search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம்-27)
    X

    மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம்-27)

    • பகைவர்களை வெற்றிகொள்ளும் பராக்கிரமம்மிக்க கோவிந்தா!
    • உத்திரகோசமங்கையில் எழுந்தருளி இருக்கும் சிவனே!

    திருப்பாவை

    பாடல்

    கூடாரை வெல்லுஞ்சீர்க் கோவிந்தா! உன்தன்னை

    பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்;

    நாடு புகழும் பரிசினால் நன்றாக,

    சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே

    பாடகமே யென்றனைய பல்கலனும் யாம் அணிவோம்;

    ஆடை உடுப்போம்; அதன்பின்னே பாற்சோறு

    மூடநெய் பெய்து முழங்கை வழிவார

    கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

    விளக்கம்:

    பகைவர்களை வெற்றிகொள்ளும் பராக்கிரமம்மிக்க கோவிந்தா! உன்னை வாயாரப்பாடி அருள் பெறவந்தோம். எங்கள் நோன்புக்கு மகிழ்ந்து ஏதாவது பரிசு கொடுக்க விரும்புவாயானால் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறோம். நாட்டு மக்கள் புகழும்படியாக வளையல்களையும், காதில் அணியும் தோடுகள் மற்றும் பெண்கள் கால்களில் அணியும் சிலம்புகள், மேலும் பல அணிகலன்களையும் வழங்க வேண்டும். நோன்பு முடிந்த பிறகு நாங்கள் எல்லா அணிகலன்களையும், புத்தாடைகளையும் அணிந்து கொள்வோம். அதன்பிறகு பால் சோற்றில் நெய்யினை ஊற்றி அந்த நெய் முழங்கை வரை வழியும்படியாக கூடியிருந்து சாப்பிட்டு அனைவரும் மகிழ்ந்திருப்போம்.

    திருவெம்பாவை

    பாடல்

    அதுபழச் சுவையென அமுதென அறிதற்

    கரிதென எளிதென அமரரும் அறியார்

    இதுஅவன் திருவுரு இவன் அவன் எனவே

    எங்களை ஆண்டுகொண் டிங்கெழுந் தருளும்

    மதுவளர் பொழில்திரு வுத்தர கோச

    மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா எதுஎமைப் பணிகொளு மாறது கேட்போம்

    எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே

    விளக்கம்

    திருப்பெருந்துறை மன்னனே! சிவானந்தம் எப்படி இருக்கும்? அது பழச்சுவை போன்றது என்றும், அமுதத்தை போன்றது என்றும், அறிந்துகொள்ள எளிமையானது என்றும் சிவனடியார்கள் கூறுகிறார்கள். ஆனால் அதை தேவர்கள் கூட அறிய மாட்டார்கள். இப்படித்தான் நீ இருப்பாய். இதுதான் நான் என்று சொல்லும்படி எங்களுக்கு கருணையுடன் உணர்த்தினாய். தேன் நிறைந்த பூக்களை உடைய சோலைகள் சூழ்ந்த உத்திரகோசமங்கையில் எழுந்தருளி இருக்கும் சிவனே! நீ எங்களுக்கு இடும் கட்டளைகளை கூறினால் அதை ஏற்று நடப்போம். எம்பெருமானே பள்ளி எழுந்தருள்வாயாக!

    Next Story
    ×