என் மலர்
வழிபாடு
- வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்கள் பக்தர்கள் துவார தரிசனம்.
- 8 மையங்கள் அமைத்து நேரடியாக இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி மாதம் 10-ந் தேதி முதல் 19-ந் தேதி வைகுண்ட ஏகாதசி துவாரகா தரிசனம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து நேற்று அன்னமய்யா பவனில் முதன்மை செயல் அலுவலர் சியாமலா ராவ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் அவர் கூறியதாவது:-
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்கள் பக்தர்கள் துவார தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்காக வருகிற 23-ந்தேதி காலை 11 மணிக்கு 10 நாட்களுக்கான ஸ்ரீ வாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.
இதேபோல் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் 24-ந் தேதி ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. நேரடி இலவச தரிசன நேர ஒதுக்கீடு டிக்கெட்டுகள் வைகுண்ட ஏகாதசி 2 நாட்கள் முன்னதாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக திருப்பதியில் 8 மையங்கள் அமைத்து நேரடியாக இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது.
வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு வழங்குவதற்காக தினமும் 3.50 லட்சம் லட்டுகள் தயார் செய்யப்பட உள்ளது. காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை டீ, காபி, பால், உப்புமா, சர்க்கரை பொங்கல், பொங்கல் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும்.
வைகுண்ட ஏகாதசி அன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை சுவர்ண ரத்தின அலங்காரத்தில் ஏழுமலையான் அருள் பாலிப்பார்.
துவாதசி நாட்களில் அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வெற்றிலை மாலை சாற்றி வழிபட்டால் எதிர்பட்ட துன்பங்கள் தூர விலகும்.
- திருமாலுக்கு மிகவும் பிடித்தது துளசி.

வெற்றிலை:
ராவணனால் சிறைவைக்கப்பட்டிருந்த சீதா, ஒரு கட்டத்தில் தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தார். அப்போது தான் ராமபிரானால் அனுப்பப்பட்ட அனுமன். இலங்கை வந்து சேர்ந்தார். அவர் உச்சரித்த 'ராமராம் என்ற நாமம் கேட்டு தன் முடிவை மாற்றிக்கொண்டார் சீதா தேவி.
அதோடு தன்னை சந்தித்து ராமரின் கணையாழியை கொடுத்த அனுமனை, அங்கிருந்த வெற்றிலைக் கொடியில் இருந்து ஒரு வெற்றிலையைப் பறித்து தலையில் போட்டு "சிரஞ்சீவியாக இரு" என்று ஆசிர்வதித்தார்.

இதன் காரணமாகத்தான் அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவிக்கும் பழக்கம் வந்தது. அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபட்டால் எதிர்பட்ட துன்பங்கள் தூர விலகும்.

வாழைப்பழம்:
அனுமனுக்கு வாழைப்பழத்திலும் மாலை கோர்த்து அணிவிப்பார்கள். வானரங்களுக்கு (குரங்கு) வாழைப்பழத்தின் மீது அலாதி பிரியம். எனவே வானரமாக இருந்த அனுமனுக்கும் வாழைப்பழ மாலை அணி விக்கிறார்கள்.

துளசி:
திருமாலுக்கு மிகவும் பிடித்தது துளசி. திருமாலின் அவதாரம் தான் ராமர். தனது பக்தனுக்கு செலுத்தும் மரியாதை தனக்கு செலுத்தும் மரியாதை என்று கூறியவர், ராமபிரான், எனவே அனுமனுக்கும் துளசி மாலை சாற்றுவதை பக்தர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.

உளுந்து வடை:
ராவண யுத்தத்தில் வீரம் காட்டி நின்ற அனுமன், கொழுத்த அசுரர்களை வடை தட்டுவது போல் தட்டி துவம்சம் செய்தார். அதனால் கொழுப்பு சத்துக் கொண்ட உளுந்தில் வடை செய்து அவருக்கு மாலையாக அணிவிக்கிறார்கள். இந்த மாலையை சூட்டுவதால் தீமையில் இருந்து அனுமன் நம்மை காப்பார் என்பது நம்பிக்கை.
- 48 கிராம மக்களுக்கும் குடும்பக் கடவுளாக உள்ளார்.
