என் மலர்
வழிபாடு
- சூரியனார் கோவில் ஸ்ரீசூரிய நாராயணருக்கு திருமஞ்சன அலங்கார சேவை.
- திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மார்கழி-7 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சப்தமி மாலை 4.50 மணி வரை பிறகு அஷ்டமி
நட்சத்திரம்: பூரம் காலை 8.56 மணி வரை பிறகு உத்திரம்
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
சூரியனார் கோவில் ஸ்ரீசூரிய நாராயணருக்கு திருமஞ்சன அலங்கார சேவை. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். நாட்டரசன் கோட்டை ஸ்ரீ கண்ணுடைய நாயகியம்மன், காரைக்கால் ஸ்ரீ கொப்புடையம்மன் கோவில்களில் காலையில் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம். ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமிக்கு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-கடமை
ரிஷபம்-ஆசை
மிதுனம்-வெற்றி
கடகம்-லாபம்
சிம்மம்-புகழ்
கன்னி-முயற்சி
துலாம்- நட்பு
விருச்சிகம்-இன்பம்
தனுசு- கவனம்
மகரம்-மாற்றம்
கும்பம்-தனம்
மீனம்-பயணம்
- பொழுது விடிந்தது கூடத் தெரியாமல் பேய்த் தூக்கம் தூங்கும் பெண்ணே!
- பெண்ணே! பலவாறு நாங்கள் அழைத்தும் பதில் பேசாமல் இருக்கிறாய்.
திருப்பாவை
பாடல்:
கீசு கீசு என்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்
பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண் பிள்ளாய்! நாராயண மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ?
தேச முடையோய்! திறவேலோ ரெம்பாவாய்.
விளக்கம்:
எங்கள் குழுவிற்குத் தலைவியானவளே! கீசுகீசு என்று ஆனைச்சாத்தான் பறவை ள், தங்களுக்குள் பேசும் ஒலியை நீ கேட்க வில்லையா? பொழுது விடிந்தது கூடத் தெரியாமல் பேய்த் தூக்கம் தூங்கும் பெண்ணே! காசு மாலையும், வளையல்களும் கலகலக்க கைகளை மாற்றி மாற்றி, மத்தினால் தயிர் கடையும் ஒலி உன் காதில் விழவில்லையா? கேசி என்ற அரக்கனைக் கொன்று 'கேசவன்' என்று பெயர் பெற்றவனை, அந்த நாராயணனை நாங்கள் பாடுவதைக் கேட்டபின்னும், கேளாதது போல் படுத்திருக்கிறாயே! அழகிய மகளே! கதவைத் திறவாய்.
திருவெம்பாவை
பாடல்:
அன்னே! இவையுஞ் சிலவோ? பல அமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவன்என்றே வாய் திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானைஎன் அரையன் இன்னமுதென் றெல்லோமுஞ்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்
விளக்கம்:
பெண்ணே! பலவாறு நாங்கள் அழைத்தும் பதில் பேசாமல் இருக்கிறாய். முன்பெல்லாம், தேவர்கள் மனதாலும் நினைப்பதற்கு அரியவனும், பெரும் சிறப்பை உடையவனுமாகிய நம் சிவபெருமானுக்கே உரிய இசைக்கருவிகளின் ஓசையைக் கேட்ட மாத்திரத்திலேயே 'சிவனே' என்று உச்சரிப்பாய். 'தென்னவனே' என்று சொல்லும் முன்பாகவே அனலில் இட்ட மெழுகு போல உருகுவாய் ! இன்று எங்கள் தலைவன், அமுதம் போன்றவன் என்று நாங்கள் எல்லோரும் சேர்ந்து இறைவனைப் பாடுகின்றோம். நீ இன்னமும் உறங்கிக் கொண்டிருக்கிறாயே? கல் நெஞ்சம் படைத்தவர்களைப் போல சும்மா படுத்திருக்கிறாய்! உன் தூக்கத்தின் பெருமைதான் என்ன? நீயே கூறுவாயாக!
