என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
தனியுரிமை விதிமீறல் காரணமாக ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு பெரும் தொகையை அபராதமாக விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Facebook
அமெரிக்க அரசாங்கத்தின் ஒழுங்குமுறை அதிகாரிகள் ஒன்றுகூடி பேஸ்புக் நிறுவனத்தின் மீது பெரும் தொகையை அபராதமாக விதிப்பது பற்றிய விவாதத்தில் ஈடுப்பட்டதாக அமெரிக்க செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் பயன்படுத்துவோரின் தகவல்களை பாதுகாக்கும் நோக்கில் அபராதம் விதிக்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அமெரிக்க வர்த்தக ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் அபராதம் விதிக்கப்படுகிறது. ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக பூதாகாரமாய் வெடித்த கேம்ப்ரிட்ஜ் அனாலடிகா விவகாரத்தை தொடர்ந்து முதல் முறையாக நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.

இம்முறை ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு விதிக்கப்பட இருக்கும் அபராத தொகை 2012 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் மீது விதிக்கப்பட்டதை விட அதிகளவு நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. கடந்த முறை கூகுள் நிறுவனத்திற்கு 2.25 கோடி டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக அமெரிக்க வர்த்தக ஆணையத்தின் ஐந்து பேர் அடங்கிய விசாரணை குழு ஃபேஸ்புக் நிறுவனம் மீது மேற்கொண்ட விசாரணையில் கிடைத்த விவரங்களுடன் விவாதித்து வருவதாக கூறப்படுகிறது. எனினும், அபராத தொகை பற்றி இன்னும் முடிவு எட்டப்படவில்லை என தெரிகிறது.
விசாரனை குழுவினர் சமர்பித்து இருக்கும் விவரங்களை கொண்டு அபராத தொகையை விரைவில் பரிந்துரைக்கலாம் என கூறப்படுகிறது. இதுதவிர அமெரிக்க வர்த்தக ஆணையத்திடம் விசாரணை பற்றிய பேச்சுவார்த்தைகளில் ஃபேஸ்புக் ஈடுபட்டதாக தெரிகிறது.
எனினும், அபாரதம் விதிக்கப்படும் பட்சத்தில் வர்த்தக ஆணையத்தின் பரிந்துரையை ஃபேஸ்புக் ஏற்றுக் கொள்ளுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
இசட்.டி.இ. கார்ப்பரேஷன் மற்றும் சீனா யுனிகாம் இணைந்து உலகில் முதல் முறையாக 5ஜி தொழில்நுட்பத்தில் வாய்ஸ் கால் செய்து அசத்தியுள்ளன. #5G #ZTE
இசட்.டி.இ. கார்ப்பரேஷன் மற்றும் சீனா யுனிகாம் நிறுவனங்கள் இணைந்து உலகின் முதல் 5ஜி வாய்ஸ் கால் மேற்கொண்டதாக அறிவித்துள்ளன. இதற்கு இசட்.டி.இ. உருவாக்கிய 5ஜி ப்ரோடோடைப் ஸ்மார்ட்போன் பயன்படுத்தப்பட்டது. ஷென்சென் 5ஜி சோதனை மையத்தில் உலகின் முதல் 5ஜி வாய்ஸ் கால் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
சோதனை முயற்சியில் வாய்ஸ் கால் மட்டுமின்றி வீசாட் க்ரூப் கால், ஆன்லைன் வீடியோ மற்றும் பிரவுசிங் உள்ளிட்டவையும் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன. என்.எஸ்.ஏ. மோட் மூலம் கால் செய்யப்பட்ட வணிக ரீதியிலான முதல் சோதனை மையமாக சீனா யுனிகாம் நிறுவனத்தின் ஷென்சென் சோதனை மையம் இருக்கிறது.

சீனா யுனிகாம் நிறுவனம் 5ஜி சேவை வழங்க சோதனை செய்யும் முதல் இடமாக ஷென்செனை தேர்வு செய்தது. இந்த வட்டாரம் முழுக்க நெட்வொர்க் உபகரணங்களை கட்டமைப்பது, சிறப்பு சேவைகளை வழங்குவது, ரோமிங் மற்றும் இண்டர்கனெக்ஷன் உள்ளிட்டவற்றை பலகட்டங்களில் சீனா யுனிகாம் சோதனை செய்து வருகிறது.
சோதனைகளில் இசட்.டி.இ. 5ஜி என்ட்-டு-என்ட் தீர்வுகளான ரேடியோ அக்சஸ் நெட்வொர்க், கோர் நெட்வொர்க், டிரான்ஸ்போர்ட் நெட்வொர்க் மற்றும் இன்டலிஜென்ட் டிவைஸ் உள்ளிட்டவை அடங்கும். இதுதவிர இந்த சோதனைகளில் 5ஜி தொழில்நுட்பத்தின் முக்கிய அம்சங்களும் சீராக இயங்கச் செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மோட்டோரோலாவின் பிரபல மொபைல் போன்களில் ஒன்றாக இருந்த ரேசர்போன் மீண்டும் விற்பனைக்கு வரயிருக்கிறது. #Motorola
மோட்டோரோலா நிறுவனத்தின் பிரபல மொபைல்களில் ஒன்றாக இருந்த ரேசர்போன் மீண்டும் விற்பனைக்கு வரயிருக்கிறது.
