என் மலர்tooltip icon

    வழிபாடு

    • இன்று பிரதோஷம்.
    • இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் கோவிலில் அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு கார்த்திகை-28 (வெள்ளிக்கிழமை)

    பிறை: வளர்பிறை.

    திதி: திரயோதசி இரவு 6.35 மணி வரை. பிறகு சதுர்த்தசி.

    நட்சத்திரம்: பரணி காலை 6.50 மணி வரை. பிறகு கார்த்திகை நாளை விடியற்காலை 4.55 மணி வரை. பிறகு ரோகிணி.

    யோகம்: சித்த, மரணயோகம்.

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று பிரதோஷம். அண்ணாமலையார் தீபம் திருகார்த்திகை. வள்ளியூர் ஸ்ரீசுப்பிரமணியர் தெப்பம், திருநாகேஸ்வரம் ஸ்ரீநாகநாதர் திருவீதியுலா, கணம்புல்ல நாயனார் குருபூஜை. சுவாமிமலை, திருப்பரங்குன்றம், ஸ்ரீமுருகப் பெருமான் கோவில் தேரோட்டம். திருவிடைமருதூர் ஸ்ரீபிரகத் சுந்தரசாம்பிகை புறப்பாடு. கரூர் தான்தோன்றி ஸ்ரீகல்யாணவேங்கட்ரமண சுவாமி திருமஞ்சனம். பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை தலங்களில் அபிஷேகம். லால்குடி ஸ்ரீசப்ரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித்தாயார் புறப்பாடு. இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் கோவிலில் அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-அன்பு

    ரிஷபம்-செலவு

    மிதுனம்-ஆதரவு

    கடகம்-தனலாபம்

    சிம்மம்-ஈகை

    கன்னி-முயற்சி

    துலாம்- உதவி

    விருச்சிகம்-சுகம்

    தனுசு- பரிவு

    மகரம்-சுபம்

    கும்பம்-தனம்

    மீனம்-பணிவு

    • இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • திருவண்ணாமலை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் உலகப் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    இந்த விழாவை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

    தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இதற்கிடையே, இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், கார்த்திதை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று அதிகாலை கோவில் கருவறை முன் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். கார்த்திகை மாத பரணி நட்சத்திரத்தில் இந்த தீபம் காட்டப்படுவதால் `பரணி தீபம்' என்றுபெயர் பெற்றது.

    இன்று மாலை 6 மணிக்கு கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இரவு பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் மாடவீதி உலாவும் நடைபெற உள்ளது.

    விழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    நினைத்தாலே முக்தி தரும் தலமாகக் கருதப்படுவது திருவண்ணாமலை என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகாலையில் புராணம் வாசிக்கப்பட்டது.
    • ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள ஆண்டாள் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் சிறப்பு பெற்றதாகும். இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் சுக்ல பட்ச ஏகாதசி அன்று நம்பாடுவான் என்ற பக்தனுக்கு பெருமாள் அருள்புரிந்ததை முன்னிட்டும், குளிர் காலம் வருவதால் அதனை பக்தர்களுக்கு அறிவிக்கும் வண்ணமும் இங்கு கோவில் கொண்டு அருள்பாலிக்கும் சுவாமிகளுக்கு 108 வஸ்திரங்கள் சாற்றப்படும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அதுபோல் இந்த ஆண்டு இவ்வைபவம் இன்று அதிகாலை நடைபெற்றது. அப்போது இன்று ஒரு நாள் மட்டுமே கருடாழ்வார் சன்னதியிலிருந்து புறப்பட்டு பகல் பத்து மண்டபத்துக்கு அனைத்து தெய்வங்களும் எழுந்தருளுவார்கள். இங்கு ஆண்டாள், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி, ஆழ்வார்கள், ஆச்சாரியர்களுக்கு 108 வஸ்திரங்கள் சாற்றப்பட்டது.

    இதனை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று அதிகாலையில் புராணம் வாசிக்கப்பட்டது. சாரல் மழை, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    இவ்விழா விற்கான ஏற்பாடுகளை கோவில் பாலாஜி பட்டர் ஸ்தானிகம் என்ற ரமேஷ் பட்டர், அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா, கோவில் செயல் அலுவலர் சக்கரை அம்மாள் மற்றும் கோவில் அலுவ லர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர். 

