என் மலர்
வழிபாடு
- கணவன்-மனைவிக்குள் ஊடலும், கூடலும் தவிர்க்க முடியாதவை.
- ஆரம்பம் முதல் மறுவூடல் வரை பார்ப்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
குடும்பம் என்றால் சண்டை சச்சரவுகள் இருக்கத்தான் செய்யும். அதுவும் கணவன்-மனைவிக்குள் ஊடலும், கூடலும் தவிர்க்க முடியாதவை. திருவண்ணாமலையில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அண்ணாமலையாரும், உண்ணாமுலை அம்மனும் கூட இத்தகைய ஊடலை நடத்தி இருக்கிறார்கள். இதனை 'திருவூடல் விழா' என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறார்கள். தை மாதம் பொங்கலுக்கு மறுநாள் இந்த விழா நடத்தப்படுகிறது.
முனிவர் சிவபெருமானை தவிர வேறு பிருங்கி என்ற யாரையும் வழிபட மாட்டார். சிவபெருமானின் மனைவி பார்வதிதேவியை கூட அவர் வழிபடுவதில்லை. ஒரு முறை பிருங்கி முனிவர், சிவனை வழிபடுவதற்கு கயிலாய மலைக்கு சென்றார். அப்போது ரிஷப வாகனத்தில் சிவபெருமானும், பார்வதி தேவியும் சேர்ந்து அமர்ந்து இருந்தனர். உடனே வண்டு உருவம் கொண்ட முனிவர், சிவபெருமானை மட்டும் சுற்றி வந்து வழிபட்டு விட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
இதனைப் பார்த்த பார்வதி தேவிக்கு கோபம் உண்டானது. உடனடியாக அவர் பிருங்கி முனிவரிடம், "என்னை வழிபடாத உனக்கு, தண்டனை உண்டு. உன் உடலை இயங்கச் செய்யும் என்னுடைய சக்தியை எனக்கே திருப்பி கொடுத்து விடு" என்றார். பிருங்கி முனிவர் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. உடனடியாக சக்தியை கொடுத்து கொடுத்து விட்டார்.
அதனால் அவரால் நிற்கக்கூட முடியவில்லை. கீழே விழப்போன அவரை சிவபெருமான் கைத்தாங்கலாக பிடித்தார். இதனால் சிவனுக்கும், பார்வதிக்கும் வாக்குவாதம் உண்டாகி, அவர்களுக்குள் ஊடல் ஏற்பட்டது. பார்வதி தேவி, சிவபெருமானை பிரிந்து திருவண்ணாமலை ஆலயத்துக்கு வந்து கதவை பூட்டிக் கொண்டார்.
பார்வதிதேவியின் ஊடலை தணிக்க சுந்தரமூர்த்தி நாயன்மாரை, சிவபெருமான் தூது அனுப்பினார். ஆனால் அந்த தூது வெற்றி பெறவில்லை. இதனால் சிவபெருமான் இருதலைக்கொள்ளி எறும்பாக தவித்தார். பக்தனுக்காக பார்ப்பதா? இல்லையென்றால் தாலி கட்டிய மனைவிக்காக பார்ப்பதா? என்று யோசித்தார்.
இருவருமே வேண்டும் என்று தீர்மானித்த அவர் அன்று இரவு தனியாக இருக்கிறார். மறுநாள் தன் பக்தனான பிருங்கி முனிவருக்கு ஊன்றுகோல் கொடுத்து அருள்பாலித்து விட்டு, ஆலயத்துக்கு திரும்பி அன்னையின் கோபத்தை தணிக்கிறார். இதனால் அவர்களது ஊடல் நிறைவுபெறுகிறது.

இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை தலத்தில் பொங்கலுக்கு மறுநாள் நடக்கிறது. இந்த ஆண்டு வருகிற 16-ந்தேதி இந்த நிகழ்ச்சி நடக்கிறது. அன்று காலை மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படும். பிறகு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன், சுந்தரர் ஆகிய மூவரும் மண்டபத்தில் எழுந்தருள்வார்கள். பின்னர் மாடவீதிகளில் மூன்று முறை சுற்றி வருவார்கள். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோரை குறிக்கும் வகையில் மூன்று முறை மாட வீதி உலா வரும் நிகழ்வு நடைபெறும்.
அப்போது பக்தர்கள் மண்டகப்படி செய்து அண்ணாமலையாருக்கு சிறப்பு செய்வார்கள். அன்று மாலை திருவூடல் தெருவில் சிவனும், பார்வதியும் ஊடல் கொள்ளும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அப்போது சிவபெருமானிடம் அம்மன் கோபம் கொள்வது போல் காட்சிகள் அமையும். ஊடல் அதிகமானதும் அம்மன் கோபத்துடன் புறப்பட்டு சென்று விடுவார். அவர் கோவில் உள்பக்கம் சென்று தனது சன்னிதி கதவுகளை மூடிக்கொள்வார்.
இதைத்தொடர்ந்து அவரை சமரசம் செய்யும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். உண்ணாமுலையம்மன் சமரசம் ஆகாததால் அண்ணாமலை யார் தனியாக புறப்பட்டு செல்வார். அவர் குமரன்கோவில் சென்று அமர்ந்து விடுவார். அங்கு அவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படும். அடுத்த நாள் காலையில் அண்ணாமலையார் கிரிவலம் புறப்படுவார். இந்த கிரிவலம் மிகவும் விசேஷமானது ஆகும்.
ஆண்டுக்கு 2 தடவை மட்டுமே அண்ணாமலையார் தன்னை தானே சுற்றிக் கொள்ளும் வகையில் கிரிவலம் வருவது உண்டு. அதில் தை மாதம் இந்த கிரிவலமும் ஒன்றாகும். அண்ணாமலையார் பின்னால் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அணிவகுத்து சென்று கிரிவலத்தை மேற்கொள்வார்கள், கிரிவலப் பாதையில் அண்ணாமலையாருக்கு சிறப்புகள் செய்யப்படும். பிருங்கி முனிவருக்கு அண்ணாமலையார் காட்சி கொடுத்து அருள்புரிவார். அன்று மாலை அண்ணாமலையார் ஆலயம் திரும்புவார்.
