என் மலர்
வழிபாடு
- சங்காபிஷேக தரிசனம் சங்கடங்களையெல்லாம் தீர்க்கும் என்பது ஐதீகம்.
- நாளை கார்த்திகை 2-வது சோம வாரமாகும்.
கார்த்திகை சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில், சிவாலயங்களில் சங்காபிஷேகம் நடைபெறும். இந்த சங்காபிஷேக தரிசனம் நம் வாழ்வில் இதுவரை இருந்த சங்கடங்களையெல்லாம் தீர்க்கும் என்பது ஐதீகம்.
ஒவ்வொரு சோமவாரமும் சிவனாருக்கு மிகவும் விசேஷமான நாள். சோமவாரம் என்றால் திங்கட்கிழமை என்று அர்த்தம். சோமன் என்றும் சோமேஸ்வரர் என்றும் இதனால்தான் சிவனாருக்கு திருநாமம் அமைந்தது.
சோமன் என்றால் திங்கள். திங்கள் என்றால் சந்திரன். அந்த சந்திரனையே பிறையென சூடிக்கொண்டிருக்கிறார் சிவபெருமான்.

அதனால்தான், ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவனாரை வணங்குவதும் வழிபடுவதும் மிகுந்த விசேஷமானது என்றும் வியக்கத்தக்க பலன்களை வழங்கவல்லது என்றும் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
அதேபோல், சனிக்கிழமை வருகிற பிரதோஷமும் திங்களன்று வருகிற பிரதோஷமும் மகத்தானவை. மும்மடங்கு பலன்களை வழங்குபவை என்றும் தெரிவிக்கிறார்கள்.
எந்த மாதமாக இருந்தாலும் சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை, சிவனாருக்கு சிறப்பான நாள். சிவபெருமானை வழிபடுவதற்கு அற்புதமான நாள். அதிலும் குறிப்பாக, கார்த்திகை மாதத்தின் திங்கட்கிழமை என்பது இன்னும் விசேஷத்துக்கு உரிய நாளாக போற்றப்படுகிறது. நாளை (திங்கட்கிழமை) கார்த்திகை 2-வது சோம வாரமாகும்.
கார்த்திகை மாதத்தின் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவபெருமானுக்கு சங்காபிஷேகம் செய்யப்படுகிறது. இது இன்றைக்கு நேற்றைக்கு என்றில்லாமல், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடத்தப்படுகிற அற்புதமான பூஜை.
தமிழகத்தில் பெரும்பான்மையான சிவாலயங்களில் கார்த்திகை சோமவாரத்தில்... சிவனாருக்கு, சிவலிங்கத் திருமேனிக்கு சங்கு கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. 108 சங்கால் அபிஷேகம், 1008 சங்கால் அபிஷேகம் என்றெல்லாம் நடைபெறுகிறது.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருச்சி திருவானைக்காவல் கோயில், திருச்சி திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில், தஞ்சை பெரியகோயில், மயிலாடுதுறை மயூரநாதர் கோயில் முதலான பெரும்பான்மையான சிவாலயங்களில் சங்காபிஷேகம் நடைபெறும்.
கார்த்திகை மாதத்தின் சோம வார நன்னாளில், சோமநாதருக்கு சோமேஸ்வரருக்கு தென்னாடுடைய சிவனாருக்கு குளிரக் குளிர சங்கால் அபிஷேகம் நடைபெறுவதை கண்குளிரத் தரிசியுங்கள். கவலைகளெல்லாம் இனி பறந்தோடும். துக்கங்களெல்லாம் இனி களையப்படும். சங்கடங்கள் அனைத்தையும் தீர்த்துவைப்பார் சிவனார்!