    • அரிசி தானம் – பாவங்கள் தொலையும்.
    • ஆடை தானம் – ஆயுள் விருத்தியாகும்.

    மஞ்சள் தானம் – மங்களம் உண்டாகும்.

    அன்னதானம் – சகல பாக்கியங்களும் உண்டாகும்.

    அரிசி தானம் – பாவங்கள் தொலையும்.

    ஆடை தானம் – ஆயுள் விருத்தியாகும்.

    எண்ணெய் தானம் – கர்ம வினைகள் அகலும். கடன்கள் குறையும்.

    காய்கறிகள் தானம் – பித்ரு சாபங்கள் விலகும். குழந்தைகளின் ஆரோக்யம் வளரும்.

    காலணி தானம் – பெரியோர்களை நிந்தித்த பாவம் விலகும். தீர்த்த யாத்திரை செய்த பலன் கிடைக்கும்.

    குடை தானம் – தவறான வழியில் சேர்த்த செல்வத்தினால் ஏற்பட்ட பாவம் விலகும். குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டாகும்.

    தேன் தானம் – புத்திர பாக்கியம் உண்டாக்கும். சுகம் தரும் இனிய குரல் வரும்.

    நெய் தானம் – வீடுபேறு அடையலாம்-தேவதா அனுக்ரஹம்

    தண்ணீர் தானம் – மனசாந்தி ஏற்படும்.

    கம்பளி (போர்வை) தானம் – துர்சொப்ன துர்சகுன பயநிவர்த்தி

    பால் தானம் – சவுபாக்கியம்

    பழவகைகள் தானம் – புத்ரபவுத்ர அபிவிருத்தி

    தயிர் சாதம் / பால் சாதம் – ஆயுள் நீடிக்கும் ஆரோக்கியம் நிலைக்கும்.

    தயிர் தானம் – இந்திரிய விருத்தியாகும்.

    வெள்ளி தானம் – பித்ருகள் ஆசிகிடைக்கும்.

    சொர்ண தானம் (தங்கம்) – கோடிபுண்ணியம் உண்டாகும்

    பூமி தானம் – இகபரசுகங்கள்


    வஸ்த்ர தானம் (துணி) – சகல ரோக நிவர்த்தி

    கோ தானம் (பசுமாடு) – பித்ருசாப நிவர்த்தி. இல்லத்தின் தோஷங்கள் விலகும். பலவித பூஜைகளின் பலன்கள் கிடைக்கும்.

    திலதானம் (எள்ளு) – பாப விமோசனம்

    குல தானம் (வெல்லம்) – குல அபிவிருத்தி – துக்கநிவர்த்தி

    சந்தனக்கட்டை தானம் – புகழ்

    விதை தானம் – வம்ச விருத்தியை தரும்

    மாங்கல்ய சரடு தானம் – காமக் குற்றங்கள் அகலும். தீர்க்க மாங்கல்ய பாக்யம் உண்டாகும்.

    பாய் தானம் – பெற்றவர்களை, பெரியவர்களை புறக்கணித்ததால் வந்த சாபங்கள் தீரும். கடும் நோய்களுக்கு நிவாரணம் கிட்டும். அமைதியான மரணம் ஏற்படும்.

    தீப தானம் – கண் பார்வையை தீர்க்கமாக்கும். பித்ருக்களை இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு கொண்டு வரும்.

    தேங்காய் தானம் – நினைத்த காரியம் வெற்றி அடையும். பூரணநலன் உண்டாக்கும். நினைத்த காரியத்தில் வெற்றியளிக்கும்.

    தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும் என்று பெரியோர்கள் சொல்வார்கள். அதாவது நமக்கு மிஞ்சியது போக, மற்றவற்றை தானமாகவும், தர்மமாகவும் செய்யுங்கள் என்று கூறினார்கள்.

    அத்தகைய தானங்கள் பல வகைப்படும். கருட புராணத்தில் சொல்லப் பட்டிருக்கும் தான பலன்கள் என்னென்ன தானம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்வோம்.

    அன்னதானம் – விரும்பிய உலகத்தில் சுகித்திருப்பார்.

    கோ தானம் – கோலோகத்தில் வாழ்வர்.

    பசு கன்றினும் சமயம் தானம் – கட்டாயம் வைகுண்ட வாசம் உண்டு.

