என் மலர்
ரஷ்யா
- பூஸ்டர்கள் பிரிந்த பிறகு, அவை இங்குதான் கீழே விழும்
- சந்திரயான்-3 ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது
உலகின் முன்னணி நாடுகள், நிலவில் உள்ள வளங்களை கண்டறிவது உட்பட பல காரணங்களுக்காக நிலவிற்கு விண்கலங்களை அனுப்பி ஆராய்ச்சிகளை செய்கின்றன.
1959லிருந்து 1976 வரை ரஷியா நிலவிற்கு ரோபோ விண்கலங்களை தொடர்ச்சியாக அனுப்பி வந்தது. இவற்றில் 15 வெற்றிகரமாக நடந்தது. ரஷியாவின் லூனா எனும் இத்திட்டம், மேற்கத்திய நாடுகளால் லுனிக் என அழைக்கப்படுகிறது.
சுமார் அரை நூற்றாண்டு கழித்து மீண்டும் நிலவிற்கு ரஷியா ஒரு விண்கலம் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, தனது நாட்டின் கிழக்கில் உள்ள ஒரு கிராமத்தை ரஷியா ஆகஸ்ட் 11 அன்று காலி செய்ய இருக்கிறது.
1976க்கு பிறகு ரஷியா நிலவிற்கு அனுப்பவிருக்கும் இந்த லூனா-25 எனப்படும் லேண்டர் விண்கலம், மாஸ்கோவிற்கு கிழக்கே சுமார் 5,550 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வோஸ்டோச்னி காஸ்மோட்ரோம் எனும் ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் என்று அந்நாட்டின் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.
லூனா-25 லேண்டர் விண்கலத்தை சோயுஸ்-2 ஃப்ரிகாட் எனும் ராக்கெட் பூஸ்டர் சுமந்து செல்லும். விண்கலத்தை தாங்கி செல்லும் ராக்கெட்டிலிருந்து பூஸ்டர்கள் பிரிந்த பிறகு, அவை இங்குதான் கீழே விழும் என்று கணிக்கப்பட்டிருப்பதால், ஏவுதளத்திற்கு தென்கிழக்கே ரஷியாவின் கபரோவ்ஸ்க் பகுதியில் உள்ள ஷக்டின்ஸ்கி எனப்படும் இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் ஆகஸ்ட் 11 அன்று அதிகாலை வெளியேற்றப்படுவார்கள்.
நிலவின் தென் துருவம் நோக்கி செல்லும் ரஷியாவின் முதல் விண்கலம் இது.
ஒரு வருட காலம் நிலவில் தங்கி, நிலவில் நீர்நிலைகளின் சாத்தியக்கூறுகள் குறித்தும், வளங்கள் மற்றும் கட்டமைப்பு குறித்தும் தகவல்களை வழங்கும்.
இந்தியாவிலிருந்து இஸ்ரோவால், ஜூலை 14 அன்று வானில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 விண்கலமும் ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென் துருவ மேற்பரப்பில் தரையிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இம்முயற்சி வெற்றியடைந்தால், நிலவின் தென் துருவத்தை தொட்ட முதல் நாடு எனும் புகழை இந்தியா பெறும்.
- ரஷிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னிக்கு 11 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
- மற்றொரு வழக்கில் அவருக்கு மேலும் 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மாஸ்கோ:
ரஷியாவில் பிரதான எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் அலெக்சி நவால்னி (49). இவர் அதிபர் விளாடிமிர் புதின் ஆட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
கடந்த 2020-ம் ஆண்டு இவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக விமானம் மூலம் ஜெர்மனி கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு கொடிய விஷம் உடலில் கலந்திருப்பதை ஜெர்மன் அரசும் வெளியிட்டது.
இதற்கிடையே, ரஷியாவின் எதிர்க்கட்சித் தலைவரான அலெக்சி நவால்னி ஏற்கனவே மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். நவால்னி தற்போது மாஸ்கோவிவன் கிழக்கே உள்ள சிறையில் இரண்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.
