என் மலர்tooltip icon

    வழிபாடு

    கடவுள் நம் செய்கைகளுக்குத் தக்க பலனளிக்கிறார்
    X

    கடவுள் நம் செய்கைகளுக்குத் தக்க பலனளிக்கிறார்

    • மனிதனுக்கு எல்லாவற்றிற்கும் சுதந்திரம் அளிக்கின்ற கடவுள், நிச்சயமாக எல்லாவற்றையும் ஒருநாள் நியாய விசாரணைக்குக் கொண்டு வருவார்.
    • நன்மை செய்கிறவன் கடவுளால் உண்டாயிருக்கிறான்.

    நன்னீர், தூய காற்று, பருவகால மழை, நல்ல மனிதர்கள் அனைத்தும் இன்று அரிதாகிவிட்டது. மண்வளம், மழைவளம், நீர்வளம், மலைவளம், மனித வளம் அனைத்தும் குறைந்துவிட்டது. காரணம் புத்திக்கூர்மை நிறைந்த மனிதன் அறிவில் தேறி, ஆடம்பரத்தில் ஊறி, தன்னலத்தில் மூழ்கி, தான் வாழ பறவைகள், விலங்குகள், தாவரங்கள் என அனைத்தையும் அழித்துக் கொண்டிருக்கிறான்.

    கடவுள் மனிதனை தன் சொந்த கைகளினாலே அழகாகவும், அற்புதமாகவும் படைத்தார். அனைத்தையும் ஆளுகின்ற அதிகாரத்தையும், சுயமாகவே தெரிந்தெடுக்கிற சுதந்திரத்தையும் அவனுக்குக் கொடுத்தார்.

    சுதந்திரம் அளிக்கின்ற கடவுள்

    படைப்பின் வேளையிலே மனிதனுக்குக் கடவுள் சுதந்திரத்தைக் கொடுத்தார். ஆதிமனிதன் ஆதாம் உயிருள்ள ஒவ்வொன்றுக்கும் என்ன பெயரிட்டானோ அதுவே அதன் பெயராயிற்று. கீழ்படிதல் நிறைந்த அல்லது கீழ்படிதலற்ற வாழ்வை தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தைக் கொடுக்கிறார்.

    'நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்' (ஆதி.2:16,17).

    'இதோ ஜீவனையும், நன்மையையும், மரணத்தையும், தீமையையும் இன்று உனக்கு முன்னே வைத்தேன்' (உபா.30:15) என்கிறார்.

    'கர்த்தரை சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்' (யோசு.24:15) என்று அவர்கள் விரும்பியதை வழிபடுவதற்கான சுதந்திரத்தை அவர்களுக்குக் கொடுத்தார்.

    கடவுளின் கட்டளைகளை கைக்கொண்டால் ஆசீர்வாதம், கைக்கொள்ளா விட்டால் சாபம் என்று கடவுளின் கற்பனைகளைக் கைக்கொள்வதில் அவர்களுக்கு முழுமையான சுதந்திரத்தைக் கொடுக்கிறார். அநியாயம் செய்கிறவன் இன்னும் அநியாயம் செய்யட்டும், நீதியுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும் என்று செய்கின்ற செயலில் மனிதனுக்கு சுதந்திரம் கொடுக்கிறார்.

    நியாயம் தீர்க்கின்ற கடவுள்

    மனிதனுக்கு எல்லாவற்றிற்கும் சுதந்திரம் அளிக்கின்ற கடவுள், நிச்சயமாக எல்லாவற்றையும் ஒருநாள் நியாய விசாரணைக்குக் கொண்டு வருவார். ஒவ்வொரு கிரியையும், ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும், தீமையானாலும் நியாயத்திற்குக் கொண்டுவருவார். பட்சபாதமின்றி நியாயந்தீர்ப்பார். இதிலிருந்து யாரும் தப்பவோ, ஓடி ஒளியவும் முடியாது. இது எல்லாருக்கும் பொதுவானது. இதை எல்லோரும் எதிர்கொண்டேயாக வேண்டும்.

