என் மலர்
வழிபாடு
- ஆல் இலையில் குழந்தையாக பள்ளி கொண்டவனே!
- முக்தி பேற்றினை தரப்போகும் தலைவனே!
திருப்பாவை
பாடல்
மாலே! மணிவண்ணா! மார்கழிநீ ராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்கமுரல்வன
பாலன்ன வண்ணத்துள் பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே,
சாலப்பெரும் பறையே, பல்லாண் டிசைப்பாரே,
கோல விளக்கே, கொடியே, விதானமே,
ஆலின் இலையாய்! அருளேலோ ரெம்பாவாய்.
விளக்கம்
திருமாலே! மணிவண்ணனே! மார்கழி மாதத்தில் நோன்பு நோற்கும் முறைகளை பற்றி நமது முன்னோர்கள் கூறி உள்ளனர். அதற்கான பொருட்களை கேட்பதற்காக வந்தோம். பூவுலகம் நடுக்கம் கொள்ளும்படி முழங்கும் வெண்நிறத்தையுடைய உனது பாஞ்சசன்னியம் என்று சொல்லப்படும் சங்கும், அதைப்போன்ற பிற சங்குகளும் வேண்டும். நீண்டதூரம் சென்று ஒலிக்கின்ற பெரிய முரசுகளும், திருப்பல்லாண்டு பாடுவதற்கு பாடகர்களும் வேண்டும். அழகு பொருந்திய விளக்குகளும், கொடிகளும்,விமானத்தில் கட்டுவதற்கான துணியும், பொருட்களும் வேண்டும். ஆல் இலையில் குழந்தையாக பள்ளி கொண்டவனே! இவற்றையெல்லாம் எங்களுக்கு தந்து நீ அருள்புரிவாயாக!
திருவெம்பாவை
பாடல்
பப்பற வீட்டிருந் துணரும்நின் அடியார்
பந்தனை வந்தறுத் தாரவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின்
வணங்குகின் றார் அணங் கின்மண வாளா
செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
விளக்கம்
உமையம்மையின் கணவனே! செம்மை நிறம்கொண்ட தாமரை மலர்கள் நிறைந்த குளிர்ச்சி பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே! சாதாரண மக்களும், தவம் செய்து அருள் பெற்றவர்களும், ஆசைகளைத் துறந்தவர்களும், பந்தபாசமே வேண்டாம், அவனே கதி என சரணம் அடைந்தவர்களும், உன்னை உணர்ந்த உன் அடியார்கள் பலரும் கோவிலில் கூடி நிற்கிறார்கள், மனித இயல்புக்கு ஏற்ப மையிட்ட கண்களுடைய பெண்களும் உன்னை வணங்கி நிற்கிறார்கள். இந்த பிறவியை நீக்கி எங்களை ஆட்கொண்டு முக்தி பேற்றினை தரப்போகும் தலைவனே! எம்பெருமானே, நீ உன் திருப்பள்ளியில் இருந்து எழுந்து எங்களுக்கு அருள்புரிவாயாக.
- அனுமன் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது.
- அதிகாலை முதலே பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
நாமக்கல்:
அனுமன் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலுக்கு அதிகாலை முதலே பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் இன்று (வியாழக்கிழமை) ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு ஒரு லட்சத்து 8 வடைமாலை சாத்தப்பட்டது. அதிகாலை முதலே கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
காலை 11 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், ராஜேஸ்குமார் எம்.பி. ராமலிங்கம் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர்.
- 63 நாயன்மார்களில் ஒருவர் சாக்கிய நாயனார்.
- இவருடைய பக்தி வித்தியாசமானது.
63 நாயன்மார்களில் ஒருவர் சாக்கிய நாயனார். அவருடைய அவதாரம் மார்கழி பூராடம் நட்சத்திரம். காஞ்சிபுரம் அருகே திருச்சங்கமங்கை என்னும் ஊரில் வேளாளர் குலத்தில் அவதரித்தவர். இவருடைய பக்தி வித்தியாசமானது. ஒரு நாள் வெட்டவெளியில் சாக்கிய நாயனார் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வழிபாடு ஏதுமின்றி கிடந்த சிவலிங்கத் திருமேனி தென்பட்டது. அந்த லிங்கத்தை நினைத்து சாக்கிய நாயனார் உள்ளம் உருகினார்.
அதை தூயநீரால் நீராட்டி, மலர்கள் சாத்தி பூஜிக்க வேண்டும் என்று நினைத்தார். அந்த வெட்ட வெளியில் நீரும் இல்லை, மலர்களும் இல்லை. என்ன செய்வது? ஈசன்மீது கொண்ட அன்பு மிகுதியால், கீழே கிடந்த கல்லை எடுத்து, 'சிவாயநம' என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதி, அதை சிவலிங்கத்தின் மீது வீசினார். தன்னுடைய பக்தன் அன்பினால் தன்மீது கல்லெறிந்தாலும் அதை மலராக ஏற்றுக்கொண்டான் இறைவன்.
