search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "disobedience"

    • மனிதர்களை குறித்த பயத்தினால் ஓடி ஒளிந்து கொள்கிறோம்.
    • உண்மையாக வாழ்ந்தால் நாம் பயப்படத் தேவையில்லை.

    தேவன் இந்த உலகில் மனிதனை படைத்த போது, பயம் என்றால் என்னவென்று தெரியாத நிலையில் தான் உருவாக்கினார். ஆனால் மனிதனுக்கு `கீழ்ப்படியாமை' என்ற பாவம் வந்தபோது, பயமும் வந்துவிட்டது. ஆதாம் ஆண்டவரிடத்தில், `நான் தேவரீருடைய சத்தத்தை கேட்டு பயந்து ஒளித்துக் கொண்டேன்' (ஆதியாகமம்:3:10) என்று கூறுகிறார்.

    ஒரு மனிதருக்குள் பயம் வரும் போது, அவனது திறமைகள், சாமர்த்தியம், சிந்திக்கும் திறன் எல்லாம் குறைந்து போகிறது. ஒரு தேவ மனிதர் இப்படியாக கூறுகிறார் 'பயம் வந்து அடிக்கடி கதவை தட்டியது. பயம் வந்து கதவை தட்டும் போதெல்லாம் என்னுடைய நம்பிக்கையை கதவின் பக்கம் அனுப்பினேன். எனது நம்பிக்கை சென்று யார் கதவை தட்டுகிறது? எனக் கேட்டு கதவை திறந்த போது பயத்தை காணவில்லை' எனக் கூறினார்.

    'மனிதர்களை குறித்த பயத்தினால் ஓடி ஒளிந்து கொள்கிறோம். கடன் கொடுத்தவனை கண்டு ஓடி ஒளிகிறோம்'. வேதத்தில் (2 ராஜாக்கள் 6:16,17) வாசிக்கும் போது எலிசா இருந்த மலையை சுற்றிலும் சிரியா தேசத்து ராணுவம் சூழ்ந்து கொண்டது. அதை கண்ட எலிசாவின் வேலைக்காரன் பயந்து, 'ஐயோ என் ஆண்டவனே, என்ன செய்வோம்' என்று அலறினான். அப்பொழுது எலிசா அவனை நோக்கி, 'பயப்படாதே அவர்களோடு இருப்பவர்களை பார்க்கிலும் நம்மோடு இருப்பவர்கள் அதிகம்' என்றான்.

    தனது வேலைக்காரனின் கண்களை திறக்கும் படியாக ஆண்டவரிடம் எலிசா ஜெபித்தார். வேலைக்காரனின் கண்கள் திறக்கப்பட்ட போது, எலிசாவை சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும், ரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்.

    இதை வாசிக்கிற நண்பர்களே, நம்முடைய வாழ்க்கையில் பல சமயங்களில் பயம் நம் கண்களை மூடி விடுகிறது. நம்மை பல எதிரிகள் சூழ்ந்திருக்கலாம். ஆண்டவரின் பார்வையில் நாம் நேர்மையாக, உண்மையாக வாழ்ந்தால் நாம் மனிதனுக்கு பயப்படத் தேவையில்லை.

    கடவுளுக்கு பயப்படுகிறவன் யாருக்கும் பயப்படத் தேவையில்லை. கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார். நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான்? (சங்கீதம் 118:6) என்று வசனம் கூறுகிறது.

    மனிதர்களை குறித்த பயம், எதிர்காலத்தை குறித்த பயம், மரணத்தை குறித்த பயம், கடன் பிரச்சினையை குறித்த பயம், படிப்பு குறித்த பயம், வேலையை குறித்த பயம், பிள்ளைகளை குறித்த பயம். இப்படி ஏதாவது ஒரு விதத்தில் பயந்து கொண்டு வாழ்கிறோம்.

    ஒரு முறை ஒரு சிறுவனும், தகப்பனுமாக சிறுவனின் பாட்டி வீட்டுக்கு சென்றார்கள். அங்கே அதிக நேரம் ஆகிவிட்டது. திரும்பி வரும் போது இருளாகி விட்டது. மூன்று மைல் தூரம் அடர்ந்த காட்டின் நடுவிலே தகப்பனும் மகனுமாக நடந்து வந்தார்கள். எங்கும் தவளைகளின் சத்தம், வெட்டுக்கிளிகளின் சத்தம் பயத்தை கொண்டு வந்தது.

    அடர்ந்த மரங்கள் பார்ப்பதற்கு பயமாக இருந்தது. அந்த சூழ்நிலையில் பயந்து போன சிறுவன் தகப்பனிடம், `நம்மை ஏதாவது பிடித்து விடுமோ?' என்று பயத்தோடு கேட்டான். தகப்பன் சிறுவனைப் பார்த்து பயப்பட ஒன்றுமே இல்லை என்று கூறி, சிறுவனின் கரங்களை பிடித்துக் கொண்டார்.

    மகனே உனக்கு எந்த வித தீங்கும் நேரிட நான் விடமாட்டேன் என்று அன்புடன் கூறினார். அதன்பிறகு சிறுவனின் பயம் அவனை விட்டு மாறினது. அதுபோல் நம்முடைய வாழ்க்கையில் காணப்படுகிற பயங்கள் மாறும் படியாக கடவுள் நம் கரங்களைப் பிடிக்க ஒப்பு கொடுப்போம்.

    இயேசு பிறந்ததை கர்த்தருடைய தூதன் அறிவிப்பதற்காக மேய்ப்பர்களிடம் வந்து நின்றான். கர்த்தருடைய மகிமை அவர்களை சுற்றிலும் பிரகாசித்தது. அவர்கள் மிகவும் பயந்தார்கள். தேவதூதன் அவர்களை நோக்கி 'இதோ எல்லா ஜனத்திற்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் ரட்சகர் பிறந்திருக்கிறார்'.

    இதைக் கேட்ட மேய்ப்பர்கள் பிள்ளையை கண்டு சந்தோஷப்பட்டு அநேகரிடம் இயேசு பிறந்ததை பிரசித்தம் பண்ணினார்கள் (லூக்கா 2:7-11).

    ஒரு முறை இயேசு கடல்மேல் நடந்து வருவதை பேதுரு கண்டபோது, தானும் கடல் மேல் நடக்க வேண்டும் என விரும்பினான். ஆண்டவர் அனுமதித்தார். பேதுரு கடல் மேல் நடக்க ஆரம்பித்தான். அலை களைப் பார்த்தபோது பயப்பட்டான். பயப்பட்டவுடன் தண்ணீருக்குள் மூழ்க ஆரம்பித்தான்.

    இதை வாசிக்கிற நீங்களும் எங்கே பயப்பட ஆரம்பிக்கின்றாயோ, அங்கே மூழ்க ஆரம்பிப்பாய். எவ்வளவு பெரிய பிரச்சினை வந்தாலும் பயப்படாதே, நம் கடவுள் பெரியவர். பேதுருவை கரம்பிடித்து தூக்கினது போல, பிரச்சினைகளில் நீ மூழ்கிவிடாதபடி உன் கரம் பிடித்து தூக்க வல்லவர். அதனால் பயப்படாமல் நம்பிக்கையாக விடாமுயற்சியுடன் ஆண்டவரை நோக்கிப் பார்ப்போம்.

    ×