search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாட்டரி மார்ட்டின்"

    தண்ணீர் குட்டையில் பிணமாக கிடந்த மார்ட்டின் உதவியாளரின் உடலில் காயம் ஏற்பட்டது எப்படி? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் ரோஹின்குமார் (வயது 19) என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில் கூறியிருப்பதாவது:

    லாட்டரி அதிபர் மார்ட்டினிடம் என் தந்தை உதவியாளராக வேலை செய்தார். மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த ஏப்ரல் 30ந்தேதி முதல் சோதனை நடத்தினர். வருமான வரித்துறை அதிகாரி ராஜன் தலைமையிலான அதிகாரிகள் எங்கள் வீட்டிற்கு வந்து, என் தந்தை பழனிசாமியை(45) பிடித்துச் சென்றனர். அப்போது என் தந்தையை சாதி பெயரை சொல்லி அவர்கள் கூப்பிட்டனர்.

    மார்ட்டின் அலுவலகத்துக்கு அழைத்து சென்று இரவும், பகலுமாக வைத்து விசாரித்தனர். அவரை தூங்கவிடவில்லை. இந்த நிலையில், மார்ட்டின் அலுவலகத்தில் என் தந்தை வரவில்லை என்று அங்கு வேலை செய்யும் ஊழியர் எனக்கு போன் போட்டு கூறினார். இதையடுத்து என் தந்தையை தேடி நானும், உறவினர்களும் அங்கு சென்றபோது, மார்ட்டினின் வக்கீல், என் தந்தை காரமடை போலீஸ் நிலையத்தில் இருப்பதாக கூறினார். நாங்கள் அனைவரும் அங்கு சென்றபோது, என் தந்தை போலீஸ் நிலையத்தில் இல்லை. அதேநேரம் என் தந்தை தற்கொலை செய்துக் கொண்டதாக எழுதப்பட்ட புகாரில் என்னை கையெழுத்திடும்படி போலீசார் கட்டாயப்படுத்தினர்.

    இதன்பின்னர், அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் என் தந்தையின் உடல் இருப்பதாக கூறினர். அங்கு சென்று பார்த்தபோது, பிணமாக கிடந்த என் தந்தையின் தலை மற்றும் முகத்தில் ரத்த காயங்கள் இருந்தன. என் தந்தையை சித்ரவதை செய்து கொலை செய்துள்ளனர்.

    அவரது சாவில் சந்தேகம் இருந்ததால், என் தந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்றும் என் சார்பில் ஒரு டாக்டர் உள்பட டாக்டர்கள் குழுவை அமைத்து, பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று அதிகாரிகளிடம் முறையிட்டேன்.

    ஆனால், கடந்த 5ந்தேதி மதியம் என் தந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்துவிட்டனர். தற்போது என் தந்தையின் உடல் கோவை அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

    என் தந்தை சாவு குறித்து விசாரித்தபோது, அவர் குறைவான அளவு தண்ணீர் உள்ள குட்டையில் விழுந்து தற்கொலை செய்துக் கொண்டதாக போலீசார் கூறுகின்றனர். எனவே, காரமடை போலீசார் இந்த வழக்கை விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே, என் தந்தை சாவு குறித்து பதிவான வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் பிரேத பரிசோதனை செய்த போது எடுத்த வீடியோ பதிவு, ஆர்.டி.ஓ. விசாரணை அறிக்கை உள்ளிட்டவைகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

    மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் சங்கரசுப்பு, ‘பிணவறையில் உள்ள பிணத்தை பதப்படுத்தி வைக்காமல், பிணவறையின் முன்பகுதியில் உள்ள அறையில் போட்டு வைத்துள்ளனர்’ என்று கூறினார்.

    இதையடுத்து போலீசார் தாக்கல் செய்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், ‘அதில் தெளிவான விவரங்கள் இல்லை. தண்ணீர் குட்டையில் மூழ்கி இறந்தால், அவரது கண்கள் பிதுங்கியும், நாக்கு வெளியில் தள்ளியும் இருப்பது ஏன்? உடலில் காயங்கள் வேறு உள்ளது. வாய் அருகே ரத்த காயம் உள்ளது. எனவே, இந்த காயங்கள் எல்லாம் பழனிச்சாமி உயிரோடு இருந்த போது உடலில் ஏற்பட்டதா? அல்லது இறந்து பின்னர் காயம் ஏற்படுத்தப்பட்டதா? என்பது குறித்தும், பிணவறையில் பழனிச்சாமியின் உடலை எப்படி பதப்படுத்தி வைத்துள்ளீர்கள்? என்பது குறித்தும் தெளிவான அறிக்கையை போலீசார் நாளை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.
    கோவை ஆஸ்பத்திரியில் உள்ள லாட்டரி அதிபரின் உதவியாளர் உடலை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #MadrasHC #LotteryMartin
    சென்னை:

    கோவையை சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டின் நிறுவனத்தில் கடந்த வாரம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் கேஷியர் பழனிச்சாமியிடம் வருமான வரி சோதனை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்தநிலையில் பழனிச்சாமி கடந்த 3-ந்தேதி காரமடை அருகே வெள்ளியங்காடு குளத்தில் பிணமாக கிடந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக குடும்பத்தினர் புகார் கூறியுள்ளனர்.

    இந்தநிலையில் பழனிச்சாமியின் மகன் ரோகின்குமார் தனது தந்தை பழனிச்சாமி மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட கோரியும், மறு பிரேத பரிசோதனை செய்யக் கேட்டும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், மனுதாரரின் தந்தை பழனிச்சாமி போலீஸ் காவலிலோ, வருமான வரித்துறை அதிகாரிகளின் காவலிலோ இருந்த போது மரணம் அடையவில்லை. அதேநேரம், பழனிச்சாமியின் உடலை பிரேத பரிசோதனை செய்யும்போது, வீடியோ பதிவு செய்யப்பட்டது. தற்போது ஆர்.டி.ஓ. விசாரணையும் நடத்தப்பட்டது. காரமடை போலீஸ் நிலையத்தில் உள்ள வழக்கின் விசாரணை, மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது’ என்று வாதிட்டார்.

    இதையடுத்து நீதிபதிகள், ‘இறந்து போன பழனிச்சாமியின் உடல் தற்போது எங்கு உள்ளது?’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு உடல் கோவை அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் உள்ளதாக அரசு வக்கீல் கூறினார்.

    இதையடுத்து, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை பழனிச்சாமியின் உடலை பதப்படுத்தி, பாதுகாப்பாக கோவை அரசு ஆஸ்பத்திரியில் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற 15-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர். #MadrasHC #LotteryMartin
    ×