இந்தப் பூஜை தினந்தோறும் நடந்தது. சாக்கிய நாயனார், கல் எறிந்து வழிபட்டதாக சொல்லப்படும் சிவபெருமான், காஞ்சிபுரம் அடுத்துள்ள கோனேரிக்குப்பம் என்ற ஊரில் வீற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தக் கோயிலில் அருளும் இறைவனின் திருநாமம், 'வீரட்டானேஸ்வரர்' என்பதாகும்.
சாக்கிய நாயனார் கல் எறிந்ததன் அடையாளமாக, இங்குள்ள லிங்கத்தின் மீது கல் பட்ட வடு புள்ளி புள்ளியாக காணப்படுகிறது. மேலும், இறைவனின் சந்நதிக்கு எதிரில் கையில் கல்லுடன் சாக்கிய நாயனாரின் திருமேனியும் காணப்படுகிறது.அந்த சாக்கிய நாயனாரின் குருபூஜை இன்றைய தினம்.
- அஞ்சனையின் மைந்தனாகத் தோன்றியவன்.
- நித்திய சிரஞ்ஜீவியாகத் திகழ்பவன்.
மார்கழி அமாவாசை என்றாலே அனுமன் ஜெயந்தி தினம் நினைவுக்கு வரும். அஞ்சனையின் மைந்தனாகத் தோன்றியவன். ஐம்புலன்களை வென்றவன். சூரியதேவனிடம் கல்வி கற்றவன். அசாத்திய சாதனை செய்யும் ஆற்றல் படைத்தவன். ராமதூதன். நித்திய சிரஞ்ஜீவியாகத் திகழ்பவன். வரபலம் உடையவன். மார்கழி அமாவாசையில் மூலநட்சத்திரத்தில் பிறந்தவன். ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்று விரதமிருந்து ஆஞ்சநேயருக்கு அபிஷேக ஆராதனையை நடத்தி, வடைமாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்து வழிபடுவது வழக்கமாக உள்ளது.
கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லி ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்று ஆஞ்சநேயரை வழிபட எல்லாவிதமான நலன்களும் கிடைக்கும்.
ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம்;
"ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே,
வாயுபுத்ராய தீமஹி,
தந்தோ ஹனுமன் ப்ரசோதயாத்''
- ஸ்ரீஅனுமன் ஜெயந்தி.
- தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மார்கழி-26 (வியாழக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: அமாவாசை மாலை 6.35 மணி வரை பிறகு பிரதமை.
நட்சத்திரம்: பூராடம் இரவு 6.52 மணி வரை பிறகு உத்திராடம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று சர்வ அமாவாசை. ஸ்ரீஅனுமன் ஜெயந்தி. ராமேசுவரம், வேதாரண்யம், திருவள்ளூர் தலங்களில் பித்ரு தர்ப்பணம் செய்ய நன்று. மதுரை செல்லத்தம்மன் காலை சிம்மாசனத்தில் பவனி, இரவு பட்டாபிஷேகம். பெருஞ்சேரி வாகீசுவரர் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன அலங்கார சேவை. ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்சி சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நிறைவு
ரிஷபம்-கடமை
மிதுனம்-பொறுப்பு
கடகம்-பெருமை
சிம்மம்-உழைப்பு
கன்னி-சாதனை
துலாம்- கண்ணியம்
விருச்சிகம்-வரவு
தனுசு- சுகம்
மகரம்-சுபம்
கும்பம்-நற்செயல்
மீனம்-மகிழ்ச்சி
- ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நெல்லைக்கு வருகை தருவார்கள்.
- திருநீர் பூசியும், நெற்றில் குங்குமத்தை இட்டும் வழிபட்டனர்.
நெல்லை:
உலக புகழ் பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர்-காந்திமதி கோவிலின் பெருமைகளை அறிந்து கொள்வதற்காக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நெல்லைக்கு வருகை தருவார்கள்.
அதன்படி ஐரோப்பா கண்டத்தில் உள்ள எஸ்டோனியா நாட்டினை சேர்ந்த 32 பேர் ஒரு குழுவாக வந்து நெல்லையப்பர் கோவிலை இன்று சுற்றி பார்த்ததோடு அங்கு மூலவரான நெல்லையப்பர், காந்திமதி அம்பாளையும் மனம் உருகி வழிபட்டனர். அதன்பின் ஆண்கள் நெற்றியில் திருநீர் பூசியும் மற்றும் பெண்கள் நெற்றில் குங்குமத்தை இட்டும் வழிபட்டனர்.
தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் கலாச்சாரம், மொழி, பழக்க வழக்கங்கள் என அனைத்தும் எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. நெல்லையப்பர் கோவிலில் இன்று சுவாமி தரிசனம் செய்தது மன அமைதியாகவும், உற்சாகத்தை அளிப்பதாகவும் உள்ளது.
இந்த கோவிலின் வரலாறு, கட்டிடக்கலை, சிற்பங்கள் என அனைத்தும் வியப்பாக அமைந்துள்ளது. நாங்கள் தமிழ் சித்த மருத்துவமுறை குறித்து தெரிந்துகொள்ளவும், அகஸ்தியர் வழிபாட்டினை மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளோம். சிவனின் மீதுள்ள பற்றினால் எங்கள் நாட்டில் சிவன் கோவில் கட்டி வருகிறோம்.
