என் மலர்
நீங்கள் தேடியது "லட்சிய ஜனநாயக கட்சி"
- விஜய்பாணியில், அரசியலில் களமிறங்க ஆர்வம் காட்டி வந்தவர்
- புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் 30 இடங்களிலும் போட்டி
டிசம்பரில் புதிய கட்சி தொடங்க உள்ளதாக லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அக்கட்சியின் பெயரை தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் தான் தொடங்கவிருக்கும் புதிய கட்சிக்கு 'லட்சிய ஜனநாயக கட்சி' எனப் பெயரிட்டுள்ளார்.
ஐ.நா.வின் மனித உரிமைகள் சபையில் உரையாற்றிய போது தனது கட்சியின் பெயரை அறிவித்தார். "மனித உரிமைகளைப் பரப்புதல் - உலகளாவிய கல்வியின் சக்தி" என்ற கருப்பொருளின்கீழ், பேசியபோது தனது கட்சிப்பெயர் "லட்சிய ஜனநாயக கட்சி" என அறிவித்தார். இந்த அறிவிப்பு சர்வதேச பிரதிநிதிகள் பங்கேற்ற அவையில் வரவேற்பைப் பெற்றது.
தமிழ்நாட்டில் விஜய் களமிறங்கிய அதேபாணியில், புதுச்சேரி அரசியலில் களமிறங்க நீண்டநாட்களாக ஆர்வம் காட்டி வந்தவர் சார்லஸ் மார்ட்டின்.இதற்காக பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தார். ஜேசிஎம் மக்கள் மன்றம் பெயரில் நலத்திட்ட உதவிகள் சில செய்தாலும், பாஜக எம்எல்ஏக்களோடு கூடுதல் நெருக்கம் காட்டி வந்தார்.

ஐ.நா. சபையில் சார்லஸ் மார்ட்டின்
இதனால் பாஜக சார்பில் வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், புதிய கட்சி தொடங்க உள்ளதாக கடந்த மாதம் தெரிவித்தார். இந்நிலையில் கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். புதுச்சேரியில் விரைவில் தொடக்க விழா நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
அடுத்தாண்டு நடைபெற உள்ள புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் 30 இடங்களிலும் போட்டியிட கட்சி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.






