என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

கருவூர் சித்தரின் குரலுக்கு செவி சாய்த்த சங்கரன்
- இறைவன் தனது திருமேனியை இடப்பக்கமாய் சாய்த்திருப்பது தனது கூப்பிட்ட குரலை கேட்பதற்காகத்தான் என்பதைக் கண்டு உள்ளம் பதைத்தார்.
- இந்த சாதாரண அற்பனுக்கு இறங்கி தலைசாய்த்த கருணையை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.
தங்களது தவ வலிமையாலும், தீர்க்க தரிசன சிந்தையாலும் இறைவனை கண்ணார தரிசித்து பேரின்பப் பேற்றை அடைந்தவர்கள் யோகிகள் ஆவர்.
நாம் அவர்களை சித்தர்கள் என்றும் முனிவர்கள் என்றும் சொல்லி அழைத்து மகிழ்கிறோம்.
இவ்வாறான யோகிகள் வரலாற்றில் தனக்கென ஒரு முக்கியத்துவம் பெற்று விளங்குபவர் கருவூர் சித்தர்.
தலங்கள் தோறும் சென்று பரம்பொருளை தரிசித்து மகிழ்ந்த வேளையில் ஒரு சமயம் இந்த மருதவன சோலைக்கும் வந்திருந்தார்.
குன்றாத இளமைப் பருவத்தினரான தாமிரபரணி அன்றும் தன் சீரிலிமை பரிணமிக்க, பொங்கிப் பெருகும் வெள்ளமாய் கரைபுரள ஓடிக் கொண்டிருந்தாள்.
ஆற்றின் மறுகரையில் கருவூர் சித்தர்.
இக்கரையில் மருதமரச் சோலையின் நடுவே, வாசமிக்க மருதமரப்பூக்கள் மலர்ந்து தேன் சொரிய, இனிமையான சூழலில் முக்கண் முதல்வனின் திருக்கோவில் திவ்யமாய் நின்று கொண்டிருந்தது.
கரை புரண்டோடும் வெள்ளம் கருவூர் சித்தரின் பக்திக்கு முன்னே என்ன செய்ய முடியும்?
அக்கரையில் நின்றபடியே, தன் உள்ளமெல்லாம் வியாபித்து நிற்கும் எம்பெருமானை உள்ளன்போடு அழைக்கலானார் குழந்தை தனது தாயை அழைக்கும் நேசக் குரலில்.
'நாறும்பூ நாதா! உன் அடியேன் தரிசனம் காண வந்து வழி கிடைக்காமல் இக்கரையில் கிடந்து தவிக்கிறேன். உன் திருமுக தரிசனத்திற்கு வழி சொல்ல மாட்டாயா?
முக்கண் முதல்வனே மனம் இறங்க மாட்டாயா?' என்று உரக்கக் குரல் கொடுத்து நின்றார்.
தவயோகியின் பாசமிக்க குரல் மறுகணமே அந்த வனாந்திரப் பகுதியெங்கும் பரவி எதிரொலித்தது.
தன் அடியார் ஒருவர் பரிதவித்திருக்க, பாராமுகமாய் கிடப்பாரோ பரம்பொருள்? தன் பக்தனின் அழைப்பைக் கேட்க சற்றே இடப்புறமாய் தலை சாய்த்து மன்னிப்பாய்க் கேட்டிருந்த சங்கரன், அடியார்க்கு பதிலளிக்கும் விதமாக உரைத்தார் இப்படி. என்னே பேரன்பு, என்னே அதிசயம்.
'அன்பனே! உன் விருப்பப்படி எனது ஆலயத்திற்கு வருவதற்கு சிரமமேதும் பட வேண்டாம். ஆற்றுக்குள் இறங்கி நடந்து வர வழி கிடைக்கும்.
தயங்காமல் வா திருமுக தரிசனத்திற்கு' இறைவனது இந்த அசரீரி கேட்ட மறுகணம் தவ முனிவரும் சற்றும் தாமதிக்காது ஆற்றுக்குள் இறங்கினார்.
