search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிறிஸ்துமஸ் விழா"

    • அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
    • சென்னை சாந்தோம் ஆலயத்திலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    கிறிஸ்துமஸ் விழா உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில், நள்ளிரவு முதல் சிறப்பு வழிபாடு, பிரார்த்தனை நடைபெற்று வருகிறது.

    நாகப்பட்டினத்தில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் குடும்பம் குடும்பமாக ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    சென்னை சாந்தோம் ஆலயத்திலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதேபோல் திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டங்களிலும் பனிமயமாதா உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    இத்தாலியின் வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர் தேவாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் சிறப்பு விழாவில் போப் பிரான்சிஸ் கலந்து கொண்டார். அப்போது எங்களது இதயம் பெத்லகேமில் உள்ளது. பயனற்ற போர் காரணமாக அமைதியின் அரசர் மீண்டும் ஒருமுறை புறக்கணிப்பட்டுள்ளார்" என்றார்.

    • சுவாரசிய தகவல்களை தெரிந்துகொள்வோமா?
    • கிறிஸ்துமஸ் என்றவுடன் மனதில் வருவது கிறிஸ்து குடில்

    உலக அளவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று, கிறிஸ்துமஸ். டிசம்பர் மாதம் வந்தாலே பல நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தொடங்கி விடுவார்கள். கிறிஸ்துமஸ் என்றவுடன் பலருக்கும் மனதில் வருவது கிறிஸ்து குடில், நட்சத்திரம், சாண்டாகிளாஸ், கிறிஸ்துமஸ் மரம், ஜிங்கிள் பெல் பாடல்கள் என பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். கிறிஸ்துமசை பற்றி அறியாத மேலும் சில சுவாரசிய தகவல்களை தெரிந்துகொள்வோமா?

    கிறிஸ்துமஸ் பெயர்

    `கிறிஸ்துமஸ்' என்ற பெயர் பழைய ஆங்கில சொற்றொடரான கிறிஸ்டெஸ் மேஸ்ஸி (Cristes maesse) என்பதிலிருந்து வந்தது. அதற்கு `கிறிஸ்துவின் நிறை' என்று பெயர். கி.பி 336-ம் ஆண்டு, ரோமானியப் பேரரசர் கான்ஸ்டன்டைன் காலத்தில், `டிசம்பர் 25-ந் தேதி' ரோமானிய தேவாலயத்தில்தான் கிறிஸ்துமஸ் முதன் முதலாக கொண்டாடப்பட்டது. பின்னர் இயேசுவின் பிறப்பு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25-ந் தேதி அன்று கொண்டாடப்படும் என்று போப் ஜூலியஸ் முறைப்படி அறிவித்தார்.

    ஜிங்கிள் பெல்ஸ், வாழ்த்து அட்டை

    1965-ம் ஆண்டு டிசம்பர் 16-ந்தேதி, பிரபல கிறிஸ்துமஸ் பாடலான 'ஜிங்கிள் பெல்ஸ்' விண்வெளியில் இசைக்கப்பட்ட முதல் பாடலாக வரலாறு படைத்தது. 1843-ம் ஆண்டு, சர் ஹென்றி கோல் என்று அழைக்கப்படும் நபர், முதல் அச்சிடப்பட்ட கிறிஸ்துமஸ் அட்டையை ஒருவருக்கு அனுப்பினார். அதில் 'மெர்ரி கிறிஸ்துமஸ்' மற்றும் 'ஏ ஹாப்பி நியூ இயர் டு யூ' என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டிருந்தன.

    கிறிஸ்துமஸ் மரம்

    மரத்தை அலங்கரிக்கும் வழக்கம் ஜெர்மனியில் 16-ம் நூற்றாண்டில் தொடங்கியது. இன்று நாம் காணும் கிறிஸ்துமஸ் மரங்கள் போல இல்லாமல் ஆரம்பத்தில் பேரீச்சை, ஆப்பிள்கள் மற்றும் பாதாம் போன்ற உணவு பதார்த்தங்களால் அலங்கரிக்கப்பட்டன. அதன்பின்னர் மரங்களை அலங்கரிக்க மெழுகுவர்த்திகள், விளக்குகள் மற்றும் பொம்மைகள் பயன்பாட்டுக்கு வந்தன.

