என் மலர்tooltip icon

    வழிபாடு

    • இந்திரனுக்கு `போகி' என்ற பெயரும் உண்டு.
    • பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

    ஒரு சமயம் யமுனை நதிக்கரையில் காளிங் என்ற கொடிய விஷமுள்ள பாம்பு தன் குடும்பத்துடன் வசித்து வந்தது. இது பனைமர நீளத்திற்கும் ஐந்து தலையுடனும் இருந்தது. கடும் விஷம் கக்கியது. இதனால் யமுனை நதிக்கரையில் மாடுகளை மேய்க்கும் யாதவர்கள் சிரமப்பட்டனர்.

    இதை அறிந்த கிருஷ்ணன், யாதவர்களுடன் யமுனை நதிக்கரைக்கு சென்று பந்து விளையாடினார். இவரது பந்து யமுனை நதியில் விழுந்தது. பந்தை எடுக்க யமுனை நதியில் கிருஷ்ணன் இறங்கினார். காளிங்கன் கடும் விஷத்தை உமிழ்ந்தவாறு கிருஷ்ணனை நோக்கி வந்தது.

    கிருஷ்ண பகவான் அதன் கர்வத்தை அடக்க எண்ணி, அதன் சிரசில் ஏறி நின்று நடனமாடி அதை அடக்கினார். பின்னர் அவர் காளிங்கனிடம் "யமுனை நதியானது கோகுல மக்கள் பயன்பாட்டிற்கு உரியது. எனவே நீ கடலுக்குள் சென்று வாழ்க்கை நடத்து. என்னுடைய கால் தடம் உன் தலை மீது இருப்பதால் உனக்கு கருடனால் எந்த பாதிப்பும் வராது" என்று சொல்லி அனுப்பினார்.

    இந்த நிலையில் யமுனை நதிக்குள் புகுந்து காளிங்கனுடன் போராடிக் கொண்டிருந்த கிருஷ்ணருக்கு, காளிங்கனின் விஷத்தால் எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது என்று கோகுல மக்கள் நினைத்தனர். அன்று இரவு கிருஷ்ணன் வரும் வரை விழித்திருக்க வேண்டும் என்பதற்காக, யமுனை நதிக்கரையில், பழைய சருகு குப்பைகளை கொளுத்தி கண் விழித்தபடி இருந்தனர். மேலும் பறை இசைத்தனர்.

    இந்த நிகழ்வின் எதிரொலியாய் ஒவ்வொரு போகிக்கும் நாம் பழைய பொருட்களை எரித்தும், பறையடித்தும் மகிழ்கிறோம்.

    மற்றொரு கதை, யாதவர்கள் ஆண்டுதோறும் நல்ல மழை பெய்ய வேண்டும் என வேண்டி, இந்திரனை பூஜிப்பார்கள். ஒரு சமயம் கிருஷ்ண பகவான் "நமக்கும் நம்முடைய பசுக்களுக்கும், ஆதாரமாக விளங்குவது கோவர்த்தனகிரினகிரி மலைதான். எனவே நாம் கோவர்த்தனகிரி மலையைத்தான் வணங்க வேண்டும்" என்றார்.

    அவர் சொன்னபடி நந்த கோபரும், யாதவர்களும் கோவர்த்தன கிரியை பூஜித்தனர். அதனால் இந்திரன் கோபம் கொண்டு வருண பகவானிடம் 'நீ கடும் மழையை பெய் விக்க வேண்டும்" என உத்தரவிட்டார்.

    கடும் மழை பெய்ய ஆரம்பித்தது. ஒரு நாள். இரண்டு நாள் அல்ல, தொடர்ந்து பல நாட்கள் மழை பெய்ய ஆரம்பித்தது. அப்போது கடும் மழையை சமாளிக்க, கிருஷ்ண பகவான் கோவர்த்தன கிரியை தூக்கி, தன் சுண்டு விரலால் தாங்கி, குடை போல் பிடித்து அனைவரையும் மழை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றினார். இந்திரன் தன் கர்வத்தை விட்டு கிருஷ்ண பகவானை சரணடைந்தார்.

    இந்த நிகழ்வைக் கொண்டாடும் விதமாக போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது என்றும் கூறுவார்கள். இதனால் இந்திரனுக்கு 'போகி' என்ற பெயரும் உண்டு. போகி அன்று காலை எழுந்து நம் வீட்டில் உள்ள பழைய கோரைப்பாய், உபயோகப்படுத்திய விசிறி, மூங்கிலால் செய்த முறம், துடைப்பம் போன்றவற்றை எரித்து விடுவார்கள். இதை நம் முன்னோர்கள் செய்து வந்தார்கள்.

    அதேபோன்று வீட்டில் 'நிலை பொங்கல்' வைக்கும் வழக்கமும் உண்டு. அதாவது தை மாதம் பிறப்பதற்கு முன்தினமான மார்கழி மாதம் கடைசி நாளில் இந்த நிலைப்பொங்கல் வைக்கப்படும். அன்றைய தினம் நம் வீட்டின் தலைவாசலை சுத்தம் செய்து, தலைவாசலுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து. வாசல்படி மேல் ஆவாரம் பூ கொத்து மற்றும் வேப்பிலை சொருகுவார்கள். நிலைப்படியின் இரண்டு பக்கமும் கரும்பு வைத்து, அதன் பின் நிலைப்பொங்கல் வைப்பார்கள். அன்று போளி, வடை செய்யும் வழக்கமும் உண்டு. மேலும் சிறு தானிய உணவுகளை சமைத்து படைப்பார்கள்.

