search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீ டூ"

    ‘மீ டூ’ இயக்கம் தங்களுக்கு வேண்டாதவர்களை சிக்கலில் மாட்ட வைத்து அசிங்கப்படுத்தும் ஒரு தளமாக இருக்கிறது என்பதும் பலரது கருத்தாக இருக்கிறது.
    இந்தியா முழுவதும் ‘மீ டூ’ (நானும்தான்) இயக்கம் புயலை கிளப்பி வருகிறது.

    ‘மீ டூ’ இயக்கம் ஆண்களை பயமுறுத்தினாலும் செக்ஸ் கொடுமைகளில் இருந்து பெண்களை பாதுகாக்கும் கவசம் என்கின்றனர் பெண் உரிமைக்கு போர்க்கொடி உயர்த்துபவர்கள்.

    ‘மீ டூ’ ஹேஷ்டேக் உள்ளே விதவிதமான பாலியல் குற்றங்கள் பற்றிய தகவல்கள் தினமும் குவிகின்றன. பாலியல் ஆசாமிகளை அலற வைக்கும் இந்த ‘மீ டூ’ 2006-ம் ஆண்டிலேயே உதயமாகி விட்டது. இப்போது இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள பட உலகில் சூறாவளியாக சுழன்று பிரபலங்களை நிலைகுலையச் செய்து வருகிறது.

    தமிழ் பட உலகில் முதலில் சுசிலீக்ஸ் முகநூல் பக்கம்தான் திரையுலகினரின் அத்துமீறல்களை அம்பலபடுத்தியது. முன்னணி நடிகர், நடிகைகள் இதில் சிக்கினார்கள்.அதன்பிறகு தெலுங்கு பட உலகில் ஸ்ரீரெட்டி விஸ்வரூபம் எடுத்து பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தவர்களை சந்திக்கு இழுத்தார்.

    இப்போது தீராத விளையாட்டு பிள்ளை படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான இந்தி நடிகை தனுஸ்ரீதத்தா மூலம் இந்தியா முழுவதையும் ‘மீ டூ’ உலுக்கி வருகிறது. தனுஸ்ரீதத்தா பாலியல் புகாரில் சிக்கிய நானா படேகர் சாதாரணமானவர் அல்ல. தேசிய விருதுகள் பெற்று இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கும் நடிகர். ‘காலா’, ‘பொம்மலாட்டம்’ என்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

    10 வருடங்களுக்கு முன்பு ‘ஹார்ன் ஓகே ப்ளஸ்’ இந்தி படத்தில் நடித்தபோது தன்னிடம் தவறாக நடக்க முயன்றார் என்றும் அதை வெளியே சொன்னதால் ஆட்களை வைத்து மிரட்டினார் என்றும் தனுஸ்ரீ தத்தா கூறினார். அப்போது தனுஸ்ரீ கார் தாக்கப்பட்ட வீடியோவும் இப்போது வைரலாகி அவர் மீது அனுதாபம் ஏற்படுத்தி உள்ளது.

    அதோடு இந்தி நடிகர் அக்னி கோத்ரி படப்பிடிப்பு அரங்குக்குள் தனது ஆடைகள் முழுவதையும் களைந்து விட்டு நிர்வாணமாக நிற்க சொன்னார் என்று இன்னொரு பகீர் தகவலையும் வெளியிட்டார். தனுஸ்ரீதத்தாவிடம் போலீசார் புகார் பெற்று 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நானா படேகரை கோர்ட்டில் ஏற்ற தயாராகி வருகிறார்கள். மகளிர் ஆணையமும் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது.

    இதற்கு பிறகு திரையுலகினர் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்கள் குவிய தொடங்கின.

    கங்கனா ரணாவத், தேசிய விருது பெற்ற ‘குயின்’ பட இயக்குனர் விகாஸ் பாஹல் தன்னை சந்திக்கும்போதெல்லாம் கட்டிப்பிடித்து கழுத்தில் முகத்தை புதைத்து எனது தலைமுடியில் வாசனையை நுகர்ந்து உங்கள் வாசனையை நான் விரும்புகிறேன் என்று தொல்லை கொடுத்ததாக குற்றம் சொன்னார்.

    தந்தை வேடங்களுக்கு பொருத்தமான நடிகர் என்று பெயர் எடுத்த பிரபல இந்தி நடிகர் அலோக் நாத் மதுவில் எதையோ கொடுத்து தன்னை கற்பழித்து விட்டதாக பெண் இயக்குனர் வின்டா நந்தா கொந்தளித்தார். இப்படி நிறைய புகார்கள் குவிந்து இந்தி பட உலகை அலற வைத்து வருகிறது.