- எண்ணற்ற நோய்களை தீர்க்கும் மருத்துவக் கோவிலாகவும், இந்த ஆலயம் திகழ்கிறது.
மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் என்ற இடத்தில் வைகை ஆற்றின் வடகரையில் அமைந்திருக்கிறது, ஜெனகை மாரியம்மன் திருக்கோவில். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் இருக்கும் இடத்தை இதற்கு முன் காலத்தில் 'ஜெனகாயம்பதி', 'சதுர்வேதிமங்கலம்', 'சோழாந்தக சதுர்வேதி மங்கலம்', 'ஜெனநாத சதுர்வேதி மங்கலம்' என்று அழைத்ததாக கோவில் கல்வெட்டுக் குறிப்புகள் கூறுகிறது.
இந்த ஆலயத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஜெனகை மாரியம்மன், சோழவந்தான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 48 கிராம மக்களுக்கும் குடும்பக் கடவுளாக உள்ளார்.

தல வரலாறு
ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகாதேவி. இவர் தினமும் கணவரின் பூஜைக்கு கமண்டல நதியில் இருந்து நீர் எடுத்து வருவது வழக்கம். ஒரு நாள் அப்படி நதியில் நீர் எடுத்துக் கொண்டிருந்தபோது, நதி நீரில் தேவலோக கந்தர்வன் ஒருவரின் பிம்மம் விழுந்தது. அந்த பிம்பத்தின் அழகில் மயங்கிய ரேணுகாதேவி, அந்த நிமிடத்தில் மனதால் பதிவிரதை தன்மையை இழந்தார்.
அதோடு அவர் நீர் எடுக்க கொண்டு வந்த மண்குடமும் உடைந்தது. இதை தன் ஞானத்தால் அறிந்த ஜமதக்னி முனிவர், தன் மகன் பரசுராமரை அழைத்து தாயின் தலையை வெட்டும்படி உத்தரவிட்டார். மறு கேள்வி இன்றி பரசுராமரும் தன்னுடைய தாயின் தலையை கொய்தார்.
உடனே ஜமதக்னி முனிவர், "உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்" என்று கேட்டார். அப்போது பரசுராமர், "என் தாயின் உயிரை மீண்டும் தர வேண்டும்" என்று கேட்டார்.
அதன்படி ஜமதக்னி முனிவர், தன்னுடைய கமண்டலத்தில் இருந்து நீரை எடுத்து மந்திரம் ஓதி, ரேணுகா தேவியின் மீது தெளித்து அவரை உயிர்ப்பித்தார்.
ஆனால் அந்த உயிர், ஆக்ரோஷம் கொண்டு பெண்ணாக அவரை மாற்றியது. இந்த ஆக்ரோஷத்தைப் அடக்கும் பொருட்டு, இத்தலத்தில் மாரியம்மன் எழுந்தருளியதாக தல வரலாறு கூறுகிறது.
இதை மெய்ப்பிக்கும் வகையில் இந்த ஆலயத்தின் கருவறையில் இரண்டு அம்மன்கள் இருப்பதைக் காண முடியும். கருவறையில் அமர்ந்த நிலையில் சாந்தமான ஜெனகை மாரியம்மன் வீற்றிருக்கிறார். அவருக்கு பின்புறம் சந்தனமாரி என்ற பெயரில் நின்ற நிலையில் ஆக்ரோஷமான ரேணுகாதேவி காட்சி தருகிறார்.
இந்த ஊர், ராமாயணத்தில் வரும் ஜனகர் மகளான ஜானகியை போற்றும் வகையில் 'ஜெனகபுரம்' என்றும் முன்பு அழைக்கப்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக இங்குள்ள கோவிலில் அமர்ந்த மாரியம்மனுக்கு 'ஜெனகை மாரியம்மன்' எனப் பெயர் சூட்டப்பட்டது. இக்கோவில் தல விருட்சமாக வேப்பமரம் மற்றும் அரச மரம் ஆகிய இரண்டு மரங்கள் உள்ளன.