- இன்று திருநள்ளாறு ஸ்ரீ சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
- திருவட்டாறு ஸ்ரீ கேசவப் பெருமாள் திருமஞ்சன அலங்கார வழிபாடு.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மார்கழி-6 (சனிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சஷ்டி பிற்பகல் 3.10 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம்: மகம் காலை 6.53 மணி வரை பிறகு பூரம்
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று திருநள்ளாறு ஸ்ரீ சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபல சுவாமி, திருச்சேறை ஸ்ரீ சாரநாதப் பெருமாள், திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரெங்கராஜர் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ பெருமாள், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்க ளில் திருமஞ்சன சேவை. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன அலங்கார சேவை. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி திருமஞ்சன சேவை. திருவட்டாறு ஸ்ரீ கேசவப் பெருமாள் திருமஞ்சன அலங்கார வழிபாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆர்வம்
ரிஷபம்-உதவி
மிதுனம்-உயர்வு
கடகம்-கடமை
சிம்மம்-இன்பம்
கன்னி-இரக்கம்
துலாம்- லாபம்
விருச்சிகம்-செலவு
தனுசு- சாதனை
மகரம்-நலம்
கும்பம்-சிந்தனை
மீனம்-பாராட்டு
- கேது பகவான் ‘ஞானகாரகன்’ என்று போற்றப்படுகிறார்.
- அனைத்து உற்சவங்களும் இங்கே வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.
கோவில் தோற்றம்
சென்னையை அடுத்துள்ள போரூருக்கு அருகில் இருக்கிறது, கெருகம்பாக்கம் என்ற ஊர். இங்கு ஆதிகாமாட்சி உடனாய திருநீலகண்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

சென்னையில் அமைந்துள்ள நவக்கிரக தலங்களில் இது கேது பரிகாரத் தலம் ஆகும். எனவே இதனை 'வடகீழ்ப்பெரும்பள்ளம்' என்று அழைக்கிறார்கள்.
கேது பகவான், ஜோதிட சாஸ்திரப்படி 'ஞானகாரகன்' என்று போற்றப்படுகிறார். எந்த ஒரு குறிக்கோளும் இல்லாது வாழ்பவர்கள், கேதுவின் அருளால் சட்டென்று ஞானப்பாதைக்குத் திரும்புவார்கள்.
ஒருவரின் ஜாதகத்தில் கேதுவின் நிலை சரியில்லை என்றால், அந்த நபர் எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும், அது அவ்வளவு எளிதில் வெற்றியை அடையாது.
தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் பெற வேண்டி பாற்கடலைக் கடைந்தனர். அப்போது வலி மிகுதியால் வாசுகி பாம்பானது நஞ்சை கக்கியது. அதேநேரம் பாற்கடலில் இருந்தும் நஞ்சு உருவானது. இவை இரண்டும் சேர்ந்து 'ஆலகாலம்' என்ற கொடிய விஷமாக மாறின.
இந்த ஆலகால விஷத்தால் உலகமே அழியும் நிலை உருவாகும் என்பதால், தேவர்கள் அனைவரும் அஞ்சினர். அப்போது ஈசன், அந்த நஞ்சை அருந்தினார்.
இதனால் பதறிப்போன பார்வதிதேவி, அந்த நஞ்சு இறைவனின் உடலில் இறங்காதபடி, அவரது கண்டத்தை இறுகப்பற்றினார். இதனால் நஞ்சு, ஈசனின் கழுத்திலேயே நின்றது. இதன் காரணமாகவே, சிவபெருமானுக்கு 'நீலகண்டர்' என்ற பெயர் வந்தது.