    போகி பண்டிகை அன்று செய்யக்கூடாதவை:-

    தற்போது பாய், விசிறி போன்றவை பெரும்பாலும் பிளாஸ்டிக்கில் வர ஆரம்பித்துவிட்டது. பிளாஸ்டிக் பாய்களை எரிப்பது அல்லது பழைய டயர், உபயோகப்படுத்தாத மற்ற பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஒரு காலத்தில் குப்பைகளை வீட்டின் பின்புறம் சேர்த்து வைத்து வருடத்திற்கு ஒருமுறை எரித்தார்கள் நம் முன்னோர்கள். கிட்டத்தட்ட போகி அன்று என்று எடுத்துக்கொள்ளலாம்.

    தற்போது தினமும் குப்பையை அரசாங்கமே எடுத்து விடுகிறது. போகி பண்டிகை கொண்டாடுகிறோம் என்ற பெயரில் பழைய பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பது நம் பண்டிகைக்கு விரோதமானது. மேலும் அதனால் காற்று மாசு அடைந்து மக்களுக்கும், பிற உயிர்களுக்கும் பாதிப்பு உண்டாகும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

    • இன்று திருவாபரண ஊர்வலம்.
    • நாளை மறுநாள் மகரஜோதி தரிசனம் நடைபெறும்.

    சபரிமலை:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை காலமான தற்போது தினமும் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதன் சிகர நிகழ்ச்சியாக நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மகரஜோதி தரிசனம் நடக்கிறது. இதற்கிடையே அம்பலப்புழை மற்றும் ஆலங்காடு ஐயப்ப பக்தர் குழுக்கள் சார்பில் சிறப்பு வாய்ந்த பாரம்பரிய பேட்டை துள்ளல் நிகழ்ச்சி எருமேலியில் நேற்று நடந்தது.

    மத ஒற்றுமைக்கு சான்றாக பக்தர்கள் அனைவரும் சமம் என்ற கருப்பொருளை மையமாக வைத்து சிறியவர், பெரியவர், ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இன்றி ஐயப்ப பக்தர்கள் உள்பட ஏராளமானோர் தங்கள் முகம், உடல் மீது வண்ண, வண்ண பொடிகளை பூசி, கரும்புள்ளி, செம்புள்ளி குத்திக் கொண்டு இலை தழைகளை கையில் ஏந்தியவாறு ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

    அப்போது மேள தாளம் முழங்க, ஐயப்பனின் சரண கோஷமும் எதிரொலித்தது. எருமேலி கொச்சம் பலத்தில் இருந்து வாவர் மசூதியை சுற்றி நெற்றிப்பட்டம் சூட்டிய யானையில், அம்பலப்புழை கிருஷ்ணசாமி கோவிலில் இருந்து பூஜித்து எடுத்து வரப்பட்ட ஐயப்ப விக்ரகத்தை சுமந்து வந்து காணிக்கை செலுத்தினர்.

    இதனைத் தொடர்ந்து வலியம்பலமான தர்ம சாஸ்தா கோவிலில் சாமி தரிசனம் செய்ததும் பக்தர் குழுவினர் சபரிமலைக்கு புனித பயணம் புறப்பட்டனர்.

     பின்னர் ஐயப்பனுக்கு நடத்தப்படும் முக்கிய வழிபாடுகளில் ஒன்றான பம்பை விருந்து, பம்பை விளக்கு ஏற்றுதல் போன்ற சிறப்பு வழிபாடு நடத்தப்படும். தொடர்ந்து பக்தர் குழுவினர் சபரிமலை நோக்கி மலையேறி சென்று அன்றைய தினம் இரவு அங்கு ஓய்வெடுக்கிறார்கள். மகரஜோதி தினத்தில் ஐயப்பனுக்கு பக்தர் குழு சார்பில் சிறப்பு நிவேத்யம், நெய்யபிஷேகம் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

    இன்று திருவாபரண ஊர்வலம்

    இதற்கிடையே இன்று (சனிக்கிழமை) பந்தளத்தில் இருந்து மதியம் 12.30 மணிக்கு திருவாபரண ஊர்வலம் சபரிமலை நோக்கி புறப்படும். இந்த திருவாபரணம் நாளை மறுநாள் மாலையில் மகரவிளக்கு பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும்.

    அதனை தொடர்ந்து சபரிமலை பொன்னம்பலமேட்டில் ஜோதி வடிவில் ஐயப்பன் காட்சி தருவார். மகரவிளக்கு தினத்தன்று காலை 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் பம்பையில் இருந்து மலையேறி சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மேலும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் மகரவிளக்கு பூஜை நாளில் 40 ஆயிரம் பக்தர்கள், முந்தைய நாளில் 50 ஆயிரம் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட உள்ளனர்.

    • பெருமாளை வழிபட்ட பலனை பெற முடியும்.
    • பிரச்சனைகள் தீர பெருமாளிடம் முறையிட வேண்டும்.

