என் மலர்
நீங்கள் தேடியது "சேமிப்பு"
- பட்ஜெட் போட்டு செயல்படும் போது செலவுகளை எளிதாக குறைக்க முடியும்.
- ஒவ்வொரு பொருளிலும் கவனம் செலுத்தினால் பெருமளவு செலவை குறைக்கலாம்.
வருமானத்திற்கு ஏற்ற வகையில் திட்டமிட்டு செலவு செய்வதால் சேமிப்பு அதிகரிக்கும். பட்ஜெட் போட்டு செயல்படும் போது செலவுகளை எளிதாக குறைக்க முடியும். பெண்கள் மளிகைபொருட்கள் வாங்குகையில் சில வழிமுறைகளை பின்பற்றினால் பணத்தை மிச்சப்படுத்தலாம்.
மளிகைப்பொருட்களை சிறுக சிறுக வாங்காமல் ஒரு மாதத்திற்கு தேவையானவற்றை மொத்தமாக வாங்குவது நல்லது.
ஒவ்வொரு மாதமும் மளிகை பொருட்கள் வாங்குவதற்கு முன்பு பட்டியல் தயார் செய்வது அவசியமானது.
சமையல் அறைக்குள் சென்று என்னென்ன பொருட்கள் தேவை? என்பதை கவனித்த பின்பு பட்டியல் போடலாம்.
முந்தைய மாதத்தில் வாங்கிய பொருட்களில் ஏதேனும் மீதம் இருந்தால் இந்த மாதம் வாங்க இருக்கும் பொருட்களின் அளவை குறைத்து கொள்ளலாம்.
அடிக்கடி சமைக்கும் உணவுகளுக்கு தேவையான பொருட்களை மட்டும் அதிகமாக வாங்கிகொண்டு மற்றவற்றை குறைத்து கொள்வது சிறந்தது.
பலசரக்கு அங்காடிகளில் பொருட்கள் வாங்கும் போது கண்ணில் பட்டதையெல்லாம் எடுத்துக்கொண்டிருக்காமல் முதலில் நமக்கு தேவையான பொருட்களை வாங்கிய பின்னரே மற்றவற்றை வாங்க வேண்டும். இது பணம் விரயமாகாமல் தடுக்க உதவும்.
பண்டிகை காலங்களில் தேவைக்கு ஏற்றவாறு மளிகைப்பொருட்கள் வாங்குவது பணத்தை சேமிக்க உதவும்.
மளிகை பொருட்களளுக்கான பட்ஜெட் போடும் போது காய்கறிகள், பழங்கள், இறைச்சி போன்றவற்றுக்கும் சேர்த்து பணம் ஒதுக்க வேண்டும்.
ஷாப்பிங் செய்யும் போது தள்ளுபடி என்ற வார்த்தையை பார்த்து மயங்காமல் அவசியமான பொருட்களை மட்டும் வாங்கினால் பணத்தை சேமிக்கலாம்.
அந்தந்த சீசனுக்குரிய காய்கறிகள், பழங்களை வாங்கினால் விலை குறைவாக இருக்கும். பணமும், மிச்சமாகும்.
காய்கறிகளை மொத்தமாக வாங்கி வைத்து வீணாக்காமல் என்ன சமைக்கலாம் என்ற திட்டமிடுதலோடு வாராவாரம் வாங்கினால் பணத்தை சேமிக்கலாம்.
மளிகைப்பொருட்களை பட்டியல் போடுவதற்கு முன்பு குடும்பத்தினரிடம் கலந்தாலோசிப்பது நல்லது.
உணவுக்கட்டுப்பாடு மேற்கொள்பவர்கள் தாங்கள் முக்கியத்துவம் கொடுக்கும் உணவுகளுக்கு ஏற்றவாறு மளிகைப்பட்டியல் தயார் செய்யலாம்.
இவ்வாறு ஒவ்வொரு பொருளிலும் கவனம் செலுத்தினால் பெருமளவு செலவை குறைக்கலாம்.
- குழந்தைகளுக்கு, பணத்தின் அவசியத்தை புரிய வைக்க வேண்டும்.
- குழந்தைகளுக்கான நிதி தேவை எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கலாம்.
