search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    குறைந்த எதிர்பார்ப்புகளுடன் நாளை புதினை சந்திக்கச் செல்கிறேன் - டிரம்ப் அவநம்பிக்கை
    X

    குறைந்த எதிர்பார்ப்புகளுடன் நாளை புதினை சந்திக்கச் செல்கிறேன் - டிரம்ப் அவநம்பிக்கை

    பின்லாந்து நாட்டில் நாளை ரஷிய அதிபர் புதினுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பெரிய எதிர்பார்ப்புகள் ஏதுமில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். #TrumpPutinmeeting #lowexpectations #Helsinkimeeting
    லண்டன்:

    அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஆண்டு டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின் இதுவரை ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியது இல்லை. ஜெர்மனி மற்றும் வியட்நாமில் நடந்த பொருளாதார மாநாடுகளில் இரு தலைவர்களும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் சந்தித்தது மட்டுமின்றி, தொலைபேசி வாயிலாகவும் பேசி இருக்கின்றனர்.

     இந்தநிலையில் இரு வல்லரசுகளின் தலைவர்களும் சந்தித்து பேசுவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்காவின் வெள்ளை மாளிகையும், ரஷியாவின் கிரம்ளின் மாளிகையும் மேற்கொண்டு வந்தன. இதன் விளைவாக 3-வது நாட்டில் இரு தலைவர்களும் சந்தித்து பேசுவது என முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில் ஒன்றான பின்லாந்து நாட்டின் தலைநகரான ஹெல்சின்கி நகரில் ஜூலை 16-ம் தேதி (நாளை) இந்த பேச்சுவார்த்தையை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. 

    முதலில் இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையிலும், பின்னர் தங்கள் நாட்டு பிரதிநிதிகளுடன் இணைந்தும் நாளை பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். பின்னர், டிரம்ப்பும் புதினும் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்து, கூட்டு பிரகடனம் ஒன்றை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்நிலையில், தற்போது பிரிட்டன் நாட்டில் சுற்றுப்பயணம் செய்துவரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், நாளை பின்லாந்து நாட்டில் நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு பெரிய எதிர்பார்ப்புகளுடன் நான் போகவில்லை. குறைந்த எதிர்பார்ப்புகளுடன் நாளை புதினை சந்திக்கச் செல்கிறேன் என தனது அவநம்பிக்கையை வெளிப்படுத்தும் தொணியில் பிரபல செய்தி நிறுவனம் ஒன்றுக்கு இன்று பேட்டியளித்துள்ளார்.

    அவரது ஆர்வமின்மையை பார்க்கும்போது, வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன்-னுடன் சிங்கப்பூரில் நடத்திய பேச்சுவார்த்தைபோல், ஹெல்சின்கியில் நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையும் பெரிய பலன்களை அளிக்காமல் போகலாம் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். #TrumpPutinmeeting #lowexpectations #Helsinkimeeting 
    Next Story
    ×