search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுலாபயணிகள்"

    • சுற்றிப்பார்க்க தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
    • பண்டிகை விடுமுறையை கொண்டாடுவதற்கு சுற்றுலா பயணிகள் வனத்துறை தங்கும் விடுதிகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.

    உடுமலை:

    ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் பொள்ளாச்சி, உலாந்தி, மானாம்பள்ளி, வால்பாறை ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. இங்கு டாப்சிலிப்பில் யானைகள் முகாம், குரங்கு நீர்வீழ்ச்சி, சிறு குன்றா, அட்டகட்டி காட்சி முனை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இவற்றை சுற்றிப்பார்க்க தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    இதற்கிடையில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு உள்ளன. இதற்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை விடுதிக்கு தகுந்தவாறு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்படுகிறது. நாளை (திங்கட்கிழமை) ஆயுதபூஜை கொண்டாடப்படுவதால் தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது.

    பண்டிகை விடுமுறையை கொண்டாடுவதற்கு சுற்றுலா பயணிகள் வனத்துறை தங்கும் விடுதிகளை முன்பதிவு செய்து வருகின்றனர். இதன் காரணமாக இன்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு அனைத்து தங்கும் விடுதிகளும் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் டாப்சிலிப், சேத்துமடை, அட்டக்கட்டி, சிறுகுன்றா ஆகிய பகுதிகளில் வனத்துறை தங்கும் விடுதிகள் உள்ளன. இதில் 39 தங்கும் விடுதிகள் தற்போது சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு பயன்பாட்டில் உள்ளன. இந்த அனைத்து அறைகளும் தொடர்ந்து 3 நாட்களுக்கு முன்பதிவு முடிந்து விட்டது. மானாம்பள்ளியில் உள்ள தங்கும் விடுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    பணிகள் முடிந்ததும் சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் சுற்றுலா பயணிகள் மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வருவதை தடுக்க சோதனை சாவடிகளில் வாகன சோதனை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • முதுமலை வனப்பகுதிக்கு தினந்தோறும் 1000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
    • அடிப்படை தேவைகளை சிறப்பாக செய்து தரவேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தின் வடகிழக்குப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையில் தமிழகம், கேரளா, கர்நாடக எல்லைகளின் சந்திப்பில் முதுமலை காட்டுயிர் சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா அமைந்து உள்ளது.

    இது நீலகிரி வனத்துறை சரகத்துக்கு உட்பட்ட பகுதி ஆகும். தமிழக சுற்றுலாத்துறையில் முதுமலை சரணாலயம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இங்கு காணப்படும் வித்தியாசமான உயிரினங்கள், வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவம் தரும்.

    முதுமலை சரணாலயத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலங்களில் ஒன்று தெப்பக்காடு யானைகள் முகாம். இது மாயாற்றின் கரையில் அமைந்து உள்ளது. முதுமலை தேசிய பூங்காவில் இருந்து சிறிது தூரத்தில் உள்ளது, இது ஆசியாவில் மிகவும் பழமையான யானைகள் முகாம் ஆகும்.

    கடந்த 1923-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு தற்போது 24 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு யானைகளுக்கு பயிற்சிகள் தரப்பட்டு வருகின்றன. மறுவாழ்வு மையமாகவும் செயல்படுகிறது. முதுமலை வனவிலங்கு சரணாலயத்திற்குள் மரம் எடுத்து செல்லுதல் போன்ற வனப்பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

    இத்தனை சிறப்புகள் மிக்க முதுமலை வனப்பகுதிக்கு தினந்தோறும் 1000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    ஆனால் இங்கு அவர்களுக்கான அடிப்படைவசதிகள் போதியஅளவில் இல்லை என சுற்றுலாபயணிகள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.

    குறிப்பாக போதிய கழிவறை வசதிகள் இல்லை. ஒருசில கழிப்பிடங்களும் பெரும்பாலான நேரங்களில் திறக்கபடாமல் உள்ளது . எனவே வனத்துறை உடனடியாக முதுமலை சரணாலயத்தில் அடிப்படை தேவைகளை சிறப்பாக செய்து தரவேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கேரளா மற்றும் சிறுவாணி அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழை இல்லை.
    • சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வாகனங்களில் திரண்டு வந்து ஆனந்தமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

    கோவை,

    கோவை மாவட்டத்தின் சாடிவயல் பகுதியில் கோவை குற்றாலம் அருவி உள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் வரத்து இருக்கும். எனவே கோவை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் திரண்டு வந்து கோவை குற்றாலத்தில் குளித்து செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் கேரள மாநிலம் மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதனால் கோவை குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    எனவே அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அதிகாரிகள் தடை விதித்தனர். எனவே சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.