அப்போது உண்ணாமுலையம்மனுடன் சமரசம் செய்து கொள்வார். இதனால் அன்னையின் ஊடல் கோபம் தீர்ந்து விடும். இறுதியில் அண்ணாமலையாரும், உண்ணாமுலையம்மனும் ஒரு சேர அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள். திருவூடல் திருவிழாவை ஆரம்பம் முதல் மறுவூடல் வரை பார்ப்பவர்களுக்கு மிகுந்த பலன்கள் கிடைக்கும்.
குறிப்பாக கணவன்-மனைவி தம்பதி சகிதமாக இந்த விழாவை கண்டுகளித்தால் அவர்கள் இடையே ஒற்றுமை ஓங்கும் என்பார்கள். அதனால்தான் `திருவூடல் கண்டால் மறுவூடல் இல்லை' என்ற சொல் உருவானது. கணவன்-மனைவி ஒற்றுமையை வலியுறுத்தும் இது போன்ற சிறப்பான திருவிழா தமிழ்நாட்டில் எந்த சிவாலயத்திலும் இவ்வளவு சீரும் சிறப்புமாக நடப்பது இல்லை.
திருவண்ணாமலையில் மட்டுமே இது நடக்கிறது. எனவே பொங்கலுக்கு மறுநாள் திருவண்ணாமலைக்கு சென்று அண்ணாமலையாரை வணங்கி திருவூடலை கண்டு பலன் பெறுங்கள்.
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மார்கழி-25 (புதன்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சதுர்த்தசி இரவு 8.04 மணி வரை பிறகு அமாவாசை.
நட்சத்திரம்: மூலம் இரவு 7.44 மணி வரை பிறகு பூராடம்
யோகம்: மரண, அமிர்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ கண்ணன் திருக்கோலமாய்க் காட்சி, மாலை தந்தப் பரங்கி நாற்காலியில் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீநரசிம்மருக்கு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சனம். சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-களிப்பு
ரிஷபம்-சாதனை
மிதுனம்-இன்பம்
கடகம்-தாமதம்
சிம்மம்-சுகம்
கன்னி-சலனம்
துலாம்- ஆர்வம்
விருச்சிகம்-கண்ணியம்
தனுசு- ஜெயம்
மகரம்-துணிவு
கும்பம்-லாபம்
மீனம்-ஆக்கம்
- வைணவ ஆசாரியர்களில் ஒருவர் பெரிய நம்பிகள்.
- திருவடிகள் மகள் அத்துழாய் மடியிலுமாக இருக்கிறார்.
மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் அவதரித்த வைணவ ஆசாரியர்களில் ஒருவர் பெரிய நம்பிகள். ராமானுஜருக்கு மதுராந்தகத்தில் பஞ்சம்ஸ்காரம் செய்த குரு. பெரிய நம்பிகள் (மஹாபூர்ணர்) வாழ்க்கையில் தனது மதக்கருத்தை பரப்புவதைவிட அப்பட்டமாக வாழ்க்கையில் பின்பற்றுவதையே குறிக்கோளாகக் கொண்டார்.
சோழ அரசன் – அல்லது அவர் ஆளுகைக்கு உட்பட்ட ஏதோ ஒரு சிற்றரசனால் கண்கள் பறிக்கப்பட்ட பெரிய நம்பிகள் வயோதிகத்தாலும் – வேதனையாலும் உடல் தளர்ந்து கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து – திருவரங்கம் திரும்பிக் கொண்டிருக்கிறார்.
தனக்கு மரணம் நெருங்குவதை உணர்கிறார். கும்பகோணம் – அய்யம்பேட்டை தாண்டி – பசுபதி கோயில் என்று சொல்லப்படும் ஊருக்கு அருகில் வந்து கொண்டிருக்கிறார்கள். பெரிய நம்பிகளால் தொடர்ந்து நடக்க முடியவில்லை. மகள் அத்துழாய் மீது தளர்ந்து போய் அப்படியே சாய்ந்து விடுகிறார். தலை கூரத்தாழ்வான் மடியிலும், திருவடிகள் மகள் அத்துழாய் மடியிலுமாக இருக்கிறார். அத்துழாய் பேசுகிறாள்.
"அப்பா…. கொஞ்சம் சமாளித்துக் கொள்ளுங்கள்… ஓரிரண்டு நாட்கள்… கொஞ்சம் முயன்றால் திருவரங்கம் போய்விடலாம்….'' மகள் சொன்னதைக் கேட்டு அந்தச் சூழ்நிலையிலும் அவர் இதழ்க்கடையில் புன்னகை விரிகிறது.
"திருவரங்கத்தில் சென்று உயிரை விட்டால் மோட்சம் என்கிறாய்…. இல்லையா"
"அப்படித்தானே சாத்திரங்கள் சொல்கின்றன..''
"அம்மா…. சாத்திரங்கள் அப்படித்தான் சொல்கின்றன. நீ சொல்வதும் உண்மை. ஆனால், உண்மைகளுக்கு மேலே சில பேருண்மைகள் உண்டு..
"அப்படியா..".
"ஆம்… அம்மா… அரங்கன் அந்தப் பேற்றினை இந்த எளியவனுக்குக் கொடுத்திருக்கிறான். அரங்கம்தான் சிறந்தது…. அங்கே வாழ்ந்தால்தான் மோட்சம்… என்பதை அப்படியே வரிக்கு வரி எடுத்துக் கொண்டு அத்தனை பேரும் அரங்கத்தில் குடியேறுவது சாத்தியமா…? அப்படி வார்த்தைகளை பிடித்துக் கொண்டு – உள் அர்த்தத்தை கவனிக்காது போனால் – அரங்கம்தான் தாங்குமா….?
அப்படி திருவரங்கத்தில் வாழாதவர்களுக்கும் திருவரங்கத்தில் சாகாதவர்களுக்கும் மோட்சம் கிடையாதா? எல்லோரும் திருவரங்கத்திற்கு போவது இருக்கட்டும்…எல்லா ஊரும் திருவரங்கமாக வேண்டாமா..
"அப்பா…. நீங்கள் சொல்வது புரிகிறது…. ஆனால் திருவரங்கம்?" பெரிய நம்பிகள் இப்போது ஓர் அற்புதமான வாக்கியத்தைச் சொல்கிறார்.