தொடர்ந்து முருக கடவுள் மீது அதிக பற்று உள்ளதால் தமிழ்நாட்டில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளான திருச்செந்தூர், திருத்தணி, சுவாமி மலை, திருப்பரங்குன்றம் என முருகன் தலங்களில் சென்று சுவாமி தரிசனம் செய்தோம். தொடர்ந்து இந்தியாவிலுள்ள புகழ் பெற்ற கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்ய உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- பொங்கல் பண்டிகை என்றாலே உற்சாகம்தான்.
- வெளி மாநிலங்களில் மகரசங்கராந்தி என்ற பெயரில் கொண்டாட்டம்.
பொங்கல் பண்டிகை என்றாலே உற்சாகம்தான். காரணங்கள் பல இருந்தாலும், நகரவாசிகளுக்கு தொடர் விடுமுறை என்பதே பொங்கல் பண்டிகைக்கான குதூகலத்துக்கு முதல்படியாக இருக்கிறது. அதுவும், இந்த ஆண்டு சனி, ஞாயிறு என சேர்த்து மொத்தம் 6 நாள்கள் தொடர் விடுமுறை என்பதால் பொங்கல் ஏற்கெனவே களைக்கட்டி இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவில்லை.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மகரசங்கராந்தி என்ற பெயரில் பல்வேறு வடிவங்களில் மக்கள் கொண்டாடுகின்றனர். மேலும் தாய்லாந்து நாட்டில் `சொங்க்ரான்' என்ற பெயரிலும், லாவோஸில் `பிம லாவோ' என்ற பெயரிலும், மியான்மரில் `திங்க்யான்' என்ற பெயரிலும், நேபாளத்தில் 'மாகே சங்கராந்தி' என்ற பெயரிலும், இலங்கையில் புத்தாண்டாகவும் இப்பண்டிகையைக் கொண்டாடி அந்தந்த நாடுகளின் மக்கள் மகிழ்கிறார்கள்.
பொங்கல் பண்டிகை அறுவடைத் திருநாள் மட்டுமல்ல, இந்த உலகை வாழவைக்கும் சூரியனுக்கு நன்றி கூறும் நாளாகவும் இருக்கிறது. கதிரவனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே இவ்விழா நமது முன்னோரால் உருவாக்கப்பட்டுள்ளது. சூரிய வழிபாடு நமதுநாட்டில் தொன்றுதொட்டு நிலவி வருவதாகும். நாட்டின் பல இடங்களில் பழமையான சூரியன் கோவில்கள் இன்றும் உள்ளன. எனவே, நம் நாட்டில் "மகர சங்கராந்தி" நாளில் மற்ற மாநிலங்களில் என்னவெல்லாம் செய்கிறார்கள், எப்படியெல்லாம் கொண்டாடுகிறார்கள், பொங்கலின் சுவை பிற மொழிப் பேசும் மாநிலங்களில் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.

லொஹரி
பஞ்சாப், அரியானா, இமாச்சாலப் பிரதேசம் மாநிலங்களில் அறுவடைத் திருநாளை "லொஹரி" என்ற பெயரிலும், அரியானாவில் "மாகி" என்ற பெயரிலும் கொண்டாடி மகிழ்கிறார்கள். இமாச்சல பிரதேசத்தில் "மகா சாஜா" என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் பெயர்கள் வேறாக இருந்தாலும் கொண்டாடும் முறை ஒன்றுதான். பஞ்சாப் மாநில மக்களின் முக்கியப் பண்டிகை லொஹரிதான். எனவே இதனை மாற்று மதத்தினரும் உற்சாகமாக கொண்டாடி மகிழ்வார்கள். லொஹரி பண்டிகையன்று பஞ்சாப் குடும்பத்தினர் அனைவரும் தீயை மூட்டி அதைச் சுற்றிலும் அமர்ந்து கொள்வார்கள். அப்போது பாரம்பரிய பாடல்களுடன் நடனமாடி மகிழ்கிறார்கள். லொஹிரி பண்டிகை இனிப்பாக எள் மற்றும் வெல்லம் கலந்து செய்த பண்டங்கள் வழங்கப்படும்.

மகர் சங்கராந்தி
மகர்சங்கராந்தி என்ற பெயரிலேயே உத்தரப்பிரதேசம், பீகாரிலும், ராஜஸ்தானில் "மகர் சக்ராத்" என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.ஆனால், அறுவடை நாளாக ஒரு பக்கம் இருந்தாலும். இதனை பாவங்களை தீர்க்கும் நன் நாளாகவே அம்மாநில மக்கள் கொண்டாடுகின்றனர். எனவே, மகரசங்கராந்தி தினத்தன்று கங்கை, யமுனை, நர்மதா போன்ற புண்ணிய நதிகளில் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், மகர சங்ராந்தியின் குதூகலம் மற்றும் கொண்டாட்டங்கள் நதிக்கரைகளில்தான் பார்க்கமுடியும். பனி காலம் என்பதால் உடலுக்குச் சூட்டைத் தரும் வெல்லம் மற்றும் எள் தவறாமல் இடம்பெறும். இத்துடன் கேழ்வரகுக் கிச்சடியும் செய்து சாப்பிடுகிறார்கள்.