மடிக்கக்கூடிய மோட்டோ மொபைல் போன் முதற்கட்டமாக அமெரிக்காவில் விற்பனைக்கு வரும் என்றும் அடுத்த மாதம் விற்பனை துவங்கும் என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபிளெக்ஸ்பை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விலை 1600 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,12,000) வரை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், புதிய ரேசர் போனின் விலை 1500 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,07,107) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்ரவரி 2018 இல் லெனோவோ தலைமை செயல் அதிகாரி ரேசர் போன் புதிய வெர்ஷனின் டீசரை வெளியிட்டிருந்தார். பின் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அந்நிறுவனம் பதிவு செய்திருந்த சில காப்புரிமைகளில் மடிக்கக்கூடிய ஸ்கிரீன் கொண்ட ஃப்ளிப் போன் வெளியாகலாம் என கூறப்பட்டது.
சி.இ.எஸ். 2019 விழாவில் சீன நிறுவனமான ராயல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. முன்னதாக 2018 ஆக்டோபரில் ஃபிளெக்ஸ்பை ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் மடிக்கும் தன்மை கொண்ட AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் கொண்டிருக்கிறது.
இருவித மெமரி ஆப்ஷன்கள்: 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் மற்றும் வாட்டர் ஓ.எஸ். யு.ஐ. கொண்டிருக்கிறது. 7.8 இன்ச் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே கொண்டிருக்கும் ஃபிளெக்ஸ்பை ஸ்மார்ட்போனில் 16 எம்.பி. மற்றும் 24 எம்.பி. செல்ஃபி கேமரா, யு.எஸ்.பி. டைப்-சி போர்ட், டூயல் சிம் ஸ்லாட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டிருக்கும் புதிய அறிவிப்பின் படி வாடிக்கையாளர்கள் ரூ.153 மாத கட்டணத்தில் 100 சேனல்களை தேர்வு செய்யலாம். #TRAI
மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் கேபிள் மற்றும் டி.டி.ஹெச். சேவை கட்டணம் பற்றி புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் 100 இலவச அல்லது கட்டண சேனல்களை ரூ.153.40 கட்டணத்திற்கு பார்க்க முடியும்.
புதிய கட்டணம் மாதம் ரூ.130 என்றும் ஜி.எஸ்.டி. சேர்த்து மாதம் ரூ.154 கட்டணம் செலுத்த வேண்டும். புதிய அறிவிப்பின் படி வாடிக்கையாளர்கள் 100 சேனல்களை ஜனவரி 31 ஆம் தேதிக்குள் தேர்வு செய்ய வேண்டும். பின் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் சேனல்களுக்கான கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது. இந்த விதிமுறைகள் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் அமலாக இருக்கிறது.
டிராய் அறிவிப்பில் ஹெச்.டி. சேனல்கள் இடம்பெறாது. முன்னதாக வெளியாகி இருந்த தகவல்களில் வாடிக்கையாளர்கள் ஹெச்.டி. சேனல்களையும் தேர்வு செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. வாடிக்கையாளர்களுக்கு சேனல்களின் கட்டணம் செட் டாப் பாக்ஸ் மூலம் நேரடியாகவே காண்பிக்கப்படும்.

புதிய கட்டண முறையில் சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் வாடிக்கையாளர்கள் 011-23237922 (ஏ.கே. பரத்வாஜ்) மற்றும் 011-23220209 (அரவிந்த் குமார்) தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டோ அல்லது advbcs-2@trai.gov.in, arvind@gov.in மின்னஞ்சல் முகவரிக்கு சந்தேகங்களை எழுப்பலாம் என தெரிவித்துள்ளது.
மேலும் தனியே சேனல் ஒன்றுக்கான கட்டணம் மாதம் அதிகபட்சம் ரூ.19 வரை மட்டுமே நிர்ணயம் செய்யப்பட வேண்டும். முதல் முறையாக வாடிக்கையாளர்கள் விரும்பும் சேனல்களை தேர்வு செய்து பார்த்துரசிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு சேனலை தனியாகவோ அல்லது ஒன்றிணைந்த நோக்கில் சேனல்களை தேர்வு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு வாடிக்கையாளர்கள் விரும்பும் சேனல்களை அவரவர் விருப்பப்படி தனியாகவோ அல்லது குழு அடிப்படையில் ஒன்றுக்கும் மேற்பட்ட சேனல்கள் என எப்படி வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம். சேனல்களின் கட்டண விவரங்களை சேவை நிறுவனங்கள் 999 என்ற பிரத்யேக சேனலில் வழங்கவும் டிராய் உத்தரவிட்டுள்ளது.
