search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பழையதை நீக்கும் போகி பண்டிகை
    X

    பழையதை நீக்கும் போகி பண்டிகை

    • இந்திரனுக்கு `போகி' என்ற பெயரும் உண்டு.
    • பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

    ஒரு சமயம் யமுனை நதிக்கரையில் காளிங் என்ற கொடிய விஷமுள்ள பாம்பு தன் குடும்பத்துடன் வசித்து வந்தது. இது பனைமர நீளத்திற்கும் ஐந்து தலையுடனும் இருந்தது. கடும் விஷம் கக்கியது. இதனால் யமுனை நதிக்கரையில் மாடுகளை மேய்க்கும் யாதவர்கள் சிரமப்பட்டனர்.

    இதை அறிந்த கிருஷ்ணன், யாதவர்களுடன் யமுனை நதிக்கரைக்கு சென்று பந்து விளையாடினார். இவரது பந்து யமுனை நதியில் விழுந்தது. பந்தை எடுக்க யமுனை நதியில் கிருஷ்ணன் இறங்கினார். காளிங்கன் கடும் விஷத்தை உமிழ்ந்தவாறு கிருஷ்ணனை நோக்கி வந்தது.

    கிருஷ்ண பகவான் அதன் கர்வத்தை அடக்க எண்ணி, அதன் சிரசில் ஏறி நின்று நடனமாடி அதை அடக்கினார். பின்னர் அவர் காளிங்கனிடம் "யமுனை நதியானது கோகுல மக்கள் பயன்பாட்டிற்கு உரியது. எனவே நீ கடலுக்குள் சென்று வாழ்க்கை நடத்து. என்னுடைய கால் தடம் உன் தலை மீது இருப்பதால் உனக்கு கருடனால் எந்த பாதிப்பும் வராது" என்று சொல்லி அனுப்பினார்.

    இந்த நிலையில் யமுனை நதிக்குள் புகுந்து காளிங்கனுடன் போராடிக் கொண்டிருந்த கிருஷ்ணருக்கு, காளிங்கனின் விஷத்தால் எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது என்று கோகுல மக்கள் நினைத்தனர். அன்று இரவு கிருஷ்ணன் வரும் வரை விழித்திருக்க வேண்டும் என்பதற்காக, யமுனை நதிக்கரையில், பழைய சருகு குப்பைகளை கொளுத்தி கண் விழித்தபடி இருந்தனர். மேலும் பறை இசைத்தனர்.

    இந்த நிகழ்வின் எதிரொலியாய் ஒவ்வொரு போகிக்கும் நாம் பழைய பொருட்களை எரித்தும், பறையடித்தும் மகிழ்கிறோம்.

    மற்றொரு கதை, யாதவர்கள் ஆண்டுதோறும் நல்ல மழை பெய்ய வேண்டும் என வேண்டி, இந்திரனை பூஜிப்பார்கள். ஒரு சமயம் கிருஷ்ண பகவான் "நமக்கும் நம்முடைய பசுக்களுக்கும், ஆதாரமாக விளங்குவது கோவர்த்தனகிரினகிரி மலைதான். எனவே நாம் கோவர்த்தனகிரி மலையைத்தான் வணங்க வேண்டும்" என்றார்.

    அவர் சொன்னபடி நந்த கோபரும், யாதவர்களும் கோவர்த்தன கிரியை பூஜித்தனர். அதனால் இந்திரன் கோபம் கொண்டு வருண பகவானிடம் 'நீ கடும் மழையை பெய் விக்க வேண்டும்" என உத்தரவிட்டார்.

    கடும் மழை பெய்ய ஆரம்பித்தது. ஒரு நாள். இரண்டு நாள் அல்ல, தொடர்ந்து பல நாட்கள் மழை பெய்ய ஆரம்பித்தது. அப்போது கடும் மழையை சமாளிக்க, கிருஷ்ண பகவான் கோவர்த்தன கிரியை தூக்கி, தன் சுண்டு விரலால் தாங்கி, குடை போல் பிடித்து அனைவரையும் மழை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றினார். இந்திரன் தன் கர்வத்தை விட்டு கிருஷ்ண பகவானை சரணடைந்தார்.

    இந்த நிகழ்வைக் கொண்டாடும் விதமாக போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது என்றும் கூறுவார்கள். இதனால் இந்திரனுக்கு 'போகி' என்ற பெயரும் உண்டு. போகி அன்று காலை எழுந்து நம் வீட்டில் உள்ள பழைய கோரைப்பாய், உபயோகப்படுத்திய விசிறி, மூங்கிலால் செய்த முறம், துடைப்பம் போன்றவற்றை எரித்து விடுவார்கள். இதை நம் முன்னோர்கள் செய்து வந்தார்கள்.

    அதேபோன்று வீட்டில் 'நிலை பொங்கல்' வைக்கும் வழக்கமும் உண்டு. அதாவது தை மாதம் பிறப்பதற்கு முன்தினமான மார்கழி மாதம் கடைசி நாளில் இந்த நிலைப்பொங்கல் வைக்கப்படும். அன்றைய தினம் நம் வீட்டின் தலைவாசலை சுத்தம் செய்து, தலைவாசலுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து. வாசல்படி மேல் ஆவாரம் பூ கொத்து மற்றும் வேப்பிலை சொருகுவார்கள். நிலைப்படியின் இரண்டு பக்கமும் கரும்பு வைத்து, அதன் பின் நிலைப்பொங்கல் வைப்பார்கள். அன்று போளி, வடை செய்யும் வழக்கமும் உண்டு. மேலும் சிறு தானிய உணவுகளை சமைத்து படைப்பார்கள்.

    போகி பண்டிகை அன்று செய்யக்கூடாதவை:-

    தற்போது பாய், விசிறி போன்றவை பெரும்பாலும் பிளாஸ்டிக்கில் வர ஆரம்பித்துவிட்டது. பிளாஸ்டிக் பாய்களை எரிப்பது அல்லது பழைய டயர், உபயோகப்படுத்தாத மற்ற பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஒரு காலத்தில் குப்பைகளை வீட்டின் பின்புறம் சேர்த்து வைத்து வருடத்திற்கு ஒருமுறை எரித்தார்கள் நம் முன்னோர்கள். கிட்டத்தட்ட போகி அன்று என்று எடுத்துக்கொள்ளலாம்.

    தற்போது தினமும் குப்பையை அரசாங்கமே எடுத்து விடுகிறது. போகி பண்டிகை கொண்டாடுகிறோம் என்ற பெயரில் பழைய பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பது நம் பண்டிகைக்கு விரோதமானது. மேலும் அதனால் காற்று மாசு அடைந்து மக்களுக்கும், பிற உயிர்களுக்கும் பாதிப்பு உண்டாகும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

    Next Story
    ×