கார்த்திகை சோமவாரத்தில் சிவாலயங்களில் சங்கில் புனித நீர் நிரப்பி, அந்தத் தீர்த்தத்தைக் கங்கையாகப் பாவித்து சங்காபிஷேகம் செய்வது வழக்கம். சங்கு, செல்வத்தின் சின்னம். வற்றாத பொருள் செல்வம் வேண்டும் இல்லறத்தாரும், இறைவனின் அருட்செல்வம் வேண்டும் துறவிகளும், இந்தப் பூஜையை மேற்கொள்கிறார்கள்.
தேவர்கள் மற்றும் அசுரர்களால் பாற்கடல் கடையப்பட்டபோது வெளிப்பட்ட, பதினாறு வகையான தெய்வீகப் பொருட்களில் வலம்புரி சங்கும் ஒன்று. அந்த சங்குதான் மகாவிஷ்ணுவின் இடக்கையில் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு தெய்வமும் தங்களுக்கென்று தனித்தனியாக சங்குகளை வைத்திருப்பதாக ஆகமங்களும், புராணங்களும் விளக்குகின்றன.
மணி சங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு, திரி சங்கு என்ற எட்டு வகை சங்குகள் கடலில் உற்பத்தி ஆவதாகக் கூறப்படுகிறது. அதில் வலம்புரி சங்குக்கு மட்டும் விசேஷ சக்தி இருப்பதாகச் சாஸ்திரங்கள் சொல்கின்றன.
எந்த வீட்டின் பூஜை அறையில் வலம்புரி சங்கு இருந்தாலும் அங்கு திருமகள் வாசம் செய்வதாக நம்பிக்கையாகும். அந்த இல்லம் லட்சுமி கடாட்சம் பெற்றுச் சிறந்த இல்லமாக விளங்கும்.
எனவே, சங்கின் மகத்துவத்தை அனைவரும் அறிந்துகொண்டு, சோமவார திங்கட்கிழமையான நாளை விரதமிருந்து சிவாலயங்களில் நடைபெறும் சங்காபிஷேகத்தில் கலந்துகொண்டு எண்ணிலடங்கா பலன்களைப் பெறுவோம்.
- மகர விளக்கு பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
- நேற்று 87 ஆயிரத்து 216 பேர் மலை ஏறியுள்ளனர்.
திருவனந்தபுரம்:
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசன் காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
இந்த ஆண்டு மண்டல பூஜையை முன்னிட்டு கடந்த 15-ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்து தரிசனம் பெற்றுச் செல்கின்றனர். இதனை அதிகரிக்க முடிவு செய்த போது, பக்தர்கள் கூட்டம் குறைவாகவே உள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் விடுமுறை நாளான இன்று பக்தர்கள் அதிக அளவில் சபரிமலை வந்தனர். இன்று காலை 7 மணிக்குள் 18 ஆயிரத்து 648 பக்தர்கள் புனித படிகளில் ஏறியுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நேற்று 87 ஆயிரத்து 216 பேர் மலை ஏறியுள்ளனர். விடுமுறை தினமான இன்று கோவிலுக்கு வந்த பக்தர்கள் பலரும் தரிசனம் செய்தவுடன் உடனடியாக திரும்பிச் செல்ல தொடங்குவதாகவும், சன்னிதானத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் பம்பை மற்றும் நிலக்கல்லில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் வரும் நாட்களில் இந்த நெரிசல் மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
- தங்கத்தை தோண்டி எடுக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.
- தங்க இருப்பு சீனாவின் பொருளாதாரம் உயர்வதற்கு உதவியாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் மிகப்பெரிய தங்க இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு பிங்ஜியாங் கவுண்டியில் வாங்கு தங்கச் சுரங்கம் உள்ளது.
தரையில் இருந்து 2 ஆயிரம் மீட்டருக்கும் குறைவான ஆழத்தில் அமைந்து உள்ள இந்த சுரங்கத்தில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் தங்கம் குவிந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுரங்கத்தின் முக்கிய பகுதியில் உள்ள மொத்த தங்க இருப்பு தற்போது 300.2 டன்களை எட்டியுள்ள நிலையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இருப்புகளில் 1,000 டன் தங்கம் உள்ளது. இதன் மதிப்பு சுமார் 600 பில்லியன் யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 7 லட்சம் கோடி) ஆகும். இந்த தங்கத்தை தோண்டி எடுக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது.
இது குறித்து ஹுனான் மாகாண புவியியல் நிறுவனத்தின் துணைத் தலைவர் லியு யோங்ஜுன் கூறும் போது, இந்த கண்டுபிடிப்பு சீனாவின் கனிம ஆய்வு உத்திக்கு கிடைத்த பெரும் வெற்றி என்றார்.
வாங்கு சுரங்கம் சீனாவின் மிக முக்கியமான தங்கச் சுரங்கங்களில் ஒன்றாகும். இங்கு கனிம ஆய்வுக்காக 2020-ம் ஆண்டு முதல், மாகாண அரசாங்கம் 100 மில்லியன் யுவான் (சுமார் ரூ. 115 கோடி) முதலீடு செய்து உள்ளது.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தங்க இருப்பு சீனாவின் பொருளாதாரம் உயர்வதற்கு உதவியாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
சீன அரசு 2021-2025-ம் ஆண்டு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வளங்களின் உள்நாட்டு இருப்புக்களை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. கனிம ஆய்வுக்கான முதலீட்டை ஆண்டுக்கு ஆண்டு 8 சதவீதம் உயர்த்தி 110.5 பில்லியன் யுவானாக (சுமார் ரூ. 1.27 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- திருப்போரூர் ஸ்ரீமுருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
- சமயபுரம், இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் காலை பால் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு கார்த்திகை-9 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: நவமி நள்ளிரவு 1.21 மணி வரை. பிறகு தசமி.
நட்சத்திரம்: பூரம் நள்ளிரவு 1.37 மணி வரை. பிறகு உத்திரம்.
யோகம்: சித்த, மரணயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
சூரியனார் கோவில் ஸ்ரீசூரிய நாராயணருக்கு திருமஞ்சன அலங்கார சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்த ராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீஅனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. திருப்போரூர் ஸ்ரீமுருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். சாத்தூர் ஸ்ரீவேங்கடேசப்பெருமாள் புறப்பாடு. ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம். ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், இருக்கன்குடி மாரியம்மன் கோவில்களில் காலை பால் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பொறுமை
ரிஷபம்-பாசம்
மிதுனம்-ஆதரவு
கடகம்-மாற்றம்
சிம்மம்-போட்டி
கன்னி-ஆதாயம்
துலாம்- சாதனை
விருச்சிகம்-பக்தி
தனுசு- பணிவு
மகரம்-லாபம்
கும்பம்-இன்பம்
மீனம்-நன்மை
- கோவிலில் சில சடங்குகள் செய்து உடைந்த கைவிரலை சீரமைக்கலாம் என தெரிவித்தனர்.
- இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பஞ்சலோக ராமர் சிலை உள்ளது.
இந்த ராமர் சிலையின் கைவிரல் ஒன்று திடீரென சேதமடைந்து துண்டித்து விழுந்தது. கோவிலில் சேதம் அடையும் சிலைகளை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளின் போது சீரமைக்க வேண்டும்.
அடுத்த கும்பாபிஷேகம் 2030-ம் ஆண்டு நடைபெற உள்ளது. அதுவரை சாமி சிலையின் விரலை சீரமைக்க கூடாது. அது ஆகம விதியை மீறுவதாகும். துண்டிக்கப்பட்ட விரலை பொருத்த காத்திருக்க வேண்டும் என அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.
இதனை அடுத்து உடைந்த ராமர் சிலையின் கைவிரல் தங்க கவசத்தால் மூடப்பட்டது. 2021-ம் ஆண்டு முதல் தங்க கவசம் பொருத்தப்பட்ட கைகளுடன் ராமர் சிலை உள்ளது. இந்த நிலையில் புதிதாக பதவி ஏற்ற அறங்காவலர் குழு முன்னிலையில் இந்த பிரச்சனை எழுப்பப்பட்டது. அப்போது கோவிலில் சில சடங்குகள் செய்து உடைந்த கைவிரலை சீரமைக்கலாம் என தெரிவித்தனர்.
உடைந்து விழுந்த ராமர் சிலையின் கைவிரல் கொண்டுவரப்பட்டது. மீண்டும் சிற்பக் கலைஞர்கள் மூலம் பொருத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பழங்கால ராமர் சிலைக்கு மீண்டும் சக்திகளை கொண்டு வருவதற்கு சிறப்பு திருமஞ்சன பூஜைகள் செய்யப்பட்டன. 1000 ஆண்டு பழமையான ராமர் சிலையின் உடைந்த விரல் பொருத்தப்பட்டதால் ஏழுமலையான் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 63, 731 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 22,890 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3. 94 கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆனது.
நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- இன்று வாஸ்து நாள் (காலை 11.29 மணி முதல் 12.05 மணி வரை வாஸ்து செய்ய நன்று).
- திருஇந்துளூர் ஸ்ரீ பரிமளரெங்கராஜர் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு கார்த்திகை-8 (சனிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: அஷ்டமி இரவு 11.45 மணி வரை பிறகு நவமி
நட்சத்திரம்: மகம் இரவு 11.34 மணி வரை பிறகு பூரம்
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று வாஸ்து நாள் (காலை 11.29 மணி முதல் 12.05 மணி வரை வாஸ்து செய்ய நன்று). திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர், ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில், ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன அலங்கார சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி திருமஞ்சன அலங்கார சேவை. திருவட்டாறு ஸ்ரீ கேசவப் பெருமாள் திருமஞ்சன அலங்காரம். திருஇந்துளூர் ஸ்ரீ பரிமளரெங்கராஜர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உழைப்பு
ரிஷபம்-மேன்மை
மிதுனம்-நலம்
கடகம்-நன்மை
சிம்மம்-புகழ்
கன்னி-தெளிவு
துலாம்- பரிசு
விருச்சிகம்-லாபம்
தனுசு- போட்டி
மகரம்-ஓய்வு
கும்பம்-ஆதரவு
மீனம்-கடமை
- தற்போது ரோப்கார் வசதி அமைக்கப்பட்டுள்ளது.
- கண் மூடி அமர்ந்த நிலையில் காட்சி தரும் நரசிம்மர்.
சோளிங்கர் மலை மீது தவக்கோலத்தில் வருடத்தின் 11 மாதங்களும் கண் மூடி அமர்ந்த நிலையில் காட்சி தரும் நரசிம்மர் இந்த கார்த்திகை மாதத்தில் மட்டும் தனது கண்ணை திறந்து, தன்னை காண வரும் பக்தர்களை பார்த்த நிலையில் காட்சி கொடுக்கிறார்.
சோளிங்கர் மலையில் வெறும் 24 நிமிடங்கள் எவர் ஒருவர் இருந்து வழிபடுகிறாரோ அவருக்கு மோட்சம் கிடைக்கும் அளவிற்கு நரசிம்மர் அருளை வாரி வழங்குவார் என்பது நம்பிக்கை. வெறும் 24 நிமிடங்கள் இருந்தாலே மோட்சம் தருவார் என்றால் அதிலிருந்தே இந்த யோக நரசிம்மரின் கருணையை தெரிந்து கொள்ளலாம்.