    நியாயத்தீர்ப்பின் வேளையில் கடவுள் பின்வாங்குவதும், தப்பவிடுவதும், மனஸ்தாபப்படுவதும் இல்லை. அவர் நீதியோடும், நிதானத்தோடும் நியாயந்தீர்ப்பார். பட்சபாதமில்லாமல், அவனவன் வழிகளுக்கும், செய்கைகளுக்கும் தக்கதாக நியாயந்தீர்ப்பார். மனிதன் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும் (மத்.12:36).

    நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார். நாம் நினைப்பது போல் அவர் தாமதிப்பதுமில்லை, மாறாக, அவர் நாம் கெட்டு அழிந்து போவதை அவர் விரும்பாதபடியினால் நாம் மனந்திரும்ப வேண்டுமென்று அவர் நம்மிடத்தில் நீடிய பொறுமையுள்ளவராய் இருக்கிறார். மனந்திரும்பி நல்வாழ்வு வாழ்வதற்கான வாய்ப்பை மீண்டும் மீண்டும் தந்து கொண்டேயிருக்கிறார்.

    கோதுமையை களஞ்சியத்திலும், பதரையோ அவியாத அக்கினியில் சேர்ப்பார். நித்திய வாழ்வுக்கென்று சிலரையும், நித்திய அக்கினிக்கென்று சிலரையும் பிரித்தெடுப்பார். ஐசுரியவான் லாசரு உவமையில் மண்ணில் ஆடம்பரமாய் வாழ்கிறவன் மரித்தபின் எரிநரகில் வேதனைப்படுகிறான். ஆனால், மண்ணில் வறுமையில் வாடியவன் மரித்தபின் ஆபிரகாமின் மடியில் இளைப்பாறுகிறான். இரக்கமும், கருணையும் நிறைந்த நல்வாழ்வு வாழ்வதற்கான வாய்ப்பிருந்தும் வாழாதவன், இப்போது ஒரு துளி நீருக்காய் ஓலமிடுகிறான். வறுமை, வியாதி, பசி என்று வேதனையில் வாடியவன், இப்போது சமாதானத்தோடே இளைப்பாறுகிறான். மரணத்தைப் போல நியாயத்தீர்ப்பும் நமக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது.

    நம் செய்கைக்குத் தக்க பலனளிக்கிற கடவுள்

    'தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்பது முதுமொழி. 'மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்' என்பது மறைமொழி.

    மனிதன் தான் விரும்பிய செயல்களை செய்வதற்குரிய சுதந்திரம் அவனுக்கு முழுமையாகக் கொடுக்கப்பட்டிருந்தாலும், அவனவன் செய்வதற்கேற்ற பிரதிபலனையும் அடைந்தே தீர வேண்டுமென்ற தெளிவும் அவனுக்கு வேண்டும். நன்மையை விரும்பி செய்வதும், தீமையை வெறுப்பதும், தீமைகளை அடுக்கடுக்காய் செய்து நன்மை செய்ய மறுப்பதும் அவரவர் விருப்பம் தான்.

    ஆனாலும், அவனவன் செய்கைக்குத் தக்க பலன் அவனவன் கூட வருகிறது. நன்மை செய்தவர் மேன்மையையும், தீமை செய்தவர் அதற்குரிய பிரதிபலனையும் அடைவர். நற்கிரியைகளை செய்வதற்கென்றே நாம் கடவுளால் உருவாக்கப்பட்டிருக்கிறோம்.

    நம் நற்கிரியைகளால் பிதாவின் நாமம் மகிமைப்பட வேண்டும். நன்மை செய்கிறவன் கடவுளால் உண்டாயிருக்கிறான். 'நற்செய்தியின் நறுமணத்தை உள்ளடக்கிய நற்செயல்களை ஆற்ற இயலும் வகையில் இயேசுவுடனான அன்புறவில் நம்மை ஈடுபடுத்துவோம்' என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.

    மகிமையான வாழ்வுக்கென்று மகத்தான செயல்களைச் செய்வோம்!

    Next Story
    ×