என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலமாக விளங்குகிறது.
    • லட்சக்கணக்கான பக்தர்கள், கிரிவலம் வந்து இறைவனை வழிபாடு செய்வார்கள்.

    சிவபெருமான் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அற்புத ஆலயங்கள் எண்ணற்றவை இருந்தாலும், அதில் முதன்மையானதாக, பழம் பெருமை கொண்டதாக இருப்பது, திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோவில்.

    பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஆலயமாகவும் விளங்கும் இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருநாள் மிகவும் விசேஷம். இந்த நாளில் இங்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள், கிரிவலம் வந்து இறைவனை வழிபாடு செய்வார்கள்.


    கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. இருப்பினும் கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்தபுராணத்தில் சொல்லப்பட்டுள்ள நிகழ்வுதான், அதற்கான அடிப்படையாக பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

    அதன்படி விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் இடையே, 'யார் பெரியவர்?' என்ற போட்டி ஏற்பட்டது. அவர்களின் பிரச்சனை சிவபெருமானிடம் சென்றது. சிவபெருமான் தன்னை ஒரு தீப வடிவமாக மாற்றி, விண்ணுக்கும், மண்ணுக்குமாக உயர்ந்து நின்றார். அவரது அடி முடியில் ஒன்றை யார் முதலில் கண்டு வருகிறார்களோ, அவரே பெரியவர் என்று முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி அடியைத் தேடி வராக (பன்றி) வடிவம் எடுத்து விஷ்ணுவும், முடியைத் தேடி அன்னப் பறவை உருவம் கொண்டு பிரம்மனும் புறப்பட்டனர். பல நூறு ஆண்டுகள் கடந்தபிறகும் கூட, அவர்கள் இருவராலும் சிவபெருமானின் அடியையோ, முடியையோ காண முடியவில்லை.


    இதனால் தான் ஈசனை, 'அடிமுடி காண முடியாத அருட்பெருஞ்சோதி' என்று அழைக்கிறோம். இறுதியில் இருவரும் தங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டனர்.

    பின்னர் அவர்கள் தங்களுக்கு ஜோதி வடிவில் அருட்காட்சி வழங்கியதுபோல, அனைவருக்கும் அருள வேண்டும் என்று வேண்டினர்.

    மேற்கண்ட நிகழ்வு நடைபெற்ற இடம் திருவண்ணாமலை திருத்தலம் என்பதால், அங்கு ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருநாளின் மாலை வேளையில், 2668 அடி உயர மலையில் தீபம் ஏற்றப்படும்.

    ஜோதி வடிவில் உயர்ந்து நின்ற சிவபெருமான் தான், இங்கு மலை வடிவில் இருப்பதாக ஐதீகம். திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் ஆலயம், பஞ்ச பூதத் திருத்தலங்களில் அக்னி தலமாக விளங்குகிறது. திருவண்ணாமலை சென்று தீப வழிபாடு செய்ய அனைவராலும் இயலாது.

    அதே நேரம் இறைவனை தங்கள் வீட்டிலும் ஜோதி வடிவில் வணங்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான், கார்த்திகை தீபத் திருநாள் அன்று, அனைவரது வீடுகளிலும் அகல் விளக்கில் தீபம் ஏற்றி வணங்குகிறார்கள்.


    விரதம் இருக்கும் முறை

    கார்த்திகை தீபத் திருநாளுக்கு முன்தினமான பரணி நட்சத்திரம் அன்று, பகல் நேரத்தில் மட்டும் ஒரு வேளை உணவு சாப்பிட வேண்டும். மறுநாள் அதிகாலையில் நீராடி, இறைவனை வழிபட்ட தண்ணீர் மட்டும் பருக வேண்டும்.

    அன்று முழுவதும் உணவைத் தவிர்த்து இரவு கோவிலுக்குச் சென்று இறைவனை தரிசிக்க வேண்டும். மறுநாள் காலையில் நீராடி, பால் அருந்தி விரதத்தை நிறைவு செய்யலாம். தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் இந்த விரதத்தை கடைப்பிடித்து வருபவர்களுக்கு, மறுபிறப்பு இல்லை. சந்ததியினர் பெரும் புகழோடு வாழ்வர் என்பது ஐதீகம்.


    விளக்குகளின் வகைகள்

    பஞ்சலோகம், வெள்ளி விளக்கு, பாவை விளக்கு, சர விளக்கு, காமாட்சி விளக்கு, குத்து விளக்கு, கோடி விளக்கு, தூண்டா மணி விளக்கு, அகல் விளக்கு எனப் பல வகைகள் இருந்தாலும், அவரவர் வசதிகேற்ப மனத் தூய்மையுடன் மண்ணால் செய்யப்பட்ட அகல்விளக்கையாவது வீடுகளில் ஏற்றி வைத்து இறைவனை வழிபட வேண்டும்.