    இந்த நிலையில் கேரளா மற்றும் சிறுவாணி அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழை இல்லை. எனவே கோவை குற்றாலத்தில் தண்ணீர் வரத்து இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.

    இதனை தொடர்ந்து கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை இன்று முதல் அனுமதி அளித்து உள்ளது.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வாகனங்களில் திரண்டு வந்தனர். அங்கு உள்ள சோதனைச்சாவடியை கடந்து சென்று, கோவை குற்றாலத்தில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

    கோவை குற்றாலத்தில் சுமார் ஒருமாதகால இடைவெளிக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி தந்து உள்ளது. இது பொதுமக்களிடம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • கோடைவிழா கடந்த 6-ந் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது.
    • பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    கோவை,

    மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்திற்கு தினந்தோறும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக கோடை மாதமான ஏப்ரல், மே மாதங்களில் நீலகிரிக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும்.

    அப்படி சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கோடைவிழா கடந்த 6-ந் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் கோடைவிழாவின் முக்கிய நிகழ்வான மலர்கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கியது. மலர் கண்காட்சி தொடங்கியதையொட்டி கண்காட்சியை கண்டு களிக்க தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களாக கேரளா, கர்நாடகா மற்றும் பல்வேறு மாநிலங்களிலும் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதனால் ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களுமே எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காணப்படுகிறது.

    நீலகிரிக்கு சுற்றுலா வரும் அனைவரும் மேட்டுப்பாளையம் வழியாக தான் செல்ல வேண்டும். இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி மற்றும் கோத்தகிரி செல்லும் சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது.

    கோவையில் இருந்து ஊட்டி, குன்னூர், கோத்தகிரிக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது கோடைகாலம் என்பதாலும், கண்காட்சி நடந்து வருவதாலும் இந்த பஸ்களில் வழக்கத்தை விட பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    இன்று காலை கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பஸ் நிலையத்தில் ஊட்டிக்கு செல்வதற்காக அதிகாலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக குவிந்து இருந்தனர்.

    அவர்கள் நீலகிரிக்கு செல்லக்கூடிய பஸ்களில் ஒருவருக்கொருவர் முண்டியத்து கொண்டு ஏறி நீலகிரிக்கு பயணித்தனர். இதனால் நீலகிரிக்கு செல்லும் அனைத்து பஸ்களுமே நிரம்பி காணப்பட்டது.

    • வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க மலைப்பகுதிகளுக்கு பொதுமக்கள் வருகின்றனர்.
    • சுற்றுலாபயணிகள் தங்கிச் செல்ல 150-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன.

    பொள்ளாச்சி,

    தமிழகத்தின் சமவெளிப்பகுதியில் தற்போது வெயில் கொளுத்துகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க மலைப்பகுதிகளுக்கு பொதுமக்கள் குடும்பத்துடன் படையெடுக்க தொடங்கி உள்ளனர். மேலும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் சுற்றுலா தலங்களில் சுற்றுலாபயணிகள் கூட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    தமிழ்புத்தாண்டை தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வந்ததால் கோவை மாவட்டம் வால்பாறைக்கு சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. கூழாங்கல் ஆறு, வெள்ளமலை சுரங்கம், நீராறு அணை, சோலையாறு அணை, நல்லமுடி காட்சிமுனை மற்றும் பாலாஜி கோவில் என அனைத்து பகுதியிலும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் காணப்பட்டனர்.

    ஒரே நேரத்தில் ஏராளமான சுற்றுலாபயணிகள் குவிந்த தால் வால்பாறை நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கிடையே வால் பாறையில் உள்ள தங்கும் விடுதிகள் மே மாத இறுதிக்குள் அனுமதி பெற வேண்டும் என சுற்றுலாத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வால்பாறையில் சுற்றுலாபயணிகள் தங்கிச் செல்ல வசதியாக 150-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. வால்பாறை நகர், ரொட்டிக் கடை, சோலையாறு அணை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. தனியார் தேயிலை தோட்டப்பகுதிகளில் தனியார் ரிசார்டுகளும் உள்ளன.

