 லைட், ஒன்பிளஸ் நார்டு பட்ஸ் 2, ஒன்பிளஸ் கீபோர்டு ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் மானிட்டர் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கும். ஒன்பிளஸ் பாப் அப் எக்ஸ்பீரியன்ஸ் பேருந்து - சண்டிகர், ஜெய்ப்பூர், லக்னோ, கோயம்புத்தூர், சென்னை, பூனே, கொச்சி மற்றும் பல்வேறு நகரங்களில் பயணம் செய்ய இருக்கிறது.

     

     

    ஒன்பிளஸ் புதிய கூலிங் தொழில்நுட்பம் 2.1 டிகிரி வரை வெப்பத்தை குறைக்கும் என்பதால், பயனர்கள் தடையின்றி கேமிங் செய்ய முடியும் என ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கேம்களின் ஃபிரேம் ரேட் 3 முதல் 4fps வரை அதிகரிக்கும். மேலும் இந்த கூலிங் தொழில்நுட்பம் ஃபாஸ்ட் சார்ஜிங்கின் போதும் உதவுகிறது.

    டெல்லி நிகழ்வின் போது ஒன்பிளஸ் தனது ஒன்பிளஸ் 5ஜி ஸ்கெட்ச்பாட் பற்றி விளக்கம் அளித்து இருக்கிறது. இதில் ரோபோடிக் கை இடம்பெற்று இருக்கிறது. 5ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் இது எளிதில் படங்களை வரையும். பயணத்தின் போது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் நோக்கில் ஒன்பிளஸ் நிறுவனம் சிறு போட்டிகள் நடத்தி வெற்றி பெறுவோருக்கு ஒன்பிளஸ் பட்ஸ் Z2 மாடலை பரிசாக வழங்குகிறது.

    • பிரைம் லைட் பயன்படுத்துவோருக்கு வீடியோ தரம் சற்றே குறைந்து இருக்கும்.
    • முன்னதாக இந்த சந்தா முறை தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது.

    அமேசான் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய அமேசான் பிரைம் லைட் சந்தா முறையை அறிவித்து இருக்கிறது. இது அமேசான் பிரைம் சேவையின் குறைந்த விலை வெர்ஷன் ஆகும். முன்னதாக இந்த சந்தா முறை தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், அனைவருக்கும் வழங்கப்பட்டு உள்ளது.

    பிரைம் லைட் சந்தா ஒற்றை வருடாந்திர திட்டம் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக பயனர்கள் 12 மாதங்களுக்கு ரூ. 999 கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த சலுகையில் காலாண்டு மற்றும் மாதாந்திர திட்டங்கள் வழங்கப்படவில்லை. வழக்கமான அமேசான் பிரைம் சந்தா விலை ஆண்டுக்கு ரூ. 1499 ஆகும். இதே சலுகை மாதம் ரூ. 299 விலையிலும், காலாண்டு சந்தா விலை ரூ. 599 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    பலன்களை பொருத்தவரை அமேசான் பிரைம் லைட் மற்றும் அமேசான் பிரைம் திட்டங்களில் ஒட்டுமொத்தமாக ஒரே மாதிரியான பலன்களே வழங்கப்படுகின்றன. பிரைம் லட்டா சந்தாவில் பயனர்கள் ஒருநாள் அல்லது இரண்டு நாட்களில் டெலிவரி பெறும் வசதி பெற முடியும். வழக்கமான இலவச டெலிவரிக்கு எந்த விதமான குறஐந்தபட்ச தொகையும் இல்லை என அமேசான் உறுதியளித்துளளது.

    வழக்கமான பிரைம் சந்தாவின் கீழ் அமேசான் மியூசிக் மற்றும் வீடியோ பார்க்கும் வசதி வழங்கப்படுகிறது. பிரைம் சந்தா வைத்திருப்போரும், இதே பலன்களை பெற முடியும். எனினும், பிரைம் லைட் பயன்படுத்துவோருக்கு வீடியோ தரம் சற்றே குறைந்திருக்கும். பயனர்கள் அதிகபட்சம் இரண்டு சாதனங்ககளில் HD தரத்தில் வீடியோக்களை பார்க்கலாம்.

    பிரைம் சந்தா வைத்திருப்போர் அிகபட்சம் 4K ஸ்டிரீமிங், அதிகபட்சம் ஆறு சாதனங்களில் ஒரே சமயம் பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது. அமேசான் பிரைம் வீடியோ விளம்பரங்களை வழங்க இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. எனினும், எப்படி இது அமலுக்கு கொண்டுவரப்படும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

    அமேசான் பிரைம் லைட் பயன்படுத்துவோருக்கு பிரைம் ரீடிங் மற்றும் அமேசான் மியூசிக் சேவைகளை பயன்படுத்தும் வசதி வழங்கப்படாது. இதில் அமேசான் பிரைம் மியூசிக் வசதி, வட்டியில்லா மாத தவணை முறை, கேமிங் மற்றும் இலவச இ-புத்தகங்களை பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படவில்லை.

