என் மலர்
நீங்கள் தேடியது "Siddhar worship"
- சித்தர்கள் கேட்ட வரங்களை கண்டிப்பாக வாரி வழங்குவார்.
- 27 நட்சத்திரக்காரர்கள் எந்தெந்த சித்தரை வணங்கலாம்.
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு சித்தர்கள் இருக்கின்றனர். அந்தந்த நட்சத்திரக்காரர்கள் தங்களுக்குரிய சித்தரை மனதார வணங்கி பிரார்த்தனை செய்தால் கட்டாயம் அந்த சித்தர்கள் கேட்ட வரங்களை கண்டிப்பாக வாரி வழங்குவார்.
அதன்படி, 27 நட்சத்திரக்காரர்கள் எந்தெந்த சித்தரை வணங்கலாம். மேலும், அந்த சித்தர்கள் எங்கு குடிகொண்டு உள்ளனர் என்பதை இங்கு விரிவாக காண்போம்.

* அஸ்வினி - காலங்கி நாதர் சித்தர் இவரது சமாதி மற்றும் சக்தி அலைகள் கஞ்சமலை மற்றும் திருக்கடையூர் ஆகிய கோவில்களில் உள்ளது.
* பரணி -போகர் சித்தர் இவருக்கு பழனி முருகன் கோவிலில் தனி சமாதி உள்ளது.
* கார்த்திகை - ரோமரிஷி சித்தர் இவருக்கு ஜீவசமாதி இல்லை. (காற்றோடு காற்றாக கலந்து விட்டார் என கூறப்படுகிறது).
* ரோகிணி - மச்சமுனி சித்தர் இவர் ஜீவசமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது.
* மிருகசீரிடம் - பாம்பாட்டி சித்தர் மற்றும் சட்டமுனி சித்தர். பாம்பாட்டி சித்தரின் ஜீவசமாதி சங்கரன்கோவிலில் உள்ளது. சட்டமுனி சித்தரின் ஜீவசமாதி ஸ்ரீரங்கத்தில் உள்ளது.
* திருவாதிரை - இடைக்காடர் இவரது ஜீவசமாதி திருவண்ணாமலையில் உள்ளது.
* புனர்பூசம் - தன்வந்தரி சித்தர் இவர் வைத்தீஸ்வரன் கோவிலில் ஜீவசமாதி ஆனவர்.
* பூசம் - கமலமுனி சித்தர் இவர் ஜீவசமாதி திருவாரூரில் உள்ளது.
* ஆயில்யம்- அகத்தியர் சித்தர் இவரது ஒளிவட்டம் குற்றாலம் பொதிகை மலையில் உள்ளது.
* மகம் - சிவ வாக்கிய சித்தர் இவரது ஜீவசமாதி கும்பகோணத்தில் உள்ளது.
* பூரம் - ராமதேவ சித்தர் இவரது ஜீவசமாதி அரபு நாடான மெக்காவில் உள்ளது. இவர் ஒளிவந்து போகும் இடம் அழகர்மலை.
* உத்திரம் - காகபுஜண்டர் இவர் ஜீவசமாதி அடைந்த இடம் திருச்சி உறையூரில் உள்ளது.
* ஹஸ்தம் - கருவூரார் சித்தர் இவரது சமாதி கரூரில் உள்ளது. இவரது ஒளிவட்டம் வந்து செல்லும் இடம் தஞ்சாவூர் பெரிய கோவில் ஆகும்.
* சித்திரை - புண்ணாக்கீசர் சித்தர் நண்ணாசேர் என்ற இடத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது.
* சுவாதி - புலிப்பாணி சித்தர் இவரது சமாதி பழனிக்கு அருகில் உள்ள வைகாவூர் என்ற இடத்தில் உள்ளது.
* விசாகம் - நந்தீசர் சித்தர் மற்றும் குதம்பை சித்தர் நந்தீசர் காசி நகரத்திலும் (பனாரஸ்), குதம்பை சித்தர் மாயவரத்திலும் ஜீவசமாதி அடைந்துள்ளனர்.
* அனுஷம் - வால்மீகி சித்தர் இவருக்கு எட்டுக்குடியில் ஜீவசமாதி உள்ளது.
* கேட்டை - பகவான் வியாசருக்கு உரிய நட்சத்திரம் இவரை நினைத்தாலே போதும். அந்த இடம் வருவார்.