    குடை தானம் – 1000 ஆண்டுகள் வருண லோகத்தில் சுகம் அனுபவிப்பார்.

    தாமிரம், நெய், கட்டில், மெத்தை, ஜமக்காளம், பாய் தலையணை இவகளில் ஏதேனும் ஒன்றைத் தானமாக செய்தால் சந்திரலோகத்து சுகங்களை அனுபவிப்பார்.

    வஸ்திர தானம் – 1000 ஆண்டுகள் வாயுலோகத்தில் வாழ்வார்.

    ஆலயத்துக்கு யானை தானம் – இந்திரனுக்குச் சமமான ஆசனத்தில் அமர்ந்திருப்பார்.

    குதிரையும், பல்லக்கும் தானம் – இந்திரன் காலம் வரை வருணலோகத்தில் வாழ்வார்.

    நந்தவனங்களை ஆலயத்துக்கு அளிப்பர் –வாயுலோகத்தில் வாழ்வார்.

    தானியங்கள், நவரத்தினங்கள் தானம் – மறு ஜென்மத்தில் அறிவாளியாகவும், தீர்க்காயுள் கொண்டவராகவும் வாழ்வர்.

    பயன் கருதாது தானம் – மரணம் உன்னதமாய் இருப்பதோடு மீண்டும் பிறவி வாய்ப்பதில்லை.

    பண உதவி – ஸ்வேத தீபத்தில் நெடுங்காலம் வாழ்வார்கள்.

    தாமிரப்பாத்திரத்தில் எள் தானம் – நற்குலத்தில் உதித்து திடகாத்திரமாக கீர்த்தியோடு பிரகாசிப்பார்.

    சுவையான பழங்களைத் தானம் – ஒரு கனிக்கு ஒரு ஆண்டு வீதம் கந்தர்வ லோகத்தில் சுகித்திருப்பார்.

    தண்ணீர் தானம் – கைலாச வாசம் கிட்டும்.

    நற்செயலை விரும்பிச் செய்கிறவர்கள் சூரியலோகத்திற்கு செல்கிறார்கள்.

    தெய்வம் பவனி வரும் வீதிகளைச் செம்மைப்படுத்துபவர் இந்திரலோகத்தில் சுகித்திருப்பார்.

    தானங்களும் அதன் பலன்களும் பற்றி தெரிந்து கொண்டு நமக்கு தேவையான பலனை தரக்கூடிய தானத்தை செய்து பலனை பெறுவோம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உடல் ஆரோக்கியம், நீண்ட ஆயுள் கிடைக்க தன்வந்திரி வழிபாடு செய்யப்படுகிறது.
    • திருமாலின் 24 அவதாரங்களில் 17-வது அவதாரம் தன்வந்திரி அவதாரமாகும்.

    திருமால் மக்களுக்காக மருத்துவராக தோன்றிய நாளே தன்வந்திரி ஜெயந்தியாகும். நோய் வராமல் நல்ல உடல் ஆரோக்கியம், நீண்ட ஆயுள் கிடைக்க தன்வந்திரி வழிபாடு செய்யப்படுகிறது.

    ஸ்ரீ தன்வந்திரி, விஷ்ணு அம்சமாக பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரத்துடனும் முன் வலக்கையில் அட்டைப்பூச்சியை ஏந்தியும், இடக்கையில் அமிர்த கலசத்துடனும் காட்சி அளிக்கிறார்.

    அக்கால மருத்துவமுறையில் நோயாளியின் உடலிலிருந்து கெட்ட ரத்தத்தை உறிஞ்சி எடுத்து நோயை குணமாக்க அட்டைப்பூச்சிகள் பயன்படுத்தப்பட்டனவாம்.


    திருமாலின் 24 அவதாரங்களில் 17-வது அவதாரம் தன்வந்திரி அவதாரமாகும். இந்து மதத்தில் தன்வந்திரி உடல் நலத்திற்காக வழிபடக்கூடிய கடவுள் ஆவார். தன்வந்திரியை தேவர்களின் மருத்துவர் என்றும் கூறலாம்.

    அசுரர்கள் எப்போதும் தேவர்களை துன்பப்படுத்தும் சுபாவம் கொண்டவர்கள். தேவர்களது சொகுசு வாழ்வு தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று அசுரர்கள் தேவர்களுடன் சண்டை இடுவதும் உண்டு.