எண்ணற்ற நோய்களை தீர்க்கும் மருத்துவக் கோவிலாகவும், இந்த ஆலயம் திகழ்கிறது. அம்மை நோய் கண்டவர்கள் இத்தலத்தில் உள்ள கிணற்றில் குளித்து விட்டு ஈரத் துணியோடு வந்து அம்மனுக்கு அர்ச்சனை செய்து மனமுருகி வேண்டுகிறார்கள். அப்போது அர்ச்சகர் தரும் அம்பாள் தீர்த்தத்தை வாங்கிக் குடிக்க வேண்டும்.
இந்த தீர்த்தமானது, மஞ்சள், வேப்பிலை மற்றும் வேறு சில பொருட்களும் கலந்த மருத்துவ குணமும், அம்பாள் கருணையும் கலந்ததாகும். பெண் பக்தர்கள் குழந்தை வரம் வேண்டி, இந்த கோவிலில் தொட்டில் கட்டி பூஜை செய்வது வழக்கம்.
வெள்ளிக்கிழமை மட்டும் அம்மன் சந்தன காப்பில் அருள் வழங்குவார். இந்த ஆலயத்தில் நவராத்திரி மற்றும் தீபாவளி விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
விஜயதசமி அன்று வைகை ஆற்றில் நடக்கும் அம்பு போடும் திருவிழாவின் முடிவில், ஒவ்வொரு ஆண்டும் மழைத் தூறல் விழுவது அம்பாளின் அருள் மழையே என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
ஆண்டு தோறும் வைகாசி மாதம் 17 நாட்கள் பிரம்மோற்சவ திருவிழா நடைபெறும். திருவிழாவின் இறுதி நாளன்று ஜெனகை அம்மன் தேரோட்டம் நடக்கிறது.

வைகாசி திருவிழாவை முன்னிட்டு பொங்கல் படையல், அக்னி சட்டி எடுத்தல், பூக்குழியில் இறங்குதல் போன்ற நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்துகிறார்கள்.
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலையில் 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
மதுரையில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில்.
- திரிவிக்ரமனாக உலகைத் தன் திருவடியில் அளந்த உத்தமனானவர் திருமால்.
- நாடெல்லாம் எந்தவிதத் தீங்கும் நிகழாமல் நல்ல மழை பெய்யும்.
திருப்பாவை
பாடல்:
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்கு, சாற்றி நீராடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரிபெய்து
ஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயல்உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!
விளக்கம்:
மாபலி மன்னனிடம் வாமனனாய் மூன்றடி மண் கேட்டு, திரிவிக்ரமனாக உலகைத் தன் திருவடியில் அளந்த உத்தமனானவர் திருமால். அவரின் திருநாமங்களைப் பாடியபடியே பாவை நோன்பு நோற்று நாம் நீராடினால், நாடெல்லாம் எந்தவிதத் தீங்கும் நிகழாமல் நல்ல மழை பெய்யும். அதனால் நிலவளம், நீர்வளம் பெருகி, ஒங்கி வளரும் செந்நெல் வயல்களுக்கிடையே கயல் மீன்கள் குதித்து விளையாடும். குவளை மலர்களில் அழகிய வண்டுகள் உறங்கும். மடியைப் பற்றி இழுத்தவுடன் வற்றாத பால் செல்வத்தை தன்னுள்ளே கொண்டுள்ள வள்ளல் பெரும் பசுக்கள் பாற்குடங்களை நிரப்பும். ஆக அழிவற்ற நிலைத்த செல்வம் நிறைந்து விளங்கும்.
திருவெம்பாவை
பாடல்:
முத்தென்ன வெண்நகையாய்! முன்வந் தெதிர்எழுந்தென்
அந்தன் ஆனந்தன் அமுதன்என் றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர்! ஈசன் பழவடியீர்! பாங்குடையீர்;
புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற்
பொல்லாதோ?
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ?
சித்தம் அழகியார் பாடாரோ? நஞ்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்!
