என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அல்லாஹ்"

    • அல்லாஹ்வின் தன்மையான இரக்கக் குணம் நம் வாழ்வில் ஒன்றிப்போக வேண்டும்.
    • இறைவனின் இரக்கத்தைப்பெறும் வகையில் நம் வாழ்வை அமைத்துக்கொள்வோம்.

    அல்லாஹ்வின் தன்மைகளில் முதன்மையான ஒன்று இரக்கம். அல்லாஹ்வின் இரக்கம் எப்படி இருக்கும்? தவறுகள் செய்து நரகம் சென்றவன் சுவனம் செல்ல துடிக்கும்போது அல்லாஹ் எப்படி நடந்து கொள்வான்? இது குறித்து நபித்தோழர் அப்துல்லாஹ் பின் மஸ் ஊத் (ரலி) இவ்வாறு கூறியுள்ளார்.

    (நரகத்திலிருந்து வெளியேறி) இறுதியாக சொர்க்கத்தில் நுழையும் ஒரு மனிதர் சில சமயம் நடந்து வருவார். சில சமயம் தவழ்ந்தபடி வருவார். சில சமயம் நரக நெருப்பு அவரது முகத்தைத் தாக்கிக் கரித்தும் விடும். இந்நிலையில் அவர் நரகத்தைத் தாண்டியதும் அதைத் திரும்பிப் பார்த்து, "உன்னிடமிருந்து என்னைக் காப்பாற்றிய (என் இறை)வன் சுபிட்சமிக்கவன்; முன்னோர் பின்னோர் யாருக்கும் வழங்காத (பாக்கியத்)தை அல்லாஹ் எனக்கு வழங்கினான்" என்று கூ(றி இறைவனைப் போற்)றுவார்.

    அப்போது அவருக்கு ஒரு மரம் காட்டப்படும். உடனே அவர், "என் இறைவா! அந்த மரத்தின் அருகே என்னைக் கொண்டு செல்வாயாக! அதன் நிழலை நான் பெற்றுக் கொள்வேன்; அதன் (கீழே பாயும்) நீரைப் பருகிக்கொள்வேன்" என்று கூறுவார். அதற்கு அல்லாஹ், "மனிதா! அதை நான் உனக்கு வழங்கினால் வேறொன்றை நீ என்னிடம் கேட்கக்கூடுமல்லவா" என்று கூறுவான். அதற்கு அவர், "இல்லை; இறைவா! வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்" என்று கூறி, வாக்குறுதி அளிப்பார். அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் காணும் அவருடைய இறைவன், அவருக்கு வாய்ப்பளித்து, அவரை அந்த மரத்தின் அருகே கொண்டு செல்வான். அங்கு அவர் அந்த மரத்தின் நிழலைப் பெறுவார்; அதன் நீரையும் பருகிக்கொள்வார்.

    பிறகு அவருக்கு மற்றொரு மரம் காட்டப்படும். அது முதலில் காட்டப்பட்ட மரத்தைவிட மிகவும் அழகாய் இருக்கும். (அதைக் கண்ட) உடன் அவர், "என் இறைவா! இதற்கருகே என்னைக் கொண்டு செல்வாயாக! நான் அதன் நீரைப் பருகி அதன் நிழலை அடைந்து கொள்வேன்! இதைத் தவிர வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்" என்று கூறுவார். அதற்கு இறைவன், "மனிதா! வேறெதையும் கேட்கமாட்டேன் என்று என்னிடம் நீ (முன்பு) வாக்குறுதி அளிக்கவில்லையா? அதன் அருகில் உன்னை நான் கொண்டுசென்றால், வேறொன்றை என்னிடம் நீ கேட்கக்கூடுமல்லவா" என்பான். உடனே அவர், வேறெதையும் கேட்கமாட்டேன் என்று வாக்குறுதி அளிப்பார். இறைவனும் அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் கண்டு அவருக்கு வாய்ப்பளித்து, அவரை அதன் அருகே கொண்டு செல்வான். அவர் அதன் நிழலை அனுபவித்துக் கொண்டு அதன் (கீழே ஓடும்) நீரையும் அருந்துவார்.

    பிறகு சொர்க்க வாசல் அருகே உள்ள மரம் அவருக்குக் காட்டப்படும். அது முதலிரண்டு மரங்களை விடவும் ரம்மியமானதாய் இருக்கும். உடனே அவர், "என் இறைவா! அந்த மரத்தின் அருகே என்னைக் கொண்டு செல்வாயாக! நான் அதன் நிழலைப் பெறுவேன்; அதன் நீரைப் பருகிக்கொள்வேன்; இதைத் தவிர வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்" என்று கூறுவார். அதற்கு இறைவன், "மனிதா! வேறெதையும் நான் கேட்கமாட்டேன் என்று (முன்பு) என்னிடம் நீ வாக்குறுதி அளிக்கவில்லையா?" என்று கேட்பான். அதற்கு அவர், "ஆம்; என் இறைவா! இந்தத் தடவை (மட்டும்); இனி, இதன்றி வேறெதையும் உன்னிடம் கேட்கமாட்டேன்" என்று கூறுவார். இறைவனும் அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் கண்டு அவருக்கு வாய்ப்பளித்து, அவரை அதன் அருகே கொண்டு செல்வான்.

    அவர் அந்த மரத்தை நெருங்கும்போது சொர்க்கவாசிகளின் குரல் அவருக்குக் கேட்கும். உடனே அவர், "என் இறைவா! சொர்க்கத்திற்குள் என்னை அனுப்புவாயாக!" என்பார். அதற்கு இறைவன், "மனிதா! ஏன் என்னிடம் கோருவதை நிறுத்திக்கொண்டாய்? உலகத்தையும் அதைப் போன்ற இன்னொரு மடங்கையும் உனக்கு நான் வழங்கினால் உனக்கு மகிழ்ச்சி ஏற்படும்தானே?" என்று கேட்பான். அதற்கு அவர், "என் இறைவா! அகிலத்தின் அதிபதியே! நீயே என்னைப் பரிகாசம் செய்கிறாயா?" என்று கேட்பார். "நான் உன்னைப் பரிகாசம் செய்யவில்லை. மாறாக, நாடியதைச் செய்கின்ற ஆற்றல் உள்ளவன் நான்" என இறைவன் கூறுவான். (நூல்: ஸஹீஹ் முஸ்லிம்)

    பெரு பாவங்கள் செய்பவர்களே நரகம் செல்வார்கள் என்று அல்லாஹ் பல இடங்களில் குறிப்பிட்டுப் பேசுகிறான். ஆனால், மேற்கண்ட நபிமொழியில் நரகத்தில் இருப்பவனைச் சுவனம் கொண்டு வருகிறது அல்லாஹ்வின் இரக்கம்.

    அல்லாஹ்வின் தன்மையான இரக்கக் குணம் நம் வாழ்வில் ஒன்றிப்போக வேண்டும். இத்தன்மையே நாளை மறுமையில் நம்மைத் தலைநிமிரச் செய்யும். மேலும் அல்லாஹ்வுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய தொண்டாக அமையும். இறைவனின் இரக்கத்தைப்பெறும் வகையில் நம் வாழ்வை அமைத்துக்கொள்வோம். இறைவனிடம் இருந்து சுவனத்தை பரிசாகப் பெறுவோம்.

    ×