    கார்த்திகை தீபத் திருநாளில் மட்டும் அல்லாது, அனைத்து நாட்களிலுமே, அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன்பாகவும், மாலையில் சூாியன் மறைவதற்கு முன்பாகவும், வீட்டில் வாசல் தெளித்து கோலமிட்டு, பூஜை அறையிலும், வீட்டின் வாசல் படியிலும் விளக்கு ஏற்றலாம். இதனால் நேர்மறை சக்திகள் நம்மை சூழ்ந்து, வாழ்வில் இருள் விலகி ஒளி பிறக்கும்.

    • திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் மயில் வாகனத்தில் பவனி.
    • திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசல நாயகர் தேரோட்டம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு கார்த்திகை-25 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: தசமி நள்ளிரவு 1.13 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம்: உத்திரட்டாதி காலை 11.34 மணி வரை பிறகு ரேவதி

    யோகம்: அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சனம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் மயில் வாகனத்தில் பவனி. சுவாமிமலை முருகப் பெருமான் யானை வாகனத்தில் புறப்பாடு. குரங்கணி ஸ்ரீ முத்துமாலையம்மன் பவனி. திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசல நாயகர் தேரோட்டம். திருத்தணி, திருப்போருர், வடபழனி, குன்றத்தூர், கந்தக்கோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம். ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகப் பெருமான் அபிஷேகம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீஸ்வரர் திருக்கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ய சம்ஹார அர்ச்சனை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஆதாயம்

    ரிஷபம்-ஜெயம்

    மிதுனம்-நன்மை

    கடகம்-நிம்மதி

    சிம்மம்-உதவி

    கன்னி-அமைதி

    துலாம்- புகழ்

    விருச்சிகம்-சுபம்

    தனுசு- லாபம்

    மகரம்-வெற்றி

    கும்பம்-வரவு

    மீனம்-களிப்பு 

    • இறைவன் தனது திருமேனியை இடப்பக்கமாய் சாய்த்திருப்பது தனது கூப்பிட்ட குரலை கேட்பதற்காகத்தான் என்பதைக் கண்டு உள்ளம் பதைத்தார்.
    • இந்த சாதாரண அற்பனுக்கு இறங்கி தலைசாய்த்த கருணையை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

    தங்களது தவ வலிமையாலும், தீர்க்க தரிசன சிந்தையாலும் இறைவனை கண்ணார தரிசித்து பேரின்பப் பேற்றை அடைந்தவர்கள் யோகிகள் ஆவர்.

    நாம் அவர்களை சித்தர்கள் என்றும் முனிவர்கள் என்றும் சொல்லி அழைத்து மகிழ்கிறோம்.

    இவ்வாறான யோகிகள் வரலாற்றில் தனக்கென ஒரு முக்கியத்துவம் பெற்று விளங்குபவர் கருவூர் சித்தர்.

    தலங்கள் தோறும் சென்று பரம்பொருளை தரிசித்து மகிழ்ந்த வேளையில் ஒரு சமயம் இந்த மருதவன சோலைக்கும் வந்திருந்தார்.

    குன்றாத இளமைப் பருவத்தினரான தாமிரபரணி அன்றும் தன் சீரிலிமை பரிணமிக்க, பொங்கிப் பெருகும் வெள்ளமாய் கரைபுரள ஓடிக் கொண்டிருந்தாள்.

    ஆற்றின் மறுகரையில் கருவூர் சித்தர்.

    இக்கரையில் மருதமரச் சோலையின் நடுவே, வாசமிக்க மருதமரப்பூக்கள் மலர்ந்து தேன் சொரிய, இனிமையான சூழலில் முக்கண் முதல்வனின் திருக்கோவில் திவ்யமாய் நின்று கொண்டிருந்தது.

    கரை புரண்டோடும் வெள்ளம் கருவூர் சித்தரின் பக்திக்கு முன்னே என்ன செய்ய முடியும்?

    அக்கரையில் நின்றபடியே, தன் உள்ளமெல்லாம் வியாபித்து நிற்கும் எம்பெருமானை உள்ளன்போடு அழைக்கலானார் குழந்தை தனது தாயை அழைக்கும் நேசக் குரலில்.

    'நாறும்பூ நாதா! உன் அடியேன் தரிசனம் காண வந்து வழி கிடைக்காமல் இக்கரையில் கிடந்து தவிக்கிறேன். உன் திருமுக தரிசனத்திற்கு வழி சொல்ல மாட்டாயா?

    முக்கண் முதல்வனே மனம் இறங்க மாட்டாயா?' என்று உரக்கக் குரல் கொடுத்து நின்றார்.

    தவயோகியின் பாசமிக்க குரல் மறுகணமே அந்த வனாந்திரப் பகுதியெங்கும் பரவி எதிரொலித்தது.

    தன் அடியார் ஒருவர் பரிதவித்திருக்க, பாராமுகமாய் கிடப்பாரோ பரம்பொருள்? தன் பக்தனின் அழைப்பைக் கேட்க சற்றே இடப்புறமாய் தலை சாய்த்து மன்னிப்பாய்க் கேட்டிருந்த சங்கரன், அடியார்க்கு பதிலளிக்கும் விதமாக உரைத்தார் இப்படி. என்னே பேரன்பு, என்னே அதிசயம்.