சாம்சங் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் தங்களது மொபைல்களில் ஃபேஸ்புக் செயலியை அன்இன்ஸ்டால் செய்ய முடியவில்லை என குற்றஞ்சாட்டி வருகின்றனர். #Samsung #Facebook
சாம்சங் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் தங்களது சாதனங்களில் ஃபேஸ்புக் செயலியை அன்இன்ஸ்டால் செய்ய முடியவில்லை என குற்றஞ்சாட்டி இருக்கின்றனர்.
ஸ்மார்ட்போன்களில் பிரீஇன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் ஃபேஸ்புக் செயலியை அழிக்க முடிவதில்லை என பெரும்பாலானோர் தெரிவிக்கின்றனர். தனிப்பட்ட விவரங்களின் பாதுகாப்பு கருதியோ, செயலியை தொடர்ந்து பயன்படுத்த விருப்பமில்லை, ஃபேஸ்புக் அதிக மெமரியை எடுத்துக் கொள்கிறது போன்ற காரணங்களால் செயலியை அன்-இன்ஸ்டால் செய்ய முயற்சிப்பவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே எஞ்சுகிறது.
சமீபத்தில் வெளியாகும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் ஃபேஸ்புக், மின்னஞ்சல், ட்விட்டர், அமேசான், மெசஞ்சர் மற்றும் இதர செயலிகள் பிரீஇன்ஸ்டால் செய்யப்படுகிறது. இவற்றுடன் சில கூகுள் செயலிகளும் அடங்கும். இவ்வாறு பிரீஇன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும் செயலிகளில் சிலவற்றை மட்டும் செயலிழக்க செய்ய முடியும் என்றாலும், சிலவற்றை அன்இன்ஸ்டால் செய்ய முடியாது.
சாம்சங் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் சில பயனர்கள் தங்களது மொபைலில் பிரீஇன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் ஃபேஸ்புக் செயலியை டெலீட் செய்வதற்கான ஆப்ஷனே வழங்கப்படவில்லை என தெரிவிக்கின்றனர். இவர்களுக்கு எஞ்சியிருக்கும் ஒற்றை ஆப்ஷன் ஃபேஸ்புக் கணக்கை டி-ஆக்டிவேட் செய்வது மட்டும் தான். இவ்வாறு செய்தாலும் ஃபேஸ்புக் ஐகான் ஸ்மார்ட்போனில் அப்படியே இருக்கும்.
பயனற்று இருக்கும் சமூக வலைத்தள ஐகான்கள் ஸ்மார்ட்போன்களின் மெமரியை ஆக்கிரமித்துக் கொள்வதை தவிர வேறு எதையும் செய்வதில்லை. எனினும், சாம்சங் பயனர்கள் தரப்பில், ஃபேஸ்புக் செயலி பயனர் விவரங்களை பின்னணியில் சேகரிக்கிறதா என்ற அச்சம் பயனர்கள் மனதில் எழுகிறது.

இதுகுறித்து ஃபேஸ்புக் செய்தி தொடர்பாளர் கூறும் போது “செயலிழக்க செய்யப்பட்ட செயலி கிட்டத்தட்ட அழிக்கப்பட்டதற்கு சமமானது. இதனால் பயனர் விவரங்கள் சேகரிக்கப்படாது. எனினும், அவ்வப்போது இதுபற்றி பயனர்களுடன் தகவல் பரிமாற்றம் நடைபெறும்.” என தெரிவித்தார்.
“செயலி அழிக்கக்கூடியதாக இருப்பது ஃபேஸ்புக் கடந்த காலங்களில் மொபைல் போன் உற்பத்தியாளர்களுடன் மேற்கொண்ட ஒப்பந்தங்களை பொருத்து வேறுபடும்,” என ஃபேஸ்புக் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் செயலியின் பாதுகாப்பை அதிகப்படுத்தும் நோக்கில் அந்நிறுவனம் புதிய வசதியை வழங்குவதற்கான சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. #WhatsApp #Apps
ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் செயலியில் பயனர்களின் சாட் விவரங்களை பாதுகாக்க கைரேகை சென்சார் வசதியை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை செயல்படுத்தியதும், பயனர்கள் கைரேகையை வைத்தால் மட்டுமே செயலியை திறக்க முடியும்.
இதுகுறித்து WABetaInfo, வெளியிட்டிருக்கும் தகவல்களில் இந்த அம்சத்தை உருவாக்குவற்கான முதற்கட்ட பணிகள் மட்டுமே துவங்கி இருக்கிறது. இதனால் இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.3 பதிப்பில் செயலிழக்கச் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஃபேஸ் ஐ.டி. மற்றும் டச் ஐ.டி. அம்சங்களை ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் வழங்குவதற்கான சோதனை நடைபெற்றதைத் தொடர்ந்து தற்சமயம் இதேபோன்ற பாதுகாப்பு வசதி ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும் வழங்கப்பட இருக்கிறது.