"அம்மா…. இப்போது இந்த தளர்ந்த வயோதிக நிலையில் – அந்திம நேரத்தை – எண்ணிக் கொண்டிருக்கும் – அடியேன் – தலை சாய்த்திருக்கிறேனே – கூரத்தாழ்வான் என்கிற பரமபாகவதன் மடியில்… இந்த பாகவதன் மடியைவிட உயர்ந்ததா திருவரங்கம்?" அத்துழாய் பேசவில்லை. அந்த பெரிய நம்பிகளின் அவதார நட்சத்திர தினம் இன்று.
- அரங்கனைத் தவிர, யாரையும் பாடாத ஆழ்வார் ஒருவர் உண்டு.
- திவ்யதேச பெருமாளையும் பாடிய ஆழ்வாராகிறார்.
ஆழ்வார்களிலேயே அரங்கனைத் தவிர, வேறு யாரையும் பாடாத ஆழ்வார் ஒருவர் உண்டு என்றால் அவர் தொண்டரடிப்பொடியாழ்வார். ஆனால், இதில் ஒரு நுட்பம் உண்டு. அரங்கன் எல்லா திவ்ய தேசங்களுக்கும் மூலமாக இருப்பவன். 108 திவ்ய தேசத்து எம்பெருமானும் அரங்கத்தில் வந்து கலைகளாக இணைகிறார்கள் என்கின்ற கருத்தும் உண்டு.
கோவில் என்றால் வைணவத்தில் திருவரங்கம்தான். அதுவே, "தலைமைக் கோயில்" என்று சொல்லப்படுகின்றது. பூலோக வைகுண்டம் என்றும் சொல்லப்படுகிறது. எனவே, இவர் அரங்கனை மட்டும் பாடியிருந்தாலும், அனைத்து திவ்யதேச பெருமாளையும் பாடிய ஆழ்வாராகிறார்.
கும்பகோணம் அருகில் மண்டங்குடி என்ற ஊரில் அவதரித்தவர். இவர் எழுதிய பிரபந்தம் இரண்டு. ஒன்று திருப்பள்ளியெழுச்சி. இது தினசரி காலையில் எல்லா பெருமாள் ஆலயங்களிலும் வைணவ வீடுகளிலும் பூஜையில் பாடப்படுவது. மற்றொரு பிரபந்தம் திருமாலை. 45 பாடல்கள். தத்துவ நுட்பங்கள் செறிந்தது. தன்னுடைய பெயரைக்கூட வைணவ அடியாருக்கு அடியார் என்ற பொருளில் மாற்றி வைத்துக் கொண்டவர். அவதாரம் மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் அமைந்தது.
- ஒசூரில் மிகவும் பழமையான மாதேஸ்வரசுவாமி கோவில் உள்ளது.
- பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள ஒசூரில் மிகவும் பழமையான மாதேஸ்வரசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த குண்டம் விழாவில் பூசாரிகள் மட்டுமே குண்டம் இறங்குவார்கள். பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது.
அதே போல் இந்த ஆண்டும் குண்டம் திருவிழா நேற்று இரவு தொடங்கியது. நள்ளிரவு 1 மணியளவில் பால்குடம் எடுத்து பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. அதன் பின்னர் கோவில் பகுதியில் குறவர் நடனம், புலியாட்டம் நடந்தது.
அதைத்தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு அங்குள்ள காட்டாற்றில் இருந்து அம்மன் அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மாதேஸ்வரசாமி எழுந்தருளினார். பின்னர் ஒசூர் பகுதியில் சுவாமி சப்பர வீதி உலா நடந்தது. அப்போது பக்தர்கள் சாமிக்கு தோங்காய் பழம் உடைத்து வழிபட்டனர்.
முக்கிய வீதி வழியாக சப்பர வீதி உலா வந்தது. பின்னர் காலை 7.30 மணியளவில் கோவிலை சென்றடைந்தது. கோவில் முன்பு 30 அடி நீளத்தில் குண்டம் தயார் செய்யபட்டு இருந்தது.
இதை தொடர்ந்து காலை 8 மணியளவில் கோவில் தலைமை பூசாரி முதலில் குண்டம் இறங்கி தீ மிதித்தார். அதை தொடர்ந்து பூசாரிகள் குண்டம் இறங்கினர்.
திருவிழாவில் தாளவாடி, தொட்டகாஜனூர், பாரதிபுரம், மெட்டல்வாடி மற்றும் கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர், சிக்கொலா, அட்டுகுளிபுரம் உள்பட பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்ன தானம் வழங்கபட்டது.
- மனிதர்களை குறித்த பயத்தினால் ஓடி ஒளிந்து கொள்கிறோம்.
- உண்மையாக வாழ்ந்தால் நாம் பயப்படத் தேவையில்லை.
தேவன் இந்த உலகில் மனிதனை படைத்த போது, பயம் என்றால் என்னவென்று தெரியாத நிலையில் தான் உருவாக்கினார். ஆனால் மனிதனுக்கு `கீழ்ப்படியாமை' என்ற பாவம் வந்தபோது, பயமும் வந்துவிட்டது. ஆதாம் ஆண்டவரிடத்தில், `நான் தேவரீருடைய சத்தத்தை கேட்டு பயந்து ஒளித்துக் கொண்டேன்' (ஆதியாகமம்:3:10) என்று கூறுகிறார்.
ஒரு மனிதருக்குள் பயம் வரும் போது, அவனது திறமைகள், சாமர்த்தியம், சிந்திக்கும் திறன் எல்லாம் குறைந்து போகிறது. ஒரு தேவ மனிதர் இப்படியாக கூறுகிறார் 'பயம் வந்து அடிக்கடி கதவை தட்டியது. பயம் வந்து கதவை தட்டும் போதெல்லாம் என்னுடைய நம்பிக்கையை கதவின் பக்கம் அனுப்பினேன். எனது நம்பிக்கை சென்று யார் கதவை தட்டுகிறது? எனக் கேட்டு கதவை திறந்த போது பயத்தை காணவில்லை' எனக் கூறினார்.