    தேவர்களைவிட அசுரர்கள் பலசாலிகள். அசுரர்களிடம் இருந்து தங்களைக் காக்குமாறு தேவர்கள் மூம்மூர்த்திகளிடம் சரணடைந்தனர். சாகாவரம் கொண்ட அமிர்தத்தை உண்டால் என்றென்றும் சாவு கிடையாது. அமிர்தத்தை பெற பாற்கடலை தேவர்கள் அசுரர்களின் உதவியுடன் கடைந்தனர்.

    பாற்கடலை கடையும்போது ஆலகால விஷம் வந்தது. அதை சிவபெருமான் எடுத்து கொண்டதால் அதனை அடுத்து காமதேனு, கற்பக விருட்சம், ஐராவதம், மூதேவி, மகாலக்ஷ்மி தோன்றினர்.

    கடைசியாக அமிர்தத்துடன் விஷ்ணுவின் அவதாரமான தன்வந்திரி தோன்றினார். இவரின் திருக்கரத்தில் உள்ள கலசத்திலிருந்து வழங்கிய அமிர்தத்தை தேவர்கள் உண்டதால் சாகாவரம் பெற்றனர்.

    "ஹிமா"என்ற அரசனுக்கு திருமணமான நான்காவது நாள் பாம்பு கடித்து இறக்க நேரிடும் என்ற சாபம் இருந்தது. இதை அறிந்த அவனது 4 வது  நாள் அன்று இரவில் கணவனைச் சுற்றிலும் ஏராளமான விளக்கு ஏற்றி, நடுவே ஆபரணங்களையும் வைத்து கணவனுக்கு புராணக் கதை கூறி தூங்காது பார்த்து கொண்டாளாம்.


    பாம்பு உருவத்தில் வந்த எமன் தீப எண்ணெயில் ஆபரணங்களின் பிரகாசத்தில் கூசவே, காலை வரை காத்திருந்து விட்டு திரும்பி சென்றதாகவும், மனைவி யமனிடம் இருந்து காப்பாற்றியதாகவும் கருக்கதை உள்ளது.

    தன்வந்திரி நாளன்று தன்னை சுற்றிலும் தீபங்கள் ஏற்றி தன் மனைவி காப்பாற்றியது தன்வந்திரி கடவுளே காரணம் என்று மன்னன் நம்பினான். மக்கள் அனைவரையும் தன்திரேயாஸ் தினத்தன்று , இரவில் யமதீபம் ஏற்றி வழிபடவேண்டும் என்று உத்தரவிட்டார்.

    ஐப்பசி மாத அமாவாசை 2 நாட்களுக்கு முன்பாக வரும் திரியோதசி நாளன்று தீபாவளி திருநாள் துவங்கி விடுகிறது. அன்று தன்வந்திரி ஜெயந்தி தன்திரேயாஸ் என்றும் சொல்வர்.

    வைணவ ஆலயங்களில் தன்வந்திரிக்கென்று தனி சந்நிதி உள்ளது. திருவரங்கம் ஆலயத்தில் தன்வந்திரி சந்நிதி பிரசித்தமானது. தன்வந்திரி ஹோமம் செய்வதால் நோய் தீரும். கோவையிலும், கேரளாவிலும் தன்வந்திரி பகவானுக்கு ஆலயம் உள்ளன.

    • இன்று பரணி தீபம்.
    • திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு கார்த்திகை-27 (வியாழக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: துவாதசி இரவு 8.37 மணி வரை பிறகு திரயோதசி

    நட்சத்திரம்: அசுவினி காலை 8.19 மணி வரை பிறகு பரணி

    யோகம்: அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று பரணி தீபம். சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் குதிரை வாகனத்தில் பவனி. திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ முருகப் பெருமான் பட்டாபிஷேகம், தங்கக் குதிரை வாகனத்தில் பவனி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை மற்றும் மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருவண்ணாமலை ஸ்ரீ அருணாச்சல நாயகர் காலை கண்ணாடி விமானத்தில் பவனி. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமான் வழிபாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சனம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி அபிஷேகம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலை சாற்று வைபவம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-முயற்சி

    ரிஷபம்-இன்பம்

    மிதுனம்-சாதனை

    கடகம்-ஆதரவு

    சிம்மம்-புகழ்

    கன்னி-வெற்றி

    துலாம்- சுகம்

    விருச்சிகம்-உறுதி

    தனுசு- சுபம்

    மகரம்-தனம்

    கும்பம்-பக்தி

    மீனம்-அன்பு

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எண்ணற்ற சித்தர்கள் வாழும் பூமியாகவும் திருவண்ணாமலை திகழ்கிறது.
    • பிரம்மா, விஷ்ணு ஆகியோரின் ஆணவம் அழிந்த தலம்.

