என் மலர்tooltip icon

    வழிபாடு

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜோதிட சாஸ்திரம் மார்கழி மாதத்தை 'தனுர் மாதம்' என்று குறிப்பிடுகிறது.
    • மார்கழி மாதத்தில்தான் சிவனுக்கு உகந்த திருவாதிரை திருவிழா வருகிறது.

    மார்கசீர்ஷம் - வடமொழியில் மார்கழி மாதத்தை குறிக்கும் சொல். 'மார்கம்' என்பது 'வழி' என்று பொருள்படும். 'சீர்ஷம்' என்பது 'தலை சிறந்தது அல்லது உயர்ந்தது' என்ற பொருளைத் தரும். இறைவனை அடைவதில் உயர்ந்த மாதமாக மார்கழி மாதம் இருக்கிறது என்பதையே 'மார்கசீர்ஷம்' என்ற சொல் நமக்கு உணர்த்துகிறது.

    சூரிய பகவான் தனுசு ராசியில் பிரவேசிக்கும் மாதம் என்பதால், ஜோதிட சாஸ்திரம் மார்கழி மாதத்தை 'தனுர் மாதம்' என்று குறிப்பிடுகிறது. இந்த மாதம் ஒரு வழிபாட்டு மாதமாகும்.


    'மாதங்களில் நான் மார்கழி' என்று பகவான் மகாவிஷ்ணு கூறியுள்ளார். இந்த மாதத்தில் தனுசு ராசியில் குருவின் வீட்டில் சூரியன் குடியேறுகிறார்.

    மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். தை மாதம் தொடங்கி ஆனி வரை தேவர்களுக்கு பகல் பொழுதாகவும், ஆடி மாதம் முதல் மார்கழி வரை இரவுப்பொழுதாகவும் அமையும். அப்படிப் பார்க்கும்போது அதிகாலையான பிரம்ம முகூர்த்தம், தேவர்களுக்கு மார்கழி மாதம் வருகிறது.

    தேவர்களுக்கான பிரம்ம முகூர்த்தம் என்பதால், இந்த மார்கழி மாதம் மனிதர்களுக்கு சிறந்த வழிபாட்டுக்குரிய மாதமாக போற்றப்படுகிறது.

    சிறப்புகள் நிறைந்த மார்கழி மாதத்தில் அதிகாலையில் குளித்து விட்டு பாவை நோன்பு இருந்தால் மனதிற்கு பிடித்த கணவன் கிடைப்பார் என்பது நம்பிக்கை. மகத்துவம் நிறைந்த மார்கழியில் உலக நாட்டங்களைக் குறைத்து, இறைவனிடமும் அவர் திருவடி சார்ந்த செயல்பாடுகளிலுமே மனம் ஒன்ற வேண்டும் என்பதற்காகத்தான் வேறெந்த நிகழ்வுகளையும் நடக்காமல் பார்த்துக் கொண்டார்கள்.

    அதன் வழியொட்டியே மார்கழியில் சுப நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதே நேரம் இறைவனிடம் மனம் லயிக்க வேண்டும் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.


    மார்கழியில் அதிகாலை எழுந்து குளித்து விட்டு வாசல் தெளிப்பது மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் புத்துணர்ச்சி தரும். சூரியனிடம் இருந்து வருகிற ஓசோனின் தாக்கம் மார்கழி அதிகாலையில் அதிகமாக இருக்கும்.

    இதனால் அதிகாலையில் வெளியே வருவதால் அந்த காற்றும், கதிரும் உடலை வலிமைப்படுத்தும் என்பதால்தான் அதிகாலை குளியலை முன்னோர்கள் அறிமுகம் செய்திருக்கிறார்கள்.

    மார்கழி மாதத்தில்தான் சிவனுக்கு உகந்த திருவாதிரை திருவிழா வருகிறது. சிவபெருமானின் பக்தைகள் நோன்பு நோற்பதற்காகத் தோழியை எழுப்பச் செல்லும் காட்சி திருவெம்பாவையிலும் வருகிறது.

    சிவனுடைய அடியார்களே கணவனாக வர வேண்டும், அவனோடு சேர்ந்து சிவனைத் தொழ வேண்டும் என்பதே திருவெம்பாவையில் வருகிற பாவை நோன்பின் நோக்கம்.

    மார்கழி மாதத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு வாசலில் கோலமிடுவது தொன்றுதொட்டு நடந்துவருகிறது. மாட்டுச் சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபடுவதும் நடக்கும்.

    மாட்டுச்சாண உருண்டையில் பூசணிப்பூவை செருகி, கோலத்துக்கு நடுவே வைப்பது மார்கழி முழுக்கவே நடைபெறும். சில வீடுகளில் அந்தப் பூ உருண்டையை வரட்டியாகத் தட்டி சேகரித்து சிறுவீட்டு பொங்கலன்று ஆற்றில் விடுவார்கள்.