நவால்னியை முடிந்தவரை சிறைக்குள் வைத்திருப்பதற்காகவே புதிய விசாரணை நடத்தப்படுவதாக அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நவால்னி மீது மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு மேலும் 9 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அலெக்சி நவால்னி மீது பதியப்பட்ட மற்றொரு வழக்கில், அவருக்கு 19 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
- ரஷியாவிற்கு, போரினால் ஏற்படும் செலவினங்களின் அதிகரித்திருக்கிறது
- ராணுவ தளவாடங்கள், உபகரணங்கள் உற்பத்தி ரஷியாவில் அதிகரித்திருக்கிறது
கடந்த 2022 பிப்ரவரி மாதம் ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது.
இதனை தீவிரமாக எதிர்த்து, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ராணுவத்தின் துணையோடு உக்ரைன் போரிட்டு வருகிறது.
ரஷிய- உக்ரைன் போர் 525 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இரு தரப்பிலும் உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் அதிகளவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் போரினால் ஏற்படும் செலவினங்களின் அதிகரிப்பால் ரஷியாவின் 2023-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் உள்ள ராணுவ செலவினங்களுக்கான தொகை இரு மடங்காகியுள்ளது. 2023-க்கான ராணுவ செலவுக்கு ரஷியா சுமார் ரூ.45 ஆயிரம் கோடி ($54 பில்லியன்) திட்டமிட்டிருந்தது. ஆனால் முதல் அரையாண்டிலேயே இதைவிட 12 சதவீதம் அதிகம் செலவிட்டிருக்கிறது.
போரை தீவிரமாக ரஷியா நடத்தி வந்தால், அதனால் ஏற்படும் அதிகமான ராணுவ செலவின் காரணமாக பட்ஜெட் தொகையில் விழும் துண்டு இன்னும் அதிகமாகலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
போரின் காரணமாக ராணுவ தளவாடங்கள், உபகரணங்கள் தொடர்புடைய உற்பத்திகள் ரஷியாவில் அதிகரித்திருக்கும் வேளையில் ஏற்றுமதி வருவாய் குறைந்திருப்பது மட்டுமல்லாமல் பிற தொழில்களும் போரினால் மிகவும் நலிந்து வருகிறது.
உலக பொருளாதாரம் மந்தமாக இருக்கும் சூழ்நிலையில் போர் விரைவில் முடிவுக்கு வருவது அனைத்து நாடுகளுக்கும் நல்லது என பொருளாதார வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர்.
- தப்பி வந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விளக்கமாக கூறி போலீசில் புகார் அளித்துள்ளார்.
- 2009ம் ஆண்டு முதல் தன்னை 1000க்கும் மேற்பட்ட முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார்.
மாஸ்கோ:
ரஷியாவின் செல்யாபின்ஸ்க் பகுதியில் இளம்பெண்ணை வீட்டில் அடைத்து, 14 ஆண்டுகளாக பாலியல் அடிமையாக வைத்திருந்து சித்ரவதை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2009ம் ஆண்டு செஸ்கிடோவ் என்ற நபர், எகடெரினா என்ற 19 வயது இளம்பெண்ணை சந்தித்துள்ளார். அப்போது அவரிடம் ஆசை வார்த்தைகள் பேசி வீட்டிற்கு மது அருந்த வரும்படி அழைத்துள்ளார். அங்கு சென்றபின் அவரை வெளியே அனுப்பாமல் தொடர்ந்து வீட்டுக்குள்ளேயே பாலியல் அடிமையாக வைத்து தன் காம இச்சையை தீர்த்துள்ளார்.
இவ்வாறு 14 ஆண்டுகள் கொடுமையை அனுபவித்த அந்த பெண், சமீபத்தில் அந்த வீட்டில் இருந்து தப்பி வந்துள்ளார். செஸ்கிடோவின் மனநிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, வீட்டில் இருந்து தப்பி வந்துள்ளார். இதற்கு செஸ்கிடோவின் தாயார் உதவி செய்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இப்போது 33 வயதாகிறது.