    காசியில் இறந்தால் முக்தி, திருவாரூரில் பிறந்தால் முக்தி. சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி. ஆனால் திருவண்ணாமலையில் அருள்பாலிக்கும் அண்ணாமலையாரை நினைத்தாலே முக்தி கிடைக்கும் என்பது சொல் வழக்கு.

    பஞ்சபூதத்தில் இது அக்னி தலம். சிவனே மலையாக அமைந்திருக்கும் சிறப்பு மிக்கதலமாக இதுபோற்றப்படுகிறது. அர்த்த நாரீஸ்வரர் கோலத்தில் இறைவன் காட்சி தந்த தலம், கார்த்திகை தீப வழிபாடு உருவாக காரணமான மூல தலம்.


    பிரம்மா, விஷ்ணு ஆகியோரின் ஆணவம் அழிந்த தலம் என்று பல்வேறு சிறப்புகளைக் கொண்டிருக்கிறது. திருவண்ணாமலை.

    அதேநேரம் எண்ணற்ற சித்தர்கள் வாழும் பூமியாகவும் திருவண்ணாமலை திகழ்கிறது. எத்தனையோ சிவ தலங்கள் இருப்பினும் சித்தர்கள் பலரும் தவம் செய்யவும், ஜீவசமாதி அடையவும் திருவண்ணாமலையையே தேர்வு செய்திருக்கிறார்கள்.

    திருவண்ணாமலை ஆன்மிக பூமியாக மட்டுமின்றி, சித்தர்கள் அருவமாக வாழும் பூமியாகவும் இருக்கிறது. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் மலையானது, எப்போது தோன்றியது என்ற துல்லியமான கணிப்பு இதுவரை இல்லை.

    பிரபஞ்சம் தோன்றியதில் இருந்தே இந்த மலை இருப்பதாகவும், இந்த மலை ஒவ்வொரு யுகத்திலும், ஒவ்வொரு விதமாக காட்சி தருவதாகவும் சொல்லப்படுகிறது.

    கிருதாயுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகாவும் இருந்த இந்த சிவன் மலை, தற்போதைய கலியுகத்தில் கல் மலையாக நம் கண்களுக்கு காட்சி தருகிறது.


    'அண்ணுதல்' என்றால் 'நெருங்குதல்' என்று பொருள். 'அண்ணாமலை' என்பதற்கு நெருங்கவே முடியாத' என்ற பொருளை தருகிறது. பிரம்மாவாலும், விஷ்ணுவாலும் சிவனின் அடியையும். முடியையும் நெருங்கவே முடியாததால் 'அண்ணாமலை' என்ற பெயர் பெற்றது.

    'அருணம்' என்றால் சிவப்பு நிறத்தில் இருக்கும் நெருப்பு, 'சலம்' என்றால் மலையைக் குறிக்கும். சிவபெருமான் சிவப்பு நிறத்தில் - எரியும் நெருப்பு மலையாக இருப்பதால் சிவபெருமானுக்கு அருணாச்சலேஸ்வரர்' என்ற பெயர் வந்தது.

    • இன்று சர்வ ஏகாதசி.
    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு கார்த்திகை-26 (புதன்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: ஏகாதசி இரவு 10.54 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம்: ரேவதி காலை 9.57 மணி வரை பிறகு அசுவினி

    யோகம்: மரணயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சர்வ ஏகாதசி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசல நாயகர் காலை வெள்ளி விமானத்திலும் குதிரை விமானத்திலும் பவனி. சுவாமிமலை முருகப் பெருமான் காமதேனு வாகனத்தில் புறப்பாடு. திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருப்புளிங்குடி மூலவர் ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவில் அபிஷேகம். ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு. விருதுநகர், வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமானுக்கு காலையில் அபிஷேகம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்ட ராம சுவாமிக்கு திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஊக்கம்