அந்த திருநீலகண்டேஸ்வரரின் நாமத்தோடு, அமைந்த ஆலயம்தான் கெருகம்பாக்கத்தில் உள்ள ஆதிகாமாட்சி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில் ஆகும். தெற்கு திசை நோக்கி அமைந்துள்ளது, இந்த திருக்கோவில். கருவறையில் ஈசன் திருநீலகண்டேஸ்வரராக லிங்க ரூபத்தில் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். அவருக்கு எதிரே நந்திகேஸ்வரர் வீற்றிருக்கிறார்.
திருநீலகண்டேஸ்வரரே இத்தலத்தில் கேது பகவானாக அருள்பாலிப்பதாக சொல்கிறார்கள். அதன் காரணமாக இத்தலத்தில் கேது பகவானுக்கென தனிச் சன்னிதி இல்லை. கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் பாணமானது பாம்பினுடைய தலையாகவும், ஆவுடையார் சுற்று பாம்பின் உடல் பகுதியாகவும், அடிப்பாகம் பாம்பின் வால் பகுதியாகவும் பாவிக்கப்படுகிறது.
இவ்வாலய அம்பாள், 'ஆதிகாமாட்சி' என்ற திருநாமத்துடன் தெற்கு நோக்கி அருள்கிறார். அழகே உருவாய் அமைந்த இந்த அம்பாளின் எதிரில் அவளது வாகனமான சிம்மம் காட்சி தருகிறது. விநாயகப் பெருமான் 'சங்கடஹர கணபதி' என்ற திரு நாமத்தோடு தனிச் சன்னிதியில் அருள்கிறார்.
அம்பாள் சன்னிதிக்கு அருகில் காலபைரவருக்கும் தனிச்சன்னிதி இருக்கிறது. தவிர சண்டிகேஸ்வரர், சூரியன், சந்திரன் ஆகியோரும் பக்தர் களுக்கு காட்சி தருகிறார்கள். இவ்வாலயத்தின் முன்மண்டபத் தூண்களில் கேது பகவான், பைரவர் உள்ளிட்ட பல தெய்வங் களின் புடைப்புச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.
வெளிச்சுற்றில் நாகராஜர் சன்னிதி உள்ளது. இச்சன்னிதியில் இரு நாகங்கள் பின்னிப் பிணைந்த நிலையில் நடுவில் காளிங்க நர்த்தன கண்ணன் அருள்பாலிக்கிறார். சிவனுக்கும் நந்திக்கும் நடுவில் உள்ள விதானத்தில், சூரியனை கேது பகவான் விழுங்குவது போன்ற சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு நேர் கீழே நின்றபடி, ஈசனையும் அம்பாளையும் மனமுருக வேண்டிக் கொண்டால், கேதுவின் கெடுபலன்கள் விலகும் என்பது ஐதீகம். இத்தலத்தின் தல விருட்சமாக வில்வ மரம் இருக்கிறது. இந்த ஆலயத்திற்கு தீர்த்தம் இல்லை.
சிவத்தலங்களுக்கே உரிய அனைத்து உற்சவங்களும் இங்கே வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. குறிப்பாக சிவராத்திரி, ராகு - கேது பெயர்ச்சி, பிரதோஷம், பவுர்ணமி, காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி, விநாயகருக்கு சங்கடகர சதுர்த்தி, பங்குனி உத்திரம் அன்று அம்பாளுக்கு பூச்சொரிதல் (புஷ்பாபிஷேகம்) முதலான பல உற்சவங்கள் இத்தலத்தில் நடைபெறுகின்றன. இவ்வாலயம் தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்
கிண்டி - ராமாபுரம் வழியாக போரூர் செல்லும் மார்க்கத்தில் அமைந்துள்ளது, கெருகம்பாக்கம். போரூர் சந்திப்பில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் கெருகம்பாக்கம் இருக்கிறது.
கெருகம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. குன்றத்தூரில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் கெருகம்பாக்கம் உள்ளது.
- தூய்மையான மலர்கள் தூவி வணங்கி, புகழ் பாடி, மனதில் தியானிப்போம்.