    இப்போது தமிழ் பட உலகத்திலும் ‘மீ டூ’ புகுந்து பொங்க வைத்து இருக்கிறது. கவிஞர் வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்தார் என்று பிரபல சினிமா பின்னணி பாடகி சின்மயி சொன்ன குற்றச்சாட்டு அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது.

    சின்மயி புகாரின் சாராம்சம் என்னவென்றால், “சுவிட்சர்லாந்தில் ஒரு இசை நிகழ்ச்சிக்கு சென்றபோது வைரமுத்து அவர் தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு என்னை அழைத்தார். நான் மறுத்தேன். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர் வைரமுத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்கும்படி மிரட்டினார். எனக்கு பயம் ஏற்பட்டது. உடனடியாக இந்தியா திரும்பி விட்டோம். வைரமுத்து அவரது அலுவலகத்தில் இரண்டு பெண்களுக்கு முத்தம் கொடுக்க முயற்சித்துள்ளார். என்னைப்போல் பாதிக்கப்பட்ட பாடகிகள் இனிமேல் இதுகுறித்து பேசுவார்கள்” என்பதுதான்.

    இதனை மறுத்துள்ள வைரமுத்து, “அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன். அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்கு புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவது இல்லை. உண்மையை காலம் சொல்லும்” என்றார்.

    வைரமுத்துவோடு இது நிற்கவில்லை. வில்லன் நடிகரும் நடன இயக்குனருமான கல்யாண் மீது இலங்கையை சேர்ந்த ஒரு பெண் பாலியல் புகார் சொன்னதை சின்மயி தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

    அந்த பெண் சினிமாவில் டான்ஸ் மாஸ்டராகும் ஆசையில் சென்னை வந்து கல்யாண் குழுவில் சேர்ந்ததாகவும் அப்போது படுக்கையை பகிர்ந்தால் உதவியாளராக வைத்துக்கொள்வேன் என்று கல்யாண் சொன்னதாகவும் கூறி உள்ளார்.

    இன்னொரு வில்லன் நடிகரான ஜான்விஜய்யும் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தகவலை பெங்களூருவை சேர்ந்த பெண் எழுத்தாளர் சந்தியா மேனன் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

    மலையாள நடிகரும் எம்.எல்.ஏ.வுமான முகேஷ் மீது பெண் இயக்குனர் டெஸ் ஜோசப் பாலியல் புகார் கூறியுள்ளார்.

    தினம் ஒரு தகவல் போல் பலரும் பாலியல் துன்புறுத்தல் பற்றி பேச ஆரம்பித்து உள்ளனர். 10, 15 வருடங்களுக்கு முன்னால் நிகழ்ந்த பாலியல் வன்மங்களையும் வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறார்கள்.

    இதை இனிமேல் கட்டுப்படுத்த முடியாது என்றும் பெண்களுக்கு எதிராக எங்கு தவறு நடந்தாலும் ‘மீ டூ’ தளம் அதை பகிரங்கப்படுத்தும் என்றும் பெண்கள் அமைப்பினர் கூறுகிறார்கள்.

    சினிமா துறை, அரசு, தனியார் அலுவலகங்கள் எங்கும் இனிமேல் ‘மீ டூ’ வுக்கு பயந்து பெண்களை பாலியல் வக்கிரமக்காரர்கள் நெருங்க பயப்படுவார்கள்.

    ‘மீ டூ’ இயக்கம் தங்களுக்கு வேண்டாதவர்களை சிக்கலில் மாட்ட வைத்து அசிங்கப்படுத்தும் ஒரு தளமாக இருக்கிறது என்பதும் பலரது கருத்தாக இருக்கிறது.

    நேர்மையான ஒருவர் மீது ‘மீ டூ’ புகார் பாய்ந்த உடனேயே அவர் மீது சேறு பூசப்பட்டு விடுகிறது. பின்னர் அவர் போராடி தன்னை தூய்மையானவர் என்று நிரூபித்தாலும், அவர் மீது சுமத்தப்பட்ட களங்கத்தின் வடு, காலத்துக்கும் மாறப்போவது இல்லை.

    எனவே ‘மீ டூ’ இயக்கம் தனக்கு பிடிக்காதவர்கள் மீது தவறாக ஏவப்படாமல் இருந்தால் நல்லது என்கிறார்கள் நடுநிலையாளர்கள்.
    ×