    ரிஷபம்-அமைதி

    மிதுனம்-ஓய்வு

    கடகம்-பக்தி

    சிம்மம்-தனம்

    கன்னி-மேன்மை

    துலாம்- சிறப்பு

    விருச்சிகம்-திறமை

    தனுசு- நற்செயல்

    மகரம்-பணிவு

    கும்பம்-ஆர்வம்

    மீனம்-சாதனை 

    • 13-ந்தேதி காலை பரணி தீபம், மாலை 6 மணிக்கு மகா தீபம்.
    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 13-ந் தேதி காலை பரணி தீபம் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

    தீபத் திருவிழாவை யொட்டி தொடர்ந்து இரவு மாட வீதிகளில் அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் வீதி உலா நடந்து வருகிறது. நேற்று இரவு வெள்ளி தேரோட்டம் நடைபெற்றது.

    தீபத் திருவிழாவில் 7-வது நாளான இன்று பஞ்ச மூர்த்திகள் 5 தேர்கள் வலம் வரும். மகா தேரோட்டம் நடந்தது. காலை 6.36 மணிக்கு விநாயகர் தேர் புறப்பாடு நடைபெற்றது. ஒருபுறம் ஆண்களும் மறுபுறம் பெண்களும் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

    இதைத்தொடர்ந்து விநாயகர் தேர் நிலைக்கு வந்த பிறகு முருகர் தேரோட்டம் நடைபெறும். மதியம் அருணாசலேஸ்வரர் மகாதேரோட்டம் நடைபெறும்.

    தேரோட்டத்தில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    இதனைத் தொடர்ந்து பெண்களால் இழுக்கப்படும் பராசக்தி அம்மன் தேரோட்டமும், சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடைபெறுகிறது.

    பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெற்றதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.

    ரத வீதிகளில் அண்ணா மலையாருக்கு அரோகரா என்ற கோஷம் எழுப்பியபடி பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர்.

    ராஜகோபுரம் முன்பு ஏராளமான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். இதனால் அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதிகளில் பக்தர்கள் பரவசத்துடன் காணப்பட்டனர்.


    கார்த்திகை தீபத்திருவிழாவில் தேரோட்டம் நடைபெறும் நாளன்று நேர்த்தி கடனாக கரும்பில் சேலையால் தொட்டில் கட்டி தங்கள் குழந்தையை சுமந்தபடி மாட வீதியை வலம் வருவார்கள்.

    அதன்படி, இன்று ஏராளமான பக்தர்கள் கரும்பு தொட்டில் அமைத்து மாட வீதியை வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

    தேரோட்டத்தையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 6000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டன.

    • சுலோகங்களை பாடி, கற்பூரம் தீபாராதனை செய்து வழிபடுங்கள்.
    • விளக்குகளை அணைப்பதற்கும் விதிகள் உண்டு.

    தீபாவளிக்கு தீபங்களை வரிசைப்படுத்தி வழிபாடு செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் தீபாவளியில் அப்படி வழிபடும் வழக்கம் தமிழகத்தில் இல்லை. ஆனால் திருக்கார்த்திகை திருநாளில், ஒவ்வொரு வீட்டையும், அகல் விளக்குகள் அலங்கரிக்கும் என்பதை அனைவரும் அறிவர்.

    அன்றைய தினம் இல்லங்கள் தோறும் பல்வேறு எண்ணிக்கையில் அகல் விளக்குகளை ஏற்றி, மக்கள் இறை வழிபாட்டை மேற்கொள்வர்.


    தமிழ்நாட்டில் திருவிளக்கு இறைவனின் பிரதிநிதியாக பார்க்கப்படுவதால், அதற்கான மரியாதையை நாம் அளிக்க வேண்டும். பூஜைக்கு ஏற்றப்படும் திருவிளக்கிற்கு பால், சர்க்கரை, கற்கண்டு போன்றவற்றை நைவேத்தியமாகவும், கார்த்திகை தீபத்தன்று அவல், பொரியில் வெல்லப் பாகு சேர்த்தும், கார்த்திகை பொரி படைத்தும் வழிபாடு செய்யுங்கள்.

    கார்த்திகை தீபத் திருநாள் அன்று அகல் விளக்குகளை சுவாமி அறையில் ஏற்றி, தெரிந்த சுலோகங்களை பாடி, கற்பூரம் தீபாராதனை செய்து வழிபடுங்கள். விளக்குகளை அணைப்பதற்கும் விதிகள் உண்டு.