    இன்று மார்கழி மாதத்தின் கடைசி சனிக்கிழமை. இந்த மார்கழி மாதம் முழுவதும் பெருமாள் கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் கூட இன்றைய தினம் பெருமாளை வழிபாடு செய்வதன் மூலம், மார்கழி மாதம் முழுவதும் பெருமாளை வழிபட்ட பலனை பெற முடியும். இன்றைய தினம் திருவோண நட்சத்திரமும் சேர்ந்து வந்திருக்கிறது. பெருமாளுக்கு உரிய நட்சத்திரம்.

    இந்த மார்கழி மாதம் முழுவதும் உங்களால் அதிகாலை வேளையில் எழுந்திருக்க முடியவில்லை என்றாலும் சரி, இன்று பெருமாளை நினைத்து பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வையுங்கள். வீட்டில் பெருமாளுக்கு உகந்த விஷ்ணு சகஸ்ரநாமம், இல்லையென்றால் சுப்ரபாதம் ஒலிக்க விடுங்கள். மனதை அமைதியாக வைத்து பூஜை அறையில் அமர்ந்து உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் தீர வேண்டும் என்று பெருமாளிடம் முறையிட வேண்டும்.

    மகாலட்சுமி தாயாரிடமும் பணக்கஷ்டம் சரியாக வேண்டும் என்று வேண்டுதல் வைக்கலாம். பிறகு வீட்டு பக்கத்தில் ஏதாவது பெருமாள் கோவில் இருந்தால் கோவிலுக்கு சென்று பெருமாளை சேவியுங்கள். இன்றைய தினம் பெருமாள் கோவிலுக்கு சென்று உங்களுடைய எவ்வளவு பெரிய வேண்டுதல் வைத்தாலும் அது உடனே பலிக்கும்.

    பெருமாள் கோவிலில் கொடுக்கும் துளசி இலை, பிரசாதம் இவைகளை வாங்கிக் கொள்ளுங்கள். பெருமாள் கோவிலில் இருக்கும் மகாலட்சுமி தாயாரையும் மனமுருகி வேண்டிக் கொள்ளுங்கள். முடிந்தால் பெருமாள் கோவிலில் இரண்டு நெய் தீபங்கள் ஏற்றுங்கள். மகாலட்சுமி தாயாருக்கு உங்கள் கையால் மல்லிப்பூ வாங்கி கொடுப்பது சிறப்பான பலனை கொடுக்கும். வழிபாட்டை முடித்துவிட்டு வீடு திரும்புங்கள்.

    பெருமாள் கோவில் பிரசாதமான இந்த துளசி இலையை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது. வாங்கி வந்த துளசி இலையை தண்ணீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்துவிட்டு அந்த தண்ணீரை தீர்த்தமாக பருகலாம். மீதம் இருக்கும் துளசி இலையை, பீரோவில் நகை வைக்கும் பெட்டியில் பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விடுங்கள். பண கஷ்டமும் தீரும். இந்த துளசி தீர்த்தத்தை குடிப்பதால் உங்கள் உடம்பில் இருக்கும் பிணி பீடை விலகும். விளக்கு ஏற்றி வழிபாடு செய்தால் உங்கள் இல்லறம் இருள் நிலையில் இருந்து விலகும்.

    • உன்னை தலைவனாக பெற்று புண்ணியம் செய்து இருக்கிறோம்.
    • இனிமையான அமுதம் போன்றவனே!

    திருப்பாவை

    பாடல்

    கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்;

    அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்து உன்தன்மைப்

    பிறவிப் பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்;

    குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு

    உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது!

    அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்

    சிறுபேர ழைத்தனவும் சீறி யருளாதே,

    இறைவா, நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.

    விளக்கம்

    கோவிந்தா! நாங்கள் ஆடு, மாடு மேய்ப்பவர்கள். கட்டுச்சோறு கட்டிக்கொண்டு பசுக்களின் பின்னாலே காட்டுக்குள் சென்று சாப்பிடுவோம். படிப்பறிவு இல்லாதவர்களாகிய நாங்கள், விரதமிருக்கும் முறை பற்றி அறியாதவர்கள். ஆயர் குலமாகிய எங்கள் குலத்தில் வந்து நீ பிறந்தாய். உன்னை தலைவனாக பெற்று புண்ணியம் செய்து இருக்கிறோம். குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா! உனக்கும் எங்களுக்கும் உள்ள உறவை யாராலும் பிரிக்க முடியாது. ஏதும் அறியாத சிறு பிள்ளைகளான நாங்கள், அன்பினால் உன் பெருமையை மறந்து, 'கண்ணா! கோவிந்தா!' என்று உன் பெயரைச் சொல்லி சாதாரணமாக அழைத்துவிட்டோம். அதற்காக கோபித்துக் கொள்ளாதே. எங்கள் நோன்பை அன்புடன் ஏற்று அருள்புரிய வேண்டும்.