இறைவனின் ஆணைக்கிணங்கி, தாமிரபரணியும் இரு பக்கமும் விலகி, அந்த சிவபக்தனுக்கு வழி விட்டு நிசப்தமாய் பார்த்திருந்தது.
ஆவல் ததும்பும் உள்ளத்தோடு வேக, வேகமாய் ஆற்றைக் கடந்த கருவூர் சித்தர் கரையேறி, சோலைக்குள் நடக்கலானார்.
சற்று தூரத்தில் ஆலகால விஷம் உண்ட அண்ணல் எழுந்தருளியிருக்கும் திருக்கோவில்.
கண்களில் பெருகிய நீரோடு, மகிழ்ச்சியோடு தன் பரம்பொருளை தரிசிக்கும் ஆசையில் ஓடோடிப் போனார் கோவிலுக்குள்.
அவர் சிந்தையும், செயலும், ஆசையும், விருப்பமும் எல்லாமுமாகி நின்றது இறைவனின் திருக்காட்சியே.
உள்ளம் குளிர நாறும்பூ நாதனின் திருமேனி அழகைக் கண்டு மயங்கி, ஆனந்தக் கூத்தாடினார். பாடினார்.
அங்குமிங்கும் ஓடினார். எங்குமாய் பரவி ஒளிவீசி நின்ற பொன்னார்மேனியனின் சொக்க வைக்கும் அழகில் பரவசமானார்.
அந்த பேரின்பம் கிடைத்த வேளையில் ஒரு விசயத்தை கவனிக்கவும் தவறவில்லை.
அதாவது, இறைவன் தனது திருமேனியை இடப்பக்கமாய் சாய்த்திருப்பது தனது கூப்பிட்ட குரலை கேட்பதற்காகத்தான் என்பதைக் கண்டு உள்ளம் பதைத்தார்.
இந்த சாதாரண அற்பனுக்கு இறங்கி தலைசாய்த்த கருணையை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்தார். அந்த சமயம் அந்த துறவியின் மனதில் சமயோசிதமாக ஒரு யோசனை உதித்தது.
சகல உயிர்களும் சுகமாக வாழ நினைப்பதும், பிரார்த்தனை செய்வதும், உழைப்பதும் தானே சித்தர்களின் செயல்பாடு. கருவூர் சித்தர் மட்டும் விதி விலக்கா?
எனவே, தன் உள்ளத்தில் அரும்பி நின்ற அந்த பேராசையை, விண்ணப்பமாகவே இறைவனிடம் வைத்தார் கருவூர் சித்தர் இப்படி.
'இறைவா முப்பத்தி முக்கோடி தேவர்களுக்கெல்லாம் தலைவனே, உலகத்து உயிர்களையெல்லாம் ஆதரித்துக் காப்பவனே இன்று இந்த கடையவனுக்காக காது கொடுத்துக் கேட்பதற்கு சற்றே தலை சாய்த்து இரக்கப்பட்ட இந்த வரத்தை இனி எக்காலத்திலும் இத்தலத்தில் நம்பிக்கையோடு உன்னை நாடி வரும் அடியார்களின் குரலுக்கும் இவ்வண்ணமே செவி சாய்த்து, அருள்பாலித்திருக்க வேண்டும் என்பதே இச்சிறியோனின் விண்ணப்பம்' என்று சொல்லி பணிந்து நின்றார் சித்தர்.
அடியாரின் கோரிக்கையை அகமகிழ்ந்து ஏற்றுக் கொண்ட இறைவனும், 'அப்படியே ஆகட்டும், வரமளித்தேன்' என்றார்.
ஆக, அன்றைக்கு தனது அடியார் ஒருவரின் கூப்பிட்ட குரலுக்கு செவி சாய்த்து வரமளித்த வள்ளல் பெருந்தகையான பரம்பொருள், இன்றளவும் நம்பிக்கையோடு நாடி வரும் அடியார்களுக்கு வேண்டிய வரமளித்து அவர்களை ஆதரித்துக் காப்பது திருப்புடை மருதூரின் சிறப்பம்சமாக காலம், காலமாக அடியார்களால் போற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.