விளக்கம்:
(தோழிகள்) "நம் சிவபெருமானைப் பற்றி இதற்கு முன்பெல்லாம் எங்கள் முன்பு வந்து, 'கடவுள், ஆனந்தமயமானவன், அமுதமானவன்' என்று வாயால் புகழ்ந்து, இனிக்கப் பேசிய முத்துப் போன்ற வெண்ணகையுடைய பெண்ணே! இப்போது உன் வீட்டின் வாசல் கதவைத் திறப்பாய்!". (உறக்கத்தில் இருக்கும் பெண்) "முன்பே இறைவன் மேல் பற்றும் பழக்கமும் வைத்த பழமையான அடியவர்கள் நீங்கள்! புதிய அடியவளான எனது தவறைப் பொறுக்க மாட்டீர்களோ?". (தோழிகள்) "பெண்ணே! நீ சிவபெருமான் மீது கொண்ட அன்பை நாங்கள் அறிய மாட்டோமா? அவனைப் போற்றி நாமும் பாடலாம்' என்றே அழைக்கின்றோம்; எழுந்திரு!"
- இன்று சங்கடஹர சதுர்த்தி.
- மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மார்கழி-3 (புதன்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: திருதியை நண்பகல் 12.04 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம்: பூரம் நாளை விடியற்காலை 4.09 மணி வரை பிறகு ஆயில்யம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று சங்கடஹர சதுர்த்தி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம். பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர், திருநாரையூர் ஸ்ரீ பொள்ளாப் பிள்ளையார், திருவலஞ்சுழி ஸ்ரீ சுவேத விநாயகர், திருச்சி உச்சிப்பிள்ளையார் ஸ்ரீ மாணிக்க விநாயகர், மதுரை ஸ்ரீ முக்குறுணி பிள்ளையார், உப்பூர் ஸ்ரீ வெயிலுகந்த விநாயகப் பெருமான் கோவில்களில் சிறப்பு ஹோமம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம். விருதுநகர் ஸ்ரீ விஸ்வநாதருக்கு அபிஷேகம். ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்க வாசகருக்கு அபிஷேகம். திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வெற்றி
ரிஷபம்-பாராட்டு
மிதுனம்-ஆர்வம்
கடகம்-உழைப்பு
சிம்மம்-தேர்ச்சி
கன்னி-நன்மை
துலாம்- உதவி
விருச்சிகம்-ஆக்கம்
தனுசு- நலம்
மகரம்-ஆதாயம்
கும்பம்-கவனம்
மீனம்-இன்பம்
- தென்னிந்தியா விலேயே உயர்ந்த ராஜகோபுரம் கொண்டது.
- நெல் சேமிப்பு கிடங்கு சக்கரத்தாழ்வார் சன்னிதிக்கு அருகில் இருக்கின்றது.
* 108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம்' என்று அழைக்கப்படுவதுமான திருவரங்கம் அரங்கநாதர் கோவில், தென்னிந்தியா விலேயே உயர்ந்த ராஜகோபுரம் கொண்டது.
* 'அரங்கம்' என்றால் 'தீவு' என்று பொருள். காவிரி ஆற்றுக்கு நடுவே இருக்கும் தீவாகிய அரங்கத்தில் இறைவன் குடியிருப்பதால் இதை, திருவரங்கம்' என்றும், இத்தலத்தில் அருளும் பெருமாளை அரங்கநாதன் எனவும், தாயாரை அரங்கநாயகி என்றும் அழைக்கிறார்கள்.

* இக்கோவிலில் 20 அடி விட்டமும், 30 அடி உயர மும் கொண்ட நெல் சேமிப்பு கிடங்கு சக்கரத்தாழ்வார் சன்னிதிக்கு அருகில் இருக்கின்றது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அமைந்த இந்த நெல் சேமிப்பு கிடங்கு வட்ட வடிவம் கொண்டவை. மொத்தமாக 1500 டன் அளவிலான நெல்லை இதில் சேமிக்க முடியும். இதில் எந்த காலத்திலும் நெல் குறைந்து பற்றாக்குறை ஏற்பட்டதில்லை. அதேபோல, எவ்வளவு நெல் கொட்டினாலும் அதை ஏற்றுக்கொள்ளும் தன்மையை உடையது இந்த சேமிப்பு கிடங்கு.