புகைப்படம் நன்றி: WABetaInfo
ஐ.ஓ.எஸ். இயங்குதளத்திலும் இதற்கான சோதனை மட்டும் நடைபெற்று இருக்கும் நிலையில், இதுவரை இந்த வசதி வழங்கப்படாமலேயே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்அப் செயலியில் கைரேகை பாதுகாப்பு வசதியை இயக்க செயலியின் செட்டிங்ஸ் -- அக்கவுண்ட் -- பிரைவசி உள்ளிட்ட ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும். இந்த அம்சத்தை இயக்கினால் மட்டுமே சாட் விவரங்களை பாதுகாக்க முடியும். ஏற்கனவே தங்களது ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பு வசதியை செயல்படுத்தி இருப்பின் இந்த அம்சம் தேவைக்கதிகமானதாகும்.
ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ மற்றும் அதற்கும் அதிக இயங்குதளங்களை பயன்படுத்தும் அனைவருக்கும் கைரேகை பாதுகாப்பு வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. எனினும், இதை செயல்படுத்த ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் இருக்க வேண்டியதும் அவசியமாகும்.
வாட்ஸ்அப் செயலியில் கோல்டு அம்சம் பற்றி விவரங்கள் மீண்டும் பரவ துவங்கி இருக்கிறது. முன்னதாக 2016 ஆம் ஆண்டு இதேபோன்ற தகவல் பரவியது. #Whatsappgold #Apps
உலகின் பிரபல குறுந்தகவல் செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. அதிகளவு பிரபலமாக இருக்கும் வாட்ஸ்ஆப் செயலியில் அதிகளவு தவறாகவும் பயன்படுத்தப்படுகிறது. அந்த வரிசையில் வாட்ஸ்அப் செயலியில் மீண்டும் வாட்ஸ்அப் கோல்டு பற்றிய விவரங்கள் பரப்பப்படுகிறது.
முன்னதாக 2016 ஆம் ஆண்டு வாட்ஸ்அப் கோல்டு எனும் செயலியை பதிவிறக்கம் செய்யக் கோரி குறுந்தகவல்கள் பரப்பப்பட்டன. இவ்வாறு செய்யும் போது பயனர்களுக்கு வீடியோ காலிங் வசதி, ஒரே சமயத்தில் 100 புகைப்படங்களை அனுப்பும் வசதி உள்ளிட்டவை கிடைக்கும் என அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. எனினும் இந்த குறுந்தகவல் போலியானது என பின்னர் அறிவிக்கப்பட்டது.
இவ்வாறு செய்வதன் மூலம் பயனர்களின் ஸ்மார்ட்போன்களில் மால்வேர் டவுன்லோடு ஆகும். தற்சமயம் இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் மீண்டும் இந்த வதந்தி பரப்பப்படுகிறது.

தற்சமயம் பரப்பப்படும் குறுந்தகவலில்: "வாட்ஸ்அப் கோல்டு பற்றிய விவரங்கள் உண்மை தான். வாட்ஸ்அப்பில் நாளை ஒரு வீடியோ வெளியாகிறது. மார்டினெலி என இந்த வீடியோ அழைக்கப்படுகிறது. அதை திறக்க வேண்டாம். திறக்கும் பட்சத்தில் என்ன செய்தாலும், அதனை சரி செய்ய முடியாது. இத்தகவலை நீங்கள் அறிந்தவருக்கு அனுப்பவும். வாட்ஸ்அப் கோல்டு செயலிக்கு அப்டேட் செய்யக் கோரும் குறுந்தகவல் வந்தால், அதனை திறக்க வேண்டாம்! இந்த வைரஸ் மிகவும் கொடியது. இதை அனைவருக்கும் அனுப்பவும்."
இந்த குறுந்தகவலில் குறிப்பிடப்பட்டு இருக்கும் மார்டினெலி என்ற வீடியோ எதுவும் இல்லை. இந்த குறுந்தகவல் கொண்டு பயனர்கள் மத்தியில் பீதியை பரப்ப திட்டமிட்டுள்ளனர். வாட்ஸ்அப் பயன்படுத்துவோரில் பலர் இத்தகவலை தங்களது ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
Got this and am circulating just in case it’s true.
— Anna Moore (@5AMoores) January 3, 2019
FYI: Whatsapp Gold. A video will be launched tomorrow in Whatsapp called Martinelli. DO NOT OPEN it. Its a virus which goes into your phone and nothing will fix it. Do not update to Whatsapp Gold the virus is serious.