நினைத்ததும் அருள் தரும் நரசிம்மர்
திருமாலின் தசாவதாரங்களில் மிகவும் சிறப்பானதும், தனித்துவமானதுமான அவதாரம் நரசிம்ம அவதாரம் தான். இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளன், அசைக்க முடியாத பக்தி மற்றும் நம்பிக்கை உடைய பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு தெய்வம் ஓடி வரும் என்பதை உலகம் அறிய செய்த அவதாரம்.
நாளை என்ற சொல்லே தன்னிடம் கிடையாது என பக்தர்கள் வேண்டிய உடனேயே வந்து அருள் செய்ய கூடிய தெய்வமாக நரசிம்ம மூர்த்தி விளங்குகிறார். நரசிம்மர் எப்படி உக்கிர மூர்த்தியாக இரண்ய வதம் செய்தாரோ, அதை போல் பக்தர்களிடத்தில் கருணாமூர்த்தியாக இருக்கக் கூடியவர்.

தவக்கோலத்தில் காட்சி தந்த நரசிம்மர்
பெருமாள், தனது பக்தன் பிரகலாதனுக்காக, தூணிலிருந்து நரசிம்ம மூர்த்தியாக வெளிப்பட்டு, இரண்யனை வதம் செய்த புராணம் அனைவருக்கும் தெரியும். ஆனால் பெருமாள் தனது பக்தனுக்காக நரசிம்ம அவதாரம் எடுத்த காட்சி அங்கு மட்டும் தானே நிகழ்ந்தது.
அந்த நரசிம்ம மூர்த்தியின் கோலத்தை தரிசிக்க தேவர்கள், முனிவர்கள் என பலரும் ஆர்வம் கொண்டு ஆங்காங்கே தவம் செய்தனர். அப்படி தவம் செய்த முனிவர்களையும், தேவர்களையும் காலகேய அசுரர்கள், கும்போதர அசுரர்கள் என அசுர கூட்டங்கள் பலவிதமாக துன்புறுத்தி வந்தன.
இதனால் ஆஞ்சநேயரிடம் தனது சங்கையும், சக்கரத்தையும் கொடுத்து அசுரர்களை வதம் செய்யும் படி அனுப்பி வைத்தார் நரசிம்மர்.
அசுரர்கள் அழிந்த பிறகு சப்த ரிஷிகளும், தேவர்களும், ஆஞ்சநேயரும் கேட்டுக் கொண்டதன் படி அவர்கள் தவம் செய்த அதே மலை மீது, தவம் செய்யும் நிலையில் யோக நரசிம்மராக திருக்காட்சி கொடுத்தார். தேவர்களும், ரிஷிகளும் தரிசித்த அதே கோலத்தில் இன்றளவும் சோளிங்கர் மலை மீது யோக நரசிம்மராக பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார்.
கண் திறக்கும் நரசிம்மர்
ராணிபேட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள சோளிங்கர் மலை மீது தவக்கோலத்தில் வருடத்தின் 11 மாதங்களும் கண் மூடி அமர்ந்த நிலையில் காட்சி தரும் நரசிம்மர், இந்த கார்த்திகை மாதத்தில் மட்டும் தனது கண்ணை திறந்து, தன்னை காண வரும் பக்தர்களை பார்த்த நிலையில் காட்சி கொடுக்கிறார்.
தாயாரிடம் கோரிக்கை
நரசிம்மர் வீற்றிருக்கும் இந்த மலைக்கோவிலை அடைய 1305 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். அருகில் அமைந்துள்ள சிறிய மலையில் சங்கு, சக்கரத்துடன் காட்சி தரும் ஆஞ்சநேயரை தரிசிக்க 406 படிகள் ஏறி செல்ல வேண்டும்.

