என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம்

    தொழில் வளர்ச்சி கூடும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். குடும்பத்தினர்களின் ஆதரவு உண்டு. கொடுத்த பாக்கிகள் வசூலாகும். பயணம் பலன் தரும்.

    ரிஷபம்

    கல்யாண வாய்ப்பு கைகூடும் நாள். உறவினர்கள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர். இடமாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். தொழில் மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    மிதுனம்

    அலைச்சல் கூடும் நாள். உறவினர்கள் பணம் கேட்டுத் தொல்லை தரலாம். பாகப் பிரிவினைகள் சுமூகமாக முடியும். உத்தியோகத்தில் அதிகாரிகள் அதிக பணிச்சுமையை வழங்குவர்.

    கடகம்

    விரயங்கள் கூடும் நாள். கூட்டுத் தொழிலை தனித் தொழிலாக மாற்ற முயற்சிப்பீர்கள். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனை பலன் தரும். விலை உயர்ந்த பொருட்களை கவனமுடன் கையாளவும்.

    சிம்மம்

    இடமாற்றச் சிந்தனை மேலோங்கும் நாள். எதிரிகளின் பலம் குறையும். ரொக்கத்தால் வந்த சிக்கல்கள் அகலும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு உண்டு.

    கன்னி

    அதிகாலையிலேயே அனுகூலத் தகவல் வந்து சேரும் நாள். நண்பர்களின் சந்திப்பால் நல்ல சம்பவமொன்று நடைபெறும். உத்தியோகத்தில் உங்களுக்குப் பிடித்தமான இடத்திற்கு மாற்றம் கிடைக்கும்.

    துலாம்

    நிதி நிலை உயரும் நாள். வருமானம் திருப்தி தரும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும். உத்தியோகத்தில் காசோலை சம்பந்தமாக கவனம் தேவை.

    விருச்சிகம்

    புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைக்கும். வருமானம் எதிர்பார்த்ததை விட கூடுதலாகவே இருக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு.

    தனுசு

    பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புனித யாத்திரைகள் செல்வதில் கவனம் செலுத்துவீர்கள். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.

    மகரம்

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். மறதியால் சில பணிகளை விட்டு விடும் சூழ்நிலை உருவாகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. சேமிப்பில் சிறிது கரையும்.

    கும்பம்

    குடும்ப முன்னேற்றம் கூடும் நாள். குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சி தாமதப்படும். உடன்பிறப்புகள் வழியே விரயம் உண்டு.

    மீனம்

    பங்குதாரர்களோடு ஏற்பட்ட பகை விலகும் நாள். உடல்நலம் சீராகும். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் படிப்பிற்கேற்ற வேலை கிடைப்பதற்கான அறிகுறி தோன்றும்.

    • ஆடிப்பூரம் நாளை கொண்டாடப்படுகிறது.
    • ஆடிப்பூரத்தன்று அம்மனை முழுவதுமாக கண்ணாடி வளையல்களில் அலங்காரம் செய்து வழிபடுவார்கள்.

    ஆடிப்பூரம் ஆடி மாதத்தில் வரக் கூடிய முக்கிய நிகழ்வாகும். இந்த நாளில் பெண்கள் அம்பாளுக்கு விரதம் இருந்து மஞ்சள், குங்குமம், வளையல் உள்ளிட்ட மங்கல பொருட்களை படைத்து வழிபடுவது வழக்கம்.

    ஆடிப்பூரம் நாளை கொண்டாடப்படுகிறது. பூரம் நட்சத்திரம் ஜூலை 27-ந்தேதி மாலை 6.55 மணிக்கு தொடங்கி, ஜூலை 28-ந்தேதி இரவு 8 மணி வரை இருக்கிறது.

    ஆடிப்பூரத்தன்று அம்மனை முழுவதுமாக கண்ணாடி வளையல்களில் அலங்காரம் செய்து வழிபடுவார்கள். வழிபாடு முடிந்ததும் அந்த கண்ணாடி வளையல்களை பெண்களுக்கு பிரசாதமாக கொடுப்பது வழக்கம். அந்த வளையலை அணிந்தால், அம்பாள் தாய்மை கோலம் கொண்ட நாள் என்பதால் குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    ஆடி பூரத்தன்று அம்மன் கோவிலுக்குச் சென்று அம்மனுக்கு கண்ணாடி வளையல்கள் வாங்கி அளிப்பது மிகவும் புண்ணியம். திருமணமாகாத பெண்கள், நல்ல கணவன் துணையாக அமைய வேண்டும் என்றும், தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டால், அந்த வரத்தை ஆதிசக்தியான அன்னை அருள்வதாக நம்பிக்கை. இந்த அற்புத திருநாளில், பலர் மஞ்சள் தாலி கட்டிக் கொள்வதும் உண்டு.

    ஆடிப்பூரம் அன்று ஆலயத்திற்குச் சென்று அம்மனை வழிபட இயலாதவர்கள், தங்கள் வீடுகளில் பூஜை அறையில் உள்ள அம்மன் படத்திற்கு முன்பு, பட்டு வஸ்திரம், வளையல், பூக்கள் படைத்து வணங்கலாம். .

