என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிள்ளையார்பட்டி விநாயகர்"

    • பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோவில் குடைவரை கோவிலாகும்.
    • இந்து சமய நம்பிக்கைப்படி தேவலோகத்தில் இருக்கும் மரம் கற்பக மரமாகும்.

    பிள்ளையார்பட்டி என்று பெயர் வரக்காரணமே கற்பக விநாயகர் இந்த ஊரில் அமைந்து இருப்பது தான். இந்த ஆலயம் மிகவும் பழமையான ஆலயம், விநாயகர் வழிபாடுக்காக போற்றப்படும் ஆலயம். உலகின் பல இடங்களில் விநாயகர் வழிபாடு இருந்துள்ளது. விநாயகர் சிற்பங்களும் பல இடங்களில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. உலகத்திலேயே முதல் பிள்ளையாராக விளங்குவது பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் சிற்பம் என்றால் மிகையாகாது.

    உலகிலேயே இரண்டு கைகள் உடன் காணப்படும் விநாயகரின் சிற்பங்கள் இரண்டு மட்டுமே உள்ளது. ஒன்று பிள்ளையார் பட்டியிலும், மற்றொன்று ஆப்கானிஸ்தானிலும் காணப்படுகின்றன. ஆப்கானிஸ்தானில் உள்ள விநாயகரின் சிற்பம் நின்ற கோலத்தில் காணப்படுகிறது. ஆனாலும் பிற்கால அணிகலன்களுடன் அவர் காணப்படுகிறார். ஆனால் பிள்ளையார்பட்டியில் பிற்கால அணிகலன்கள் இல்லாமல் பழைய வடிவத்தில் காணப்படுவது சிறப்பாகும். தெய்வீக சிற்பக் கலை வரலாற்றின் மூலமும், கல்வெட்டுகளின் சான்றுகளின் மூலமும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரின் சிற்பமே உலகத்தில் முதன்முதல் வடிவமாக போற்றப்படுகிறது.

    பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோவில் குடைவரை கோவிலாகும். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு முற்கால பாண்டிய மன்னர்கள், குன்றைக் குடைந்து கோவிலையும், கற்பக விநாயகர் சிற்பத்தையும், திருவீசர் என்னும் லிங்கத்தையும் இவ்வூரில் வடிவமைத்துள்ளனர். கி.மு 500 முதல் கி.பி 1284 வரையான 14 கல்வெட்டுகள் இக்கோவிலில் உள்ளது.

    பாற்கடலை கடைந்து அமிர்தம் பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் முயற்சி செய்தனர். அவர்கள் மேரு மலையை மத்தாகவும், வாசுகி பாம்பினை கயிறாகவும் எடுத்துக்கொண்டனர். அசுரர்கள் பாம்பின் தலை புறமும், தேவர்கள் வாலின் புறமும் நின்று இழுத்து கடைந்தார்கள். அப்போது கற்பக மரம், பாரிஜாதம், ஹரிசந்தனம், சந்தனம், மந்தாரம் முதலிய ஐந்து மரங்கள் பாற்கடலிலிருந்து வெளிப்பட்டன. இவை 'பஞ்ச தருக்கள்' என்று அழைக்கப்படுகின்றன.

    இந்து சமய நம்பிக்கைப்படி தேவலோகத்தில் இருக்கும் மரம் கற்பக மரமாகும். தேவலோகத்தில் உள்ள இந்த மரத்தடியில் நின்றுகொண்டு என்ன வரம் கேட்டாலும் கிடைக்கும். அதுபோல கேட்ட வரம் அனைத்தும் தருவதால் பிள்ளையார்பட்டி விநாயகருக்கு 'கற்பக விநாயகர்' என்ற பெயர் ஏற்பட்டது. அதற்கு முன்பு இவர் 'தேசிய விநாயகம் பிள்ளையார்' என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ளார்.

    பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை தரிசிக்க பிரதான சாலையில் இருந்து தெற்குநோக்கி செல்ல வேண்டும். சிறிது தூரம் சென்றால் அங்கே பிரமாண்டமான குளம் தென்படும். இந்த திருக்குளத்தில் கோவில் கோபுரத்தில் நிழல் விழுவது மிகச்சிறப்பாகும். அதைத்தொடர்ந்து கோவிலுக்கு முன்புறம் செல்கிறோம். கிழக்கே இருந்து கோபுர தரிசனம் முடித்துவிட்டு உள்ளே செல்கிறோம். அங்கே சிவபெருமான் திருவீசுவராக காட்சியளிக்கிறார். சிவகாமி அம்மை தெற்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கிறார்.

    கற்பக விநாயகரோ வடக்கு நோக்கி அமர்ந்து பக்தர்கள் கேட்கும் வரத்தினை அள்ளித்தருகிறார். இரண்டு கரங்களுடனும், அங்குச பாசங்கள் இல்லாமலும் இங்கு சிறப்பாக காட்சி தருகிறார். அர்த்தபத்ம ஆசனம் போன்று கால்கள் மடித்து அருள் புரிகிறார். இந்த அமைப்பு எல்லாம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரிடம் வித்தியாசமாக உள்ளது.

    கற்பக விநாயகரின் சிற்பத்தை வடிவமைத்த சிற்பி அதன் அருகிலேயே அவரது கையெழுத்தை கல்வெட்டில் செதுக்கியுள்ளார். எக்காட்டூர் கோன் பரணன் பெருந்தச்சன் என அவரது கையெழுத்து உள்ளது. இங்குள்ள கற்பக விநாயகர் தனது கையில் மோதகத்தை வைத்திருக்கவில்லை. யோக நிலையில் அமர்ந்து உலக நன்மைக்காக கையில் லிங்கத்தை வைத்து தியானம் செய்யும் திருக்கோலத்தில் அமர்ந்த நிலையில் காணப்படு கிறார். அவர் யோக விநாயகராக இருப்பதால் கேட்ட வரங்கள் எல்லாம் எளிதில் கொடுக்க வல்லவராக இருக்கிறார்.

    விநாயகரின் தும்பிக்கை வலது பக்கமாக வளைந்திருப்பது தனிச்சிறப்பாகும். வலம்புரி சங்கு போல் வலம்புரி துதிக்கையும் தனித்தன்மை வாய்ந்ததாகும். வடக்கு திசையை நோக்கி இருக்கும் வலம்புரி விநாயகர் இவர் மட்டுமே. எனவே தான் பிள்ளையார்பட்டி வலம்புரி விநாயகரை வணங்குபவர் களுக்கு வெற்றி மேல் வெற்றி என்கிறார்கள். இந்த கோவிலில் திருமண வரம் தரும் காத்தாயினி வழிபாடு, செல்வ வளம் தரும் பசுபதிசுவரர் வழிபாடு சிறப்பானதாகும்.

    இந்த கோவிலில் நடைபெறும் விழாக்களில் மிகப்பெரியது, விநாயகர் சதுர்த்தி திருவிழாவாகும். இந்த விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக 9 நாட்களுக்கு முன்பே காப்புக் கட்டி விடுவார்கள். இத்திருவிழா பத்து நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெறும். அவ்வேளையில் பல்வேறு பகுதியில் இருந்து கற்பக விநாயகரின் பக்தர்கள் ஒன்று கூடுவார்கள். ஒரு வருட காலத்திற்கு சதுர்த்தி நாட்களில் உண்ணாவிரதம் இருந்த பக்தர்கள், அதை நிறைவு செய்ய பிள்ளையார்பட்டி வந்து சேருவார்கள்.