- மலை போன்ற தோற்றத்தை உடைய சிவ பெருமானை திருமாலும், பிரம்மனுமே அறிய முடியவில்லை.
திருப்பாவை
பாடல்:
மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை,
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கை,
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும்! செப்பேலோ ரெம்பாவாய்.
விளக்கம்:
மாயம் நிறைந்தவனும், வட மதுரையில் அவதரித்தவனும், தூய்மையான பெரிய யமுனை நதியில் விளையாடியவனும், இடையர் குலத்தில் தோன்றிய ரத்தின தீபம் போன்றவனும், தான் பிறந்த தேவகியின் வயிற்றிற்கு பெருமை சேர்த்து தாமோதரன் என்று பெயர் பெற்றவனை, தூய்மையான மலர்கள் தூவி வணங்கி, அவன் புகழ் பாடி, மனதில் தியானிப்போம். செய்த பாவங்களும், வந்து சேர இருக்கும் வினைகளும் தீயில் இட்ட பஞ்சு போல மறைந்து போகச் செய்யும் அவன் திருநாமங்களைச் சொல்வோம்.
திருவெம்பாவை
பாடல்:
மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களேபேசும்
பாலூறு தேன்வாய் படிறீ கடை திறவாய்!
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மையாட் கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே! சிவனே! என்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்!
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
நறுமணம் வீசும் பொருட்களைப் பூசிய மணம் வீசும் கூந்தலையுடைய பெண்ணே! மலை போன்ற தோற்றத்தை உடைய சிவ பெருமானை திருமாலும், பிரம்மனுமே அறிய முடியவில்லை. அப்படிப்பட்டவனை நாம் அறிவோமென்று நீ வேடிக்கையாகப் பேசுகிறாய். தேனும் பாலும் கலந்து வேடிக்கையாகப் பேசும் திறம் படைத்தவளே! வாசலைத் திறப்பாய். மண்ணும் விண்ணும், மற்ற எதனாலும் அறிந்து கொள்ள இயலாத தன்மையுடையவனும், நம்மை அருளால் சீராட்டுபவனுமாகிய இறைவனைப் பாடுகின்றோம். 'சிவனே! சிவனே' என்று அவனது பெயரை உரக்கக் கூவுகிறோம். அதை உணராமல் உறங்கும் நீ. எப்போது உணரப் போகிறாய்? எழுந்திடுவாய்!
- ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு.
- திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மார்கழி-5 (வெள்ளிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: பஞ்சமி நண்பகல் 1.55 மணி வரை பிறகு சஷ்டி
நட்சத்திரம்: மகம் (முழுவதும்)
யோகம்: மரணயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தர குசாம்பிகை புறப்பாடு. இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மனுக்கு அபிஷேகம், கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவில்களில் சிறப்பு அபிஷேகம், வழிபாடு. லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. கீழ்த் திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை. மாடவீதி புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பொறுமை
ரிஷபம்-பெருமை
மிதுனம்-நன்மை
கடகம்-உவகை
சிம்மம்-கவனம்
கன்னி-ஆக்கம்
துலாம்- சிறப்பு
விருச்சிகம்-உழைப்பு
தனுசு- தேர்ச்சி
மகரம்-தெளிவு
கும்பம்-நிறைவு
மீனம்-நிம்மதி
- இறப்பின்றி வாழும் பெருமை பெற்றவர்களை, `சிரஞ்சீவி' என்று கூறுவார்கள்.
- சிரஞ்சீவிகளாக ஏழு பேர் இருக்கின்றனர்.
இறப்பின்றி வாழும் பெருமை பெற்றவர்களை, "'சிரஞ்சீவி' என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட சிரஞ்சீவிகளாக ஏழு பேர் இருக்கின்றனர். ராவணன் தன் அண்ணன் என்றாலும், நியாயத்தின் பக்கம் நின்றதற்காக விபீஷணனுக்கு சிரஞ்சீவியாக வாழும் வாய்ப்பு கிடைத்தது.