* எல்லா கோவில்களிலும் உள்ள கொடிமரங்கள். கல் மற்றும் மரத்தால் செய்யப்பட்டிருப்பதால் அவை அசையாது. ஆனால் திருவரங்கத்தில் உள்ள ரங்க விலாஸ் மண்டபத்தின் அருகில் இருக்கும் கொடி மரத்தை வணங்கிவிட்டு மேலே பார்த்தால், அது அசைவது போல தோன்றும். அப்படி அசைவது போலத் தோன்றினால், நாம் வேண்டியது நிச்சயம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

* ராமானுஜர் தனது 120-வது வயதில் இயற்கை எய்தினார். பொதுவாக, வைணவ சம்பிரதாயப்படி வைணவ பதவி அடைந்த துறவிகளை எரியூட்ட மாட்டார்கள். அதற்கு பதில் உடல் பள்ளியூட்டப்படும். அதாவது, சமாதியில் அமரவைத்து மூடப்படும்.
அதேபோல ராமனுஜரின் உடல் திருவரங்கத்தின் வசந்த மண்டபத்தில் பள்ளிப்படுத்தப்பட்டுள்ளது. அங்கே இருக்கும் ராமானுஜரின் உடல் இன்றும் உயிரோட்டத்துடன் காட்சியளிக்கிறது. ராமானுஜரின் உடல் பச்சைக்கற்பூரம் மற்றும் குங்குமத்தால் செய்யப்பட்ட கலவையால் மூடப்பட்டுள்ளது. 900 ஆண்டுகள் கடந்தும் ராமானுஜரின் உடல் அப்படியே காட்சித்தருவது அதிசயமாகும்.
- 18-ந்தேதி திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
- 20-ந்தேதி திருத்தணி முருகப் பெருமான் கிளி வாகன சேவை.
17-ந்தேதி (செவ்வாய்)
* சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* திருத்தணி முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.
* திருப்பதி சமீபம் மங்காபுரம் சீனிவாசப் பெருமாள் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
18-ந்தேதி (புதன்)
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.
* திருமயம் சத்திய மூர்த்தி புறப்பாடு.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* மேல்நோக்கு நாள்.
19-ந்தேதி (வியாழன்)
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சனம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* பெருஞ்சேரி வாகீசுவரர் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
20-ந்தேதி (வெள்ளி)
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* ராமேஸ்வரம் பர்வத வர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.
* திருத்தணி முருகப் பெருமான் கிளி வாகன சேவை.
* கீழ்நோக்கு நாள்.
21-ந் தேதி (சனி)
* மன்னார்குடி ராஜ கோபால சுவாமி, திருச்சேறை சாரநாதப் பெருமாள், திருஇந்துளூர் பரிமள ரெங்கராஜர் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
22-ந்தேதி (ஞாயிறு)
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
* திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
23-ந்தேதி (திங்கள்)
* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் சகல ஜீவகோடிகளுக்கு படியளந்து அருளிய லீலை.
* சங்கரன் கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* மேல்நோக்கு நாள்
- நம்மை உயரச் செய்கின்ற பாவை நோன்பிற்கான வழிமுறைகளைக் கேளுங்கள்.
- அம்பலத்துப் பெருமானின் மலர்பாதங்களை காணும் பாக்கியம் நமக்கு கிடைத்திருக்கிறது.
திருப்பாவை
பாடல்:
வையகத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி
நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடி
மையிட்டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்;
செய்யாதன செய்யோம்; தீக்குறளைச்
சென்றோதோம்;
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.
விளக்கம்:
கண்ணன் வாழ்ந்த காலத்தில் அவனுடன் வாழும் பேறுபெற்ற மங்கையரே! நம்மை உயரச் செய்கின்ற பாவை நோன்பிற்கான வழிமுறைகளைக் கேளுங்கள்! நோன்பின் போது கண்களுக்கு மையிட்டும், கூந்தலில் பூச்சூடியும் அழகுபடுத்திக் கொள்ளாமல் இருப்போம். செய்யக்கூடாதவை என்று பெரியோர்களால் விலக்கப்பட்டவற்றை செய்யாது இருப்போம். பிறரைப் பற்றி புறங்கூறுவதை விட்டு விடுவோம். பாற்கடலில் துயில்கொள்கின்ற பரந்தாமனின் திருவடிகளை போற்றிப் பாடியபடி, வேண்டா வெறுப்பாய் கட்டாயத்தினால் நோன்பு நோற்காமல், மிகுந்த மகிழ்ச்சியுடன் அதிகாலையில் நீராடி கர்வம் இன்றி தானமும், தருமமும் செய்வோம்.