ரோப்கார்
தற்போது ரோப்கார் வசதி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தினசரி 1000 பக்தர்கள் மலைக்கு செல்லலாம். தற்போது ஏராளமான பக்தர்கள் ரோப்காரில் சென்று நரசிம்மரை தரிசித்து வருகின்றனர்.
இந்த தலத்தில் பக்தர்கள் தங்களின் கோரிக்கைகளை தாயாரிடமும், ஆஞ்சநேயரிடமும் சொன்னால் போதும் அவர்கள் நரசிம்மரிடம் நமது வேண்டுதலை சேர்த்து விடுவார்கள் என்பது நம்பிக்கை.
கடிகாசலம்
108 திவ்ய சேதங்களில் ஒன்றாக திகழும் இந்த தலத்திற்கு கடிகாசலம் என்றொரு பெயரும் உண்டு. ஒரு நாளிகை அல்லது கடிகை என்பது 24 நிமிடங்களை குறிக்கும்.
24 நிமிடங்கள் இருந்தால் போதும்
இந்த தலத்தில் 24 நிமிடங்கள் எவர் ஒருவர் இருந்து வழிபடுகிறாரோ அவருக்கு மோட்சம் கிடைக்கும் அளவிற்கு நரசிம்மர் அருளை வாரி வழங்குவார் என்பது நம்பிக்கை.

ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு தரிசனம்
நரசிம்மர் கண் திறந்திருக்கும் கார்த்திகை மாதமான 5 ஞாயிற்றுக்கிழமைகளிலும் விஷேச சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இதில் 3-வது ஞாயிற்றுக்கிழமை மிகவும் விஷேசமானதாக கருதப்படுகிறது. அன்று ஏராளமான பக்தர்கள் மலையில் குவிந்து நரசிம்மரை தரிசனம் செய்து வருகின்றனர்.
கற்கண்டு, வெல்லம், வாழைப்பழம், தயிர்சாதம் நைவேத்தியமாக படைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். சில பக்தர்கள் வேட்டி-சேலையும் நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர்.
மனவளர்ச்சி குன்றியவர்கள், பில்லி, சூனியம், ஏவல், தீராத வியாதி இருப்பவர்கள், யோக நரசிம்மரை வழிபட்டால் விரைவில் குணமாவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். தாம்பத்ய பிரச்சனை, குழந்தையின்மை, திருமணத்தடை நீக்கும் தலமாகவும் இது விளங்குகிறது.
கேட்ட வரத்தை அள்ளி தருபவராக நரசிம்மர் அருள்பாலித்து வருகிறார். நரசிம்மர் கண் திறந்திருக்கும் இந்த கார்த்திகை மாதத்தில் சோளிங்கர் மலைக்கு சென்று நரசிம்மரை தரிசித்து, அவரின் அருளை பெறலாம்.
- சித்த மயம் சிவமயம் என்பார்கள்.
- சித்தர்களில் முதன்மையானவர் அகத்தியர்.
"சித்த மயம் சிவமயம்" என்பார்கள். சிவனே முதன்மை சித்தராக கருதப்படுபவர். உலகில் சித்தர்கள் பல பேர் உள்ளனர். என்றாலும், நமது தமிழ் மரபின்படி பதினெண் சித்தர்கள் எனப்படும் 18 சித்தர்கள் தலையாய சித்தர்களாக கருதப்படுகின்றனர். அவர்களின் விபரம் வருமாறு:-

அகத்தியர்
18 சித்தர்களில் முதன்மை யானவராக கருதப்படுகிறார் அகத்தியர். இவரது குரு சிவபெருமான். சித்தர்களுக்கெல்லாம் தலைவர் என அறியப்படுகிறார். தமிழ் சித்த மருத்துவ முறைகளை இந்த உலகிற்கு அளித்த மகான். கடுமையான தவத்தின் வாயிலாக பல சித்திகளை பெற்றவர்.
தமிழ் இலக்கிய விதிமுறையான அகத்தியம் எனும் நூலை எழுதியவர். திருவனந்தபுரம் அனந்தசயன திருத்தலத்தில் சமாதியடைந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. இவரது ஆயுட்காலம் 4 யுகம், 48 நாட்கள் ஆகும்.

போகர்
போகர் என்றாலே பழனிமலை முருகப்பெருமானது உருவ சிலையே நமது கண்முன் முதலில் தோன்றும். இவர் நவபாஷாணங்களை கொண்டு முருகப்பெருமானின் உருவ சிலையை செய்தவர். இவரது குரு அகத்தியர். ைவத்தியம் மற்றும் வேதியியலில் சிறந்து விளங்கியவர்.
போகர் 7 ஆயிரம்,போகர் 12 ஆயிரம், சப்த காண்டம் 7 ஆயிரம் போன்ற நூல்களை இயற்றி இவ்வுலகுக்கு அளித்தவர். முடிவில் பழனி மலையில் சமாதியடைந்தார். 300 ஆண்டுகள், 18 நாட்கள் இவரது ஆயுட்காலமாக சொல்லப்படுகிறது.

திருமூலர்
63 நாயன்மார்களில் ஒருவராக திகழ்கிறார் திருமூலர். இவரது குரு நந்தி தேவர். மூலன் என்ற இடையனின் உடலினுள் புகுந்து ஆண்டுக்கு ஒரு பாடல் என்ற வீதத்தில் 3 ஆயிரம் பாடல்களை பாடி 'திருமந்திரம்' எனும் நூலை இயற்றினார். இவர் சிதம்பரம் நடராஜ பெருமான் கோவிலில் சமாதி கொண்டார். இவரது ஆயுட்காலம் 3 ஆயிரம் ஆண்டுகள், 13 நாட்கள் ஆகும்.