* மூலம் - பதஞ்சலி சித்தர் இவர் சமாதி ராமேஸ்வரத்தில் உள்ளது.

* பூராடம் - ராமேதவர் சித்தர் இவரது ஜீவ ஒளியை அழகர்மலையில் தரிசிக்கலாம்.
* உத்திராடம் - சித்தபிரான் கொங்கணர் இவர் ஜீவசமாதி அமைந்துள்ள இடம் திருப்பதி ஆகும்.
* திருவோணம் - தட்சிணாமூர்த்தி சித்தர் இவர் சமாதி புதுச்சேரி அடுத்து உள்ள பள்ளித்தென்னல் என்ற இடத்தில் உள்ளது.
* அவிட்டம் - திருமூலர் சித்தர் இவர் சிதம்பரத்தில் ஜீவசமாதி அடைந்தார்.
* சதயம் - கவுபாலர் சித்தர் இவரை நினைத்தாலே தேடிவந்து அருள்புரிவார்.
* பூரட்டாதி - ஜோதிமுனி சித்தர் இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர். அதனால் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் அங்கு அருள்பாலிப்பார்.
* உத்திரட்டாதி - டமரகர் சித்தர் இவரும் நேரிடையாக காற்றில் ஐக்கியமாகி கலந்துவிட்டார் என்று வரலாறு கூறுகிறது. இவரை வீட்டிலேயே சிறு மணி ஓசையில் வரவழைத்து வணங்கலாம்.
* ரேவதி - சுந்தரானந்தர் சித்தர் இவரது ஜீவசமாதி கோவில் மதுரையில் உள்ளது.
எனவே, 27 நட்சத்திரக்காரர்களும் அவரவர்களுக்குரிய ஜீவசமாதி இடங்களுக்கு சென்று வணங்கினால் சித்தர்களின் அருளை முழுமையாக பெறலாம்.
- சித்தர்கள் என்றால் சித்தி பெற்றவர் என்று பொருள்.
- சிந்தை தெளிந்து இருப்பவன் சித்தன் என்று கூறுவார்கள்.
சித்தர்கள் என்றால் சித்தி பெற்றவர் என்று பொருள். அதாவது சிந்தை தெளிந்து இருப்பவன் சித்தன் என்று கூறுவார்கள். கடவுளைக் காண முயல்பவன் பக்தன் என்பது போல கடவுளைக் கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள் என்று கூறலாம். கடந்த காலம், நிகழ் காலம், வருங்காலம் என முக்காலமும் உணர்ந்த அறிஞர்களே சித்தர்கள் ஆவார்.

உடலைக் கோவிலாகவும் உள்ளத்தை இறைவன் உறையும் ஆலயமாகவும் கருதி உலகப் பற்றற்று வாழ்பவர்கள் சித்தர்கள். இவர்கள் தங்களை உணர்ந்தவர்கள். இயற்கையை உணர்ந்தவர்கள். மனதை அடக்கி ஆளத் தெரிந்தவர்கள். தன்னுன் உறையும் இறைவனை கண்டு அதனுடன் ஒன்றி தன் சக்தியையும் ஆற்றலையும் உலக மக்களின் நன்மைக்கு பயன்படுத்தும் வல்லமை படைத்தவர்கள்.
சித்தர்கள் அழியாப் புகழுடன் வாழும் சிரஞ்சீவிகள். பிரபஞ்ச ரகசியத்தை அறிந்த பிரம்ம ஞானிகள். எதிலும் எந்த வித பேதமும் காணாதவர்கள். ஆசை, பாசம், மோகம், பந்தம் போன்ற உலகப் பற்றை அறுத்தவர்கள். பல சித்திகளை, குறிப்பாக அஷ்டமா சித்திகளை பெற்றவர்கள்.
தமிழ் பாரம்பரியத்தில் எத்தனையோ சித்தர்கள் இருந்தாலும் கூட 18 சித்தர்களை குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். அவர்கள், அகத்தியர், போகர், திருமூலர், வான்மீகர், தன்வந்த்ரி, இடைக்காடர், கமலமுனி, கருவூரார், கொங்கணர், கோரக்கர், குதம்பை சித்தர், மச்சமுனி, பாம்பாட்டி சித்தர், பதஞ்சலி, இராமத்தேவர், சட்டைமுனி, சிவவாக்கியர், சுந்தரானந்தர் ஆகியோர்கள்.