    மாறுபடும் கிறிஸ்துமஸ் தேதி எல்லா கிறிஸ்தவர்களும் ஒரே நாளில் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதில்லை என்பது உங்களுக்கு தெரியுமா? ஜனவரி 7-ந்தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடும் 15 நாடுகள் உள்ளன. இந்தப் பட்டியலில் ரஷியா, எகிப்து, இஸ்ரேல், உக்ரைன், பல்கேரியா, மால்டோவா, மாசிடோனியா, எத்தியோப்பியா, ஜார்ஜியா, கிரீஸ், ருமேனியா, செர்பியா, பெலாரஸ், மாண்டினீக்ரோ மற்றும் கஜகஸ்தான் ஆகியவை அடங்கும். இது தவிர, பல மேற்கத்திய நாடுகளில் சில கிறிஸ்தவர்கள் ஜனவரி 7-ந்தேதியே கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறார்கள். ரஷியாவில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ஜனவரி 1-ந்தேதி தொடங்கி 7-ந்தேதி வரை நடக்கிறது.

    டிசம்பர் 24-ந் தேதி அமெரிக்காவில், கிறிஸ்துமஸ் 1840-ம் ஆண்டு பண்டிகையாக மாறியது. பல ஐரோப்பிய மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள் பரிசுகளை பரிமாறி டிசம்பர் 24-ந்தேதி அன்று தங்கள் கொண்டாட்டங்களை தொடங்குகின்றன. செக் குடியரசு, போலந்து, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து, ஸ்வீடன், அர்ஜென்டினா, கொலம்பியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது.

    கேண்டி கேன்

    கிறிஸ்துமஸின் மிகப் பிரபலமான மிட்டாய்களுள் ஒன்று `கேண்டி கேன்'. வெள்ளை, சிவப்பு நிறத்துடன் கொக்கி போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் வெள்ளை நிறம் தூய்மையையும், சிகப்பு நிறம் தியாகத்தையும் குறிப்பதாக கிறிஸ்தவர்கள் கருதுகின்றனர்.

    தற்காலிக சமையல் அறை

    1851-ம் ஆண்டு லண்ட னில், தன்னார்வலர்கள் லீசெஸ்டர் சதுக்கத்தை தேர்ந்தெடுத்தனர். பெரிய நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் வறுமையில் வாடுவதால், ஏழைகள் மற்றும் வீடற்றவர்களுக்கு உணவு, மகிழ்ச்சியை வழங்க தற்காலிக சமையலறைகள் அங்கு தோன்றின. அந்த சதுக்கத்தை கொடிகள், மலர்கள் மற்றும் பண்டிகை விளக்குகளால் அலங்கரித்தனர். பொரித்த மாட்டிறைச்சி, முயல் இறைச்சித் துண்டுகள், வாத்து, உருளைக்கிழங்கு, ரொட்டி, பிஸ்கட், தேநீர் மற்றும் காபி உள்ளிட்ட உணவுகளை பரிமாறும் கிறிஸ்துமஸ் சமையலறையை அவர்கள் அமைத்தனர். அது 22 ஆயிரம் பேருக்கு உணவளித்தது.

    மனித கிறிஸ்துமஸ் மரம்

    இந்தியாவில் மிகப்பெரிய மனித கிறிஸ்துமஸ் மரம் 4 ஆயிரத்து 30 பங்கேற்பாளர்களை கொண்டு 2015-ம் ஆண்டு டிசம்பர் 19-ந் தேதி உருவாக்கப்பட்டது. இந்த கிறிஸ்துமஸ் மரம் கேரளா வின் செங்கனூரில், அந்த கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் களால் அமைக்கப்பட்டது.

