என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • இந்த ஆண்டுக்கான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இந்த மாத இறுதியில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • 17-ந்தேதி உற்சவ சாற்று முறையுடன் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

    மதுரை:

    திருவிழாக்களின் நகரமான மதுரை மாநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் வருடத்தின் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறுவது சிறப்புக்குறியதாகும்.

    இதில் சித்திரை மாதத்தில் முத்திரை பதிக்கும் நிகழ்வாக நடக்கும் மீனாட்சி அம்மன், கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், அதனை தொடர்ந்து வைகை ஆற்றில் அழகர் எழுந்தருளும் நிகழ்வு என நகரமே 2 வாரங்கள் விழாகோலம் பூண்டிருக்கும்

    இந்த ஆண்டுக்கான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இந்த மாத இறுதியில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    முன்னதாக கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா தொடக்கமாக வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் தல்லாக்குளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் சித்திரை திருவிழா கொட்டகை முகூர்த்த நிகழ்ச்சி மற்றும் ஆயிரம்பொன் சப்பரம் தலை அலங்காரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    பிற்பகல் 11 மணிக்கு மேல் வண்டியூர் வைகை ஆற்றில் அமைந்துள்ள தேனூர் மண்டபத்தில் கொட்டகை முகூர்த்த விழா நடைபெறுகிறது.

    அழகர்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா வருகிற மே மாதம் 8-ந்தேதி தொடங்குகிறது. 9-ந்தேதி சுந்தர்ராஜ பெருமாள் கோவில் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    10-ந்தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் சுந்தர்ராஜ பெருமாள் கள்ளழகர் வேடம் தரித்து மதுரைக்கு புறப்பாடாகிறார். 11-ந்தேதி மதுரை மூன்றுமாவடியில் எதிர்சேவை நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 12-ந்தேதி காலை 5.45 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார். பின்னர் ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளும் கள்ளழகருக்கு தண்ணீர் பீய்ச்சுதல் நிகழ்ச்சி நடைபெறும்.

    தொடர்ந்து அண்ணாநகர் வழியாக வண்டியூர் வீர ராகவ பெருமாள் கோவிலில் கள்ளழகர் இரவு எழுந்தருளுகிறார். 13-ந்தேதி (செவ்வாய்கிழமை) வீர ராகவ பெருமாள் கோவிலில் இருந்து சேஷ வாகனத்தில் புறப்பாடாகும் கள்ளழகர் கருட வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் எழுந்தருளுகிறார்.

    அங்கு மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுத்தல் நடக்கிறது. தொடர்ந்து இரவு முதல் விடிய விடிய தசாவதார கோலத்தில் பெருமாள் காட்சியளிக்கிறார். மறுநாள் (14-ந்தேதி) அதிகாலை மோகன அவதாரத்தில் காட்சியளிக்கும் கள்ளழகர் ராஜாங்க அலங்கராத்தில் அனந்தராயர் பல்லக்கில் சேதுபதி மண்டபத்திற்கு புறப்பாடாகிறார்.

    அன்று இரவு அங்கிருந்து பூப்பல்லக்கில் புறப்படும் கள்ளழகர் 15-ந்தேதி இருப்பிடம் நோக்கி செல்கிறார். 16-ந்தேதி காலை 10 மணிக்கு மேல் கோவிலுக்கு கள்ளழகர் வந்தடைகிறார். 17-ந்தேதி உற்சவ சாற்று முறையுடன் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.

    மேற்கண்ட தகவலை கோவில் அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம், துணை ஆணையம் யக்ஞ நாராயணன் தெரிவித்துள்ளனர்.

    • கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 10-ந் தேதி திருக்கல்யாணம், 11-ந் தேதி பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெற உள்ளது.

    பழனி:

    முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா திருஆவினன்குடி கோவிலில் கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    வருகிற 10-ந் தேதி திருக்கல்யாணமும், 11-ந் தேதி பங்குனி உத்திர தேரோட்டமும் நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து ஊர்வலமாக வந்த வண்ணம் உள்ளனர்.


    குறிப்பாக ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்து அ திக அளவு பக்தர்கள் வருவதால் கிரிவலப்பாதையில் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் அதிகாலை முதலே தீர்த்தக்காவடிகளுடன் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

    அவர்களுக்கு மட்டும் மலைக்கோவிலில் ரூ.300 கட்டண தரிசன பாதை வழியாக இலவசமாக சென்று சுவாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

    பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருஆவினன்குடி கோவில் சாலை, சன்னதி வீதியில் தேர் உலா வரும் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் உத்தரவின்படி நகரமைப்பு அலுவலர் புவனேஸ்குமார் தலைமையில் போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர் வரும் வழியில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.

    பங்குனி உத்திர திருவிழாவுக்கு இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில் தற்போதே பல்வேறு மாவட்டங்களில் இருந்து பழனிக்கு அதிக அளவு பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். இவ்வாறு வரும் பக்தர்கள் பழனியில் பாரம்பரிய முறையில் பஞ்சாமிர்தம் தயாரித்து சுவாமிக்கு படைத்து வழிபடுவது வழக்கம்.