'மனிதர்களை குறித்த பயத்தினால் ஓடி ஒளிந்து கொள்கிறோம். கடன் கொடுத்தவனை கண்டு ஓடி ஒளிகிறோம்'. வேதத்தில் (2 ராஜாக்கள் 6:16,17) வாசிக்கும் போது எலிசா இருந்த மலையை சுற்றிலும் சிரியா தேசத்து ராணுவம் சூழ்ந்து கொண்டது. அதை கண்ட எலிசாவின் வேலைக்காரன் பயந்து, 'ஐயோ என் ஆண்டவனே, என்ன செய்வோம்' என்று அலறினான். அப்பொழுது எலிசா அவனை நோக்கி, 'பயப்படாதே அவர்களோடு இருப்பவர்களை பார்க்கிலும் நம்மோடு இருப்பவர்கள் அதிகம்' என்றான்.
தனது வேலைக்காரனின் கண்களை திறக்கும் படியாக ஆண்டவரிடம் எலிசா ஜெபித்தார். வேலைக்காரனின் கண்கள் திறக்கப்பட்ட போது, எலிசாவை சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும், ரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்.
இதை வாசிக்கிற நண்பர்களே, நம்முடைய வாழ்க்கையில் பல சமயங்களில் பயம் நம் கண்களை மூடி விடுகிறது. நம்மை பல எதிரிகள் சூழ்ந்திருக்கலாம். ஆண்டவரின் பார்வையில் நாம் நேர்மையாக, உண்மையாக வாழ்ந்தால் நாம் மனிதனுக்கு பயப்படத் தேவையில்லை.
கடவுளுக்கு பயப்படுகிறவன் யாருக்கும் பயப்படத் தேவையில்லை. கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார். நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான்? (சங்கீதம் 118:6) என்று வசனம் கூறுகிறது.
மனிதர்களை குறித்த பயம், எதிர்காலத்தை குறித்த பயம், மரணத்தை குறித்த பயம், கடன் பிரச்சினையை குறித்த பயம், படிப்பு குறித்த பயம், வேலையை குறித்த பயம், பிள்ளைகளை குறித்த பயம். இப்படி ஏதாவது ஒரு விதத்தில் பயந்து கொண்டு வாழ்கிறோம்.
ஒரு முறை ஒரு சிறுவனும், தகப்பனுமாக சிறுவனின் பாட்டி வீட்டுக்கு சென்றார்கள். அங்கே அதிக நேரம் ஆகிவிட்டது. திரும்பி வரும் போது இருளாகி விட்டது. மூன்று மைல் தூரம் அடர்ந்த காட்டின் நடுவிலே தகப்பனும் மகனுமாக நடந்து வந்தார்கள். எங்கும் தவளைகளின் சத்தம், வெட்டுக்கிளிகளின் சத்தம் பயத்தை கொண்டு வந்தது.
அடர்ந்த மரங்கள் பார்ப்பதற்கு பயமாக இருந்தது. அந்த சூழ்நிலையில் பயந்து போன சிறுவன் தகப்பனிடம், `நம்மை ஏதாவது பிடித்து விடுமோ?' என்று பயத்தோடு கேட்டான். தகப்பன் சிறுவனைப் பார்த்து பயப்பட ஒன்றுமே இல்லை என்று கூறி, சிறுவனின் கரங்களை பிடித்துக் கொண்டார்.
மகனே உனக்கு எந்த வித தீங்கும் நேரிட நான் விடமாட்டேன் என்று அன்புடன் கூறினார். அதன்பிறகு சிறுவனின் பயம் அவனை விட்டு மாறினது. அதுபோல் நம்முடைய வாழ்க்கையில் காணப்படுகிற பயங்கள் மாறும் படியாக கடவுள் நம் கரங்களைப் பிடிக்க ஒப்பு கொடுப்போம்.
இயேசு பிறந்ததை கர்த்தருடைய தூதன் அறிவிப்பதற்காக மேய்ப்பர்களிடம் வந்து நின்றான். கர்த்தருடைய மகிமை அவர்களை சுற்றிலும் பிரகாசித்தது. அவர்கள் மிகவும் பயந்தார்கள். தேவதூதன் அவர்களை நோக்கி 'இதோ எல்லா ஜனத்திற்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் ரட்சகர் பிறந்திருக்கிறார்'.
இதைக் கேட்ட மேய்ப்பர்கள் பிள்ளையை கண்டு சந்தோஷப்பட்டு அநேகரிடம் இயேசு பிறந்ததை பிரசித்தம் பண்ணினார்கள் (லூக்கா 2:7-11).
ஒரு முறை இயேசு கடல்மேல் நடந்து வருவதை பேதுரு கண்டபோது, தானும் கடல் மேல் நடக்க வேண்டும் என விரும்பினான். ஆண்டவர் அனுமதித்தார். பேதுரு கடல் மேல் நடக்க ஆரம்பித்தான். அலை களைப் பார்த்தபோது பயப்பட்டான். பயப்பட்டவுடன் தண்ணீருக்குள் மூழ்க ஆரம்பித்தான்.
இதை வாசிக்கிற நீங்களும் எங்கே பயப்பட ஆரம்பிக்கின்றாயோ, அங்கே மூழ்க ஆரம்பிப்பாய். எவ்வளவு பெரிய பிரச்சினை வந்தாலும் பயப்படாதே, நம் கடவுள் பெரியவர். பேதுருவை கரம்பிடித்து தூக்கினது போல, பிரச்சினைகளில் நீ மூழ்கிவிடாதபடி உன் கரம் பிடித்து தூக்க வல்லவர். அதனால் பயப்படாமல் நம்பிக்கையாக விடாமுயற்சியுடன் ஆண்டவரை நோக்கிப் பார்ப்போம்.
- ஒவ்வொரு புதுமையும் இனிமையே என்பது அரபி பழமொழி ஆகும்.
- புது நட்பை தேர்வு செய்வதில் தவறில்லை.
மனிதன் புதுமைகளை அதிகம் விரும்புபவனாகவே இருக்கின்றான். அவனது மனமும் புதுமை விரும்பியாகவே மாறி வருகிறது. எங்கும் புதுமை, எதிலும் புதுமை எனும் அடுத்த கட்டத்திற்கு மனிதனின் வாழ்வு நகர்ந்து கொண்டே செல்கிறது.
'ஒவ்வொரு புதுமையும் இனிமையே!' என்பது அரபி பழமொழி ஆகும். இதற்கேற்ப மனிதனின் தேடல்களும் புதிய கோணத்தில் நகர்ந்து செல்கிறது. மனிதன் புத்தம் புதுமைக்கு தமது மனதை நித்தமும் பறிகொடுத்து புதுமைப்பித்தனாக மாறிவிட்டான். இந்த வரிசையில் நட்பாக இருந்தாலும் புதுநட்பாக இருப்பதை தேர்வு செய்கின்றான்.