    'அன்பனே! உன் விருப்பப்படி எனது ஆலயத்திற்கு வருவதற்கு சிரமமேதும் பட வேண்டாம். ஆற்றுக்குள் இறங்கி நடந்து வர வழி கிடைக்கும்.

    தயங்காமல் வா திருமுக தரிசனத்திற்கு' இறைவனது இந்த அசரீரி கேட்ட மறுகணம் தவ முனிவரும் சற்றும் தாமதிக்காது ஆற்றுக்குள் இறங்கினார்.

    இறைவனின் ஆணைக்கிணங்கி, தாமிரபரணியும் இரு பக்கமும் விலகி, அந்த சிவபக்தனுக்கு வழி விட்டு நிசப்தமாய் பார்த்திருந்தது.

    ஆவல் ததும்பும் உள்ளத்தோடு வேக, வேகமாய் ஆற்றைக் கடந்த கருவூர் சித்தர் கரையேறி, சோலைக்குள் நடக்கலானார்.

    சற்று தூரத்தில் ஆலகால விஷம் உண்ட அண்ணல் எழுந்தருளியிருக்கும் திருக்கோவில்.

    கண்களில் பெருகிய நீரோடு, மகிழ்ச்சியோடு தன் பரம்பொருளை தரிசிக்கும் ஆசையில் ஓடோடிப் போனார் கோவிலுக்குள்.

    அவர் சிந்தையும், செயலும், ஆசையும், விருப்பமும் எல்லாமுமாகி நின்றது இறைவனின் திருக்காட்சியே.

    உள்ளம் குளிர நாறும்பூ நாதனின் திருமேனி அழகைக் கண்டு மயங்கி, ஆனந்தக் கூத்தாடினார். பாடினார்.

    அங்குமிங்கும் ஓடினார். எங்குமாய் பரவி ஒளிவீசி நின்ற பொன்னார்மேனியனின் சொக்க வைக்கும் அழகில் பரவசமானார்.

    அந்த பேரின்பம் கிடைத்த வேளையில் ஒரு விசயத்தை கவனிக்கவும் தவறவில்லை.

    அதாவது, இறைவன் தனது திருமேனியை இடப்பக்கமாய் சாய்த்திருப்பது தனது கூப்பிட்ட குரலை கேட்பதற்காகத்தான் என்பதைக் கண்டு உள்ளம் பதைத்தார்.

    இந்த சாதாரண அற்பனுக்கு இறங்கி தலைசாய்த்த கருணையை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்தார். அந்த சமயம் அந்த துறவியின் மனதில் சமயோசிதமாக ஒரு யோசனை உதித்தது.

    சகல உயிர்களும் சுகமாக வாழ நினைப்பதும், பிரார்த்தனை செய்வதும், உழைப்பதும் தானே சித்தர்களின் செயல்பாடு. கருவூர் சித்தர் மட்டும் விதி விலக்கா?

    எனவே, தன் உள்ளத்தில் அரும்பி நின்ற அந்த பேராசையை, விண்ணப்பமாகவே இறைவனிடம் வைத்தார் கருவூர் சித்தர் இப்படி.

    'இறைவா முப்பத்தி முக்கோடி தேவர்களுக்கெல்லாம் தலைவனே, உலகத்து உயிர்களையெல்லாம் ஆதரித்துக் காப்பவனே இன்று இந்த கடையவனுக்காக காது கொடுத்துக் கேட்பதற்கு சற்றே தலை சாய்த்து இரக்கப்பட்ட இந்த வரத்தை இனி எக்காலத்திலும் இத்தலத்தில் நம்பிக்கையோடு உன்னை நாடி வரும் அடியார்களின் குரலுக்கும் இவ்வண்ணமே செவி சாய்த்து, அருள்பாலித்திருக்க வேண்டும் என்பதே இச்சிறியோனின் விண்ணப்பம்' என்று சொல்லி பணிந்து நின்றார் சித்தர்.

    அடியாரின் கோரிக்கையை அகமகிழ்ந்து ஏற்றுக் கொண்ட இறைவனும், 'அப்படியே ஆகட்டும், வரமளித்தேன்' என்றார்.

    ஆக, அன்றைக்கு தனது அடியார் ஒருவரின் கூப்பிட்ட குரலுக்கு செவி சாய்த்து வரமளித்த வள்ளல் பெருந்தகையான பரம்பொருள், இன்றளவும் நம்பிக்கையோடு நாடி வரும் அடியார்களுக்கு வேண்டிய வரமளித்து அவர்களை ஆதரித்துக் காப்பது திருப்புடை மருதூரின் சிறப்பம்சமாக காலம், காலமாக அடியார்களால் போற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • பலவகையான பல்லக்குகள், கடிவாளங்கள் என பல்வேறு வகையான பொருட்களும் காட்சிகளும் ஓவியங்கள் மற்றும் சிற்பங்களில் இடம்பெற்றுள்ளன.
    • துப்பாக்கி வீரர்களுடன் வில் ஏந்திய வீரர்களும் படையில் இடம்பெற்றிருந்தனர். திருப்புடைமருதூர் ஆலய ஓவியம், சிற்பங்களில் இதை உணர முடியும்.