    வித்தியாசமான நடைமுறை

    1970-ம் ஆண்டு தொடங்கி, கிறிஸ்துமஸ் அன்று ஜப்பான் மக்கள், `கென்டக்கி பிரைடு சிக்கன்' விருந்தில் கலந்துகொள்ளும் வித்தியாசமான பாரம்பரியத்தை கடைப்பிடிக்கின்றனர். ஜப்பான் முழுவதிலும் வசிக்கும் மக்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பே உணவகங்களில் முன்பதிவும் செய்கிறார்கள். இது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, பின்னர் பலரால் நடைமுறைப்படுத்தப்பட்டது.

    • சாதிமொழி இன வேறுபாடின்றி கொண்டாடப்படும் விழா.
    • கிறிஸ்து பிறப்பு என்பது அன்பை பிரதிபலிக்கும் விழா.

    உலகம் முழுவதும் சாதிமொழி இன வேறுபாடின்றி கொண்டாடப்படும் விழா, கிறிஸ்துமஸ் பெருவிழா. கிறிஸ்துமஸ் என்றால் மனதில் உற்சாகம் கரைபுரண்டு ஓடும். கிறிஸ்துமஸ் என்றால், இயேசு இவ்வுலகில் மனிதராக பிறந்தார் என்பதை மகிழ்ச்சியோடு கொண்டாடும் விழா. லூக்கா நற்செய்தி (2 :10–11)

    கிறிஸ்துமஸ் தோன்றிய வரலாற்றை பற்றி பல விதமான யுகங்கள் இருந்தாலும் இயேசு இவ்வுலகில் மனிதராக பிறந்தார் என்பது சரித்திர சான்று, அதை யாராலும் மறைக்க இயலாது. `உரோமயர்களின் கலைக்களஞ்சியம்' என்ற நூல், அகஸ்துஸ் சீசர் பேரரசராக இருந்தபோது டிசம்பர் மாதம் 25-ந்தேதி, அதாவது அமாவாசையில் இருந்து 15 நாட்களுக்கு பிறகு வந்த வெள்ளியன்று இயேசு பிறந்தார் என குறிப்பிடப்படுகின்றது. பல நூல்கள் தரும் விளக்கங்களை பார்க்கும் பொழுது கான்ஸ்டன்டைன் காலத்திற்கு முன்பாகவே கிறிஸ்துமஸ் விழா டிசம்பர் மாதம் 25-ந்தேதி கொண்டாடப்பட்டது என கருதப்படுகிறது.

    கான்ஸ்டன்டைன் உரோமை அரசரான பிறகு கிறிஸ்துவம் அரச மதமாக அறிவிக்கப்பட்டது. அப்பொழுது இருந்த திருத்தந்தை முதலாம் ஜீலியஸ் அவர்கள் கிபி 336-ம் ஆண்டு டிசம்பர் 25-ந்தேதியை கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாட அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

    கிறிஸ்துமஸ் மரம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பல வண்ணங்களோடு அலங்கரிக்கப்படும் இம்மரத்தின் உச்சியில் ஒரு முக்கோண அல்லது நட்சத்திர வடிவம் ஒன்றைக் காணலாம்.

    கிறிஸ்துமஸ் மரத்தின் கிளைகள் சிலுவையின் அடையாளத்தைக் கொண்டிருப்பது கிறிஸ்துமஸ் மரத்தின் சிறப்பம்சம். கிறிஸ்துமஸ் மரத்தின் முக்கோண வடிவம் தந்தை, மகன், தூய ஆவி எனும் மூன்று பரிமாணங்களைக் குறிக்கிறது. முதன் முதலாக 1605-ம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள ஸ்டிராஸ் பர்க் என்னுமிடத்தில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது கிறிஸ்துமஸ் மரம் இடம்பெற்றது.

    கிறிஸ்து பிறப்பு விழாக்காலத்தில் ஆலயங்களிலும் வீடுகளிலும் விண்மீன் தொங்கவிடப்படுகிறது. இயேசு பிறந்திருந்த இடத்திற்கு விண்மீன் ஞானிகளுக்கு வழிகாட்டியாக அழைத்துச் சென்றதை நினைவு படுத்துகிறது. `யாக்கோபில் இருந்து விண்மீன் ஒன்று உதிக்கும். இஸ்ரயேலில் இருந்து செங்கோல் ஒன்று எழும்பும்" (எண்ணிக்கை 24:17) என்று வாசிக்கிறோம்.