புது நட்பை தேர்வு செய்வதில் தவறில்லை. ஆனாலும், பழைய நட்பை முறிக்கக்கூடாது; பழைய நட்பை புறந்தள்ளக் கூடாது; பழைய நட்பை 'அம்போ' என்று கை கழுவக்கூடாது; பழைய நட்பை அனாதையாக கைவிடக் கூடாது; பழைய நட்பை புறக்கணிக்கக்கூடாது.
புது நட்புக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை பழைய நட்புக்கும் கொடுக்க வேண்டும். புது நட்புக்குக் கொடுக்கும் அதீத வரவேற்பை பழைய நட்புக்கும் கொடுக்க வேண்டும்.
பழைய நட்புகளைப் பேணுவதும் இறைநம்பிக்கையின் ஓர் அடையாளம்தான் ; இறைநம்பிக்கையின் ஓர் பகுதிதான்.
ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்: 'என் வீட்டில் நபி (ஸல்) அவர்கள் இருந்த சமயம் ஒரு மூதாட்டி வந்தார். நபி (ஸல்) அவர்கள் 'நீர் யார்?' என்று கேட்க, 'நான் தான் ஜூஸாமா மதனிய்யா' என்று கூறினார். 'நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?, எங்களுக்குப் பிறகு (நாங்கள் மக்காவில் இருந்து மதீனாவிற்கு வந்த பிறகு) உங்கள் நிலைமை எப்படி இருந்தது?' என நபி (ஸல்) அவர்கள் வினவ, 'அல்லாஹ்வின் தூதரே! என் தாயும், தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நாங்கள் யாவரும் நலமாக உள்ளோம்' என்று கூறிவிட்டு அந்த மூதாட்டி சென்றுவிட்டார்.
'அல்லாஹ்வின் தூதரே! அந்த மூதாட்டிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து, அவரின் பக்கம் இந்தளவு கவனம் செலுத்தினீர்களே' என நான் வியப்புடன் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'இந்த மூதாட்டி, கதீஜா (ரலி) அவர்களின் வாழ்நாட்களில் நம்மிடம் வரப்போக இருப்பார். பழைய நட்பு களைப் பேணுவது இறைநம்பிக்கையின் அடையாள மாகும்' என நபி (ஸல்) கூறினார்கள்'. (நூல்: ஹாகிம்)
நபி (ஸல்) அவர்களின் அன்பு மனைவி அன்னை கதீஜா (ரலி) மரணித்த பிறகும், மனைவியின் நட்பாளர்களிடமும் நபி (ஸல்) அவர்கள் நலமாகவும், நளினமாகவும், நட்பாகவும் நடந்து கொண்டார்கள்.
பழைய நட்புகளை பேணுவதும் இறைநம்பிக்கையின் ஒரு பகுதியே. ஒருவரின் இறப்பிற்கு பிறகும் அவரின் நட்பாளர்களிடம் நாம் நமது நட்பை கைவிடக்கூடாது. பழைய நட்பையும் பசுமை மாறாமல் பாதுகாத்திட வேண்டும்.
'அபூ உஸைத் மாலிக் பின் ரபீஆ ஸாதி (ரலி) அறிவிக்கிறார்: நாங்கள் நபி (ஸல்) அவர்களின் சமூகத்தில் அமர்ந்திருந்த சமயம், பனூஸலமா கோத்திரத்தைச் சார்ந்த ஒருவர் அங்கு வந்து, 'அல்லாஹ்வின் தூதரே, எனது பெற்றோரின் மரணத்திற்குப் பின் அவர்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்ள ஏதேனும் வழியுள்ளதா?' என்று கேட்டார்.
'ஆம் அவர்களுக்காக பிரார்த்திப்பது, அவர்களுக்காக இறைவனிடம் பாவமன்னிப்பு தேடுவது, அவர்களின் மரணத்திற்குப் பின் அவர்களுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, அவர்களுக்கு யாருடன் உறவுமுறை உள்ளதோ அவர்களுடன் அழகிய முறையில் நடப்பது, அவர்களின் நண்பர்களைக் கண்ணியப் படுத்துவது ஆகியவை பெற்றோருடன் அழகிய முறையில் நடப்பதாகும்' என நபி (ஸல்) பதில் கூறினார்கள். (நூல்: அபூதாவூத்)
காலம் சென்ற வயதான பெற்றோரின் உறவினர்களும், அவர்களின் நண்பர்களும் வயதில் மூத்த பழைய காலத்தைச் சார்ந்த பழைய ஆட்களாக இருப்பார்கள். பெற்றோர் பேணிய பழைய உறவுகளையும், பழைய நட்புகளையும் அவர்களுக்குப் பின் நாம்தான் பசுமை மாறாமல் பேணி நடக்கவேண்டும்.
'ஆயிஷா (ரலி) கூறுவதாவது: கதீஜா (ரலி) மீது நான் ரோஷம் கொண்டதைப் போல் நபி (ஸல்) அவர்களின் துணைவியரின் வேறெவரின் மீதும் நான் ரோஷம் கொண்டதில்லை. ஏனெனில், கதீஜா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் அடிக்கடி நினைவு கூர்வதை நான் கேட்டு வந்தேன். என்னை மணப்பதற்கு மூன்றாண்டு களுக்கு முன்பே கதீஜா (ரலி) இறந்து விட்டார்.
இன்றும் நபி (ஸல்) அவர்கள் ஆட்டை அறுத்து அதைப் பல துண்டுகளாகப் பிரித்து கதீஜா (ரலி) அவர்களின் தோழிகளிடையே அன்பளிப்பாகப் பங்கிட்டுவிடுவார்கள்'. (நூல்: புகாரி)
பழைய நட்புகளை பேணி நடப்பதும் இறை வணக்கம் தான், இறை நம்பிக்கையும்தான். எனவே நட்புகளை பேணுவோம். நலம் பெறுவோம்.
- வீட்டையும், குடும்பத்தையும் காக்கும் தெய்வம் தர்மசாஸ்தா.