வாமன அவதாரம் எடுத்து வந்த விஷ்ணுவுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற தன்னையே அர்ப்பணித்ததால், மகாபலி சக்கரவர்த்தியும் சிரஞ்சீவி ஆனார்.

`சிவனே கதி' என்ற சராணகதி தத்துவத்தில் இருந்ததால் எமனிடம் இருந்து காப்பாற்றப்பட்டு என்றும் 16' என்ற வாழ்த்துடன் சிரஞ்சீவியானார் மார்க்கண்டேயர்.
படிப்பவர்களின் பாவங்களைப் போக்கும் புராணங்களையும், காவியங்கைளையும் எழுதியதோடு, வேதங்களை நான்காக பகுத்ததால் வேதவியாசரும் சிரஞ்சீவியானார்.
தந்தையின் சொல்லை மறுக்காமல் தாயைக் கொன்றதுடன், தன் தந்தையாலேயே தாயை உயிர்ப்பிக்க செய்த பரசுராமரும் சிரஞ்சீவி பட்டம் பெற்றார்.
கவுரவர்களின் பக்கம் நின்று, கடைசி வரை துரியோதனுக்காக போரிட்டதுடன், அபிமன்யுவின் மனைவி வயிற்றில் இருந்த கருவை கொல்ல அஸ்திரம் எய்ததால், துன்பத்தில் உழலும் பொருட்டு சிரஞ்சிவியாக மாறும் சாபத்தைப் பெற்றான், துரோணரின் மகன் அஸ்வத்தாமன்.
மேற்கண்ட ஆறுபேருக்கும் காரண காரியங்களால் வந்து சேர்ந்தது சிரஞ்சீவி பட்டம்.

ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இன்றி, ராமனுக்கு சேவை புரிந்த காரணத்தால் இந்த பட்டியலில் அனுமனும் இடம் பிடித்தார்.
- காதணியுடன் பிறந்த அனுமன்.
- சூரியனின் சீடன் அனுமன்.
காதணியுடன் பிறந்த அனுமன்
மகாபாரதத்தில் கவச குண்டலங்களுடன் பிறந்தவர், கர்ணன். அதே போல் ராமாயணத்தில் காதில் அணிகலனுடன் பிறந்தவர் அனுமன். கிஷ்கிந்தாவின் இளவரசனாக இருந்த வாலி, பிற்காலத்தில் அஞ்சனைக்கு பிறக்கப் போகும் பிள்ளையால் தனக்கு ஆபத்து வரப்போகிறது என்பதை ஜோதிட வல்லுனர்களிடம் இருந்து அறிந்தான்.

தன் எதிரியை கருவிலேயே அழிக்க நினைத்த வாலி, தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு உள்ளிட்ட பல உலோகங்களை சேர்த்து அம்பு ஒன்றை தயார் செய்தான். அதனை உறக்கத்தில் இருந்த அஞ்சனையின் வயிற்றில் எய்தான். ஆனால் அஞ்சனையின் வயிற்றில் இருந்த கரு, சிவபெருமானின் அம்சம் அல்லவா?.
அந்த முக்கண்ணனின் கோபப் பார்வையில் அம்பு உருகி, அஞ்சனைக்கும் வயிற்றில் இருந்த கருவிற்கும் எந்த சேதத்தையும் ஏற்படுத்தவில்லை. அதோடு உருகிய அம்பு, அற்புத அணிகலன்களாக மாறி, கருவில் இருந்த குழந்தையின் காதுகளை அலங்கரித்தது. இதனால் அனுமன் பிறந்தபோதே, காதணிகளுடன் பிறந்ததாக புராணம் கூறுகின்றது.