அஷ்டமா சித்திகள்:
அஷ்ட என்றால் எட்டு என்று பொருள். அட்டாங்க யோகம் என்னும் எட்டு வகையான யோக நெறிகளை பற்றி வாழ்ந்தவர்கள் சித்தர்கள். அவை முறையே:
1. அணிமா 2. மகிமா 3. லகிமா 4. பிரார்த்தி 5. பிரகாமியம் 6. ஈசத்துவம், 7. வசித்துவம் 8. கரிமா
அணிமா:
அணுவைக் காட்டிலும் மிகச் சிறிய உருவில் உலவும் ஆற்றல் இந்த சித்தியினால் ஏற்படும்
மகிமா :
மலையினும் பெரிய உருவம் தாங்கி நிற்கும் ஆற்றல் இந்த சித்தியினால் ஏற்படும்.
லகிமா:
உடலைப் பாரமில்லாமல் லேசாகச் செய்து நீர், சேறு முதலியவற்றில் அழுந்திவிடாமல் காற்றைப் போல விரைந்து செல்லும் வல்லமை இந்த சித்தியினால் ஏற்படும்.
பிரார்த்தி:
நாம் விரும்புவனவற்றையும் நினைப்பவற்றையும் உடனே அவ்வாறே அடையும் வல்லமையைத் தருவது இந்த சித்தி.
பிரகாமியம்:
தம் நினைவின் வல்லமையால் எல்லாவற்றையும் நினைத்தவாறே படைக்கும் ஆற்றலைத் தருவது இந்த சித்தி.
ஈசத்துவம்:
அனைவரும் தம்மை வணங்கும்படியான தெய்வத் தன்மையை எய்தும்படிச் செய்வது இந்த சித்தி.
வாசித்துவம்:
உலகம் அனைத்தையும் தம் வயப்படுத்தி நடத்தும் ஆற்றலை பெற்றிருக்கச் செய்யும் இந்த சித்தி.
கரிமா:
ஐம்புலன்களும் நுகரும் இன்ப துன்பங்களைப் பற்றிக் கவலைப்படாமலும் அவைகளுடன் சம்பந்தப் படாமலும் இருக்கும் வல்லமையை அளிக்கும் இந்த சித்தி.
சங்கரன்கோவில் அருகில் உள்ள அரியூரைச் சேர்ந்தவர் சிவனய்யா. இவர் மிகப்பெரிய அந்தஸ்து கொண்டவர். மாவீரன் பூலித்தேவனுக்கு ராஜகுருவாக இருந்தவர். பூலித்தேவனுக்கு பல நேரங்களில் நல்லத் திட்டங்கள் வகுத்து கொடுத்து, அவரைப் போரில் வெல்ல வைத்தவர் என்று சொல்லப்படுகிறது. இவரிடம் கேட்காமல் பூலித்தேவன் எங்கும் செல்லமாட்டார். இவர் சிவபெருமான் மீது பற்று கொண்டவர்.
அரியூரே மிகப்பெரிய ஆன்மிக கிராமம்தான். அரியூர் மலை மிகவும் பிரசித்திப் பெற்றது. பாம்பாட்டி சித்தர் உள்பட பல சித்தர்கள் இங்கு அமர்ந்து தவம் இயற்றியுள்ளார்கள். சிவனய்யா சித்தரும் இங்கு அமர்ந்து தவமேற்றியுள்ளார். சிவனய்யா அனைத்து ஜீவ ராசிகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருப்பாராம். இவர் தனது பூஜை அறையில் அமர்ந்து பூஜை செய்து கொண்டிருக்கும்போது, கண்ணை மூடி தியானத்தில் ஈடுபடுவார். திடீரென்று ‘நல்லவனே வா' என்றால், எங்கிருந்தாலும் நாகப்பாம்பு அவர் முன் வந்து படமெடுத்து ஆடி நிற்குமாம். அவர் கண்ணைத் திறந்து நாகத்தினைப் பார்த்து ‘நல்லவனே போ' என்று கூறினால் பாம்பு அங்கிருந்து அகன்று விடும் அளவுக்கு தவவலிமை பெற்றவராம்.