இதுபோன்ற குறுந்தகவல்கள் வரும் பட்சத்தில் அவற்றை நம்ப வேண்டாம். வாட்ஸ்அப் செயலிக்கான அப்டேட்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் அவற்றுக்கான பிளே ஸ்டோர் மூலமாகவே வழங்கப்படும். இதுதவிர மூன்றாம் தரப்பு சேவைகள் அல்லது இணைய முகவரிகளில் அப்டேட் வழங்கப்பட மாட்டாது. இதனால் உங்களுக்கு வரும் ஃபார்வேர்டு மெசேஜ்களை நம்பர வேண்டாம்.
2019 ஐபோன்களில் ஆப்பிள் நிறுவனம் வழங்க இருக்கும் புதுவித அம்சங்கள் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. #iPhone
2019 ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் தனது வழக்கப்படி புதிய ஐபோன்களை வெவ்வேறு அளவுகளில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
2018 ஆம் ஆண்டில் ஐபோன் XS (5.8 இன்ச்), ஐபோன் XS மேக்ஸ் (6.5 இன்ச்) மற்றும் ஐபோன் XR (6.1 இன்ச்) என மூன்று ஐபோன்களை அறிமுகம் செய்தது. இந்த ஆண்டும் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் XS மற்றும் ஐபோன் XR மாடல்களின் மேம்பட்ட ஐபோன்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் 5.8, 6.5 இன்ச் அளவுகளில் OLED டிஸ்ப்ளே கொண்ட ஐபோன்களையும், 6.1 இன்ச் LCD டிஸ்ப்ளே கொண்ட ஐபோனை அறிமுகம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஐபோன்கள் ஐபோன் XI அல்லது ஐபோன் 11 என அழைக்கப்படலாம். எனினும், தற்சமயம் இவை 2019 ஐபோன்கள் என்றே அழைக்கப்படுகின்றன.
2019 ஐபோன் மாடல்கள் சார்ந்த விவரங்கள் ஐபோன் XS மற்றும் ஐபோன் XR மாடல்கள் அறிமுகமாகும் முன்பே வெளியாக துவங்கிவிட்டன. அவ்வாறு புதிய ஐபோன்களில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் பற்றிய விவரங்கள் கிடைத்திருக்கின்றன.

டிஸ்ப்ளே:
2019 ஐபோன் மாடல்களில் ஆப்பிள் நிறுவனம் OLED டிஸ்ப்ளேக்களை வழங்கலாம் என கூறப்படுகிறது. எனினும் ஐபோன் XR சீரிசில் மட்டும் எல்.சி.டி. டிஸ்ப்ளேவுக்கு மாற்றாக LED ரக டிஸ்ப்ளே வழங்கலாம். OLED டிஸ்ப்ளேக்களின் விலை அதிகமாக இருப்பதே ஒரு மாடலில் மட்டும் LED டிஸ்ப்ளே வழங்குவதற்கான காரணமாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு ஆப்பிள் அறிமுகம் செய்யவிருக்கும் ஐபோன்களில் ஆப்பிளின் ஏ13 சிப்செட்களை கொண்டிருக்கும். ஆப்பிள் வழக்கப்படி புதிய சிப்செட்கள் அவற்றின் முந்தைய சீரிசை விட அதிக மேம்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கலாம். அந்த வகையில் ஆப்பிள் ஏ13 சிப்செட் அதிக சக்திவாய்ந்ததாகவும், புதிய தொழில்நுட்பங்களையும் கொண்டிருக்கலாம்.

புகைப்படம் நன்றி
கேமரா:
2019 ஐபோன்களில் ஆப்பிள் நிறுவனம் மூன்று பிரைமரி கேமரா சென்சார்களை வழங்கலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் புதிய ஐபோன்களில் டெப்த் அம்சங்களையும் தெளிவாக படமாக்க முடியும். இத்துடன் ட்ரூ-டெப்த் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி அம்சம் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஆப்பிள் தனது ஐபோன்களில் மூன்று கேமரா சென்சார் வழங்கும் பட்சத்தில் 2019 ஐபோன்களில் 3x ஆப்டிக்கல் சூம் வசதி மற்றும் தெளிவான புகைப்படங்கள் கிடைக்கும் என உறுதியாக எதிர்பார்க்கலாம். இதேபோன்று புதிய ஐபோன்களின் முன்பக்க ட்ரூ-டெப்த் கேமரா அதிகம் மேம்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.
இத்துடன் புதிய ஐபோன்களில் சிறிய நாட்ச் அல்லது நாட்ச் இல்லாத வடிவைப்பு கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இவ்வாறு செய்ய ஆப்பிள் எவ்வித தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் என்பது பற்றி எவ்வித விவரங்களும் இல்லை. ஐபோன் XR மாடலில் ஆப்பிள் நிறுவனம் 3டி டச் வசதியை எடுத்துவிட்டு புதிதாக ஹேப்டிக் டச் அம்சத்தை வழங்கியிருந்தது.