    விநாயகர் சதுர்த்தி திருவிழா அன்று விநாயகர் சன்னிதியில் உண்ணாநோன்பு இருந்து கும்ப ஜெபத்தில் கலந்துகொள்வது சிறப்பாகும். இந்த கும்பத்தினை தரிசனம் செய்யும் போது கேட்ட வரம் கிடைக்கிறது என்பதால் வருடத்துக்கு வருடம் கூட்டம் கூடுகிறது.

    விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் இரவு கணேசப்பெருமான் வாகனங்களில் திருவீதி உலா வருவார். இறுதி நாளில் தேர் பவனி நடைபெறும்.

    வைகாசி மாதம் இவ்வூரின் காவல் தெய்வமான கொங்குநாச்சியம்மனின் கோவில் திருவிழா பத்து நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெறும். அவ்வேளையில் இந்த ஆலயத்தோடு இணைந்தே திருவிழா நடைபெறும்.

    இந்த ஆலயத்தில் ஒவ்வொரு சதுர்த்தியன்றும் வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகப்பெருமான் எழுந்தருளி கோவில் உட்பிரகாரம் சுற்றி வருவார். திருக்கார்த்திகையன்று விநாயகப்பெருமானும், உமாதேவி சமேத சந்திரசேகரப்பெருமானும் திருவீதி பவனி வர சொக்கப்பனை கொளுத்தப்பெறும். மார்கழித் திருவாதிரை நாளன்று நடராஜப்பெருமான் வீதி உலா வருவார்.

    இந்த ஆலயத்தில் கார்த்திகை மாதம் முதல் தினத்தில் இருந்து மார்கழி மற்றும் தை மாதம் பூச நட்சத்திரம் நாள் வரை காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை பக்தர்களுக்காக கோவில் திறந்திருக்கும். மற்ற நாட்களில் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடை திறந்து இருக்கும்.

    சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து 71 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்குடி - திருப்பத்தூருக்கும் இடையில் குன்றக்குடிக்கு அருகில் மூன்று கிலோமீட்டர் தொலைவிலும் பிள்ளையார்பட்டி அமைந்துள்ளது.

    • அவரால் உயிரூட்டப்பட்டதால் அவ்வுருவம் அவரது பிள்ளை ஆகிவிட்டது.
    • அன்றிலிருந்து அத்தினம் விநாயகர் சதுர்த்தி என்ற புனித தினமாக ஆகி விட்டது.

    விநாயகர் என்றால் "மேலான தலைவர்" என அர்த்தப்படும்.

    "விக்னேஸ்வரர்" என்றால் "இடையூறுகளை நீக்குபவர்" என்றும், "ஐங்கரன்" என்றால் ஐந்து கரங்களை உடையவரெனவும் அர்த்தப்படும்.

    "கணபதி என்பது கணங்களுக்கு அதிபதி என்று பொருள்படும்.

    இவ்வாறே அவரது சகல நாமங்களுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் அந்தந்தப் பெயர்களிலேயே பொதிந்துள்ளன.

    உண்மையில் விநாயகர் அவதரித்த திதியையே (அவர் அவதரித்த தினம்) விநாயக சதுர்த்தி எனக் கொள்ளப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன.

    ஒருமுறை சிவபிரான் வெளியே சென்றிருந்த சமயம் பார்வதிதேவி நீராடச்சென்றார்.

    அப்போது தனக்கு காவல் காக்க ஒருவரும் இல்லையென்பதால், தனது நீராட்டுக்காக வைக்கப்பட்டிருந்த சந்தனக் குழம்பை எடுத்து ஒரு உருவம் உருவாக்கி அனுக்கிரகத்தால் அதற்கு உயிரூட்டினார்.

    அவரால் உயிரூட்டப்பட்டதால் அவ்வுருவம் அவரது பிள்ளை ஆகிவிட்டது.

    எவரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாதெனப் பிள்ளையாருக்கு அறிவுறுத்தி விட்டு பார்வதி தேவியார் நீராடச் சென்று விட்டார்.