    • சமீப காலங்களில் புதிய அம்சங்களை வாட்ஸ்அப் விரைந்து வெளியிட்டு வருகிறது.
    • வீடியோ மெசேஜை மற்றவர்களுக்கு ஃபார்வேர்டு செய்ய முடியாது.

    வாட்ஸ்அப் செயலியில் வீடியோ மெசேஜ் அனுப்பும் வசதி வழங்கப்படுகிறது. மெசேஜ் டைப் செய்ய முடியாதவர்களுக்கு, ஆடியோ மெசேஜ்களை அனுப்பும் வசதி வழங்கப்பட்டு வந்தது. புதிய அப்டேட் மூலம் இனி ஆடியோ மெசேஜை கடந்து வீடியோ மெசேஜ்களையும் அனுப்ப முடியும். இந்த அம்சம் வாட்ஸ்அப் ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷன்களில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    சமீப காலங்களில் புதிய அம்சங்களை வாட்ஸ்அப் விரைந்து வெளியிட்டு வருகிறது. இந்த அம்சம் விரைவில் வாட்ஸ்அப் செயலியின் ஸ்டேபில் வெர்ஷனிலும் வழங்கப்படும் என்று தெரிகிறது. முன்னதாக எடிட் பட்டன், சாட் லாக், ப்ரோஃபைல் படத்தை சிலருக்கு மட்டும் மறைத்து வைக்கும் வசதி, மல்டி-போன் சப்போர்ட் உள்ளிட்டவை விரைந்து வெளியிடப்பட்டன.

    தற்போது வாட்ஸ்அப் ஐஒஎஸ் பீட்டா 23.12.0.71 வெர்ஷன், ஆண்ட்ராய்டு பீட்டா 2.23.13.4 வெர்ஷனில் புதிய வீடியோ மெசேஜ் அம்சம் டெஸ்டிங் செய்யப்பட்டு வருகிறது. ஆடியோ மெசேஜ் போன்றே புதிய வீடியோ மெசேஜ் அம்சத்தையும் எளிதில் இயக்க முடியும். ஒவ்வொரு சாட்களிலும் மைக்ரோபோன் இடம்பெற்றுள்ள பகுதியிலேயே வீடியோ ஐகான் இடம்பெறுகிறது. இதனை க்ளிக் செய்து ஆடியோ அல்லது வீடியோ மெசேஜ் அனுப்ப முடியும்.

    வாட்ஸ்அப் செயலியில் பகிரப்படும் மற்ற தரவுகளை போன்றே, வீடியோ மெசேஜ்களும் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்படுகின்றன. அந்த வகையில் யாரும் வீடியோ மெசேஜ்களை பார்க்க முடியாது. வீடியோ மெசேஜை மற்றவர்களுக்கு ஃபார்வேர்டு செய்யும் வசதி வழங்கப்படாது. எனினும், இதனை ஸ்கிரீன் ரெக்கார்டு செய்யப்படுவதை வாட்ஸ்அப் தடுக்காது.

    Photo Courtesy: wabetainfo

    • ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி மாடலின் முன்பதிவு ஜூன் 8-ம் தேதி துவங்குகிறது.
    • அறிமுக சலுகையாக ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி மாடலுக்கு ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ரியல்மி நிறுவனத்தின் முதல் 200MP கேமரா கொண்ட ஸ்மார்ட்போனாக ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று தொடங்கி நடைபெறுகிறது. ரியல்மி இந்தியா வலைதளம், ப்ளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் இந்த மாடலின் விற்பனை நடைபெற இருக்கிறது.

    முன்னதாக ஜூன் 8-ம் தேதி இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு துவங்கியது. ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி மாடல் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 27 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 29 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி மாடல் ஆஸ்ட்ரல் பிளாக், சன்ரைஸ் பெய்க் மற்றும் ஒயசிஸ் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது.

    சலுகை விவரங்கள்:

    ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடலை வாங்குவோர் ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி மற்றும் எஸ்பிஐ வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் தள்ளுபடியும், தங்களின் பழைய ஸ்மார்ட்போனகளை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 2 ஆயிரம் வரை தள்ளுபடி பெறலாம். இத்துடன் அதிகபட்சம் ஆறு மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.

    புதிய ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடலை வாங்குவோருக்கு அதிகபட்சம் 12 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு வங்கி சார்ந்த சலுகைகள் வழங்கப்படவில்லை. எனினும், பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்து ரூ. 500 வரை தள்ளுபடி பெறலாம்.

    ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி அம்சங்கள்:

    6.7 இன்ச் Full HD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்

    மீடியாடெக் டிமென்சிட்டி 7050 பிராசஸர்

    8 ஜிபி, 12 ஜிபி ரேம்

    256 ஜிபி மெமரி

    200MP பிரைமரி கேமரா

    8MP அல்ட்ரா வைடு கேமரா

    2MP மேக்ரோ சென்சார்

    32MP செல்ஃபி கேமரா

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ரியல்மி யுஐ 4.0

    இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    5000 எம்ஏஹெச் பேட்டரி

    100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    • அடுத்த சில வாரங்களில் இடையூறு படிப்படியாக குறையும்.
    • இதற்கான அப்டேட் வரும் வாரங்களில் வெளியாகும் என்று எலான் மஸ்க் அறிவிப்பு.

    டுவிட்டர் வலைதளத்தில், பயனர்கள் பின்தொடராதவர்களுக்கு (non-followers) மெசேஜ் அனுப்புவதற்கான வசதி விரைவில் நிறுத்தப்படுகிறது. டுவிட்டர் தளத்தில் ஸ்பேம் மற்றும் ஏஐ பாட்களால் குறுந்தகவல் சேவையில் அதிக இடையூறு ஏற்படுவதாக பயனர் ஒருவர் குற்றம்சாட்டி இருந்தார்.

    இதோடு தனக்கு வந்த குறுந்தகவல்களின் ஸ்கிரீன்ஷாட்டையும் அவர் பகிர்ந்து இருந்தார். இதற்கு எலான் மஸ்க் பதில் அளித்துள்ளார். அதில், அடுத்த சில வாரங்களில் குறுந்தகவல் மூலம் ஏற்படும் இடையூறு படிப்படியாக குறையும் என்று எலான் மஸ்க் தெரிவித்தார். இதற்கான அப்டேட் வரும் வாரங்களில் வெளியாகும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக வெளியாகி இருக்கும் தகவல்களில் டுவிட்டர் தளத்தில், பயனர்கள் பின்தொடராத நபர்களுக்கு குறுந்தகவல் அனுப்ப முடியாது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பயனர்கள் டுவிட்டர் புளூ சந்தா வைத்திருப்பின், பின்தொடராதவர்களுக்கும் குறுந்தகவல் அனுப்ப முடியும்.

    மேலும் டுவிட்டர் தளத்தில் பயனர்கள் அனுப்பும் குறுந்தகவல்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தற்போது நாள் ஒன்றைக்கு பயனர்கள் 500 குறுந்தகவல்களை மட்டுமே அனுப்ப முடியும்.

    • ஆப்பிள் நிறுவன ஐபோன் மாடல்களுக்கு அமேசான் தளத்தில் சிறப்பு சலுகைகள் அறிவிப்பு.
    • ஆப்பிள் சேல் டேஸ் பெயரில் அமேசான் வலைதளத்தில் சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது.

    அமேசான் வலைதளத்தில் ஆப்பிள் சேல் டேஸ் விற்பனை மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது. ஒரு வார காலம் நடைபெறும் சிறப்பு விற்பனையில் ஐபோன் மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அமேசான் தளத்தில் அவ்வப்போது ஆப்பிள் சேல் டேஸ் விற்பனை நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தற்போதைய சிறப்பு விற்பனை ஜூன் 11 ஆம் தேதி துவங்கியது. இந்த விற்பனை ஜூன் 17 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. தள்ளுபடி மட்டுமின்றி, வட்டியில்லா மாத தவணை முறை சலுகை, தேர்வு செய்யப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு கூடுதல் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    சலுகை விவரங்கள்:

    ஐபோன் 14 (128 ஜிபி) 15 சதவீத தள்ளுபடியின் கீழ் ரூ. 67 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் உண்மை விலை ரூ. 79 ஆயிரத்து 999 ஆகும். இதன் 256 ஜிபி மாடலுக்கு 13 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    அதன்படி இந்த வேரியண்ட் விலை ரூ. 89 ஆயிரத்து 900-இல் இருந்து ரூ. 77 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. 512 ஜிபி மாடல் விலை 1 லட்சத்து 09 ஆயிரத்து 900-இல் இருந்து தற்போது 11 சதவீத தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 97 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    ஐபோன் 14 பிளஸ் (128 ஜிபி) மாடலுக்கு 14 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ. 89 ஆயிரத்து 900-இல் இருந்து தற்போது ரூ. 76 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. இதன் 256 ஜிபி மாடல் விலை ரூ. 86 ஆயிரத்து 999 என்று மாறியுள்ளது. இந்த வேரியண்டிற்கு 13 சதீவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் என பல்வேறு ஐபோன்களை விறப்னை செய்து வருகிறது. ஐபோன் 14 ப்ரோ மாடலின் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி வேரியண்ட்களின் விலை தள்ளுபடி செய்யப்பட்டு முறையே ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 1 லட்சத்து 34 ஆயிரத்து 990 என்று மாறி இருக்கிறது.

    ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் மாடலுக்கு 9 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் 128 ஜிபி மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 27 ஆயிரத்து 999 என்றும் 256 ஜிபி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 43 ஆயிரத்து 990 என்றும் மாறி இருக்கின்றன.

    ×