    பஞ்சாமிர்தம் தயாரிக்க மலை வாழைப்பழங்களை அதிக அளவில் வாங்கி பயன்படுத்துவார்கள். இதற்காக கொடைக்கானல், தாண்டிக்குடி, ஆடலூர், பாச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மலை வாழைப்பழங்கள் இங்கு அதிக அளவில் கொண்டு வரப்பட்டுள்ளன.

    பழனி அய்யம்புள்ளி சாலை, அருள்ஜோதி வீதியில் சாலையோரங்களில் தற்காலிக வாழைப்பழ கடைகள் அமைத்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். வரத்து குறைவால் விலை அதிகரித்து ஒரு பழம் ரூ.8 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    பக்தர்கள் மொத்தமாக வாழைப்பழங்களை வாங்கி பஞ்சாமிர்தம் தயாரித்து பிரசாதமாக வழங்குகின்றனர். இந்த ஆண்டு வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளதாகவும், தற்போது 50 டன் வாழைப்பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இது தவிர கோவில் நிர்வாகம் சார்பில் தட்டுப்பாடின்றி பஞ்சாமிர்தம் கிடைக்கவும், அனைத்து ஸ்டால்களிலும் அதிக அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    • மங்கள வாத்தியங்கள் முழங்க அரோகரா கோஷத்துடன் நடைபெற்றது.
    • வழி நெடுகிலும் பக்தர்கள் சாமிக்கு மலர்மாலை அணிவித்து வழிபாடு.

    தென்காசி:

    தென்காசியில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயமான காசி விஸ்வநாதர் கோவிலின் கும்பாபிஷேக விழா நேற்று விமர்சையாக நடைபெற்றது. இதில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு பிரம்மாண்ட அன்னதானம் வழங்கப்பட்டது.

    இந்நிலையில் மாலையில் சிறப்பு சொற்பொழிவுடன் காசி விஸ்வநாதர் உலகம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி கோவிலின் உள்பகுதி பிரகாரத்தில் நடைபெற்றது.

    அலங்கரிக்கப்பட்ட நந்தி வாகனத்தில் உலக அம்மன் மற்றும் காசி விஸ்வநாதர் எழுந்தருளி பக்தர்கள் முன்னிலையில் திருக்கல்யாண வைபவம் வெகுவிமரிசையாக வேத மந்திரங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க அரோகரா கோஷத்துடன் நடைபெற்றது.

    திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்ற போது கோவில் முழுவதும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதனைத் தொடர்ந்து உலகம்மன் காசி விஸ்வநாதர் சப்பரத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் உலா வந்து காட்சி அளித்தனர். வழி நெடுகிலும் பக்தர்கள் சாமிக்கு மலர்மாலை அணிவித்து வழிபாடு செய்தனர்.

    முன்னதாக திருக்கல்யாண நிகழ்ச்சியை முன்னிட்டு கோபுர வாயிலின் முகப்பு பகுதியில் பிரம்மாண்ட அத்த பூக்கோலம் போடப் பட்டிருந்ததை பக்தர்கள் தங்களின் செல்போன்களில் படம் பிடித்து உற்சாக மடைந்தனர்.


    கும்பாபிஷேக நிகழ்ச்சி முடிந்த பின்பும் இன்று காலை வரையில் காசி விஸ்வநாதர் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    தென்காசியில் காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டு எவ்வித அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் சிறப்பாக பாதுகாப்பு பணியை மேற்கொண்டிருந்த னர்.

    அவர்களுக்கு கோவிலின் அறங்காவலர் குழு தலைவர் வல்லம் பாலகிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்கள் பக்தர்கள் பொதுமக்கள் சார்பில் தங்களின் நன்றியை தெரிவித்தனர். 

    • பக்தர்கள் பலர் கைக்குழந்தையுடனும் குண்டம் இறங்கினர்.
    • மாலை 3.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்ததும், கொங்கு மண்டலத்தில் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வங்களில் ஒன்றுமாகிய பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா சகுனம் கேட்டல் நிகழ்ச்சியுடன் கடந்த மார்ச் மாதம் 11-ந்தேதி தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் திருப்பூர், ஈரோடு, கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், தமிழ்நாட்டில் பிற பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் மேற்கொண்டு, இங்கு வந்து பக்தி பரவ சத்துடன் குண்டம் இறங்கினர்.


    ஓம் சக்தி, ஓம் காளி கோஷம் விண்ணதிர பக்தர்கள் பலர் கைக்குழந்தையுடனும் குண்டம் இறங்கினர். முன்னதாக நேற்று இரவே லட்சக்கணக்கான பக்தர்கள் பெருமாநல்லூர் வந்து குவிந்தனர்.

    பிற்பகல் 11 மணிக்கு குண்டம் மூடப்பட்டது. பின்னர் சிறப்பு அபிஷேக பூஜை, அம்மன் யாழி வாகனத்தில் திருத்தேர் எழுந்தருளல், மண்டபக்கட்டளை, மிராசுதாரர்களுக்கு மரியாதை செலுத்துதல், தேங்காய் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.

    மாலை 3.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவையொட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ள்ளனர்.

    நாளை 9-ந்தேதி முதல் காலை , இரவு அபிஷேகம், தீபாராதனை, அம்மன் வீதி உலா, மண்டபக்கட்டளை நடக்கிறது. 12-ந்தேதி காலை 11 மணிக்கு மகாதரிசனம் , அம்மன் புறப்பாடு, கொடி இறக்கம், மண்டபக்கட்டளை யுடன் விழா நிறைவடைகிறது.