- சிம்மத்தில் அமர்ந்திருக்கும் சாஸ்தாவை வழிபட்டால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.
தேவர்களும், அசுரர்களும் தேவாமிர்தம் பெறுவதற்காகவும்; துர்வாச முனிவரின் சாபத்தால் இந்திரன் இழந்த செல்வங்களை பெறுவதற்காகவும்; திருபாற்கடலைக் கடைந்தார்கள். அதில் இருந்து வெளிப்பட்ட அமிர்தத்தை முதலில் அரக்கர்கள் அபகரித்துக்கொண்டு, தேவர்களுக்கு இல்லாமல் செய்ய முயற்சித்தனர். இதனால் தேவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் முறையிட, அவர்மோகினி என்ற பெண் உருவம் எடுத்து, அவர்களை மயக்கி, தேவர்களுக்கு அமிர்தத்தை வழங்கினார்.
மகாவிஷ்ணுவின் இந்த மோகினி அவதாரத்தை சாதகமாக்கி, விதி வசத்தால் நிகழ இருக்கும் மகிஷி சம்காரத்தை நிகழ்த்த சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் முடிவு செய்தனர். ஏனெனில் மகிஷி, இரண்டு ஆண்களுக்குப் பிறந்த பிள்ளையால்தான் தனக்கு மரணம் நிகழ வேண்டும் என்று வரம் பெற்றிருந்தாள். அதன் அடிப்படையில் பரமேஸ்வரனின் சக்தியும், மோகினியாக உருவெடுத்திருந்த மகாவிஷ்ணுவின் சக்தியும் இணைந்ததால், பிறந்தவர் ஹரிஹரபுத்திரன் என்று அழைக்கப்படும் தர்ம சாஸ்தா என்று விஷ்ணு புராணம் கூறுகிறது.
பஸ்மாசுரன் என்னும் அசுரன் பெரும் தவம் செய்து, `யார் தலையில் நான் கை வைத்தாலும், அவர்கள் சாம்பலாக வேண்டும் என்ற வரத்தினை சிவபெருமானிடம் கேட்டான். அவரும் அப்படியே வழங்கினார். அந்த வரத்தை சோதிக்க நினைத்த பஸ்மாசுரன், சிவபெருமானின் தலையிலேயே கைவைக்க நினைத்தான். இதனால் சிவபெருமான் செய்வதறியாது திகைத்தார்.
அப்போது மகாவிஷ்ணு, மோகினி என்ற பெண் வடிவம் எடுத்து வந்து, பஸ்மாசுரனுடன் நடனம் ஆடினார். ஒரு கட்டத்தில் மோகினி தன்னுடைய தலையில் கை வைத்து நடனம் ஆட, பஸ்மாசுரனும் தன் தலையில் கை வைத்தான். இதனால் அவனே சாம்பலாகிப் போனான். அப்போது மோகினி மீது, பரமேஸ்வரன் மோகம் கொள்ள ஹரிஹர புத்திரனான அய்யப்பன் அவதரித்தார் என்று பத்ம புராணம் சொல்கிறது.
விஷ்ணு புராணம், பத்ம புராணம் இரண்டும் வேறு வேறு கதைகளைச் சொன்னாலும், அவை இரண்டும் ஈசன், விஷ்ணு சக்தியால் பிறந்தவர் தர்ம சாஸ்தா என்பதை உறுதிப்படுத்துகிறது.
தர்ம சாஸ்தாவை தந்தையாகிய சங்கரனும், தாயாகிய நாராயணமூர்த்தியும் பூலோகத்தைக் காவல் புரியும் காவல் தெய்வமாக (ஐயனாராக) ஆசீர்வதித்து, பிரம்மாவிடம் ஒப்படைத்தார்கள். குறுகிய காலத்திலேயே சகல சாஸ்த்திரங்களையும் பிரம்மாவிடம் கற்று 'மஹா சாஸ்த்ரு' என்ற நாமத்தையும் பெற்றார்.
தர்ம சாஸ்தா வேறு, ஐயப்பன் வேறு அல்ல என்றாலும், தர்ம சாஸ்தாவின் திரு அவதாரமே ஐயப்பன். தர்மசாஸ்தா தர்மத்தை நிலை நாட்டுவதற்காகத் தோன்றியவர். சாஸ்தாவின் வரலாறு மிகப் புனிதமானது. அவர் எட்டு அவதாரங்கள் எடுத்ததாக சொல்லப்படுகிறது.
சம்மோஹன சாஸ்தா: வீட்டையும், குடும்பத்தையும் காக்கும் தெய்வம் இவர்.
கல்யாண வரத சாஸ்தா: தேவியருடன் காட்சி தரும் இவரை வழிபட்டால், திருமணத்தடைகள், தோஷங்கள் விலகும்.
வேத சாஸ்தா: சிம்மத்தில் அமர்ந்திருக்கும் இவரை வழிபட்டால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.
ஞான சாஸ்தா: தட்சிணா மூர்த்தியைப் போன்ற ஞானகுருவான இவரை வழிபட்டால் உள்ளார்ந்த ஞானம் சிறக்கும்.
பிரம்ம சாஸ்தா: குழந்தைச் செல்வம் பெற இவரை வழிபடலாம்
மஹா சாஸ்தா: வாழ்வில் முன்னேற இவரை வழிபடலாம்.
வீர சாஸ்தா: ருத்ர மூர்த்தியான இவரை வணங்குவதால் தீமைகள் அழியும்.
தர்ம சாஸ்தா: இவரே அய்யப்பனின் திரு அவதாரம். சபரிமலையில் காட்சி தருபவர் இவரே. இவரின் அவதார நோக்கமே மஹிஷி மர்த்தனம் ஆகும். மேலும் அவர் தன்னுடைய பக்தர்களுக்காக, ஆண்டுதோறும் சபரிமலையில் உள்ள பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவமாக காட்சி தருகிறார்.
- 11-ந்தேதி அனுமன் ஜெயந்தி.
- 15-ந்தேதி தைப்பொங்கல்.
9-ந்தேதி (செவ்வாய்)
* மாத சிவராத்திரி.
* மதுரை செல்லத்தம்மன் சப்பரத்தில் புறப்பாடு.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள், கள்ளர் திருக்கோலமாய் இரவு சந்திர பிரபையில் பவனி.
* சமநோக்கு நாள்.