    வெளிநாட்டுக் கப்பல்களின் வருகை, குதிரைகள் கப்பல்களின் வாயிலாக வருதல் ஆகியனவற்றை வெளிப்படுத்தல், இரண்டாவதாக பணியாளர்களுடன் உயர் அதிகாரிகள் நிற்கும் காட்சி, கொடி பிடிப்போர், பல்லக்குத் தூக்கிகள், இசைக்கருவிகளுடன் நிற்கும் இசைவாணர்கள் ஆகியோர் குறித்தும் திருப்புடைமருதூர் ஆலய ஓவியங்களில் காணலாம்.

    படைவீரர் அணிவகுத்துச் செல்லல், யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை அவற்றின் அமைப்பு, பயன்படுத்தும் போர்க்கருவிகள், சண்டையிடும் முறை ஆகியனவற்றையும் சில ஓவியங்களில் காண முடிகிறது.

    குதிரைகளோடு வரும் கப்பலின் ஓவியம், மாலுமிகளின் ஓவியம், அரேபிய வணிகர், போர்ச்சுகீசிய வீரர்கள், மன்னன் முன்பு குதிரைகளுக்குப் பயிற்சி அளித்தல், துப்பாக்கிகளுடன் அணிவகுத்துச் செல்லல், போர்ச்சுகீசியர் குழு மன்னனைச் சந்தித்தல் ஆகிய காட்சிகள், வெளிநாட்டவருடன் நாயக்க மன்னர்கள் கொண்டிருந்த தொடர்பினை வெளிப்படுத்துவதுடன் அவர்களது ஆயுதங்களையும் ஓவியங்கள் அறியச் செய்கின்றன.

    வளையல் வியாபாரி, விலை உயர்ந்த கற்கள் விற்கும் வியாபாரி, ஆடு மேய்ப்பவர், சுமை தூக்குபவர், மீன் பிடிப்பவர், மீன்பிடி வலை, பல வகையான இசைக் கருவிகள், இசைக்கருவிகளுடன் அணிவகுத்துச் செல்லும் இசைவாணர்கள், நடனமாதர், கோலாட்டம் ஆடும் பெண்கள், வீரநடனங்கள், கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நடனமாது, சிறுத்தையுடன் சண்டையிடும் வீரர்கள், வில் வீரர்கள், யானையைப் பிடித்தல், எருதுச் சண்டை, சேவல் சண்டை, ஆட்டுக்கிடாய் சண்டை, பறவை பிடிப்பவன், பாம்பாட்டி, மல்யுத்தம் புரிவோர், பலவகையான பல்லக்குகள், கடிவாளங்கள் என பல்வேறு வகையான பொருட்களும் காட்சிகளும் ஓவியங்கள் மற்றும் சிற்பங்களில் இடம்பெற்றுள்ளன.

    16ம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்த பழங்காலத் துப்பாக்கியில் ஒருமுறை சுட்டபின் மறுமுறை சுட அதன் வெப்பம் ஆற வேண்டும். அத்துடன் வெடிமருந்தை மீண்டும் திணிக்க வேண்டும்.

    இதனால் ஒருமுறை சுட்டபின் மறுமுறை சுட கால இடைவெளி ஏற்படும். ஆனால் வில்லில் இருந்து அம்பு எய்ய இவ்வளவு கால இடைவெளி ஏற்படுவதில்லை.

    தொடர்ச்சியாக அம்பு எய்யலாம். இதனால் துப்பாக்கி வீரர்களுடன் வில் ஏந்திய வீரர்களும் படையில் இடம்பெற்றிருந்தனர். திருப்புடைமருதூர் ஆலய ஓவியம், சிற்பங்களில் இதை உணர முடியும்.

    • இப்படங்களை கண்ணால் பார்ப்பதன் வாயிலாகவே திருப்புடைமருதூர் ஓவியங்களின் சிறப்பை புரிந்து கொள்ள முடியும்.
    • இந்த ஓவியங்கள் வாயிலாக அவை வரையப்பட்ட காலத்தைய சமுதாயத்தை அறிந்து கொள்ளலாம்.

    திருப்புடைமருதூர் கோவிலில் தீட்டப்பட்டுள்ள ஓவியங்களையும் செதுக்கப்பட்டுள்ள மரச்சிற்பங்களையும் பிரெஞ்சு இந்திய ஆய்வு நிறுவனத்தினர் தொழில்நுட்ப நேர்த்தியுடன் 1980 மற்றும், 1985 ல் புகைப்படங்களாக எடுத்துள்ளனர்.