    • கடந்த 24-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது.
    • அம்மன் படைக்களம் மற்றும் சப்பரம் குண்டத்தில் இறங்கியது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மைசூர் நெடுஞ்சாலையில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்து உள்ளது உலகப் புகழ் பெற்ற பண்ணாரியம்மன் திருக்கோவில்.

    இக்கோவிலுக்கு ஈரோடு திருப்பூர் கோவை நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் மற்றும் அண்டை மாநிலமான கர்நாடகா கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் குண்டம் விழா சிறப்பாக நடந்து வருகிறது. அதன் படி இந்த ஆண்டு குண்டம் திருவிழா கடந்த 24-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்ப ரத்தில் பண்ணாரியம்மன் மற்றும் சருகு மாரியம்மன் சுற்று வட்டாரத்தில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று திருவீதி உலா நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து 1-ந் தேதி அம்மன் சப்பரம் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து அதிகாலை நிலக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் தினமும் பல்வேறு மலைவாழ் மக்கள் தாைர தப்பட்டை மீனாட்சி வாத்தி யத்துடன் அம்மன் பாரம்ப ரிய புகழ்பாடி களியாட்டமும் கம்பம் ஆட்டமும் நடை பெற்றது.

    தொடர்ந்து அபிஷேக அலங்கார பூஜையும் காலை குண்டத்திற்கு தேவையான வேப்பம் ஊஞ்ச மர கரும்பு வெட்ட செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று இரவு குண்டத்திற்கு விறகுகள் அடுக்கும் பணியும் இரவு 8 மணிக்கு குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அக்னி இடப்பட்டு குண்டம் வளர்க்கப்பட்டது.


    அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 3 மணிக்கு சகல வாத்தியங்களுடன் தெப்பக்குளம் சென்று அடைக்கலம் உடன் பண்ணாரியம்மன் சருகு மாரியம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மேலும் குண்டத்திற்கு இடப்பட்ட நெருப்பினை சிக்கரசம்பாளையம் இக்கரை நகமும் புதூர் மற்றும் வெள்ளியம்பாளை யம் கிராமங்களைச் சேர்ந்த ஊர் பெரியவர்கள் மூங்கில் கரும்புகளால் தட்டி நெருப்பினை சீராக பரப்பி 15 அடி நீளமும் பத்தடி அகலத்தில் குண்டத்தை தயார் செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து குண்டத்தை சுற்றியும் மலர்களை தூவி கற்பூரங்களை ஏற்றி சிறப்பு வழிபாடு பூஜைகள் செய்யப்பட்டது.


    இதையடுத்து சரியாக இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணி அளவில் கோவில் தலைமை பூசாரி குண்டம் இறங்கினார். அதனை தொடர்ந்து அம்மன் படைக்களம் மற்றும் சப்பரம் குண்டத்தில் இறங்கியது.

    பின் வரிசையில் காத்தி ருந்த பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்ட னர். இதில் ஆண்கள், பெண்கள், திருநங்கைகள், போலீசார் மற்றும் அரசியல் கட்சியினர், சிறுவர், சிறுமி கள் உள்ளிட்ட லட்சக்க ணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி பண்ணாரி மாரியம்மனை வழிபட்டனர்.

    அப்போது பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்து தாயே.. பண்ணாரி, அம்மா... காவல் தெய்வமே.. எங்களை காக்கும் தெய்வமே... என பக்தி கோஷம் மிட்டனர். விண்ணை முட்டும் அளவு க்கு பக்தி கோஷம் எழுப்ப ப்பட்டது.

    இதில் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கினர். இதை தொடர்ந்து பக்தர்கள் சாரை, சாரையாக வந்த வண்ணம் இருந்தனர். இதனால் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலை மோதியது.

    இன்று மதியம் வரை பக்தர்கள் குண்டம் இறங்கினர். அதனை தொட ர்ந்து மதியத்திற்கு மேல் சுற்று வட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த விவ சாயிகள் கால்நடைகளை குண்டத்தில் இறங்கினர். குண்டம் இறங்கும்போது கருவறையில் உள்ளே பண்ணாரி அம்மனை வீணை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    மேலும் கோவில் வளா கத்தை சுற்றி தயார் நிலை யில் தீயணைப்பு துறையினர் நிறுத்தப்பட்டிருந்தனர். குண்டத்தில் ஓடி வந்த பக்தர்களை தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். குண்டம் இறங்க குடும்பம் குடும்பமாக பொதுமக்கள் வரிசையில் காத்து நின்றனர்.

    குண்டம் விழாவை தொடர்ந்து நாளை மதியம் மாவிளக்கு பூஜையும் இரவு புஷ்பரத ஊர்வலமும் நடைபெறுகிறது. மேலும் 15-ந் தேதி மஞ்சள் நீராடுதல் மற்றும் பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை மற்றும் தங்கரத தேர் ஊர்வலம் நடைபெறுகிறது. 15-ந் தேதி மறு பூஜை உடன் விழா நிறைவு பெறுகிறது.

    குண்டம் திருவிழாவை முன்னிட்டு ஈரோடு கோவை திருப்பூர் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் குண்டம் திருவிழாவிற்கு பக்தர்கள் வந்து செல்வதற்கு ஈரோடு கோபி கோவை புளியம்பட்டி சத்தியமங்கலம் மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பஸ்கள் இயக்கப் பட்டன.