    ஆடிப்பூரம் அன்று வைணவத் திருக்கோவில்களில் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். ஏனெனில் இந்த நாளில்தான் ஆண்டாள் அவதரித்ததாக சொல்லப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து ஆண்டாளை வணங்கினால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

    • ஒவ்வொரு பெண்ணிடமும் அம்பிகையின் அம்சம் நிறைந்துள்ளது.
    • ஆடி பூரத்தன்று அம்மன் கோவிலுக்குச் சென்று அம்மனுக்கு கண்ணாடி வளையல்கள் வாங்கி அளிப்பது மிகவும் புண்ணியம்.

    ஆடி மாதம் முழுவதுமே அம்மனை வழிபடக்கூடிய மாதமாக உள்ளது. ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திர நாளை, 'ஆடிப்பூரம்' என்ற பெயரில் அம்மன் ஆலயங்கள் தோறும் கொண்டாடுவார்கள். பூமியில் அவதரித்த அம்மன், ஆடி மாதத்தில் தான் பூப்படைந்ததாகவும், சூலுக்கு தயாரானதாகவும் கூறப்படுகிறது. அதை குறிப்பதாக ஆடிப்பூரம் திருவிழா நடைபெறும் 10 நாட்களும், அம்மன் தினமும் ஒரு கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவதாக நம்பிக்கை.

    ஆடிப்பூரம் அன்று தான் சித்தர்களும், யோகிகளும் தங்களுடைய தவத்தைத் தொடங்குகின்றனர் என புராணங்கள் குறிப்பிடுகின்றன. தேவிக்குரிய திருநாள்களில் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் 'ஆடிப் பூரம் திருநாள்' மிகவும் சிறப்பானது. பெண்களுக்கு வளையல் காப்பு நடத்துவதுபோல, நம்மைப் படைத்த அன்னைக்கு ஆடிப்பூர நாளில் வளைகாப்பு நடத்தப்படுவது வாடிக்கை.

    இந்த நாளில் அனைத்து அம்மன் கோவில்களிலும், அம்பிகைக்கு வளையல்களால் அலங்காரம் செய்து வழிபடுவார்கள். பின்னர் அம்மனை அலங்கரிக்கப் பயன்படுத்திய வளையல்கள், தரிசிக்க வந்த பெண்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். அவ்வாரு பிரசாதமாக சில வளையல்களைப் பெற்று அணிந்து கொண்டால், மனம்போல மாங்கல்யம் அமையவும், மங்கலங்கள் நிலைக்கவும் செய்யும். அதோடு, அம்பிகை தாய்மைக் கோலம் கொண்ட நாள் என்பதால் குழந்தை பாக்கியமும் நிச்சயம் கிட்டும் என்பது ஐதீகமாக உள்ளது.

    ஒவ்வொரு பெண்ணிடமும் அம்பிகையின் அம்சம் நிறைந்துள்ளது. எனவே ஆடிப்பூரம் தினத்தன்று அம்பிகையின் அருள் முழுமையாக நிறைந்திருக்கும் என்பதால், எந்த பேதமும் இன்றி இயன்ற அளவு மற்ற பெண்களுக்கு வளையல்கள், குங்குமம், மஞ்சள், ரவிக்கைத் துணி, புடவை போன்ற மங்கலப் பொருட்களை வாங்கித் தர வேண்டும். அப்படி செய்தால் இல்லற வாழ்வு சிறப்பாக அமையும். தாலி பாக்கியம் சிறக்க, தாயாகும் பேறுபெற, வளமும் நலமும் பெருக, வேறு எந்த வேண்டுதல்களும் தேவையில்லை. ஆடிப்பூர நாளில் அம்மனுக்கு வளையல் வாங்கிக் கொடுத்தாலே போதுமானது. அனைத்து வளங்களையும் அம்பிகை நிச்சயம் தந்தருள்வாள்.

    ஆடி பூரத்தன்று அம்மன் கோவிலுக்குச் சென்று அம்மனுக்கு கண்ணாடி வளையல்கள் வாங்கி அளிப்பது மிகவும் புண்ணியம். திருமணமாகாத பெண்கள், நல்ல கணவன் துணையாக அமைய வேண்டும் என்றும், தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டால், அந்த வரத்தை ஆதிசக்தியான அன்னை அருள்வதாக நம்பிக்கை. இந்த அற்புத திருநாளில், பலர் மஞ்சள் தாலி கட்டிக் கொள்வதும் உண்டு.

    ஆடி மாதத்தில், பூரம் நட்சத்திரம் உச்சமாக இருக்கும். ஆடிப்பூரம் அன்று சக்தி பீடங்கள் என்று அழைக்கப்படும் அம்மன் ஆலங்களுக்குச் சென்று வழிபட்டால், கேட்ட வரம் கிடைக்கும். ஆரோக்கியமும், செல்வ செழிப்பும் உண்டாகும்.

    ஆடிப்பூரம் அன்று ஆலயத்திற்குச் சென்று அம்மனை வழிபட இயலாதவர்கள், தங்கள் வீடுகளில் பூஜை அறையில் உள்ள அம்மன் படத்திற்கு முன்பு, பட்டு வஸ்திரம், வளையல், பூக்கள் படைத்து வணங்கலாம். இளம்பெண்கள், திருமணமான பெண்களுக்கு வளையல் கொடுத்தால் நம்முடைய வீட்டிலும் வளைகாப்பு நடைபெறும் என்பது நம்பிக்கையாகும். அன்னைக்கு பிரியமான பிரசாதமாக பானகம், நீர் மோர், சர்க்கரைப் பொங்கல், கூழ் ஆகியவற்றை படைத்து வேண்டிக்கொண்டால் சகலவிதமான நன்மைகளையும் பெறலாம்.

    • கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம்.
    • திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆடி-11 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : திருதியை நள்ளிரவு 12.43 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம் : மகம் இரவு 6.54 மணி வரை பிறகு பூரம்

    யோகம் : மரண, சித்தயோகம்

    ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    காஞ்சி காமாட்சியம்மன், திருப்போரூர் முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம், திருவல்லிக்கேணி ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்

    இன்று வாஸ்து நாள் (காலை 7.44 மணிக்கு மேல் 8.20 மணிக்குள் வாஸ்து செய்ய நன்று) சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் முளைக்கொட்டு விழா தொடக்கம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.

    திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் பால் அபிஷேகம். வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரருக்கும், ஸ்ரீ செல்வ முத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம். ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமிக்கு அபிஷேகம். திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நலம்

    ரிஷபம்-பயணம்

    மிதுனம்-முயற்சி

    கடகம்-ஆதாயம்

    சிம்மம்-தாமதம்

    கன்னி-பரிசு

    துலாம்- வரவு

    விருச்சிகம்-ஆர்வம்

    தனுசு- போட்டி

    மகரம்-அனுகூலம்

    கும்பம்-பொறுமை

    மீனம்-நன்மை

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம்

    மனதிற்கினிய சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். மகிழ்ச்சிப் பயணம் உண்டு. மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். பணவரவு திருப்தி தரும். கட்டிடப் பணி தொடரும்.

    ரிஷபம்

    தடைபட்ட காரியம் தானாக நடைபெறும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வராது என்று நினைத்த பாக்கிகள் வந்து சேரும். கல்யாணக் கனவுகள் நனவாகும்.

    மிதுனம்

    போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். நண்பர்கள் செய்த உதவியை மறக்காமல் நடந்து கொள்வீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் திருப்தி தரும்.

    கடகம்

    வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். வரவும், செலவும் சமமாகும். வாகன மாற்றச் சிந்தனை மேலோங்கும். உத்தியோக முயற்சிக்கு அயல்நாட்டிலிருந்து அழைப்புகள் வரலாம்.

    சிம்மம்

    நினைத்த காரியம் நினைத்தபடியே நடைபெறும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். பொதுவாழ்வில் புகழ் கூடும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர்.

    கன்னி

    முயற்சி கைகூடும் நாள். தெய்வீகச் சிந்தனை மேலோங்கும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும்.

    துலாம்

    தேக்க நிலை மாறி தெளிவு பிறக்கும் நாள். வரவு திருப்தி தரும். வீடு, மனை வாங்க போட்ட திட்டங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

    விருச்சிகம்

    வளர்ச்சி கூடும் நாள். தொழிலில் வருமானம் உயரும். செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள். குடும்பத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தென்படும்.

    தனுசு

    வெற்றிச் செய்திகள் வந்து சேரும் நாள். வீடு மாற்ற சிந்தனை மேலோங்கும். வரன்கள் வாயில் தேடி வரும். உத்தியோகத்தில் ஓய்வின்றி உழைத்துப் பலனில்லையே என்று நினைப்பீர்கள்.

    மகரம்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். கூட் டாளிகள் நம்பிக்கைக்குரியவிதம் நடந்து கொள்ள மாட்டார்கள். விரயங்கள் கூடும். வாகனப் பழுதுகளால் வாட்டம் கொள்வீர்கள்.

    கும்பம்

    பம்பரம்போல் சுழன்று பணிபுரியும் நாள். பாராட்டும் புகழும் கூடும். நிர்வாகத் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். நினைத்த நேரத்தில் நினைத்த காரியத்தைச் செய்து முடிப்பீர்கள்.

    மீனம்

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். நேற்றைய பிரச்சனை இன்றும் நீடிக்கும். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறக் கையிருப்பைக் கரைக்க நேரிடும். ஆரோக்கியத் தொல்லை உண்டு.

    • அல்லாஹ்வின் தன்மையான இரக்கக் குணம் நம் வாழ்வில் ஒன்றிப்போக வேண்டும்.
    • இறைவனின் இரக்கத்தைப்பெறும் வகையில் நம் வாழ்வை அமைத்துக்கொள்வோம்.

    அல்லாஹ்வின் தன்மைகளில் முதன்மையான ஒன்று இரக்கம். அல்லாஹ்வின் இரக்கம் எப்படி இருக்கும்? தவறுகள் செய்து நரகம் சென்றவன் சுவனம் செல்ல துடிக்கும்போது அல்லாஹ் எப்படி நடந்து கொள்வான்? இது குறித்து நபித்தோழர் அப்துல்லாஹ் பின் மஸ் ஊத் (ரலி) இவ்வாறு கூறியுள்ளார்.

    (நரகத்திலிருந்து வெளியேறி) இறுதியாக சொர்க்கத்தில் நுழையும் ஒரு மனிதர் சில சமயம் நடந்து வருவார். சில சமயம் தவழ்ந்தபடி வருவார். சில சமயம் நரக நெருப்பு அவரது முகத்தைத் தாக்கிக் கரித்தும் விடும். இந்நிலையில் அவர் நரகத்தைத் தாண்டியதும் அதைத் திரும்பிப் பார்த்து, "உன்னிடமிருந்து என்னைக் காப்பாற்றிய (என் இறை)வன் சுபிட்சமிக்கவன்; முன்னோர் பின்னோர் யாருக்கும் வழங்காத (பாக்கியத்)தை அல்லாஹ் எனக்கு வழங்கினான்" என்று கூ(றி இறைவனைப் போற்)றுவார்.