பழங்குடியினரின் மகரசங்கராந்தி
ஒரிசா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் மட்டும் ஆட்டம், பாட்டம் என இதை ஒரு வாரம் முழுவதும் கொண்டாடுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள் என்பதால், தம் அறுவடைகளை முடித்த லாபத்தின் சந்தோஷத்தைக் கொண்டாட ஆண், பெண் இருபாலருமே மது அருந்துவதை பண்டிகையின் ஒரு அங்கமாகக் கருதுகிறார்கள். இந்த நாளுக்காக ஒரிசாவின் பூரி ஜெகநாத் கோயிலில் இரண்டுமுறை அலங்காரங்கள் செய்து சிறப்புப் பூஜைகள் செய்கிறார்கள். சத்தீஸ்கர் கோயில்களிலும் சிறப்புப் பூஜைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்படுவது உண்டு.
உத்ராயண்
குஜராத்தில் இந்தப் பண்டிகையின் பெயர் "உத்ராயண்". பட்டங்கள் பறக்கவிடும் பண்டிகை என்றுதான் அதைக் கூற வேண்டும். அந்த அளவுக்கு ஒவ்வொரு வீட்டிலும் நபருக்கு ஒரு பட்டம் எனக் காலை முதல் மாலை வரை பறக்க விட்டபடியே இருக்கிறார்கள். பட்டங்களுக்காகவே மகர சங்ராந்தி அன்று அகில உலக அளவில் பட்டங்கள் பறக்கவிடும் போட்டிகளை அகமதாபாத், ராஜ்கோட், பரோடா மற்றும் சூரத் ஆகிய நகரங்களில் அரசே ஏற்று நடத்திவருகிறது. ஏராளமானவர்கள் கலந்துகொள்ளும் இந்தப் போட்டியில் பார்வையாளர்களாக வரும் வெளிநாட்டவர்களும் பட்டம் விடுவதற்காகப் பெரும்பாலான எண்ணிக்கையில் பங்கேற்பது உண்டு. இங்குள்ளவர்களுக்கு பலவகைகளான காய்கறிகள் சேர்த்து சமைக்கப்படும் 'உண்டியா' எனும் பதார்த்தத்தை பூரியுடன் சேர்த்து சாப்பிடுவார்கள்.

போஹாலி பிஹூ
அசாம் மாநிலத்தில் அறுவடைத் திருநாளை "போஹாலி பிஹூ" என்ற பெயரில், மகரசங்கராந்தி மாத்தின் முதல் நாள் கொண்டாடுகிறார்கள். போஹாலி பிஹூவக்கு முந்தைய நாளில் அஸாமிக்கள் உறவினர்களுடன் ஒரே இடத்தில் கூடி இரவு அசைவ உணவு விருந்தை ருசிப்பார்கள். போஹாலி பிஹூ நாளில் மூங்கில் மற்றும் வைக்கோல் கொண்டு 'மேஜி' என்றழைக்கப்படும் ஒன்றை பிரமிடுகள் வடிவில் செய்வார்கள். இதை அறுவடை செய்த நிலங்களில் அமைத்து பூஜை செய்து நாம் போகியில் எரிப்பதுபோல் எரித்து விடுவார்கள். அசாம் மாநில அரசு இரண்டு நாள் அரசு விடுமுறை அளிக்கிறது. மேற்கு வங்கத்தில் 'பௌஸ் சங்கராந்தி'என்ற பெயரில் அனுசரிக்கப்படுகிறது.
ஆந்திரம், கர்நாடகம்
ஆந்திரம் மாநிலத்தில் மகரசங்கராந்தி என்ற பெயரிலேயே கொண்டாடப்படுகிறது. இங்கும் மகர சங்ராந்தி என்ற பெயரில் அழைக்கப்பட்டாலும், பெரும்பாலும் நம் பொங்கல் திருநாளைப் போல்தான். முதல் நாள் போகி, மறுநாள் மகர சங்ராந்தி மற்றும் மூன்றாவது நாள் கன்னுமா என மூன்று நாட்களுக்குக் கொண்டாடுகிறார்கள்.
பானையில் சூரியப் பொங்கல் வைத்து உண்டு மகிழ்கிறார்கள். இவர்களின் கன்னுமா என்பது மாட்டுப் பொங்கலாகும். முதல் இருநாள் மட்டும் அரசு விடுமுறை. கர்நாடகாவிலும் மகர சங்ராந்தி என்ற பெயரிலேயே அழைக்கப்படும் பொங்கல் இங்கு ஒரேஒரு நாள் மட்டும் கொண்டாடப்படுகிறது.
- குதிரைகளுக்கு பொங்கல் வைத்து கொண்டாடி வருகின்றனர்.