ஆப்பிள் பென்சில்:
ஆப்பிள் நிறுவன புதிய ஐபோன்களில் ஆப்பிள் பென்சில் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் 2019 ஐபோன்களின் சில மாடல்களில் ஆப்பிள் பென்சில் போன்ற ஸ்டைலஸ் ஒன்றும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்கால ஐபோன்களில் ஆப்பிள் பென்சில் வழங்கப்படலாம் என ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ தெரிவித்திருக்கும் நிலையில், இந்த ஆண்டு ஐபோன் மாடல்களில் பென்சில் வசதி வழங்கப்படுவது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

இதர அம்சங்கள்:
இவை தவிர புதிய ஐபோன்களில் யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் வழங்கப்படலாம் என தெரிகிறது. கடந்த ஆண்டு ஐபேட் ப்ரோ மாடலில் ஆப்பிள் நிறுவனம் யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் வழங்கியிருந்த நிலையில், புதிய ஐபோன்களில் இது தொடரலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் 2019 ஐபோன் மாடல்களில் ஆப்பிள் நிறுவனம் டிஸ்ப்ளேவினுள் டச் ஐ.டி. தொழில்நுட்பத்தை வழங்கலாம் என கூறப்படுகிறது.
ஃபேஸ்புக் சேவையில் கணக்கு வைத்திருக்காத பயனர்களின் விவரங்களும் ஃபேஸ்புக்கிற்கு அனுப்பப்படுவதாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. #Facebook #socialmedia
பிரிட்டனைச் சேர்ந்த தனியார் பாதுகாப்பு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் ஃபேஸ்புக் பயன்படுத்துவோர், பயன்படுத்தாதோர் மற்றும் தளத்தில் இருந்து லாக்-அவுட் செய்தோரின் தகவல்களை ஃபேஸ்புக் டிராக் செய்வது கண்டறியப்பட்டுள்ளது.
ஆப் டெவலப்பர்கள் ஃபேஸ்புக்கின் மென்பொருள் மேம்பாட்டு முகமை (ஃபேஸ்புக் எஸ்.டி.கே.-Facebook Software Development Kit-SDK) எனும் மென்பொருள் மூலம் பயனர் விவரங்களை ஃபேஸ்புக்கிற்கு வழங்கி வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த மென்பொருள் மூலம் டெவலப்பர்கள் குறிப்பிட்ட இயங்குதளத்திற்கு ஏற்ப புதிய செயலிகளை உருவாக்க முடியும்.
இந்த ஆய்வுக்கென ஆராய்ச்சியாளர்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் 34 செயலிகளை எடுத்துக்கொண்டனர். ஒவ்வொன்றும் 10 முதல் அதிகபட்சம் 50 கோடி பேர் டவுன்லோடு செய்த செயலிகள். இவற்றில் மொழி கற்றுக் கொள்ளும் செயலி, பயணம், உணவகம் மற்றும் பல்வேறு இதர பலன்களை வழங்கும் செயலிகளை தேர்வு செய்தனர்.

பின் இந்த செயலிகள் ஃபேஸ்புக் எஸ்.டி.கே. மூலம் எதுபோன்ற தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன என்பதை ஆய்வு செய்தனர். அனைத்து செயலிகளும் ஆகஸ்டு 2018 முதல் டிசம்பர் 2018 வரையிலான காலக்கட்டத்தில் சோதனை செய்யப்பட்டது. ஜெர்மனியில் நடைபெற்ற கணினியியல் நிகழ்வில் ஆய்வறிக்கை சமர்பிக்கப்பட்டது.
ஆய்வறிக்கையின்படி 61 சதவிகித செயலிகள், பயனர் தங்களது ஸ்மார்ட்போனில் செயலியை திறந்ததும் அவர்களின் விவரங்கள் தானாக ஃபேஸ்புக்கிற்கு அனுப்பப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பயனர் ஒவ்வொரு முறை செயலியை திறக்கும் போதும் அவரது தகவல் ஃபேஸ்புக்கிற்கு அனுப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் பயனர் ஃபேஸ்புக் அக்கவுண்ட் வைத்திருந்தாலும், வைத்திருக்கவில்லை என்றாலும், ஃபேஸ்புக்கில் லாக் இன் செய்திருந்தாலும் அல்லது லாக் இன் செய்யவில்லை என்றாலும் பயனர் விவரங்கள் அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் விற்பனை சரிந்துள்ளதைத் தொடர்ந்து ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தனது ஊழியர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். #Apple #TimCook
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டு, உலகம் முழுக்க விற்பனை செய்யப்படுகிறது.
அறிமுகமானது முதல் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை காலக்கட்டங்களில் புதிய ஐபோன் மாடல்களின் விற்பனை சரிந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் கடந்த இரு தசாப்தங்களில் இல்லாத அளவு, தனது வருவாய் லாப கணிப்பை முதல் முறையாக குறைத்துள்ளது.