தப்பி வந்த அவர் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விளக்கமாக கூறி போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், செஸ்கிடோவ் 2009ம் ஆண்டு முதல் தன்னை 1000க்கும் மேற்பட்ட முறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், படுக்கை அறையைவிட்டு வீட்டு வெளியே வந்து வீட்டு வேலையை செய்வதாக இருந்தாலும், கத்தி முனையில் மிரட்டி வைத்திருந்ததாகவும் கூறி உள்ளார். மேலும், சின்னச்சின்ன பிரச்சனைகளுக்கெல்லாம் கடுமையாக அடித்து சித்ரவதை செய்ததாகவும் கூறி உள்ளார்.
இதுதவிர தன்னைப் போன்று வேறு ஒரு பெண்ணையும் வீட்டுக்கு அழைத்து வந்ததாகவும், 2011ல் சண்டையின்போது அந்த பெண்ணை கொலை செய்ததாகவும் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
இந்த புகாரிபேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செஸ்கிடோவை கைது செய்துள்ளனர். அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது செக்ஸ் பொம்மைகள் ஆபாச படங்கள் கொண்ட சி.டி.க்களை கைப்பற்றினர். செஸ்கிடோவின் வீட்டின் நிலவறையில் இருந்து மனித உடல் பாகங்கள் கைப்பற்றப்பட்டதாக விசாரணைக்குழு உறுதி செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட செஸ்கிடோவ் மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டு போலீசாரின் கண்காணிப்பில் உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.
- 10 வருடங்களுக்கு மேலாக இத்தகைய உணவு முறை சிறப்பானது என கூறி வந்தார்
- சாம்சோனோவா சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை
சைவ உணவு உண்பவர்களை வெஜிடேரியன்கள் என்றும் சைவ உணவுகளிலும் கூட பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களான தயிர், யோகர்ட், மோர், பாலாடை கட்டி மற்றும் வெண்ணெய் போன்றவற்றையும் உண்ணாதவர்கள் வேகன் என அழைக்கப்படுவார்கள்.
இந்த வேகன் உணவுகளை சமைக்காமல், பச்சை காய்கறிகளாகவும், கனிகளாகவும் மட்டும் உண்டு வந்து, பிறரையும் உண்ண பிரசாரம் செய்து வந்தவர் ரஷியாவை சேர்ந்த ஜன்னா சாம்சோனோவா (39).
சுமார் 10 வருடங்களுக்கு மேலாக இத்தகைய உணவு முறை சிறப்பானது என கூறி சமூக வலைதளங்களில் ஜன்னா டார்ட் எனும் பெயரில் பிரச்சாரம் செய்து வந்தார்.
"என் உடலும், மனமும் தினமும் மாறுவதை நான் காண்கிறேன். இப்பொழுது உள்ள என் புதிய 'என்னை' நான் விரும்புகிறேன். பழைய உணவு பழக்கங்களுக்கு போக விரும்பவில்லை" என வலைதளங்களில் பதிவு செய்திருந்தார். கடந்த 7 வருடங்களாக சாம்சோனோவா, பலாப்பழமும், டூரியன் பழங்களும் மட்டுமே உண்டு வந்தார்.
இந்நிலையில் சாம்சோனோவா, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வந்தார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்தபோது, சில மாதங்களுக்கு முன் அவர் மிகுந்த களைப்புடன் இருந்தார். அவர் கால்கள் வீங்கி இருந்தன. நீண்ட சிகிச்சைக்காக அவரை மருத்துவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை.
பிறகு அவர் தாய்லாந்து சென்றார். அங்கு அவரது உடல்நிலை மேலும் மோசமாகியது. அவரை சிகிச்சை எடுத்து கொள்ள சொல்லி அவரது நண்பர்கள் வற்புறுத்தியும் அவர் மறுத்துவிட்டார்.
இந்நிலையில் அவர் பட்டினியால் உயிரிழந்தார்.
பட்டினியால் ஏற்பட்ட களைப்பினாலும், முழுவதும் வேகன் உணவாகவே உண்டு வந்ததால் ஏற்பட்ட அழுத்தத்தாலும், காலரா நோயால் பாதிக்கப்பட்டவரை போல் மாறி தன் மகள் இறந்ததாக அவரின் தாயார் தெரிவித்தார்.
சாம்சோனோவாவின் இறப்பிற்கான அதிகாரபூர்வ காரணம் தெரிவிக்கப்படவில்லை.
