search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "discuss"

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - பிரதமர் மோடி ஆகியோர் தொலைபேசி மூலம் இருநாடுகளின் நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினர். #PMModi #Trump
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டில் முதன்முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் நேற்று மாலை தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினார்.

    இரு தலைவர்களும் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். இந்தியா - அமெரிக்கா நாடுகளின் நல்லுறவு கடந்த ஆண்டில் திருப்திகரமாக அமைந்திருந்ததை சுட்டிக்காட்டிய அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்கா-இந்தியா இருதரப்பு பேச்சுவார்த்தை மற்றும் அமெரிக்கா-இந்தியா-ஜப்பான் முத்தரப்பு மாநாடு ஆகியவை இந்த வளர்ச்சிக்கு துணை புரிந்தது.

    இதன் எதிரொலியாக பாதுகாப்புத்துறை, பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை, எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளுக்கு இடையில் சாதகமான கூட்டுறவு நிலவியதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.



    இந்த நல்லுறவை பலப்படுத்தும் வகையில் இதேபோல் இந்த ஆண்டிலும் நட்புறவுடன் இணைந்திருந்து பணியாற்ற டிரம்ப்பும், மோடியும் விருப்பம் தெரிவித்தனர். இந்த ஆலோசனையின்போது பிராந்திய வளர்ச்சி மற்றும் சர்வதேச அரசியல் தொடர்பாகவும் தங்களது கருத்துகளை அவர்கள் வெளிப்படுத்தினர். #PMModi #Trump

    தமிழகத்தில் கனமழை குறித்து ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவார் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். #TNRain #TNRedAlert #TNCM #EdappadiPalaniswami
    சென்னை:

    தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த பகுதியாக உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 48 மணி நேரத்தில் இது புயலாக மாறி வடமேற்கு திசையில் நகரும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக கடலோரப் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சியினால் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்றும், அதன் பிறகு மேலும் 3 நாட்களுக்கு பலத்த மழை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், தமிழகத்தில் வரும் 7-ம் தேதி அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சுமார் 25 செ.மீ அளவு மழை பெய்யும் என பேரிடர் மேலாண்மைத்துறை இயக்குனர் சத்திய கோபால் தெரிவித்துள்ளார்.



    இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், அதீத கனமழையால் ஏரி, ஆறுகளில் மதகுகள் அல்லது கரை உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக சீர்செய்ய 5 லட்சம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். கனமழையில் இருந்து பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பது குறித்து 32 மாவட்ட அதிகாரிகளுடன் நாளை மற்றும் நாளை மறுநாள் முதல்வர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். #TNRain #TNRedAlert #TNCM #EdappadiPalaniswami
    வங்கி ஊழியர்கள் சம்பள உயர்வு குறித்து இந்திய வங்கிகள் சங்கம், அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கத்தினரும் இன்று மும்பையில் மீண்டும் சந்தித்து சம்பள உயர்வு தொடர்பாக விவாதிக்கின்றனர். #BankUnion #WageHike
    மும்பை:

    இந்தியாவில் உள்ள பொதுத்துறை, தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இந்திய வங்கிகள் சங்கம் சம்பள நிர்ணயம் செய்கிறது. வங்கி ஊழியர்களின் 2-ம் கட்டத்துக்குரிய சம்பளத்தை நிர்ணயிக்க பேச்சுவார்த்தை கடந்த மே மாதம் 5-ந்தேதி நடத்தப்பட்டது. ஆனால் வங்கிகள் சங்கம் 2 சதவீத அளவிற்கே ஊதிய உயர்வு அளிக்க முடியும் என்று கூறியது. இதனால் அதிருப்தி அடைந்த வங்கி ஊழியர்கள் மே மாத இறுதியில் நாடு தழுவிய 2 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் இந்திய வங்கிகள் சங்கம், அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கத்தினரும் இன்று (திங்கட்கிழமை) மும்பையில் மீண்டும் சந்தித்து சம்பள உயர்வு தொடர்பாக விவாதிக்கின்றனர். இதுபற்றி ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பின் மராட்டிய மாநில அமைப்பாளர் தேவிதாஸ் கூறுகையில், “எங்களது கோரிக்கை 25 சதவீத ஊதிய உயர்வு. என்றபோதிலும் எங்கள் நிலையில் இருந்து இறங்கி வரத் தயாராக இருக்கிறோம். இதுவரை சம்பள உயர்வு இரட்டை இலக்க சதவீதத்தில்தான் வழங்கப்பட்டு உள்ளது. அவ்வாறு இருக்கையில் வங்கிகள் நிர்வாகம் 2 சதவீதம்தான் தர முடியும் என்று கூறுவதை ஏற்க இயலாது” என்றார்.  #BankUnion #WageHike #tamilnews 
    காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பான கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் எம்.பி.க்களுக்கு பரிசு வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    பெங்களூரு:

    காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கர்நாடகம், நாடாளுமன்றத்தில் விவாதித்து, அதன் வழிகாட்டு நெறிமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி வருகிறது. பாராளுமன்றம் தொடங்கும் நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து நாளை டெல்லியில் கர்நாடக மாநில எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்கும் எம்.பி.க்களுக்கு சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள செல்போன் (ஐ–போன்) பரிசாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆவணங்கள் வைக்கும் வகையில் விலை உயர்ந்த பேக் வழங்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் சர்ச்சையாகியுள்ளது.



    டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, “கர்நாடக எம்.பி.க்கள் கூட்டம் நாளை(இன்று) மாலை நடக்கிறது. இதில் கலந்து கொள்ளுமாறு அனைத்து எம்.பி.க்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். அழைப்பிதழுடன் எம்.பி.க்களுக்கு விலை உயர்ந்த செல்போன் பரிசாக வழங்கியதாக சொல்லப்படுகிறது. அவ்வாறு செல்போன் வழங்குமாறு அதிகாரிகளுக்கு நான் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. ஒருவேளை அவ்வாறு செல்போன் வழங்கப்பட்டு இருப்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இதுபற்றி நான் விசாரிக்கிறேன்” என்றார்.

    இதற்கிடையே  என்னுடைய சொந்த செலவில் எம்.பி.க்களுக்கு விலை உயர்ந்த செல்போனை தான் வழங்கியதாக நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். வழங்கப்பட்ட செல்போனை பா.ஜனதாவை சேர்ந்த ராஜீவ் சந்திரசேகர் எம்.பி. திருப்பி அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக முதல்–மந்திரி குமாரசாமிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “கர்நாடக எம்.பி.க்கள் கூட்டத்தை டெல்லியில் கூட்டி இருப்பதாக எனக்கு கர்நாடக அரசிடம் இருந்து அழைப்பு வந்தது. அத்துடன் ரூ.1 லட்சம் விலை மதிப்புள்ள ஒரு ‘ஐ போன்‘ அதாவது செல்போனை அனுப்பி இருக்கிறீர்கள்.

    அரசின் வீண் செலவுகளை குறைப்பதாக நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் எம்.பி.க்களுக்கு விலை உயர்ந்த செல்போனை பரிசாக வழங்கி இருக்கிறீர்கள். இது சரியா?. துப்புரவு தொழிலாளர்களுக்கு மாநில அரசால் சம்பளம் வழங்க முடியவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் நான் அரசு வழங்கியுள்ள செல்போனை ஏற்பது இல்லை என்று முடிவு செய்துள்ளேன். அந்த போனை உங்களுக்கு திருப்பி அனுப்புகிறேன். நமது நகரை தூய்மையாக வைத்துக்கொள்ள தொடர்ந்து உழைத்து வரும் துப்புரவு தொழிலாளர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 
    பின்லாந்து நாட்டில் நாளை ரஷிய அதிபர் புதினுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பெரிய எதிர்பார்ப்புகள் ஏதுமில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். #TrumpPutinmeeting #lowexpectations #Helsinkimeeting
    லண்டன்:

    அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஆண்டு டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின் இதுவரை ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியது இல்லை. ஜெர்மனி மற்றும் வியட்நாமில் நடந்த பொருளாதார மாநாடுகளில் இரு தலைவர்களும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் சந்தித்தது மட்டுமின்றி, தொலைபேசி வாயிலாகவும் பேசி இருக்கின்றனர்.

     இந்தநிலையில் இரு வல்லரசுகளின் தலைவர்களும் சந்தித்து பேசுவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்காவின் வெள்ளை மாளிகையும், ரஷியாவின் கிரம்ளின் மாளிகையும் மேற்கொண்டு வந்தன. இதன் விளைவாக 3-வது நாட்டில் இரு தலைவர்களும் சந்தித்து பேசுவது என முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில் ஒன்றான பின்லாந்து நாட்டின் தலைநகரான ஹெல்சின்கி நகரில் ஜூலை 16-ம் தேதி (நாளை) இந்த பேச்சுவார்த்தையை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. 