    அவசர உதவிக்காக ஆம்புலன்ஸ் வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. பொதுமக்களுக்கு மருத்துவ வசதிகளும் செய்ய ப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது உடைமைகளை பாதுகாத்துக் கொள்ளுமாறு ஒலிபெருக்கியின் மூலம் போலீசார் தெரிவித்து வருகின்றனர்.

    மேலும் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படா மல் பக்தர்கள் குண்டம் இறங்கி சென்று பண்ணாரி அம்மனை வழிபட கோவில் சார்பில் அனைத்து ஏற்பாடு களும் தீவிரமாக செய்ய ப்பட்டது.

    இதையொட்டி வன த்துறையினரும் வனப்பகுதி யில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    • இன்று சர்வ ஏகாதசி.
    • முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு பங்குனி-25 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: ஏகாதசி நள்ளிரவு 12.30 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம்: ஆயில்யம் காலை 11.18 மணி வரை பிறகு மகம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சர்வ ஏகாதசி. சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருவாரூர் ஸ்ரீ தியாகேசர் ஆழித்தேரோட்டக் காட்சி. காஞ்சீபுரம் ஏகாம்பரேசுவரர் ரதோற்சவம். பழனி ஆண்டவர் தங்க மயில் வாகனத்தில் பவனி. கழுகுமலை ஸ்ரீ முருக பெருமான் புறப்பாடு கண்டருளல். தாயமங்கலம் ஸ்ரீ முத்து மாரியம்மன் புஷ்பச் சப்பரத்தில் தீர்த்தவாரி. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. ஆறுமுகங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலை சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-சுகம்

    ரிஷபம்-தனம்

    மிதுனம்-வெற்றி

    கடகம்-முயற்சி

    சிம்மம்-பொறுமை

    கன்னி-நிம்மதி

    துலாம்- ஆக்கம்

    விருச்சிகம்-மாற்றம்

    தனுசு- ஆதரவு

    மகரம்-ஆர்வம்

    கும்பம்-செலவு

    மீனம்-அமைதி

    • சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.
    • தினமும் சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு வந்தது.

    தென்காசி:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் தென்காசி காசி விசுவநாதர் சுவாமி கோவிலும் ஒன்றாகும். காசிக்கு நிகரானதாக கருதப்படும் இந்த கோவிலில் தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இக்கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதன்பின்னர் 12 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2018-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். ஆனால் கும்பாபிஷேகம் நடைபெறாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    எனவே மீண்டும் தென்காசி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதனையேற்று கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பழமை வாய்ந்த தென்காசி காசி விசுவநாதர் கோவிலில் கும்பாபிஷேக விழா விரைவில் நடத்தப்படும் என அறிவித்தார்.

    அதன்படி 18 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேக விழா நடத்த தீர்மானிக்கப்பட்டு ஏப்ரல் 7-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்கான பணிகள் முடிக்கி விடப்பட்டு தீவிரமாக நடைபெற்றது. அதன்படி கடந்த சில மாதங்களாக கோவிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    ராஜ கோபுரத்திற்கு வர்ணம் தீட்டும் பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிவடைந்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 3-ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றது.

    அதனைத்தொடர்ந்து சுவாமி-அம்பாளுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.


    மேலும் பல்வேறு சிறப்பு பூஜைகள், தினமும் சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு வந்தது. நேற்று காலை முதல் இரவு வரை யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இதில் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கும்பாபிஷேக விழாவையொட்டி இன்று அதிகாலை 3 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, புண்யாக வாசனம், ஆறாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. 5 மணிக்கு விநாயகர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    7 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, திரவியாகுதி நடைபெற்றது. தொடர்ந்து 9 மணிக்கு காசி விசுவநாதசுவாமி ராஜ கோபுரங்கள், விமான கோபுரங்கள், மூலஸ்தான பிரதான மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்தை தூத்துக்குடி ஆலால சுந்தர லோக சிவாகம வித்யாலயம் முதல்வர் செல்வம் பட்டர் என்ற கல்யாண சுந்தர சிவாச்சாரியார் நடத்தினார்.

    பூஜைகளை காசி விசுவநாதர் கோவில் தலைமை அர்ச்சகர் செந்தில் ஆறுமுகம் பட்டர் மற்றும் அர்ச்சகர்கள் செய்தனர்.

    கும்பாபிஷேகத்தையொட்டி நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சென்னை, கன்னியாகுமரி, கோவை, தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள், தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள், சிவனடியார்கள் தென்காசியில் குவிந்தனர். இதனால் தென்காசி நகரமே விழாக்கோலம் பூண்டது.

    கோவில் பகுதியில் எங்கு பார்த்தாலும் மனிதர்களாகவே காணப்பட்டனர். கும்பாபிஷேகம் நடைபெற்றபோது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிவ.. சிவ.. அரோகரா.. என விண்ணதிர கோஷங்கள் எழுப்பினர்.