    அப்போது அவருக்கு ஒரு மரம் காட்டப்படும். உடனே அவர், "என் இறைவா! அந்த மரத்தின் அருகே என்னைக் கொண்டு செல்வாயாக! அதன் நிழலை நான் பெற்றுக் கொள்வேன்; அதன் (கீழே பாயும்) நீரைப் பருகிக்கொள்வேன்" என்று கூறுவார். அதற்கு அல்லாஹ், "மனிதா! அதை நான் உனக்கு வழங்கினால் வேறொன்றை நீ என்னிடம் கேட்கக்கூடுமல்லவா" என்று கூறுவான். அதற்கு அவர், "இல்லை; இறைவா! வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்" என்று கூறி, வாக்குறுதி அளிப்பார். அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் காணும் அவருடைய இறைவன், அவருக்கு வாய்ப்பளித்து, அவரை அந்த மரத்தின் அருகே கொண்டு செல்வான். அங்கு அவர் அந்த மரத்தின் நிழலைப் பெறுவார்; அதன் நீரையும் பருகிக்கொள்வார்.

    பிறகு அவருக்கு மற்றொரு மரம் காட்டப்படும். அது முதலில் காட்டப்பட்ட மரத்தைவிட மிகவும் அழகாய் இருக்கும். (அதைக் கண்ட) உடன் அவர், "என் இறைவா! இதற்கருகே என்னைக் கொண்டு செல்வாயாக! நான் அதன் நீரைப் பருகி அதன் நிழலை அடைந்து கொள்வேன்! இதைத் தவிர வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்" என்று கூறுவார். அதற்கு இறைவன், "மனிதா! வேறெதையும் கேட்கமாட்டேன் என்று என்னிடம் நீ (முன்பு) வாக்குறுதி அளிக்கவில்லையா? அதன் அருகில் உன்னை நான் கொண்டுசென்றால், வேறொன்றை என்னிடம் நீ கேட்கக்கூடுமல்லவா" என்பான். உடனே அவர், வேறெதையும் கேட்கமாட்டேன் என்று வாக்குறுதி அளிப்பார். இறைவனும் அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் கண்டு அவருக்கு வாய்ப்பளித்து, அவரை அதன் அருகே கொண்டு செல்வான். அவர் அதன் நிழலை அனுபவித்துக் கொண்டு அதன் (கீழே ஓடும்) நீரையும் அருந்துவார்.

    பிறகு சொர்க்க வாசல் அருகே உள்ள மரம் அவருக்குக் காட்டப்படும். அது முதலிரண்டு மரங்களை விடவும் ரம்மியமானதாய் இருக்கும். உடனே அவர், "என் இறைவா! அந்த மரத்தின் அருகே என்னைக் கொண்டு செல்வாயாக! நான் அதன் நிழலைப் பெறுவேன்; அதன் நீரைப் பருகிக்கொள்வேன்; இதைத் தவிர வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்" என்று கூறுவார். அதற்கு இறைவன், "மனிதா! வேறெதையும் நான் கேட்கமாட்டேன் என்று (முன்பு) என்னிடம் நீ வாக்குறுதி அளிக்கவில்லையா?" என்று கேட்பான். அதற்கு அவர், "ஆம்; என் இறைவா! இந்தத் தடவை (மட்டும்); இனி, இதன்றி வேறெதையும் உன்னிடம் கேட்கமாட்டேன்" என்று கூறுவார். இறைவனும் அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் கண்டு அவருக்கு வாய்ப்பளித்து, அவரை அதன் அருகே கொண்டு செல்வான்.

    அவர் அந்த மரத்தை நெருங்கும்போது சொர்க்கவாசிகளின் குரல் அவருக்குக் கேட்கும். உடனே அவர், "என் இறைவா! சொர்க்கத்திற்குள் என்னை அனுப்புவாயாக!" என்பார். அதற்கு இறைவன், "மனிதா! ஏன் என்னிடம் கோருவதை நிறுத்திக்கொண்டாய்? உலகத்தையும் அதைப் போன்ற இன்னொரு மடங்கையும் உனக்கு நான் வழங்கினால் உனக்கு மகிழ்ச்சி ஏற்படும்தானே?" என்று கேட்பான். அதற்கு அவர், "என் இறைவா! அகிலத்தின் அதிபதியே! நீயே என்னைப் பரிகாசம் செய்கிறாயா?" என்று கேட்பார். "நான் உன்னைப் பரிகாசம் செய்யவில்லை. மாறாக, நாடியதைச் செய்கின்ற ஆற்றல் உள்ளவன் நான்" என இறைவன் கூறுவான். (நூல்: ஸஹீஹ் முஸ்லிம்)

    பெரு பாவங்கள் செய்பவர்களே நரகம் செல்வார்கள் என்று அல்லாஹ் பல இடங்களில் குறிப்பிட்டுப் பேசுகிறான். ஆனால், மேற்கண்ட நபிமொழியில் நரகத்தில் இருப்பவனைச் சுவனம் கொண்டு வருகிறது அல்லாஹ்வின் இரக்கம்.