உணவு மற்றும் ஊட்டச்சத்துக்களுக்கான வல்லுனர்களின் ஆலோசனையின்படியே உணவு பழக்கங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும், தகுந்த மருத்துவ வழிகாட்டுதல் இல்லாமல் செய்து கொள்ளும் இதுபோன்ற மாறுதல்கள் உடல்நலத்தை மோசமடைய செய்து உயிருக்கும் ஆபத்தாகலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
- உக்ரைன் தாக்குதல் நடத்துவதால் அமைதி முயற்சியை செயல்படுத்துவது கடினம் என்றார்.
- போர்நிறுத்தம் என்ற யோசனையை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் நிராகரித்துள்ளார்.
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொண்ட ரஷியா, முக்கிய பகுதிகளை கைப்பற்றியது. ஆரம்பத்தில் உக்ரைன் தரப்பு பின்னடைவை சந்தித்த நிலையில், அதன்பின்னர் எழுச்சி பெற்று பதில் தாக்குதல்களை தீவிரப்படுத்தி இழந்த பகுதிகளை மீட்டு வருகிறது. அத்துடன் ரஷியாவை குறிவைத்தும் தாக்கத் தொடங்கி உள்ளது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வந்து உக்ரைனில் அமைதி திரும்ப ஆப்பிரிக்க நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
இந்த அமைதி திட்டம் குறித்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ஆப்பிரிக்க தலைவர்கள், ரஷிய அதிபர் புதின் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புதின், ஆப்பிரிக்க முன்முயற்சி உக்ரைனில் அமைதிக்கு ஒரு அடிப்படையாக இருக்கலாம், ஆனால் உக்ரைன் தாக்குதல் நடத்துவதால் அந்த அமைதி முயற்சியை செயல்படுத்துவது கடினம் என்றார்.
'இந்த அமைதி முயற்சியின் விதிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அதில் செயல்படுத்த கடினமாக அல்லது சாத்தியமற்ற விஷயங்களும் உள்ளன. இந்த முன்முயற்சிகளில் ஒன்று போர் நிறுத்தம். ஆனால் உக்ரைன் தரப்பு பெரிய அளவிலான தாக்குதல் நடவடிக்கையை செயல்படுத்துகிறது. தாக்குதலுக்கு உள்ளாகும்போது எங்களால் போர் நிறுத்தத்தை அமல்படுத்த முடியாது' என்று புதின் குறிப்பிட்டார்.
அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்குவது குறித்த கேள்விக்கு பதிலளித்த புதின், "நாங்கள் அமைதி பேச்சுவார்த்தையை நிராகரிக்கவில்லை. ஆனால் இந்த செயல்முறை தொடங்குவதற்கு, இரு தரப்பிலும் உடன்பாடு இருக்க வேண்டும்" என்றார்.
அதேசமயம் போர்நிறுத்தம் என்ற யோசனையை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் நிராகரித்துள்ளார். தனது நாட்டின் ஐந்தில் ஒரு பகுதியை ரஷியா தனது கட்டுப்பாட்டில் தொடர்ந்து வைத்திருக்கவும், 17 மாதங்கள் நீடித்த போருக்குப் பிறகு அதன் படைகளை மீண்டும் ஒருங்கிணைக்கவும் போர் நிறுத்தம் வாய்ப்பாக அமைந்துவிடும் என்கிறார் ஜெலன்ஸ்கி.
- இரண்டு டிரோன்கள் மாஸ்கோவில் உள்ள சர்வதேச வர்த்தக மைய கட்டிடம் மீது மோதின.
- மாஸ்கோ மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் வான்வெளி தற்காலிகமாக மூடப்பட்டது.
மாஸ்கோ:
ரஷிய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் இன்று அதிகாலையில் ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் இரண்டு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி உள்ளன. இந்த தாக்குதலில் காவலாளி ஒருவர் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. உயிரிழப்பு எதுவும் இல்லை.