    கும்பாபிஷேக விழாவயொட்டி இன்று தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

    விழாவில் கலெக்டர் கமல் கிஷோர், ராணிஸ்ரீ குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பழனிநாடார், ராஜா, நெல்லை தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே. காளிதாசன் நாடார், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, அறங்காவலர் குழு தலைவர் வல்லம் பாலகிருஷ்ணன், செயல் அலுவலர் பொன்னி, தென்காசி நாடார் சங்க தலைவர் ஏ.கே.எஸ். ராஜசேகரன் நாடார், செயலாளர் ராஜகோபால் நாடார், பொருளாளர் எஸ். ராஜன் நாடார் மற்றும் தருமை ஆதீனம், சிவனடியார்கள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    விழாவையொட்டி நெல்லை சரக டி.ஐ.ஜி. (பொறுப்பு) சந்தோஷ் கதிமணி, தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையில் 4 கூடுதல் சூப்பிரண்டுகள், 13 டி.எஸ்.பி.க்கள் உள்பட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த 1100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கும்பாபிஷேகத்தையொட்டி தென்காசியில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும் 11 இடங்களில் தற்காலிக வாகன நிறுத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    • ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகின்றனர்.
    • குண்டம் திருவிழாவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் பெருமாந ல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற கொண்டத்து க்காளியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா, கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை (8-ந்தேதி) செவ்வாய்க்கிழமை அதிகாலை பக்தர்கள் குண்டம் இறங்கு கின்றனர். மேலும் நாளை மாலை தேரோட்டம் நடைபெற உள்ளது.

    குண்டம் இறங்கவும், தேரோட்டத்தில் பங்கேற்கவும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகின்றனர். இதையொட்டி கூடுதல் எஸ்.பி.,க்கள் 2 பேர் தலைமையில், 3 டி.எஸ்.பி.,க்கள், 11 இன்ஸ்பெக்டர்கள், 32 சப்-இன்ஸ்பெக்டர்கள், 158 போலீசார், 80 ஆயுதப்படை போலீசார், 200 ஊர் காவல் படையினர், 50 டிராபிக் வார்டன் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    மேலும் கோவில் வளாக த்தில் புறக்காவல் நிலையம் மற்றும் 2 இடங்களில் உயர் கண்காணிப்பு கோபுரமும் அமைக்கப்பட்டு உள்ளது.பக்தர்கள் வசதிக்காக கோவில் வளாகம் முழுவதும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

    60 இடங்களில் மொபைல் டாய்லெட், 9 இடங்களில் குடிநீர் வசதி, பக்தர்கள் குண்டம் இறங்கு வதை பார்க்க 2 இடங்களில் எல்.இ.டி., திரை, குண்டம் இறங்கும் பக்தர்கள் வரிசையாக செல்ல தடுப்பு, குண்டம் இறங்கும் பக்தர்கள் குளிக்க 20 ஷவர் கொண்ட அறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    வாகன போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பெருமால்லூரில் இன்று மதியம் 1 மணி முதல் நாளை இரவு 10 மணிவரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி கோபியில் இருந்து திருப்பூர் செல்லும் வாகனங்கள் குன்னத்தூர் பாலம் சர்வீஸ் ரோடு வழியாக ஸ்தூபி வரை வந்து, அங்கிருந்து கணக்கம்பாளையம் வாவிபாளையம், பூலுவப்பட்டி வழியாக திருப்பூருக்கு செல்ல வேண்டும்.

    சேலம், ஈரோட்டில் இருந்து கோவை நோக்கி செல்லும் வாகனங்கள் ஸ்தூபி பிரிவு அருகே வந்து பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் வலசுபாளையம் பிரிவு சர்வீஸ் ரோடு சென்று தேசிய நெடுஞ்சாலை அடைந்து கோவை செல்ல வேண்டும்.

    திருப்பூரில் இருந்து கோபி, ஈரோடு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் பூலுவப்பட்டி சிக்னல் வழியாக நெருப்பெரிச்சல், வாவிபாளையம் வழியாக சென்று கணக்கபாளையம் பிரிவு ஸ்தூபி அருகே வந்து பயணிகளை ஏற்றி இறக்கி கொண்டு வலசு பாளையம் வழியாக சர்வீஸ் ரோடு சென்று தேசிய நெடுஞ்சாலை அடைந்து அங்கிருந்து செல்ல வேண்டும் வேண்டும்.

    கோவையில் இருந்து ஈரோடு செல்லும் வாகனங்கள் குன்னத்தூர் பாலம் அருகே வந்து பாலத்தின் கீழ் பயணிகளை இறக்கி விட்டு தேசிய நெடுஞ்சாலை அடைந்து செல்ல வேண்டும். மேலும் பயணிகள் வசதிக்காக குண்டம் திருவிழாவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    குண்டம் திருவிழா முடிந்து ஸ்தூபியில் இருந்து திருப்பூர், கோபி, ஈரோடு செல்லும் பக்தர்கள் ஸ்தூபியில் இருந்து பஸ்களில் ஏறி செல்லலாம். இதற்காக ஸ்தூபி பகுதியில் சிறப்பு பஸ்கள் நிறுத்தப்பட்டிருக்கும்.

    இதேபோல் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும், பக்தர்களின் வசதிக்கேற்பதாகவும் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.