    மார்கழி மாதத்தில் பல புராதன நிகழ்வுகளும் நடந்துள்ளன. மகாபாரத யுத்தம் மார்கழி மாதத்தில் நடைபெற்றதாக இதிகாசம் கூறுகிறது. திருப்பாற்கடல் கடையப்பட்டபோது, முதலில் விஷம் எழுந்ததும், சிவன் அதனை உண்டு உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றியதும் இதே மார்கழி மாதத்தில்தான்.

    இந்திரனால் பெரு மழை வெள்ளம் உருவாக்கப்பட்டு கோகுலத்தில் அனைவரும் துன்பப்பட்டபோது, கோவர்த்தனகிரி மலையை, கிருஷ்ணர் குடையாகப் பிடித்து மக்களை காப்பாற்றியதும் இந்த மார்கழி மாதத்தில்தான்.

    மகாவிஷ்ணுவுக்கு உகந்த வைகுண்ட ஏகாதசி வருவது மார்கழியில்தான். பெண்கள் அதிகாலையில் நீராடி பாவை நோன்பு நோற்று பெருமாளை வணங்கி திருப்பாவை பாடுகின்றனர். அந்த கண்ணனே தங்களுக்கு கணவனாக வரவேண்டும் என்பது பல பெண்களின் கனவாக உள்ளது.

    அனுமன் ஜெயந்தி வருவதும் இந்த மார்கழியில்தான். இவ்வளவு சிறப்புவாய்ந்த மார்கழியில் விடியற்காலம் விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது மற்றும் திருப்பாவை படிக்க இறைவன் அருள் கிடைக்கும்.

    • இன்று பவுர்ணமி, பாஞ்சராத்ர தீபம்.
    • திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு கார்த்திகை-30 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: வளர்பிறை.

    திதி: பவுர்ணமி பிற்பகல் 3.13 மணி வரை. பிறகு பிரதமை.

    நட்சத்திரம்: மிருகசீரிஷம் பின்னிரவு 3.37 மணி வரை. பிறகு திருவாதிரை.

    யோகம்: சித்தயோகம்.

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று பவுர்ணமி, பாஞ்சராத்ர தீபம். ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி பால்அபிஷேகம். திருவண்ணாமலை ஸ்ரீஅபித்குசாம்பிகை ஸ்ரீஅருணாசல நாயகர் கைலாசகிரி பிரதட்சணம், ஸ்ரீபராசக்தி அம்மன் தெப்பம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள சன்னதி எதிரில் உள்ள ஸ்ரீஅனுமனுக்கு திருமஞ்சன சேவை. சூரியனார்கோவில் ஸ்ரீசூரியநாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள கோவில் குளக்கரை ஸ்ரீஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சல் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீஅங்காரகருக்கும் ஸ்ரீசெல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீவாஞ்சியநாத சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. சாத்தூர் ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-லாபம்

    ரிஷபம்-பக்தி

    மிதுனம்-வெற்றி

    கடகம்-பண்பு

    சிம்மம்-பணிவு

    கன்னி-சுபம்

    துலாம்- நன்மை

    விருச்சிகம்-சாதனை

    தனுசு- கீர்த்தி

    மகரம்-மேன்மை

    கும்பம்-வரவு

    மீனம்-ஜெயம்

    • மகாதீபத்தை வருகின்ற 23-ந் தேதி வரை தரிசிக்கலாம்.
    • ஆருத்ரா தரிசனம் நாளில் நடராஜ பெருமானுக்கு திலகமிடப்பட்ட பின்னர் பிரசாதமாக வழங்கப்படும்.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப விழாவையொட்டி நேற்று மகாதீபம் ஏற்றப்பட்டது.

    அண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி தரும். தினசரி மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் தீபம் மறுநாள் காலை 6 மணிக்கு குளிர்விக்கப்படும். மகாதீபத்தை வருகின்ற 23-ந் தேதி வரை தரிசிக்கலாம்.

    11 நாட்கள் நிறைவடைந்த பின்னர் தீப கொப்பரை எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இதைத் தொடர்ந்து ஆயிரம் கால் மண்டபத்தில் தீப கொப்பரை பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஆருத்ரா தரிசனம் நாளில் நடராஜ பெருமானுக்கு திலகமிடப்பட்ட பின்னர் பிரசாதமாக வழங்கப்படும்.

    நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பல்வேறு வாகனங்களில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீ உண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாச லேஸ்வரர், ஸ்ரீபரா சக்தியம்மன், ஸ்ரீசண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் பவனி நடைபெற்றது.