    இதில் பல தங்கும் விடுதிகள் அனுமதியின்றி செயல்படுவது சுற்றுலாத்துறையின் கணக்கெடுப்பில் தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி சீனிவாசன் கூறியதாவது:-

    வால்பாறையில் தங்கும் விடுதிகள் நடத்துபவர்கள் சுற்றுலாத்துறையில் முறையாக பதிவு செய்து கொள்ள வேண்டும். நகராட்சியில் மட்டும் அனுமதி வாங்கினால் போதாது. சுற்றுலாத்துறையிலும் பதிவு செய்து கொள்ள வேண்டும். மே மாதம் இறுதிக்குள் தங்கும் விடுதி மற்றும் ரிசார்ட் நடத்தி வருபவர்கள் தமிழ்நாடு சுற்றுலாத்துறையில் தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஊட்டிக்கு படையெடுப்பர்.
    • 5 அடுக்குகளைக் கொண்ட இந்த ரோஜா தோட்டம் 4 ஹெக்டர் பரப்பில் அமைந்துள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

    தமிழக மக்கள் சுற்றுலா செல்லவேண்டும் என்றால் அவர்களின் முதல் விருப்பமாக நீலகிரி மாவட்டம் தான் இருக்கும். இயற்கையின் மொத்த அழகையும் அங்கு கண்டு வியந்து ரசிக்கலாம். வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஊட்டிக்கு படையெடுப்பர்.

    இந்த நிலையில், தெற்கா சியாவில் புகழ்பெற்ற ஊட்டி ரோஜா பூங்காவில் உள்ள ரோஜாக்களை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகள் புகைப்படங்கள் செல்பி எடுத்து மகிழ்கின்றனர். மேலும் நிலா மாடம், புல் மைதானம், நீரூற்று, போன்ற இடங்களைக் கண்டு ரசித்து வருகின்றனர். 5 அடுக்குகளைக் கொண்ட இந்த ரோஜா தோட்டம் 4 ஹெக்டர் பரப்பில் அமைந்துள்ளது.

    பூங்காவின் மேற்புரம் மே மாதத்தில் பூக்கள் பூக்கும் வண்ணம் செடிகள்கவாத்து செய்யபட்டு உள்ளதால் மேல் அடுக்கில் பூக்களை காண முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர்

    ஆனால் அவர்களின் ஏமாற்றத்தை போக்கும் வகையில் கீழ் அடுக்குகளில் உள்ள செடிகளில் ரோஜா பூக்கள் பல வண்ணங்களில் பூத்து குலுங்குகின்றன.

    சிறப்பு மிக்க இந்த பூங்காவில் தற்போது பூத்துக்கு லுங்கும் ரோஜா க்களை சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்து செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

    ஊட்டியில் ரோஜா க்களின் அணிவகுப்பை காண குவியும் சுற்றுலா பயணிகள் ரோஜாமலர்கள் மனதிற்கு புத்துணர்வு அளிப்பதாக மகிழ்சி தெரிவித்தனர்.

    • கண்ணாடி மாளிகையில் செல்பி எடுத்து ரசித்தனர்.
    • இத்தாலியன் பூங்கா ஆகிய இடங்களை கண்டு ரசித்து புல் மைதானங்களில் விளையாடி மகிழ்ந்தனர்.

    ஊட்டி,

    இயற்கை எழில் மிகுந்த நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும். இங்கு அமைந்துள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    தற்போது சமவெளி பகுதியில் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் ரம்மியமான சூழ்நிலை நிலவும் ஊட்டிக்கு சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்துள்ளது. பிற மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.

    இவர்கள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் குவிந்து இங்கு நிலவும் அமைதியான மற்றும் குளிர்ச்சியான காலநிலையை அனுபவித்து வருகின்றனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் பெரணி இல்லம், கண்ணாடி மாளிகை, இத்தாலியன் பூங்கா ஆகிய இடங்களை கண்டு ரசித்து புல் மைதானங்களில் விளையாடி மகிழ்ந்தனர்.

    கண்ணாடி மாளிகையில் பராமரிக்கப்படும் வண்ண மலர்களை பார்வையிட சுற்றுலாபயணிகள் அதிக ஆர்வம் காட்டுவதுடன் செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்கிறார்கள். விரைவில் ஊட்டியில் கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி நடைபெற உள்ள நிலையில் தற்போதே சுற்றுலாபயணிகள் வருகை அதிகரிக்கத் தொடங்கி யுள்ளது வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • இரவிலும் வெப்பத்தின் தாக்கம் இருப்பதால் பொதுமக்கள் தூக்கமின்றி தவித்து வருகிறார்கள்.
    • அதிகளவில் கூட்டம் திரண்டதால் பாதுகாப்பு க்காக போலீசாரும் நிறுத்தப்பட்டு இருந்தனர்

    கோபி, மார்ச். 19-

    ஈரோடு மாவட்டத்தில் கோடைகாலம் தொடங்கும் முன்பே கடந்த ஒரு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    பகலில் அனல் காற்று வீசிவருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர். இரவிலும் வெப்பத்தின் தாக்கம் இருப்பதால் பொதுமக்கள் தூக்கமின்றி தவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாலை நேரத்தில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசிவருகிறது. ஆனாலும் பகல் நேரத்தில் வழக்கம் போல் அனல் காற்று வீசி வருகிறது.