- குதிரைக்கு பிடித்த உணவுகளை வழங்கி மகழ்ச்சி படுத்துக்கின்றனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடும் தை மாதம் 2-ம் நாள் மாட்டுப்பொங்கல் உற்சாகமாக நடைபெறும். இந்த நாளில் விவசாயத்திற்கும், தங்கள் தொழிலுக்கும் பெரிதும் உதவும் மாடுகளை சுத்தம் செய்து அதற்கு அலங்காரம் செய்து பிடித்தமான உணவுகளை கொடுத்து பிறந்தநாளில் தங்கள் குழந்தைகளுக்கு செய்யப்படும் விசேஷத்தை போல கொண்டாடுவார்கள்.
இதேபோல் திண்டுக்கல் அருகில் உள்ள சிறுமலையில் குதிரைகளுக்கு பொங்கல் வைத்து அன்றைய தினம் கொண்டாட்டம் நடத்துவது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.
திண்டுக்கல்லில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது சிறுமலை கிராமம். இங்கு விவசாயம் மட்டுமே பிரதான தொழிலாக உள்ளது. மலை கிராமங்கள் அதிகம் கொண்ட இங்கு பஸ் போக்குவரத்து கிடையாது. சாலை வசதிகளும் இல்லை. இதனால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை சந்தைக்கு கொண்டு வருவதற்கும், உரம் மற்றும் இடுபொருட்களை எடுத்துச்செல்வதற்கும் குதிரைகளை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.
சிறுமலையில் பலா, வாழை, எலுமிச்சை, மா, சவ்சவ், அவரை உள்ளிட்ட பல்வேறு விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் காய்கறி மற்றும் பழங்கள் திண்டுக்கல் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதில் பெரும்பங்கு வகிப்பது குதிரைகளே. இதனால் அந்த குதிரைகளுக்கு மாட்டுப்பொங்கல் நாளில் பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
குதிரைகள் அனைத்தையும் சுத்தம் செய்து கலர் பொடிகள் கொண்டு அலங்காரம் செய்து சலங்கைகள் கட்டி விடுகின்றனர். அதன்பிறகு ஊருக்கு பொதுவான இடத்தில் கொண்டுவந்து பொங்கல் வைத்து குதிரைக்கு பிடித்த விதவிதமான உணவுகளை வழங்கி மகழ்ச்சி படுத்துக்கின்றனர். தங்களுக்கு வாழ்நாள் முழுவதும் உதவும் குதிரைகளுக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக இதனை தொடர்ந்து தாங்கள் செய்து வருவதாக சிறுமலை கிராம மக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
- பழமையானது அஞ்சலான்குட்டை முனியப்பன் கோவில்.
- 3 முனியப்பன் சாமி சிலைகள் காணப்படுகின்றன.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகில் பழனியாபுரம் காலனி கிராமத்தில் சுற்றுப்புற கிராம மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வரும் மிரட்டும் கண்கள், முறுக்கு மீசை, கையில் அரிவாள் சகிதமாக கம்பீரமாக காட்சியளிக்கும் பழமையான அஞ்சலான்குட்டை முனியப்பன் கோவில் அமைந்துள்ளது.
மூலவருக்கு வடதிசையில் சடாமுனி, வாயுமுனி, செம்முனி ஆகிய ராட்சத உருவம் கொண்ட 3 முனியப்பன் சாமி சிலைகள் காணப்படுகின்றன. 2 நூற்றாண்டுகளுக்கு முன் பழனியாபுரம் காலனி மலைக்குன்றுக்கு அருகில் ஒரு கிராமம் இருந்ததாகவும், தனியாக இருந்த இந்த கிராமத்திற்குள் அடிக்கடி கொள்ளையர்கள் புகுந்து மக்களை தாக்கி பொருட்களை பறித்து சென்றதாகவும் கொள்ளையர்களின் அட்டகாசத்தால் கிராமத்தை காலி செய்த மக்கள் வேறு பகுதியில் குடியேறியதாகவும் செவிவழிச்செய்தி கூறப்படுகிறது.
இதனால் அந்த கிராமத்திற்கு அருகே அமைந்திருந்த அஞ்சலான் குட்டை முனியப்பன் கோவில் ஆள் நடமாட்டமில்லாத வனப்பகுதியில் தனிமையானது. வனப்பகுதியில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு பெண்கள் சென்றால் 'முனி' தாக்குவதாகவும் கூறி இக்கோவிலுக்கு பெண்கள் செல்ல முன்னோர்கள் தடைவிதித்தாகவும் கூறப்படுகிறது.
தடையை மீறி அஞ்சலான் குட்டை முனியப்பன் கோவிலுக்கு பெண்கள் சென்றால் தெய்வகுற்றம் ஏற்பட்டு குடும்பத்திற்கு கெடுதல் நேர்வதாகவும், இப்பகுதி மக்களிடையே இன்றளவும் நம்பிக்கை தொடர்ந்து வருகிறது. எனவே அஞ்சலான் குட்டை முனியப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்வதில்லை. ஆண்கள் மட்டுமே இக்கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துகின்றனர்.
நல்ல மனைவி அமையவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், வீடு, மனை, தொழில் வளம் சேரவும், நோய் நீங்கி நலம் பெறவும் வரம் கேட்கும் ஆண் பக்தர்கள், சாமி அருளால் நினைத்த காரியம் தடையின்றி நிறைவேறினால் கேட்ட வரம் கொடுத்த முனியப்பனுக்கு ஆட்டுக்கிடா', சேவல் பலி கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இதனால் தினந்தோறும் இக்கோவிலில் பொங்கல் வைத்து ஆண்கள் கொண்டாடுகின்றனர்.