    கிறிஸ்துவை நோக்கி ஞானிகளுக்கு வழிகாட்டிய விண்மீன் போல, நாமும் பிறரைக் கிறிஸ்துவை நோக்கி அழைத்துவரும் உயிருள்ள விண்மீன்களாய் மாற இது நம்மை அழைக்கிறது.

    புனித பிரான்சிஸ் அசிசி 1223-ம் ஆண்டு இத்தாலி நாட்டில் உள்ள கிரேச்சியா என்ற இடத்தில் திருதந்தை மூன்றாம் ஓனொரியனிடம் அனுமதி பெற்று, குழந்தை இயேசுவை மெழுகால் செய்து, உண்மையான மனிதர்களை அன்னை மரியாகவும் சூசையாகவும் நிறுத்தி இயேசுவின் பிறப்பு காட்சியை அமைத்தார். மேலும் அவர் 1293-ம் ஆண்டு கிரேச்சியா மலையில் ஜான் என்ற நண்பர் வழியாக முதல் குடிலை அமைத்தார்.

    விண்ணில் இருந்த கடவுளின் சின்ன சின்ன ஆசைகள் மண்ணிலே முத்தமிட்ட இனிய நாள்தான் கிறிஸ்துமஸ். கடவுள் நம்மை அன்பு செய்கிறார் என்பதை நமக்கு வெளிப்படுத்தும் நாள் இந்நாள். பனிவிழும் இரவிலும் ஆனந்தம், குதூகலம், புதிய ஆடைகளின் அணிவகுப்பு, பளிச்சிடும் ஆலயத்தோற்றம், பளபளக்கும் பட்டாடைகள், அற்புதமாய் ஜொலிக்கும் குடில் என்று இவற்றிக்கு தான் நாம் முக்கியத்துவம் தருகிறோம்.

    ஆனால் அவர் மாட மாளிகையைத் தேர்ந்தெடுக்கவில்லை. மாறாக மாட்டுக்குடிலைத் தேர்ந்தெடுத்தார். அவர் பிறந்த செய்தி அரசர்களுக்கோ செல்வந்தோருக்கோ முதலில் அறிவிக்கப்படவில்லை. ஏழ்மையின் சின்னமாமய் விளங்கும் இடையர்களுக்குதான் அறிவிக்கப்பட்டது. இறைவனின் பரம ரகசியம் எவ்வளவு எளிமையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

    கிறிஸ்து பிறப்பு என்பது அன்பை பிரதிபலிக்கும் விழா. பகிர்வை உலகிற்கு அறிமுகப்படுத்தும் விழா. அன்பை இழந்த உள்ளங்களுக்கு இதயத்தை கொடுப்போம். பாசம் இழந்த இல்லங்களுக்கு நேசக்கரம் நீட்டுவோம். பரிதவிக்கும் இதயங்களுக்கு பகிர்வாக இருப்போம்.

    வாழ்க்கையைத் தொடாத விழாக்களும், வாழ்வை மாற்றாதக் கொண்டாட்டங்களும் வெறும் சடங்காக மட்டுமே அமையும்.

    • அன்பை மட்டுமே விதைத்து சென்ற இயேசுபிரான் பிறந்த தினம்.
    • உலகம் முழுவதும் கொண்டாடப்படும் விழா.

    "உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக

    உலகில் அவருக்கு உகந்தோருக்கு

    அமைதி உண்டாகுக (லூக்கா 2:14)

    அகிலத்தின் விடுதலைக்காய், அவனியில் அவதரித்து, அன்பை மட்டுமே விதைத்து சென்ற இயேசுபிரான் பிறந்த தினம்தான் கிறிஸ்துமஸ். மனித நேயமிக்க மாபரன், பூமிக்கு புறப்பட்டு வந்த புண்ணிய நாள் தான் கிறிஸ்து பிறப்பு பெருவிழா. சாதி மத வேற்றுமைகளை தாண்டி, உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் விழா இது.