ஐபோன் விற்பனை குறைந்தபோதிலும், ஆப்பிள் நிறுவனத்தின் சேவைகள், அணியக்கூடிய சாதனங்கள் மற்றும் மேக் வியாபாரம் புதிய சாதனையை எட்டியுள்ளது.
இந்நிலையில் ஐபோன் விற்பனை சரிவை தொடர்ந்து ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் தனது ஊழியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஆப்பிள் முதலீட்டாளர்களுக்கு ஆப்பிள் சார்பில் எழுதப்பட்டிருக்கும் கடிதத்தில் விடுமுறை காலாண்டு வாக்கில் ஆப்பிள் வருவாய் கணிப்பு மாற்றப்படுவதாக தெரிவித்திருக்கிறோம். இதற்கு முக்கிய காரணம் ஐபோன்களின் விற்பனை சரிந்தது தான், குறிப்பாக சீனாவில் ஐபோன் விற்பனை குறைந்திருக்கிறது.
காலாண்டில் வருவாய் கணிப்பு குறைந்திருப்பது பின்னடைவாக இருந்தாலும், நமது சேவைகள், அணியக்கூடிய சாதனங்கள் மற்றும் மேக் வணிகம் மூலம் வரலாற்று சிறப்புமிக்க வருவாய் கிடைத்திருக்கிறது. ஐபேட் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது இருமடங்கு அதிகரித்து இருக்கிறது.
இதேபோன்று ஐபோன் ஆக்டிவேஷன்கள் அமெரிக்கா மற்றும் கனடாவில் கிறிஸ்துமஸ் தின சாதனையை முறியடித்திருக்கிறது. இதேபோன்று அமெரிக்கா, கனடா, மெக்சிகோ, மேற்கு ஐரோப்பா, ஜெர்மனி, இத்தாலி, மற்றும் கொரியா, வியட்நாம் போன்ற ஆசிய பசிபிக் பகுதிகளில் வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

புதிய ஐபோன்களின் மூலம் நமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கண்டுபிடிப்புகளால் நாம் பெருமை கொள்ள முடியும். இதில் எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது. முதல் காலாண்டில் ஐபோன் விற்பனையில் சாதனை படைக்காததற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
வெளிப்புற சூழல் நமக்கு அழுத்தம் தரலாம், எனினும் அவற்றை நாம் விலக்காக எடுத்துக் கொள்ளக் கூடாது. மேலும் இந்த நிலை மாறும் வரை நாம் காத்திருக்கவும் கூடாது. இந்த சூழல் நாம் கற்றுக் கொள்ளவும், முடிவுகளை எடுக்கவும், நம் பலத்தை ஒன்று திரட்டி ஆப்பிள் குறிக்கோளை நிலைநிறுத்தவும் ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் கடந்த காலாண்டு விற்பனை பற்றி விவாதிக்க ஆப்பிள் ஊழியர்களுக்கு டிம் குக் தனது கடிதத்தில் அழைப்பு விடுத்திருக்கிறார்.
கூகுள் மேப்ஸ் செயலியில் குறுந்தகவல் அனுப்பும் வசதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் மேப்ஸ் செயலியில் இருந்தபடி குறுந்தகவல்களை அனுப்ப முடியும். #GoogleMaps #message
கூகுள் மேப்ஸ் செயலியில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய அம்சம் மூலம் பயனர்கள் கூகுள் மேப்ஸ் செயலியில் இருந்தபடி குறுந்தகவல் அனுப்பிக் கொள்ளலாம். எனினும், இந்த அம்சம் கொண்டு நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் குறுந்தகவல் அனுப்பிக் கொள்ள முடியாது.
புதிய அம்சம் மூலம் கூகுள் மேப்ஸ் செயலியில் பட்டியலிடப்பட்டு இருக்கும் வியாபார மையங்களுக்கு மட்டுமே குறுந்தகவல் அனுப்பிக் கொள்ளலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியாகி இருக்கும் ஸ்கிரீன்ஷாட்களில் கூகுள் மேப்ஸ் பயனர்கள் சிறு வியாபார நிறுவனங்களை தொடர்பு கொள்ள முடியும்.

இதன் மூலம் சிறு வியாபார நிறுவனங்கள் எதிர்காலத்தில் அதிகளவு வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியும். இத்துடன் வியாபார நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை அழைக்காமல், அவர்களை வேகமாக தொடர்பு கொள்ளலாம்.