    பின் 2008ல் டிஜிட்டல் புகைப்பட கருவியின் துணையுடன் புகைப் படங்கள் எடுத்துள்ளனர். இவ்வாறு இவர்கள் எடுத்துள்ள வண்ணப் புகைப்படங்களின் எண்ணிக்கை 2200 ஆகும்.

    இப்படங்களை கண்ணால் பார்ப்பதன் வாயிலாகவே திருப்புடைமருதூர் ஓவியங்களின் சிறப்பை புரிந்து கொள்ள முடியும்.

    இந்த ஓவியங்கள் வாயிலாக அவை வரையப்பட்ட காலத்தைய சமுதாயத்தை அறிந்து கொள்ளலாம்.

    கலை வரலாற்றில் ஓவியர்கள் சிற்பிகள் ஆகியோர் தம் காலப் பண்பாட்டையே தம் படைப்புகளில் பதிவு செய்துள்ளனர்.

    புராணம், சமயம் தொடர்பான படைப்புகளும் இப்போக்கிற்கு விதிவிலக்கல்ல.

    இதே வழிமுறையில்தான் திருப்புடைமருதூர் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. அந்த ஓவியர்கள் வாழ்ந்த காலத்தின் பிரதிபலிப்பு அவற்றில் இடம்பெற்றுள்ளன.

    திருஞானசம்பந்தர் பல்லக்கில் வரும் காட்சியில் இடம்பெறும் பல்லக்கு, ஓவியர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்த பல்லக்கின் அமைப்பைக் கொண்டுள்ளது.

    அவரை வரவேற்கும் அரசு அதிகாரிகள் நாயக்கர்கால அதிகாரிகளைப் போன்று ஆடை உடுத்தியுள்ளார்கள்.

    • பிற்காலத்தில் மருத மர வனமாக இருந்த இப்பகுதியை பாண்டிய மன்னன் ஒருவன் ஆட்சி செய்கிறான்.
    • அந்த மன்னன் ஒரு நாள் வேட்டையாட திருப்புடைமருதூர் மருத மர காட்டிற்குள் வந்த போது மான் ஒன்றை கண்டு துரத்துகிறான்.

    பிற்காலத்தில் மருத மர வனமாக இருந்த இப்பகுதியை பாண்டிய மன்னன் ஒருவன் ஆட்சி செய்கிறான்.

    அந்த மன்னன் ஒரு நாள் வேட்டையாட திருப்புடைமருதூர் மருத மர காட்டிற்குள் வந்த போது மான் ஒன்றை கண்டு துரத்துகிறான்.

    அந்த மானின் மீது அவன் அம்பை எய்ய, அந்த மானோ ஒரு மருத மர பொந்திற்குள் சென்று மறைகிறது.

    மறைந்த அந்த இடத்தை தோண்டுமாறு மன்னன் வீரர்களிடம் ஆணையிட, அவர்களும் அந்த இடத்தை தோண்டுகிறார்கள்.

    அப்போது அந்த இடத்தில் இருந்து ஒரு சிவலிங்கம் வெளிப்படுகிறது.

    அதனை பார்த்து அதிசயித்த மன்னனுக்கு, இந்த லிங்கத்தை இங்கே பிரதிஷ்டை செய்து கோவில் கட்டுவாயாக என வானில் இருந்து அசரீரி குரல் கேட்கிறது.

    அதன்படி மன்னனும் திருப்புடைமருதூரில் திருக்கோவில் கட்டி அந்த இடத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தான் என்பது வரலாறு.

    இன்றைக்கும் தலபுராண வரலாற்றில் சொல்லப்பட்ட பிரம்ம தண்டத்தை முதலாம் கிழக்குச் சுற்றில் பரிவார தேவதை சன்னதியான சூரியன் சன்னதியில் கண்டு தரிசித்து மகிழலாம்.

    இத்தரிசனக் காட்சி வேறு எந்த தலங்களிலும் பார்க்க முடியாத ஒன்றாகும்.

    • முற்காலத்தில் மகாவிஷ்ணு, பிரம்மா, மற்றும் அனைத்து தேவர்களும் சிவபெருமானை வழிபட சிறந்த இடம் ஒன்றை தேடினார்கள்.
    • அவர்கள் பிரதிஷ்டை செய்த லிங்கம் காலப் போக்கில் மண் மூடி மறைந்து விடுகிறது.

    முற்காலத்தில் மகாவிஷ்ணு, பிரம்மா, மற்றும் அனைத்து தேவர்களும் சிவபெருமானை வழிபட சிறந்த இடம் ஒன்றை தேடினார்கள்.

    அப்போது வானில் இருந்து ஒரு குரல், பிரம்மன் கையில் உள்ள தண்டத்தை கங்கை நதியில் விடுங்கள், அந்த தண்டம் எங்கு சென்று நிற்கிறதோ அதுவே சிறந்த இடம் என அசரீரியாக ஒலித்தது.