    இயேசு கிறிஸ்துவின் பிறப்பு வித்தியாசமானது. நடுங்கும் குளிரில், எங்கும் தங்க இடம் கிடைக்காமல், ஆடு மாடு அடைக்கும் கொட்டகையே அவரது பிறந்த வீடாக அமைந்தது. இயேசு பாலன் உவக இரட்சகர் என்ற நிலையில் அரண்மனையையும் ஆடம்பரத்தையும் தெரிந்து கொள்ளவில்லை.

    எளிமையையும், ஏழ்மையையும் விரும்பி ஏற்றார். எளியோரின் பங்காளரானார். இயேசு மாட்டுத் தொழுவத்தில் பிறந்துள்ளார் என்ற நற்செய்தி முதன்முதலாக சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட பாமரர்களாகிய இடையர்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டது.

    ஏழ்மையின் கோலமாய், தாழ்மையின் வடிவமாய்இயேசு பிறந்தார் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இயேசுவின் தாழ்மை, இன்று நம் அனைவரையும் ஆதிக்க, ஆடம்பர வாழ்வி லிருந்து மாற்றம் பெற்று, அனைத்து ஏழை, எளிய மக்களோடு ஒன்றித்து வாழ அறைகூவல் விடுக்கிறது.

    "பூவுலகில் நன்மத்தோர்க்கு அமைதி உண்டாகுக" என்ற அமைதியின் நாயகன், நம்மில் தேடும் சமாதானம், அமைதி எங்கே?

    எத்தனை ஏற்ற தாழ்வுகள்! எத்தனை வன்முறைகள்!!

    இஸ்ரேயேல், பாலஸ்தீனப்போர்,

    ரஷ்ய, உக்ரேன் போர்,

    பனிப்போர், பகிரங்கப் போர்,

    வல்லரசு நாடுகளின் ஆதிக்க வெறி...

    பெத்லேகேமின் மகிழ்ச்சி நாட்கள் மறைந்துவிட்டனவோ என்ற எண்ணம் தோன்றுகிறதே... இறைவன் ஒற்றுமையுடன், ஒன்றாக, நிறைவாக அனைத்தையும் பகிரிந்து வாழ வேண்டுமென விரும்புகிறார். கள்ளம் கபடமற்ற குழந்தையின் இயல்புகள் நம்மில் மிளிர வேண்டுமெனவே, இயேசு மழலை அடையாளத்துடன் பாலகனாக, கிறிஸ்து பிறப்பு விழாவில் நம்மோடு உறவாடுகிறார்.

    நம் வாழ்வு சிறக்க, நாமும் பாலகனாக மாறுவோம். கிறிஸ்து பிறப்பு விழா என்பது பகிர்வின் அடையாளம். அன்பின், மகிழ்ச்சியின், நம்பிக்கையின், எதிர்பார்ப்பின் வெளிப்பாடு. இவையே இயேசுவின் கொடைகளாக நம் உள்ளங்களை நிறைக்கட்டும். இயேசு மண்ணில் பிறந்து, உலகிற்கு தந்த அமைதி நமது மனங்களில், குடும்பங்களில், உலக நாடுகளில் குடி கொள்ள வேண்டுமென ஜெபிப்போம்.

    பேராசை, பகைமை என்ற இருளை அகற்றி, அன்பெனும் பேரொளியை ஏற்றுவோம். நேர்மறையான எண்ணங்களுடன், நம்பிக்கையை விதை்து புத்தாண்டில் புதிய பயணத்தை தொடங்குவோம். உறவுகளை அன்பால் நனைத்திடுவோம். அன்பால் உலகை ஆள்வோம். இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

    • கிறிஸ்துமஸ் விழாவில்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொண்டு பேசினார்.
    • ஒரு சிலருக்கு மத ஒற்றுமை, நல்லிணக்கம் பிடிப்பதில்லை என்றார்.