    திருவெம்பாவை

    பாடல்

    முந்திய முதல்நடு இறுதியு மானாய்

    மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்

    பந்தணை விரலியும் நீயும்நின் அடியார்

    பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே

    செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்

    திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி

    அந்தண னாவதுங் காட்டிவந் தாண்டாய்

    ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே

    விளக்கம்

    இனிமையான அமுதம் போன்றவனே! உலகில் அனைத்து பொருட்களுக்கும் முன்பு தோன்றி முதல் பொருளாகவும், இடைப்பட்டதாகவும், முடிவாகவும் ஆனவனே! பிரம்மா, திருமால், ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளும் உன்னை அறியமாட்டார்கள்! வேறு யார் உன்னை அறிவார்? பந்தினை ஏந்திய விரல்களை உடைய உமையம்மையும், நீயும் உன்னுடைய அடியார்களுக்கு அருள, அவர்கள் வீடுகள் தோறும் எழுந்தருளியவனே! சிவந்த நெருப்பை போன்ற உன் திருமேனியையும், திருப்பெருந்துறை கோவிலையும் காட்டினாய். அந்தண வேடத்தையும் காட்டி என்னை ஆட்கொண்டவனே! படுக்கையில் இருந்து பள்ளி எழுந்தருள்வாயாக!

    • ஸ்ரீசீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.
    • திருப்பரங்குன்றம் ஆண்டவர் வெள்ளி பூத வாகனத்தில் பவனி.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, மார்கழி-28 (சனிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: துவிதியை பிற்பகல் 2.35 மணி வரை பிறகு திருதியை.

    நட்சத்திரம்: திருவோணம் மாலை 4.16 மணி வரை பிறகு அவிட்டம்.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று குச்சனூர் சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருப்பரங்குன்றம் ஆண்டவர் வெள்ளி பூத வாகனத்தில் பவனி. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீசீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் தோளுக்கியானில் பவனி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜருக்கு சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பொறுமை

    ரிஷபம்-நட்பு

    மிதுனம்-செலவு

    கடகம்-பயணம்

    சிம்மம்-இன்பம்

    கன்னி-வரவு

    துலாம்- நன்மை

    விருச்சிகம்-உழைப்பு

    தனுசு- விருத்தி

    மகரம்-நற்செயல்

    கும்பம்-ஆதாயம்

    மீனம்-போட்டி

    • வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை.
    • சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது.

    மேல்மலையனூர்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று இரவு மார்கழி மாதஅமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை மூலவர் அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால்,தயிர், மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம் இளநீர் பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து உற்சவர் அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு பலவித மலர்களை கொண்டு ராஜகாளியம்மன் அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் அருள்பாலித்தார்.

    இரவு 11 மணிக்கு மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அங்காளம்மா, அங்காளம்மா, என கரகோஷத்துடன தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து கோவில் பூசாரிகள் அங்காளபரமேஸ்வரி அம்மனை வாழ்த்தி தாலாட்டு பாடல்கள் பாடினர்.

    இரவு ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து உற்சவர் அங்காளபரமேஸ்வரி அம்மனை கோவில் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.ஊஞ்சல் உற்சவத்தில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி விழுப்புரம், கடலூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • சிவனை வழிபட்டால் நற்புகழ் கிடைக்கும்.
    • சிவபெருமானின் பூஜையில் தாழம்பூ சேர்க்கப்படுவதில்லை.

    சுயம்பு முருகன்

    ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடா மாவட்டத்தில் உள்ளது, வடவிஜயபுரம் என்ற ஊர். இங்குள்ள மலை மீது முருகப்பெருமான் சுயம்புவாக தோன்றி இருந்து அருள்பாலிக்கிறார். எனவே இந்த மலை முருகனை, 'தான்தோன்றி முருகன்' என்று அழைத்து பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.

     மயில் மீது அமர்ந்த கோலம்

    மகாராஷ்டிரா மாநிலம் புனே நகருக்கு அருகில் உள்ளது, பார்வதி மலை. இந்த மலையின் மீது முருகப்பெருமானுக்கு கோவில் அமைந்திருக்கிறது. கார்த்திகேயன் என்ற பெயரில் இந்த ஆலயத்தில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். ஆறுமுகங்களுடன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் இத்தல முருகனை பக்தர்கள் தரிசிக்கலாம்.

     மாலினி சாஸ்திரம்

    மலர்களால் அழகுபடுத்தும் கலையை விவரிப்பது 'மாலினி சாஸ்திரம்'. மலர் காட்சி அமைத்தல், விதவிதமாக மாலைகள், செண்டுகள் செய்தல், பெண்களின் சிகை அலங்காரத்தில் மலர்களை சேர்த்தல் உள்ளிட்ட பல மலர் அலங்கார முறைகளைப் பற்றி இந்த சாஸ்திர நூல் கூறுகிறது. இதனை இயற்றியவா் ரிஷ்ய சிருங்கர் என்னும் முனிவர் ஆவார்.