இன்று அதிகாலை உக்ரைன் தரப்பில் இருந்து 3 டிரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. இதில் ஒரு டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. எஞ்சிய 2 டிரோன்களும் மின்னணு ஆயுதங்கள் மூலம் தடுக்கப்பட்டது. அந்த டிரோன்கள் மாஸ்கோவில் உள்ள சர்வதேச வர்த்தக மைய கட்டிடம் மீது மோதி வெடித்தது. இதில் கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு விமான நிலையம் மூடப்பட்டது. மாஸ்கோ தெற்குப் புறநகரில் உள்ள வனுகோவா விமான நிலையத்திற்கு சுமார் ஒரு மணி நேரத்துக்கு எந்த விமானங்களும் வரவில்லை. எந்த விமானமும் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லவில்லை. மேலும் மாஸ்கோ மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் வான்வெளி தற்காலிகமாக மூடப்பட்டது.
- முதல் ஏவுகணையின் சிதைந்த பாகங்கள் டேகன்ராக் நகரத்தில் விழுந்தது
- இரண்டாவது S-200 ஏவுகணை அசோவ் நகருக்கு அருகே செலுத்தப்பட்டது
520 நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் ரஷிய- உக்ரைன் போரில் இருதரப்பும் மாறிமாறி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் இரு தரப்பிலும் அதிக உயிர்கள் பலியாகியது. தவிர, பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில், உக்ரைனின் தெற்கு ரோஸ்டோவ் பிராந்தியத்தின் மீது உக்ரைன் ஏவிய 2 ஏவுகணைகளை வெற்றிகரமாக இடைமறித்து அழித்ததாக ரஷியா தெரிவித்துள்ளது.
"உக்ரேனிய ஏவுகணைகளை ரஷிய வான் பாதுகாப்பு கருவிகள் கண்டு, வானில் இடைமறித்து தாக்கியது. இதில் கீழே விழுந்த உக்ரைன் நாட்டு முதல் ஏவுகணையின் சிதைந்த பாகங்கள் டேகன்ராக் நகரத்தில் விழுந்தது. சுமார் 2.5 லட்சம் மக்கள் வசிக்கும் டேகன்ராக் நகரின் குடியிருப்புகளை குறிவைத்து முதல் S-200 ஏவுகணை செலுத்தப்பட்டது.
இரண்டாவது S-200 ஏவுகணை அசோவ் நகருக்கு அருகே செலுத்தப்பட்டது. இதனை வீழ்த்தியபோது அதன் பாகங்கள், மக்கள் இல்லாத பகுதியில் விழுந்தது", என்று ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் இச்சம்பவம் குறித்து தெரிவித்துள்ளது.
உக்ரைனின் எல்லை பகுதிகள், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா தனது ராணுவ நடவடிக்கைகளை தொடங்கியதில் இருந்து டிரோன் மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களை கண்டு வருகின்றன. ஆனால் நேற்றைய சம்பவம் நடைபெறும் வரை ஏவுகணைகளால் குறிவைக்கப்படவில்லை.
"மத்திய டேகன்ராக் பகுதியில் உள்ள செகோவ் கார்டன் உணவகத்திற்கு அருகே இத்தாக்குதலால் 15 பேர் லேசாக காயமடைந்தனர். மீட்பு குழுவினர் சம்பவ இடத்தில் உள்ளனர். உயிரிழப்புகள் இல்லை. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன.
அந்த ஓட்டலில் இருந்து சில 100 மீட்டர் தொலைவில் உள்ள கலை அருங்காட்சியகத்திற்கு மேல் தாக்கி அழிக்கப்பட்டது. இதில் அருங்காட்சியகச் சுவர், அதன் கூரை மற்றும் வெளிப்புறக் கட்டிடங்கள் பலத்த சேதம் அடைந்தன. இதன் தாக்கத்தால் அருகில் உள்ள 3 மாடி அடுக்குமாடி குடியிருப்பின் ஜன்னல் பிரேம்கள் சேதமடைந்தன" என இச்சம்பவம் குறித்து ரோஸ்டோவ் பிராந்திய ஆளுனர் வாசிலி கோலுபேவ் தெரிவித்தார்.
உக்ரைன் நகரின் எல்லையிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அசோவ் கடற்கரை அருகே டேகன்ராக் நகரம் அமைந்துள்ளது.