சூரியனின் சீடன்
சிவபெருமானின் அவதாரமாக மண்ணில் தோன்றிய அனுமனுக்கு, குருவாக இருந்து கல்வி போதித்தவர் சூரிய பகவான். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக, "குருவே உங்களுக்கு என்ன குரு தட்சணை தர வேண்டும்?" என்று கேட்டார். அப்போது சூரியன், "வரும் காலத்தில் தன்னுடைய மகன் சுக்ரீவனுக்கு ஆலோசகராக இருந்து, அவனை வழிநடத்திச் செல்ல வேண்டும்" என்றார்.
அதன்படிதான், சுக்ரீவன் தன்னுடைய அண்ணன் வாலியால் விரட்டிவிடப்பட்ட போதும், அவனுக்கு அருகிலேயே இருந்து அவனுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார், அனுமன். அவர்தான் ராமபிரான் மூலமாக வாலிக்கும், சுக்ரீவனுக்கும் இருந்த பகையை முடிவுக்கு கொண்டு வந்து, அவனை வானர அரசனாக்கினார்.

ராமாயணம்-மகாபாரதம்
ராமாயணத்தில் ராமருடன் மட்டுமல்லாது, மகா பாரதத்தில் கிருஷ்ணருடனும் பழகியவர், அனுமன். கிருஷ்ணர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, குருசேத்திரப் போரில் அர்ச்சுனனின் தேரின் மீது கொடியாக வீற்றிருந்தது அனுமனே, அந்த வகையில் அனுமனின் முன்பாகத்தான். கீதா உபதேசத்தை அர்ச்சுனனுக்கு கிருஷ்ண பரமாத்மா கூறினார்.
கிருஷ்ணருக்கும், அனுமனுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. மகாபாரதத்தில் நடந்த போரின் போது, அர்ச்சுனனின் சாரதியாக கிருஷ்ணர் இருந்தார். அதேபோல் அவனது தேரில் கொடியாக அனுமன் இருந்தார். மகாபாரதத்தில் பாண்டவர்களுக்காக, கவுரவர்களிடம் கிருஷ்ணர் தூது சென்றார்.
ராமாயணத்தில் ராமருக்காக, ராவணனிடம் தூது சென்றவர், அனுமன். கிருஷ்ணர் கோவர்த்தன மலையை தூக்கி, கோகுல மக்களை காத்து நின்றார். அனுமன், சஞ்சீவி மலையை தூக்கி வந்து லட்சுமணனைக் காத்தார். எல்லாவற்றுக்கும் மேலாக விஸ்வரூபதரிசனம் தந்த தெய்வங்களின் பட்டியலில் கிருஷ்ணருக்கும், அனுமனுக்கும் இடமுண்டு.

சிறிய திருவடி
மகாபாரதத்தில் வரும் கிருஷ்ணன்- அர்ச்சுனன் நட்பை விட உயர்வானது, ராமாயணத்தில் ராமருக்கும், அனுமனுக்கும் உள்ள பந்தம். மகாபாரதத்தில் அர்ச்சுனனுக்காக கடவுளான கிருஷ்ணர் துணை நின்றார். ஆனால் ராமாயணத்தில் கடவுளான ராமருக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாது சேவை புரிந்தவர் அனுமன்.
இப்படிப்பட்ட பெருமைக்குரியவர் என்பதால் தான் மகாவிஷ்ணு, கருடனுக்கு அடுத்தபடியாக தன்னுடைய வாகனமாக அனுமனையும் ஏற்றுக்கொண்டார். அதேசமயம் கருடனுக்கு இல்லாத பெருமை அனுமனுக்கு உண்டு.
அது பெரிய திருவடியான கருடன் பெரும்பாலும் பெருமாள் கோவிலில் தனி சன்னிதியில் அல்லது பெருமாளுக்கு எதிரில்தான் அருள் பாலிப்பார். ஆனால் அனுமன் பெருமாள் கோவில்களில் இருந்தாலும், அவருக்கென்று தனியாகவும் பல ஆலயங்கள் எழுப்பப்பட்டு இருக்கின்றன. அதற்கு அவரது தியாகமும், தன்னலமற்ற இறை சேவையும்தான் காரணம்.