அரண்மனையிலும், மக்கள் மத்தியிலும் சிவனய்யா சித்தருக்கு நல்லபெயர். மக்களுக்கு எந்தத் தீங்கு என்றாலும் தனது தவவலிமையால் அதனைத் தீர்த்து வைப்பார்.
இவர் பேரும் புகழுடன் வாழ்ந்து வருவதை சகிக்க முடியாத மோகினி பெண்ணொருத்தி, இவர் புகழை அழித்து விட திட்டமிட்டாள். அதனை செயல்படுத்தும் வாய்ப்புக்காகக் காத்திருந்தாள்.
சிவனய்யா சித்தர் நெல்கட்டும் செவலில் இருந்து சங்கரன்கோவிலுக்கு தினமும் நடந்து சென்றே, சிவபெருமானை வணங்கி வருவார். அந்த இடைப்பட்ட நேரத்தில் சித்தரை பழிவாங்க பயன் படுத்த நினைத்தாள் மோகினி.
ஒரு நாள், சித்தர் வரும் வழியில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தக் குழந்தையை கிடத்தினாள். குழந்தை மோகினியால் உருவாக்கப்பட்ட தீயச் சக்தி. அதற்கு உயிர் கொடுத்தால், அந்த சக்தி மூலம் இந்த உலகத்தினையே தீயச் செயலில் ஈடுபடுத்தி விடும். அதே நேரம் சித்தர்தான் அந்த சக்தி உருவாக காரணம் என்ற கெட்டப்பெயரையும் உருவாக்கி விடலாம் என்று கணக்கு போட்டாள் மோகினி.
சித்தர் வந்த வழியில், சாதாரண பெண் போன்ற உருவம் கொண்டு, குழந்தையை காப்பாற்றித் தரும்படி வேண்டினாள் மோகினி. ஆனால் அனைத்தையும் தன் தவ வலிமையால் உணர்ந்து கொண்ட சித்தர், கையில் இருந்தக் கம்பை மோகினி மீது போட்டார். அந்தக் கம்பு ஒளிப்பிளம்பாக மாறி அவளை நோக்கிப் பாய்ந்தது. மோகினி தப்பித்தால் போதும் என அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தாள். இதனால் சித்தரின் புகழ் சுற்றுப்புற கிராமங்களிலும் பரவத் தொடங்கியது.
பாறைப்பட்டி கிராமத்தில் இருந்து ஒத்தையடி பாதை வழியாக சென்று அரியூர் மலை அடிவாரத்தை அடையலாம். அங்கு தரையோடு தரையாக ஒரு பாறை இருக்கிறது. அந்தப் பாறையில் வட்ட எழுத்துகள் காணப்படுகின்றன. அந்த வட்ட எழுத்துக்கள் எல்லாம் சிவனய்யா தம் கைப்பட எழுதினது என அந்தப் பகுதி மக்கள் நம்புகிறார்கள். இந்தப் பகுதியில் நிறைய புதையல் இருப்பதாகவும், அதன் குறிப்பே, சிவனய்யா எழுதி வைத்த வட்ட எழுத்துகள் என்று சில கதைகளும் சொல்லப்படுகிறது.

சிவனய்யா சித்தர் எப்போது, எப்படி, எந்த ஆண்டு சமாதி அடைந்தார் என்பது யாருக்கும் தெரியாமல் இருந்தது. அவரது சமாதி இடத்தை யாரும் அறியமுடியவில்லை. கடந்த 2015-ம் ஆண்டு ஒருவரது கனவில், சித்தர் சமாதி அடைந்த இடம் தென்பட்டதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி அறிந்த மக்கள் அனைவரும் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றனர். அங்கு இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை தோண்டினர். அவரது உடல் தென்பட்டது.
அனைவருக்கும் ஆச்சரியம். சித்தரின் உடல் கெடாமல் அப் படியே இருந்தது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் அடங்கிய சித்தரின் உடல் கெடாமல் இருப்பதையும், அவரது தவ வலிமையையும் எண்ணி பக்தர்கள் மெய்சிலிர்த்தனர். மூன்று நாள் அப் படியே மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
பின்னர் 4 அடியில் சுவர் எழுப்பி அதன் மீது தளம் போட்டு மூடினார்கள். சமாதி கோவிலை அமைத்து 44 நாள் பூஜை செய்யப்பட்டது. தற்போது ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் பூஜை நடைபெற்று வருகிறது. பவுர்ணமி அன்று மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். தங்கள் பிரச்சினைக்கு தீர்வு காணவரும் பக்தர்கள், சிவனய்யா சித்தர் சமாதியை 21 தடவை சுற்றி வந்து நல்ல பலன்களைப் பெறுகிறார்கள்.