    தீபத்திருவிழாவின் தொடர் நிகழ்வாக, இன்று இரவு ஸ்ரீசந்திரசேகரர் தெப்பல் உற்சவமும், நாளை இரவு ஸ்ரீபராசக்தியம்மன் தெப்பல் உற்சவமும், நாளை மறுதினம் இரவு ஸ்ரீசுப்பிரமணியர் தெப்பல் உற்சவமும் நடைபெறுகின்றன. 

    • இன்று சர்வாலய தீபம், வைகாசன தீபம். பவுர்ணமி பூஜை.
    • ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீமுருகப் பெருமான் திருவீதியுலா.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு கார்த்திகை-29 (சனிக்கிழமை)

    பிறை: வளர்பிறை.

    திதி: சதுர்த்தசி மாலை 4.15 மணி வரை. பிறகு பவுர்ணமி.

    நட்சத்திரம்: ரோகிணி நாளை காலை 4.16 மணி வரை. பிறகு மிருகசீரிஷம்.

    யோகம்: அமிர்த, சித்தயோகம்.

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சர்வாலய தீபம், வைகாசன தீபம். பவுர்ணமி பூஜை. ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீமுருகப் பெருமான் திருவீதியுலா. மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி புறப்பாடு. திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசல நாயகர் சந்திரசேகரர் தெப்போற்சவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் மதுரை ஸ்ரீகூடலழகர், திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சன சேவை. குச்சனூர் ஸ்ரீசனிபகவான் திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜ மூலவர், கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் கோவிலில் வரதராஜ மூலவர் தலங்களில் திருமஞ்சனம். திருவட்டாறு ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில், ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன அலங்கார சேவை. திருஇந்தளூர் ஸ்ரீபரிமளரெங்கராஜ பெருமாள், திருச்சேறை ஸ்ரீசாரநாதப் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சனம். ஆழ்வார்திருநகர் ஸ்ரீநம்மாழ்வார் புறப்பாடு. திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் புறப்பாடு. திருமொகூர் ஸ்ரீகாளமேகப் பெருமாள் ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீைவகுண்டபதி திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நிறைவு

    ரிஷபம்-பக்தி

    மிதுனம்-மாற்றம்

    கடகம்-வெற்றி

    சிம்மம்-விருப்பம்

    கன்னி-ஜெயம்

    துலாம்- நட்பு

    விருச்சிகம்-தெளிவு

    தனுசு- மகிழ்ச்சி

    மகரம்-தாமதம்

    கும்பம்-வரவு

    மீனம்-சுகம்

    • அதிகாலை 4 மணியளவில் கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
    • கோவில் வளாகத்தில் சரியாக மாலை 6 மணிக்கு அர்த்தநாரீஸ்வரர் தனி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை நேரங்களில் பிரகாரத்தில் சாமி, அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகள் உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.

    10-ம் திருநாளான இன்று அதிகாலை அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை, சிறப்பு ஹோமம் ஆகியவை நடந்தது.

    இதைத்தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அர்த்த மண்டபத்தில் யாகம் வளர்த்து அதிலிருந்து பரணி தீபத்தை சிவாச்சாரியார்கள் ஏற்றினர்.

    பரணி தீபம் சன்னதியில் இருந்து கொண்டு செல்லப்பட்டு வைகுண்ட வாசல் வழியாக மகா தீப மலைக்கு காட்டப்பட்டது. பிறகு, பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் பரணி தீபம் மூலம் 5 விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது. ஒவ்வொரு சன்னதியாக கொண்டு செல்லப்பட்டு அங்கு தீபம் ஏற்றப்பட்டது.

    மூலவர் சன்னதி வழியாக உண்ணாமலை அம்மன் சன்னதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் "அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா "என்று கோஷம் விண்ணதிர எழுப்பி வணங்கினர்.

    இதைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணி அளவில் அண்ணாமலை உச்சியில் விண்ணை பிளக்கும் பக்தர்களின் கோஷம் முழுங்க மகாதீபம் ஏற்றப்பட்டது.

    முன்னதாக, கோவில் வளாகத்தில் சரியாக மாலை 6 மணிக்கு அர்த்தநாரீஸ்வரர் தனி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதே நேரத்தில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

    அப்போது கோவில் கொடிமரம் எதிரே உள்ள அகண்டத்திலும் தீபம் ஏற்றப்பட்டது. மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிக்கும். 40 கிலோ மீட்டர் வரை மகா தீப ஜோதி தரிசனத்தை பார்க்க முடியும்.

    கோவில் வளாகம் முழுவதும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் கோவில் வளாகத்தில் செய்யப்பட்டு இருந்த மின்விளக்கு அலங்காரமும் பக்தர்கள் மனதை வெகுவாக கவர்ந்தது.