நேர்த்திக்கடனாக குதிரை, மாடு, ஆடு, நாய் உள்ளிட்ட கால்நடை சிற்பங்கள் மட்டுமின்றி, குழந்தைகளின் சிற்பங்களையும் கோவிலில் செய்து வைப்பதும், இந்த சிற்பங்களுக்கும் படையல் வைத்து பூஜையும் செய்கின்றனர். இதுமட்டுமின்றி, நேர்த்திக்கடன் தீர்க்க முனியப்பன் சாமிக்கு பலி கொடுத்த கிடா, சேவல் கறியை கோவில் வளாகத்திலேயே ஆண்களே ருசியாக சமைத்து சாமிக்கு படையல் வைத்தும், நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைத்து விருந்து வைத்தும் அசத்தி வருகின்றனர்.
சாமிக்கு வைத்த பொங்கல் மட்டுமின்றி, கோவிலில் சமைத்த கறியையும் பெண்கள் சாப்பிடுவதில்லை என்பதால், மிச்சம் மீதியை கூட ஆண்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்வதில்லை. சக்தி வாய்ந்த காவல் தெய்வமாக கருதப்படும் அஞ்சலான்குட்டை முனியப்பன் கோவில் வீபூதியை கூட இன்றளவும் பெண்கள் வைத்துக் கொள்வதில்லை என்பது வியக்கவைக்கும் தகவலாகும்.
- நவக்கிரக தோஷங்களை நீக்கும் தலம்.
- தயிர் சாதம் புசித்து தங்களின் சாபம் நீங்கி விமோசனம் பெற்றனர்.
நவக்கிரக தோஷங்களை நீக்கும் தலமாகவும் திருமங்கலக்குடி விளங்குகிறது. நவக்கிரக நாயகர்கள் இத்தல இறைவனையும், இறைவியையும் வணங்கி தங்களது சாபம் நீங்கப் பெற்றதாக புராண வரலாறு கூறுகிறது. காலவ முனிவர் என்பவர் தன் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்த போது தனக்கு தொழுநோய் வர இருப்பதை உணர்ந்தார். நவக்கிரகங்களை வழிபட்டால் அந்த நோயிலிருந்து விடுபடலாம் என்றுணர்ந்து நவகிரகங்களை நோக்கி கடும் தவம் மேற்கொண்டார்.
முனிவரின் தவத்திற்கு இரங்கி நவகிரகங்கள் அவருக்கு காட்சி தந்து முனிவரை தொழு நோய்தாக்காதிருக்க வரமும் அளித்தனர்.
நவகிரகங்களின் இந்த செயலை அறிந்த பிரம்மா கோபம் கொண்டார். நவகிரகங்களுக்கு வரம் கொடுக்கும் உரிமை கிடையாது என்றும், முற்பிறவியில் அனைத்து உயிர்களும் செய்த பாவ புண்ணியத்தின் பலனை மட்டுமே அவர்கள் தர வேண்டும் என பணித்திருந்தும் காலவ முனிவருக்கு தொழுநோய் தாக்காத வரம் அளித்ததால் நவகிரகங்களுக்கு தொழுநோய் ஏற்பட்டு வருந்தும்படி பிரம்மா சாபமிட்டார்.
பின்னர் நவகிரகங்கள் பிரம்மா கூறியபடி திருமங்கலக்குடி அருகே உள்ள வெள்ளெருக்கு காட்டில் (இவ்விடம் தற்போது சூரியனார்கோவில் என்று அழைக்கப்படுகிறது) கார்த்திகை மாதம் முதல் ஞாயிறு முதல் 12 ஞாயிற்றுக்கிழமைகள் அங்குள்ள ஒன்பது தீர்த்தத்தில் நீராடி, பின்னர் திங்களன்று காவிரியில் நீராடி பிராண நாதேஸ்வரரையும், மங்களநாயகியையும் வழிபட்டு, பிறகு வெள்ளெருக்கு இலையில் தயிர் சாதம் புசித்து தங்களின் சாபம் நீங்கி விமோசனம் பெற்றனர்.
நவக்கிரகங்கள் தங்கள் பாவங்களை இப்புண்ணிய தலத்து இறைவனை வழிபட்டு போக்கிக் கொண்டமையால், நவக்கிரக கோவில்களுக்கு தரிசனம் செய்யச் செல்லுவோர், இத்தலத்து ஸ்ரீபிராணநாதேஸ்வரரையும் இறைவி மங்களாம்பிகையையும் முதலில் தரிசித்த பின்னரே சூரியனார் கோவில் சென்று வழிபட வேண்டுமென்பது நியதி!
- சூரியனார்கோவில் கருங்கல்லால் கட்டப்பட்டது.
- சூரியனுடைய கதிர் சூரியமூர்த்தியின் பாதத்தில் விழுகிறது.