- கடலைப் போன்ற அகன்ற பரப்புடைய நீரைக் கொடுக்கக்கூடிய மழைக் கடவுளே!
- சிவபெருமானை பாடித் தொழுது உள்ளம் உருகி நிற்கின்றோம்!
திருப்பாவை
பாடல்:
ஆழி மழைக்கண்ணா! ஒன்றுநீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழி போல் மின்னி, வலம்புரி போல் நின்றதிர்ந்து,
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
விளக்கம்:
கடலைப் போன்ற அகன்ற பரப்புடைய நீரைக் கொடுக்கக்கூடிய மழைக் கடவுளே! நீ ஒன்றையும் மறைக்காதே! பெரும்கடலில் புகுந்து நீரை முகந்து, சத்தத்துடன் மேலே எழுந்து, காலத்தின் முதன்மையாய் விளங்கும் எம்பெருமானின் வடிவம் போல உடல் கறுத்து. பத்மநாபனின் வலது கையில் விளங்கும் சக்கரம் போல மின்னுவாய். அவன் இடது கரத்திலுள்ள வலம்புரிச் சங்கைப் போல இடி இடித்து முழங்குவாய். அவனது சாரங்கம் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல, பெய்யும் மழை உலகை வாழச் செய்வதாய் இருக்கட்டும். நாங்களும் மார்கழி நோன்பிற்காக மகிழ்ந்து நீராடுவோம்!
திருவெம்பாவை
பாடல்:
ஒண்ணித் திலநகையாய்! இன்னம் புலர்ந்தின்றோ?
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ?
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே!
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாமாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
(தோழிகள்), "ஒளி வீசும் முத்துக்களைப் போன்ற சிரிப்பை கொண்ட பெண்ணே! உனக்கு இன்னுமா பொழுது விடியவில்லை?". (உறங்கும் பெண்), "கிள்ளை மொழி பேசும் நம் தோழிகள், அனைவரும் வந்து விட்டனரா?". (தோழிகள்), "நீயே எண்ணிப் பார்த்துக்கொள். நாங்கள் சொல்ல மாட்டோம். அதுவரை உறங்கி வீணாக காலத்தைக் கடத்தாதே. விண்ணுலகில் உள்ள யாவர்க்கும் அருமருந்தானவனும், வேதத்தின் உயர் பொருளாக விளங்குபவனும், கண்ணுக்கு இனிய பரம்பொருளாக இருப்பவனுமாகிய சிவபெருமானை பாடித் தொழுது உள்ளம் உருகி நிற்கின்றோம்! நீயே வந்து எண்ணிப் பார்த்து, எண்ணிக்கை குறைந்தால் தூங்கிக் கொள்வாய்!"
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
- குறுக்குத் துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷே கம், அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மார்கழி-4 (வியாழக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சதுர்த்தி நண்பகல் 1.10 மணி வரை பிறகு பஞ்சமி
நட்சத்திரம்: ஆயில்யம் நாளை விடியற்காலை 5.07 மணி வரை பிறகு மகம்
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை மற்றும் மைசூர் மண்டபம் எழுந்தருளல். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. குறுக்குத் துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சனம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-போட்டி
ரிஷபம்-வெற்றி
மிதுனம்-செலவு
கடகம்-சிறப்பு
சிம்மம்-தடை
கன்னி-தாமதம்
துலாம்- நிறைவு
விருச்சிகம்-மாற்றம்
தனுசு- வரவு
மகரம்-புகழ்
கும்பம்-முயற்சி
மீனம்-பாராட்டு
- வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்கள் பக்தர்கள் துவார தரிசனம்.
