search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women do not go"

    • பழமையானது அஞ்சலான்குட்டை முனியப்பன் கோவில்.
    • 3 முனியப்பன் சாமி சிலைகள் காணப்படுகின்றன.

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகில் பழனியாபுரம் காலனி கிராமத்தில் சுற்றுப்புற கிராம மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வரும் மிரட்டும் கண்கள், முறுக்கு மீசை, கையில் அரிவாள் சகிதமாக கம்பீரமாக காட்சியளிக்கும் பழமையான அஞ்சலான்குட்டை முனியப்பன் கோவில் அமைந்துள்ளது.

    மூலவருக்கு வடதிசையில் சடாமுனி, வாயுமுனி, செம்முனி ஆகிய ராட்சத உருவம் கொண்ட 3 முனியப்பன் சாமி சிலைகள் காணப்படுகின்றன. 2 நூற்றாண்டுகளுக்கு முன் பழனியாபுரம் காலனி மலைக்குன்றுக்கு அருகில் ஒரு கிராமம் இருந்ததாகவும், தனியாக இருந்த இந்த கிராமத்திற்குள் அடிக்கடி கொள்ளையர்கள் புகுந்து மக்களை தாக்கி பொருட்களை பறித்து சென்றதாகவும் கொள்ளையர்களின் அட்டகாசத்தால் கிராமத்தை காலி செய்த மக்கள் வேறு பகுதியில் குடியேறியதாகவும் செவிவழிச்செய்தி கூறப்படுகிறது.

    இதனால் அந்த கிராமத்திற்கு அருகே அமைந்திருந்த அஞ்சலான் குட்டை முனியப்பன் கோவில் ஆள் நடமாட்டமில்லாத வனப்பகுதியில் தனிமையானது. வனப்பகுதியில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு பெண்கள் சென்றால் 'முனி' தாக்குவதாகவும் கூறி இக்கோவிலுக்கு பெண்கள் செல்ல முன்னோர்கள் தடைவிதித்தாகவும் கூறப்படுகிறது.

    தடையை மீறி அஞ்சலான் குட்டை முனியப்பன் கோவிலுக்கு பெண்கள் சென்றால் தெய்வகுற்றம் ஏற்பட்டு குடும்பத்திற்கு கெடுதல் நேர்வதாகவும், இப்பகுதி மக்களிடையே இன்றளவும் நம்பிக்கை தொடர்ந்து வருகிறது. எனவே அஞ்சலான் குட்டை முனியப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்வதில்லை. ஆண்கள் மட்டுமே இக்கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துகின்றனர்.

    நல்ல மனைவி அமையவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், வீடு, மனை, தொழில் வளம் சேரவும், நோய் நீங்கி நலம் பெறவும் வரம் கேட்கும் ஆண் பக்தர்கள், சாமி அருளால் நினைத்த காரியம் தடையின்றி நிறைவேறினால் கேட்ட வரம் கொடுத்த முனியப்பனுக்கு ஆட்டுக்கிடா', சேவல் பலி கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இதனால் தினந்தோறும் இக்கோவிலில் பொங்கல் வைத்து ஆண்கள் கொண்டாடுகின்றனர்.

    நேர்த்திக்கடனாக குதிரை, மாடு, ஆடு, நாய் உள்ளிட்ட கால்நடை சிற்பங்கள் மட்டுமின்றி, குழந்தைகளின் சிற்பங்களையும் கோவிலில் செய்து வைப்பதும், இந்த சிற்பங்களுக்கும் படையல் வைத்து பூஜையும் செய்கின்றனர். இதுமட்டுமின்றி, நேர்த்திக்கடன் தீர்க்க முனியப்பன் சாமிக்கு பலி கொடுத்த கிடா, சேவல் கறியை கோவில் வளாகத்திலேயே ஆண்களே ருசியாக சமைத்து சாமிக்கு படையல் வைத்தும், நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைத்து விருந்து வைத்தும் அசத்தி வருகின்றனர்.

    சாமிக்கு வைத்த பொங்கல் மட்டுமின்றி, கோவிலில் சமைத்த கறியையும் பெண்கள் சாப்பிடுவதில்லை என்பதால், மிச்சம் மீதியை கூட ஆண்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்வதில்லை. சக்தி வாய்ந்த காவல் தெய்வமாக கருதப்படும் அஞ்சலான்குட்டை முனியப்பன் கோவில் வீபூதியை கூட இன்றளவும் பெண்கள் வைத்துக் கொள்வதில்லை என்பது வியக்கவைக்கும் தகவலாகும்.

    ×