ஆதி காலத்தில் கும்பகோணம் பகுதி அடர்ந்த வனப்பகுதியாக இருந்தபோது திருமங்கலக்குடி, சூரியனார் கோவில்கள் தோன்றின. முதலில் அருகருகே இரண்டு கோவில்களும் ஒரே அமைப்பாக இருந்தன. இந்த இரண்டு தலங்களையும் இணைத்து ஒரே ஆலயமாகத்தான் மூதாததையர்கள் வழிபட்டு வந்தனர்.
நாகரிக மாற்றம் காரணமாகவும், மக்கள்தொகை பெருக்கம் காரணமாகவும் இரண்டு ஆலயங்களும் இரண்டு தனித்தனி வழிபாட்டுத் தலங்களாக மாறிவிட்டன. என்றாலும் சூரியனார் கோவில் இதோடு இணைந்த ஆலயம் தான். அந்த ஆலயம் பற்றியும் தெரிந்து கொண்டால்தான் திருமங்கலக்குடி ஆலயத்தின் சிறப்பு தெரிய வரும்.
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே தமிழ்நாட்டில் சூரிய வழிபாடு இருந்ததை தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் குறிப்பிட்டுள்ளன. சூரியனையே முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபட்ட சமயம் சவுரம் என்று அழைக்கப்படுகிறது. கணித வகையில் சூரியனைத் தலைமையாக வைத்துக் கணிக்கும் முறைக்குச் சூரிய சித்தாந்தம் என்ற பெயரும், அவ்வகை அளவுக்குச் சவுரமானம் என்ற பெயரும் வழங்குகின்றன.
ரிக்வேதம் மூன்று வித அக்கினிகளில் ஒருவனாகக் கதிரவனை வருணிக்கிறது. சூரியனுடைய சஞ்சாரம் உத்தராணயம் (வடக்கு நோக்கிச் செல்லுதல்), தட்சணாயணம் (தெற்கு நோக்கிச் செல்லுதல்) என வழங்கப்படும்.
தை மாதம் முதல்தேதி சூரியன் வடக்கு நோக்கிச் சஞ்சரிக்க ஆரம்பிக்கும் நாள். இந்நாள் மகர சங்கராந்தி என்ற பொங்கல் பண்டிகை என அழைக்கப்படுகிறது. அந்நாளில் தைப்பொங்கல் பெருவிழா உலக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.
வயல்களில் அறுவடை முடிந்து களஞ்சியங்கள் நிரம்பி வழியும் போது தமிழக மக்கள் உள்ளமும் உவகையினால் பொங்குகிறது. கதிரவன் ஒளியில் புதுப்பானையில் பொங்கலிட்டு கதிரவன் வழிபாடு செய்வது மரபு இருந்தும், சூரியனுக்கு ஆலயங்கள் அபூர்வமாகவே காணப்படுகின்றன.
வடநாட்டில் கொனார்க் என்ற கோவில் பிரசித்தமானது. தென்னகத்தில், இந்தியாவிலேயே வேறெங்கும் காணப்படாத பல அரிய தனிச்சிறப்புகள் நிரம்பியுள்ள சூரியனார்கோவில் இருக்கிறது.
இக்கோவில் கி.பி. 1114-ல் முதலாம் குலோத்துங்க சோழனால் சூரிய மண்டலத்தை மையமாக வைத்து, வான சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டது. அக்காலத்தில் இது `குலோத்துங்க சோழமார்த்தாண்டாலயம்' என வழங்கிற்று.
கொனார்க் கோவில் இதற்குப்பின் இரு நூற்றாண்டுகள் கழித்தே கட்டப்பட்டது. அதை முதலாம் நரசிம்ம சோடகங்கன் (அரசு: கி.பி. 1238-63) கட்டினான். இவனும் தென்னாட்டுச் சோழர் மரபைச் சார்ந்தவனே என்பது வரலாற்றாசிரியர் கருத்து.
ஒரு பெரிய ரதம் போலத் தோன்றும் கொனார்க் ஆலயம் சதுரமான வடிவில் பத்து அடி விட்டங்கள் கொண்ட 24 சக்கரங்களை இணைத்து, ஏழு குதிரைகள் இழுத்துச் செல்வது போன்று அநேக சித்திர வேலைப்பாடுகளுடன் காட்சியளிக்கிறது. ஆறடி உயரமுள்ள சூரியநாராயணர் சிலை நிற்கும் வடிவமாக, பக்கத்தில் மேலும் கீழுமாக நாலு தேவிகளும் தரிசனம் கொடுப்பதுபோல அமைந்துள்ளது.
உலகப் பிரசித்தி பெற்ற இந்த ஆலயம் தற்சமயம் வழிபாடுகள் இன்றி ஒரு அருங்காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளது. சூரியனார்கோவில் சூரியனுக்குரிய தலம், அதோடு கூட, 9 கிரகங்களுமே இங்கு தனித்தனியாகக் கோவில் கொண்டிருப்பதால் இது 'நவக்கிரக தலம்' என்று அழைக்கப்படுகிறது. கோவிலின் மூலவர் சூரியபகவானே. இங்கு நடக்கும் வழிபாடுகள், விழாக்கள் எல்லாம் அவருக்கே. பிரதான மூர்த்தியைச்சுற்றி மற்ற கிரகங்கள் பரிவார தேவதைகளாக எழுந்தருளியிருப்பது இத்தலத்தின் சிறப்பாகும்.