சிவனய்யா சித்தர் புதையலைக் காப்பவர் என்பதால், இங்கு வந்து வணங்கினால் கடன் பிரச்சினை தீருகிறது. சித்தர் பீடத்தினை வலம் வருபவர்களுக்கு திருமணம் நடந்தேறுகிறது. பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.
பசுவை மானாக மாற்றிய சித்தர் :
ஒரு முறை அரியூர் மலையில், அரண்மனை பசுக்கள் மேய்ந்து கொண்டிருந்தன. வேடன் ஒருவன் மலையில் உள்ள காட்டுக்குள் வேட்டையாடச் சென்றிருந்தான். அங்கு நின்ற மானை வேட்டையாட அம்பை எய்தான். அம்போ தவறுதலாக அரண்மனை பசு மீது பாய்ந்து, அதன் உயிரைப் பறித்தது. அரண்மனை பசுவைக் கொன்றால், அவர்களுக்கு மிகப்பெரியத் தண்டனை உண்டு. எனவே பதறிப்போன வேடன், சிவனய்யா சித்தரிடம் ஓடி வந்தான்.
ஆனால் அவரைக் காணவில்லை. அவர்தான் சித்தராயிற்றே. அரண்மனைப் பணியில் இருந்தாலும், அவரது போக்கில்தான் சென்று கொண்டிருப்பார். அப்படி எங்கோ சென்றிருந்த நேரத்தில்தான் வேடன் வந்து நின்றான். அங்கு.. இங்கு.. என்று அலைந்து திரிந்து, இறுதியாக குளத்து கரையில் சிவனுக்கு பூஜை செய்து கொண்டிருந்த சித்தரைக் கண்டான்.
அவர் காலில் விழுந்து, ‘சுவாமி! நான் மானை வேட்டையாட அம்பு எய்தேன். அது தவறுதலாக அரண்மனை பசு மீது பாய்ந்துவிட்டது. அரண்மனை தண்டனையில் இருந்து என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று கதறினான்.
‘பயப்படாதே! நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று சொன்ன சித்தர், அங்கிருந்து அசையவில்லை.
வேடனுக்கோ பயம் அதிகரித்தது. ‘காப்பாற்றுகிறேன் என்று வாக்குறுதி அளித்தவர், அரண்மனைக்கு வராமல், இப்படி அசையாமல் அமர்ந்திருக்கிறாரே’ என்று நினைத்தான்.
ஆனால் அவர் தன் தவத்தின் மூலமாக வேடனுக்கு உதவிக்கொண்டிருந்தார் என்பது வேடனுக்கு புலப்படவில்லை. ஆம்.. அரண்மனை பசு அம்படிப்பட்டு இறந்து விட்ட செய்தி கேட்டு, அரண்மனை காவலர்கள் மலை பகுதிக்கு சென்று பார்த்தனர். ஆனால் அங்கு உண்மையிலேயே மான் தான் இறந்து கிடந்தது. தன் தவ வலிமையால், பசுவை மானாக மாற்றி வேடனைக் காப்பாற்றியிருந்தார் சிவனய்யா சித்தர். வேடன் சித்தரின் காலில் விழுந்து வணங்கி அங்கிருந்து புறப்பட்டான்.
சிவனய்யா சித்தரை வணங்க வேண்டுமானால், திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் வர வேண்டும். சங்கரன்கோவிலில் இருந்து நெல்கட்டும் செவல் செல்லும் சாலையில் 11 கிலோமீட்டர் தூரத்தில் பாறைப்பட்டி இருக்கிறது. இங்கு செல்ல அடிக்கடி பஸ்வசதி கிடையாது என்பதால், ஆட்டோவில் வந்து செல்வதே வசதியாக இருக்கும்.