    அச்சமயத்தில் வந்த சிவபிரானைப் பிள்ளையார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

    அதனால் கோபம் கொண்ட சிவன் பிள்ளையாரின் தலையை வெட்டி விட்டு உள்ளே சென்று விட்டார்.

    நீராடி முடிந்ததும் தேவியார் வெளியே வந்து பிள்ளையார், சிரச்சேதமுற்றுக் கிடந்த கோலத்தைக் கண்டு சீற்றங்கொண்டார்.

    தான் உருவாக்கிய பிள்ளையாரைச் சிவனே சிதைத்து விட்டதை அறிந்த அவர் ஆவேசம் கொண்டவராக காளியாக உருக்கொண்டு வெளியேறி மூவுலகிலும் தமது கண்ணில் பட்ட சகலவற்றையும் அழிக்கத் தொடங்கினார்.

    காளியின் ஆவேச நர்த்தனத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவபிரானிடம் சென்று முறையிட்டனர்.

    காளியைச் சாந்தப்படுத்துவதற்கு சிவன் எண்ணி, தனது கணங்களை அழைத்து வட திசையாகச் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவராசியின் தலையைக் வெட்டி வருமாறு பணித்தார்.

    அதன்படி கணங்கள் வடதிசை நோக்கிச் சென்ற பொழுது அவர்ககளுக்கு ஒரு யானையே முதலில் தென்பட்டது.

    அவர்கள் அதன் தலையைக் கொய்து சென்று இறைவனிடம் கொடுக்கவும், அவர் அத்தலையை வெட்டுண்டு கிடந்த பார்வதியின் பிள்ளையாரின் முண்டத்தில் வைத்து உயிரூட்டி விட்டார்.

    இதைக் கண்டு சாந்தமடைந்த தேவியார் அகமகிழ்ந்து பிள்ளையாரைக் கட்டி அணைத்துக் கொண்டார்.

    சிவபிரான் அந்தப் பிள்ளையாருக்கு "கணேசன்" என நாமம் சூட்டித் தமது கணங்களுக்கு கணபதியாகவும், நியமித்தார் என "நாரதபுராணத்தில்" தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுவே பிள்ளையாரின் அவதார சரிதம். இந்த நிகழ்ச்சி நடந்தது. சுக்கில பட்ஷ சதுர்த்தியன்றாகும்.

    அன்றிலிருந்து அத்தினம் விநாயகர் சதுர்த்தி என்ற புனித தினமாக ஆகி விட்டது.

    • நீர் - சரிந்த அவரின் தொந்தி, நீரைக் குறிக்கும்.
    • காற்று - இரண்டு புருவங்களும் சேர்ந்த அரைவட்டம், காற்றைக் குறிக்கும்

    பஞ்சபூதங்களின் மொத்த உருவம்தான் விநாயகப் பெருமான்.

    அவர் உடலின் ஒவ்வொரு பாகமும் ஒரு பெரும் சக்தியை உணர்த்துகிறது.

    நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம் ஆகியன ஐம்பெரும் சக்திகள்.

    இந்த பஞ்சபூதங்களை நம் முன்னோர்கள் வணங்குவதற்குக் காரணம் அவை மனிதர்களால் அடக்கமுடியாத மாபெரும் சக்திகள் ஆகும்.

    அத்தகைய ஐம்பெரும் சக்திகளையும் உள்ளடக்கிய விநாயகர் பற்றிய விவரம் வருமாறு:

    நிலம் (பூமி) - விநாயகரின் மடித்து வைத்துள்ள ஒரு பாதம், பூமியைக் குறிப்பதாகும்

    நீர் - சரிந்த அவரின் தொந்தி, நீரைக் குறிக்கும்.

    நெருப்பு - அவரது மார்பு, நெருப்பைக் குறிக்கும்

    காற்று - இரண்டு புருவங்களும் சேர்ந்த அரைவட்டம், காற்றைக் குறிக்கும்

    ஆகாயம் - இருபுருவங்களின் அரைவட்டம் நடுவில் வளைந்திருக்கும் கோடு ஆகாயத்தைக் குறிக்கும்.