    கழுதை வாகனத்தில் சிவன்

    பெரும்பாலானவர்களின் வீட்டின் முன்பாக, 'என்னைப் பார் யோகம் வரும்' என்று கழுதைப் படத்தை மாட்டி வைத்திருப்பார்கள். கண் திருஷ்டி கழிவதற்காகவும், யோகத்திற்காகவும் இவ்வாறு செய்யப்படுவதாக சொன்னாலும், கழுதையை வணங்கும் முறை நம்மிடம் இல்லை. தெய்வங்கள் பலருக்கும் பல்வேறு வாகனங்கள் இருந்த போதிலும், கழுதையை வாகனமாக கொண்ட தெய்வங்கள் எதுவும் இல்லை. ஆனால் கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள சிவன் கோவில் ஒன்றில், கழுதை வாகனத்தின் மீது சிவன் அமர்ந்திருப்பது போல் சிலை வடிக்கப்பட்டுள்ளது. இந்த சிவனை வழிபட்டால் நற்புகழ் கிடைக்கும் என்பது, அங்கு நிலவும் நம்பிக்கை.

     பூஜையில் தாழம்பூ

    சிவபெருமானின் பூஜையில் தாழம்பூ சேர்க்கப்படுவதில்லை. ஆனால் மற்ற தெய்வங்களுக்கு தாழம்பூ கொண்டு பூஜிக்கும் முறை இருக்கிறது. அப்படிப்பட்ட தாழம்பூவின் நுனியில் லட்சுமி தேவியும், நடுப்பகுதியில் சரஸ்வதியும், காம்பு பகுதியில் மூதேவியும் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே தெய்வங்களின் பூஜையில் தாழம்பூவை சேர்க்கும்போது, அதன் காம்பு பகுதியை நீக்கிவிட்டு சேர்க்க வேண்டும் என்கிறார்கள்.

    அதிசய கிணறுகள்

    சென்னை அடுத்துள்ள மதுராந்தகம் அருகே வடசிற்றம்பலம் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள முருகன் கோவிலில் ஆறு கிணறுகள் இருக்கின்றன. இந்த ஆறு கிணறுகளும் 6 விதமான சுவையுடைய தண்ணீரை கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். உப்பு, கரிப்பு, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு ஆகிய 6 சுவைகளுடன் உள்ள இந்த அதிசய கிணறுகளைக் காண்பதற்காகவே இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம் என்கிறார்கள்.

    ரத்னாவதி ஆசனம்

    முன் காலத்தில் நீலம், வைரம், பத்மராகம், முத்து, பவளம் ஆகிய ஐந்து வகையான ரத்தினங்களைக் கொண்டு ஆசனம் செய்து, அதில் இறைவனை அமர வைத்து பூஜை செய்வார்கள். இவ்வாறு செய்வதால் குடும்பத்தில் ஐஸ்வரியம் உண்டாகும் என்பது நம்பிக்கை. 5 வகையான ரத்தினங்களால் செய்யப்படும் அந்த ஆசனத்திற்கு, 'ரத்னாவதி ஆசனம்' என்று பெயர்.

     முக்தி தரும் ரஜத லிங்கம்

    வெள்ளி உலோகத்தால் செய்யப்பட்ட லிங்கத்திற்கு 'ரஜத லிங்கம்' என்று பெயர். சென்னை கபாலீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சில ஆலயங்களில் இப்படியான வெள்ளியில் செய்யப்பட்ட சிவலிங்கங்கள் இருக்கின்றன. பிரதோஷம், சிவராத்திரி மற்றும் சிவனுக்குரிய விசேஷ தினங்களில் இவற்றிக்கு பூஜை செய்யப்படுகிறது. இந்த ரஜத லிங்கத்தை தரிசனம் செய்தால் முக்தி கிடைக்கும் என்கிறார்கள்.

    • இந்த பகுதியில் இன்றும் சித்தர்கள் வாழ்வதாக நம்பப்படுகிறது.
    • ராமர் பாதங்கள் இருப்பதை இன்றும் தரிசிக்க முடியும்.

    கோவில் தோற்றம்

    தமிழ்நாட்டின் `மூக்குமுனை' என்று வர்ணிக்கப்படும், வனம் சூழ்ந்த கடற்கரை தலம்தான் கோடியக்கரை. வேதவனத்தின் (வேதாரண்யம்) தென்கோடியாக இருக்கும் இக்கோடியக்கரை, காடுகளால் சூழப்பட்டுள்ளது. எங்கு நோக்கினும் உப்பளங்கள் காணப்படுகின்றது. கோவில் இருக்கும் இடம் `கோடியக்காடு' என்றும், கடற்கரைப் பகுதி `கோடியக்கரை' என்றும் அழைக்கப்படுகின்றது.

    நவகோடி சித்தர்கள் வழிபட்ட இந்த பகுதியில் இன்றும் சித்தர்கள் வாழ்வதாக நம்பப்படுகிறது. இதற்குச் சான்றாக சித்தர் கட்டம் ஒன்றும் கடற்கரையில் உள்ளது. நவக்கிரக தோஷத்தில் இருந்து விடுதலை கொடுக்கும் தலமாகவும் இது திகழ்கிறது. பிரம்மா, நாரதர், இந்திரன், சுவேத மகரிஷி, குழக முனிவர் ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டு திருவருள் பெற்றுள்ளனர்.

    இத்தலத்திற்கு அருகே அகத்தியர் தங்கி சிவ பூஜை செய்த 'அகத்தியம்பள்ளி' என்ற சிவ தலம் அமைந்துள்ளது. சோழ நாட்டு காவிரி தென்கரையின் 127-வது திருத்தலமாக இது புகழ் பரப்பி நிற்கின்றது. சுந்தரர் இத்தலம் மீது ஒரு பதிகம் பாடி போற்றியுள்ளார்.