கொம்மடிராயன் என்ற குறுநில மன்னர், இங்கு கோட்டை அமைத்து வாழ்ந்த காரணத்தினால் இவ்வூர் ‘கொம்மடிக் கோட்டை’ என்ற பெயர் பெற்றுள்ளது. கொம்மடிராயன் கல்வெட்டு அருகில் உள்ள சிவாலயமான ஞானாதீஸ்வரர் கோவிலில் காணப்படுகிறது.
பழங்காலம் தொட்டே இவ்விடம் பெரும் புண்ணிய பூமியாக திகழ்ந்துள்ளது. சுற்றிலும் தேரிக்காடாக காட்சியளிக்கும் இவ்விடத்தில் சுனையும், தோப்பும் துறவுமாக பசுமை நிறைந்த வனப்பாகவே கொம்மடிக்கோட்டை விளங்கியுள்ளது. இங்கு அகிலத்தினை காக்கும் பாலா தெய்வமாக அருள்பாலித்து வருகிறார். எனவே இவ்வூரை பாலாசேத்திரமென அழைக்கிறார்கள்.
சித்தர்களின் வழிபடும் தெய்வமாகத் திகழ்பவள் பாலா என்கிற வாலை அம்மன். பாலா என்பது சமஸ்கிருத பெயர். வாலை என்பது தான் அதன் தமிழாக்கம். அன்னை பராசக்தியான ராஜராஜேஸ்வரி லலிதாம்பிகையின் பத்து வயது தோற்றமே பாலா.
‘சக்தி சடாதரி வாலைப் பெண்ணாம்; சித்தர்கள் போற்றிய வாலைப் பெண்ணாம்; எங்கும் நிறைந்தவள் வாலைப் பெண்ணாம்’ என்று கொங்கணச் சித்தரின் கும்மிப் பாடல், வாலை அம்மனின் பெருமைகளை விவரிக்கிறது. ‘வாலாம்பிகை வாலையடி சித்தருக்கு தெய்வம்' என்பது வழி வழியாய் வந்த மொழி.
வாலை அம்மனை வழிபடும் தெய்வமாக கொண்டு ‘ஐம் க்லிம் ஸௌ' என்ற பாலா மந்திர மூன்றெழுத்தின் துணை கொண்டுதான், மூவுலகினையும் நினைத்த போதே சென்றடைந்தனர் சித்தர்கள். ஸ்ரீ வித்தையில் மிகவும் எளிதானது பாலா மந்திரம்.
வாலை அம்மனின் பெருமையை பலரும் பலவிதமாக பாடுகிறார்கள். இவரின் புகழ் பாட, ‘பத்து வயதினை உடைய பாவையினன்றோ நீ சித்தர்க்கெல்லாம் தாயாய் செய்தாய் மனோன்மணியே...’ என்று பாடியவர் மஸ்தான் சாகிபு. வாலை, சித்தருக்கெல்லாம் தாயானதால் தான், ‘சித்தனோடு சேர்ந்தாளே சித்தத்தா...’ என்றும் பாடப்பட்டுள்ளாள். சித்தர்கள் வாலை அம்மனை உயர்த்திப் பேசுவதில் தவறில்லை என்கிறார்கள்.
‘உலகம் வாலையில் அடக்கம்’ என்பது உண்மை. வாலை அம்மனை பூஜித்து வர வேண்டுமானால், அதற்கு முற்பிறவியில் நற்பலன் இருந்தால் மட்டுமே முடியும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. வாலை அம்மன் பத்து வயது சிறு பெண் தோற்றம் கொண்டிருந்தாலும், அவளே நமது அன்னை. அவளை தியானித்து அனுபவிப்போருக்குத் தான் தெரியும், எத்தனை அற்புத காட்சி எல்லாம் அவள் காட்டுவிப்பாள் என்று. ‘வாலையை வழிபடுவோருக்கு சுகம், பரமசுகம் கிடைக்கும். அவள் நல்லவருக்கு நடுவே விளையாடுவாள். வல்லவர்களெல்லாம் வல்லவளாய் ஆட்சி செய்வாள். அவளை விட அரிதான சூட்சுமம் ஏது?’ என்கிறார் கருவூரார். அவள் உன்னதமான சூட்சுமக்காரி நாத தத்துவத்தையும் சுத்தமாயையும் ஓங்கார சொருபிணி என்று சித்தர் கூடம் அவளையே போற்றுகிறது.