    • ஐயப்ப பக்தர்கள் இரவு நேர பயணத்தை எச்சரிக்கையுடன் மேற்கொள்ள வேண்டும்.
    • பம்பை திரிவேணியிலும் குளிக்க தடை விதிக்கப்படும்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நடந்துவருவதை முன்னிட்டு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த ஆண்டு பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்ய திருவிதாங்கூர் தேவசம்போர்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

    இதன் காரணமாக மண்டல பூஜை தொடங்கியதில் இருந்தே பக்தர்கள், நெரிசலில் சிக்கி அவதிக் குள்ளாகாமல் சன்னிதானத்துக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடிகிறது. விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் சன்னிதானம் அருகே உள்ள வலிய நடைப் பந்தலில் பெரும்பாலான நேரங்களில் பக்தர்கள் நீண்டநேரம் காத்து நிற்பதை காண முடிவதில்லை.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கேரள மாநி லத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. சபரிமலையிலும் அவ்வப் போது மழை பெய்தது. இருந்தபோதிலும் மழையை பொருட்படுத்தாமல் யாத்திரை மேற்கொண்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தார்கள்.

    இந்தநிலையில் சபரி மலையில் நேற்று முதல் கன மழை பெய்து வருகிறது. கனமழை மற்றும் மூடுபனியை பொருட்படுத்தாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அங்கு இன்றும் மழை பெய்தது. பக்தர்கள் மழையை பொருட்படுத்தா மல் மலையேறி சென்றபடி இருந்தனர்.


    ஏராளமான பக்தர்கள் மழை கோர்ட்டு அணிந்தபடி வந்து சாமி தரிசனம் செய்தார்கள். மேலும் சில நாட்களுக்கு மழை தொடரும் என்பதால் சபரிமலை வரக்கூடிய பக்தர்கள் கவனமுடன் யாத்திரையை தொடருமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

    ஐயப்ப பக்தர்கள் இரவு நேர பயணத்தை எச்சரிக்கையுடன் மேற்கொள்ள வேண்டும் என்று பத்தினம்திட்டா மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    பம்பை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து இருப்பதால் திரிவேணி பகுதியை தவிர மற்ற இடங்களில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பம்பை ஆற்றில் நீர்வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில் பம்பை திரிவேணியிலும் குளிக்க தடை விதிக்கப்படும்.

    மழை தொடர வாய்ப்பு இருப்பதால் பத்தினம்திட்டா மாவட்டத்தில் வருகிற 18-ந்தேதி வரை அனைத்து குவாரிகள் மற்றும் மலை உச்சியில் இருந்து மண் வெட்டுதல், ஆழமாக தோண்டுதல், மண் அள்ளுதல் உள்ளிட்ட பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

    • வாகனங்களில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஆயிரக்கணக்கான மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா 5-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    முருகனின் ஆறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாக போற்றப்படும் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் திருக்கார்த்திகை திருவிழா 4-ம் தேதி புதன்கிழமை இரவு 7 மணிக்கு அணுகை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி மறுநாள் 5-ம் தேதி வியாழக்கிழமை திருக்கார்த்திகை திருவிழா கொடியேற்றம் விநாயகர், வள்ளி, தேவசேனா, சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி பரிவாரங்களுடன் மலைக்கோயிலில் இருந்து உற்சவ மண்டபம் எழுந்தருலுதல் நிகழ்ச்சியும், இரவு யாகசாலை பூஜை சுவாமி திருவீதி உலா திக் பந்தனம் நிகழ்ச்சியும் நடை பெற்றது.

    தொடர்ந்து 8 நாட்கள் படிச்சட்டத்தில், ஆட்டுக்கிடா வாகனம், பஞ்சமூர்த்திகள் சப்பரம், யானை வாகனம், காமதேனு வாகனம், வெள்ளிக் குதிரை வாகனம், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதன் தொடர்ச்சியாக இன்று 13-ம் தேதி வெள்ளிக்கிழமை திருக்கார்த்திகையை முன்னிட்டு காலை 9 மணிக்கு மேல் திருத்தேர் திருவிழா நிகழ்ச்சி நடைபெற இருந்தது.

    திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு கடந்த சில நாட்களாக திருத்தேர் அலங்கரிக்கப்பட்டு இன்று தேரோட்ட நிகழ்ச்சிக்காக தயார் நிலையில் இருந்தது.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக இந்த பகுதியில் பெய்த மழையின் காரணமாக சுவாமிமலை தேர் முழுவதும் நனைந்து விட்டது. இதைத் தொடர்ந்து சுவாமிமலை சுவாமிநாத சாமி திருக்கார்த்திகை தேரோட்டம் நடத்துவதா இல்லையா என்று அதிகாரிகள் மற்றும் கோவில் சிவாச்சாரியார்கள் ஆலோசனை நடத்தினர்.

    பின்னர் 9.15 மணிக்கு தேரோட்டம் நடை பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்திருந்தனர்.