    சேரமான் பெருமானுடன் இங்கு வந்த சுந்தரர், வேடர்கள் பலர் இங்கு வாழ்ந்ததாகக் குறிப்பிட்டு, இத்தல அம்பிகையை 'மையார் தடங்கண்ணி' என்று புகழ்ந்திருக்கிறார். அருணகிரிநாதர் இத்தல முருகன் மீது திருப்புகழ் மாலை ஒன்றை சாத்தி உள்ளார். கோடியக்காட்டு முகத்துவாரத்தில் ராமபிரான் சேதுபந்தனம் செய்ய நின்ற இடத்தில் ராமர் பாதங்கள் இருப்பதை இன்றும் தரிசிக்க முடியும்.

    திருவாவடுதுறை குருமூர்த்திகளான சித்தர் சிவப்பிரகாசர், இங்கே ஜீவசமாதி அடைந்துள்ளார். கோடியக்கரை கடலில் ஒரு முறை நீராடினால் ராமேஸ்வரம் சேதுவில் 100 முறை நீராடிய பலனைப் பெறலாம் என்கிறார்கள். எனவே இது 'ஆதிசேது' என்றும் போற்றப்படுகின்றது. மாசி மகம், ஆடி மற்றும் தை அமாவாசைகளில் இங்கு நீராடி, பித்ரு தர்ப்பணம் செய்தால் முன்னோர்கள் முக்தி நிலையை அடைவார்கள்.

    தேவர்களும், அசுரர்களும் இணைந்து திருப்பாற்கடலைக் கடைந்த போது, அதில் இருந்து அமிர்தம் வெளிப்பட்டது. அந்த அமிர்த கலசத்தை தேவலோகத்திற்கு எடுத்துச் செல்ல முயன்றார், வாயு பகவான். அப்போது அசுரர்கள் அனைவரும் சேர்ந்து சூறாவளி காற்றை உருவாக்கினர். அதனால் வாயு பகவான் அமிர்த கலசத்தை தவறவிட்டார். அப்படி தவறி விழுந்த அமிர்த கலசத்தை, இத்தலத்தில் உள்ள முருகப்பெருமான் தன் கையில் தாங்கி, பின்னர் அதனை தேவர்களிடம் ஒப்படைத்ததாக தல வரலாறு சொல்கிறது.

    இதனால் தேவர்கள் மகிழ்ந்து கந்தனுக்கு நீலோற்பல மலரை பரிசாக அளித்தனா். எனவே இத்தலத்தில் அருளும் முருகப்பெருமான், தன்னுடைய கரங்களில் நீலோற்பல மலரையும், அமிர்த கலசத்தையும் தாங்கிய படி அருள்பாலிக்கிறார். அமிர்த கலசத்தில் இருந்து சிந்திய அமிர்தத் துளிகள் சிவலிங்கமாக உருவானது. அப்பெருமானே இத்தலத்தில் அருளும் அமிர்தகடேசுவரர் ஆவார்.

    வடநாட்டில் நர்மதை ஆற்றங்கரையில் சுவேத முனிவருக்கும், சுசீலை அம்மைக்கும் மகனாகப் பிறந்தவர், குழக முனிவர். இவர் தனது நாட்டைவிட்டு இங்கே வந்து தவம் புரிந்து, முக்தி பெற்றுள்ளார். முருகன் (குழகன்) சிறப்பினாலும், குழக முனிவர் பூஜித்தமையாலும் இத்தலம் 'குழகர் கோவில்' என்று வர்ணிக்கப்படுகின்றது. கிழக்கு நோக்கிய அழகிய ராஜகோபுரத்துடன் ஆலயம் அற்புதமாக திகழ்கின்றது.

     சன்னிதிகள் யாவும் உயரமான மேடை அமைப்பு மீது அமையப் பெற்றுள்ளது. தென்முகம் கொண்டு அருள்பாலிக்கின்றாள், அன்னை அஞ்சனாட்சி. அருகே வனதேவதையான காடுகிழாளும் தரிசனமளிக்கின்றாள். மகா மண்டபத்தில் குழக முனிவரும் அருள்பாலிக்கின்றார். கருவறையில் அமிர்தகடேசுவரர் சதுர ஆவுடையார் கொண்டு வீற்றிருக்கிறார்.

    பிரகாரத்தில் அமுத கிணறு ஒன்று உள்ளது. கணபதியும் இங்கே 'அமிர்த கணபதி' என்று அழைக்கப்படுகின்றார். இவ்வாலய பிரதான மூர்த்தியான முருகப்பெருமான், மேற்கில் தனியே சன்னிதி கொண்டு ஒரு முகமும் ஆறு திருக்கரங்களுமாக அருள்பாலித்து வருகிறார்.

    அவருடன் வள்ளி- தெய்வானை ஆகிய இரண்டு தேவியா்களும் இருக்கின்றனா். இந்த முருகப்பெருமான் 'அமிர்தகர சுப்பிரமணியர்' என்றும், `கோடிக்குழகர்' என்றும் அழைக்கப்படுகின்றார். இத்தலத்தில் நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் காட்சியளிக்கின்றன.