இவரின் அருள் சாதாரணவர்களுக்கு தெரியுமா என்ன? ஆனால் சித்த பெருமக்களுக்கு ஞானாம்பிகா அன்னை இருக்குமிடம் தெரிந்துள்ளது.
சுமார் 800 வருடங்களுக்கு முன்பு...
அன்னையை வணங்க பல பல யோகிகளும், ஞானிகளும் நிறைந்த புனித மலையாம் கயிலாயத்தில் இருந்து வந்தவர்தான் வாலை குருசாமி. இவர் வாலையை தனது தாயாக ஏற்று தனது பெயருக்கு முன்னாள் ‘வாலை’ என சேர்த்துக்கொண்டவர். இவர் பல புண்ணிய தலத்துக்கெல்லாம் சென்று விட்டு காசி வந்தார். அங்கே.. காசியானந்தா என்பவரைக் கண்டார். காசியானந்தா... வாலை குருசாமியின் சீடராகிவிட்டார். அவரோடு சேர்ந்து அன்னையை காண தென் திசை நோக்கி வந்தார்கள்.

வரும்வழியில் பல மக்களுக்கு அருளாசி வழங்கினர். வேண்டும் வரம் கொடுத்தனர். பல புண்ணிய தலத்தில் தங்கி யாகங்கள் பல செய்தனர். இறுதியாக கொம்மடிக்கோட்டை வந்து சேர்ந்தனர். அங்கே அமைதியின் இருப்பிடமான பாலசேத்திரத்தைக் கண்டனர்.
‘ஆகா.. இதுவல்லவா.. புண்ணியசேத்திரம். இங்குதானே நாம் தேடி வந்த அன்னை அருள்பாலிக்கிறார்’ என வியந்து போற்றி... அங்கேயே அமர்ந்தனர்.
ஆசிரமம் அமைத்தனர். ஸ்ரீவாலாம்பிகையைப் பூஜித்து, தவம் இயற்றி சித்திகள் பெற்றனர். தாங்கள் வழிபட்ட தெய்வத்தை அனைவரும் வணங்கி அருள் பெற வேண்டும் என்பதற்காக வாலாம்பிகைக்குத் சன்னிதி அமைத்தனர். இங்கு அவர்களுடன் பல பல சித்தர்கள் வந்து யாகம் பல நடைபெற உதவினர்.
ஸ்ரீவித்யை (ஸ்ரீபாலா) மார்க்கத்தைக் குருமுகமாகவே அடையவேண்டும் எனச் சொல்கிறது சாஸ்திரம். ஸ்ரீவாலை வழிபாட்டை போகர் முனிவர் நந்தீசரிடம் இருந்து உபதேசம் பெற்றார் என்றும், தான் பெற்ற உபதேசத்தை போகர், கொங்கணருக்கு உபதேசித்ததாகவும் கொங்கணர் தன்னுடைய பல சீடர்களுக்கு உபதேசித்ததாகவும் கூறப்படுகிறது. அகத்தியர் உள்பட பல சித்தர்களும் அன்னையை புகழ்ந்து போற்றியுள்ளனர். எனவே இவ்விடம் அருள் ஆசியை அள்ளி தரும் அற்புத பூமியாக திகழ்ந்தது.
பாலசேத்திரத்தில் உள்ள சித்தர்களின் ஆசிரமத்துக்கு பலரும் வந்து சென்றனர். நோய் பட்டவர்கள் வந்தனர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அருள் வேண்டி நின்றனர். அவர்களுக்கெல்லாம் வாலை குருசாமியும், காசியானந்தாரும் திருமாத்திரை வழங்கினர். அந்த திருமாத்திரையை பெற்றவர்கள் நற்பயன் பெற்றனர். அவர்களின் நோய் நீங்கியது. பல மூலிகைகளைக் கொண்டு, அந்த மாத்திரையை, அன்னையின் தலத்திலேயே சித்தர் பெருமக்கள் உருவாக்கினார்கள். தற்போதும் கூட இதே மாத்திரை இங்கு கிடைக்கிறது.