    அல்லாஹ்வின் தன்மையான இரக்கக் குணம் நம் வாழ்வில் ஒன்றிப்போக வேண்டும். இத்தன்மையே நாளை மறுமையில் நம்மைத் தலைநிமிரச் செய்யும். மேலும் அல்லாஹ்வுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய தொண்டாக அமையும். இறைவனின் இரக்கத்தைப்பெறும் வகையில் நம் வாழ்வை அமைத்துக்கொள்வோம். இறைவனிடம் இருந்து சுவனத்தை பரிசாகப் பெறுவோம்.

    • ஆண்டுதோறும் ஜூலை மாதம் 26-ந் தேதி முதல் ஆகஸ்ட் 5-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
    • புறாக்கள் மற்றும் பலூன்கள் பறக்கவிட்டு கைகளை தட்டி தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பனிமய மாதா பேராலயம் உலகப் புகழ்பெற்ற ஆலயமாகும்.

    இந்த ஆலயம் இத்தாலி ரோம் நகரில் அமைந்துள்ள வாடிகன் சிட்டியால் பசிலிகா அந்தஸ்து வழங்கப்பட்ட ஆலயம் ஆகும். இங்கு ஆண்டுதோறும் ஜூலை மாதம் 26-ந் தேதி முதல் ஆகஸ்ட் 5-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு 443-ம் ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

    விழாவினை முன்னிட்டு நேற்று மாலை கொடி பவனி நடைபெற்றது. இன்று காலை தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் கூட்டுத் திருப்பலி முடிந்ததும் காலை 8.45 மணியளவில் பனிமயமாதா உருவம் பொறித்த கொடியை ஊர்வலமாக பங்கு தந்தைகள் கொண்டுவந்து பேராலயம் எதிரே உள்ள கொடிமரத்தில் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் பங்கு தந்தைகள், பொதுமக்கள் கொடியை ஏற்றினர்.

    அப்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 'மரியே வாழ்க' என முழக்கமிட்டனர். மேலும் புறாக்கள் மற்றும் பலூன்கள் பறக்கவிட்டு கைகளை தட்டி தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர்.

    மேலும் விழாவை முன்னிட்டு துறைமுகபகுதி கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளில் இருந்து சைரன் ஒலி எழுப்பப்பட்டது. இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் இளம்பகவத், மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை பேராலய பங்கு தந்தை ஸ்டார்வின் உள்ளிட்டோர் செய்து வருகிறனர்,

    மேலும் இத்திருவிழாவை முன்னிட்டு 2 ஏ.டிஎஸ்.பி.கள் 1 ஏ.எஸ்.பி., 5 டி.எஸ்.பி., 15 இன்ஸ்பெக்டர்கள், 35 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சி.சி.டி.வி. கேமராக்கள் பல இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது.

    பனிமயமாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகிற 5-ந் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஸ்வஸ்திக் வடிவ கிணற்றின் மேற்புறத்தின் ஓரத்தில் சிவலிங்கம் ஒன்று உள்ளது.
    • மேற்கு புற வாசலின் முதல் நிலைக்காலில் கிருஷ்ண பகவான் சிறுவயதில் அசுரர்களை வதம் செய்த காட்சி இடம் பெற்றுள்ளது.

    திருச்சியில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, திருவெள்ளறை திருத்தலம். இந்த ஆலயத்தின் நேர்பின்புறமாக ஸ்வஸ்திக் வடிவ கிணறு ஒன்று காணப்படுகிறது. 'ஸ்வஸ்திக்' வடிவம் என்பது, ஆன்மிகக் குறியீடுகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த கிணறு ''மார்பிடுகு கிணறு'' என்று அழைக்கப்பட்டதாக அதில் உள்ள கல்வெட்டு குறிப்புகள் சொல்கின்றன. இந்த ஸ்வஸ்திக் கிணறு கி.பி. 8-ம் நூற்றாண்டில், பல்லவ மன்னனான நந்திவர்மன் காலத்தில், ஆலம்பாக்கத்து கம்பன் அரையன் என்பவரால் கட்டப்பட்டது.

    இந்த ஸ்வஸ்திக் வடிவ கிணற்றின் மேற்புறத்தின் ஓரத்தில் சிவலிங்கம் ஒன்று உள்ளது. அதன் எதிரில் பெரியதும், சிறியதுமாக இரண்டு நந்திகள் கால்களை மடக்கி அமர்ந்த நிலையில் காணப்படுகின்றன. அதன் அருகில் பழங்கால தெய்வத் திருமேனிகள் காணப்படுகின்றன. தற்போது இந்த கிணறு, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    கிழக்கு பக்கவாசலின் முதல் நிலை படியில் நரசிம்மர் சிற்பமும், இரண்டாம் படி நிலையில் யானை வாகனத்தோடு அய்யனாரும், பூரணாம்பிகையும், மூன்றாம் படிநிலையில் இரண்டு அன்னப்பறவைகளும் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. இதன் தெற்கு புற வாசலின் முதல் நிலைக்காலில் சப்த மாதர்கள் காட்சி தருகின்றனர். இரண்டாம் படிநிலையில் கொற்றவை, சிங்கம் மான் மீது இரண்டு துணை தேவியர் உள்ளனர். மூன்றாம் படிநிலையில் விநாயகரின் உருவம் உள்ளது.