    கோபி, ஈேராடு பகுதியில் இருந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது நான்கு சக்கர மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை ஸ்தூபி அருகே கணக்கம்பாளையம் ரோடு பகுதியில் நிறுத்த தனியார் இடத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூரில் இருந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை பெருமாநல்லூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரிலும், காளியம்மன் கோவில் அருகிலும், காதி கிராப்ட் வளாகத்திலும் பார்க்கிங் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    விழாவிற்கு வரும் பக்தர்கள் தங்கள் உடமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். தங்களது குழந்தைகள் அணிந்து வரும் விலையுயர்ந்த ஆபரணங்கள், பொருட்கள் ஆகியவற்றை பெற்றோர் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

    பொதுமக்களின் வசதிக்காக கோவில் வளாகத்திலேயே காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் பாதுகாப்பிற்காக அவசர உதவி எண் 100 தொடர்பு கொள்ளலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

    • கடந்த மாதம் 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தேரோட்டத்தை முன்னிட்டு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

    திருவாரூர்:

    சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகரமாக விளங்கிய திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவில் சைவ சமய தலங்களில் முதன்மை தலமாகவும், சர்வ தோஷ பரிகார தலமாகவும், தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் 87-வது தலமாகவும் விளங்குகிறது.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா விமரிசை யாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் (மார்ச்) 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர்.

    பின்னர், கொடிமரத்திற்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்று கொடி ஏற்றப்பட்டது.

    தொடர்ந்து, விழா நாட்களில் தினமும் சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்வான ஆழித்தேரோட்டம் இன்று (திங்கட்கிழமை) கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு அஜபா நடனத்துடன் தியாகராஜர் கோவிலில் இருந்து புறப்பட்டு, தேரில் எழுந்தருளினார்.

    பின்னர், இன்று காலை பூஜைகள் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. தேரோட்டத்தை மாவட்ட கலெக்டர் மோகனசந்திரன், போலீஸ் சூப்பிரண்டு கருண் கரட், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    முன்னதாக அதிகாலை 5.30 மணிக்கு விநாயகர், முருகன் தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. ஆழித்தேரோட்டத்தை தொடர்ந்து அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்களும் இழுக்கப்பட்டன.

    ஆழித்தேரில் சுமார் 425 மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டு இருந்த 4 வடங்களை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆரூரா.. தியாகேசா... பக்தி கோஷம் விண்ணதிர பிடித்து இழுத்து சென்றனர்.

    தேரின் முன்பாக சிவனடியார்கள் பஞ்ச வாத்தியங்களை இசைத்தவாறும், தேவார திருமுறைகள் ஓதியவாறும் வீதிஉலா சென்றனர். ஆழித்தேரானது கீழ வீதியில் இருந்து புறப்பட்டு, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக இழுத்து வரப்பட்டு மாலை நிலையை அடையும்.

    ஆழித்தேரோட்டதை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கருண் கரட் தலைமையில், 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 17 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 50 இன்ஸ்பெக்டர்கள் உள்பட சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு துறையினர், நடமாடும் மருத்துவ குழுவினர் உள்ளிட்டோரும் தயார் நிலையில் இருந்தனர்.

    மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பக்தர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டு இருந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று நடை பெறுவதால் மாணவர்கள் சிரமமின்றி பள்ளிக்கு செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு, அதுகுறித்து மாவட்ட போலீஸ் துறை சார்பில் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    ஆழித்தேரோட்டதை யொட்டி மாவட்ட கலெக்டர் மோகனசந்திரன் இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டார். பங்குனி உத்திர விழாவின் சிகர நிகழ்வை காண டெல்டா மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் திருவாரூர் நகரமே விழாக்கோலம் பூண்டது.

    • குண்டம் திருவிழா பங்குனி மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
    • சாம்பல் மேடுகள் பெருமாநல்லூர் பகுதிகளில் காணப்படுகின்றன.

    பெருமாநல்லூரில் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா பங்குனி மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. இவ்விழா நெடுங்காலமாக தொடர்ந்து நடைபெறுவதை தமிழ் உலகம் அறியும்.

    அவ்விழாவில் பல்வேறு குடிமக்களும் தங்கள் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப உரிய சடங்குகளை செய்து வழிபடுகின்றனர். இக்குண்டம் திருவிழாத் தோன்றிய வரலாற்றை நாம் அறிந்து கொள்வோம்.

    பழங்காலத்தில், இன்றைய பெருமாநல்லூர் என்ற இத்தலம் அடர்ந்த காடுகள் நிறைந்த ஒரு நிலப்பகுதியாக இருந்தது. எனினும் இப்பகுதி நீர்வளமும் நிலவளமும் மிக்கதாக இருந்ததால் சிறந்த வயல் நிலங்களை உருவாக்க தகுதியுடையதாக விளங்கியது.

    இங்கு வாழ்ந்த பழங்குடி மக்கள் கால்நடைகளை மேய்த்த வண்ணம் நாடோடி வாழ்க்கையை மேற்கொண்டு வாழ்ந்தனர். பொதுவாக கொங்கு நாட்டில் வாழ்ந்த பழங்குடி மக்கள் அனைவரும் வேட்டையாடுதலையும் கால்நடைகளை மேய்த்தலையும் முதன்மை தொழில்களாக கொண்டிருந்ததால் புதிய மேய்ச்சல் நிலங்களைத்தேடி அடிக்கடி இடம் மாறினர்.