10-ந்தேதி (புதன்)
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள், கண்ணன் திருக்கோலம், மாலை தந்தப் பரங்கி நாற்காலியில் பவனி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.
* கீழ்நோக்கு நாள்.
11-ந்தேதி (வியாழன்)
* அனுமன் ஜெயந்தி.
* அமாவாசை.
* மதுரை செல்லத்தம்மன் காலை சிம்மாசனத்தில் புறப்பாடு, இரவு பட்டாபிஷேகம், புஷ்ப பல்லக்கில் பவனி.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் இரவு தங்க சேஷ வாகனத்தில் வீதி உலா.
* கீழ்நோக்கு நாள்.
12-ந்தேதி (வெள்ளி)
* மதுரை செல்லத்தம்மன் கோவிலில் ரத உற்சவம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
13-ந்தேதி (சனி)
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் வெள்ளி பூத வாகனத்தில் புறப்பாடு.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள், தங்கப் பல்லக்கில் வீற்றிருந்து அருள்காட்சி தருதல்.
* உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாசப் பெருமாள் புறப்பாடு.
* சாத்தூர் வேங்கடேசப்பெருமாள் தோளுக்கினியானில் பவனி.
* மேல்நோக்கு நாள்.
14-ந்தேதி (ஞாயிறு)
* போகிப் பண்டிகை.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் தைப்பூச உற்சவம் ஆரம்பம்.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் அன்ன வாகனத்தில் வீதி உலா.
* கீழ்திருப்பதி கோவிந்த ராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சனம்.
* மேல்நோக்கு நாள்.
15-ந்தேதி (திங்கள்)
* தைப் பொங்கல்.
* உத்தராயன புண்ணிய காலம் தொடக்கம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், கல்யானைக்கு கரும்பு அளித்த லீலை.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* மேல்நோக்கு நாள்.
- வாமன அவதாரத்தில் உலகை அளந்தவனே! உன் திருவடிகளை வணங்குகிறோம்.
- திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே!
திருப்பாவை
பாடல்
அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி,
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி,
பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி,
கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி,
குன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி,
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி,
என்றென்று உன்சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம், இரங்கேலோ ரெம்பாவாய்
விளக்கம்
வாமன அவதாரத்தில் உலகை அளந்தவனே! உன் திருவடிகளை வணங்குகிறோம். சீதையை மீட்க இலங்கை சென்று ராவணன் உள்ளிட்ட அரக்கர்களை அழித்த உன் திறமையை போற்றுகிறோம்! சக்கர வடிவத்தில் உன்னை கொல்வதற்கு வந்த சகடாசுரனை கொன்றாய். உன் புகழை வணங்குகிறோம். வண்டு வடிவில் வந்த வத்சாசூரனை தடியால் அடித்துக்கொன்றாய். உன் திருவடியை வணங்குகிறோம். கோவர்த்தனம் எனும் மலையை குடையாக்கி கோகுலத்தை காப்பாற்றினாய். பகைவர்களை வெற்றி கொள்ளும் உன் வேலையும் போற்றி வணங்குகிறோம். உன் பெருமைக்குரிய செயல்களை எல்லாம் எடுத்துக் கூறி எங்கள் நோன்புக்குரிய வேண்டுதல்களை பெற்றுக்கொள்ள வந்துள்ளோம். உன் அருளைப் பெற வந்த எங்களுக்கு மனம் இறங்கி அருள்புரிய வேண்டும்.
திருவெம்பாவை
பாடல்
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே
விளக்கம்
திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே! பொழுது விடிந்தது! உன்னை வணங்குவதற்காக வீணை மற்றும் யாழ் கருவிகளை இசைக்கும் இசைக்கலைஞர்கள் ஒரு பக்கம் உள்ளனர். வேத மந்திரங்கள் ஒதுவோரும், தமிழ் தோத்திரப் பாடல்கள் பாடுவோரும், மலர் மாலையை கையில் ஏந்தி கொண்டு இருப்பவர்களும் உன் சிறப்பை பாடிக்கொண்டு உள்ளனர். உன்னை தொழுபவர்களும், அருள் வேண்டி அழுபவர்களும், துன்பத்தில் துவண்டவர்களும், நீயே சரணாகதி என்று தலையில் கைவைத்து வணங்குபவர்களும் உன்கோவிலில் சூழ்ந்து நிற்கிறார்கள். இவர்களது பக்தியின் முன் நான் சாதாரணமானவன். அப்படிப்பட்ட என்னையும் ஆட்கொண்டு அருள்பவனே! உனது திருப்பள்ளியில் இருந்து எழுந்து அருள்புரிவாயாக.
- தீர்க்கசுமங்கலியாக வாழ்வர் என்பது நம்பிக்கை.
- ஞாயிறு முழுதும் அம்பிகையை சந்தனக்காப்பு அலங்காரத்தில் தரிசிக்கலாம்.
அம்பிகை மங்களாம்பிகை தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி அருளுகிறாள். இவளே இங்கு வரப்பிரசாதியாவாள். இவளது பெயரிலேயே கோவிலும் அழைக்கப்படுகிறது. அம்பிகையின் வலது கையில் எப்போதும் தாலிக்கயிறு அணிவிக்கப்பட்டிருக்கிறது. அம்பிகையை வழிபடும் பெண்களுக்கு, இதையே பிரசாதமாக கொடுக்கின்றனர். இதனால் திருமணமாகாத பெண்களுக்கு நல்ல வரன் அமையும், திருமணமான பெண்கள் நீண்டகாலம் தீர்க்கசுமங்கலியாக வாழ்வர் என்பது நம்பிக்கை.
இந்த அம்பிகை தன்னை வேண்டுபவர்களுக்கு தாலி தரும் தாயாக இருந்து அருளுகிறாள். சுமங்கலிப்பெண்கள், அம்பிகையிடம் இருந்து தாலியை வாங்கி தங்கள் கழுத்தில் அணிந்து கொண்டு, ஏற்கனவே அணிந்திருக்கும் தாலியை அம்பாள் பாதத்தில் வைத்து பூஜை செய்கின்றனர். இதனால் பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
நவராத்திரியின்போது கோவில்களில் அம்பாள் உற்சவர் சிலைக்கு ஒவ்வொருநாளும் ஒவ்வொரு அலங்காரங்கள் செய்வர். ஆனால், இங்கு மூலஸ்தானத்தில் இருக்கும் அம்பிகைக்கே அலங்காரம் செய்யப்படுகிறது.