- கைது நடவடிக்கை காரணமாக தென்ஆப்பிரிக்கா செல்வதை தவிர்த்து உள்ளார்
- சீனாவை தொடர்ந்து துருக்கி நாட்டிற்கும் செல்ல இருக்கிறார்
ரஷிய அதிபரான புதின் அக்டோபர் மாதம் சீனாவிற்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக, அவருடைய வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் யுரி யுஷாகோவ் உறுதிப்படுத்தியுள்ளார். 'ஒன் பெல்ட் ஒன் ரோடு' மாநாட்டின் இணைந்த ஒரு பகுதியாக இந்த பயணம் இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
'ஒன் பெல்ட், ஒன் ரோடு' ஆசியாவை ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடன் இணைக்கும் கட்டமைப்பு திட்டங்களை உள்ளடக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.
சீனா பயணத்தை தொடர்ந்து துருக்கியும் செல்ல இருக்கிறார். அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் ஒரு பகுதியாக இந்த பயணம் இருக்கும் என யுஷாகோவ் தெரிவித்துள்ளார். துருக்கி ரஷியாவுக்கு ஆதரவு நாடாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற இருக்கும் 20ஜி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக புதினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா பயணத்தை அவர் தவிர்ப்பதாக இதுவரை தெரிவிக்காத நிலையில், பயணம் செய்வாரா? என்பது குறித்து இன்னும் உறுதியாக முடிவு எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
தென்ஆப்பிரிக்காவில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ள விடுக்கப்பட்ட அழைப்பை புதின் நிராகரித்துள்ளார். அவருக்கு எதிராக சர்வதேச கிரிமினல் கோர்ட் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது. உக்ரைனில் இருந்து குழந்தைகள் கடத்தப்பட்டதற்கு புதின் தனிப்பொறுப்பு என குற்றம்சாட்டி சர்வதேச கிரிமினல் கோர்ட் அந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
சர்வதேச கிரிமினல் கோர்ட் ஒப்பந்தத்தில் தென்ஆப்பிரிக்கா கையெழுத்திட்டுள்ளதால், அங்கு சென்றால் கைது செய்யப்படும் நிலை ஏற்படும். இதனால் புதின் தென்ஆப்பிரிக்கா செல்லவில்லை.
சீனா, துருக்கி, இந்தியா அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. இதனால் சீனா, துருக்கி செல்ல புதினுக்கு சிக்கல் ஏதும் இல்லை.
சீன அதிபர் சில மாதங்களுக்கு முன் மாஸ்கோ சென்றிருந்தார். சீன அதிபர் ஜி ஜின்பிங்- புதின் சந்திப்பு 2022-ம் ஆண்டு உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற மாநாட்டின்போது நடைபெற்றது. அதேபோல் 2022-ம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற குளிர்கால விளையாட்டு தொடக்கவிழாவின் போது சந்தித்துக் கொண்டனர்.
- ரஷிய ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
- மத்திய கிரிமியாவில் உள்ள வெடிமருந்து கிடங்கு மீது டிரோன்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
மாஸ்கோ:
உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. ஒரு ஆண்டுக்கும் மேலாக சண்டை நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றின.
உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகள் அளித்து வருவதால் இப்போரில் ரஷிய படைக்கு எதிராக உக்ரைன் ராணுவம் கடும் சவால் அளித்து வருகிறது. இதில் ரஷிய ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமீயா பகுதியில் வெடி மருந்து கிடங்கு மீது டிரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதலை உக்ரைன் நடத்தி உள்ளது.
மத்திய கிரிமியாவில் உள்ள வெடிமருந்து கிடங்கு மீது டிரோன்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் வெடிமருந்து கிடங்கில் பல அடி உயரத்துக்கு தீ பிழம்பு எழுந்தது. அங்கு பெரும் கரும்புகை வெளியேறியது. பயங்கர வெடிசத்தங்களை கேட்டதும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வீடுகளை விட்டு அலறியபடி வெளியே வந்தனர்.
இந்த தாக்குதல் காரணமாக கிடங்கை சுற்றி 5 கிலோ மீட்டர் பகுதியில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டனர். தாக்குதல் தொடர்பாக வீடியோக்கள் வெளியாகின.