மஞ்சணத்தி இலை, வேப்பிலை, வில்வ இலை, புளிய இலை ஆகியவை எடுத்து கோவிலில் உள்ள அம்மியில் இட்டு, அத்துடன் எலுமிச்சைச் சாறு, திருநீறு, சிறிது கோவில் திரு மண் சேர்த்து அரைத்துக் கோவிலில் வாலைகுருசாமி முன் பூஜையில் வைக்கின்றனர். பிறகு அதை 41 சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, வெயிலில் காய வைத்துத் தனியாக எடுத்து வைத்துக் கொள்கிறார்கள். இந்த திருமாத்திரையைத் தொடர்ந்து 41 நாட்கள் சாப்பிட்டு வர, தீராத பிணிகளும் நீங்குவதாக இங்கு வரும் பக்தர்கள் பலரும் சொல்கிறார்கள்.
தற்போது வழங்கப்படும் இந்த மாத்திரையை, அந்த காலத்திலேயே சித்தர்கள் வழங்கியதால் பலரும் நோய் தீர்ந்து அருள் பெற்றனர். எனவே இவ்விடத்தினை ‘ஞானியர் மடம்' என்றே அழைக்க ஆரம்பித்து விட்டார்கள்.
அன்னையை நாள்தோறும் வணங்கி அருள் பெற்று, பக்தர்களுக்கும் அருள் தந்துக்கொண்டிருந்த சித்தர்கள் இருவரும் யோக முதிர்ச்சி பெற்றனர். சித்துக்கள் பெற்றனர். அதன் பின் இங்கேயே ஜீவசமாதி அடைந்தனர். அன்னையின் அருளால் நம்பி வருகின்ற மக்களுக்கு வேண்டியவற்றை வேண்டியவாறு வழங்கி வந்தனர்.
சித்தர் பெருமக்கள்அடங்கிய இடம் யாருக்கும் தெரியாமல் போய் விட்டது. ஆனால் அருள் ஆற்றல் மட்டும் வெளிப்பட்டுக்கொண்டு தான் இருந்தது. இவ்வூர் மக்கள் என்னவென்று தெரியாமலேயே இங்கு வந்து அந்த அருளை பெற்று சென்றனர். தேன் நிறைந்த வாசமுள்ள மலர்களை ஈக்கள் வண்டுகள் மொய்ப்பது போன்று ‘ஆகா.. இது புண்ணிய தலம். இங்கே ஏதோ இருக்கிறது. இங்கு வந்து சென்றால் ஏதோ.. நடக்கிறது. நல்லது தோன்றுகிறது. இது புண்ணிய பூமி..' என்று நினைத்து சென்றவர்களுக்கு நல்ல அருளும் வாழ்வும் கிடைத்தது.
அப்போது இங்கு தொடர்ச்சியாக வழிபடும் பக்தர்களுக்கு இங்கு வாலை தெய்வமும், வாலைகுரு சித்தரும், அவர் சீடர் காசியானந்தாரும் அமர்ந்து அருள்பாலிக்கிறார்கள் என்ற உண்மை புரிந்தது. எனவே பக்தர்கள் அனைவரும் சேர்ந்து இங்கு ஆலயம் கட்ட முடிவு செய்தனர்.
ஆனால் எப்படி ஆலயம் கட்டுவது?. எங்கு கட்டுவது..? யாரிடம் கேட்பது?. கேட்பவருக்கு கேட்டபடி வாக்கு கொடுக்கும் அற்புத இடமல்லவா..? அங்கே ஒருவர் சொன்னார்.
‘இவ்விடத்தில் விபூதியை பரத்தி வைப்போம். இரவுக்குள் சித்தர் பெருமக்கள் நமக்கு அவர்கள் அருள்பாலிக்கும் இடத்தினை கூறுவார்கள்’ என்றார்.
அனைவரும் ஆமோதித்தனர். அதுபோலவே விபூதியை எடுத்து அந்த இடம் முழுவதும் பரப்பி வைத்தனர். மறு நாள் காலை விடிந்து வந்து பார்த்த போது, சித்தர்கள் அடங்கிய இரண்டு இடங்கள் மட்டும் கோடிட்டுக் காட்டப்பட்டிருந்தது. ஒரு சிறந்த வரைபடம் போல அவ்விடத்தினை கண்ட பக்தர்கள் உடனே ஆலயம் கட்ட ஆரம்பித்தனர். அங்கே ஒரே கருவறையில் வாலைகுரு சாமிக்கும், காசியானந்தாருக்கும் லிங்கம் அமைத்து வழிபட ஆரம்பித்தனர்.