அப்போது இவளது சிலைக்கு வஸ்திரம், ஆபரணங்கள் என எதுவும் சாத்தப்படாமல் சந்தனக்காப்பு மட்டும் செய்யப்படுகிறது. அந்த சந்தனத்திலேயே பட்டுத் துணிகளுக்கு பயன்படுத்தப்படும் வண்ண சாயங்களை சேர்த்து வஸ்திரம் மற்றும் ஆபரணங்கள் அணிந்ததைப்போல அலங்கரிக்கின்றனர்.
சந்தனத்திலேயே, இவ்வாறு அம்பிகை சர்வ அலங்காரத்துடன் காட்சி தருவதை காண கண் கோடி வேண்டும். ஒவ்வொரு வருடமும் தை மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையன்று முழுதும் அம்பிகையை சந்தனக்காப்பு அலங்காரத்தில் தரிசிக்கலாம். விசேஷ நாட்கள் தவிர மற்ற நாட்களில் பக்தர்கள் இந்த அலங்காரம் செய்யலாம்.
கோவில் அமைப்பு
கிழக்கு திசை நோக்கியுள்ள ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜகோபுரத்துடனும், இரண்டு பிரகாரங்களுடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது. இத்தலத்தின் தல விருட்சம் வடமொழியில் கோங்கிலவம் எனப்படும் வெள்ளெருக்கு மரம். முன்மண்டபத்தில் அம்பாள் மங்களநாயகியின் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
கருவறையில் கோவில் கொண்டிருக்கும் சிவபெருமான் நீண்டுயர்ந்த பாண வடிவில் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சந்திரசேகரர், மயில் வாகனர், நால்வர், பிரதோஷ நாயகர் உற்சவ மூர்த்திகள் உள்ளனர். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, ரிஷபாரூடர், பிரம்மா, துர்க்கைக்கு சந்நிதிகள் உள்ளன. உள் சுற்றில் விநாயகர், ஆறுமுகர், கஜலட்சுமி, பைரவர் சந்நிதிகளும், நடராஜ சபையும் உள்ளன.
சிவன் சன்னதிக்குச் செல்லும்போது முன் மண்டபத்தில் மகாலட்சுமி, சரஸ்வதி இருவரும் துவாரபாலகிகள் போல இருபுறமும் காட்சி தருகின்றனர். இவ்விருவரும் இரு கால்களையும் மடக்கி பத்மாசனத்தில் அமர்ந்திருப்பது விசேஷமான தரிசனம். இதில் சரஸ்வதி வீணையில்லாமல் காட்சி தருகிறார்.
பிரகாரத்திலுள்ள நடராஜர் சன்னதியில் அடுத்தடுத்து இரண்டு நடராஜர்கள், சிவகாமி அம்பிகையுடன் இருக்கின்றனர். இதில் பிரதான நடராஜருக்கு அருகில் இருக்கும் மற்றொரு நடராஜரின் பாதத்திற்கு கீழே, பூதகணம் ஒன்று சுவாமியின் நடனத் திற்கேற்ப இசைக்கருவி வாசித்தபடி இருக்கிறது.
பிராணநாதர் கோவில் பிரகாரத்தில் சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என இரு தீர்த்தங்களும் அருகருகில் இருக்கிறது. சிவனது இரண்டு கண்களாக இருக்கும் சூரிய, சந்திரர்களே இங்கு சிவனை குளிர் விப்பதற்காக தீர்த்தமாக இருப்பதாக சொல்வதுண்டு. சுவாமிக்கு இந்த இரு தீர்த்தத்தையும் சேர்த்தே அபிஷேகம் செய்கின்றனர். சிவன் சன்னதி கோஷ்டத்தில் விஷ்ணு துர்க்கை இருக்கிறாள்.
இதுதவிர, சிவதுர்க்கை சோமாஸ்கந்தர் சன்னதியின் பின்புறத்தில் காட்சி தருகிறாள். இவ்விருவரின் பாதங்களுக்கு கீழேயும் மகிஷாசுரன் கிடையாது. காவேரி, சிவன் கோஷ்டத்தில் துர்க்கைக்கு அடுத்து சிலை வடிவில் இருக்கிறாள். ஆடி பதினெட்டாம் பெருக்கின்போது இவளுக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது.
காளி, பிரம்மா, விஷ்ணு, அகத்தியர். சூரியன், அம்பாள் ஆகாசவாணி , பூமாதேவி ஆகியோரால் பூஜிக்கப்பட்ட தலம். இங்கு முருகன் சண்முகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
சிறப்புக்கள்
அடுத்தடுத்து இரண்டு நடராஜர்கள், சிவகாமி அம்பிகையுடன் இருக்கின்றனர். நவகிரக தோஷம், பெண்கள் திருமண பாக்கியம்,குழந்தை பாக்கியம், சுமங்கலி பாக்கியம், சத்ருபயம்(எதிரிகள் பயம்) நீக்கம்பெறல், திருட்டுபயம் விடுபடுதல் ஆகியவற்றுக்காக பக்தர்கள் பெருமளவில் இத்தலத்தில் வழிபாடு செய்கிறார்கள்.
- முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
- குரங்கனி முத்துமாலையம்மன் பவனி.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மார்கழி-24 (செவ்வாய்க்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: திரயோதசி இரவு 9.14 மணி வரை பிறகு சதுர்த்தசி.
நட்சத்திரம்: கேட்டை இரவு 8.17 மணி வரை பிறகு மூலம்
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று பிரதோசம். மாத சிவராத்திரி. சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். மதுரை செல்லாத்தம்மன் சப்பரத்தில் பவனி. குரங்கனி முத்துமாலையம்மன் பவனி. சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர். கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆக்கம்
ரிஷபம்-செலவு
மிதுனம்-நற்செயல்
கடகம்-போட்டி
சிம்மம்-தெளிவு
கன்னி-வரவு
துலாம்- முயற்சி
விருச்சிகம்-தாமதம்
தனுசு- சந்தோஷம்
மகரம்-இன்பம்
கும்பம்-சிறப்பு
மீனம்-கடமை