    சென்னை பெரம்பூரில் உள்ள டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் இன்று மாலை கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

    திமுக சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துக் கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேக் வெட்டி கொண்டாடினார்.

    பின்னர் விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    கிறிஸ்துமஸ் விழாவை இந்து அறநிலையத்துறை அமைச்சர் நடத்துவது தான் திராவிட மாடல். கிறிஸ்துமஸ் விழா மத நல்லிணக்க விழாவாக நடைபெறுகிறது.

    எந்த மதமும் வேறுபாடுகளை போதிப்பதில்லை. ஆனால் ஒரு சிலருக்கு மத ஒற்றுமை, நல்லிணக்கம் பிடிப்பதில்லை.

    மதவாத சக்திகளால் எத்தனை காலம் ஆனாலும் இங்கு வேரூன்ற முடியாது.

    திராவிட மாடல் ஆட்சியில் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்டவர்களில் 98 சதவீதம் பேருக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் சென்றடைந்துள்ளது.

    நிவாரண பணிகளில் அரசுக்கு எதிர்க்கட்சிகள் துணை நிற்க வேண்டும்.

    மத்திய அரசு நிதி தராத சூழ்நிலையிலும், மாநில அரசு உடனடியாக நிதியை விடுவித்தது.

    இந்தியா கூட்டணி தான் 2024 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்.

    இந்த மாதிரி நேரத்திலும், மலிவான அரசியல் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கிறிஸ்துமஸ் விழாவை ஆண்டு தோறும் கொண்டாடுவதை அம்மா வழக்கமாக கொண்டிருந்தார்.
    • நிகழ்ச்சியில் கிறிஸ்தவ பெருமக்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    கேளுங்கள் கொடுக்கப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் என்னும் பொன்மொழியைக் கூறி உலகத்தை ஆட்கொள்ள வந்த அன்புத் தந்தை இயேசு பெருமானின் பிறந்த நாளான கிறிஸ்துமஸ் விழாவை ஆண்டு தோறும் கொண்டாடுவதை அம்மா வழக்கமாக கொண்டிருந்தார். அதே போல் இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் விழாவினை சென்னை கீழ்ப்பாக்கம், ஹால்ஸ் சாலை, நேர்ச்சை திருத்தல மாதா ஆலய வளாகத்தில் அமைந்துள்ள கருணை இல்லத்தில் வருகிற 20-ந்தேதி (புதன்கிழமை) மாலை 5 மணியளவில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நடத்த உள்ளார். நிகழ்ச்சியில் கிறிஸ்தவ பெருமக்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விழா முப்பெரும் விழாக்களாக கிறிஸ்துமஸ் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, விருது வழங்கும் விழாவாக நடைபெற உள்ளது.
    • எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 3 ஆயிரம் பேர் அ.தி.மு.க.வில் இணைய உள்ளனர்.

    சூலூர்:

    தமிழகத்தில் பாரதிய ஜனதாவுடனான கூட்டணியை அ.தி.மு.க. சமீபத்தில் முறித்துக்கொண்டது.

    பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்ததால் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் வாக்குகளை அ.தி.மு.க. பெற முடியாமல் போனதாக கட்சியினர் கருதினர். இதைத்தொடர்ந்து சிறுபான்மையினரின் வாக்குகளை மீட்டெடுக்கும் முயற்சியில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருகிறார்.

    இஸ்லாமிய தலைவர்கள் மற்றும் கிறிஸ்தவ அமைப்பு நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி வருகிறார்கள். அவர்களிடம் அ.தி.மு.க. என்றும் சிறுபான்மையினருக்கு உறுதுணையாக இருக்கும் என எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை அளித்து வருகிறார்.

    இந்தநிலையில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பு சார்பில் கிறிஸ்தவர்கள் திரண்டு சென்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்கள். அப்போது அவர்கள் எடப்பாடி பழனிசாமியிடம், கோவை கருமத்தம்பட்டியில் நடைபெற உள்ள கிறிஸ்தவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    கிறிஸ்தவர்களின் இந்த கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டார்.