சூரியனார்கோவில் கருங்கல்லால் கட்டப்பட்டது. கட்டிட அமைப்பும். சந்நிதிகளின் வகுப்பு முறையும், தமிழகத்துச் சிற்பிகளின் கட்டிடக் கலையாற்றலை மட்டுமல்லாமல். அவர்களுடைய வான மண்டல அறிவாற்றலையும் எடுத்துக் காட்டுகிறது. வானமண்ட லத்தின் 360 டிகிரி வட்டத்தைக் கணக்கிட்டு, மையத்தில் சூரியனையும், சுற்றுவட்டத்தில் அந்தக் கணக்கின்படியே மற்றக் கிரகங்களையும் அமைத்துள்ளார்கள்.
ஆண்டுக்கு இரண்டு முறை மும்மூன்று நாட்களுக்குச் சூரியனுடைய கதிர் ஒரு நுழைவாயில் வழியாக உள்ளே வந்து சூரியமூர்த்தியின் பாதத்தில் விழுகிறது. இங்குள்ள உற்சவ விக்கிரகங்கள் மிக அழகானவை. சூரியமூர்த்தி தம் இரு கரங்களிலும் தாமரையை ஏந்தி வட்ட வடிவமான பிரபையுடன் அழகுச் சுடராக நிற்கிறார். கோவிலிலுள்ள அஸ்த்திர தேவர் பிம்பத்தில் சூரிய பகவானே காணப்படுகிறார்.
சிற்பச் சிறப்பும், வான மண்டல கோள்களின் நுட்ப கணித இயல்பும், வழிபாட்டு நெறி முறைகளும் ஒருங்கி ணைந்த இக்கோவிலில் பல வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வெட்டுக்கள் உள்ளன.
ஏழரையாண்டுச் சனி, அட்டமத்துச் சனி, ஜென்மச்சனி உள்ளவர்களும், நவக்கிரக தோஷம் உள்ளவர்களும் இங்கு வந்து தங்கி, உபவாசம் இருந்து, தீர்த்தங்களில் நீராடி, திருமங்கலக்குடி பிராணநாதரையும், மங்களாம்பி கையையும், நவகோள் களையும் முறைப்படி வழிபாடு செய்தால் தோஷங்கள் நீங்கப் பெறுவர் என்று நம்பப்படுகிறது. நவக்கிரக சாந்தி செய்வதற்கும், கிரகப் பெயர்ச்சிகளின் போது வழிபாடு செய்யவும் மக்கள் திரளாக இங்கு வருகின்றனர்.
- பக்தர்களுக்கு அருள்புரியும் நெடுமாலே!
- திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானே!
திருப்பாவை
பாடல்
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர்இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர,
தரிக்கிலா னாகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம்; பறைதருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
விளக்கம்
வாசுதேவனின் மனைவியான தேவகிக்கு நீ மகனாக பிறந்தாய். அதே இரவில் ஆயர்பாடியில் நந்தகோபனுக்கும் யசோதைக்கும் மகனாகி மறைந்து வளர்ந்தாய். இவைகளை தாங்கிக்கொள்ள முடியாத கம்சன், உனக்கு தீங்கு செய்ய நினைத்தான். அவனுடைய தீய எண்ணத்தை அழித்து நெருப்பாக நின்று அச்சத்தை ஏற்படுத்தினாய். பக்தர்களுக்கு அருள்புரியும் நெடுமாலே! நீயே சரண் என்று உன்னை வணங்கி உன் அருள் தேடி வந்துள்ளோம். நாங்கள் நினைத்த வரத்தை அருளினால் அதனைப் பெற்று உயர்ந்த அருட்செல்வத்தால் உன் பெருமைகளை பாடித்துதிப்போம். எங்கள் எல்லா துயரங்களும் மறைந்து விடும்!
திருவெம்பாவை
பாடல்
பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
சிந்தனைக் கும்அரி யாய்எங்கள் முன்வந்
தேதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
விளக்கம்
குளிர்ச்சி பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானே! நீ பஞ்சபூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஒவ்வொன்றிலும் நிறைந்து இருக்கிறாய். இருந்தும் உன்னை பிறப்பும், இறப்பும் இல்லாதவன் என்று புலவர்கள் புகழ்ந்து கூறி ஆடிப்பாடுகின்றனர். உன்னை கண்டறிந்தவர்கள், யார் என்று கேட்டு அறிந்தவர்கள் யாரும் இல்லை. சிந்தனைக்கு எட்டாதவனாக இருந்தாலும் எங்கள் முன் நேரில் தோன்றி நாங்கள் செய்கின்ற தவறுகளையும், குற்றங்களையும் மாற்றி அமைப்பவன் நீ நாங்கள் செய்யும் தவறுகளை நீக்கி எங்களுக்கு அருள்வாயாக! எம்பெருமானே பள்ளியெழுந்து வந்து அருள்புரிவாயாக.