    வெறும் வாயினால் ஊதி விளக்கை அணைக்கக் கூடாது. பூ அல்லது நீர்த் துளி, பால் துளியைக் கொண்டு விளக்கினை அமர்த்த வேண்டும்.


    தீபத்தை வடக்கு திசை நோக்கி ஏற்றுவது அறிவு வளர்ச்சியும், செல்வ வளர்ச்சியும் தரும். கிழக்கு திசையில் ஏற்றுவது துன்பங்களை நீக்கும்.

    மேற்கு திசையில் ஏற்றுவது கடன் தொல்லைகளையும், தோஷங்களையும் போக்கும். ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் தெற்கு திசையில் தீபங்களை ஏற்றக்கூடாது.

    • லிங்கோத்பவர் சிற்பமானது ஒரு நீள்வட்ட வடிவில் அமைந்திருக்கும்.
    • பாதங்கள் பூமியில் புதைந்திருக்கும். தலை வானில் மறைந்திருக்கும்.

    பெரும்பாலான சிவாலயங்களில் கருவறையைச் சுற்றிவரும் போது, சன்னிதிக்கு நேர் பின்புறம் 'லிங்கோத்பவர்' இருப்பதைக் காணலாம். இவரே அடி முடி காண முடியாத அண்ணாமலையார். ஆம்.. இவரது சிற்பமானது ஒரு நீள்வட்ட வடிவில் அமைந்திருக்கும்.

    அதனும் அவரது பாதங்கள் பூமியில் புதைந்திருக்கும். தலை வானில் மறைந்திருக்கும். அவரது தலைப்பகுதியை ஒட்டி அன்னமும், கால் அடியில் பன்றியும் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

    விஷ்ணுவும், பிரம்மாவும் இறைவனின் அடி முடியைக் காண்பதற்காக சென்ற நிகழ்வை கண் முன் நிறுத்தும் வகையில்தான் இந்த 'லிங்கோத்பவர்' சிற்பம் அமைந்திருக்கும்.


    சிவன் லிங்க வடிவமாக உள்ளார். லிங்கம் என்பது நீள் வட்ட வடிவம் கொண்டது. சதுரம், செவ்வகம், முக்கோணம் எதுவாக இருந்தாலும் அதற்கு ஆரம்ப இடமும், முடியும் இடமும் உண்டு. ஆனால் வட்டத்துக்கு ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை.

    சிவனும் அதே போல, ஆதியும் அந்தமும் இல்லாதவர் என்பதை உணர்த்தவே, அவா் சிவலிங்க வடிவமாகவும், லிங்கோத்பவர் வடிவமாகவும் அருள்கிறார்.

    திருவண்ணாமலையில் பிரம்மாவுக்கும் திருமாலுக்கும் ஒளி வடிவில் ஈசன் காட்சி கொடுத்த தினம் சிவராத்திரி என்கிறார்கள். அந்த காலத்தை 'லிங்கோத்பவர் காலம்' என்றும் சொல்வார்கள்.

    இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையான நேரமே லிங்கோத்பவர் காலம். ஆண்டு தோறும் வரும் மகா சிவராத்திரி அன்று, இந்த நேரத்தில் லிங்கோத்பவர் அருள்காட்சி தருவார்.

    • பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலமாக விளங்குகிறது.
    • லட்சக்கணக்கான பக்தர்கள், கிரிவலம் வந்து இறைவனை வழிபாடு செய்வார்கள்.

    சிவபெருமான் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அற்புத ஆலயங்கள் எண்ணற்றவை இருந்தாலும், அதில் முதன்மையானதாக, பழம் பெருமை கொண்டதாக இருப்பது, திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோவில்.

    பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஆலயமாகவும் விளங்கும் இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருநாள் மிகவும் விசேஷம். இந்த நாளில் இங்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள், கிரிவலம் வந்து இறைவனை வழிபாடு செய்வார்கள்.


    கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. இருப்பினும் கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்தபுராணத்தில் சொல்லப்பட்டுள்ள நிகழ்வுதான், அதற்கான அடிப்படையாக பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

    அதன்படி விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் இடையே, 'யார் பெரியவர்?' என்ற போட்டி ஏற்பட்டது. அவர்களின் பிரச்சனை சிவபெருமானிடம் சென்றது. சிவபெருமான் தன்னை ஒரு தீப வடிவமாக மாற்றி, விண்ணுக்கும், மண்ணுக்குமாக உயர்ந்து நின்றார். அவரது அடி முடியில் ஒன்றை யார் முதலில் கண்டு வருகிறார்களோ, அவரே பெரியவர் என்று முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி அடியைத் தேடி வராக (பன்றி) வடிவம் எடுத்து விஷ்ணுவும், முடியைத் தேடி அன்னப் பறவை உருவம் கொண்டு பிரம்மனும் புறப்பட்டனர். பல நூறு ஆண்டுகள் கடந்தபிறகும் கூட, அவர்கள் இருவராலும் சிவபெருமானின் அடியையோ, முடியையோ காண முடியவில்லை.


    இதனால் தான் ஈசனை, 'அடிமுடி காண முடியாத அருட்பெருஞ்சோதி' என்று அழைக்கிறோம். இறுதியில் இருவரும் தங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டனர்.

    பின்னர் அவர்கள் தங்களுக்கு ஜோதி வடிவில் அருட்காட்சி வழங்கியதுபோல, அனைவருக்கும் அருள வேண்டும் என்று வேண்டினர்.

    மேற்கண்ட நிகழ்வு நடைபெற்ற இடம் திருவண்ணாமலை திருத்தலம் என்பதால், அங்கு ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருநாளின் மாலை வேளையில், 2668 அடி உயர மலையில் தீபம் ஏற்றப்படும்.

    ஜோதி வடிவில் உயர்ந்து நின்ற சிவபெருமான் தான், இங்கு மலை வடிவில் இருப்பதாக ஐதீகம். திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் ஆலயம், பஞ்ச பூதத் திருத்தலங்களில் அக்னி தலமாக விளங்குகிறது. திருவண்ணாமலை சென்று தீப வழிபாடு செய்ய அனைவராலும் இயலாது.

    அதே நேரம் இறைவனை தங்கள் வீட்டிலும் ஜோதி வடிவில் வணங்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான், கார்த்திகை தீபத் திருநாள் அன்று, அனைவரது வீடுகளிலும் அகல் விளக்கில் தீபம் ஏற்றி வணங்குகிறார்கள்.


    விரதம் இருக்கும் முறை

    கார்த்திகை தீபத் திருநாளுக்கு முன்தினமான பரணி நட்சத்திரம் அன்று, பகல் நேரத்தில் மட்டும் ஒரு வேளை உணவு சாப்பிட வேண்டும். மறுநாள் அதிகாலையில் நீராடி, இறைவனை வழிபட்ட தண்ணீர் மட்டும் பருக வேண்டும்.

    அன்று முழுவதும் உணவைத் தவிர்த்து இரவு கோவிலுக்குச் சென்று இறைவனை தரிசிக்க வேண்டும். மறுநாள் காலையில் நீராடி, பால் அருந்தி விரதத்தை நிறைவு செய்யலாம். தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் இந்த விரதத்தை கடைப்பிடித்து வருபவர்களுக்கு, மறுபிறப்பு இல்லை. சந்ததியினர் பெரும் புகழோடு வாழ்வர் என்பது ஐதீகம்.


    விளக்குகளின் வகைகள்

    பஞ்சலோகம், வெள்ளி விளக்கு, பாவை விளக்கு, சர விளக்கு, காமாட்சி விளக்கு, குத்து விளக்கு, கோடி விளக்கு, தூண்டா மணி விளக்கு, அகல் விளக்கு எனப் பல வகைகள் இருந்தாலும், அவரவர் வசதிகேற்ப மனத் தூய்மையுடன் மண்ணால் செய்யப்பட்ட அகல்விளக்கையாவது வீடுகளில் ஏற்றி வைத்து இறைவனை வழிபட வேண்டும்.

    கார்த்திகை தீபத் திருநாளில் மட்டும் அல்லாது, அனைத்து நாட்களிலுமே, அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன்பாகவும், மாலையில் சூாியன் மறைவதற்கு முன்பாகவும், வீட்டில் வாசல் தெளித்து கோலமிட்டு, பூஜை அறையிலும், வீட்டின் வாசல் படியிலும் விளக்கு ஏற்றலாம். இதனால் நேர்மறை சக்திகள் நம்மை சூழ்ந்து, வாழ்வில் இருள் விலகி ஒளி பிறக்கும்.

    ×