    அதன்படி கோவை கருமத்தம்பட்டியில் நாளை மாலை 3 மணிக்கு நடைபெறும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பு மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார். மேலும் இந்த விழா முப்பெரும் விழாக்களாக கிறிஸ்துமஸ் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, விருது வழங்கும் விழாவாக நடைபெற உள்ளது.

    அதே பகுதியில் மாற்றுக்கட்சியினர் 3 ஆயிரம் பேர் அ.தி.மு.க.வில் இணையும் மற்றொரு விழாவும் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியிலும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். அவரது முன்னிலையில் 3 ஆயிரம் பேர் அ.தி.மு.க.வில் இணைய உள்ளனர்.

    பா.ஜ.க.வில் இருந்து பிரிந்த பிறகு கிறிஸ்தவ அமைப்பு மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மாநாடு கிறிஸ்தவர்களின் ஆதரவை அ.தி.மு.க. பெறும் மாநாடாக அமையும் என அ.தி.மு.க.வினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஜெய் கல்வி குழுமத்தின் நிறுவனர் சுப்பையா தலைமை தாங்கினார்.
    • விழாவில் பள்ளி குழந்தைகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    திருச்செந்தூர்:

    மெஞ்ஞானபுரம் அருகே உள்ள நங்கை மொழியில் ஜெய் இன்டர்நேஷனல் பள்ளியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஜெய் கல்வி குழுமத்தின் நிறுவனர் சுப்பையா தலைமை தாங்கினார். பள்ளி ஆசிரியை ரோஸ் நிர்மலா வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக சாத்தான்குளம் சரக கல்வி கழகத் தலைவர் ஜோசப், இலங்கநாத புரம் பங்குத்தந்தை ஜோசப் ரத்தினராஜ், புதுக்குளம் கல்வியியல் கல்லூரி முதல்வர் ஆண்டனி சேவியர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். பள்ளி இயக்குனர் ஜெய் முருகன் சிறப்பு அழைப்பாளர்களை கவுரவப்படுத்தினார். பள்ளி குழந்தைகளின் பரதநாட்டியம், ஆடல், பாடல் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளி குழந்தைகளுக்கு பள்ளி இயக்குனர் ஜெய்முருகன் பரிசுகள் வழங்கி பாராட்டினார். இதில் பள்ளி முதல்வர் அனுபமா, பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் 3-ம் வகுப்பு மாணவி அவனி பூஹணம் நன்றி கூறினார்.

    • கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினவிழா கொண்டாடப்பட்டது.
    • இனிப்புகள் மற்றும் பரிசுப்பொருட்களை வழங்கினார்.

    மொரப்பூர்,

    தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் ஸ்ரீராம் பள்ளியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினவிழா கொண்டாடப்பட்டது.

    இவ்விழாவினை பள்ளியின் தாளாளர் வேடியப்பன், சாந்தி வேடியப்பன் கேக்வெட்டி தொடங்கி வைத்து தலைமை தாங்கினர்.

    பள்ளியின் நிர்வாக இயக்குநர்கள் தமிழ்மணி, பவானி தமிழ்மணி, சன்மதி ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பள்ளி மழலைச் செல்வங்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தும், தூய வெண்மை நிற உடையில் தேவதைகளாக பள்ளியை வலம் வந்தும், பல்வேறு நடனம் மற்றும் பாடல் நிகழ்ச்சியுடன் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.

    பள்ளியின் தாளாளர் சாந்தி வேடியப்பன் குழந்தைகள் அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் பரிசுப்பொருட்களை வழங்கினார்.

    பள்ளி முதல்வர்கள் சாரதி மகாலிங்கம் , ஜான் இருதயராஜ், வெற்றிவேல் குழந்தைகளை வாழ்த்தி பேசி, வாழ்த்துரை வழங்கினர்.