ரெயில் நிலையம் அருகே உள்ள வெடிமருந்து கிடங்கில் இருந்து விண்ணை மூட்டும் தீ பிழம்பு எழுப்பும் காட்சி பதிவாகி இருந்தது. மற்றொரு வீடியோவில் விமான நிலையம் அருகே புகை மற்றும் குண்டு வெடிப்பு சத்தம் கேட்கும் காட்சி இருந்தது.
இதுகுறித்து கிரிமியா கவர்னர் செர்ஜி அக்சியோ னோவ் கூறும்போது, வெடி மருந்து கிடங்கு மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பல ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டு உள்ளது என்றார்.
மேலும் கிரிமியா பாலமும் தற்காலிகமாக மூடப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வெடிமருந்து கிடங்கில் எரியும் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த தாக்குதலில் உயிரிழப்பு மற்றும் சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.
இந்த தாக்குதல் தொடர்பாக உக்ரைன் தரப்பில் கூறும் போது, கிரிமியாவின் ஒக்ய பிரஸ்கி நகரில் உள்ள எண்ணெய் கிடங்கு மற்றும் ரஷிய ராணுவ கிடங்குகள் தாக்குதல் மூலம் அழிக்கப்பட்டது என்று தெரிவித்தது.
கடந்த 5 நாட்களுக்கு முன்பு கிரிமியா பாலம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். பாலமும் சேதமடைந்தது. இந்த நிலையில் கிரிமியா பகுதியில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கிரிமீயா பாலத்தில் பெரிய தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பாலம் மூடப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த பிப்ரவரியில் முழுமையாக திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- கருங்கடலில் கப்பல் போக்குவரத்தை ரஷியா விரும்பவில்லை
- ரஷியா தடையால் உக்ரைன தானிய பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது
ரஷிய- உக்ரைன் போரின் விளைவாக உக்ரைன் நாட்டின் 3 துறைமுகங்களை ரஷியா கைப்பற்றியிருந்தது. இதனால் அங்கிருந்து நடைபெற்று வந்த தானிய ஏற்றுமதி முடங்கும் அபாயம் ஏற்பட்டது.
கடந்த வருடம் ஜூலை மாதம், ஐ.நா. மற்றும் துருக்கி தலையிட்டு ரஷியாவுடன் ஒரு உடன்படிக்கை செய்தது. கருங்கடல் தானிய ஒப்பந்தம் எனும் அந்த உடன்படிக்கையின்படி உக்ரைனின் 3 துறைமுகங்களிலிருந்து கப்பல்களில் தானிய ஏற்றுமதி தொடர்வதற்கு ரஷியா சம்மதித்தது.
அந்த தானிய ஏற்றுமதி கப்பல்கள் மீது எந்த தாக்குதலும் நடத்தாமல் இருக்கவும் ரஷியா ஒப்புக்கொண்டது. போர் நடந்து வந்தாலும் இதன்மூலம் உலகின் பல நாடுகளுக்கு தானிய ஏற்றுமதி தடையில்லாமல் நடந்து வந்தது.
இந்த ஒப்பந்தம் இருதினங்களுக்கு முன் காலாவதியான நிலையில் இதனை மீண்டும் புதுப்பிக்க ரஷியா மறுத்து, இதிலிருந்து விலகிக் கொள்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இதனை அலட்சியப்படுத்தும் விதமாக, ஒரு தற்காலிக கப்பல் பாதையை அமைக்க போவதாக உக்ரைன் அறிவித்திருந்தது.
இந்நிலையில் உக்ரைனின் கருங்கடல் பகுதி வழியாக செல்லும் கப்பல்கள் ராணுவ தளவாடங்களையும், ஆயுதங்களையும் ஏற்றிச்செல்லும் போர் இலக்காக கருதப்படும் என ரஷியா எச்சரித்துள்ளது. எந்தெந்த நாடுகளின் கொடிகளை அந்த கப்பல்கள் தாங்கி வருகின்றனவோ அந்த நாடுகளும் உக்ரைன் உடனான சிக்கலில் எங்களுக்கு எதிராக பங்குபெறும் நாடுகளாக ரஷியா கருதும் என்றும் மேலும் கருங்கடலின் வடமேற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளை கப்பல் போக்குவரத்திற்கு ஆபத்தான பகுதியாகவும் அறிவித்திருக்கிறது.