    இதனால் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து விட்டது. அத்தியா வசிய தேவை–களுக்காக மட்டுமே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து செல்கிறார்கள்.

    அதுவும் குடைபிடித்துக் கொண்டு வருகிறார்கள். மேலும் வெப்பத்தை தணிக்க தர்பூசணி, இளநீர், நுங்கு, மற்றும் வெள்ளரி பிஞ்சுகள், பழச்சாறு, கரும்புசாறு குடித்து வருகிறார்கள்.

    கோடை காலம்தொடங்கும் முன்பே ஈரோட்டில் 100 டிகிரி வெயில் பதிவானது. இனி வரும் காலங்களில் வெப்பத்தின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும்.

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி தடுப்பணையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குவிந்தனர்.

    ஈரோடு, நாமக்கல், சேலம், கோவை, மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பலர் குடும்பம், குடும்பாக வந்து அருவியில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். இதே போல் கர்நாடகா, கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து இருந்தனர்.

    அனல் காற்றில் இருந்து தப்பிக்கும் வகையில் ஆனந்தமாக அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

    அதிகளவில் கூட்டம் திரண்டதால் பாதுகாப்பு க்காக போலீசாரும் நிறுத்தப்பட்டு இருந்தனர். மேலும் கொடிவேரி பகுதி முழுவதும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    • ஆண்டுதோறும், வன உயிரின வார விழா அக்., முதல் வாரத்தில் கொண்டாடப்படுகிறது.
    • வனவர்கள் காளிமுத்து, செந்தில் முருகன் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்

    உடுமலை:

    வன உயிரின வார விழாவையொட்டி, அமராவதி வனச்சரகத்தில், வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டது.ஆண்டுதோறும், வன உயிரின வார விழா அக்., முதல் வாரத்தில் கொண்டாடப்படுகிறது.ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டம் சார்பில், வன உயிரின வார விழாவை கொண்டாடும் வகையில், பள்ளி, கல்லூரி, மாணவர்களுக்கு, உடுமலையில், பேச்சு மற்றும் வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டன.மேலும், இணைய வழி வாயிலாக கட்டுரை மற்றும் ஓவியப்போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது.நேற்று, திருப்பூர் வனக்கோ ட்டத்தில் உள்ள 6 வனச்சரகங்களிலும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு, 'வன உயிரின வார விழா' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.அமராவதி வனச்சரகத்தில், வனப்பரப்பை அதிகரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மரக்கன்றுகள் நடப்பட்டது.

    மேலும், 'வனம் மற்றும் வன உயிரினங்களை காப்போம்' என சுற்றுலா பயணிகள், உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து, கையெழுத்து பிரசாரம் துவக்கப்பட்டது.மரக்கன்று நடும் நிகழ்ச்சியில், திருப்பூர் வனகோட்ட உதவி வன பாதுகாவலர் கணேஷ்ராம் தலைமை வகித்தார். வனச்சரக அலுவலர் சுரேஷ், வனவர்கள் காளிமுத்து, செந்தில் முருகன் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்

    • ஓணம் பண்டிகை மற்றும் வார இறுதி நாட்கள் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருக்கிறது.
    • வாகனத்தை காட்டு யானை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ஊட்டி:

    முதுமலையில் சுற்றுலா பயணிகள் சென்ற வாகனத்தை காட்டு யானை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், மான்கள், புலிகள், கரடிகள், செந்நாய்கள், சிறுத்தை, புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. கோடை காலத்தில் கடும் வறட்சி நிலவியதால் காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள் பசுந்தீவனத்தை தேடி பல்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றது. இதன் காரணமாக இரை கிடைக்காமல் புலிகள் நடமாட்டம் சாலையோரம் அதிகமாக காணப்பட்டது

    இதனால் வாகன ஓட்டிகள், சுற்றுலாப் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தற்போது கூடலூர், முதுமலை, மசினகுடி பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வனத்தில் பசுந்தீவனம் போதிய அளவு வளர்ந்துள்ளது. இதனால் காட்டு யானைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