    ஒருங்கிணைப்பாளர்கள் புவனேஸ்வரி, குருமூர்த்தி, மணிமேகலை, பிரவீணா மற்றும் ஆசிரியர் பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    • பாஸ்டர் யோவான் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி.
    • இருளில் வாழும் மக்களை வெளிச்சத்தின் பிள்ளைகளாக்கினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி காந்தி ரோட்டில் உள்ள சீயோன் பெந்தகோஸ்தே தேவசபையின் பாஸ்டர் யோவான் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    இயேசு கிறிஸ்து இந்த உலகில் பிறப்பதற்கு 700 ஆண்டுகளுக்கு முன்பே ஏசாயா என்ற தீர்க்கதரிசி ராஜரீகத்தையும், ஆளுகைையயும் தன் தோளின் மேல் ஏற்றுள்ள அவரது தன்மைகள் பலவற்றை தாங்கும் பெயர்களை முன்அறிவித்தான். அவரது நாமம் அதிசயமானவர், ஆலோசனை கர்த்தா, வல்லமை உள்ள தேவன், நித்தியபிதா சமாதானப்பிரபு ஆகும்.

    இந்த உலகத்தில் பிரவேசித்த போது, தேவதூதர்கள் தேவனுக்கு மகிமையும், இந்த பூமியிலே சமாதானமும், மனுஷர் மேல் பிரியமும் உண்டாவதாக என பாடினார். இந்த உலகிற்கு சமாதானத்தையும், ஆத்மீக மீட்பையும் கொடுக்கவே, ஏசுபிரான் அவதரித்தார்.

    இருள் நிறைந்த உலகிற்கு அருட்பெருஞ்ஜோதியாக வெளிப்பட்டு, இருளில் வாழும் மக்களை வெளிச்சத்தின் பிள்ளைகளாக்கினார்.

    உலகிற்கு சமாதானம் உண்டாக்க நிலை நாட்ட இயேசு வந்தார். இன்று கிறிஸ்துமஸ் நாளில் மக்கள் அனைவரும் துன்பங்களை கடந்து மகிழ்ச்சியுடன் வாழ பெந்தேகொஸ்தே மாமன்றத்தின் சார்பில் இனிய நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் அதில் கூறியிருந்தார்.

    • ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்சில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
    • கிறிஸ்துமஸ் கேக்கை வெட்டி வாடிக்கையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கினார்கள்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் கே. தியேட்டர் சாலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்சில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

    கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்ஸ் சார்பில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்தவர்கள் கலந்து கொண்டு வந்த வாடிக்கையாளர்களுக்கு இனிப்புகளை வழங்கி வாழத்துக்களை தெரிவித்தனர்.

    தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பங்கு தந்தைகளுக்கும் மரியாதை செலுத்தும் விதமாக வரவேற்கப்பட்டார்கள்.

    அவர்களுக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் எம்.பி. ரமேஷ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து பங்கு தந்தைகள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து நல்ஆசி வழங்கினார்கள். மேலும் கிறிஸ்துமஸ் கேக்கை வெட்டி வாடிக்கையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கினார்கள்.

    விழாவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்ஸ் இயக்குனர்கள் விஷ்ணு, விஷால் ஆகியோர் கலந்து கொண்டு பங்கு தந்தைகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சில்க்ஸ் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

    • பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
    • ஆசிரியர்களும், மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

    தருமபுரி,

    தருமபுரி நகரில் நரசிம்மாச்சாரி தெருவில் உள்ள செந்தில் மெட்ரிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

    தருமபுரி, கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    விழாவினை ஒட்டி எல்.கே.ஜி. வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்று நடத்திய பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இந்நிகழ்ச்சியில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமனிந்து வந்தவர் பள்ளி குழந்தைகளிடம் கேட்ட அறிவுபூர்வமான வினாக்களுக்கு பதில் அளித்த குழந்தைகளுக்கு சாக்லேட்டை பரிசாக வழங்கினார். குழந்தைகளின் பல்வேறு கலை நிகழ்ச்சி களை ஏராளமான மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் கண்டு ரசித்தனர்.

    இவ்விழாவில் பள்ளியின் தலைவர் மணிமேகலை கந்தசாமி, நிர்வாக அலுவலர் சக்திவேல், பள்ளியின் முதல்வர் வள்ளியம்மை உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்களும், மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

    ×