- 8 மையங்கள் அமைத்து நேரடியாக இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி மாதம் 10-ந் தேதி முதல் 19-ந் தேதி வைகுண்ட ஏகாதசி துவாரகா தரிசனம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து நேற்று அன்னமய்யா பவனில் முதன்மை செயல் அலுவலர் சியாமலா ராவ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் அவர் கூறியதாவது:-
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்கள் பக்தர்கள் துவார தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்காக வருகிற 23-ந்தேதி காலை 11 மணிக்கு 10 நாட்களுக்கான ஸ்ரீ வாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.
இதேபோல் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் 24-ந் தேதி ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. நேரடி இலவச தரிசன நேர ஒதுக்கீடு டிக்கெட்டுகள் வைகுண்ட ஏகாதசி 2 நாட்கள் முன்னதாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக திருப்பதியில் 8 மையங்கள் அமைத்து நேரடியாக இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது.
வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு வழங்குவதற்காக தினமும் 3.50 லட்சம் லட்டுகள் தயார் செய்யப்பட உள்ளது. காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை டீ, காபி, பால், உப்புமா, சர்க்கரை பொங்கல், பொங்கல் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும்.
வைகுண்ட ஏகாதசி அன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை சுவர்ண ரத்தின அலங்காரத்தில் ஏழுமலையான் அருள் பாலிப்பார்.
துவாதசி நாட்களில் அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வெற்றிலை மாலை சாற்றி வழிபட்டால் எதிர்பட்ட துன்பங்கள் தூர விலகும்.
- திருமாலுக்கு மிகவும் பிடித்தது துளசி.

வெற்றிலை:
ராவணனால் சிறைவைக்கப்பட்டிருந்த சீதா, ஒரு கட்டத்தில் தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தார். அப்போது தான் ராமபிரானால் அனுப்பப்பட்ட அனுமன். இலங்கை வந்து சேர்ந்தார். அவர் உச்சரித்த 'ராமராம் என்ற நாமம் கேட்டு தன் முடிவை மாற்றிக்கொண்டார் சீதா தேவி.
அதோடு தன்னை சந்தித்து ராமரின் கணையாழியை கொடுத்த அனுமனை, அங்கிருந்த வெற்றிலைக் கொடியில் இருந்து ஒரு வெற்றிலையைப் பறித்து தலையில் போட்டு "சிரஞ்சீவியாக இரு" என்று ஆசிர்வதித்தார்.

இதன் காரணமாகத்தான் அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவிக்கும் பழக்கம் வந்தது. அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபட்டால் எதிர்பட்ட துன்பங்கள் தூர விலகும்.

வாழைப்பழம்:
அனுமனுக்கு வாழைப்பழத்திலும் மாலை கோர்த்து அணிவிப்பார்கள். வானரங்களுக்கு (குரங்கு) வாழைப்பழத்தின் மீது அலாதி பிரியம். எனவே வானரமாக இருந்த அனுமனுக்கும் வாழைப்பழ மாலை அணி விக்கிறார்கள்.

துளசி:
திருமாலுக்கு மிகவும் பிடித்தது துளசி. திருமாலின் அவதாரம் தான் ராமர். தனது பக்தனுக்கு செலுத்தும் மரியாதை தனக்கு செலுத்தும் மரியாதை என்று கூறியவர், ராமபிரான், எனவே அனுமனுக்கும் துளசி மாலை சாற்றுவதை பக்தர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.

உளுந்து வடை:
ராவண யுத்தத்தில் வீரம் காட்டி நின்ற அனுமன், கொழுத்த அசுரர்களை வடை தட்டுவது போல் தட்டி துவம்சம் செய்தார். அதனால் கொழுப்பு சத்துக் கொண்ட உளுந்தில் வடை செய்து அவருக்கு மாலையாக அணிவிக்கிறார்கள். இந்த மாலையை சூட்டுவதால் தீமையில் இருந்து அனுமன் நம்மை காப்பார் என்பது நம்பிக்கை.