    தற்போது ஓணம் பண்டிகை மற்றும் வார இறுதி நாட்கள் என்பதால் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருக்கிறது. முதுமலை சாலைகளில் வாகனங்கள் அதிகளவு இயக்கப்படுகின்றன.தொடர்ந்து வனவிலங்கு களுக்கு சுற்றுலா பயணிகள் இடையூறு செய்வதை தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    மேலும் சுற்றுலா பயணிகளை எச்சரித்து அனுப்பி வருகின்றனர். இந்தநிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் மற்றும் தொரப்பள்ளியில் இருந்து கார்குடி செல்லும் சாலையில் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை காட்டு யானை ஒன்று ஆக்ரோஷமாக துரத்தியது.

    பின்னர் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போ து, வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் வனத்துறையின் விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தி இடையூறு செய்தல் கூடாது. உணவு சமைத்தல் மற்றும் சாப்பிட கூடாது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றனர்.

    • கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் மழையின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.
    • மசினகுடிக்கு செல்லும் சாலையில் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தரைப்பாலம் மூழ்கியது.

    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வரை தொடர் கனமழை பெய்தது. இதேபோல் கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் மழையின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதித்தது. அண்டை மாநிலங்கள் உட்பட பல இடங்களில் மழை அதிகமாக பெய்ததால் நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. குறிப்பாக கூடலூரில் இருந்து மசினகுடிக்கு செல்லும் சாலையில் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தரைப்பாலம் மூழ்கியது. இதனால் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் இன்றி முதுமலை வெறிச்சோடியது.

    இந்த நிலையில் மழை குறைந்து பரவலாக வெயில் காணப்படுகிறது. மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் திரும்பி உள்ளது. தொடர்ந்து மாயாற்றில் வெள்ளம் குறைந்து விட்டது. இதைத்தொடர்ந்து போக்குவரத்து வழக்கம் போல் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக முதுமலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. தொடர்ந்து தெப்பக்காடு முகாமில் வளர்ப்பு யானைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

    மேலும் யானைகளுக்கு வன ஊழியர்கள் உணவு தயார் செய்வதை பார்வையிட்டனர். இதனால் வளர்ப்பு யானைகள் முகாம் களை கட்டி உள்ளது. தொடர்ந்து தனியார் வாகன சவாரி மற்றும் சுற்றுலா சார்ந்த தொழில்களும் நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, கடந்த சில வாரங்களாக தொடர் கனமழை உள்ளிட்ட காரணங்களால் சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைவாக இருந்தது. தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளதால் வாகன சவாரி, வளர்ப்பு யானை முகாமுக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருகின்றனர் என்றனர்.

    • வன விலங்குகளை காண்பிப்பதாக கூறி சில சுற்றுலா கார் டிரைவர்கள் இரவு நேரத்தில் அழைத்துச் செல்கின்றனர்.
    • சுற்றுலா பயணிகளை இரவு நேரத்தில் வெளியே அனுப்பிய தங்கும் விடுதி உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் மலைப்பகுதியான வால்பாறைக்கு ஏராளமான சுற்றுலாபயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களிடம் வன விலங்குகளை காண்பிப்பதாக கூறி சில சுற்றுலா கார் டிரைவர்கள் இரவு நேரத்தில் அழைத்துச் சென்று காலையில் மீண்டும் தங்கும் விடுதிக்கு கொண்டு வந்து விடுகின்றனர்.

    இதுபோன்ற செயல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வனத்துறை சார்பில் தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு இரவு நேர டிரக்கிங் என்ற பெயரில் சுற்றுலாபயணிகளை வெளியே அனுப்பக் கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்தநிலையில் வனத்துறையினர் இரவில் ரோந்து சென்றபோது கருமலை எஸ்டேட் பகுதி வழியாக வந்த 2 வாகனங்களை தடுத்து நிறுத்து சோதனை செய்தனர். அப்போது வன விலங்குகளை காண சுற்றுலாபயணிகளை அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து இரு வாகனங்களையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் வாகன டிரைவர்களான ஜீவா (வயது 29), கலையரசன் (32) ஆகியோருக்கு வால்பாறை வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார்.

    மேலும் சுற்றுலா பயணிகளை தங்க வைத்து இரவு நேரத்தில் வெளியே அனுப்பிய அய்யர்பாடி எஸ்டேட்டில் அமைந்துள்ள தனியார் தங்கும் விடுதி உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தார். மொத்தம் ரூ.70 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது.  

    ×