    இவ்வாலயத்திற்கு 2 கிலோமீட்டர் தொலைவில் ருத்ரகோடி தீர்த்தம் எனப்படும் கடல், பிரதான தீர்த்தமாக உள்ளது. குராமரம் தல விருட்சமாக உள்ளது.

    சரியாக பேச்சு வராத குழந்தைகள் இங்கு முருகனுக்கு அபிஷேகம் செய்த தேனைப் பருகினால் சிறந்த பலனைப் பெறுகின்றனர். சஷ்டி விரதம் இருந்து முருகனுக்கு அபிஷேகம் செய்தாலும் குழந்தைப் பேறு கிடைக்கும். தொடர்ந்து ஆறு சஷ்டி திதியில் விரதம் இருந்து, இத்தல முருகனுக்கு ஆறு நிறத்தில் உள்ள மலர்களை சூட்டி, ஆறு நைவேத்தியங்களை படைத்து வழிபட்டால், எதிரிகள் தொல்லை நீங்கும். இத்தலத்தில் அஞ்சனாட்சி அம்மைக்கு பாலாபிஷேகம் செய்து வில்வம் மற்றும் சம்பங்கி மலர்களால் அர்ச்சித்தால், நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

    அமைவிடம்

    நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டத்தில் வேதாரண்யத்தில் இருந்து சுமார் 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கோடியக்கரை.

    • துளசி, வடை, லட்டு மாலைகள் சாற்றி பக்தர்கள் வழிபட்டனர்.
    • ஆஞ்சநேயருக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

    சென்னை:

    ராமாயணத்தின் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் ஒருவர் அனுமன். ராம பக்தன், வாயு புத்திரன், சிரஞ்ஜீவி, மாருதி, ஆஞ்சநேயர் என பலவிதமான பெயர்களால் அழைக்கப்படும் அனுமன் வானர குலத்தை சேர்ந்த அஞ்சனைக்கும், கேசரிக்கும் மகனாக அவதரித்தவர்.

    இவர் மார்கழி மாதம் அமாவாசை திதியில், மூல நட்சத்திரத்தில் அவதரித்ததாக புராணங்கள் சொல்கின்றன. இதனால் தமிழகத்தில் அனுமன் ஜெயந்தி விழா ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

    அதன்படி சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டை, நங்கநல்லூர் அனுமன் கோவில், இதுதவிர பெருமாள் கோவில்களில் உள்ள அனுமன் சன்னிதிகளிலும் சிறப்பு திருமஞ்சனம், துளசி, வடை, லட்டு மாலைகள் சாற்றி பக்தர்கள் வழிபட்டனர்.

    அசோக்நகர் சாமியார் தோட்டத்தில் உள்ள கருமாரி திரிபுர சுந்தரி கோவிலில் உள்ள அனுமன் சன்னதியில் ஒரு லட்சத்து எட்டு வடை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அனுமன் அருள்பாலித்தார். தியாகராய நகரில் உள்ள சிவவிஷ்ணு கோவிலில் உள்ள அனுமன் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    அதேபோல் நங்கநல்லூர் மற்றும் ஆழ்வார்பேட்டையில் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் ஆஞ்சநேயருக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பன்னீர், தயிர், பால், அரிசி மாவு, தேன், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடந்தது. அபிஷேகங்களின் நிறைவாக ஆஞ்சநேயருக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பகைவர்களை வெற்றிகொள்ளும் பராக்கிரமம்மிக்க கோவிந்தா!
    • உத்திரகோசமங்கையில் எழுந்தருளி இருக்கும் சிவனே!

    திருப்பாவை

    பாடல்

    கூடாரை வெல்லுஞ்சீர்க் கோவிந்தா! உன்தன்னை

    பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்;

    நாடு புகழும் பரிசினால் நன்றாக,

    சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே

    பாடகமே யென்றனைய பல்கலனும் யாம் அணிவோம்;

    ஆடை உடுப்போம்; அதன்பின்னே பாற்சோறு

    மூடநெய் பெய்து முழங்கை வழிவார

    கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

    விளக்கம்:

    பகைவர்களை வெற்றிகொள்ளும் பராக்கிரமம்மிக்க கோவிந்தா! உன்னை வாயாரப்பாடி அருள் பெறவந்தோம். எங்கள் நோன்புக்கு மகிழ்ந்து ஏதாவது பரிசு கொடுக்க விரும்புவாயானால் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறோம். நாட்டு மக்கள் புகழும்படியாக வளையல்களையும், காதில் அணியும் தோடுகள் மற்றும் பெண்கள் கால்களில் அணியும் சிலம்புகள், மேலும் பல அணிகலன்களையும் வழங்க வேண்டும். நோன்பு முடிந்த பிறகு நாங்கள் எல்லா அணிகலன்களையும், புத்தாடைகளையும் அணிந்து கொள்வோம். அதன்பிறகு பால் சோற்றில் நெய்யினை ஊற்றி அந்த நெய் முழங்கை வரை வழியும்படியாக கூடியிருந்து சாப்பிட்டு அனைவரும் மகிழ்ந்திருப்போம்.