வான்மீகர்
வான்மீகர் நாரத முனிவரின் சீடராவார். ராமாயண இதிகாசம் எனும் பெரும் நூலை வழங்கியவர். திருவையாறு, எட்டுக்குடி எனும் ஊரில் சமாதியடைந்தார். இவர் 700 ஆண்டுகள் 32 நாட்கள் வாழ்ந்துள்ளார்.

தன்வந்திரி
காக்கும் கடவுள் திருமாலின் அம்சமாக போற்றப்படுகிறார் தன்வந்திரி. ஆயுர்வேத மருத்துவ முறையை இந்த உலகுக்கு அளித்தவர். வைத்தீஸ்வரன் கோவிலில் சமாதி அடைந்துள்ளார். இவர் வாழ்ந்த காலம் 800 ஆண்டுகள், 32 நாட்கள் ஆகும்.
இடைக்காடர்
இடைக்காடு எனும் ஊரில் வாழ்ந்தவர். இவரது குரு போகர், கருவூரார். இவரது பாடல்கள் உலக இயல்புகளை, நிலையாமையை உணர்ந்து இறைவனை எப்படி அடைவது என்பதை சொல்கிறது. தாண்டவக்கோனே, கோனாரே, பசுவே, குயிலே என பாடிய பாடல்கள், நாட்டுப்பாடல் மரபினை காட்டுகின்றன. இவர் திருவண்ணாமலையில் சித்தியடைந்தார். இவரது ஆயுட் காலம் 600 ஆண்டுகள், 18 நாட்கள் ஆகும்.

கமலமுனி
இவர் போகரிடம் சீடராய் இருந்து யோகம் பயின்று சித்தர்களில் ஒருவரானவர். இவரது குருக்கள் போகர், கருவூரார். 'கமலமுனி முந்நூறு என்னும் மருத்துவ நூல், ரேகை சாஸ்திரம் ஆகிய நூல்களை எழுதியுள்ளதாக தெரிகின்றது. இவரது ஆயுட் காலம் 4 ஆயிரம் ஆண்டுகள், 48 நாட்கள் ஆகும். இவர் ஆரூரில் சமாதியடைந்துள்ளார்.

கருவூரார்
தஞ்சை பெரிய கோவில் உருவாக பெரிதும் காரணமாக இருந்தவர் கருவூரார். இவர் போகரின் சீடர். கருவூரார் பூசா விதி எனும் நூலை எழுதியுள்ளார். இவர் வாழ்ந்த காலம் 300 ஆண்டுகள், 42 நாட்கள் ஆகும். இவர் கரூரில் சமாதியடைந்துள்ளார்.

கொங்கணர்
இவர் போகரின் சீடர். பல மகான்களை சந்தித்து ஞானம் பெற்றவர். கொங்கணர் கடைக்காண்டம், ஞானம், குளிகை, திரிகாண்டம் என பல நூல்களை இந்த உலகுக்கு வழங்கி உள்ளார். இவரது ஆயுட்காலம் 800 ஆண்டுகள், 16 நாட்கள் ஆகும். இவர் திருப்பதியில் சமாதியடைந்துள்ளார்.

கோரக்கர்
தத்தாத்ரேயர், மச்சமுனி, அல்லமா பிரபு ஆகியோர் கோரக்கரின் குருக்கள் ஆவர். மச்சமுனி அருளால் கோசாலையில் இருந்து அவதரித்தவர். அல்லமா தேவரிடம் போட்டியிட்டு தன்னைவிட மிஞ்சியவர் என்பதை உணர்ந்து அல்லாமா தேவரிடம் அருள் உபதேசம் பெற்றவர். போயூர் என்ற இடத்தில் சமாதி அடைந்தார். இவரது ஆயுட்காலம் 880 ஆண்டுகள், 32 நாட்கள் ஆகும்.

குதம்பை சித்தர்
இவர் அழுகுணி சித்தரின் சீடர். இவரது பாடல்களில் குதம்பை அணிந்த பெண்ணை குதம்பாய் என அழைத்து பாடல்களை பாடியுள்ளார். இவர் பாடிய பாடல்களில் தமக்கு தாமே உபதேசம் போல் அமைந்த பாடல் சிறப்பு பெற்றது. இவர் மாயவரத்தில் சமாதி அடைந்துள்ளார். இவரது ஆயுட்காலம் 1800 ஆண்டுகள், 16 நாட்கள் ஆகும்.

மச்சமுனி
மச்சமுனியின் குருக்கள் அகத்தியர், பிண்ணாக்கீசர், பசுண்டர் ஆவர். பிண்ணாக்கீசரிடம் சீடராக இருந்து உபதேசம் பெற்றவர். ஹத யோகம், தந்திர யோகம் குறித்த நூல்களை எழுதியுள்ளார். இவர் திருப்பரங்குன்றத்தில் சமாதியடைந்துள்ளார். இவரது ஆயுட்காலம் 300 ஆண்டுகள், 62 நாட்கள் ஆகும்.

பாம்பாட்டி சித்தர்
இவரது குரு சட்டைமுனி. 'ஆடு பாம்பே' என பாம்பை முன் நிறுத்தி பாடல்கள் பாடியதால் இவர் பாம்பாட்டி சித்தர் என அழைக்கப்படுகிறார். பாம்பாட்டி சித்தர் பாடல்கள், சித்தராரூடம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார். இவர் மருதமலையில் சமாதியடைந்துள்ளார். இவரது ஆயுட் காலம் 123 ஆண்டுகள் 32 நாட்கள் ஆகும்.

பதஞ்சலி
இவர் ஆதிசேஷனின் அம்சமாக அவதரித்தவர். குரு நந்தி. வியாக்ர பாதருடன் தில்லையில் இருந்து சிவதாண்டவம் கண்டார். பதஞ்சலி யோக சூத்திரம் எனும் அற்புதமான நூலை இயற்றியுள்ளார். இவர் ராமேஸ்வரத்தில் சமாதி யடைந்துள்ளார். இவரது ஆயுட்காலம் 5 யுகம் 7 நாட்கள் ஆகும்.
- மகாவிஷ்ணுவின் தீவிர பக்தராக இருந்தவர் ராமானுஜர்.
- மிகச் சிறந்த சமூக சீர்த்திருத்தவாதி.
மகாவிஷ்ணுவின் தீவிர பக்தராக இருந்தவர், ராமானுஜர். இவர் சுமார் 120 ஆண்டு காலம் வாழ்ந்து, வைணவ சமயத்திற்காக தொண்டாற்றியவர். ராமானுஜர் வாழ்ந்த காலத்திலேயே, அவருக்கு கோவில் கட்டி வழிபடும் அளவுக்கு, அவர் மீது பற்று கொண்டவர்கள் இருந்தனா். மிகச் சிறந்த சமூக சீர்த்திருத்தவாதியாக அந்த காலத்திலேயே திகழ்ந்தவர் இவர்.