    புதிய மேய்ச்சல் நிலங்களை தேடி புறப்படும்போது அவர்கள் முன்பு வாழ்ந்த இடத்தில் சேர்த்து குவித்து வைத்த சாணம், குப்பை ஆகியவற்றை தீ மூட்டி விடுவர். அவை எரிந்து தணிந்து நல்ல தணலாக இருக்கும் போது அவற்றின் மீது ஆடு, மாடுகளை குறுக்கும் நெடுக்குமாக ஓடவிடுவர். அவ்வாறு கால்நடைகள் தீயை மிதித்துச் செல்லுவதால் அவற்றை பற்றியுள்ள நோய்கள் நீங்கும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தனர்.

    இதனை அவர்கள் ஓர் இயற்கை மருத்துவ முறையாக கையாண்டனர். இடம்பெயர்ந்த பின்னர் அத்தீயானது சில நாட்கள் நீடித்து நின்று அணைந்து மழை, வெயிலால் மக்கி சாம்பல் மேடுகளாக ஆகிவிடும்.

    இத்தகைய சாம்பல் மேடுகள் பெருமாநல்லூர் பகுதியிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் காணப்படுகின்றன. சான்றாக கோவில்பாளையத்திற்கு அருகில் சர்க்கார்சாமக்குளம் என்று வழங்கப்படுகின்ற பழமையான சாம்பல் குளத்தை கூறலாம்.


    பெருமாநல்லூருக்கும், குன்னத்தூருக்கும் இடையிலும், சுற்றுப்புறத்திலும் சாம்பல் மேடுகள் இருந்தன. கால வளர்ச்சியில் அவர்களின் நாடோடி வாழ்க்கை முடிவுக்கு வந்து நிலையான குடியிருப்புகள் ஆங்காங்கு தோன்றின.

    இத்தகைய குடியிருப்புக்கள் பெரும்பாலும் மரத்தடிகளிலேயே அமைந்தன. கொங்கு நாட்டில் உள்ள ஆலத்தூர், ஊஞ்சலூர், புளியம்பட்டி போன்ற ஊர்கள் மரங்களின் கீழ் அமைந்த குடியிருப்புக்களை நினைவூட்டு கின்றன.

    அவ்வாறு அமைந்த குடியிருப்புக்களின் மத்தியில் ஒரு பொது இடமாக ஒரு மன்றத்தை ஏற்படுத்தி அங்கு தம் கால்நடைகளை அடைத்து வைத்தனர். 'பட்டி, தொட்டி, தொழுவம்' போன்ற சிறப்பு விகுதி பெற்று பல்வேறு ஊர்கள் இருப்பது தெரிந்ததே.

    புதிய, நிலையான குடியிருப்பில் வாழ்ந்த காலத்திலும், அவர்கள் 2 சாணத்திற்கு தீமூட்டி கால்நடைகளை அதன் மீது நடக்க வைத்து மருத்துவம் செய்யும் வழக்கம் தொடர்ந்தது.

    அவர்கள் ஏற்படுத்தியிருந்த மன்றத்தில் பெண் தெய்வத்தை முதலில் ஒரு கல்லாகவும், பிற்காலத்தில் துர்க்கை சிலையாகவும் எழுந்தருளச் செய்தனர். காட்டு விலங்குகளாலும், இயற்கை சீற்றங்களாலும் பிற பகைவர்களாலும் ஏற்படும் அச்சத்தை போக்கும் பேராற்றல் மிக்கவள் துர்க்கை என்னும் காளி தேவியே என்று பெரிதும் நம்பினார்கள்.

    எனவே, காளிதேவியின் உருவத்தில் கண்டோர் அச்சம் கொள்ளும் வகையில் எட்டுக்கரங்கள் அமைத்து, அக்கரங்களில் பல ஆயுதங்களை ஏந்தி காட்சி தருபவளாக சிலை வடித்து வணங்கினர்.


    காலப் போக்கில் அப்பெண் தெய்வத்தின் முன்னுள்ள மன்றத்தில் ஆடு, மாடுகளைத் தீயில் நடக்க வைத்தது போல தாங்களும் அத்தீயின் மீது நடந்து அதனை தெய்வத்தைப் போற்றும் சமயச்சடங்காக மாற்றிக் கொண்டனர்.

    இம்முறையில் தோன்றியதுதான் துர்க்கை கோவிலின் முன்னுள்ள 'குண்டம் மிதித்தல்' என்னும் சமயச்சடங்காகும். கால்நடை மருத்துவம் என்னும் தீ மிதிக்கும் பழக்கம், பிற்காலத்தில் குண்டம் மிதித்தலாகிய சமயச்சடங்காக மாறியது.

    • 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும்.
    • திறந்த வெளியில் 60 அடி நீளம் உடைய குண்டம் உள்ளது.

    'குண்டத்து காளியம்மன் கோவில்' மக்களால் 'கொண்டத்து காளியம்மன் கோவில்' என்று அழைக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் வீற்றிருக்கும் இக்கோவில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும். பெருமாநல்லூரின் வடமேற்கு பகுதியில் வடக்கு நோக்கி இக்கோவில் அமைந்துள்ளது.


    மதில் சுவர்களுடன் கருவறை, முன் மண்டபம் ஆகியவை உள்ளன. கருவறையில் காளியம்மன் அமர்ந்த நிலையில் 8 கைகளுடன் காட்சி தருகிறார். வலது பக்க கைகளில் முறையே வேல், உடுக்கை, கத்தி, பட்டாக்கத்தி உள்ளன. இடப்பக்கம் மேல் கை விரிச்ச நிலையில் பிஸ்மய முத்திரையாக உள்ளது.