திருவெம்பாவை
பாடல்:
பாசம் பரஞ்சோதி கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ? நேரிழையாய்!
நேரிழையீர்!
சீசீ இவையும் சிலவோ? விளையாடி
ஏசும் இடமீதோ? விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பர்யாம் ஆரேலோர் எம்பாவாய்!
விளக்கம் :
பகலும், இரவும் நாம் பேசும்போதெல்லாம், உன் அன்பெல்லாம் அந்த பரமனுக்கே உரியது என்பாய். இப்போது மலர்கள் தூவப்பட்ட படுக்கையின் மீது ஆசை கொண்டு விட்டாய் போலும்! (உறக்கத்தில் உள்ள பெண்). "சீசீ! நீங்கள் விளையாட்டாக ஏசுவதற்கு ஏற்ற இடம் இதுதானோ?!". (மற்ற பெண்கள்) "விண்ணுலகத் தேவர்களின் கண்களையும் கூசச் செய்கின்றதில்லை அம்பலத்துப் பெருமானின் மலர்பாதங்களை காணும் பாக்கியம் நமக்கு கிடைத்திருக்கிறது. நம் இல்லம் தேடி வந்து அருளும் இறைவனை நாம் நாடிச் செல்ல வேண்டாமா? பெண்ணே எழுந்திரு".
- பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.
- ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மார்கழி-2 (செவ்வாய்க்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: துவிதியை நண்பகல் 1.11 மணி வரை பிறகு திருதியை
நட்சத்திரம்: புனர்பூசம் பின்னிரவு 3.31 மணி வரை பிறகு பூசம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை. சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருத்தணி முருகப்பெருமான் பால் அபிஷேகம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் புறப்பாடு. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகப் பெருமான் அபிஷேகம், அலங்காரம். திருநறை யூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை. திருமா லிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. வடபழனி, குன்றத்தூர், கந்தக்கோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உயர்வு
ரிஷபம்-உழைப்பு
மிதுனம்-அன்பு
கடகம்-பொறுமை
சிம்மம்-சுகம்
கன்னி-வரவு
துலாம்- முயற்சி
விருச்சிகம்-புகழ்
தனுசு- ஊக்கம்
மகரம்-நற்செயல்
கும்பம்-பயணம்
மீனம்-பாராட்டு
- மார்கழி மாதம்.. நிலவு பூரணமாக பிரகாசிக்கின்ற நல்ல நாள் இது.
- முதலும் முடிவும் இல்லாத சோதி சொரூபமாய் நின்ற சிவபெருமானைப் போற்றி.
திருப்பாவை
பாடல்:
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்;
நீராடும் போதுவீர்! போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.
விளக்கம்:
மார்கழி மாதம்.. நிலவு பூரணமாக பிரகாசிக்கின்ற நல்ல நாள் இது. அழகிய ஆபரணங்களை அணிந்த செல்லச் சிறுமிகளே, நீராடப் போகலாம் வாருங்கள். கூர்மையான வேலை ஏந்திப் போர்புரியும் நந்தகோபனின் மகனும், கண்ணனுடைய விளையாட்டுகளை அருகில் இருந்து காணும் பேறு பெற்ற அழகிய கண்களைக் கொண்ட யசோதையின் இளஞ்சிங்கம் போன்றவனும், மேகத்தின் நீல நிறம் கொண்டவனும், ஒளி மிகுந்த சந்திரன் போன்ற முகம் கொண்டும் விளங்கும் நாராயணன், இந்த பாவை நோன்பை நோற்றால், நமக்கு பறை வாத்தியத்தைத் தருவான். நோன்பு வெற்றி பெற்றால் ஊரும். நாடும் நலம்பெறும். உலகத்தவர் நம்மை புகழ்வார்கள், வாருங்கள்.
திருவெம்பாவை
பாடல்
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை
யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே! வளருதியோ? வன்செவியோ நின்செவிதான்?