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்.
    • மலைக்குச் செல்ல இன்று அனுமதி ரத்து.

    திருப்பரங்குன்றம்:

    முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 5-ந்தேதி கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் அன்ன வாகனம், வெள்ளி பூத வாகனம், காமதேனு வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    விழாவின் 8-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று மாலை சுப்பிரமணிய சுவாமிக்கு நவரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை கார்த்திகை தேரோட்டம் நடைபெற இருந்த நிலையில் மழை காரணமாக சிறிய பல்லக்கில் சுவாமி ரத வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    முன்னதாக உற்சவர் சந்தையில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு பால், சந்தனம், திரவிய பொடி உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் 16 கால் மண்டபம் அருகே உள்ள சகடை தேரில் சுப்பிர மணியசுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார். அங்கு சுவாமி ரத விதிகள் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இன்று மாலை 6 மணிக்கு கோவிலில் பாலதீபம் ஏற்றப்பட்டு மலை மேல் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதற்காக திருவண்ணாமலை இருந்து நிபுணர் குழுவினர் வந்து தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

    மலை மேல் 3½ அடி உயரம் 2½ அடி அகலம் கொண்ட தாமிர கொப்பரையில் 150 லிட்டர் நெய் 100 மீட்டர் காடா துணி 5 கிலோ கற்பூரம் கொண்டு மலை மேல் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

    விழாவில் நிறைவு நாள் நிகழ்ச்சியாக நாளை தீர்த்த உற்சவம் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா பாலாஜி, அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணி செல்வம், பொம்ம தேவன், ராமையா மற்றும் கோயில் துணை ஆணையர் சூரிய நாராயணன், கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருப்பரங்குன்றம் பழைய படிக்கட்டு பாதை, புதிய படிக்கட்டு பாதை, கோவில் வாசல்,பேருந்து நிலையம் என நகர் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மலைக்குச் செல்ல இன்று அனுமதி ரத்து செய்யப்பட்டு உரிய அனுமதி சீட்டு இருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். அத்து மீறி யாரும் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக மலையை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

    • பரணி நட்சத்திரத்தன்று கொண்டாடப்படும் விழா என்பதால் பரணி தீபம் என்று கூறுவார்கள்.
    • ஐந்து அகல் விளக்கில் ஐந்து விளக்குகளாக தோற்றிவிப்பார்கள்.

    கார்த்திகை தீபம் என்றாலே உலகில் உள்ள சிவபக்தர்களின் நினைவில் தோன்றுவது திருவண்ணாமலை. கார்த்திகை மாதத்தில் பரணி நட்சத்திரத்தன்று கொண்டாடப்படும் விழா என்பதால் ஏற்றப்படும் தீபத்தை பரணி தீபம் என்று கூறுவார்கள்.

    கார்த்திகை தீபத்தன்று காலையில் அருணாசலேஸ்வரர் ஆலயத்தில், மூலஸ்தானத்தில் ஓர் விளக்கை ஏற்றி அதை ஐந்து அகல் விளக்கில் ஐந்து விளக்குகளாக தோற்றிவிப்பார்கள்.


    ஓர் விளக்கை தத்துவரீதியாக ஏகன் என்றும், பரம்பொருள் என்றும், அதுவே ஐந்தாக வடிவம் எடுக்கும்போது அநேகன் என்றும் பரம்பொருளில் (ஒளிவடிவம்) ஐந்து பஞ்சபூதங்களால் உருவாகும் மனித உடலை, பஞ்ச தீபங்களாக உருவாக்கி அதன் பின் அன்று மாலையே அர்த்தநாரீஸ்வரர் நிகழ்ச்சியில் ஐந்து தீப விளக்குகள் ஒன்றாக ஏகனாக மக்களுக்கும் மாலை கொடிமரத்தின் முன் ஐந்து பஞ்சமூர்த்திகள் முன்பாக ஒற்றை தீபமாக ஏற்றப்படுகிறது.

    பரம்பொருளில் இருந்து தோன்றி அனைத்து பொருட்களும் இறுதியில் அடைவது பரம்பொருளிலே என்பதை விளக்கின் நிகழ்ச்சி மூலமாக இந்த தத்துவத்தை விளக்குகிறது.


    மாலையில் ஏற்றப்படும் தீபம் மகாதீபம் என்று அழைக்கப்படுகிறது ஏன் என்றால் மலை மீது மிகப்பெரிய தீபம் என்பதாலும் இத்தகைய புண்ணியம் வாய்ந்த இந்த திருத்தலத்தில் கூடுதல் புண்ணியமாக விசிறி சாமியார் என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படும் யோகிராம் சுரத்குமார், ரமண மகரிஷி, குகை நமச்சிவாயர், அருணகிரி நாதர், ஈசான்ய ஞான தேசிகர், மகான் சேஷாத்திரி சுவாமிகள், மூக்குப்பொடி சித்தர் போன்ற ஞானிகள் இத்திருத்தலத்தில் வாழ்ந்து மக்களுக்கு பல நல்ல நெறிகளை போதித்துள்ளனர். 