    முதலில் இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையிலும், பின்னர் தங்கள் நாட்டு பிரதிநிதிகளுடன் இணைந்தும் நாளை பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். பின்னர், டிரம்ப்பும் புதினும் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்து, கூட்டு பிரகடனம் ஒன்றை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்நிலையில், தற்போது பிரிட்டன் நாட்டில் சுற்றுப்பயணம் செய்துவரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், நாளை பின்லாந்து நாட்டில் நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு பெரிய எதிர்பார்ப்புகளுடன் நான் போகவில்லை. குறைந்த எதிர்பார்ப்புகளுடன் நாளை புதினை சந்திக்கச் செல்கிறேன் என தனது அவநம்பிக்கையை வெளிப்படுத்தும் தொணியில் பிரபல செய்தி நிறுவனம் ஒன்றுக்கு இன்று பேட்டியளித்துள்ளார்.

    அவரது ஆர்வமின்மையை பார்க்கும்போது, வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன்-னுடன் சிங்கப்பூரில் நடத்திய பேச்சுவார்த்தைபோல், ஹெல்சின்கியில் நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையும் பெரிய பலன்களை அளிக்காமல் போகலாம் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். #TrumpPutinmeeting #lowexpectations #Helsinkimeeting 
    ஒடிசா சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் நெருங்கிவரும் நிலையில் அம்மாநில பா.ஜ.க. மேலிட தலைவர்களுடன் அமித் ஷா இன்று தீவிர ஆலோசனை நடத்தினார். #AmitShah #Odishapollstrategy
    புவனேஸ்வர்:

    2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 21 தொகுதிகளில் ஒரேயொரு இடத்தில் மட்டுமே பா.ஜ.க. வெற்றி பெற்றது.

    இந்நிலையில், ஒடிசா சட்டசபை தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் நெருங்கிவரும் நிலையில்  அம்மாநில பா.ஜ.க. மேலிட தலைவர்களுடன் அமித் ஷா இன்று தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

    முன்னதாக, ஒடிசா சட்டசபையில் உள்ள 147 தொகுதிகளில் 120 தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்ற வேண்டும் என கட்சியினரை வலியுறுத்தியுள்ள அமித் ஷாவுடன் பல்வேறு சட்டசபை தொகுதிகளை சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர்கள் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளனர். #AmitShah #Odishapollstrategy
    நீதிபதி கே.எம்.ஜோசப்பை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு மீண்டும் பரிந்துரை செய்வது உள்ளிட்ட சில பிரச்சினைகள் குறித்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் குழு மீண்டும் ஆலோசனை நடத்தியது. #KMJoseph #Elevation
    புதுடெல்லி:

    உத்தரகாண்ட் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப்பை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் குழு (கொலீஜியம்) வழங்கிய பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்து திருப்பி அனுப்பிவிட்டது.

    இதைத்தொடர்ந்து, கடந்த 11-ந் தேதி கூடி ஆலோசித்த நீதிபதிகள் குழு, காலியாக உள்ள சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பதவிக்கு நீதிபதி கே.எம்.ஜோசப் உள்பட மேலும் சில ஐகோர்ட்டு நீதிபதிகளின் பெயர்களை மத்திய அரசுக்கு பரிந்துரைப்பது என்றும், அதுபற்றி மீண்டும் விரிவாக விவாதிப்பது என்றும் தீர்மானித்தது.

    அதன்படி, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் ஜே.செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், எம்.பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய குழு நேற்று மீண்டும் கூடி நீதிபதி கே.எம்.ஜோசப்பை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு மீண்டும் பரிந்துரை செய்வது உள்ளிட்ட சில பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனை கூட்டம் சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது.  #KMJoseph #Elevation 
    ஈரானின் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன், ஜெர்மனி வேந்தர் ஏஞ்சலா மெர்கெல் இன்று ஆலோசனை நடத்தினார். #IranNuclearDeal #Putin #Merkel
    மாஸ்கோ:

    மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது.

    ஈரான் அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும், அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் படிப்படியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்பது இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம். இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் ஆட்சி காலத்தில் செய்யப்பட்டதாகும்.

    இதற்கிடையே, ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேற முடிவு செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 9-ம் தேதி அறிவித்தார். டிரம்ப்பின் இந்த முடிவுக்கு இஸ்ரேல், சவூதி அரேபியா உள்ளிட்ட அமெரிக்க பாசம் கொண்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

    அதேவேளையில் முன்னாள் அதிபர் ஒபாமா மற்றும் ரஷியா, சிரியா உள்ளிட்ட சில நாடுகள் டிரம்ப் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இருப்பினும், இந்த ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, ரஷியா ஆகியவை அறிவித்துள்ளன.

    இந்நிலையில், ஜெர்மனி வேந்தர் ஏஞ்சலா மெர்கெல் ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். இன்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினுடன் ஈரானின் அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக ஏஞ்சலா மெர்க்கெல் ஆலோசனை மேற்கொண்டார். #IranNuclearDeal #Putin #Merkel
    ×