ஆனால், அத்தகைய கப்பல்கள் மீது என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்நாட்டு ராணுவம் இதுவரை தெரிவிக்கவில்லை.
இதனிடையே கப்பல்களையும், அதிலுள்ள சரக்குகளையும் காப்பீடு செய்யும் நிறுவனங்கள், கருங்கடல் பகுதி வழியாக செல்லும் கப்பல்களுக்கு காப்பீட்டை வழங்குவதை மறுபரிசீலனை செய்து வருகின்றன. அண்டர்ரைட்டர் (Underwriter) எனப்படும் காப்பீடு வழங்கும் நிறுவனங்கள் ரஷியாவால் ஏற்படக்கூடிய தாக்குதல் ஆபத்தை காரணம் காட்டி மிக அதிக தொகையை கட்டணமாக கேட்கலாம், இல்லை காப்பீட்டையே முழுவதுமாக மறுக்கலாம் என நிபுணர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.
இதனால் தானிய ஏற்றுமதி முடங்கி, பெரும் உணவு தானிய நெருக்கடி உலகளாவிய அளவில் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், குறிப்பாக ஏழை நாடுகளும், வளரும் நாடுகளும் பெரிதும் பாதிக்கப்படலாம் என அச்சம் தெரிவிக்கிறார்கள்.
இதற்கிடையே ரஷியாவின் ஆக்ரமிப்பை எதிர்க்க உக்ரைனுக்கு அமெரிக்கா சுமார் ரூ.10 ஆயிரம் கோடி ($1.3 பில்லியன்) ராணுவ உதவி தொகையாக வழங்குகிறது.
- இந்த பாலம் வழியாகத்தான் ரஷிய படைகளுக்கான தளவாடங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் அனுப்பப்படுகின்றன.
- இரண்டு கடல்சார் ட்ரோன்கள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷியா தெரிவித்துள்ளது.
மாஸ்கோ:
உக்ரைன்- ரஷியா போர் 500 நாட்களை கடந்து இன்னும் நீடித்து வருகிறது. ரஷியா தனது ராணுவ நடவடிக்கையை தொடங்கியபோது, உக்ரைன் தரப்பில் பெரிய அளவில் இழப்புகள் ஏற்பட்டன. அதன்பின் உக்ரைன் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ராணுவ உதவிகளை வழங்கிவருகின்றன. இதனால் ரஷியாவால் போரை முடிவுக்கு கொண்டு வரமுடியவில்லை. இழந்த பகுதிகளை உக்ரைன் படைகள் படிப்படியாக மீட்கத் தொடங்கி உள்ளன.
இந்நிலையில், ரஷியாவையும்- அந்த நாட்டுடன் இணைக்கப்பட்ட கிரீமியாவையும் இணைக்கும் கெர்ச் பாலத்தின் மீது இன்று ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த பாலம் வழியாகத்தான் ரஷிய படைகளுக்கான தளவாடங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் அனுப்பப்படுகின்றன. இந்த பாலம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் உடனடியாக பாலம் மூடப்பட்டது. தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்தனர். அவர்களின் மகள் காயமடைந்துள்ளார். இந்த தாக்குதலுக்கு உக்ரைன் மீது ரஷியா குற்றம்சாட்டி உள்ளது.
தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து கெர்ச் பாலத்தில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதே நேரத்தில் 19 கிமீ இடைவெளியில் ரெயில் போக்குவரத்தும் சுமார் ஆறு மணி நேரம் நிறுத்தப்பட்டது. பாலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ரஷிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
உக்ரைன் தரப்பில் இருந்து இரண்டு கடல்சார் ட்ரோன்கள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷியாவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு குழு தெரிவித்துள்ளது.
இந்த பாலம் மீது இதற்கு முன்பு கடந்த அக்டோபர் மாதம் தாக்குதல் நடத்தப்பட்டது. டிரக் குண்டு மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, பல மாதமாக சீரமைப்பு பணி நடைபெற்ற நிலையில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