    மேற்கு புற வாசலின் முதல் நிலைக்காலில் கிருஷ்ண பகவான் சிறுவயதில் அசுரர்களை வதம் செய்த காட்சி இடம் பெற்றுள்ளது. இரண்டாம் நிலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மகாவிஷ்ணு, மூன்றாம் நிலையில் இரண்டு மகர சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு வாசலின் முதல் நிலைக்காலில் சிவபெருமான்- பார்வதியும், தேவர்களும் உள்ளனர். இரண்டாம் நிலைக்காலில் தட்சிணாமூர்த்தி, சனகாதி முனிவர்கள் உள்ளனர். மூன்றாம் நிலைப்படியில் இரண்டு மகர தோரண அமைப்பு உள்ளது. நடுவில் யானை நடந்து வரும் சிற்பம் இருக்கிறது. கிணற்றுக்குள் நான்கு பக்கங்களில் இருந்தும் இறங்கி செல்லும் வகையில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

    • திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம்.
    • ஆழ்வார்திரு நகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆடி-10 (சனிக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : துவிதியை நள்ளிரவு 12.36 மணி வரை பிறகு திருதியை

    நட்சத்திரம் : ஆயில்யம் இரவு 6.11 மணி வரை பிறகு மகம்

    யோகம் : மரண, அமிர்தயோகம்

    ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருவல்லிக்கேணி பெருமாள் கோவிலில் வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை, சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

    இன்று சந்திர தரிசனம். திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம். நயினார் கோவில் ஸ்ரீ சவுந்திர நாயகி சிவலிங்க பூஜை செய்தருளல். இரவு வெள்ளி குதிரை வாகன பவனி. மதுரை ஸ்ரீ கூடலழகர் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. திருவாடானை ஸ்ரீ சிநேகவல்லியம்மன் குதிரை வாகனத்தில் பவனி. ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் திருவீதி உலா.

    ஆழ்வார்திரு நகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. மன்னார்குடி ஸ்ரீ ராஜ கோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திரவார திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நற்செயல்

    ரிஷபம்-பாராட்டு

    மிதுனம்-பரிசு

    கடகம்-நன்மை

    சிம்மம்-வெற்றி

    கன்னி-ஆர்வம்

    துலாம்- முயற்சி

    விருச்சிகம்-ஆக்கம்

    தனுசு- வரவு

    மகரம்-நலம்

    கும்பம்-பக்தி

    மீனம்-பாராட்டு

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம்

    சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். திருமண முயற்சி கைகூடும். வரவு திருப்தி தரும். பொதுவாழ்வில் புகழ் கூடும். காலை நேரத்தில் கலகலப்பான தகவல் வந்து சேரும்.

    ரிஷபம்

    ஆதாயம் அதிகரிக்கும் நாள். ஆற்றல் மிக்கவர்கள் உங்கள் பணிக்கு உறுதுணையாக விளங்குவர். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு வருவதற்கான அறிகுறி தோன்றும்.

    மிதுனம்

    ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் கிட்டும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். திடீர் பணவரவுகள் வந்து சேரும்.

    கடகம்

    சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழும் நாள். மனக்குழப்பம் அகலும். முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்கள் விலகுவர். குடும்பச் செலவுகளில் தாராளம் காட்டுவீர்கள்.

    சிம்மம்

    கோரிக்கைகள் நிறைவேறக் கோவிலுக்குச் செல்ல வேண்டிய நாள். வரவு திருப்தி தரும் என்றாலும் விரயம் உண்டு. கொடுத்த வாக்கை கடைசி நேரத்தில் காப்பாற்றுவீர்கள்.

    கன்னி

    இடமாற்றச் சிந்தனை மேலோங்கும் நாள். வெளிவட்டாரப் பழக்கவழக்கம் விரிவடையும். உத்தியோகத்தில் விருப்ப ஓய்வில் வெளியில் வரலாமா என்று சிந்திப்பீர்கள்.

    துலாம்

    புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். நண்பர்களின் ஒத்துழைப்போடு தொழில் தொடங்கும் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள் பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும்.

    விருச்சிகம்

    பொருளாதார நிலை உயரும் நாள். பொன், பொருள் வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறும். தொழில் வளர்ச்சி உண்டு. வருமானம் திருப்தி தரும். வரன்கள் வாயில் தேடி வரும்.

    தனுசு

    எதையும் வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். யோசித்துச் செய்வது நல்லது. உத்தியோகத்தில் பணப் பொறுப்பில் உள்ளவர்கள் விழிப்புணர்ச்சியோடு இருப்பது நல்லது.

    மகரம்

    விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும் நாள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். எப்படி நடக்குமென்று நினைத்த காரியம் நல்லவிதமாக முடிவடையும்.

    கும்பம்

    சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும். பொது வாழ்வில் புதிய பொறுப்புகளும். பதவிகளும் வந்து சேரலாம். வரவு இருமடங்காக உயரும்.

    மீனம்

    வீடு வாங்கும் யோகம் ஏற்படும் நாள். தேவைகள் பூர்த்தியாகும். பயணம் பலன் தரும். தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வரவு திருப்தி தரும்.