    • தவம் செய்த அம்பிகை என்பதால், அருந்தவநாயகி என பெயர் பெற்றாள்.
    • பிரிந்த தம்பதியரை இணைக்கும் ஆலயம்.

    அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் என்ற இடத்தில் இருக்கிறது, அருந்தவ நாயகி உடனாய ஆலந்துறையார் திருக்கோவில். இந்த ஆலயம் சோழ நாட்டின் காவிரி வடகரையில் அமைந்த 63 ஆலயங்களில் 55-வது தலமாக போற்றப்படுகிறது.

    இவ்வாலய இறைவன், 'ஆலந்துறையனார்', 'வடமூலேஸ் வரர்', 'யோகவனேஸ்வரர்' என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார். இவ்வாலய அம்மன் 'அருந்தவநாயகி', 'யோகதபஸ்வினி' என்ற பெயர்களில் புகழப்படுகிறார்.

    பார்வதி தேவி தவம் செய்த இடம், பிரம்மன், திருமால், அகத்தியர், இந்திரன், சூரியன், வசிஷ்டர், காசியபர், வியாசர், பரசுராமர் ஆகியோர் வழிபாடு செய்த தலம், மாத்ருஹத்தி தோஷம், திருமணத்தடை நீக்கும் தலம், பிரிந்த தம்பதியரை இணைக்கும் ஆலயம், மிகப்பெரிய சோமாஸ்கந்த திருமேனி கொண்ட ஆலயம் போன்ற பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாக இந்த திருக்கோவில் திகழ்கிறது. இக்கோவிலின் தல விருட்சமாக ஆலமரமும், தல தீர்த்தமாக பிரம்ம தீர்த்தமும் உள்ளன.


    தல வரலாறு

    ஒரு முறை கயிலாயத்தில் இருந்த போது, பார்வதி தேவி விளையாட்டாக சிவபெருமானின் கண்களை மூடினாள். இதனால் சிவனின் இரு கண்களாக விளங்கும் சூரியன்- சந்திரன் இருவரும் ஒளி இழந்தனர். இதனால் உலக இயக்கம் நின்றது. முனிவர்களும், தேவர்களும் கலங்கினர்.

    அப்போது சிவபெருமான் தனது தேவியிடம், "விளையாட்டாக தவறு செய்தாலும் மற்றவர்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்துமானால், அது பாவமே. எனவே இந்த பாவத்திற்கு பரிகாரமாக, நீ என்னைப் பிரிந்து பூலோகம் செல்.

    அங்கு பல தலங்களில் தவம் செய்து இறுதியாக அங்குள்ள யோகவனத்தில் தங்கி இரு. நான் அங்கு வந்து உன்னுடன் சேர்வேன்" என்றார்.

    அதன்படி பார்வதியும் யோகவனத்தில் புற்று மண்ணால் சிவலிங்கம் அமைத்து தவம் செய்தாள். தவம் இருந்த அம்பிகைக்கு உறுதுணையாக சப்த மாதர்களும், வீரபத்திரரும் உடனிருந்தனர். தவம் முற்று பெற்றவுடன் இறைவன் தோன்றி உமையுடன் இணைந்தார்.

    உமையம்மை தவம் செய்த அந்த யோகவனமே, இன்றைய பழுவூர் ஆகும். தவம் செய்த அம்பிகை என்பதால், இவ்வாலய இறைவி 'அருந்தவநாயகி' என பெயர் பெற்றாள்.

    தந்தையின் சொற்படி தாயின் தலையை வெட்டியதற்காக, பரசுராமருக்கு 'மாத்ருஹத்தி தோஷம்' உண்டானது. பல தலங்களில் வழிபட்டும், பரசுராமரின் தோஷம் நீங்கவில்லை.

    ஒரு கட்டத்தில் இவ்வாலயம் இருக்கும் இடத்திற்கு வந்த பரசுராமர், அங்கிருந்த ஆலமரத்தின் கீழ் இருந்த புற்று லிங்கத்தை வணங்கியதும், அவரது தோஷம் விலகியது. ஆலமரத்தின் கீழ் தோன்றிய இறைவன் என்பதால் அவருக்கு 'ஆலந்துறையார்' என்ற பெயர் வந்தது.

    பரசுராமர் இந்த ஆலய இறைவனை வணங்கியதை நினைவுகூரும் விதமாக, கருவறைக்கு முன்புள்ள உத்திரத்தில் பரசுராமரின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது.


    ஆலய அமைப்பு

    மருதுடையார் ஆற்றின் தென்பகுதியில் சிறிய வளைவுடன் கூடிய வாசலுடனும், கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்துடனும், இரண்டு பிரகாரங்களுடனும் இந்த ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது.