    அதன்படி பிரம்மன் தன் கையில் இருந்த தண்டத்தை கங்கையில் விட, அது அப்படியே மிதந்து கடலில் சென்று, தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடத்தை அடைந்து அங்கிருந்து ஆற்றின் வழியே எதிர்த்து மேற்கு திசை நோக்கி சென்று திருப்புடைமருதூரில் நிலைபெற்றது.

    அந்த இடத்தில் மகாவிஷ்ணு, பிரம்மா, இந்திரன், சரசுவதி, மகாலட்சுமி மற்றும் தேவாதி தேவர்கள் அனைவரும் ஒன்று கூடி அந்த பிரம்ம தண்டத்தையும், சிவலிங்கம் ஒன்றையும் பிரதிஷ்டை செய்து வணங்கி சிவபெருமானின் அருளை பெற்று தேவலோகம் திரும்பினார்கள்.

    அவர்கள் பிரதிஷ்டை செய்த லிங்கம் காலப் போக்கில் மண் மூடி மறைந்து விடுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எப்போது வேண்டுமானாலும் திடீர் மண் சரிவுகள் ஏற்படலாம்.
    • மகா தீபம் ஏற்றும் கட்டளைதாரர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மகா தீப மலை அடிவாரத்தில் உள்ள வ.உ.சி. நகரில் புயல் மழை காரணமாக பாறைகள் மற்றும் மண் சரிவு ஏற்பட்டு 7 பேர் பலியாகினர்.

    இதனைத் தொடர்ந்து மகா தீப மலையில் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. மகாதீபம் ஏற்றப்படும் மலை உச்சி அருகிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

    மகாதீப தரிசனத்திற்காக ஆண்டு தோறும் 2500 பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகின்றனர். இந்த ஆண்டும் பக்தர்களை மலை ஏற அனுமதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்திருந்தது.

    மகா தீப மலையில் பல இடங்களில் ஈரப்பதம் இருப்பதால் பக்தர்களை மலையேற அனுமதிக்க வேண்டாம் என வனத்துறையினர் மாவட்ட நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்தனர்.

    இது தொடர்பாக அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. சென்னை ஐ.ஐ.டி. வல்லுனர் குழு மூலமாக நேற்று ஆய்வு செய்யப்பட்டது.

    மகா தீப மலையில் ஈரப்பதம் 900 ஹெக்டேர் பரப்பளவிற்கு பரவி உள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் திடீர் மண் சரிவுகள் ஏற்படலாம்.

    வழக்கம்போல் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். மகா தீப கொப்பரை, நெய், காடா துணி சுமார் 30 கிலோ கற்பூரம் போன்றவை எடுத்துச் செல்லப்படும். இதற்கு கோவில் ஊழியர்கள் மற்றும் மகா தீபம் ஏற்றும் கட்டளைதாரர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் மகாதீப தரிசனத்திற்கு 2500 பக்தர்களை அனுமதிப்பது சாத்தியமில்லை.

    இது குறித்து விரைவில் அரசு அறிவிப்பை வெளியிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பக்தர்கள் நாயன்மார்களை தோளில் சுமந்து சென்றனர்.
    • பஞ்ச ரதங்கள் பவனி நாளை நடைபெற உள்ளது.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. கார்த்திகை தீபத் திருவிழாவின்

    6-ம் நாளான இன்று காலை மூஷிக வாகனத்தில் விநாயகர், வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகர் வீதி உலா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 63 நாயன்மார்கள் மாட வீதியில் உலா வந்தனர்.

    பக்தர்கள் நாயன்மார்களை தோளில் சுமந்து சென்றனர். இதில் சுற்றியுள்ள பகுதி மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். மாலை 3 மணிக்கு மேல் 5-ம் பிரகாரத்தில் பக்தி சொற்பொழிவு நடக்கிறது.

    6 மணிக்கு கோவில் கலையரங்கத்தில் பக்தி இன்னிசை மற்றும் பரதநாட்டியம் நடைபெற உள்ளது. இரவு வெள்ளி விமானத்தில் விநாயகர், வெள்ளி விமானத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், வெள்ளி தேரில் உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார், வெள்ளி இந்திர விமானத்தில் பராசக்தி அம்மன் சண்டிகேஸ்வரர் மாட வீதியில் பவனி வருகின்றனர்.

    கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மகா தேரோட்டம் எனப்படும் பஞ்ச ரதங்கள் பவனி நாளை நடைபெற உள்ளது.

    அப்போது பக்தர்களின் பாதுகாக்கவும், தேர்பவனியின் போது கூட்ட நெரிசலை தவிர்க்கவும் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்படுகிறது.

    மேலும் குற்ற செயல்களை கண்காணிக்க மாட வீதிகளிலும், கிரிவலம் பாதையிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

    தேர் செல்லும் அசலியம்மன் கோவில் தெரு, பேகோபுரம் 3-வது தெரு, பேகோபுரம் பிரதான சாலை, கொசமடை வீதிகளில் வழியாக வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. மாட வீதிகளில் வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்பட்டுள்ளது. தேர் திரும்பும் இடத்தில் வாகனங்கள் நிறுத்தக்கூடாது.