முன்னதாக கூகுள் மேப்ஸ் செயலியில் ஆட்டோ ரிக்ஷா அம்சம் பொது பயணங்களில் ஒன்றாக சேர்க்கப்பட்டது. இதன் மூலம் பயனர்கள் தேடும் முகவரிக்கு செல்லும் நேரத்தை மேம்படுத்த முடியும். இந்தியாவில் முதற்கட்டமாக டெல்லியில் மட்டும் ஆட்டோ ரிக்ஷா அம்சம் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர கூகுள் தனது டுயோ செயலியில் வழங்க புதிய அம்சங்களை உருவாக்கும் பணிகளில் கூகுள் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே வெளியான தகவல்களில் கூகுள் டுயோ செயலியில் லோ லைட் மோட் மற்றும் க்ரூப் வீடியோ காலிங் உள்ளிட்ட வசதிகள் சேர்க்கப்பட இருக்கின்றன.
ஆப்பிள் நிறுவனத்தின் 2019 ஐபோன் மாடலின் கான்செப்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் புதிய ஐபோனில் மூன்று பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என தெரியவந்துள்ளது. #iPhone #smartphone
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மாடல்களின் வடிவமைப்பை 2020 ஆம் ஆண்டு வாக்கில் முற்றிலும் மாற்ற இருக்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஆப்பிள் அறிமுகம் செய்யவிருக்கும் ஐபோன்களை வித்தியாசப்படுத்த மேற்கொள்ளும் முயற்சி பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ப்ளூம்பெர்க் வெளியிட்டிருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் சோனியுடன் இணைந்து புதிய ஐபோன்களில் 3D கேமரா வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பம் ஸ்மார்ட்போன்களில் புகைப்படம், பாதுகாப்பு மற்றும் கேமிங் என மூன்று தளங்களில் புதிய வசதிகளை வழங்க வழிசெய்யும்.
“கேமராக்கள் மொபைல் போன்களில் புரட்சியை ஏற்படுத்தின, 3D கேமரா தொழில்நுட்பத்தை நானும் அதிகம் எதிர்பார்க்கிறேன்,” என சோனியின் சென்சார் பிரிவு தலைவரான சடோஷி யோஷிஹாரா தெரிவித்தார். புதிய தொழில்நுட்பத்தை வழங்குவதில் ஆப்பிளின் விருப்பம் பற்றி ப்ளூம்பெர்க் தகவல் வெளியிட்ட நிலையில், சோனியின் யோஷிஹாரா இத்தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

மேலும் “சோனி நிறுவனம் 2019 ஆம் ஆண்டில் பிரைமரி மற்றும் செல்ஃபி என இருவிதங்களில் வழங்க ஏதுவாக 3D கேமராக்களை தயார்படுத்தி, 2019 கோடை காலத்தில் இதன் பெருமளவு உற்பத்தி துவங்க திட்டமிடப்பட்டுள்ளது,” என யோஷிஹாரா தெரிவித்தார்.
சோனியின் 3D கேமராக்கள் டைம் ஆஃப் ஃபிளைட் (Time Of Flight) எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இந்த தொழில்நுட்பம் கொண்டு முப்பறிமான படங்களை அதிக தெளிவாக பிரதிபலிக்கச் செய்ய முடியும் என்றும் அதிகபட்சம் ஐந்து மீட்டர் தொலைவில் இருக்கும் பொருட்களையும் தெளிவாக படமாக்க முடியும்.
புகைப்படங்களை இந்த தொழில்நுட்பம் அதிக தெளிவாக படமாக்கும், அதுவும் குறைந்தளவு வெளிச்சம் இருக்கும் பகுதிகளிலும் காட்சிகள் தெளிவாக இருக்கும். பாதுகாப்பிற்கு இந்த தொழில்நுட்பம் ஃபேஸ் அன்லாக் வசதியை செயல்படுத்த பயனரின் முகத்தை முப்பறிமான முறையில் முன்பை விட அதிக தெளிவாக பதிவு செய்யும்.

புகைப்படம் நன்றி: Bloomberg
இதனால் சோனியின் 3D கேமராக்களுடன் வெளியாகும் புதிய ஐபோன் மாடல்களில் ஃபேஸ் ஐ.டி. தொழில்நுட்பம் தற்சமயம் விற்பனையாகும் ஐபோன்களில் இருப்பதை விட அதிக பாதுகாப்பானதாக மாறும்.
சோனியின் 3D கேமராக்கள் கொண்டு அறை மற்றும் பொருட்களை மேப் செய்து ஏ.ஆர். அல்லது வி.ஆர். அனுபவத்திற்கு அவற்றை பயன்படுத்த முடியும். இதை கொண்டு கேமிங் அனுபவமும் வித்தியாசப்படும் என கூறப்படுகிறது. ஆப்பிள் சாதனங்களில் ஏற்கனவே ட்ரூ டெப்த் கேமரா வழங்கப்பட்டுள்ள நிலையில் புதிய தொழில்நுட்பம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமுறை ஐபோன்கள் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகமாக இருக்கும் நிலையில், புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய ஐபோன்களில் வழங்கப்பட இருக்கும் சிறப்பம்சங்கள் குறித்த புதிய தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகலாம்.