    கோவிலுக்கு வெளியே தலவிருட்சமான ஆலமரம் பிரமாண்டமாக வளர்ந்து நிற்கிறது. கோவிலின் எதிரில் பிரம்ம தீர்த்தம் உள்ளது. ஆலய நுழைவு வாசலைக் கடந்து முதல் பிரகாரம் செல்ல, அங்கே கொடிமர விநாயகர், கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவை உள்ளன.

    இடதுபுறத்தில் கிணறும், மடப்பள்ளியும், முன் மண்டபத்தின் வலது புறத்தில், சுவாமிக்கு இடது புறமாக தென்முகம் நோக்கியவாறு அருந்தவநாயகி அம்மன் சன்னிதியும் இடம்பெற்றுள்ளன.

    அம்பாள் கருவறைக்கு முன்பாக இச்சா சக்தியும், கிரியா சக்தியும் துவாரபாலகிகளாக இருந்து காவல் புரிகின்றனர். இச்சா சக்தியின் அருகே விநாயகர் அமர்ந்து அருள்பாலிக்கிறார். அதனைத் தொடர்ந்து வாகன மண்டபம் அமைந்துள்ளது.

    இரண்டாவது பிரகாரத்திற்குள் சென்றால் 28 தூண்களைக் கொண்ட அழகிய மண்டபம் உள்ளது. இப்பிரகாரத்தில் தெற்கு திருமாளப்பத்தியில் விநாயகர், உமைமங்கைபாகன், கார்த்தியாயினி, சண்டிகேசுவரர், வீரபத்திரர், மாணிக்கவாசகர், ஞானசம்பந்தர், சுந்தரர், நாவுக்கரசர், கிருது மகரிஷி, அத்திரி மகரிஷி, ஆங்கீரஸ மகரிஷி, ஞானதட்சிணாமூர்த்தி, பிருகு மகரிஷி, பரீஷி மகரிஷி, புலஸ்திய மகரிஷி, வசிட்ட மகரிஷி, பிராமி, மகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் உள்ளனர்.

    இவர்களைத் தொடர்ந்து மேற்கில் விநாயகர், சோமாஸ்கந்தர், கோடி விநாயகர், காசி விசுவநாதர் - விசாலாட்சி, வள்ளி - தெய்வானையுடன் சுப்பிரமணியர் உள்ளனர். அடுத்து கல்லால் ஆன பெரிய சோமாஸ்கந்தர் திருமேனி, அப்புலிங்கம், வாயுலிங்கம், ஆகாய லிங்கம், கஜலட்சுமி சன்னிதிகள் உள்பட மேலும் பல சன்னிதிகள் இருக்கின்றன.

    இரண்டாம் பிரகார வலம் முடிந்து, மகா மண்டபம், அர்த்தமண்டபம் செல்லும் வழியில் இரு புறமும் கங்காதரர், கல்யாணசுந்தரர் திருவுருவங்கள் செதுக்கப்பட்டுள்ளது. அடுத்து இடை மண்டபம், அதனையொட்டி கருவறை உள்ளது. கருவறை வாசலின் மேல் சயனக்கோலத்தில் திருமாலின் புடைப்புச் சிற்பம் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளது.

    கருவறையுள் கருணாமூர்த்தியாய் மூலவர் ஆலந்துறையார் அருள்பாலிக்கின்றார். புற்று வடிவாய், மண் லிங்கமாக சதுர ஆவுடையாரின் நடுவே அபூர்வ தோற்றத்துடன் இவர் வீற்றிருக்கிறார். புற்று மண்ணால் ஆன சிவலிங்கம் என்பதால், இவருக்கு அபிஷேகத்தின்போது குவளை சாற்றப்படுகிறது.

    இவ்வாலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    அரியலூர் மாவட்டம், திருமானூர்- அரியலூர் சாலையில் இருக்கிறது, கீழப்பழுவூர். இந்த ஊருக்கு திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், திருவையாறு ஆகிய இடங்களில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

    பிரார்த்தனையும்.. பலனும்..