    தேர் மீது சில்லறை காசுகள், தண்ணீர் பாட்டில், தானியங்கள் உள்ளிட்டவை வீசக்கூடாது. பக்தர்கள் 4 கோபுரங்களுக்கு முன்போ, கிரிவலப் பாதையிலோ கற்பூரம் ஏற்ற தடை விதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மையத்தில் ஒரே நேரத்தில் 50 பெண்கள் தங்கலாம்.
    • மையத்தில் ஓய்வு அறை, உணவளிக்கும் அறை மற்றும் கழிப்பறை உள்ளது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.

    இந்த ஆண்டுக்கான மணடல பூஜை தற்போது நடந்து வருவதால், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு செல்கிறார்கள்.

    சபரிமலைக்கு 10 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 50 வயதுக்கு குறைந்த பெண்கள் செல்ல முடியாது. 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களே சபரிமலைக்கு செல்ல முடியும். இதனால் வெளிமாநிலங்களில் இருந்து ஐயப்ப பக்தர்களுடன் வரக்கூடிய பெண்கள், தங்கும் வகையில் தங்குமிடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வந்தது.

    பெண்களுக்கு பாதுகாப்பான ஓய்வு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை போலீசாரும் முன்வைத்திருந்தனர்.

    இதையடுத்து பம்பையில் பெண்களுக்கான ஓய்வு மையம் அமைக்க தேவசம்போர்டு நடவடிக்கை எடுத்தது.

    அதன்படி ஐயப்ப பக்தர்களுடன் வரக்கூடிய பெண்கள் தங்குவதற்காக சிறப்பு மையம் பம்பை கணபதி கோவில் அருகே அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பம்பை தனி அலுவலர் ஜெயசங்கர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    1000 சதுரஅடி பரப்பளவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த மையத்தில் ஒரே நேரத்தில் 50 பெண்கள் தங்கலாம். இந்த மையம் குளிர்சாதன வசதி செய்யப்பட்டதாகும்.

    சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுடன் வந்திருக்கும் குறைந்த வயது பெண்கள் இந்த மையத்தில் வசதியாகவும், பாதுகாப்பாகவும் ஓய்வெடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சபரிமலைக்கு வரக் கூடிய குழந்தைகளின் தாய் மார்களும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் ஓய்வு அறை, உணவளிக்கும் அறை மற்றும் கழிப்பறை உள்ளிட்டவைகள் இடம்பெற்றுள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விஷ்ணுவை வணங்கினால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
    • சொர்க்க வாசலின் வழியாக நுழைந்து வந்தால் சிக்கல்கள் தீரும்.

    பாற்கடலில் துயிலும் பரந்தாமனுக்கு பல விழாக்கள் இருந்தாலும், வைகுண்ட ஏகாதசி பக்தர்களின் மனதில் இடம்பெற்ற முக்கியமான பக்தித் திருவிழாவாகும். இந்த ஏகாதசியன்று 'சொர்க்க வாசல் நுழைதல்' என்ற நிகழ்வு விஷ்ணு ஆலயங்கள் தோறும் நடைபெறும்.

    வைகுண்ட ஏகாதசி என்று வரும்பொழுது சொர்க்க வாசலை திறந்து வைப்பார்கள். ஆண்டு முழுதும் அடைத்து வைத்திருக்கும் கதவு அன்று மட்டும் திறந்து வைக்கப்படும். அந்த சொர்க்க வாசலின் வழியாக நாம் நுழைந்து வந்தால் சிக்கல்கள் தீரும். செல்வ வளம் சேரும்.


    மாதங்களில் நான் மார்கழி என்று கீதையில் கண்ணன் சொல்லியதாகச் சொல்வார்கள். இவ்வாறு புனிதமான மாதமாகவும், தேவர்கள் துயில் எழும் மாதமாகவும் கருதப்படும் மார்கழி மாதத்தில், நாம் விஷ்ணுவை வணங்கினால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

    ரொக்கத்திற்கு' முக்கியக்கவம் கொடுக்கும் நாம், 'சொர்க்கத்திற்கு' முக்கியத்துவம் கொடுக்கும் விழாவைக் கொண்டாட வேண்டுமல்லவா? அந்த விழா இந்த மார்கழி மாதம் தான் வருகின்றது.

    வைணவத் தலங்களில் எல்லாம் இந்த நிகழ்வு வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த விழா மார்கழி 26-ந்தேதி (10.1.2025) அன்று வருகிறது.

    பதினாறு பேறுகளுக்கும் சொந்தக்காரரான விஷ்ணுவை, நாம் 'பெருமாள்' என்று செல்லமாக அழைக்கிறோம். அவருக்காக கட்டிய கோவிலை 'பெருமாள் கோவில்' என்கிறோம். அவரை வழிபட்டால் நமக்கு பதினாறு விதமான பேறுகளும் வந்துசேரும் என்பதை நாம் அனுபவத்தில் உணரலாம்.