ராமானுஜரின் மூன்று திருமேனிகள் சிறப்புக்குரியவை. அவை:-
தமர் உகந்த திருமேனி, தான் உகந்த திருமேனி, தானான திருமேனி. இந்த மூன்று திருமேனிகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

தமர் உகந்த திருமேனி
கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் உள்ளது, மேல்கோட்டை என்ற திருநாராயணபுரம். இங்கு சுமார் 12 ஆண்டுகள் தங்கியிருந்து சேவை புரிந்து வந்தார், ராமானுஜர். தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கப்பட்ட மக்களை கோவிலுக்குள் அழைத்துச் சென்று, ராமானுஜர் புரட்சி செய்ததும் இந்த திருத்தலத்தில்தான்.
தன்னுடைய 80-வது வயதில், தன்னை ஏற்றுக்கொண்ட அடியவர்களுக்காக, தானே ஒரு சிற்பியை கொண்டு ஒரு சிலையை வடிக்கச் சொன்னார். ராமானுஜர் கைகூப்பி அனைவரிடமும் விடைபெறும் கோலத்தில் அந்தச் சிலை வடிக்கப்பட்டிருந்தது. அந்தச் சிலையில் தன்னுடைய தெய்வீக சக்தியை செலுத்தி, அதைத் தன்னுடைய சீடர்களிடம் ஒப்படைத்தார்.
அதன்பிறகே திருநாராயணபுரத்தில் இருந்து புறப்பட்டு திருவரங்கம் சென்றார். இந்த சிலையை 'தமர் உகந்த திருமேனி' என்பர். இன்றும் மேல்கோட்டையில் இந்த திருவுருவச் சிலையை வழிபாடு செய்யலாம்.

தான் உகந்த திருமேனி
இந்த திருமேனி நிறுவப்பட்டிருக்கும் திருத்தலம், காஞ்சிபுரம் அருகே உள்ள, ஸ்ரீபெரும்புதூர் ஆகும். ராமானுஜப் பெருமாள், தன்னுடைய இறுதி காலங்களில், அதாவது 120-வது வயதில் திருவரங்கத்தில் தங்கியிருந்தார்.
அப்போது ஸ்ரீபெரும்புதூரில் இருந்த ராமானுஜரின் அடியவர்கள், அவரது திருவுருவச் சிலையை, ஸ்ரீபெரும்புதூரில் நிறுவ ஆசைப்பட்டனர். இதற்காக ராமானுஜரிடம் ஒப்புதல் கேட்கப்பட்டது. பின்னர் ராமானுஜரின் ஆலோசனைப்படி, அவர் உருவம் தாங்கிய செப்புச் சிலை ஒன்று செதுக்கப்பட்டது.
அந்த சிலையை தன் மார்போடு அரவணைத்து, அந்த சிலைக்குள் தன்னுடைய தெய்வீக ஆற்றலை செலுத்தினார், ராமானுஜர். இந்த சிலையே 'தான் உகந்த திருமேனி' என்று அழைக்கப்படுகிறது. ராமானுஜர், தாமாகவே உகந்து அளித்த திருமேனி இதுவாகும்.
அந்த சிலை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆதிகேசவப்பெருமாள் ஆலயத்தில் நிறுவப்பட்டு, ராமானுஜர் தனி சன்னிதியில் வீற்றிருக்கிறார். இந்த சிலையில் உள்ள விலா எலும்பு, காது மடல் போன்றவை, ராமானுஜரின் 120 வயது தோற்றத்தை தெளிவாக எடுத்துக் காட்டும் விதத்தில் இருக்கிறது.

தானான திருமேனி
ராமானுஜர் தன்னுடைய 120-வது வயதில் பரமபத நிலையை எய்தினார். கி.பி. 1137-ம் ஆண்டு, தான் பிறந்த அதே பிங்கள வருடத்தில் மாசி மாதம் வளர்பிறை தசமியில், ஒரு சனிக்கிழமை நண்பகல் வேளையில் பத்மாசன நிலையில் அமர்ந்தபடி திருவரங்கத்தில் சமாதியானார்.
அதற்கு முன்பு வரை வசந்த மண்டபம் என்று அழைக்கப்பட்ட அந்த இடம், ராமானுஜரின் திருமேனியை, திருப்பள்ளிப்படுத்தியபிறகு, உடையவர் சன்னிதி என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள ராமானுஜரின் பூத உடலை, இன்றும் நாம் தரிசிக்க முடியும். இவரின் திருமேனியில் தலைமுடி, கை நகம் போன்றவற்றைக் கூட எளிதாக காண இயலும்.
திருவரங்கத்தில் எழுந்தருளியுள்ள இந்த திருமேனியைத் தான் 'தானான திருமேனி' என்று அழைக்கிறோம். ஒவ்வொரு வருடமும் சித்திரை மற்றும் ஐப்பசி மாதங்களில், பச்சை கற்பூரம் மற்றும் சில மூலிகைகள் அரைத்து ராமானுஜரின் திருமேனியில் சாற்றுவார்கள்.
ஆயிரம் ஆண்டுகளாக ஸ்ரீராமானுஜர் திருமேனி பாதுகாக்கப்படுவது, இந்த முறையில்தான் என்கின்றனர் ஆன்மிகப் பெரியவர்கள். பெருமாளுக்கு அடியார்கள் அனைவரும் ஒன்றுதான் என்ற புரட்சிக் கருத்தினைக் கூறிய ஸ்ரீராமானுஜரை வணங்கினால், அந்த இறைவனின் அருளையும் சேர்த்தே பெறலாம்.
- அம்பாளை வழிபடும் சமயத்தை ‘சாக்தம்’ என்று அழைப்பார்கள்.
- மதுரையின் முக்கிய அடையாளமே, மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் தான்.
சிவபெருமானை வழிபடுவது 'சைவம்', மகாவிஷ்ணுவை வழிபடுவது 'வைணவம்' என்று இருப்பதுபோல, அம்பாளை வழிபடும் சமயத்தை 'சாக்தம்' என்று அழைப்பார்கள். இந்த உலகத்தின் மூலமுதற்கடவுளாக விளங்குவது, ஆதிபராசக்தியே என்ற கொள்கை அந்த வழிபாட்டிற்குரியது.
அம்பாளின் மேன்மை அடங்கிய பல திருத்தலங்கள், தமிழ்நாட்டில் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான சில ஆலயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