    தாம்பத்ய சங்கரர், அர்த்தநாரீஸ்வரர் இருவரும் இத்தலத்தில் இருந்து அருள்பாலிப்பதால், குடும்ப ஒற்றுமைக்கு பிரார்த்தனை செய்துகொள்ளும் தலமாகவும், திருக்கடையூருக்கு நிகராக காலசம்ஹார மூர்த்தியைக் கொண்டிருப்பதால் எமபயம் போக்கும் தலமாகவும், அம்பிகை தவம் செய்து இறைவனை மணந்து கொண்டமையால் திருமணத் தடை நீக்கும் தலமாகவும், பரசுராமரின் வேண்டுதலுக்கேற்ப சகல தேவர்களும் சூட்சும ரூபமாக இத்தலத்தில் உறைவதால், சகல செல்வங்களை அளிக்கும் தலமாகவும், பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் தலமாகவும் இவ்வாலயம் விளங்குகிறது. வேண்டுதல் நிறைவேறியவர்கள், இவ்வாலயம் வந்து கோவில் தீர்த்தத்தில் நீராடி, இறைவனுக்கும், இறைவிக்கும் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    • அவதாரங்களில் ஆதியில் வெளிப்பட்டது ‘ஹயக்ரீவ அவதாரம்’ என்று சொல்லப்படுகிறது.
    • திருமால் எடுத்த முக்கியமான அவதாரமாக ‘ஹயக்ரீவர்’ அவதாரம் பார்க்கப்படுகிறது.

    மகாவிஷ்ணுவின் தசாவதாரம் என்று போற்றப்படும் 10 அவதாரங்களில் முதன்மையானதாக மச்ச அவதாரம் இருந்தாலும், திருமால் எடுத்த அவதாரங்களில் ஆதியில் வெளிப்பட்டது 'ஹயக்ரீவ அவதாரம்' என்று சொல்லப்படுகிறது.

    பிரம்மதேவனிடம் இருந்த வேதங்களை, மது- கைடபர் என்னும் இரண்டு அசுரர்கள் திருடிச் சென்று விட்டனர். அதனை மீட்பதற்காக, திருமால் எடுத்த முக்கியமான அவதாரமாக 'ஹயக்ரீவர்' அவதாரம் பார்க்கப்படுகிறது.


    வேதங்கள், சாஸ்திரங்கள், அறுபத்து நான்கு கலைகள் போன்ற அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குபவர், ஹயக்ரீவர். சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி, வியாசர், சுப்பிரமணியர், விநாயகர் ஆகியோரை வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம்.

    ஆனால் அவர்களுக்கு அந்த தகுதியானது, கல்விக்கு அதிபதியாக, ஆதாரமாக விளங்கும் ஹயக்ரீவரின் அனுக்கிரகத்தால் கிடைத்தது என்கின்றன புராணங்கள்.

    ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தில், பவுர்ணமி திதியில் அவதரித்தவர், ஹயக்ரீவர். அவரது பெருமைகளை எடுத்துரைக்காத வேதம், உபநிடதம், கல்பம், புராணம் என்று எதுவும் கிடையாது. அனைத்துமே அவரது புகழ்பாடுகின்றன.

    ஹயக்ரீவர் எப்போதும் தனியாக இருந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குவது அரிதுதான். அவர், தனது மனைவியாக லட்சுமிதேவியை மடியில் அமர வைத்து 'லட்சுமி ஹயக்ரீவர்' தோற்றத்தில்தான் பெரும்பாலான ஆலயங்களில் தரிசனம் தந்து கொண்டிருக்கிறார்.

    • இன்று பிரதோஷம்.
    • இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் கோவிலில் அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு கார்த்திகை-28 (வெள்ளிக்கிழமை)

    பிறை: வளர்பிறை.

    திதி: திரயோதசி இரவு 6.35 மணி வரை. பிறகு சதுர்த்தசி.

    நட்சத்திரம்: பரணி காலை 6.50 மணி வரை. பிறகு கார்த்திகை நாளை விடியற்காலை 4.55 மணி வரை. பிறகு ரோகிணி.

    யோகம்: சித்த, மரணயோகம்.

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று பிரதோஷம். அண்ணாமலையார் தீபம் திருகார்த்திகை. வள்ளியூர் ஸ்ரீசுப்பிரமணியர் தெப்பம், திருநாகேஸ்வரம் ஸ்ரீநாகநாதர் திருவீதியுலா, கணம்புல்ல நாயனார் குருபூஜை. சுவாமிமலை, திருப்பரங்குன்றம், ஸ்ரீமுருகப் பெருமான் கோவில் தேரோட்டம். திருவிடைமருதூர் ஸ்ரீபிரகத் சுந்தரசாம்பிகை புறப்பாடு. கரூர் தான்தோன்றி ஸ்ரீகல்யாணவேங்கட்ரமண சுவாமி திருமஞ்சனம். பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை தலங்களில் அபிஷேகம். லால்குடி ஸ்ரீசப்ரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித்தாயார் புறப்பாடு. இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் கோவிலில் அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-அன்பு

    ரிஷபம்-செலவு

    மிதுனம்-ஆதரவு

    கடகம்-தனலாபம்

    சிம்மம்-ஈகை

    கன்னி-முயற்சி

    துலாம்- உதவி

    விருச்சிகம்-சுகம்

    தனுசு- பரிவு

    மகரம்-சுபம்

    கும்பம்-தனம்

    மீனம்-பணிவு

    ×