    • பூர நட்சத்திர நாளில் விநாயகருக்கு அன்ன அபிஷேகம் செய்ய இல்லத்தில் வளம் கொழிக்கும்.
    • திருவலஞ்சுழி வெள்ளை விநாயகருக்குப் பச்சைக் கற்பூரம் மட்டுமே சார்த்தப்பெற்று வருகிறது.

    விநாயகருக்கு அபிஷேகப் பொருள்கள் எல்லாம் உகந்தன.

    ஆயினும் சில குறிப்பிட்ட தலங்களில் ஒரு சில அபிஷேகப் பொருள்கள் மட்டும் குறிப்பாக சிறப்பித்துக் செய்யப்பெறுகின்றன.

    அவ்வகையில் திருவலஞ்சுழி வெள்ளை விநாயகருக்குப் பச்சைக் கற்பூரம் மட்டுமே சார்த்தப்பெற்று வருகின்றது.

    பாலபிஷேகம்:

    வேலூருக்கு அருகில் உள்ள சேண்பாக்கம் என்னும் ஊரில் பால விநாயகருக்குத் தாமரைத் தண்டு நூலால் நெய் விளக்கேற்றி பாலபிஷேகம் செய்தால் புத்திரப் பேறு கிடைக்கும்.

    சந்தன அபிஷேகம்:

    செஞ்சேரிமலை என வழங்கப்பெறும் தென்சேரிகிரி மலையின் அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள இவ்விநாயகருக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்ய குழந்தை பாக்கியம் ஏற்படும்.

    பரணி, ரோகிணி புனர்பூசம், அஸ்தம், மூலம் ஆகிய நட்சத்திர நாட்களில் இந்த விநாயகரை சந்தன அபிஷேகம் செய்து வணங்குவது சிறப்பைத் தரும்.

    தேனபிஷேகம்:

    திருப்புறம்பயத் தலத்தில் சிப்பி கிளிஞ்சல் முதலான கடல்படு பொருள்களால் ஆக்கப்பெற்ற விநாயகர் தேன் அபிஷேகப் பிரியர்.

    இவருக்கு எவ்வளவு தேன் அபிஷேகம் செய்யப்பட்டாலும் கீழே வழிந்தோடாமல் அனைத்தும் விநாயகர் வடிவுக்குள் போகக் காணலாம்.

    திருநீற்று அபிஷேகம்:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் முன்புறம் உள்ள பொற்றாமரைக் குளத்தின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள விநாயகர் திருநீற்று விநாயகர் என அழைக்கப்படுகின்றார்.

    அங்கு வரும் பக்தர்கள் அனைவரும் கைகளாலேயே அவருக்கு விபூதி அபிஷேகம் செய்து வணங்குகின்றனர்.

    மகம், உத்திரம், விசாகம், கேட்டை, பூராடம் ஆகிய நட்சத்திர நாட்களில் இந்த விநாயகருக்குத் திருநீறு அபிஷேகம் செய்ய நினைத்த காரியம் பலிதமாகும்.

    கஸ்தூரி மஞ்சள் அபிஷேகம்:

    மிருகசீரிஷம், பூரம், அனுஷம் ஆகிய நட்சத்திர நாட்களில் விநாயகருக்குக் கஸ்தூரி மஞ்சள் அபிஷேகம் செய்தால் வெற்றி உண்டாகும்.

    அன்ன அபிஷேகம்:

    பூர நட்சத்திர நாளில் விநாயகருக்கு அன்ன அபிஷேகம் செய்ய இல்லத்தில் வளம் கொழிக்கும்.

    சொர்ணாபிஷேகம்:

    திருவோணம் நட்சத்திர தினத்தன்று விநாயகருக்குச் சொர்ணாபிஷேகம் செய்யச் செல்வம் கொழிக்கும்.

    ×