    திருவெம்பாவை

    பாடல்

    அதுபழச் சுவையென அமுதென அறிதற்

    கரிதென எளிதென அமரரும் அறியார்

    இதுஅவன் திருவுரு இவன் அவன் எனவே

    எங்களை ஆண்டுகொண் டிங்கெழுந் தருளும்

    மதுவளர் பொழில்திரு வுத்தர கோச

    மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா எதுஎமைப் பணிகொளு மாறது கேட்போம்

    எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே

    விளக்கம்

    திருப்பெருந்துறை மன்னனே! சிவானந்தம் எப்படி இருக்கும்? அது பழச்சுவை போன்றது என்றும், அமுதத்தை போன்றது என்றும், அறிந்துகொள்ள எளிமையானது என்றும் சிவனடியார்கள் கூறுகிறார்கள். ஆனால் அதை தேவர்கள் கூட அறிய மாட்டார்கள். இப்படித்தான் நீ இருப்பாய். இதுதான் நான் என்று சொல்லும்படி எங்களுக்கு கருணையுடன் உணர்த்தினாய். தேன் நிறைந்த பூக்களை உடைய சோலைகள் சூழ்ந்த உத்திரகோசமங்கையில் எழுந்தருளி இருக்கும் சிவனே! நீ எங்களுக்கு இடும் கட்டளைகளை கூறினால் அதை ஏற்று நடப்போம். எம்பெருமானே பள்ளி எழுந்தருள்வாயாக!

    • கூடாரைவல்லி என்பது மிக அற்புதமான நாள்.
    • திருப்பாவை நோன்பு கிட்டத்தட்ட நிறைவேறும் நாள்.

    மார்கழி மாதத்தில் கூடாரைவல்லி என்பது மிக அற்புதமான நாள். திருப்பாவையின் 27-வது பாசுரம், "கூடாரை வெல்லும் சீர்கோவிந்தா" என்ற பாசுரம். திருப்பாவை நோன்பு கிட்டத்தட்ட நிறைவேறும் நாள் என்று இதைச் சொல்லுவார்கள். குறையொன்றுமில்லாத கோவிந்தனை வழிபடுகின்றபொழுது ஒவ்வொருவர் மனக்குறையும் தீர்ந்துவிடும் என்பதால், அன்று புத்தாடை அணிந்து, ஆண்டாள் புடவை எடுத்து வைத்து, ஆண்டாள் படத்துக்கு பூமாலை சூட்டி, வணங்குவார்கள்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் கருவறை முன் அர்த்த மண்டபத்தில், ஸ்ரீஆண்டாள் நாச்சியார் சிறப்பு அலங்காரத்தோடு காட்சி தருவார். ஒருமுறை ராமானுஜர் ஆண்டாள் கோரிக்கையைநிறை வேற்றுகின்ற வண்ணம், நூறு அண்டா வெண்ணெயும் நூறு அண்டா அக்கார அடிசிலும், மதுரை திருமாலிருஞ்சோலை அழகருக்கு சமர்ப்பித்தார். ஸ்ரீவில்லிபுத்தூரில் கூடாரைவல்லி அன்று 108 பாத்திரத்தில் வெண்ணெயும் அக்கார அடிசிலும் நிவேதனம் ஆகும்.

    நாம் அன்று வெண்ணெயும் அக்கார அடிசிலும் (பாலில் நெய்விட்டு செய்த சர்க்கரைப் பொங்கல்) வைத்து ஆண்டாளை வணங்க நம்முடைய மனோரதம் நிறைவேறும். பெண்களுக்கு நல்ல வரன் அமையும். கூடாரைவல்லி நாளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று, துளசி மாலை அணிவித்து வணங்குவதன் மூலமாக சகல சவுபாக்கியங்களும் பெறலாம்.

    • கூடாரவல்லி உற்சவ விழா.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ஸ்ரீசுந்தரராஜர் திருக்கோலம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, மார்கழி-27 (வெள்ளிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: பிரதமை மாலை 4.40 மணி வரை, பிறகு துவிதியை.

    நட்சத்திரம்: உத்திராடம் மாலை 5.41 மணி வரை. பிறகு திருவோணம்.

    யோகம்: சித்த, மரணயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று திருவோண விரதம். சந்திர தரிசனம். கூடாரவல்லி உற்சவ விழா. சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ஸ்ரீசுந்தரராஜர் திருக்கோலம். திருப்பரங்குன்றம் ஆண்டவர் விழா தொடக்கம். மதுரை செல்லத்தம்மன் தேரோட்டம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சன சேவை. மாலையில் ஊஞ்சல் சேவை. திருமயிலை ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் கோவிலில் ஸ்ரீமயூரவல்லித் தாயாருக்கு மாலையில் வில்வ அர்ச்சனை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-போட்டி

    ரிஷபம்-உழைப்பு

    மிதுனம்-முயற்சி

    கடகம்-உற்சாகம்

    சிம்மம்-கடமை

    கன்னி-சிறப்பு

    துலாம்- செலவு

    விருச்சிகம்-ஆக்கம்

    தனுசு- இன்பம்

    மகரம்-பாசம்

    கும்பம்-லாபம்

    மீனம்- அமைதி

    ×