மதுரை மீனாட்சி
மதுரையின் முக்கிய அடையாளமே, மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம்தான். வைகை ஆற்றின் தென் பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் 14 கோபுரங்களும், 5 நுழைவு வாசல்களும் கொண்டு பிரமாண்டமாக அமைந்த திருக்கோவில் இது.
சிவபெருமானின் திருவிளையாடல்கள் அனைத்தும் நடைபெற்ற இடம் மதுரை என்றாலும், இங்கு மீனாட்சியோடு இணைந்து சுந்தரேஸ்வரரும் கோவில் கொண்டுள்ளார் என்றாலும், இந்த ஆலயத்தின் அம்பாளுக்கே முதல் மரியாதை. தங்கத் தேர் உள்ள ஆலயங்களில், மதுரை மீனாட்சி அம்மன் ஆலயமும் ஒன்று. இந்த ஆலயத்தில் கடம்ப மரமும், வில்வ மரமும் தல விருட்சங்களாக உள்ளன.

சமயபுரம் மாரியம்மன்
திருச்சியில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சமயபுரம் என்ற ஊர். இங்குள்ள மாரியம்மன், ஊர் பெயரோடு சேர்த்து 'சமயபுரம் மாரியம்மன்' என்றே அழைக்கப்படுகிறார். கண்நோய் தீர்க்கும் சிறப்பு மிக்க தலமாக இந்த ஆலயம் விளங்குகிறது. வேப்பிலை ஆடை தரிப்பது, தீச்சட்டி ஏந்தி அம்பாளை வழிபடுவது, கண்மலர் வாங்கி காணிக்கை செலுத்துவது போன்றவை, இங்கு முக்கியமான நேர்த்திக்கடன்களாக இருக்கின்றன.
மாசி மாதத்தில் இங்கு நடைபெறும் 'பூச்சொரிதல்' விழா மிகவும் பிரசித்திப்பெற்றது. அதே போல் சித்திரை மாதம் நடைபெறும் தேர்த் திருவிழாவும் மிகவும் பிரபலம். ஆண்டு தோறும் சித்திரை மாத முதல் செவ்வாய்க்கிழமையில், தேரில் பவனி வந்து அம்மன் அருள்பாலிப்பதைப் பார்க்க லட்சக் கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். இந்த ஆலயத்தின் தல விருட்சம் வேம்பு.

கன்னியாகுமரி பகவதிதேவி
முக்கடல் சங்கமிக்கும், தமிழ்நாட்டின் தென்கோடியில் அமைந்த ஊர், கன்னியாகுமரி. இங்கு கடற்கரையோரமாக வீற்றிருந்து அருள் பாலிக்கிறாள், பகவதி அம்மன். இந்த அம்பாள் கொலுவிருக்கும் ஆலயம், 51 சக்தி பீடங்களில் 'குமரி சக்தி பீடம்' என்று அழைக்கப்படுகிறது. இது அம்பாளின் முதுகுப் பகுதி விழுந்த சக்தி பீடமாக கருதப்படுகிறது. உள்நாட்டு பக்தர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு பக்தர்களும் வந்து செல்லும் சிறப்பு மிக்க ஆலயமாக இந்த ஆலயம் திகழ்கிறது.
பரசுராமர், பகவதி அம்மனின் திரு உருவத்தை இந்த இடத்தில் அமைத்து வழிபட்டிருக்கிறார். இங்குள்ள அம்பாள், குமரிப் பெண்ணாக (திருமணமாகாத கன்னிப் பெண்ணாக) இருந்து அருள்புரிகிறார். பாணாசுரனை அழிப்பதற்காக, தேவி பராசக்தியே பகவதி அம்மனாக அவதரித்ததாக தல புராணம் சொல்கிறது.

காஞ்சி காமாட்சி
காஞ்சிபுரம் என்றாலே அங்கு வீற்றிருக்கும் காமாட்சி அம்மன்தான் அனைவரின் நினைவுக்கும் வருவார். அந்த அளவுக்கு பக்தர் களின் மனதில் இடம் பிடித்தவர், காமாட்சி தேவி. காஞ்சிபுரத்தின் மையப்பகுதியில் அமைந்த இந்த ஆலயம், 51 சக்தி பீடங்களில் 'காமகோடி சக்தி பீடம்' என்று அழைக்கப்படுகிறது. இத்தல அம்பிகை, தங்க விமானத்தின் கீழ் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களுக்கும், இந்த அன்னையே பிரதான சக்தி தேவியாவார். அதனால் காஞ்சிபுரத்தில் உள்ள சிவாலயங்களில், தனியாக அம்பாள் சன்னிதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலயத்தின் தல விருட்சம் செண்பக மரம் ஆகும்.