    • அப்பர் சன்னதியில் அப்பா் பெருமானுக்கு, சிவபெருமான் கயிலை காட்சி கொடுத்தருளும் வைபவம் நடைபெற்றது.
    • திருவையாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    திருவையாறு:

    தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீன மடத்திற்கு சொந்தமான அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் கோவில் அமைந்துள்ளது.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆடிப்பூர பெருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் தினமும் காலை பல்லக்கிலும், இரவு பல்வேறு வாகனங்களிலும் சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் எழுந்தருளி வீதி உலா காட்சிகள் நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்வான ஆடி அமாவாசை நாளான நேற்று (வியாழக்கிழமை) இரவு தென் கயிலாயத்தில் அப்பருக்கு சிவபெருமான் காட்சி கொடுக்கும் 'அப்பர் கயிலை காட்சி விழா' வெகு விமரிசையாக நடந்தது.

    முன்னதாக நேற்று காலை திருவையாறு காவிரி ஆற்றில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து ஐயாறப்பரை வழிபட்டனர். தொடர்ந்து, மதியம் பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு திருவையாறு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது.

    பின்னர், இரவு ஐயாறப்பர் கோவில் தென்கயிலாயம் எனப்படும் அப்பர் சன்னதியில் அப்பா் பெருமானுக்கு, சிவபெருமான் கயிலை காட்சி கொடுத்தருளும் வைபவம் நடைபெற்றது.

    இதில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். திருவையாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சிகர நிகழ்வை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் திருவையாறு நகரமே விழாக்கோலம் பூண்டது.

    • பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோவில் குடைவரை கோவிலாகும்.
    • இந்து சமய நம்பிக்கைப்படி தேவலோகத்தில் இருக்கும் மரம் கற்பக மரமாகும்.

    பிள்ளையார்பட்டி என்று பெயர் வரக்காரணமே கற்பக விநாயகர் இந்த ஊரில் அமைந்து இருப்பது தான். இந்த ஆலயம் மிகவும் பழமையான ஆலயம், விநாயகர் வழிபாடுக்காக போற்றப்படும் ஆலயம். உலகின் பல இடங்களில் விநாயகர் வழிபாடு இருந்துள்ளது. விநாயகர் சிற்பங்களும் பல இடங்களில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. உலகத்திலேயே முதல் பிள்ளையாராக விளங்குவது பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் சிற்பம் என்றால் மிகையாகாது.

    உலகிலேயே இரண்டு கைகள் உடன் காணப்படும் விநாயகரின் சிற்பங்கள் இரண்டு மட்டுமே உள்ளது. ஒன்று பிள்ளையார் பட்டியிலும், மற்றொன்று ஆப்கானிஸ்தானிலும் காணப்படுகின்றன. ஆப்கானிஸ்தானில் உள்ள விநாயகரின் சிற்பம் நின்ற கோலத்தில் காணப்படுகிறது. ஆனாலும் பிற்கால அணிகலன்களுடன் அவர் காணப்படுகிறார். ஆனால் பிள்ளையார்பட்டியில் பிற்கால அணிகலன்கள் இல்லாமல் பழைய வடிவத்தில் காணப்படுவது சிறப்பாகும். தெய்வீக சிற்பக் கலை வரலாற்றின் மூலமும், கல்வெட்டுகளின் சான்றுகளின் மூலமும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரின் சிற்பமே உலகத்தில் முதன்முதல் வடிவமாக போற்றப்படுகிறது.

    பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோவில் குடைவரை கோவிலாகும். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு முற்கால பாண்டிய மன்னர்கள், குன்றைக் குடைந்து கோவிலையும், கற்பக விநாயகர் சிற்பத்தையும், திருவீசர் என்னும் லிங்கத்தையும் இவ்வூரில் வடிவமைத்துள்ளனர். கி.மு 500 முதல் கி.பி 1284 வரையான 14 கல்வெட்டுகள் இக்கோவிலில் உள்ளது.

    பாற்கடலை கடைந்து அமிர்தம் பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் முயற்சி செய்தனர். அவர்கள் மேரு மலையை மத்தாகவும், வாசுகி பாம்பினை கயிறாகவும் எடுத்துக்கொண்டனர். அசுரர்கள் பாம்பின் தலை புறமும், தேவர்கள் வாலின் புறமும் நின்று இழுத்து கடைந்தார்கள். அப்போது கற்பக மரம், பாரிஜாதம், ஹரிசந்தனம், சந்தனம், மந்தாரம் முதலிய ஐந்து மரங்கள் பாற்கடலிலிருந்து வெளிப்பட்டன. இவை 'பஞ்ச தருக்கள்' என்று அழைக்கப்படுகின்றன.

    இந்து சமய நம்பிக்கைப்படி தேவலோகத்தில் இருக்கும் மரம் கற்பக மரமாகும். தேவலோகத்தில் உள்ள இந்த மரத்தடியில் நின்றுகொண்டு என்ன வரம் கேட்டாலும் கிடைக்கும். அதுபோல கேட்ட வரம் அனைத்தும் தருவதால் பிள்ளையார்பட்டி விநாயகருக்கு 'கற்பக விநாயகர்' என்ற பெயர் ஏற்பட்டது. அதற்கு முன்பு இவர் 'தேசிய விநாயகம் பிள்ளையார்' என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ளார்.

    பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை தரிசிக்க பிரதான சாலையில் இருந்து தெற்குநோக்கி செல்ல வேண்டும். சிறிது தூரம் சென்றால் அங்கே பிரமாண்டமான குளம் தென்படும். இந்த திருக்குளத்தில் கோவில் கோபுரத்தில் நிழல் விழுவது மிகச்சிறப்பாகும். அதைத்தொடர்ந்து கோவிலுக்கு முன்புறம் செல்கிறோம். கிழக்கே இருந்து கோபுர தரிசனம் முடித்துவிட்டு உள்ளே செல்கிறோம். அங்கே சிவபெருமான் திருவீசுவராக காட்சியளிக்கிறார். சிவகாமி அம்மை தெற்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கிறார்.