    காக்கும் கடவுள் என்று வர்ணிக்கப்படும் விஷ்ணுவிற்கு, ஆயிரம் திருநாமங்கள் இருந்தாலும், அவற்றில் 16 திருநாமங்கள் முக்கியமானவையாக உள்ளன. அவை:-

    1. ஸ்ரீவிஷ்ணு

    2. நாராயணன்

    3. கோவிந்தன்

    4. மதுசூதனன்

    5. ஜனார்த்தனன்

    6. பத்மநாபன்

    7. ப்ரஜாதிபதி

    8. வராகன்

    9. சக்ரதாரி

    10. வாமணன்

    11. மாதவன்

    12. நரசிம்மன்

    13. திரிவிக்ரமன்

    14. ரகுநந்தனன்

    15. ஜலசாயினன்

    16. ஸ்ரீதரன்


    பதினாறு பேறுகளையும் வழங்கும், பெருமாளின் இந்த 16 பெயர்களையும் சொல்லி, வைகுண்ட ஏகாதசி அன்று விஷ்ணுவை வணங்கினால், வேண்டிய வரம் கிடைக்கும்.

    மார்கழி மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு 'உற்பத்தி ஏகாதசி' என்று பெயர். அதே மாதம் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு 'வைகுண்ட ஏகாதசி' என்று பெயர்.

    ஏகாதசி அன்று அவல், வெல்லம் கலந்த நைவேத்தியம் வைத்து சாப்பிடலாம். முழு விரதம் இருக்க முடியாதவர்கள், மதியம், இரவு பலகாரம் மட்டும் சாப்பிடுவர். அன்று இரவு முழுவதும் கண்விழித்திருக்கும் பொழுது, இறை நாமத்தையே உச்சரிக்க வேண்டும்.

    பக்திப் பாடல்கள் பாடி வழிபடலாம். மறுநாள் அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன்னால் நீராடி தினம் பச்சரிசி சோறு, அகத்திக்கீரை, நெல்லிக்காய், கருணைக்கிழங்கு புளிக்குழம்பு சாப்பிடுவது நல்லது.

    இந்த வழிபாட்டில் மனநலமும், உடல்நலமும் சீராகின்றது. சிறப்பு வாய்ந்த மார்கழி மாதத்தில் ஏகாதசி விரதத்தை இனிதே கடைப்பிடித்து, பாற்கடலில் துயிலும் பரந்தாமனை வழிபட்டால் வாழ்க்கை வளமாகும், வளர்ச்சி பெருகும். வருங்காலம் நலமாகும்.

    நெஞ்சிற் கவலையெல்லாம் நிழல்போல் தொடர்ந்ததனால்

    தஞ்சமென உனையடைந்தேன் தாமரைமேல் நிற்பவளே! அஞ்சாது வரம்கொடுக்கும்

    அழகுமகா லட்சுமியே வஞ்சமில்லா தெமக்கருள வருவாய் இதுசமயம்!

    -என்று பாடுங்கள். எட்டுவகை லட்சுமியும் வேண்டும் அளவிற்குச் செல்வமும், வெற்றி வாய்ப்பும் உங்களுக்கு வழங்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

    • சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
    • பழனி ஸ்ரீபாலதண்டாயுதபாணி புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு கார்த்திகை-24 (திங்கட்கிழமை)

    பிறை: வளர்பிறை.

    திதி: நவமி பின்னிரவு 3.32 மணி வரை. பிறகு தசமி.

    நட்சத்திரம்: பூரட்டாதி நண்பகல் 1.09 மணி வரை. பிறகு உத்திரட்டாதி.

    யோகம்: மரண, சித்தயோகம்.

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். பழனி ஸ்ரீபாலதண்டாயுதபாணி புறப்பாடு. சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் பஞ்சமூர்த்திகளுடன் மயில் வாகனத்தில் கொலு தர்பார் காட்சி. நெல்லை ஸ்ரீநெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருவெண்காடு, திருவாடானை, திருக்கழுக்குன்றம், திருக்கடையூர் தலங்களில் 1,008 சங்காபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சன்னதியில் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருச்சேறை ஸ்ரீசாரநாதர் திருமஞ்சன சேவை. கோவில்பட்டி ஸ்ரீவண்ணநாதர் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீமகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீகற்பகாம்பாள் சமேத ஸ்ரீகபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீஸ்ரீதிரிபுரசுந்தரி அம்பாள் சமேத மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீரத்தினகிரீஸ்வரர் தலங்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-விருத்தி

    ரிஷபம்-தனம்

    மிதுனம்-போட்டி

    கடகம்-நலம்

    சிம்மம்-ஓய்வு

    கன்னி-நன்மை

    துலாம்- இன்பம்

    விருச்சிகம்-நிம்மதி

    தனுசு- முயற்சி

    மகரம்-களிப்பு

    கும்பம்-பாராட்டு

    மீனம்-செலவு

    ×