    ஏனைய கைகளில் சாட்டை, கபாலம் ஆகியன அமைந்துள்ளன. கோபத்தை வெளிப்படுத்தும் முகம், அக்கினி சுவாலையை காட்டும் தலைமுடி ஆகியவை சிறப்பாக உள்ளன. எதிரில் சிங்க வாகனம், பலி பீடம் ஆகியவை உள்ளன. விநாயகர், காளியம்மன் ஆகியோருக்கு செப்புத் திருமேனிகள் உள்ளன.


    வலப்புறத்தில் விநாயகர் உருவமும், கோவில் கருவறை மேற்கில் செல்வ விநாயகர் உருவமும் உள்ளன. குண்டத்துக் காளியம்மன் கோவிலில் இரு வாயில்களிலும் துவாரபாலக உருவங்கள் சுதையால் செய்யப்பட்டவை உள்ளன. வெளியே நீட்டிய கோரப்பற்கள், பிதுங்கிய கண்கள், ஆயுதங்கள் முதலியவை அச்சுறுத்தும் வகையில் உள்ளன.

    முன்வாயிலில் பெண், ஆண் என இரு துவாரபாலகர் பேருருவங்கள் உள்ளன. அவற்றை நீலி, நீல கண்டன் என அழைக்கின்றனர். உள் வாயிலில் இரு பெண் துவாரபாலகி உருவங்கள் உள்ளன. இடாகினி, மோகினி என இவற்றை மக்கள் அழைக்கின்றனர். கோவில் பிரகாரத்தில் அம்மனின் இடப்பக்கத்தில் முத்துக்குமாரசாமி சன்னதி உள்ளது.


    கோவிலின் முன் திறந்த வெளியில் 60 அடி நீளம் உடைய குண்டம் உள்ளது. பங்குனி மாதம் பண்ணாரி அம்மன் திருவிழா நடைபெறும் நாட்களை ஒட்டி சில நாட்களுக்கு முன் பின்னாக இக்கோவிலில் விழா நடைபெற்று வருகின்றது.

    இப்பகுதியில் விழாவை ஒட்டி நடைபெறும் குண்டம் திருவிழா மிகப்புகழ் வாய்ந்தது. பக்தி சிரத்தையுடன் குண்டம் இறங்குவது கண் கொள்ளாக் காட்சியாகும். குண்டத்தை ஒட்டியே அம்மனுக்குக் குண்டத்து காளியம்மன் எனப்பெயர் ஏற்பட்டது.

    தீமிதி விழாவாகிய குண்டம் இறங்குவது மிகப்பழங்காலம் தொட்டே உலகின் பல பகுதிகளிலும் நடைபெற்று வந்துள்ளது. கால்நடைகளை தீ மிதிக்கச்செய்வதும் சில இடங்களில் நடைபெற்றுள்ளது.

    விரதம் இருந்து குளித்து ஈரத்துணியுடன் வேப்பிலையை கையில் ஏந்தி தீ மிதிப்பதே மரபாகும். மன ஒருமைப்பாடு, தெய்வத்திற்கு அஞ்சும் நிலை, எண்ண சிதறல் ஏற்படாமை ஆகியன சிறப்புறுகின்றன. நாகரீக வளர்ச்சி ஏற்பட்டபோது மன ஒருமைப்பாட்டை வளர செய்வது யோக நிலையில் குண்டலினி சக்தி எனப்பெயர் பெற்றது.

    குண்டு, குண்டம், குண்டலம், குண்டலி, குண்டலினி என்றவாறு இச்சொல்லை சிந்திப்பது பொருள் விளக்கத்துக்கு துணை செய்யும். இவை முறையே ஆழம், நீர் நிலை, ஓம குண்டம், வட்டம், பாம்பு எனப்பொருள் உடையன" என்று ஆய்வாளர்கள் கருதுவதால் குண்டத்திற்கும் குண்டலினி சக்திக்கும் தொடர்பு உண்டு என்பது புலனாகிறது.

    • இன்று சுபமுகூர்த்த தினம்.
    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு பங்குனி-24 (திங்கட்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: தசமி நள்ளிரவு 12.12 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம்: பூசம் காலை 10.39 மணி வரை பிறகு ஆயில்யம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று சுபமுகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். பழனி ஸ்ரீ ஆண்டவர் ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி. தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் பால்குடக் காட்சி. திருப்புல்லாணி ஸ்ரீ ஜெகந்நாதப் பெருமாள் புன்னைமர வாகன பவனி. மதுரை ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் வெண்ணைய்த்தாழி சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்த ராஜப்பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் பவனி. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடை மருதூர் கோவில்களில் காலையில் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நலம்

    ரிஷபம்-நற்செயல்

    மிதுனம்-நம்பிக்கை

    கடகம்-சாதனை

    சிம்மம்-வெற்றி

    கன்னி-மகிழ்ச்சி

    துலாம்- மாற்றம்

    விருச்சிகம்-நிறைவு

    தனுசு- லாபம்

    மகரம்-பயணம்

    கும்பம்-உறுதி

    மீனம்-சாகசம்

    ×