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய
வாழ்த்தொலி போய்
வீதிவாய்க் கேட்டதுமே விம்மி விம்மி மெய்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்கன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே! என்னே!'
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
வாள் போல ஒளி வீசும் கண்களையுடைய பெண்ணே.. முதலும் முடிவும் இல்லாத சோதி சொரூபமாய் நின்ற சிவபெருமானைப் போற்றி, நாங்கள் பாடுவதைக் கேட்டபின்னும் நீ உறங்கிக் கொண்டிருக்கிறாயே! உன் காதுகள் அவ்வளவு உணர்ச்சியற்றுப் போய்விட்டதா? அந்த மகாதேவனின் பாதக் கமலங்களைப் போற்றி நாங்கள் பாடியதை வீதியில் கேட்டதுமே, ஒருத்தி பூக்கள் தூவிய படுக்கையில் இருந்து புரண்டு எழுந்தாள். நீயோ எந்த அசைவும் இன்றி படுத்துக் கிடக்கிறாயே! எமது கண்ணின் பாவை போன்ற பெண்ணே! இது என்ன அதிசயம்?
- சகல பெருமாள் கோவில்களிலும் திருப்பாவை, திருவெம்பாவை தொடக்கம்.
- திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மார்கழி-1 (திங்கட்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: பிரதமை நண்பகல் 1.54 மணி வரை பிறகு துவிதியை
நட்சத்திரம்: திருவாதிரை பின்னிரவு 3.17 மணி வரை பிறகு புனர்பூசம்
யோகம்: சித்த, அமி2ர்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் புறப்பாடு. திருவண்ணாமலை ஸ்ரீ சுப்பிரமணியர் தெப்ப உற்சவம். சகல பெருமாள் கோவில்களிலும் திருப்பாவை, திருவெம்பாவை தொடக்கம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்த ராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பன் கொலு தர்பார் காட்சி. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருமஞ்சன சேவை. கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரரர், பெசன்ட் நகர் ஸ்ரீ அராளகேசியம்மன் சமேத ஸ்ரீ ரத்தின கிரீஸ்வரர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-சுகம்
ரிஷபம்-சாதனை
மிதுனம்-முயற்சி
கடகம்-பெருமை
சிம்மம்-அன்பு
கன்னி-ஆர்வம்
துலாம்- குழப்பம்
விருச்சிகம்-சிரத்தை
தனுசு- நன்மை
மகரம்-உறுதி
கும்பம்-சுபம்
மீனம்-துணிவு
- வடிவுடையம்மன் கோவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.
- நாளை இரவு 8.30 மணி வரை ஆதிபுரீஸ்வரர் கவசம் திறந்திருக்கும்.
திருவொற்றியூர்:
திருவொற்றியூர் தியாகராஜ சாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலின் மூலவர் ஆதிபுரீஸ்வரர், ஆண்டு முழுவதும் தங்க முலாம் பூசப்பட்ட நாக கவசம் அணிவிக்கப்பட்ட நிலையில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
ஆண்டுக்கொரு முறை கார்த்திகை மாத பவுர்ணமியை யொட்டி, 3 நாட்கள் மட்டும் ஆதிபுரீஸ்வரர் புற்றுவடிவ லிங்க திருமேனி மீது அணிவிக்கப்பட்டிருக்கும் நாக கவசம் திறக்கப்படும்.
அதன்படி நேற்று மாலை 6 மணிக்கு ஆதிபுரீஸ்வரர் மீது தங்க முலாம் பூசிய நாக கவசம் திறக்கப்பட்டது. தொடர்ந்து புனுகு, சாம்பிராணி, தைலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
சென்னை மற்றும் பல்வேறு பகுதியில் இருந்தும் சாமி தரிசனம் செய்ய வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அறநிலைய துறை உதவி ஆணையர் நற்சோனை தலைமையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நாளை (திங்கட்கிழமை) இரவு 8.30 மணி வரை ஆதிபுரீஸ்வரர் கவசம் திறந்திருக்கும். பின்னர் அர்த்தஜாம பூஜைக்கு பிறகு மீண்டும் கவசம் அணிவிக்கப்படும்.