குடும்பத்துக்காக பட்ஜெட் போடும்போது மாதாந்திர செலவுகள் மட்டுமல்லாமல், குடும்ப உறுப்பினர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதில் குழந்தைகளுடைய தேவைகளை, அவர்களாகவே பூர்த்தி செய்யும் வகையில் தனிப்பட்ட நிதியை ஒதுக்கலாம். இந்த நிதியை குழந்தைகளின் பங்களிப்புடன் உருவாக்கும்போது, சேமிக்கும் ஆர்வத்தை மேலும் அதிகரிக்க முடியும். இதற்கான சில வழிகள்:
சேமிப்புக் கணக்கு தொடங்குங்கள்:
குழந்தைகளுக்கான நிதி தேவை எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கலாம். இதில் அவர்களின் தினசரி தேவையை விட, நீண்ட காலத் தேவையை நிறைவேற்றுவதுதான் முக்கியமானது. இதற்காக, குழந்தைகள் பெயரில் வங்கியிலோ, தபால் நிலையத்திலோ தனியாகச் சேமிப்புக் கணக்கு தொடங்கலாம். குழந்தைகளுக்குத் தரப்படும் நிதியை அவர்கள் மூலமாகவே கணக்கில் செலுத்தி, சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தலாம்.
ஊக்கத்தொகை வழங்குங்கள்:
நீங்கள் சொல்லும் வேலைகளை குழந்தைகள் சிறப்பாகச் செய்யும்போது, அதைப் பாராட்டும் வகையில் ஊக்கத்தொகை கொடுக்கலாம். இந்த நிதியைக் குழந்தைகளுக்கான தனிப்பட்ட நிதியாகக் கருதச் செய்வது அவசியம். குடும்ப பட்ஜெட் போடும்போது, குடும்பத்தில் ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை தருவது போல், குழந்தைகளையும் பங்களிக்க செய்ய வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு குடும்பத்தின் நிதி நிலைமை, அதை மேம்படுத்துவதற்கான வழிகள் என அனைத்தையும் கற்பிக்க முடியும்.
பணம் சம்பாதிக்கும் வழிகள்:
குழந்தைகள் வளரும் போதே அவர்களுக்கு பணத்தின் தேவை குறித்தும், அதை எவ்வாறு ஈட்ட வேண்டும் என்றும் கற்றுக் கொடுக்க வேண்டும். ஈட்டும் பணத்தைக் கல்வித் தேவைக்குப் பயன்படுத்தும் முறையையும் கற்றுக் கொடுப்பது நல்லது. சிறு வயதில் குழந்தைகள் பயன்படுத்திய விளையாட்டு சாமான்களில், நல்ல நிலையில் இருக்கும் பொருட்களை, தேவையானவர்களுக்கு விற்பது, தங்களின் திறமையைப் பயன்படுத்தி உருவாக்கும் பொருட்களை விற்பனை செய்வது, பள்ளிப் படிப்புடன், பகுதி நேர வேலையை மேற்கொள்வது போன்ற வேலைகளை செய்து பணம் ஈட்டுவது பற்றி பெற்றோர் பிள்ளைகளுக்குக் கற்றுத் தர வேண்டும். இவற்றால், எதிர்பாராத பணத்தேவையை எளிதில் பூர்த்தி செய்ய முடியும்.
பண இலக்குகள்:
குழந்தைகளுக்கு, பணத்தின் அவசியத்தை புரிய வைக்க வேண்டும். இதற்காக, குறுகிய கால பண இலக்குகளை உருவாக்குவது அவசியம். இந்த இலக்கு 6 மாதம் முதல் ஓர் ஆண்டு வரை, கால அளவை கொண்டிருக்கலாம். இதைக் குழந்தைகள் மட்டும் இல்லாமல், அனைத்து குடும்ப உறுப்பினர்களும் செய்யும்போது, ஈடுபாடும் அதிகரிக்கும். விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்லத் திட்டம் போடுவது, நீண்ட நாட்களாக வாங்க நினைக்கும் பொருட்களை வாங்கத் திட்டமிடுவது, குழந்தைகள் விரும்பும் விளையாட்டுப் பொருட்களை வாங்குவது போன்றவை இதில் அடங்கும். குழந்தைகளுக்குப் பண சுதந்திரம் அளிப்பதுடன், அதை எப்படி சம்பாதிப்பது, எப்படிச் சேமிப்பது, எதற்குச் செலவழிப்பது என்பதைக் கற்றுக் கொடுத்தால், வளர்ந்தபின் எந்தவித பண நெருக்கடியையும் எளிதில் சமாளிக்கும் பண்பு உருவாகும்.