பொள்ளாச்சி மாசாணியம்மன்
கோயம்புத்தூரில் இருந்து சுமார் 58 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது மாசாணியம்மன் கோவில். இந்த ஆலயம் அமைந்துள்ள இடம் ஆனைமலை என்ற ஊராகும். உப்பாற்றின் வட கரையில் இருக்கிறது இந்த ஆலயம். மயானத்தில் சயன கோலத்தில் இருப்பவள் என்பதால் இந்த அன்னைக்கு 'மயானசயனி' என்ற பெயர் ஏற்பட்டது. அதுவே மருவி 'மாசாணி' என்றானதாக சொல்கிறார்கள்.
இங்கு மாசாணியம்மன், 17 அடி நீளத்தில் கிடந்த கோலத்தில், தெற்கே தலை வைத்து, கபாலம், சர்ப்பம், திரிசூலம், உடுக்கை ஏந்தி காட்சியளிக்கிறார். ருதுவாகும் பெண்கள் சந்திக்கும் பல்வேறு வகையான உடல் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் தெய்வமாக, மாசாணியம்மன் அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில் தை மாதம் 18 நாட்கள் நடைபெறும் பெருவிழா சிறப்புமிக்கது.
- சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
- திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு கார்த்திகை-7 (வெள்ளிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சப்தமி இரவு 10.30 மணி வரை. பிறகு அஷ்டமி.
நட்சத்திரம்: ஆயில்யம் இரவு 9.51 மணி வரை. பிறகு மகம்.
யோகம்: மரணயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். ராமேசுவரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித்தாயார் புறப்பாடு. இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் அபிஷேகம். திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சனம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை. பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள் வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை தலங்களில் சிறப்பு அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சனம் மாடவீதி புறப்பாடு. லால்குடி ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-தாமதம்
ரிஷபம்-உறுதி
மிதுனம்-புகழ்
கடகம்-நன்மை
சிம்மம்-சுபம்
கன்னி-இரக்கம்
துலாம்- நட்பு
விருச்சிகம்-ஆதரவு
தனுசு- லாபம்
மகரம்-நற்செய்தி
கும்பம்-சாந்தம்
மீனம்-நிறைவு
- சித்தர்கள் என்றால் சித்தி பெற்றவர் என்று பொருள்.
- சிந்தை தெளிந்து இருப்பவன் சித்தன் என்று கூறுவார்கள்.
சித்தர்கள் என்றால் சித்தி பெற்றவர் என்று பொருள். அதாவது சிந்தை தெளிந்து இருப்பவன் சித்தன் என்று கூறுவார்கள். கடவுளைக் காண முயல்பவன் பக்தன் என்பது போல கடவுளைக் கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள் என்று கூறலாம். கடந்த காலம், நிகழ் காலம், வருங்காலம் என முக்காலமும் உணர்ந்த அறிஞர்களே சித்தர்கள் ஆவார்.

உடலைக் கோவிலாகவும் உள்ளத்தை இறைவன் உறையும் ஆலயமாகவும் கருதி உலகப் பற்றற்று வாழ்பவர்கள் சித்தர்கள். இவர்கள் தங்களை உணர்ந்தவர்கள். இயற்கையை உணர்ந்தவர்கள். மனதை அடக்கி ஆளத் தெரிந்தவர்கள். தன்னுன் உறையும் இறைவனை கண்டு அதனுடன் ஒன்றி தன் சக்தியையும் ஆற்றலையும் உலக மக்களின் நன்மைக்கு பயன்படுத்தும் வல்லமை படைத்தவர்கள்.
சித்தர்கள் அழியாப் புகழுடன் வாழும் சிரஞ்சீவிகள். பிரபஞ்ச ரகசியத்தை அறிந்த பிரம்ம ஞானிகள். எதிலும் எந்த வித பேதமும் காணாதவர்கள். ஆசை, பாசம், மோகம், பந்தம் போன்ற உலகப் பற்றை அறுத்தவர்கள். பல சித்திகளை, குறிப்பாக அஷ்டமா சித்திகளை பெற்றவர்கள்.
தமிழ் பாரம்பரியத்தில் எத்தனையோ சித்தர்கள் இருந்தாலும் கூட 18 சித்தர்களை குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். அவர்கள், அகத்தியர், போகர், திருமூலர், வான்மீகர், தன்வந்த்ரி, இடைக்காடர், கமலமுனி, கருவூரார், கொங்கணர், கோரக்கர், குதம்பை சித்தர், மச்சமுனி, பாம்பாட்டி சித்தர், பதஞ்சலி, இராமத்தேவர், சட்டைமுனி, சிவவாக்கியர், சுந்தரானந்தர் ஆகியோர்கள்.
அஷ்டமா சித்திகள்:
அஷ்ட என்றால் எட்டு என்று பொருள். அட்டாங்க யோகம் என்னும் எட்டு வகையான யோக நெறிகளை பற்றி வாழ்ந்தவர்கள் சித்தர்கள். அவை முறையே:
1. அணிமா 2. மகிமா 3. லகிமா 4. பிரார்த்தி 5. பிரகாமியம் 6. ஈசத்துவம், 7. வசித்துவம் 8. கரிமா
அணிமா:
அணுவைக் காட்டிலும் மிகச் சிறிய உருவில் உலவும் ஆற்றல் இந்த சித்தியினால் ஏற்படும்
மகிமா :
மலையினும் பெரிய உருவம் தாங்கி நிற்கும் ஆற்றல் இந்த சித்தியினால் ஏற்படும்.
லகிமா:
உடலைப் பாரமில்லாமல் லேசாகச் செய்து நீர், சேறு முதலியவற்றில் அழுந்திவிடாமல் காற்றைப் போல விரைந்து செல்லும் வல்லமை இந்த சித்தியினால் ஏற்படும்.
பிரார்த்தி:
நாம் விரும்புவனவற்றையும் நினைப்பவற்றையும் உடனே அவ்வாறே அடையும் வல்லமையைத் தருவது இந்த சித்தி.
பிரகாமியம்:
தம் நினைவின் வல்லமையால் எல்லாவற்றையும் நினைத்தவாறே படைக்கும் ஆற்றலைத் தருவது இந்த சித்தி.
ஈசத்துவம்:
அனைவரும் தம்மை வணங்கும்படியான தெய்வத் தன்மையை எய்தும்படிச் செய்வது இந்த சித்தி.
வாசித்துவம்:
உலகம் அனைத்தையும் தம் வயப்படுத்தி நடத்தும் ஆற்றலை பெற்றிருக்கச் செய்யும் இந்த சித்தி.
கரிமா:
ஐம்புலன்களும் நுகரும் இன்ப துன்பங்களைப் பற்றிக் கவலைப்படாமலும் அவைகளுடன் சம்பந்தப் படாமலும் இருக்கும் வல்லமையை அளிக்கும் இந்த சித்தி.