    கற்பக விநாயகரோ வடக்கு நோக்கி அமர்ந்து பக்தர்கள் கேட்கும் வரத்தினை அள்ளித்தருகிறார். இரண்டு கரங்களுடனும், அங்குச பாசங்கள் இல்லாமலும் இங்கு சிறப்பாக காட்சி தருகிறார். அர்த்தபத்ம ஆசனம் போன்று கால்கள் மடித்து அருள் புரிகிறார். இந்த அமைப்பு எல்லாம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரிடம் வித்தியாசமாக உள்ளது.

    கற்பக விநாயகரின் சிற்பத்தை வடிவமைத்த சிற்பி அதன் அருகிலேயே அவரது கையெழுத்தை கல்வெட்டில் செதுக்கியுள்ளார். எக்காட்டூர் கோன் பரணன் பெருந்தச்சன் என அவரது கையெழுத்து உள்ளது. இங்குள்ள கற்பக விநாயகர் தனது கையில் மோதகத்தை வைத்திருக்கவில்லை. யோக நிலையில் அமர்ந்து உலக நன்மைக்காக கையில் லிங்கத்தை வைத்து தியானம் செய்யும் திருக்கோலத்தில் அமர்ந்த நிலையில் காணப்படு கிறார். அவர் யோக விநாயகராக இருப்பதால் கேட்ட வரங்கள் எல்லாம் எளிதில் கொடுக்க வல்லவராக இருக்கிறார்.

    விநாயகரின் தும்பிக்கை வலது பக்கமாக வளைந்திருப்பது தனிச்சிறப்பாகும். வலம்புரி சங்கு போல் வலம்புரி துதிக்கையும் தனித்தன்மை வாய்ந்ததாகும். வடக்கு திசையை நோக்கி இருக்கும் வலம்புரி விநாயகர் இவர் மட்டுமே. எனவே தான் பிள்ளையார்பட்டி வலம்புரி விநாயகரை வணங்குபவர் களுக்கு வெற்றி மேல் வெற்றி என்கிறார்கள். இந்த கோவிலில் திருமண வரம் தரும் காத்தாயினி வழிபாடு, செல்வ வளம் தரும் பசுபதிசுவரர் வழிபாடு சிறப்பானதாகும்.

    இந்த கோவிலில் நடைபெறும் விழாக்களில் மிகப்பெரியது, விநாயகர் சதுர்த்தி திருவிழாவாகும். இந்த விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக 9 நாட்களுக்கு முன்பே காப்புக் கட்டி விடுவார்கள். இத்திருவிழா பத்து நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெறும். அவ்வேளையில் பல்வேறு பகுதியில் இருந்து கற்பக விநாயகரின் பக்தர்கள் ஒன்று கூடுவார்கள். ஒரு வருட காலத்திற்கு சதுர்த்தி நாட்களில் உண்ணாவிரதம் இருந்த பக்தர்கள், அதை நிறைவு செய்ய பிள்ளையார்பட்டி வந்து சேருவார்கள்.

    விநாயகர் சதுர்த்தி திருவிழா அன்று விநாயகர் சன்னிதியில் உண்ணாநோன்பு இருந்து கும்ப ஜெபத்தில் கலந்துகொள்வது சிறப்பாகும். இந்த கும்பத்தினை தரிசனம் செய்யும் போது கேட்ட வரம் கிடைக்கிறது என்பதால் வருடத்துக்கு வருடம் கூட்டம் கூடுகிறது.

    விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் இரவு கணேசப்பெருமான் வாகனங்களில் திருவீதி உலா வருவார். இறுதி நாளில் தேர் பவனி நடைபெறும்.

    வைகாசி மாதம் இவ்வூரின் காவல் தெய்வமான கொங்குநாச்சியம்மனின் கோவில் திருவிழா பத்து நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெறும். அவ்வேளையில் இந்த ஆலயத்தோடு இணைந்தே திருவிழா நடைபெறும்.

    இந்த ஆலயத்தில் ஒவ்வொரு சதுர்த்தியன்றும் வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகப்பெருமான் எழுந்தருளி கோவில் உட்பிரகாரம் சுற்றி வருவார். திருக்கார்த்திகையன்று விநாயகப்பெருமானும், உமாதேவி சமேத சந்திரசேகரப்பெருமானும் திருவீதி பவனி வர சொக்கப்பனை கொளுத்தப்பெறும். மார்கழித் திருவாதிரை நாளன்று நடராஜப்பெருமான் வீதி உலா வருவார்.

    இந்த ஆலயத்தில் கார்த்திகை மாதம் முதல் தினத்தில் இருந்து மார்கழி மற்றும் தை மாதம் பூச நட்சத்திரம் நாள் வரை காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை பக்தர்களுக்காக கோவில் திறந்திருக்கும். மற்ற நாட்களில் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடை திறந்து இருக்கும்.

    சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து 71 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்குடி - திருப்பத்தூருக்கும் இடையில் குன்றக்குடிக்கு அருகில் மூன்று கிலோமீட்டர் தொலைவிலும் பிள்ளையார்பட்டி அமைந்துள்ளது.

    ×